இந்தியாவில் அக்குபங்சர் - மாற்று மருத்துவங்களின் சட்ட அங்கீகாரம் குறித்த கட்டுரைகள் என்ற நூல் உமர் பாரூக் அவர்களால் எழுதப்பட்டு பாரதி புத்தகாலயத்தால் திசம்பர் - 2010 ல் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.25 விலை குறிக்கப்பட்டுள்ள 48 பக்கங்களை உடைய சிறு வெளியீடு இது.

       தமிழகத்தில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது தெரிவித்து வந்த சட்டம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த குறிப்புகளை ஒன்று திரட்டி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எனினும் நூலாசிரியர் உரிய பயிற்சியும் விவரமும் இல்லாதவர் என்பதை நூலெங்கும் மலிந்து கிடக்கும் பிழைகளும், தவறுகளும் எடுத்தியம்பு கின்றன. பக்க வாரியாக அவற்றைப் பார்க்கலாம். பக்.12 ல் இந்திய மருத்துவ கழகத்தை Indian Medical Council எனப் பதிவு செய்கிறார். உண்மையில் அப்படி எந்த கவுன்சிலும் இல்லை.

       அலோபதிக்கான அரசு கவுன்சிலின் சட்டப்பூர்வ பெயர் Medical Council of India (MCI) என்பதாகும். பக்-13ல் “சித்தா, ஹோமியோபதி, ஆயூர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா போன்ற மருத்துவ முறைகளில் அந்தந்த கவுன்சிலின் அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் பயிற்சிகளுக்கு அரசு பொறுப்பேற்காது...” என உள்ளது. இந்த வரிகளினூடாக இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ முறைக்கு இதுவரை சட்ட பூர்வ கவுன்சில் ஏதும் அமைக்கப் படவில்லை என்கிற செய்தி கூட தெரியாதவராக இந்நூலாசிரியர் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

       பக்- 20ல், மாற்று மருத்துவங்களை ஆராய்ந்த மத்தியக் குழுவின் சட்டப்பூர்வப் பெயர் Standing Committee Experts என்பதாகும். இதனை நிபுணர்கள் ஆய்வுக்குழு Researc committee of Experts என்கிறார். அதே பக்கத்தில் ICMRன் Director Generalஐ இயக்குநர் நாயகம் என்பதற்கு பதிலாக இயக்குனர் என்று குறிக்கிறார். பக் - 47ல் வர்ம மருத்தவத்தை ஆயூர்வேதத்தின் பகுதி என்கிறார். உண்மையில் வர்மம் சித்த மருத்துவத்தின் அங்கம் என்பதும், தமிழர்களின் அறிவுச் சொத்து என்பதும் பாவம் இந்த நூலாசிரியருக்கு தெரிந் திருக்கவில்லை. இந்த பிழைகளைத் தாண்டி கருத்துத் தளத் தில் காணப்படும் சில குறைகளைப் பார்ப்போம். பக்-7ல் 18ம் நூற்றாண்டின் ஆங்கில மருத்துவம் உலகமெங்கும் பரவியது என்கிறார். ஆங்கில மருத் துவம் தானாகவா பரவியது, வெள்ளை காலணி யாதிக்கத்தின் ஆயுத பலத்தாலும் கிருத்துவ மடங் களின் பரலோக கனவுகளாலும் பரப்பப்பட்ட தல்லவா அது.

       இதைத் தாண்டி இந்த நூலின் மிகப்பெரிய குறை என்பது அக்குபங்சர் மருத்துவர்களை மருத்துவர் என தகுதி நிலையில் இருந்து கீழிறக்கி சிகிச்சையாளராக இழிவுபடுத்தும் மத்திய அரசு ஆணையை ஏற்று வழிபடும் அடிமை எண்ணம் கொண்டவராக இந்நூலாசிரியர் இருப்பதாகும். நூல் நெடுகிலும் Traditional Medicine என்பதை மரவு வழி மருத்துவம் என குறிப்பிடுகிறார். இது கருத்து பிழைகொண்ட பயன்பாடாகும். மரபு வழி மருத்துவம் என்பது Heriditary Medicine ஆகும். இவர் மரபு வழி மருத்துவம் என குறிப்பிடுவது எல்லாம் பாரம்பரிய மருத்துவம் என்கிற பொருளிலேயே. உலக சுகாதார நிறுவனமும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் பாரம்பரிய மருத்துவம் என்றே குறிப்பிட்டு வருகின்றன.

       மருத்துவம், மருத்துவசட்டம் போன்ற துறைகளில் ஒவ்வொரு சொல்லும் மொழியாக்கச் சொல்லும் கலைச் சொல் என்கிற வகையில் நுணுக்கமான பொருள் கொண்டவை. சின்ன பிழைகளும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இவை பற்றி எல்லாம் எந்தப் புரிதலும் பயிற்சியும் இல்லாதவராக இந் நூலாசிரியர் இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டவே மேலே பலவற்றைச் சொன்னோம்.

       இந் நூலாசிரியரின் மேற்குறிப்பிட்ட புரிதலின்மையும் பயிற்சியின்மையும் கலைச் சொற்கள், மொழியாக்கம், வரலாற்று தகவல்களைத் தாண்டி - அதே வேளையில் அதன் தொடர்ச்சியாக கருத்துப் பிழைகளாகவும் கண்ணோட்டப் பிழைகளாகவும் எப்படி உருக்கொள்கின்றன. என்பதற்கு இரண்டு எடுத்துக் காட்டுகளை முன்னரே பார்த்தோம், இனி மற்றவை. இந்த நூலாசி ரியர் அஃகுபஞ்சரிஸ்ட் என்கிற முறையில் அஃகுபஞ் சருக்கான சட்ட தகுதி குறித்து கூடுதல் அக்கரை கொள்கிறார். சரியாகச் சொல்வதனால் இவர் நடத்தக்கூடிய அஃகுபஞ்சர் பயிற்சிகள் இவரது மருத்துவமனைகள் இவர் நடத்தும் அமைப்பின் உறுப்பினர்களுக்கு சட்ட நியாயம் வழங்கிக் கொள்ளவும், இவரல்லாத மற்ற நாடெங்கிலும் உள்ள அஃகுபஞ்சர் மருத்துவர் களையும், அமைப்புகளையும் குறை கூறுவதற்கான ஒரு வாய்ப்பாகவுமே. இந்த நூலை எழுதியிருப்பரோ என்று ஐயம் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

       இந்நூலின் பக்-25ல் அஃகுபஞ்சர் பயிற்சி பெற அரசு சார்பு பெற்ற தனியார் நிறுவனங்களான J.S.S, B.S.S. வகை அமைப்புகளின் பயிற்சிகள் முழுமையான தனியார் அமைப்புகளின் பயிற்சி களை விட மதிப்பு வாய்ந்தது என்கிறார். அதைப் போலவே பக்-48 ல் மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் துவங்கப்பட்டு இயங்கி வரும் ஆ.ந.ந. சுயாட்சி அமைப்பு அரசு சார்ந்த பயிற்சி மையமாக இயங்கி வருகின்றது என்கிறார்.

       அதே பக்கத்தில் பெட்டி செய்தியாக மருத்துவப் பயிற்சிகள் தொடர்பான எந்தவொரு சந்தேகமாக இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகளை அனுப்பி முறையான பதில் பெறலாம், என குறித்துள்ளார். அவரது ஆலோசனைப்படி நாம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் “B.S.S. என்ற National Development Agency D.Acu, B.Acu, M.Acu என்ற அஃகுபஞ்சர் மற்றும் மாற்று மருத்துவ கல்விச் சான்றுகளையும் பாராமெடிக்கல் கல்வி சான்றுகளையும் வழங்குகின்றன.

       இந்த அமைப்பில் படித்தவர்கள் மருத்துவத் தொழில் செய்யவும் அந்தப் பட்டங்களை பயன்படுத்தவும் அரசு அனுமதிக்கிறதா? எனக் கேட்டிருந்தோம். இதற்கு தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் சார்பில் அளிக்கப்பட்ட பதில் (ஓ.மு.எண் 140/ த.நா.இ.ம.க /2010 நாள் 17-9-2010)” இந்த அமைப்பில் படித்து அஃகுபஞ்சர் மற்றும் மாற்று மருத்துவ கல்வி சான்றிதழை வைத்துக் கொண்டு தொழில் செய்யவும் அந்தப் பட்டங்களை பயன்படுத்தவும் அனுமதி இல்லை” என்பதாகும்.

       இப்படி இருக்க இந்நூலாசிரியர் எதற்காக அமைப்பின் பயிற்சி மேலானது என்கிறார் எனப் புரியவில்லை. மேலும் பல்கலைகழகங்கள் வழங்கும் அஃகுபங்சர் பயிற்சிகள் பற்றியும் இப்படியேதான் பிழையான தகவல்களை நூல் நெடுகிலும் பதிவு செய்கிறார். இலங்கை பல்கலைகழகத்தின் MD (Acu) பற்றி துல்லியமான சட்டக் கருத்துக்களை பதிவு செய்யும் நூலாசிரியர் இவர் நடத்தும் B.Acu (Basic certificate in Acu), M.Acu (Master Certificate in Acu) என்ற பட்டங்களைப் போன்ற சொல்லடுக்கு வரும் எழுத்துச் சேர்க்கை உள்ள பயிற்சியின் சட்ட தகுதி குறித்து இந்த நூலில் ஏதும் சொல்லாதது ஏன்?

       இப்படியாக தனது சுயநலனுக்காக மற்றவர்களை குறை சொல்வதற்காக சட்டம் என்கிற பெயரில் பிழைகள் மலிந்த ஒரு நூலை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்புலத்தில் இயங்கும் பாரதி புத்தகலாயம் போன்ற ஒரு தரமான பதிப்பகம் எவ்வித சரிபார்ப்பும் இன்றி எப்படி வெளியிட்டது என்பது வியப்புக்குரியதாகவும் பலவித யூகங் களுக்கு இடமளிப்பதாகவும் உள்ளது.

ஆசிரியர் குறிப்பு : இத்திறனாய்வுக் கட்டுரையில் BSS அமைப்பின் அக்குப்பங்சர் பயிற்சிகளைப் பயன்படுத்தி தொழில் செய்ய அரசு அனுமதிக்கிறதா? என்ற வினாவிற்கு த.நா. அரசின் இந்திய மருத்துவம் & ஹோமியோபதி துறை சார்பில் (முதன்மைச்செயலர்) தொழில் செய்ய அனுமதியில்லை என்று 17-9-10 நாளிட்ட பதிலளிக்கப்பட்டுள்ளதாக நா.சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

       இதே போல மாற்றுமருத்துவத்துறையில் அக்குப்பங்சருக்குரிய சட்டரீதியான அங்கீகாரம் குறித்த கேள்விக்கு 1-10-2010 நாளிட்ட (அரசு கடித எண் : 40253 / இம - 2/2010 -11) த.நா. ஓமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர் (பொ) அளித்த பதிலில் ‘அக்குபங்சர் மருத்துவத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

       மத்திய மக்கள் நல்வாழ்வு & குடும்ப நலத்துறை அமைச்சக ஆணை எண். R-14015 / 25 / 96-U&H (R) (Pt) - ன் படி அக்குபங்சர் ‘Mode of Therapy’ ஆக ஏற்கப்பட்டுள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட பதில் வியப்பளிப்பதோடு மறுகேள்வி எழுப்பவும் நேர்கிறது. மேலும் ஆ.ந.ந. வழங்கும் மாற்றுமருத்துவம் சார்ந்த சான்றிதழ், பட்டயப் பயிற்சிகளை பற்றிய கேள்விகளுக்கும் அக்குப்பங்சர் பற்றிய கேள்விகளுக்கும் தெளிவான, சட்டரீதியான, முழுமையான பதில் விளக்கங்கள் தமிழக அரசுத்துறையில் யாரிடம் பெறுவது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

       (இவை குறித்து அக்குபங்சர் மருத்துவர்களும், வாசகர்களும் கருத்துக்களை எழுதலாம்)

Pin It