பல திருமணங்களைப் பார்க்கும் போது கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பெண்ணை விட ஜாதகம் முக்கியம் என்பது தெரிகிறது. புகைப்படம் இல்லாவிட்டாலும் பெயரை பதிவு செய்து கொள்ளும் பல திருமண தகவல் மையங்கள் ஜாதகம் இல்லாதவர்களை பதிவு செய்து கொள்வதே இல்லை. முன்பு குழந்தை பிறந்த உடன் மிட்டாய் வாங்க வும், மற்றவர்களுக்கு தகவல் சொல்லவும் ஓடிய அப்பாக்கள் இப்போது கம்ப்யூட்டர் ஜாதகம் வாங்கிய பின்பு தான் மறுவேலை பார்க்கிறார்கள். குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு ஆலோசனை கேட்பவர்களும் ச அல்லது சா இரண்டு எழுத்துக்களில் மட்டும் சந்தர்ப்பம் என பாட்டுக்கு பாட்டு அப்துல் ஹமீதைப் போல நிபந்தனை விதிக் கிறார்கள்.

 இந்தக் கட்டங்கள் வரையப் பட்ட காகிதத்தை வைத்து நடத்தப் படும் சேட்டைகள் ஏராளம். முப்பத்து மூன்று வயது வரை கல்யாணம் செய்யக் கூடாது என ஒருவ ருக்கு பலன் சொல்கிறார்கள். வீட்டு மாடி காலியாக இருக்கக்கூடாது உடனே மாடியில் ஒரு அறை கட்டு என இன்னொருவருக்கு பலன் சொல் கிறார் கள். தம்பதி களுக்கு ஏழாம் இடத்தில் கிரகங்கள் பொருந்திப் போகாவிட்டால் அவர்கள் தேனிலவு முடிந்ததும்நேராக கோர்ட்டுக்குத்தான் போவார் கள் என்கிறார் ஒரு சோதிடர். கிரக பலன்கள் சாதகமாக இல்லாததால் சொந்த வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டில் இருப்பவரை நாம் பார்த்திருக்கிறோம். சனிப்பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி மாதிரியான செய்திகளுக்கு தேசீயப் பேரழிவு நடந்ததைப் போல பல பக்கங்களை ஒதுக்குகின்றன அச்சு ஊடகங்கள். பக்தர்களை இழுக்க துண்டுப் பிரசுரம் மூலம் சண்டையிடுகிறது. திருநள்ளாறு கோயிலும் திருவாரூர் கோயிலும். அடுத்த சனிப்பெயர்ச்சிக்கு அளல் வாதம் புனல்வாதம் வரை போவார்கள் என எதிர்பார்க்கலாம், (யார் தோற்றாலும் தண்டனை என்னவோ பக்தனுக்குத்தான்). மிக்சி குக்கருக்கு சர்வீஸ்முகாம் நடத்துவதைப் போல் பெயர்ச்சி களுக்கும் வேங்கட சர்மா என்பவர் முகாம் நடத்தி தீய விளைவுகளை கட்டுப்படுத்துகிறார். ரிப் பேருக்கு தக்கபடி சர்வீஸ் சார்ஜும் வேறுபடுகிறது.

 முன்பு கைரேகை பார்பவர்கள் உங்கள் வீதியில் அலைவார்கள் அல்லது பிளாட்பார்மில் இருப்பார்கள். அவர்கள் கூலி ஐந்து பத்துடன் போய் விடும். இப்போது அதிலும் பணம் பிடுங்கிகள் வந்துவிட் டார்கள். அடிக்கடி கைரேகை பார்த்துக் கொள்ளும் ஒருவர் ரேகை பார்ப்பதில் தற்போது நிபுணத் துவம் பெற்றுவிட் டார். கையின் பக்க வாட்டில் உள்ள கோடுகளை வைத்து ஒருவருக்கு எத்தனை மனைவி என சொல்ல லாம் என்கிறார் அவர். கைகளின் கோடுகள் அதிகாரப் பூர்வ மனைவிகளை மட்டும்தான் குறிப்பிடுமா என்பதை விளக்கு மளவுக்கு அவர் இன்னும் பாண்டித்யம் பெறவில்லை. கோவை வட்டாரத்தில் ஒருவர் கால் ரேகையை வைத்து எதிர்காலத்தை கணிக்கிறா ராம். ஓசூரிலோ ஒரு சோதிடர் கைரேகையை கார்பன் பேப்பரில் பதிய வைத்து அதை பார்த்து பலன் சொல்கிறார். இருபத்துஏழு வயதில் உன் வாழ்வில் திருப்பம் வரும், ஈரோடு தாண்டினால் பெருந்துறை வரும் என எல்லாவற்றையும் சரியாக கணித்து சொல்கிறார் என்று அவரைப்பற்றி பரவசமாக குறிப்பிடுகிறார் திருப்பூரில் உள்ள ஒரு சிறு முதலாளி. நம் முகத்தை பார்த்தே பலன் சொல்கிறேன் என்று சொல்பவரை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கக்கூடும்.

 ரேகையும் ஜாதகமும் சரியாக இருந்தும் உங்களுக்கு பிரச்சினை இருப்பின் கோளாறு உங்கள் வீட்டில் இருக்கலாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். பல நிறுவனங்களில் வாசலுக்கு எதிரே ஒரு பெரிய கண்ணாடியை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அது எதற்கு என்றால், அங்கு வரும் கெட்ட சக்திகள் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்துவிட்டு ஏற்கனவே நம்ம ஆள் ஒருத்தன் உள்ளே இருக்கான் என்று எண்ணி வெளியே போய்விடும் என்கிறார்கள். அதுசரி கண்ணாடியைப் பார்த்து இதேபோல ஏமாந்து நல்ல சக்திகள் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என நாம் கேட்டால், கண்ணாடிக்கும் ஏமாறாத கெட்ட சக்தி என்று நம்மை பற்றி முடிவு செய்துவிடுகிறார்கள். வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் வடமேற்கு அறையில் படுத்தால் தான் அவர்கள் கனவு நிறைவேறுமாம், மாறாக திசை மாற்றிப் படுப்பீர்களேயானால் உங்கள் தெரு முக்கை கூட தாண்ட மாட்டீர்கள் என பயமுறுத்துகிறது வாஸ்து சாஸ்திரம். மேலும் உங்கள் வீட்டு மருமகன் மேற்கு மத்திய பகுதி அறையில் படுத்தால் நல்லது என்கிறது வாஸ்து, மருமகனுக்கு நல்லதா அல்லது மாமனாருக்கு நல்லதா என்பதுதான் தெரியவில்லை. இஙஈஅ அப்ரூவல் இருக்கிறதோ இல்லையோ வாஸ்து அப்ரூவ்டு என்பதை விளம்பரத்தில் குறிப்பிட மறப்பதில்லை கட்டுமான நிறுவனங்கள்.

 இன்னும் நியூமராலஜி, நேமாலஜி, ஜெம் மாலஜி, ப்ரோனாலஜி என ஏகப்பட்ட ‘ஜி’க்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

 பலன் பார்ப்பதன் அடுத்த நிலை பரிகாரம். எல்லா துன்பங்களுக்கும் பரிகாரம் வந்துவிட்டது இப்போது. துர்க்கையம்மனுக்கு நெய் விளக் கேற்றுவதில் தொடங்கி கைலாஷ்நாத் யாத்திரை வரை சகட்டுமேனிக்கு பரிகாரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. கண்வலி காதுவலி உள்ளிட்ட பல வியாதிகளை குணப்படுத்த தனித்தனியே கோயில் கள் இருப்பதாக தொடர் (கதை) ஒன்றை வெளி யிட்டது குங்குமம் வார இதழ். நான் பணியாற்றும் நிறுவனத்துடன் பணி ஒப்பந்தம் செய்துகொண் டுள்ள தொழிற்சாலையொன்றில் வியாபார மேம் பாட்டிற்காக வாஸ்து மீன்கள் வளர்க்கப்பட்டன. ஒரு தீபாவளி விடுமுறையின் போது கவனிப்பா ரின்றி அவை இறந்துபோயின. வியாபாரத்தை காப்பாற்ற மீனைப் படைத்த வாஸ்து பகவான் மீனை கைவிட்டது துரதிருஷ்டம் (மீனின் விலை இருபதாயிரமாக்கும்). மேலும் பெயரை மாற்றினால் வாழ்வின் பல துன்பங்கள் வராமல் செய்யலாமாம்...

 எதிரில் இருப்பவர்கள் சொல்வதை கனிவுடன் கேட்பது, நம்பிக்கை அளிக்கும்படி பேசுவது என்பன போன்ற எளிமையான வழிகள் மூலம் ஜோதிடத்தை ஒரு பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றியிருக்கிறார்கள். தொலைபேசி வழியே ஜோதிட ஆலோசனை வழங்கும் மும்பை நிறுவனமொன்று கூடுதலாக ஐந்தாறு ஜோதிடர் களை பணியமர்த்தப்போவதாக அறிவித்திருக் கிறது. ஈ எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத சாமானியர்கள் முதல் படுகொலைகளையே மூலதானமாகக் கொண்ட இலங்கை அதிபர் வரை எல்லோருமே ஜோதிடப் பித்தில் ஒன்றுபடு கிறார்கள். நல்ல விளக்கு ஏற்றுவது திருவிழாவுக்கு மட்டும் கோயிலுக்குப் போவது போன்ற பழக்கங்களைத் தாண்டி இப்போது அன்றாடப் பூஜைகளும் ஆன்மீகப்பயணங்களும் பரவலாகி யிருக்கின்றன. இது நிச்சயம் ஒரு கவலை கொள்ளத்தக்க பிரச்சினையே. ஏனெனில் இந்த முட்டாள்தனங்களுக்கு இரையாபவர்கள் பெரும்பாலானவர்கள் உழைப்பின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் அல்ல. மாறாக தங்கள் உழைப்பின் பலன் வேறொரு சக்தியால் வந்தது என நம்பவைக்கபட்டவர்கள்.

Pin It