இரண்டு வகை மகாநாடுகள்

periyar 336சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு நமது நாட்டில் ஒருவிதக் கிளர்ச்சி உண்டாயிருப்பதோடு அவ்வியக்கத்திற்கு சில எதிர்ப்புகள் தோன்றி இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

இவ்வெதிர்ப்புகளில் காங்கிரசின் பேரால் வயிறு வளர்க்கும் சில கூலிகளுடையவும், வயிற்றுப் பிழைப்புக் காலிகளுடையவும், சமய புராண வியாபாரிகள், வயிற்றுப் பிழைப்புப் பிரசங்கிகள், பண்டிதர்கள் ஆகியவர்களுடையவும், எதிர்ப்புக் கூச்சல்களை லட்சியம் செய்து எவரும் பதில் சொல்ல வேண்டியதில்லை யானாலும், வருணாசிரமத்தின் பேரால் பார்ப்பனர்களும், சைவ சமயத்தின் பேரால் சில சைவர்கள் என்பவர்களும் வருணாசிரம மகாநாடுகளும், சைவ சமயக் கூட்டங்களும் கூட்டி அதில் செய்யப்பட்டிருக்கும் தீர்மானங்களைப் பற்றிக் கவனித்துத் தீர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஆகியவற்றை விலக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி நமது நாட்டில் ஏற்பட்ட காலம் முதல் பார்ப்பனர்கள் வருணாசிரம மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு கூட்டி, தீண்டாமை இருக்க வேண்டும்; அது கடவுளால் ஏற்பட்டது என்று சொல்லிக் கொண்டுதான் வந்திருக்கின்றார்கள். அது போலவே, பால்ய விவாக விலக்குக்கும், விதவா விவாக ஆதரிப்புக்கும் சிலர் தோன்றிய காலம் முதல் கொண்டும் பார்ப்பனர்கள் வருணாசிரம மகாநாடுகள் கூட்டி “பால்ய விவாகம் செய்யாவிட்டால் பாபம்; அது மதத்திற்கும் வேதத்திற்கும் விரோதம்” என்றும், “விதவா விவாகம் செய்வதால் மதமும் ஒழுக்கமும் கெட்டுப் போகும்” என்றும் சொல்லி ஆnக்ஷபித்துத் தீர்மானங்கள் செய்து கொண்டு வந்திருப்பதுடன் இது விஷயங்களில் சட்டத்தின் மூலம் ஏதாவது செய்யலாம் என்று யாராவது முயற்சித்தால், “அரசாங்கத்தார் மத விஷயங்களில் தலையிடக்கூடாது” என்று தீர்மானங்கள் செய்து கொண்டும் வந்திருக்கின்றார்கள்.

பொது ஜனங்களுக்கு சீர்திருத்த விஷயங்களில் எவ்வளவுதான் அறிவும் ஆசையும் இருந்தாலும், காரியத்தில் வரும்போது பார்ப்பனர்களும் பண்டிதர்களும் மதப் பூச்சாண்டியைக் கிளப்பி விட்டு விடுவதால் பாமர மக்கள் உடனே மதத்திற்குப் பயந்து மூலையில் ஒடுங்கி விடுகின்றார்கள். இந்த காரணத்தாலேயே தான் மதத்தை வைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று புறப்பட்ட ஒருவர்கூட இதுவரையில் ஒரு சிறிதும் வெற்றி பெற முடியாமலே போய்விட்டது. இந்த அனுபவத்தைக் கண்ட பிறகேதான் மதத்தின் யோக்கியதை என்ன என்பதாக அதைக் கிளரப் புறப்பட்டோம். எனவே அதைக் கிளரக் கிளர நாவிதன் குப்பையைக் கிளர்வது போல் உபயோகமற்ற குப்பைகளையே காண முடிந்ததே யல்லாமல். ஒரு சிறிதாவது பயன்படத் தக்கதாக ஒன்றையுமே காண முடியவில்லை!

உதாரணமாக மதங்கள் என்பவைகள் பல பல. அவற்றுள் உள் மதங்கள் பல பல. உள்மதங்கள் ஒவ்வொன்றனுள்ளும் பிரிவுகள் பல பல; அப்பிரிவுகளுக்கும், வியாக்கியானங்கள், அகச்சான்றுகள், புறச்சான்றுகள், தத்துவார்த்தங்கள் ஆகியவைகள் பல பல. இப்படி கரைகண்டு முடிவு செய்ய முடியாத மாதிரியில் கையில் வலுத்தவன், வாயில் வலுத்தவன், செல்வத்தில் வலுத்தவன், சூழ்ச்சியில் வலுத்தவன், மானமற்ற தன்மையில் வலுத்தவன் என்கின்றதை அனுசரித்து மக்களை மக்கள் ஏமாற்ற மாத்திரம் பயன்படுகின்றதே ஒழிய, எதற்காக அவைகளை ஸ்தாபிக்க வேண்டுமென்று சொல்லப் படுகின்றதோ, அதற்கு ஆக அவை சற்றாவது பயன்படாமல், ஒரு சில சோம்பேறிகளுக்கும் சுயநலமுள்ள நாணய மற்றவர்களுக்கும் மாத்திரம் பயன்பட்டு வருவதை நன்றாய்ப் பார்த்து வருகின்றோம். ஆதலால் அவைகளை அழிப்பதைத் தவிர வேறு வேலையின் மூலம் ஒருக்காலமும் இப்போது மதங்களின் மூலம் நாட்டிற்கும், மக்கள் வாழ்க்கைக்கும், ஒழுக்கத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள இடையூறுகளை ஒழிக்க முடியாது என்று கருதி அவற்றைத் தைரியமாக வெளியாக்கி விட்டோம் - வெளியாக்கிக் கொண்டும் வருகின்றோம்.

இதைக் கண்டபிறகுதான் பார்ப்பனர்களும் அவர்களின் எதிரிகளாகிய சைவசமயிகளும் இது சமயம் தங்கள் இருவர்களின் அடிப்படையான வித்தியாசத்தைக் கூட மறந்து விட்டு எப்படியாவது அடியோடு அழிக்க வந்திருக்கும் ஆபத்திலிருந்து தப்புவித்துக் கொண்டால் பின்னால் அவரவர்கள் தனித்தனிக் காரியத்தைப் பார்த்து கொள்ளலாம் என்று கருதி தினம் ஒரு வருணாசிரம மகாநாடும், வாரம் ஒரு சைவ சித்தாந்த மகாநாடும் கூட்டிய வண்ணமாகவே இருக்கின்றார்கள்.

இவ்விரண்டு வகை மகாநாடுகளுக்கும் இரண்டு வகை மடாதிபதிகள் என்பவர்களும் உள் ஆதரவாய் இருந்து பண சம்பந்தமான உதவிகளைத் தாராளமாகச் செய்தும் வருகின்றார்கள். ஏனெனில், அப்படிச் செய்யவில்லையானால் முதல் பிடிமண் அவர்கள் வாயில்தான் விழுக வேண்டி வரும். ஏனெனில் பார்ப்பன மடாதிபதிகள் சுமார் 2, 3 டஜன் (உலக குருக்களான) சங்கராச்சாரியார்களும் 2, 3 டஜன் மகந்துகள், ஜீயர்கள் மற்றும் பல மடச்சுவாமிகள் ஆகிய பார்ப்பனர்களும், ஒரு டஜனுக்கு மேற்பட்ட பார்ப்பனரல்லாத சைவ மடாதிபதிகளும் சேர்ந்து வருஷத்தில் கோடிக் கணக்கான ரூபாய்களின் வருவாய்களால் அனுபவித்துக் கொண்டு வரும் அதிகாரங்களையும், போக போக்கியங்களையும் துறக்க வேண்டி வரும்.

அன்றியும் இவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டும் இவர்களது போக போக்கியத்திற்கு உதவி செய்து கொண்டும் இருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களது அனுபவமும் வயிற்றுப் பிழைப்பும் ஒழிந்து போகும். அன்றியும் இவர்கள் ஆதீனத்தில் உள்ள பல கோயில்களின் வரும்படிகளும் ஆதிக்கங்களும் ஒழிந்து போகும். ஆதலால் பிரிட்டிஷ் கவர்ன்மென்ட்டார் நமது நாட்டை விட்டுத் தாங்களாகவே ஒதுங்கிப் போவதற்கு ஒரு காலம் யோக்கியமாக வந்தாலும் வரக் கூடுமே தவிர, இந்தக் கூட்டங்கள் ஒழிந்து போக ஒருக் காலும் சம்மதிக்கவும் மாட்டார்கள், அல்லது யோக்கியமான முறையில் ஒழிக்கப் படுவதற்கும் இலக்காகவும் மாட்டார்கள். ஆதலால்தான் இவர்கள் இம்மாதிரி கூட்டங்கள் கூட்டவும், கூட்டச் செய்யவும், கூட்டுபவர்களுக்கு உதவி செய்யவும் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

எனவே, இந்த மாதத்தில் மாத்திரம் 3, 4 வருணாசிரம மகாநாடுகளும், 3,4 சைவ சமாஜக் கூட்டங்களும், ஒரு பெரிய சைவ சித்தாந்த மகாநாடும் கூட்டப்பட்டு விட்டது அதிசயமல்ல. ஆகவே அதன் யோக்கியதைகளைச் சற்றுக் கவனிப்போம்.

முதலாவதாக சைவப் பெரியார் மகாநாட்டைப் பற்றிக் கவனிப்போம்.

இம்மகாநாடு கூடிக் கலைந்த விவரம் ‘திராவிடன்’ பத்திரிகையில் உள்ளபடி வேறு பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றோம். சைவப் பெரியார் மகாநாட்டுத் தீர்மானங்கள் என்னவென்றால், முதல் தீர்மானமாவது:-

“நல்ல ஒழுக்க வாழ்க்கைக்கு கடவுள் உண்டு என்னும் கொள்கை இன்றியமையாதது” என்பதாகும்.

இந்தத் தீர்மானம் மலையைத் தோண்டி எலியைப் பிடித்தது போன்ற தாய் இருக்கின்றது. சைவ சமய மகாநாடு கூட்ட முயற்சித்த போது கடவுள் இல்லை என்னும் நாஸ்திகம் நாட்டில் வளர்ந்து விட்டதாகவும் கடவுளை நிர்த்தாரணம் செய்ய வேண்டிய அவசியத்திற்கும் நாஸ்திக இயக்கத்தை ஒழிப்பதற்கும் என்று வெகு அவசரமாக மகாநாடு கூட்டி எவ்வளவோ பேர்கள் இரண்டு மூன்று நாள் மெனக்கெட்டு, பல பொருளும் செலவிட்டு பலரை மகாநாட்டில் கலந்து கொள்ளாமலும் செய்து கடைசி கடைசியாக கடவுளைப் பற்றிய தீர்மானம் என்னவென்றால், கடவுள் உண்டு என்ற கொள்கை நல்ல ஒழுக்கத்திற்கு அவசியமானது என்பதோடு நின்று விட்டதே ஒழிய கடவுள் உண்டு என்றாவது இல்லை என்றாவது யாதொரு முடிவும் கட்ட முடியாமல் போய்விட்டது.

எனவே, இந்த விதமான கடவுள் முடிவு சுயமரியாதை இயக்கத்தின் முடிவை விட, புத்த சமண இயக்கங்களின் முடிவைவிட எந்தவிதத்தில் மேலானது என்று கேட்கின்றோம்.

மேல்கண்ட இயக்கங்களும் எல்லாவற்றையும் விட ஒழுக்கத்தையே பிரதானமாய்ச் சொல்லுகின்றனவே ஒழிய அவற்றுள் ஏதாவது விட்டுக் கொடுக்கின்றதா? ஒழுக்கம் எது என்னும் விஷயத்தில் அபிப்பிராய பேதமிருந்தால் அதற்காக ஒழுக்க மகாநாடு கூட்டி ஒரு முடிவுக்கு வருவதில் யாருக்கும் ஆnக்ஷபனை இல்லை. அதற்காகக் கடவுளை ஏன் பொருத்த வேண்டும்? நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே! என்று அனுபவ முறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதன் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கைகளை உண்டாக்க முடியாதா? என்று கேட்கின்றோம்.

வியாதியை மருந்து சாப்பிடுவதன் மூலம் சவுகரியம் செய்வதைவிட நேராய் ரத்தத்தில் கலரும்படி மருந்தை (இன்ஜக்ட்) ஊசி வழி ஏற்றுவதன் மூலம் சவுக்கியப்படுத்துவது சீக்கிரமாகவும், சுலபமாகவும் முடியக் கூடியதா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம்.

அன்றியும் கடவுள் உண்டு என்னும் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் மக்களில், மடாதிபதிகளில், பண்டிதர்களில் 1000-ல் எத் தனை பேர் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கின்றார்கள்? என்பதையும் ஒழுக்கத்திற்குக் கடவுளை சம்பந்தப்படுத்தாமலும் ஒழுக்கத்தையே ஒழுக்கத்திற்காகக் கொண்டவர்களில் அதாவது புத்தர்கள், சமணர்கள், நிரீச்சுரவாதிகள் என்பவர்களில் ஆயிரத்திற்கு எத்தனை பேர்கள் ஒழுக்கமில்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கேட்கின்றோம்.

எனவே, சைவப் பெரியோர்கள் தாமாக, தாங்கள் ஒழுக்கமாக நடக்க முடியாதவர்கள் என்றும், கடவுள் உண்டென்ற கொள்கை மூலம்தான் தாங்கள் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்த முடியும் என்னும் முடிவைக் கொண்டவர்கள் என்றும் தான் இத்தீர்மானத்தால் விளங்குகின்றது.

இரண்டாவது தீர்மானம் “சைவசமயம் அறிவு ஆராய்ச்சிக்குப் பொருத்தமுள்ளதாகவும் அன்பு நெறியையே அடிப்படையாகக் கொண்டதாகவும் இருத்தலினால் அது எக்காலத்திற்கும் எச்சமூக நிலைக்கும் இசைந்ததாயிருக்கின்றது” என்பதாகும்.

இது சுத்தப் பயித்தியக்காரத் தீர்மானம் அல்லது மதப் பித்துக் கொண்ட தீர்மானம் என்றுதான் சொல்ல வேண்டும். முதலாவது சைவ சமயம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாயிருந்தால் அறிவும் ஆராய்ச்சியும் பெற்ற மக்கள் என்று நம்மாலேயே ஒப்புக் கொள்கின்றவர்களிடம் சைவ சமயம் இருக்கின்றதா? உலகத்தில் இருக்கும் சுமார் 150 கோடி மக்களில் பௌத்தர்களும் பௌத்த சமயச் சார்புடையவர்களும் 54 கோடி மக்களாவார்கள். அடுத்தாற்போல் கிறிஸ்துவ மதத்தவர்கள் சுமார் 50 கோடி மக்களாவார்கள். மகமதியர்கள் 20 கோடியாவார்கள். இந்துக்கள் என்பவர்களும் 21 கோடி மக்களாவார்கள். மற்றபடி 2, 3 கோடி மக்கள் சில்லறை மதங்களை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும்.

இவற்றுள் மேல்கண்ட 21 கோடி இந்துக்களில் 5,6 கோடி மக்கள் தீண்டாதவர்கள். இவர்கள் சைவக் கொள்கைப்படி சைவர்களாக இருப்பதாக சைவர்களே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மீதி பதினைந்து கோடி மக்களில் அநேக மதங்கள் உண்டு. அநேகமாக வடநாட்டில் தானே கடவுள் என்கின்ற சங்கர மதமும், விக்கிரக வணக்கமில்லாத ஆரிய சமாஜமும், வேத புத்தகத்தை வணங்கும் சீக்கிய மதமும், வைணவ மதமுமே சிறப்பாக உள்ளவை. எனவே, தென்பாகத்தில், அதுவும் தென்னாட்டில் உள்ள மக்களில் “பேய்த் தெய்வ” வணக்கக்காரர்கள், சமணர்கள், ஜெயினர்கள், இதுபோன்ற மற்றும் மத வித்தியாசமில்லாதவர்கள், ஸ்மார்த்தர்கள் ஆகியவர்களை எல்லாம் கழித்து மீதிஉள்ள விபூதி பூசாதவர்களையும், விபூதி பூசுபவர்களிலும் மாமிசம் சாப்பிடுபவர்களையும், இயற்கை வணக்கக்காரர்களையும் கழித்துக் கணக்குப் பார்த்து, இதில் சைவர்கள் எவ்வளவு பேர் இருக்கக் கூடும் என்பதை யோசித்துப் பார்த்தால், உமியை ஊதினால் என்ன மீதியாகுமோ அது தான் மீதியாகலாம்.

இந்த மாதிரியான ஒரு சிறு கூட்ட மக்கள், ஒரு இடத்தில் கூடி ஒருவரை ஒருவர் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, சாப்பிடாமல் இருந்து கொண்டு “சைவ மதம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒத்த மதம்; எத்தேசத்திற்கும், எக்காலத்திற்கும், பொருத்தமானது” என்று தீர்மானிப்பதில் ஏதாவது அர்த்தமிருக்க முடியுமா? என்பதை யோசித்து முடிவு கட்டும்படி பொது ஜனங்களுக்கே விட்டுவிடுகின்றோம்.

மூன்றாவதாக, சாதாரணமாய் இந்த நாட்டில் சைவர்களது குறுகிய புத்தியும் அவர்களது சமய அகம்பாவமும் சமீப காலத்தில்தான் அதாவது திரு.வேதாசலம் அவர்களது ஆராய்ச்சியும் திரு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களது ஆராய்ச்சியும், மேனாட்டு முறையை ஒட்டிச் செய்து கொண்டு போனதின் பலனாய் சைவர்கள் கண்ணுக்கு மற்ற மனிதர்களைப் பார்த்தால், அவர்களும் மனிதர்கள் தான் என்று எண்ண முடிந்தது. இதற்கு முன் அவர்களது குறுகிய புத்திக்கும், ஆணவத்திற்கும், அநேக உதாரணம் சொல்லலாம். அவர்களது தீட்சையும், பஞ்சாட்சர மகிமையும், ஜபமும், மற்றவர்களை நாயினும் கடையாய் மதிக்கச் செய்தாலும் சுமார் 20 வருடத்திற்கு முன் அவர்களை மனிதப் பிறவி என்று சொல்லுவதற்குக் கூட யோக்கியதை இல்லாமலிருந்தது என்பதை நாம் நேரில் அறிவோம். ஏன்? இப்போது கூட எத்தனையோ பதர்கள் தங்களைச் சைவர்கள் என்று சொல்லிக் கொண்டு மனிதனைத் தொட்டால் பாவம் என்றும், ஒரு மனிதனோடு வேறு ஒரு மனிதன் கூட இருந்து உணவு கொண்டால் அது உணவு அல்லவென்றும் மற்ற சமயக்காரர்கள் எல்லாம் மக்கள் அல்லவென்றும், சாம்பலும் கொட்டையும் தவிர வேறு கொள்கை சைவத்திற்கு இல்லை என்றும் கருதும்படி நடப்பவர்களையும் தாராளமாய்க் காணலாம்.

நான்காவதாக, சைவ சமயத்திற்கு ஆதாரம் 12 திருமுறைகளும், 14 மெய்கண்ட சாத்திரங்களும், வேதசிவாகமப் பகுதிகளும் என்று தீர்மானித்து இருக்கின்றார்கள். சைவ சமயம் மிகுதியும் மோசமானது என்பதற்கு இதைப் போல வேறு உதாரணம் தேவையில்லை. திருமுறைகளில் அநேகம் எல்லாம் புராணக் குப்பைகளை ஆதாரமாகக் கொண்டவையே ஒழிய வேறில்லை. அவற்றுள்ளும் அநேகம் பிற சமயக்காரர்களைப் பார்ப்பனர்களைப்போல் இழிமுறையில் வையும்படியும் கொல்லும்படியும் வைததாகவும், கொன்றதாகவும், ஒவ்வொரு பதிகத்திலும் மிதக்கக் காணலாம். ஆகமங்களோ, எந்த அளவில் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், மனிதத் தன்மைக்கும் பொருத்தமானவை என்று கருதினார்களோ தெரியவில்லை!

இவ்வளவும் போதாமல் வேத, சிவாகம பகுதிகளும் ஆதாரமாம். எனவே சைவ சமய ஆராய்ச்சி “பிள்ளையார் பிடிக்க அது குரங்காய் முடிந்தது” என்பது போல் முடிந்தது.

ஐந்தாவதாக சைவச் சின்னம் சிவன்தான் பதி.சரியை, கிரியை யோகம் ஞானம் என்பவைகள் எப்படி ஆராய்ச்சிக்குள் அடங்கின என்பது விளங்கவில்லை. இதை விளக்கினால் 10 பக்கம் போதாது.

வருணாசிரம மகாநாடுகள்

இது இப்படி இருக்க வருணாசிரம மகாநாடுகளின் தீர்மானங்களோ சைவப் பெரியார் மகாநாட்டிற்குக் கொஞ்சமும், பின்வாங்கியவை அல்ல. உருண்டைக்கு நீளம் புளிப்பிற்க வளப்பன் என்பது போல் சைவப் பெரியார்கள் தீர்மானங்களை தோற்கடித்துவிடக் கூடியவையாகவே இருக்கின்றன. இவற்றைப் பற்றி அடுத்த வாரம் விளக்குவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 07.04.1929)

Pin It