தமிழ்நாட்டில் அண்மைக் கால நிகழ்வுகளைப் பார்க்கும்போது தமிழ், தமிழன், தமிழ்நாடு ஆகிய சொல்லாடல்களுக்கு எந்தப் பொருளும் இல்லாமல் போய்விடும் போல் தெரிகிறது. தமிழன் என்று சொல்வதற்கு அருகதை அற்றவனாய்த் தமிழன் சாதித்தமிழனாய் முழுமையாய்த் திரிந்து நிற்கிறான்.அதிலும் குறிப்பாகப் பிற்படுத்தப்பட்டோர் என அடையாளம் காணப்படும் இடைநிலைச் சாதியினர் சாதி வெறியூட்டப்பட்ட ஆதிக்கச் சாதியினராய் ஆட்டம் போடுகின்றனர். பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்று வரும் ஏற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத மாந்த நேயம் சிறிதும் அற்ற விலங்காண்டிகளாய் அச்சாதியினர் வளர்மாற்றம் பெற்றுள்ளனர்.பெரியார் பிறந்த மண் என்று சொல்வதற்கு நாம் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும்.

வடநாட்டிலும் பிற பகுதிகளிலும் உள்ளதைப் போல் தமிழ்நாட்டில் மத மோதல்கள் இல்லை என்று அடிக்கடி நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதற்குப் பெரியாரே காரணம் என்று வேறு பீற்றிக் கொள்கிறோம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது மேற்கொள்ளப் பெறும் ஆதிக்கசாதித் தாக்குதல்களை நாம் கணக்கில் கொள்வதில்லை. வட பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களைக் காட்டிலும் மிகக் கூடுதலாகவே பெரியார் கை சூப்பிய கட்சிகள் நீண்ட காலம் மாறி மாறி ஆட்சி புரியும் இங்கும் நிகழ்கின்றன. திராவிடக் கட்சிகளுக்கு நாத்திகம் பேசுவது எளிதாக உள்ளது; சாதியைக் கைவிடுவது இயலாததாக இருக்கின்றது; சாதிகளில்தான் அவை குளிர் காய்கின்றன; உயிர் வாழ்கின்றன.

காமராசர் ஆட்சிக் காலத்தில் இமானுவேல் சேகரன் படுகொலையை அடுத்து நடந்த தாக்குதல்களை அவர் இரும்புக் கை கொண்டு ஒடுக்கினார்.பெரியார் அப்பொழுது அவருக்குப் பெருந்துணையாய் நின்றார். ஆனால் அண்ணாவின் தலைமையிலான திமுக தேவருக்குத் துணை நின்றதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.காங்கிரசு ஆட்சிக் காலத்தில் இதற்குப் பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் பேரளவு வன்முறையாய் நடைபெற்றதாய் வரலாறில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆனால் அதன்பின் ஆட்சிக் கட்டிலேறிய திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் வெண்மணி, கொடியன்குளம், தாமிரபரணி,பரமக்குடி, இப்பொழுது தருமபுரி,கடலூர் என ஒடுக்கப்பட்டோர் மீது வரிசையாய்க் கோரத் தாக்குதல்கள்.இவற்றில் கொடியன்குளம்,தாமிரபரணி, பரமக்குடித் தாக்குதல்கள் அரசு எந்திரமான காவல்துறை கட்டவிழ்த்து விட்ட கொடிய வன்முறைகள். இவை ஆதிக்கச் சாதியினர் மனங்குளிர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். தருமபுரி வன்முறைக்குக் கூட அரசு எந்திரம் சோரம் போனதே காரணம். திராவிட அரசுகள் ஆதிக்கச் சாதியினரின் கூலிப்படைகள் என்பதை அய்யமற மெய்ப்பித்த நிகழ்வுகள் இவை.  

தமிழகத்தின் வரலாறு சாதி சமத்துவத்தை நோக்கியும் சாதி ஒழிப்பை நோக்கியும் முன் நகர்ந்திருக்க வேண்டும். அதற்கான அரசியல்கள் சூழல்கள் இங்கு நன்கு அமைந்திருந்தன. காங்கிரசுக் கட்சி முதலாளி,நிலவுடைமையாளர்களின் கட்சியாக இருந்த போதிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தின் பொழுது அதன் மீது பல்வேறு அழுத்தங்கள் இருந்தன. அனைத்து மக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டிய கட்டாயம் காந்திக்கு இருந்தது. அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்குக் காங்கிரசும் காந்தியும் விடையளிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது;அதனால் காந்தியின் காங்கிரசு தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் கோயில் நுழைவுப் போராட்டத்தையும் கையிலெடுத்தது. தமிழ்நாட்டில் பெரியாரின் போர்க் குரல் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.அயோத்திதாசரும் ஆப்ரகாம் பண்டிதரும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்தினர். அதே போலக் கீழத் தஞ்சையில் பொதுவுடைமை இயக்கத்தவரின் நிலவுடைமைக்கு எதிரான போராட்டம் உண்மையில் சாதியடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகவே இருந்தது.இதில் சீனிவாசராவின் பங்களிப்பு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியது.காங்கிரசுக் கட்சியிலிருந்த இளையபெருமாளின் பங்களிப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது.

தமிழ்நாட்டின் இவ்வரலாற்றுப் பின்னணி சாதியைப் பின்காலிடச் செய்திருந்தது.  பெயருக்குப் பின் சாதிப் பின்னொட்டு என்பது பெரும்பாலும் மறைந்து போனது. பிற்படுத்தப்பட்ட சாதியினர் உட்பட அனைவருமே சாதியின் பெயரைச் சொல்ல வெட்கப்பட்ட காலமும் இருந்தது.பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதி அடையாளங்கள் இல்லாமலே மாணவர்கள் ஒருவருக்கொருவர் பழகி வந்தனர்.பெரியாரின் தாக்கம் இளைஞர்களைக் காதல் திருமணம், சாதிமறுப்புத் திருமணங்களின்பால் ஈர்த்தன. பெரியாரின் தலைமையில் நூற்றுக் கணக்கான சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. ஆனால் இன்று காதல் திருமணத்திற்கும் சாதிமறுப்புத் திருமணத்திற்கும் வெளிப்படையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளதே, எப்படி? இராமதாசுகளுக்கும்,காடுவெட்டிகளுக்கும்,கொங்கு மணிகண்டன்களுக்கும் எங்கிருந்து துணிவு வந்தது? தமிழ்நாடு பல நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுக்கப்பட்டு விட்டதே, அதற்கான காரணங்கள் யாவை?

தமிழகத்தின் இன்றைய இழிநிலைக்குப் பல்வேறு அரசியல், பொருளியல், சமூகவியல் காரணங்கள் இருந்த போதிலும் அரசியல் தளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சருக்கலே இதற்கான முகாமைக் காரணமும் முதன்மைக் காரணமுமாகும்.எழுபதுகள் வரை தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்ள மேலே குறிப்பிட்டவாறு முற்போக்கு அரசியல் சூழல் இருந்த்து;அமைப்புகள் இருந்தன; கொள்கையும் கோட்பாடும் குறிக்கோள்களும் இருந்தன; சென்றடைவதற்கான இலக்குகள் இருந்தன; போராட்ட அரசியல் இருந்தது. சாதியும் மதமும் தலை தூக்குவதற்கான வழிகள் அடைக்கப்பட்டிருந்தன.

அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேறி, தேர்தல்களுக்கான களைகட்டத் தொடங்கியவுடன் எல்லாமே தலைகீழாக மாறின; கொள்கைகளும் கோட்பாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாய் விடை பெற்றுக் கொள்ளத் தொடங்கின; பதவி ஒன்றே குறிக்கோளாய் மாறிப் போனது. திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாட்டு விடுதலைக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்தது;இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தது. நாடாளுமன்றத்தைப் புரட்சிக்கான விவாத மேடையாக்கப் போவதாகக் கூறி அதனுள்ளே நுழைந்த பொதுவுடைமையினர் அதற்குள்ளேயே கரைந்து போனார்கள்.மாறி மாறிக் கூட்டணி அமைத்து,சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் நுழைவதே அவர்களுக்குப் புரட்சியின் முதன்மைக் குறிக்கோளானது.தமிழ்நாட்டரசியல் பதவிக்கும் பணக்குவிப்பிற்கும் வழி வகுக்கின்ற சிறந்த தொழிலாக இழிந்தது.பெரியாரின் காலத்திலேயே போராட்ட அரசியல் விடை பெற்றுக் கொள்ளத் தொடங்கியது.தமிழ்நாட்டரசியலைச் சீரழித்ததில் திராவிடக் கட்சிகளுக்கே பெரும் பங்குண்டு.

அரசியலில் செல்வாக்குப் பெற அணி சேர்க்கை வேண்டும்.கொள்கைகளும் குறிக்கோள்களும் அற்றுப் போன கட்சிகள் அணி சேர்க்கைக்கு எளிய வழியாய்ச் சாதிகளைக் கண்டன.ஒவ்வொரு கட்சியும் வாக்குகளைப் பெற அந்தந்தப் பகுதிப் பெரும்பான்மைச் சாதியினரைத் தம் பக்கம் இழுக்கத் தொடங்கின.வன்னியர் சாதிப் பாட்டாளி மக்கள் கட்சி வருகைக்குப் பின் பிற பிற்பட்ட சாதிக் கட்சிகளும் தேர்தல் அரசியலில் நுழையத் தொடங்கின. கொங்கு முன்னேற்றக் கழகம்(கொங்கு வேளாளக் கவுண்டர்), சமூக நீதிக் கட்சி(முதலியார்), மூவேந்தர் பேரவை(தேவர்)மக்கள் சமத்துவக் கட்சி(நாடார்)என வரிசையாய்ப் பல கட்சிகள் தோன்றின. ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல போட்டிக் குழுக்கள் தோன்றின. ஒவ்வொரு சாதிக் கட்சியும் தன் இருப்பிற்காகவும் அரசியல் பேரத்திற்காகவும் சாதி உணர்வைத் தூண்டி வளர்த்தன. இதன் உச்சமே இன்று நாம் காணும் காட்சிகள்.

இது ஒரு புறமிருக்க ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காய்ப் போர் முரசம் கொட்டிய ‘தலித்’ கட்சிகளும் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்து திராவிட, இடதுசாரிக் கட்சிகள் சீரழிந்தது போலவே கெட்டுக் குட்டிச் சுவராயின.விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனும், புதிய தமிழகம் கிருட்டிணசாமியும் விடுதலைப் பாதையிலிருந்து விலகிப் பல கல் தொலைவு சென்று விட்டனர்.

ஆதித்தமிழர் பேரவை அதியமானும் அதே பாதையிலேயே பயணிப்பதாகத் தெரிகிறது. இவையன்றி உள்ள சிறு சிறு தலித் அமைப்புகள் தொண்டு நிறுவனங்களின் கைப்பாவைகளாக உள்ளன. ‘மனு’க் கொடுக்கும் அமைப்புகளாகவும் கட்டைப் பஞ்சாயத்துக் களன்களாகவும் நிலை திரிந்தவைகளும் உள.

ஆக, இவ்வாறாகத் தமிழ்நாட்டின் வரலாறு இன்று ஒரு தேக்கநிலையை அடைந்திருக்கிறது; பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.”தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” என்ற செம்மாந்த நிலை மாறி “தமிழன் என்று சொல்லடா! தலை குனிந்து கொள்ளடா!” என்ற இழிநிலை ஏற்பட்டுள்ளது.இதிலிருந்து மீளக் கொள்கை அரசியலும் போராட்ட அரசியலும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் சாதி மத பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து போராடுவதற்கான காரணிகள் பல உள. ஆற்று நீர்ச் சிக்கல்கள், மின்வெட்டு, விண் ணைத் தொடும் விலைவாசி உயர்வு எனத் தமிழ் மக்கள்மீது இடிகள் பல இறங்கி வருகின்றன.உலக மயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல்களின் வழியாக வல்லாதிக்கங்கள் தமிழ் நாட்டை ஒண்டச் சுரண்டுகின்றன.  பிறரைக் காட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்கள்தாம் இன்று பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இலவயங்கள் என்ற வலையில் அவர்களை வீழ்த்தி இலவயக் கல்வியைப் பிடுங்கிக் கொண்டனர். கல்வி பழையபடி உயர்சாதிக்குரியதாகவும் நகரஞ் சார்ந்ததாகவும் பெரும்பான்மை மக்களிடமிருந்து அந்நியப் பட்டுள்ளது. இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள,விடுதலை பெற தமிழக மக்கள் சாதி மதங்களைக் கடந்து ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காய்த் திகழ்கிறது. மரண தண்டனைக்கெதிராகவும், ஈழமக்களுக்கு ஆதரவாகவும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடியதைப் பார்க்கிறோம். இத்தகைய போராட்டங்கள்தாம் சாதிகளைக் கடக்க உதவும்; முற்போக்கு ஆற்றல்கள் ஒன்றிணைய வழி வகுக்கும்; ஆதிக்க சாதிகளை ஓரங்கட்டி முறியடிக்கப் பாதை சமைக்கும். இப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இங்குச் சாதித் தாக்குதல்கள் தூண்டி விடப்படுகின்றன.தமிழர்கள் ஒன்றுபட்டால் தங்கள் அதிகாரங்கள் தவிடு பொடியாகிவிடும் என்பதில் ஆதிக்க ஆற்றல்கள் தெளிவாயுள்ளன.

இதனை உணர்ந்து சமூகநீதி ஆற்றல்களும் தமிழ்த் தேசிய ஆற்றல்களும் ஒன்றிணைந்து கைகோர்த்து ஆதிக்கவாதிகளின் சதிகளை முறியடிக்க வேண்டும்.சமூகநீதித் தமிழ்த்தேசியமே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும்;சமத்துவத் தமிழகத்தைப் படைக்கும்.ஒன்றிணைவோம்!போராடுவோம்!சமூகநீதித் தமிழ்த் தேசக் குடியரசு அமைப்போம்! சாதி வர்க்கத் தளைகள் உட்பட அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுதலை பெறுவோம்!