பகைவனே!
என் ஆடை பறித்தாய்
ஆனால் அம்மணமில்லை நான்
மானம் உடுத்தியிருப்பதால் --
ஆடை மறைத்தாலும்
அம்மணம் நீயே
மனிதம் கிழிந்து மிருகமாய் நிற்பதால்.
பகைவனே!
என் கண்ணைக் கட்டினாய்
ஆனால் காண முடிகிறது என்னால்
ஒரு புதிய தேசத்தின் விடியலை --
இருகண் திறந்திருப்பினும்
குருடன் நீயே நீயே
இனவாதம் மூடியிருப்பதால்.
பகைவனே!
என் கைகால் கட்டினாய்
புறமுதுகில் சுடுகிறாய்
நீ கோழையிலும் கோழை --
துவக்கே உன்னைப் பரிகசிக்கும்
தோட்டாவை எனக்குப் பரிசளிக்கும்
வென்றேன் நான் தோற்றாய் நீயே.
பகைவனே!
என்னைக் கொன்று வீசினாய்
வெற்றுடல் என்று --
தாய்மண் அணைப்பில்
வித்துடலாகி முளைத்தெழுந்து
உன் கணக்கை முடித்து
விடையும் எடுப்பேன் -
விடுதலை விடுதலை!