திருப்பூரில் அக்.2 ஆம் தேதி காலை நடந்த புலவர் குழந்தை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று செந்தலை கவுதமன் ஆற்றிய உரை:

இன எழுச்சிப் பெருவிழாவாக நேற்று முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும், இந்த திருப்பூர் - சிறப்புப் பெற்ற ஊர். இந்த ஊரின் பெயர் திருப்பூர். படை சென்று திரும்பிய காரணத்தினாலேயே இதன் பெயர் ‘திரும்பூர்’. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு இது ‘விரும்பூர்’. அந்தத் திருப்பூர் - திரும்பூர் - விரும்பூர் - நேற்று முதல் கருப்பூராகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இங்கே குத்தூசி குருசாமிக்கும் - புலவர் குழந்தைக்கும் விழா எடுத்து சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம்! ஏன்? நமக்கான வேர்கள் அவர்கள் அந்த வேர்களை ஏன் விழா எடுத்து நினைவூட்டிக் கொண்டிருக்கிறோம்? எதிர்கால விளைச்சல்களுக்காக!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘சுய மரியாதைச் சுடர்’ நூலை காணிக்கையாக்கினார், குத்தூசி குருசாமிக்கு. இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூலை காணிக்கையாக்கினார் தந்தை பெரியாருக்கு! ஆனால் புலவர் குழந்தை தனது இராவண காவியத்தை ‘வருங்காலத் தமிழனு’க்குக் காணிக்கையாக்கினார். அந்த வருங்காலத் தமிழர்கள்தான் இங்கே இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வேர்களை மறக்காத நன்றி உணர்வோடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் - திருப்பூரில் ஒரு ‘குமரன்’ தோன்றினான். 1965-ல் நடந்த மொழிப் போரில் - மற்றொரு ‘சவுரிசவுரா’வைத் தந்தது இந்தத் திருப்பூர்! (பிரிட்டிஷ் ஆட்சியில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது வடநாட்டில் ‘சவுரிசவுரா’ எனும் ஊரில் காவல் நிலையத்தைத் தகர்க்கும் பெரும் போராட்டம் நடந்தது). 1965 பிப். 19 ஆம் தேதி திருப்பூரில் நடந்த சம்பவங்களை மறக்க முடியுமா? அதை எல்லாம் இங்கே விற்கப்படும் ‘கோவை மாவட்டத்தில் மொழிப் போர்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளோம். படித்துப் பாருங்கள். அதே திருப்பூர் தான்  இந்த இராவண காவியத்தையும் வழங்கியது. திருப்பூர் வள்ளல் எஸ்.ஆர். சுப்ரமணியம் அந்த நாளிலே - இந்த நூலை வெளியிடுவதற்காக ரூ.6000-த்தை அன்று வழங்கியவர். அதனால் தான் இந்த நூலே வெளி வந்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இராவண காவியத்துக்கு வாழ்த்துப்பா பாடி வரவேற்றார்.

1946-ல் வந்த நூல் இரண்டே ஆண்டுகளில் தடை செய்யப்பட்டது. ‘அடிமை’ இந்தியாவில் ‘சுதந்திரமாக’ உலவி வந்த நூல் ‘சுதந்திர’ இந்தியாவில் தடை செய்யப்பட்டது. என்ன உரிமை? யாருக்கு உரிமை? வந்த சுதந்திரம் நமக்கல்ல; இது சுதந்திர நாள் நல்ல; தமிழர்க்கு துக்க நாள் என்று சொன்னார் பெரியார். அது எவ்வளவு சரியான உண்மை, பார்த்தீர்களா? 1948 மே முதல் நாள் ‘இராவண காவியம்’ தடை செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1971 ஆம் ஆண்டில் கலைஞர் முதல்வராக இருந்த போதுதான் தடை நீக்கப்பட்டது. இராவண காவியம் “பழமைக்குப் பயணச் சீட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு” என்றார் அண்ணா.

‘வாழ்விலக்கணத்தை வரைந்தவர் வள்ளுவர். வாழ்விலக்கியத்தை வரைந்தவர், புலவர் குழந்தை’ என்றார் கலைஞர். அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த குழந்தை எழுதிய காப்பியம் அரசால் தடை செய்யப்பட்டது. ஆசிரியராக இருந்த புலவர் குழந்தைக்கு எவ்வளவு மன உளைச்சல்களைத் தந்திருக்கும். அவைகளை எல்லாம் நேரில் இருந்து பார்த்த புலவர் குழந்தையின் மகள் - இங்கே கவுரவிக்கப்படவிருக்கிறார்கள். இந்த மேடையிலே இருக்கிற காட்சி, உணர்ச்சி மிக்க காட்சி. எப்பேர்ப்பட்ட வரலாறு? நெருப்பாற்றிலே நீந்தி வந்தவர்கள் அல்லவா நாம்?

சுதந்திரத்துக்குப் பிறகு முதன் முறையாய் அரசின் தடையை சந்தித்த நூல் இராவண காவியம் தான்! அடுத்தத் தடை - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நூலுக்கு! அடுத்த தடை தந்தை பெரியார் எழுதிய ‘பொன் மொழிகள்’. அடுத்த தடை - அறிஞர் அண்ணா எழுதிய ‘இலட்சிய வரலாறு’. அந்த நூலைப் படித்துத் தான் திராவிட இயக்கத்தின் மீது நான் பற்றுக் கொண்டேன் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அதைத் தொடர்ந்து அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை’; ‘திராவிடர் நிலை’ அனைத்துக்கும் தடை. சி.பி.சிற்றரசு எழுதிய ‘போர்வாள்’ அதற்கும் தடை! அந்த வரிசையில் வந்த புலவர் செல்வராஜ் எழுதிய கருப்புச்சட்டை ஒழிய வேண்டுமா? என்ற நூலுக்கும் தடை. கலைஞர் எழுதிய ‘உதயசூரியனுக்கும்’ தடை! ‘வாளும் கேடயமும்’ கடைசியாக சந்தித்த தடை! இத்தனைத் தடைகளையும் சந்தித்த இயக்கம் இது!

நீ புத்தகத்தைத் தடை செய்யக் கூடும்! கருத்தைத் தடை செய்ய முடியுமா? “மேட்டை ஆள்வது கூடும்; இனி விண்ணை அளப்பதும் கூடும்; காட்டை அழிப்பதும் கூடும்; பெரும் கடலை தூர்ப்பதும் கூடும்; ஏட்டையும் நூலையும் தடுப்பது கூடும்; உரிமை எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்?” என்று கேட்டார் பாரதிதாசன். 67 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தை ‘வீழும் போதும் தமிழ் தமிழ் என்று வீழ்வேன் தமிழ் மண்ணிலே’ என்று முழங்கியவர்! இன எழுச்சிக் காவியமாக எழுதினார். அவர் சொல்ல வந்த செய்தி ஒன்று தான். ஒரு பக்கம் ராமன்; மறுபக்கம் ராவணன். ‘ராமா! நீ வெற்றி பெற வேண்டுமானால், சுக்ரீவன்களுக்கு ஆசை காட்டு; வாலியை மறைந்து நின்று கொல்’ - இப்படி எதிரிகளுக்கு வரைபடம் போட்டுக் கொடுத்த நூல் இராமாயணம். ‘பன்னீராயிரம் பாடிய கம்பனும் இம்மியும் தமிழுணர்வு எழுப்பியதுண்டா?’ என்று கேட்டானே, பாரதிதாசன்! அப்படி தமிழ் உணர்வை எழுப்புவதற்காக வந்த நூல் தான் ‘இராவண காவியம்’ ராமாயணத்தில் இந்திரஜித் இருப்பார்; இராவண காவியத்தில் சேயோனாக மாற்றுவார்; அங்கே மண்டோதரி இருப்பார்; இங்கே வண்டார் குழலியாக இருப்பார்.

“சேயேனே, குரல் கொடுத்தாயே! அப்பாவே
இப்போதே நீ போவென்று சொன்னால்,
அறிவற்ற வடவோரை ஒரு சுற்றிலேயே
தப்பாமல் கழுகுஉண்ண இரையாகத் தருவேன்;
தந்தையே உன் திருமுன்னர்
விரைந்தோடி வருவேன்
வடவரை, அன்னியரை, ஆதிக்கத்தை எதிர்ப்பேன், ஒழிப்பேன்
என்று முழக்கமிட்டாயே!
இந்திரஜித்தே! சேயோனே!
இப்போது நீ எப்படிக் கிடக்கிறாய்?
நெடிலே மொழிந்து,
அடிமேல் தவழ்ந்து
நிலமாள நின்ற மகனே!
கடிதே சினந்து,
வடவோன் எரித்த
கணையால், இறந்தது,
அறமோ”

என்று புலம்புவார் வண்டார்குழலி. படிக்கும் போதே கண்ணீர் வரும்! “சேயோன்கள்” - இராவண காவியத்தில் மட்டுமல்ல, இங்கே கண்ணுக்கு முன்னாலேயே இறந்து கிடக்கிறார்கள். அன்னியப் பண்பாடு புகுத்தப்படுகிறது. பெயரில் அன்னியப் பண்பாடு; சங்கரன் - ஸங்கரன் ஆகிறான்; சங்கர் - ஷங்கர் ஆகிறான்; சிவக்குமார் கூட, இப்போது ‘ஷிவ்குமார்’ ஆகிறான்; உணவுப் பெயர்கள் கூட ‘பகாலாபாத்’, ‘பிசிபேலா பாத்’ என்று உருவெடுக்கிறது. போராட்டங்களிலேகூட, ‘தர்ணா’ வந்துவிட்டது. ‘பந்த்’ வந்து விட்டது, ‘ஹர்த்தால்’ வந்து விட்டது. பண்பாட்டுப் படையெடுப்பு முன்பை விட இப்போது வீச்சோடு நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பண்பாட்டு படையெடுப்பைத் தடுப்பதற்குத் தான் ‘இராவண காவியம்’ போன்ற இன எழுச்சிக் காப்பியங்களை மக்கள் மன்றத்தில் பரப்ப வேண்டும். எந்த இயக்கம் கலை இலக்கியத்தை கை கழுவி விடுகிறதோ, அந்த இயக்கத்தைக் காலம் கைகழுவிவிடும். நமக்கான கலை இலக்கியத்தை உருவாக்கிக் கொடுத்த முன்னோர்கள் இருக்கிறார்கள். குத்தூசி குருசாமியைப் போல ‘எள்ளல் இலக்கியம்’ எழுதிய எழுத்தாளர் இன்னும் இல்லை. இந்தப் பெருமக்களையெல்லாம் நினைவுபடுத்துகிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்கு நன்றி கூறி அமைகிறேன்.

Pin It