மனித மாண்புகள், சட்டங்கள் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் கூடி பகிரங்கமாகக் கலாச்சாரக் காரணங்களுக்காகப படுகொலைகள் செய்யும் சம்பவங்கள் நிறைந்த ஹரியானா ashok_womanமாநிலத்தில் (இது பொதுவாக செழிப்பான மாநிலம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது) சாதித் தாண்டியும், மதம் தாண்டியும் நடக்கும் திருமணங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இது ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் இதற்குக் காரணம் சாதி மறுப்பு இயக்கம் எதுவும் அல்ல. ஏனெனில், அப்படி பிரத்தியேகமாக எதுவும் அங்கு இல்லை. பின், வேறு எதுதான் காரணம்?

பெண் சிசுக் கொலை. அதனால் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்து விட்டது. 2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு வெறும் 881 பெண்களே இருந்தனர். சில மாவட்டங்களில் 800க்கும் கீழே விழுந்து கிடக்கின்றது இந்த எண்ணிக்கை. இது ஆறு வயது வரை உள்ள குழந்தைகளின் ஆண், பெண் விகிதாச்சாரக் கணக்கு. இப்படி பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போனால் ஏராளமான சமூகப் பிரச்சனைகள் வரும் என்பதை அறிஞர்கள் பலர் உணர்த்தியிருக்கின்றார்கள்.

மணந்து கொள்ள பெண் கிடைக்காமல் ஆண்கள் பலர் திருமணமாகாதவர்களாகவே வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கும். அது இருக்கும் பெண்களின் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கும். பெண்கள் வல்லாங்கு செய்யப்படுவது, பாலியல் தொழில் பெருகுவது, ஆண் பெண் உறவில் பதட்டமும், இறுக்கமும் அதிகரிப்பது, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் அதிகரிப்பது, அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்று இந்தப் பட்டியல் நீள்கின்றது. ஆனால், யாரும் முற்றிலும் எதிர்பாராத இரு விளைவுகளை இப்பிரச்சனை உண்டாக்கியிருக்கின்றது.

ஜாட் சாதியைச் சேர்ந்த பல்ஜித் சிங் ஒரு லாரி ஓட்டுநர். 35 வயது வரை திருமணம் ஆகவில்லை. ஏனெனில், பெண்ணே கிடைக்கவில்லை. இனி வேறு வழியில்லை என்று அசாமைச் சேர்ந்த 16 வயது ஏழை முஸ்லிம் பெண் சோனா காதும்மை மணந்து கொள்கிறார். அவர்கள் இருவருக்கும் இப்போது ஒரு குழந்தையும் இருக்கின்றது.

இப்போது ஹரியானாவில் இத்தகைய திருமணங்கள் சகஜம். ஹரியானா மாப்பிள்ளை, அசாமியப் பெண் (அல்லது சத்தீஸ்கர். ஆந்திரப்பிரதேசப் பழங்குடியினப் பெண்கள்). அவர் எந்த சாதியாக இருந்தாலும் பிரச்னையில்லை. பெரும்பாலும் ஏழைப் பழங்குடியினப் பெண்கள், ஏழை இஸ்லாமியப் பெண்கள்தான் இப்படித் தேர்வு செய்யப்படுகின்றார்கள். தலித் பெண்கள் மணம் செய்து கொள்ளப்படுகிறார்களா, இல்லையா என்பது குறித்து விவரம் இல்லை.

பெண் சிசுக் கொலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் ரெட் கிராஸ் சொசைட்டி பிவாண்டி மாவட்டத்தில் மட்டும் இது போல் 100 மணமகள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர் என்கின்றது. இதற்கென்றே பிரத்தியேகமாக தரகர்கள் இருக்கின்றார்கள். இத்திருமணத்திற்காக சிங் பெண் வீட்டாருக்கு நல்ல தொகையும் கொடுத்திருக்கின்றார். வரதட்சணை போய் பரிசம் போடுவது வந்து விட்டது. தான் இப்போது சௌகரியமாக இருப்பதாக அவர் கூறுகின்றார். அவரது நண்பர்களெல்லாம் அவரைப் பார்த்து பொறாமைப்படுகின்றார்களாம். எங்களுக்கும் இதுபோல் பெண் கிடைக்க என்ன வழி என்று அவரைக் கேட்கிறார்களாம். (ஆதாரம்:தி எகனாமிஸ்ட், மார்ச் 4, 2010).

ஒரு பக்கம் சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவை என்கின்ற பெருமை இத்திருமணங்களுக்கு இருந்தபோதும், சாதி, மத, ஆணாதிக்கம் என்பது வெறொரு ரூபத்தில் வெளிப்படுகின்றது. முஸ்லிமான சோனா இப்போது ’இந்து’வாகிவிட்டார். அல்லது இந்துவாக்கப்பட்டுவிட்டார். அவர் ஜாட் சாதியின் கலாச்சாரத்தையே கடைப்பிடிக்க வேண்டியவராகவும் இருக்கின்றார். அவரது ஏழ்மையை அவரது மதம் போக்கவில்லை. இந்துக்களின் ஏழ்மையையும் அல்லது வேறு எந்த மதத்தவரின் ஏழ்மையையும் அவர்களது மதம் போக்குவதில்லை. ஒன்று அதை நியாயப்படுத்தும் அல்லது வெற்றுச் சமாதானம் கூறும். இதுதானே உண்மை நடப்பு?

இன்னொரு பக்கம் ஆண்களைப் பொருத்த வரையில் அவர்களது சாதியோ அல்லது மதமோ தங்களது தனிமைப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. ஆனால் தங்களது சாதியையும், மதத்தையும் விடாமல் வைத்துக் கொள்ள முடிகின்றது. அதே போல் ஆணாதிக்கத்தையும் தொடர முடிகின்றது. காதல் திருமணங்களிலேயே இதுதான் நடக்கின்றது. மேலும், இப்படி இறக்குமதி செய்யப்பட்ட பெண்களில் பெரும்பாலோர் பிராணிகளைப் போல்தான் நடத்தப்படுகின்றார்கள். சொந்த சாதி, சொந்த மதப் பெண்களுக்கே அதுதான் நிலைமை எனும்போது, இப்படி விலைக்கு வாங்கப்பட்ட பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த இடத்தில்தான் கலாச்சாரக் காவலர்களான ’கப் பஞ்சாயத்துகள்’ (ஜாட் சாதிப் பஞ்சாயத்துகள்) நடத்தும் ஆதிக்க சாதி அல்லது சாதிகளின் ஆதிக்க வர்க்கங்கள் ஒழுக்கம் என்பதை ஒரு உத்தியாகப் பயன்படுத்துவது அம்பலமாகின்றது. கப் பஞ்சாயத்துகள் என்பது என்ன? ஒரு கோத்திரத்திற்குள் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்கும் அல்லது அப்படிச் செய்து கொண்டவர்களைத் தண்டிக்கும் ஒரு நிறுவனம். நிறுவனம் என்ற உடனேயே எங்கே பதிவு செய்து வைத்திருக்கின்றார்கள் என்று தேட வேண்டாம். எங்கேயும் கிடைக்காது. அரசியல்வாதிகள்தான் வாக்குகளுக்காக இவர்களைத் தேடி வருவார்கள். அரசாங்கம் இவர்களைத் தேடி வராது. இவர்கள் மீது கை வைக்கவும் பயந்து கொள்ளும். இதற்கு வெறும் சாதி குணம் மட்டும் இருக்கின்றதா அல்லது வர்க்க குணமும் இருக்கின்றதா?

ஒரு கோத்திரத்திற்குள் திருமணம் செய்து கொள்வதை தடுக்கும் இந்த சபையால் உண்டாக்கப்பட்ட பிரச்சனைகள் பற்றி ’அவுட்லுக்’ இதழ் (ஏப்ரல் 26, 2010)நடத்திய ஆய்வு பின்வரும் முடிவுகளைத் தருகின்றது. ’’பிவானி. ஜஜ்ஜார், ரோடக் ஆகிய மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவை. கப் பஞ்சாயத்துகளால் சமீபத்தில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளில் பெரும்பாலானவைற்றிற்கு ஆதாரமாக இருப்பது தனிப்பட்ட தகராறுகள் அல்லது நில அபகரிப்பு முயற்சிகளாகும். அப்படி இல்லை எனில், அவை பஞ்சாயத்து அரசியல் தொடர்பானவையாக இருக்கின்றன. ‘சட்டத்திற்குக் கட்டுப்படாத இந்த பஞ்சாயத்துகள் (கங்காரு கோர்ட்ஸ்) ஆதரவற்ற ஏழைக் குடும்பங்களையே தாக்குகின்றன. செல்வாக்கு மிக்க குடும்பங்களை எப்போதுமே குறி வைப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான்’ என்று ஹரியானா நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் உறுப்பினரும், கப் பஞ்சாயத்துகளின் சித்திரவதைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவருமான டாக்டர்.டி.ஆர்.சௌத்ரி கூறுகின்றார். பிரச்சனைகள் வசதிக்கு ஏற்றபடி பொறுக்கி எடுத்துதான் எழுப்பப்படுகின்றன. பெரும்பலான சமீபத்திய பிரச்சனைகளில் சமூகக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது என்பதைவிட மற்ற அம்சங்களே அவை எழுப்பப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன’’

“’இந்நாட்களில் கப் பஞ்சாயத்துகள் எங்களது பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கவில்லை. ஆனால், ரகசியமான உள்நோக்கங்களுக்காக அழித்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் கிராமப்புற ஹரியானாவில் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிப்பதைக் கடினமாக்கிக் கொண்டிருக்கின்றன’’ என்கிறார் டாக்டர் சதீஷ் கெலாவட்.

ஹரியானா கிராமங்களில் பல்வேறு வகையான தடைகள் நடப்பில் இருக்கின்றன. ஒரு கோத்திரத்திற்குள் திருமணம் செய்து கொள்வது அண்ணன் தங்கை திருமணம் செய்து கொள்வதைப் போல என்று தடுக்கப்பட்டிருக்கின்றது, அதே போல் ஒரு கிராமத்திற்குள் வாழும் ஆண் பெண்களுக்கு இடையிலான திருமணங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அது மட்டுமின்றி சில கிராமங்கள் சகோதர கிராமங்களாகக் கருதப்பட்டு அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான திருமணமும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. இவற்றை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், அனைவரும் அல்ல. சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

“’ஹரியானாவின் ஹிஸ்ஸார் மாவட்டத்தில் இருக்கின்றது பாய்னி பாத்ஷாபூர் என்கிற ஊர். அந்த ஊரைச் சேர்ந்த பல்வந்த் சிகாக் ஒரு பணக்கார விவசாயி. ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குள் திருமண உறவு கூடாது என்கின்ற கடுமையான சட்டதிட்டங்களை மீறி அவர் அதே ஊரைச் சேர்ந்த ராஜ்பாலா கோதாரா என்கின்ற பெண்ணை 1997ல் மணந்து கொண்டார். “நான் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலையில் இருப்பதால் கப்பின் ஆட்சேபணையை என்னால் எதிர்க்க நிற்க முடிந்தது. எனக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாலும், சட்டம் தெரியும் என்பதாலும், அடித்தால் பதிலடி கொடுக்க முடியும் என்பதாலும் எங்கள் திருமணத்திற்கு எதிராக ஆரம்பத்தில் வெளிப்பட்ட முணுமுணுப்புகள் மெல்ல அடங்கிவிட்டன’’ என்கின்றார்.

ஆனால், பிவானி அருகிலுள்ள சமாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபகவான். லேகா கோத்திரத்தைச் சேர்ந்த இவர் ராஜஸ்தான் காவல்துறையில் பணிபுரிகின்றார். அவர் தனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அனிதா ஜீத்ராவை மணந்தார். அவர்கள் இருவரும் வெவ்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் என்ற போதும், தங்களுக்கிடையில் சகோதரத்துவத்தைக் கடைப்பிடிககும் 12 கிராமங்களில் இரண்டைச் சேர்ந்தவர்கள் என்கிற பெயரில் கப் பஞ்சாயத்து அத்திருமணத்தை எதிர்த்தது. அதாவது எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாத அதுவும் அண்ணன் தங்கைக்கு இடையில் நடந்த திருணமாம். நாசமாப் போச்சு. ஆனால், உண்மையில் அந்த எதிர்ப்புக்கு வேறு பொருள் சார்ந்த, அதிகாரம் சார்ந்த காரணங்கள் இருந்தன.

பகவானின் தந்தை ரண்பீர்சிங் ஒன்று அந்தத் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அவருக்குச் சொந்தமான 8.5 ஏக்கர் நிலத்தை பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு கிராமத்தை விட்டு குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என்று கப் உத்தரவிட்டது. அவர்கள் மறுத்தபோது, சாதிப் பஞ்சாயத்து குண்டர்கள் அவர்களது நிலங்களைத் தாக்கினர். இரண்டு ஆழ்துளை கிணறுகளை அழித்தனர். பகவான் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதை கவனத்தில் கொள்ளவும். சட்டத்தை அமல்படுத்தும் துறையைச் சேர்ந்தவருக்கே இந்தக் கதி.

பகவானின் குடும்பம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. எப்படியாயினும், கலாச்சாரக் காவலர்கள் கலாச்சார விஷயங்களில் மட்டும் தலையிடுவதில்லை, கலாச்சாரத்தை நிலைநாட்ட பொருளாதார விஷயங்களிலும் தலையிடுகின்றனர். நிலத்தைப் பறிக்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது? வன்முறையைப் பிரயோகிக்கின்றனர். இந்த பயத்திலேயே பலர் உரிய வயதை எட்டியும் திருமணம் ஆகாமல் தவிக்கின்றனர்.

ரண்பீர் சிங் விஷயத்தில் இன்னொரு கோணமும் இருக்கின்றது. கிராமத் தலைவர் (சர்பஞ்ச்) தேர்தலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் வேறொரு பெண் வேட்பாளரை ஆதரித்தார்களாம். ஆனால் அவர் தோற்றுவிட்டார். வெற்றி பெற்ற தலைவர் தன்னைப் பழிவாங்க தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என்று கூறும் சிங் “தன்னைக் கிராமத்தைவிட்டு தூக்கி எறிந்து விடுவோம் என்று மிரட்டியதால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியதாயிற்று’ என்கிறார். நீதிமன்ற உத்தரவின் படி அவரது குடும்பத்தையும். வயலையும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரண்பீர் சிங்கிற்கு அரசு நிர்வாகத்தின் ஆதரவு இருக்கின்றது என்று தெரிந்ததும் இப்போது அந்தக் கலாச்சாரக் காவலர்கள் சமரசத்திற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்களாம்.

மற்றொரு உதாரணம். ஹரியானா முன்னாள் முதல்வர் பன்சிலாலின் பேத்தி சுருதி சௌத்ரி, பிவானி தொகுதியின் மக்களவை உறுப்பினர். அவர் ஒரு அசாமிய இளைஞரை மணந்து கொண்டபோது யாரும் ஆட்சேபிக்கவில்லை. அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் அவர்களது ஜாட் சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்கள். எந்தப் பிரச்சனையையும் யாரும் எழுப்பவில்லை. (செல்வந்தர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டால் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று பெரியார் ஒரு முறை கூறியிருப்பதை இவ்விடத்தில் கவனப்படுத்தலாம். அதாவது பொருளாதார அல்லது வர்க்கக் காரணிகளையும் அவர் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார் அல்லது எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம்).

ஆனால், அந்தக் கிராமத்திற்கு அருகிலுள்ள கார்காடி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரான சுரேந்தர் ஜாட் சாதியைச் சேர்ந்த பூனம் என்கின்ற பெண்ணை மணந்தபோது பெரும் ரகளையாகிவிட்டது. கப் அவர்களைப் பலவந்தமாகப் பிரித்து, பூனத்திற்கு வேறிடத்தில் திருமணம் செய்து வைத்தது. அதிலிருந்து தப்பிய அவர், ஏற்கனவே தப்பியோடியிருந்த சுரேந்தருடன் மீண்டும் இணைந்தார். அவர்கள் பல மாதங்கள் தலைமறைவாகத்தான் வாழ்ந்தார்கள். எம்பி சுருதியின் திருமணத்தை எதிர்க்காத நீங்கள் ஏன் எங்களது திருமணத்தை எதிர்க்கின்றீர்கள் என்று பூனமும், சுரேந்தரும் கேட்டபோது ’’அவர்கள் பெரிய மனிதர்கள்’’ என்று கலாச்சாரக் காவலர்கள் பதில் சொன்னார்களாம். பணம் இருந்தால் சாதியாவது, மதமாவது, மண்ணாவது.

நல்லது. இது மாதிரி ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். ஆங்கில ஊடகங்கள் அவற்றை பெருமளவில் வெளிக் கொண்டு வந்துள்ளன. சாதியோ, கலாச்சாரமோ பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியும், ஏழைகளுக்கு ஒரு மாதிரியும்தான் செயல்படுகின்றன. இம்மாதிரிப் பஞ்சாயத்துகளால் ஏழைகள் பலர் கொல்லப்பட்டு விட்டனர். அதாவது, ஏழைகள் சாதிக் கலாச்சாரத்தைக் கறாராகப் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் தொலைத்துக் கட்டிவிடுவார்கள். அல்லது இழித்து ஒதுக்கிவிடுவார்கள்.

ஆனால் பணத்தின் முன் கலாச்சாரம் நாய் போல் வாலாட்டும். பணக்காரர்கள் அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தங்களுக்கு ஆதாயம் என்றால் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள். எந்த முதலாளியும் சொந்த சாதிக்காரனை வேலைக்கு வைத்துக் கொள்வது சாதிப் பாசத்தினால் அல்ல. தன்னுடைய சுரண்டலுக்கு சாதி ஒரு கவசமாகப் பயன்படும் என்றுதான். சாதியின் பொருளாதார அடித்தளம், கலாச்சாரத்தின் பொருளாதார அடித்தளம் என்ன என்பது இப்போது புரிந்திருக்க வேண்டும்.

’அவுட்லுக்’ இதழின் சந்தர் சுதா தோக்ரா இந்த விவரங்கள் அடங்கிய தன்னுடைய கட்டுரையை பின்வருமாறு முடிக்கின்றார். “’அசாம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வறிய பழங்குடியினப் பெண்களை ஜாட்டுகள் திருமணம் செய்து கொள்ளும் சமீபத்திய நடைமுறையை ஏன் கப் பஞ்சாயத்துகள் ஆட்சேபிப்பதில்லை ஜனவாதி மகிளா சமிதியின் (ஜனநாயக மாதர் சங்கத்தின்) மாநிலத் தலைவரான ஜக்மதி சங்வான் என்று கேள்வி எழுப்புகின்றார். ’இங்கே போதுமான பெண்கள் இல்லை. ஆதலால், வாரிசுகளை உற்பத்தி செய்யும் வேலையைச் செய்யும் இந்தப் பெண்கள் பிராணிகளைப் போல் நடத்தப்படுகின்றார்கள். இத்தகைய திருமணங்களை அல்லது நடைமுறைகளை எந்த சாதிப் பஞ்சாயத்தும் ஆட்சேபித்ததில்லை’ என்கிறார் அவர்.

“கிராமப்புற ஹரியானாவில் இது போன்ற குரல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. போதுமான பெண்கள் இல்லை என்கின்ற ஒரே காரணத்திற்காக இளைஞர்களின் திருமண விஷயத்தில் கடுமையான பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும், காட்டுமிராண்டித்தனமான செயல்களைப் புரிவோர் என்று அபகீர்த்தி பெற்ற ஜாட் சாதியினரின் கப் பஞ்சாயத்துகள் வெகு விரைவில் அடங்கும்படி நிர்ப்பந்திக்கப்படலாம். தங்களுடைய ’சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில்’ தனிப்பட்ட மோதல்களும், அரசியலும் ஊடுருவவது அவற்றின் வீழ்ச்சியை விரைவுபடுத்துவதை மட்டுமே செய்யும்’’.

இன்னும் சரியாகச் சொன்னால், பொருளாதார அடித்தளம் இல்லாமல், அதனால் உண்டாக்கப்படும் அல்லது உருவாகும் அதிகார அடித்தளம் இல்லாமல். சாதியோ, அல்லது அது போன்ற கலாச்சார பிற்போக்குத்தனங்களோ நீடிக்க முடியாது.

-அசோகன் முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It