பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு திரௌபதி முர்மு என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண். இது சமூக நீதியின் வெளிப்பாடு என்று சிலர் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இந்த வாதத்தில் நேர்மை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. இதற்கு முன் குடியரசுத் தலைவராக நிறுத்தப்பட்டவரும் தலித் தான். ஆனால் அவர் குடியரசுத் தலைவராக இருந்து சமூக நீதியைக் காப்பாற்றினாரா? சொல்லப் போனால் கோவிலுக்குள் செல்லக்கூட அவரை சனாதானம் அனுமதிக்கவில்லை என்பது தான் சோகமான வரலாறு.

 இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ள கருத்து மிகச் சரியானது, ஆழமானது.

இந்தியாவில் அரசியல் சட்டம் சீர்குலைக்கப்பட்டு, ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் படுகொலைக்குள்ளாக்கப்பட்டு, மதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிற நேரத்தில், இதை எதிர்த்து நான் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன், அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் இந்த தேர்தல் களத்திலும் நிற்கிறேன், வெற்றி என்று வரலாம்; வராமலும் போகலாம். அது பற்றி கவலை இல்லை என்று மிகச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் சமூக நீதியின் பார்வையை முன்னிறுத்துவது பச்சை சந்தர்ப்பவாத அரசியல்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி சமூக நீதியில் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு கட்சியும், பாஜகவின் வேட்பாளரைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அவரது கட்சி வேண்டுமானால் ஆதரிக்கலாம் அது அவர்களது உரிமை.

ஆனால் சமூக நீதி பேசுகிற அத்தனைக் கட்சிகளும் என்று சொல்கிற போதுதான், நாம் பல கேள்விகளை எழுப்ப வேண்டி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை உறுதி செய்வது தான் இந்த நாட்டில் சமூக நீதியா ?

நாட்டில் மத வெறியைத் திணிப்பது, அரசியல் சட்டத்தை சீர் குலைப்பது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, இந்துராஷ்டிர ஆட்சியை நோக்கி நாட்டை இழுத்துச் செல்வது என்ற கொள்கைக் கொண்ட ஒருபட்சக் கட்சி பா.ஜ.க.

இந்த கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிற ஒரு வேட்பாளருக்கு ஆதரவுக் கரம் நீட்டி, அந்த ஆட்சிக்கு வலிமை சேர்ப்பது தான் சமூக நீதி என்று பாட்டாளி மக்கள் கட்சி சொல்ல வருகிறதா?

இது சமூக நீதிக்கான தேர்தல் அல்ல. அப்படி இத் தேர்தலுக்கு பெயர் சூட்டுவது மக்களை ஏமாற்றுவது!

***

பெரியாரின் கனவு நனவாகும் மாட்சி!

உற்பத்தி சேவைத் துறைகளில் பணியாற்றும் பெண்களில் தமிழ் நாடே முதலிடம்

வேலைக்குப் போகும் பெண்களில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ந்திருக்கிறது.

இந்தியா முழுமைக்கும் மொத்தம் 15.93 சதவீதப் பெண்கள் வேலைக்குப் போகும் நிலையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 7.08 இலட்சம் பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

இரண்டாவது இடத்தில் கருநாடகம் இருந்தாலும் கருநாடகத்தைவிட மூன்று மடங்கு தமிழ்நாட்டில் அதிகம். 2017-2018ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலைகளுக்கான ஆண்டறிக்கை இத்தகவலைத் தெரிவித்துள்ளது. பெண்களையும் உள்ளடக்கிய தொழில் கொள்கைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி அமுல்படுத்துவதே இதற்குக் காரணம்.

இரவு நேரப் பணிகளுக்கு அனுமதி; அதற்கான பாதுகாப்பு; உயர் தொழில் நுட்பத் திறன் பயிற்சி பயிற்சி; குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் (இதற்கு ஒன்றிய ஆட்சி 10 கோடி மான்யம் வழங்குகிறது); பெண்கள் தங்கும் விடுதி வசதிகள்; உதிரி பாகங்கள் தயாரிப்புப் பூங்கா போன்ற திட்டங்களால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாட்டில் பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கிறது.

ஜவுளி மற்றும் காலணி தாரிப்பு தொழிற்சாலைகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கிறார்கள். 2021 முதல் கோவை கிரிலேஸ்கர் நிறுவனம் பெண்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி வருகிறது. இந்த நிறுவனம் குஜராத்தில் தொடங்கிய தொழிற்சாலையில் 35 சதவீத பெண்களை பணிகளில் அமர்த்தி யுள்ளது. இராணிப்பேட்டை மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியில் 70 சதவீதம் பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. எண்ணூர் அசோக் லேலாண்ட், கோவை பிரிக்கோல்ஸ், ஒரகடம் ராயல் என்பீல்டு, வல்லம் வடகல், ‘சிஈஏடி’ சென்னை உள்ளிட்ட பல நிறுவனங்கள் பெண்களுக்கே அதிக வேலை வாய்ப்புகளைத் தந்து வருகின்றன.

சேவைத் துறைகளான டி.சி.எஸ்., காக்ளிசன்ட் இந்தியா, வால்மார்ட் உலக தொழில் நுட்ப மய்யம் உள்ளிட்ட ஏராளமான சேவைத் துறை தொழில் மய்யங்கள் பெண்களையே அதிக எண்ணிக்கையில் வேலையில் அமர்த்தியுள்ளன.

‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்று கேட்ட சமூகத்தில் பெரியார் இயக்கம் பெண்கள் உரிமைக்காக நடத்திய இயக்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி இது.

தமிழ்நாடு ‘பெரியார் மண்’ என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, ஜூலை 4, 2022

Pin It