Edward Snowden[உலகமெங்கும் 50,000க்கும் மேற்பட்டோரை பெகாசஸ் என்ற மென்பொருள் சாத்தியப்படுத்தியுள்ளது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இந்த செயலியை பாஜக மோடி அரசு தன்னை நோக்கி கேள்வி எழுப்புவோரை கண்காணிக்க பயன்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசு இரகசியமாக சர்வதேச சமூகத்தை கண்காணித்திடும் திட்டங்களை 2013ல் எட்வர்ட் ஸ்னோடன் அம்பலப்படுத்தினார். இவர் தொடர்ந்து டிஜிட்டல் உலகில் தனிமனித பாதுகாப்பிற்காக குரலெழுப்பி வருகிறார்.

பெகாசஸ் உளவு விவகாரம் அம்பலமான பிறகு ஸ்னோடன் தொடர்ந்து அது குறித்து பேசி வருகிறார். கைபேசி தொழில்நுட்பம், அதில் இயங்கும் மென்பொருள்கள், வணிக நோக்கங்கங்கள், சர்வதேச அரசியல் காரணிகள், இதற்கான தீர்வுகள் என்று விரிவாக ஸ்னோடன் பெகாசஸ் தொடர்பாக கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இக்கட்டுரை அதன் தமிழ் மொழியாக்கம் ஆகும்.]

1.

ஒரு புதிய செல்பேசியை வாங்கியதும் நான் செய்யும் முதல் வேலை அதனை அக்கக்காக பிரிப்பது தான். இது ஏதோ அவசர அவசரமாக ஒரு கைப்பேசி பழுது நீக்குபவர் போல் அதன் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் ஆர்வதினாலோ அல்லது என் அரசியல் நிலைபாட்டினாலோ செய்வதல்ல. ஒரு புதிய கருவியை அப்படியே பயன்படுத்துவது ஆபத்து நிறைந்ததாகும். புது செல்பேசியை பயன்படுத்துவதற்கு முன்னர், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல் பணி அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 2 அல்லது 3 ஒலிவாங்கிகளை அகற்றுவது. இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்தாலும், நான் கையாளும் மிக ஆபத்தான பொருளாகவே எனது கைப்பேசி இருக்கும்.

உலகளாவிய செய்தி நிறுவனங்கள் ஆராய்ந்து அம்பலப்படுத்திய என்.எஸ்.ஓ குரூப் (NSO Group) நிறுவனத்தின் (கட்டுப்பாடுகளற்ற பாதுகாப்புதுறையின் புதிய தனியார் முகம்) ஆபத்தான பெகாசஸ் உளவு செயலி பற்றிய செய்தி வெளி வருவதற்கு முன்புவரை நான் புதிதாக வாங்கும் ஐஃபோனின் ஆபத்துகளை விளக்கும் போதெல்லாம் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களும், சர்வதேச ஊடகங்களும் தங்கள் விழிகளை உருட்டி உருட்டி என்னை நோக்கின.

பல ஆண்டுகளாக என்.எஸ்.ஓ குருப்பை குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை பொருட்படுத்தப்படாததன் விளைவாக பல மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் பத்தரிகையாளர்கள் கொல்லப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர். திறன்பேசிகளில் (Smart Phone) பயன்படுத்தப்படும் “மிகவும் பழமையான பாதுகாப்பற்ற” இயக்க மென்பொருட்களில் (Operating System) நிறைந்துள்ள பேராபத்து ஏற்படுத்திடும் குறைபாடுகளை பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டினோம். இவை அனைத்தும் “ஒரு கனவு உலகை கட்டுப்படுத்துவதை” போல தேவைக்கு ஏற்ப பயன்பாட்டாளர்களை கண்காணிக்க இயங்குகின்றன என்றும் தெரிவித்தோம். “நல்லவை என்று சொல்லப்படுபவை எல்லாமே நல்லவை இல்லை” என்று பெரும்பான்மையான மக்களுக்கு புரிய வைப்பது மிகவும் சிரமமாகவே உள்ளது. புகைபிடிப்பதும் மது அருந்துவதும் கேடு தருமென்று ஏற்க மறுக்கும் எனது நண்பன் எதிரே “மருத்துவர்களே ஐ-போன் புகை பிடிக்கிறார்கள்” போன்ற விளம்பரங்கள் வருவது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

எது எப்படியோ, என்னால் செய்ய இயலாததை தற்போது வெளியான பெகாசஸ் உளவு செயலியை பற்றிய செய்திகள் செய்துள்ளன. ஒரு செல்பேசியின் உரிமையாளருக்கு தெரியாமலேயே அவரின் சட்டைப்பையில் உள்ள செல்பேசியை வைத்து அவரை பின்தொடர்ந்து கண்காணிப்பதும்; அக்கருவியை தானாகவே இயக்கவும், நிறுத்திடவும் திறன்படைத்த மென்பொருள்கள் இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது ஒரு திருப்புமுனையாகவே நான் கருதுகிறேன்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அதை இவ்வாறு விவரிக்கிறது.

மொரோக்கோவில் சிறைப்பட்டிருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரரின் மனைவி கிலாவ்ட் மேன்கின் என்பவரின் ஐ-போனுக்கு ஒரு குறுஞ்செய்தி கடந்த மாதம் வந்திருக்கிறது. ஒரு குறுஞ்செய்தி வரும் போது வரும் இயல்பான சத்தமும் வரவில்லை, செய்தி வந்ததாக அறிவிப்பும் காட்டவில்லை, யாரிடமிருந்தும் ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கான எந்த ஒரு தடையத்தையும் விடவில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் செல்பேசியின் அடிப்படை பாதுகாப்பை மீறி ஒரு குறுஞ்செய்தி அவருடைய செல்பேசிக்கு வந்து அதன் மூலமாக இந்த தீம்பொருள் (malware) அவரது செல்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதனை ஆய்வு செய்ததில் அவரிடமிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் அவரிடமிருந்து எடுத்திருக்கக்கூடிய தகவல்களுக்கு வரம்பே இல்லை. பெகாசஸ் செயலியானது மின்னஞ்சல், கைப்பேசி உரையாடல்கள், சமூக வலைதள பதிவுகள், கடவுச்சொற்கள், சேமிக்கப்பட்டுள்ள தொடர்புகள், புகைபடங்கள், காணொளிகள், குரல்பதிவுகள் மற்றும் அவர் தேடிய வலைதள பக்கங்களின் பதிவுகள் உள்ளிட்டவற்றை எடுக்க முடியும் என்பதை பாதுகாப்பு துறை வல்லுனர்கள் மற்றும் என்.எஸ்.ஓ நிறுவன விளம்பரமும் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த உளவு மென்பொருளை கொண்டு செல்பேசியின் கேமராவையும், ஒலி வாங்கியையும் தானாகவே இயக்கி புது புகைப்படங்களையும், சுற்றுப்புற ஒலிகளையும் பதிவு செய்திட முடியும். மேலும், இது பயன்பாட்டாளர் நிலைகொண்ட இடங்கள் (GPS), நகர்ந்து செல்லும் தடம், வேகம், திசை போன்றவற்றையும் கூட கண்காணிக்கவல்லது.

இவையனைத்தையும், பெகாசஸ் பாதித்த கருவியின் உரிமையாளர் செல்பேசியைவிட்டு விலகி இருந்தாலும் அவருக்கு தெரியாமல் செய்திட முடியும். இது ஒரு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் சாத்தியமாகும். மேன்கின் உளவு சம்பவத்தை பொறுத்தவரை "linakeller2203" எனும் ஜிமெயில் முகவரியிலிருந்து வந்த ஒரு சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் மூலமாக இது நடந்தேறியது.

சுருக்கமாக சொன்னால், உங்கள் கையிலிருக்கும் கைப்பேசி தொடர்ந்து பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கிறது. தனக்கு பணம் கொடுப்பவர்களுக்கு அதை திறந்து காட்டிட இந்த பாதுகாப்பு(களற்ற) துறை தயாராக உள்ளது. எப்படிப்பட்ட அதிநவீன பாதுகாப்புகள் உருவாக்கப்பட்டாலும் அதில் ஓட்டைகளை கண்டறிந்து அவற்றை எவ்வளவு தொகை கொடுத்தேனும் வாங்கிட துடிக்கும் "ஒடுக்குமுறைக்கான தொழில்நுட்பங்களை விரும்பும்" மற்றும் "உள்நாட்டில் உருவாக்குவதற்கு திறனற்ற" உலக நாடுகளிடம் விற்று வருகின்றனர்.

இது போன்ற பாதிப்புகளை உருவாக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டு இயங்கிடும் இத்தொழில் துறை முற்றிலும் துடைத்தெறியப்பட வேண்டும்.

2.

நாளை நாம் கண்விழிக்கும் போது மக்கள் கோவத்தால் எரிமலையென வெடித்து என்.எஸ்.ஓ போன்ற தனியார் நிறுவனங்கள் துடைத்தெரியப்பட்டாலும், கணினி வரலாற்றில் நாம் மிகவும் பாதுகாப்பற்ற சிக்கல் நிறைந்த கணினியுகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்கிற உண்மையை மாற்றிட இயலாது. நாம் உபயோகிக்கும் பெரும்பாலான கருவிகளின் மென்பொருள்களை உருவாக்குபவர்கள்,

  • தங்கள் பொருட்களை விற்பனை மட்டுமே செய்ய விரும்பிடும், செம்மை செய்ய விரும்பாத ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், (வன்பொருள்) சிப் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றிக்கு உதவுபவர்கள் ஒரு பக்கம் உள்ளனர்.
  • தங்கள் மென்பொருளை செம்மை செய்வதையே விரும்பிடும், விற்பனை செய்ய விரும்பாத நல்ல எண்ணத்துடன் சேவை செய்யும் லினக்ஸ் (Linux) மென்பொருள் உருவாக்குநர்கள் மறு பக்கம் உள்ளனர்.

இவர்கள் அனைவருமே காலம்காலமாக பாதுகாப்பில்லாத கணினி மொழிகளை உபயோகிப்பதை சந்தோசமாக ஏற்று வந்துள்ளனர். நவீனப்படுத்துவதற்கு கடுமையான உழைப்பு மட்டும் அல்ல, பொருட் செலவும் தேவையுள்ளது. இந்த பாதுகாப்பை குலைக்கும் நிறுவனங்களால் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஓட்டைகள் அனைத்தும் கணினி மென்பொருள் உருவாக்கும் மொழிகளிலிருந்தே ஏற்படுகின்றன என்பது வெளிப்படையான தகவலாகும். ஆனால், அவற்றை பெரும்பாலும் யாரும் கணக்கில் கொள்வதில்லை.

நீங்கள் மாற்றத்தை விரும்பினால், மாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். உதாரணத்திற்கு மைக்ரோசாப்ட்க்கு நெஞ்சுவலியை உருவாக்க வேண்டும் என்றால், அது பாதுகாப்பு குறைபாடுகளுடன் உருவாக்கி விற்பனை செய்திடும் மென்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சட்டபூர்வமாக பொறுப்பேற்க வைப்பதை குறித்து பேச வேண்டும். முகநூல் நிறுவனத்திற்கு அச்சத்தை ஊட்டவேண்டுமென்றால், முன் அனுமதியில்லாமல் சேமித்துள்ள நம் தனிமனித தகவல்களை வெளியிட்டதற்கான சட்டபூர்வமான பொறுப்புக்கூறலுக்கு முகநூலை எவ்வாறு உட்படுத்துவது என்பதை பேச வேண்டும். இது சாத்தியமானால், மார்க் சக்கர்பர்க் எவ்வளவு வேகமாக “டெலிட்” பட்டனை அழுத்தி தனிமனித தகவல்களை அழிப்பாரென்று நினைத்து பாருங்கள்.

தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை, அதன் விளைவாக பொறுப்புகூறலுக்கான தேவையும் இல்லாததே இந்நிலைக்கு காரணம்.

3.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு போட்டியாக நடத்தி அதில் போட்டியிடுமளவிற்கு அரசுகளின் உளவு ஊடுருவல் நடைபெறுகின்றன. ஒரு நாடு மற்றொரு நாட்டை ஊடுருவியதாக குற்றம்சாட்டினால் அந்த நாடு தான் செய்திடும் ஊடுருவல்களை பற்றி வாய் திறக்க மறுக்கின்றன. ஒரு நாடே இவ்வாறான ஊடுருவலை செய்திடும் நிறுவனத்தை வைத்துக்கொள்ளும் போது, அந்நாட்டின் பெயரிலேயே ஒரு தனியார் நிறுவனம் செயல்படுவதை கண்டு மட்டும் நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்?

நாம் (அரசு) ஊடுருவல் செய்வது சட்டவிரோதமில்லை என்றால் அவர்கள் (தனியார் நிறுவனங்கள்) செய்வது மட்டும் எப்படி சட்டவிரோதமாகிடும்? இதில் தனியார் துறையின் பங்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முதலாளித்துவத்தின் அடிப்படையில் இது ஒரு தொழில். எல்லாரும் செய்யும்பொழுது, நான் ஏன் செய்யக்கூடாது?

இந்த மேலோட்டமான நியாய தர்க்கங்கள் தான் ஆயுத கட்டுப்பாடுகளுக்கு எதிரான அனைத்து சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன. பரஸ்பர அழிவை உறுதிப்படுத்திடும் அணு ஆயுத போரை போன்ற ஒரு அழிவிற்கு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ள இன்றைய டிஜிட்டல் வலைப்பின்னல் உத்தரவாதமளிக்கிறது.

என்.எஸ்.ஓ குரூப்பின் பிகாசஸ் ஐ-போனை மட்டுமே பிரத்யேகமாக தாக்குவதல்ல. ஆனால் ஐ-போனை குறிவைத்தே உருவாக்கப்பட்டது. கூகுளின் ஆண்டிராய்டு இயக்க முறைமையை விட ஒப்பீட்டளவில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் மிக்க ஆப்பிளின் ஐ-போன் உள்ளது. இருப்பினும், “ஒற்றை பயிர்” முறை அதன் ஒரு தனித்த பண்பாக உள்ளது. அதாவது, அதனுள் ஊடுருவிட ஒரு வழியை கண்டுவிட்டால், உலகின் அனைத்து ஐ-போன்களையும் ஊடுருவிட முடியும். மேலும், ஒரு “கருப்பு பேட்டி”யை போன்று ஐ-போனை அதன் உரிமையாளர் எந்த மாற்றத்தையும் செய்திட முடியாதவாறு வடிவமைத்திருப்பதாகும். ஐ-போன்களின் இந்த தனித்துவ பண்புகளான “ஒற்றை பயிர்” மற்றும் “கருப்பு பெட்டி” ஆகியவையுடன்; அதை பயன்படுத்திடும் உலக உயரடுக்கு சமூகத்தினர் என ஒருசேர கிடைப்பது என்.எஸ்.ஓ போன்ற நிறுவனங்களுக்கு ஐ-போன்கள் மீதான ஆர்வத்திற்கு காரணமாக அமைகின்றது.

என்.எஸ்.ஓ குரூப் போன்ற தீங்கிழைத்திடும் நிறுவனங்களை தங்களுக்கு நன்மை பயக்குமென உதவிடுவது உண்மையில் அரசின் நலனுக்கானதல்ல. தாங்கள் உளவு பார்க்கும் அமைப்புகள், அரசுகள் உலக சர்வாதிகார அளவுகோலில் எந்த இடத்தில இருந்தாலும் இம்முறை நன்மை பயத்திடாது. முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது கோல்ப் மைதானத்தில் இருந்து ஐ-போன் வாயிலாக பதிவிட்ட டிவீட்களை அநேக உலக நாடுகளின் உயரதிகாரிகள் அதே ஐ-போன் மூலம் கண்டிருப்பார்கள்.

விரும்பினாலோ இல்லாவிட்டாலோ, நண்பர்களும் பகைவர்களும் இன்று ஒரே மாதிரியான கருவியை, அதை இயக்கிடும் ஒரே மாதிரியான நிரல் குறியீடுகளை (program code) அன்றாடம் பயன்படுத்துகின்றனர்.

நம் காலத்தின் வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல் போன்றவை ஒரு அஜர்பைஜான் உளவு சேகரிக்கும் தொழிற்நுட்பத்தில் தங்களுக்கு சமமான மூலோபாய வளர்ச்சியை எட்டுவதை விரும்புகின்றன என்று நினைப்பது தவறான புரிதல் என்றே கொள்ளவேண்டும். இவர்களுக்கு இடையேயான இடைவெளி இன்னும் நிரப்ப முடியாமல் தான் நீடிக்கிறது. ஆகையால், உளவு தொழில்நுட்பம் அவர்களை அடைவது குறித்த ஆபத்தை சரியாக உள்வாங்கவில்லை என்றே கூறவேண்டும்.

4.

பொது சுகாதாரதுறையை போன்று அனைவரையும் பாதுகாத்திட அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அதை நோக்கிய ஆணித்தரமான முதல் படியாக, டிஜிட்டல் படியாக, ஊடுருவல் மென்பொருட்களை வணிக வியாபாரமாக்குவதை தடை செய்திட வேண்டும். நாம் எவ்வாறு “உயிரியல் தொற்றை” ஒரு சேவையாக வழங்கிட அனுமதிப்பதில்லையோ அதே போல “டிஜிட்டல் தொற்றை” அனுமதித்திடக்கூடாது. வணிக லாப நோக்கத்தை தடை செய்வதன் மூலம் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதோடு பொதுநலன் சார்ந்த ஆய்வுகளின் வளர்ச்சியையும் அரசு துறையின் பணிகளையும் பாதுகாத்திட முடியும்.

வணிக சந்தையிலிருந்து இத்தகைய உளவு மென்பொருட்களை நீக்குவதன் மூலம் கொடிய போதைமருந்து கடத்தல்காரர்கள், பாலியல் குற்றவாளி ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் மில்லியன்களை இறைத்து தங்கள் வீடுகளில் அமர்ந்துகொண்டு உலகின் மற்ற ஐ-போன்களை வேவு பார்ப்பதை தடுத்திட முடியும்.

இந்த வணிக தடை என்பது இடைக்கால நடவடிக்கை மட்டுமே. தடை செய்ததை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பொறுப்பேற்க வைக்க வேண்டும். என்.எஸ்.ஓ குரூப்பின் விரிவான செயல்பாடுகளும், சர்வதேசஞ் சமூகத்தின் மீதான அதன் பாதிப்புகளும் அதற்கு உதவிடும் ஒழுக்கமற்ற உலக முதலீட்டாளர்கள் நோவல்பினா கேபிடல் (ஐரோப்பா), பிரான்சிசுகோ பார்ட்னர்ஸ் (அமெரிக்கா) போன்றவைகளால் சாத்தியமாகின்றது. இந்நிறுவனங்களின் முதலீடுகளை திரும்பபெறாவிட்டால் அதன் உரிமையாளர்களை கைது செய்திட வேண்டும். தெரிந்தே பாதிப்புகளை ஏற்படுத்திடும் இதுபோன்ற உளவு மென்பொருள் உற்பத்திக்கு துணைபோகிறார்கள். அரசுகளின் உந்துதலின் பேரில் இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் தெரிந்ததும் அவர்களை, சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களை கடந்து, ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைகளுக்கு பதிலளித்திட நிர்பந்தத்தை உருவாக்கிட வேண்டும்.

5.

நீங்கள் வாஷிங்டன் போஸ்டின் ஆசிரியர் குழு என கற்பனை செய்து கொள்ளுங்கள் (முதலில் உங்கள் முதுகெலும்பை நீக்கிவிட வேண்டும்). உங்கள் பத்திரிக்கையின் சிறப்பு எழுத்தாளர் (ஜமால் கஷோகி) கொலை செய்யப்பட்டதற்கு எதிர்வினையாக கொலை செய்ய திட்டமிட்டவர்களிடம் அடுத்தமுறை கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்திட வேண்டும் என்று ரகசியமாக தெரிவிக்கிறீர்கள். தங்கள் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு வாஷிங்டன் போஸ்ட் நிகழ்த்திய எதிர்வினையும் ஒரு மோசடி தான். தங்களின் எத்தனை பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டால் வெறும் “செயல்முறைகள்” தடை செய்திடுவதற்கு இணையாகிடாது என்பதை உணர்ந்திடுவார்கள்?

ஜமால் கஷோகியின் முன்னாள் மனைவி மற்றும் இந்நாள் காதலியின் செல்பேசிகளை பெகாசஸ் மூலம் உளவு பார்த்து, அந்த தகவல்களை கொண்டு சவூதி அரேபிய அவரை கொடூரமான முறையில் கொலை செய்து அந்த கொலையை மறைத்தது.

கஷோகி, ஈவு இரக்கமின்றி மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டதால், பெகாசஸ் உளவு மென்பொருளால் பாதிக்கப்பட்டவர்களில் மிகப்பெரும்புள்ளி ஆனார். என்.எஸ்.ஓ குரூப்பின் “தயாரிப்பு” ( “குற்றவாளி சேவை”) மேலும் பல எண்ணற்ற பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், ஆசிரியர்களை எல்லாம் உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர்கள், அவர்களின் துணைவியார், குழந்தைகள், அவர்களின் மருத்துவர், வழக்கறிஞர், மதத்தலைவர் என அனைவரையும் பெகாசஸ் உளவு பார்த்தது. உங்களுக்கு பிடிக்காத பத்திரிகையாளரை அவர் கார் பரமாரித்திடும் கடையில் வைத்து சுட்டுக்கொல்ல இந்த உளவு செயலி உதவி செய்திடும் என்பதை இதன் ஆதரவாளர்கள் உணர தவறுகின்றனர்.

இந்த தொழில்நுட்ப வணிகத்தை தடுத்திட ஏதேனும் செய்ய தவறினால், இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50,000ல் இருந்து 5 கோடியாக உயரும். இது நாம் எதிர்பார்ப்பதை விடவும் மிக விரைவாகவே நடைபெறும்.

எதிர்காலம் இப்படியாக தான் இருக்கும். தங்கள் செல்பேசிகளுடன் பரபரப்பாக விளையாடி கொண்டிருக்கும் உலக மக்கள், அவர்களின் செல்பேசிகள் வேறொருவரால் கட்டுப்படுத்தப்படுவதை உணராமலே இருப்பார்கள்.

- எட்வர்ட் ஸ்னோடன்

Pin It