Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelAmbedkar
பாபாசாகேப் பேசுகிறார்

1. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்?

Ambedkar

அரசமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம்.

1. சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென்னை அரசு. இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்தை மய்யமாகக் கொண்டு நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, சாதி ரீதியான அரசாணை (Communal G.O.) உருவானது. இந்த அரசாணை செல்லாது என்று சட்ட வல்லுனர்களும், நமது மேதகு நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கூக்குரலிடுகின்றனர்.

அரசியல் அமைப்புச் சட்டம் 16(4) பிரிவு, மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி அல்லது எழுந்துள்ள தேவைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை முழுவதுமாக வழங்குகிறது. இந்த 16(4) பிரிவு, அரசமைப்புச் சட்டத்தின் 29ம் பிரிவுடன் முரண்படுவதால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.

மேலும், ‘சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது; அது முற்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களிடையே பாரபட்சத்தைத் தோற்றுவித்துவிடும்' என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நான், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் கூர்ந்து படித்தேன். இந்த இரண்டு தீர்ப்புகளும் மிகுந்த அதிருப்தியைத் தருகிறது.

இந்தத் தீர்ப்புகள், நமது அரசியல் சாசனத்தின் பிரிவுகளோடு ஒத்துப் போகவில்லை. இது, என்னுடைய வாதம். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளுக்காக நான் வருந்துகிறேன். (நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம். சபாநாயகர் இடைமறித்து, அம்பேத்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். ஆனால், அம்பேத்கர் அதைப் பொருட்படுத்தவில்லை)

அரசியல் சட்டப் பிரிவு 29(2)இல், ‘மட்டும்' என்ற வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இவற்றை நான் கருதுகிறேன். மதம், இனம் அல்லது ஆண், பெண் பேதம் ஆகியவற்றை ‘மட்டும்' அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இது 29(2)இன் பொருள். இங்கு "மட்டும்' என்ற வார்த்தை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனிக்கவில்லை என்பது என்னுடைய வாதம்.

‘சாதியற்ற இந்துக்கள்' என்று இந்நாட்டில் எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு. பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார் அல்லது ஒரு தச்சன் இவர்களில் யாரும் சாதியை விட்டு வாழும் இந்துவாக இல்லை.

இந்த நாட்டில், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்து மதத்தின் பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் போது, நமது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் அதிருப்தியான தீர்ப்பாகும்.

நான், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டுவிட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்தமான முடிவாகும்.

மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 46வது பிரிவு, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வகையான நலன்களை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநில அரசுகளுக்கு போதிய அதிகாரத்தை நிர்ணயித்துள்ளது.

இந்த அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை, நாடாளுமன்றத்திற்கு எழுந்துள்ளது. நாடாளுமன்றம் 16(4) மற்றும் 29 ஆகிய பிரிவுகளை விரிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரிவு 15 போதிய விளக்க இணைப்பு (சட்டத் திருத்தம்) சேர்க்கப்பட வேண்டும். இது, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான உயர்வை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க உதவும்.



'பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 331



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

http://semmalar.keetru.com/

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP