Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
நேர்காணல் சென்ற இதழின் தொடர்ச்சி.....

அரசியலையும் சமயத்தையும் வேறுபடுத்தி பார்ப்பதை சரியான அணுகு முறையாக நாங்கள் கருதவில்லை

- ஹைதர் அலி,    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
சந்திப்பு: ஹாமீம் முஸ்தபா

Hyder Ali செ. ஹைதர்அலி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க.) பொதுச்செயலாளர். இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சொந்த ஊர். புதியகாற்று இதழுக்காக த.மு.மு.க. பற்றியும் அதன் செயல்பாடு பற்றியும் அவர் தந்த நேர்காணலின் இரண்டாம் பகுதி இந்தப் பகுதியில் பிரசுரமாகிறது.


கேள்வி : ‘அரசியல் ரீதியாக முஸ்லிம்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று சொல்கிற த.மு.மு.க. பண்பாட்டு ரீதியாக முஸ்லிம்களை பிளவுபடுத்துகிறதே? குறிப்பாக தர்கா கலாச்சாரத்திற்கு எதிரான த.மு.மு.க.வின் நிலைப்பாடு குறித்து?

த.மு.மு.க.வைப் பொறுத்தவரை இஸ்லாத்திலிருக்கின்ற வேறுபாடுகளின் அடிப்படையிலான பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதில்லை. முரண்பாடு இல்லாத விசயங்களை பொதுவாக எடுத்துச் செல்கிறோம். த.மு.மு.க.வில் எல்லாருமே பொறுப்பில் இருக்கிறார்கள். நான் வஹாபி கொள்கையில் ஈடுபாடு உடையவன். தர்காவை பின்பற்றுகிறவர்களும் த.மு.மு.க.வில் இருக்கிறார்கள்.

கேள்வி : நீங்கள் இப்படிக் கூறினாலும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தர்காக்களுக்கும் அது தொடர்பான செயல்பாடுகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் த.மு.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்களே. குர்ஆன் சகோதர சமயத்துவர்களுக்காக கூறிய ‘உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு’ என்ற வசனம் இப்பொழுது முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே சொல்ல வேண்டிய நிர்பந்தம் உருவாக த.மு.மு.க.வின் இந்த செயல்பாடு காரணமாக இல்லையா?

இந்தக் கருத்து தவறான கருத்து. ‘உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு’ என்ற குர்ஆனின் வசனத்தை இஸ்லாத்திற்குள்ளேயே பயன்படுத்துவதாக இருந்தால் இஸ்லாத்திற்குள்ளேயே பலபிரிவுகள் இருப்பதாக ஆகிவிடும். இஸ்லாத்தில் கொள்கைகள் தெளிவாக இருக்கிறது. இஸ்லாத்தில் ஒரே இறைவன். வேறுவேறு சிந்தனை ஓட்டங்கள் இஸ்லாத்திற்குள் உண்டா இல்லையா என்ற விவாதம் தனி. அதற்குள் நீங்களும் நானும் போக வேண்டாம். ஆனால் த.மு.மு.க.வில் எந்தந்தப் பகுதியில் யார் மேலோங்கி நிற்கிறார்களோ அங்கே அவர்களின் ஆதிக்கம் இருக்கிறது.

முஸ்லிம்களின் பாகுபாடு என்பதுவே இங்கே வந்து இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் செய்து கொண்ட சில விசயங்கள், இஸ்லாத்திலே இல்லாத விசயங்கள் அவை. இஸ்லாத்தில் திணிக்கப்பட்ட விசயங்கள். நபிகள் நாயகம் கஃபாவில் தூக்கியெறிந்த சிலைகள் யாருடையவை? நபிமார்கள் சிலைகள். அப்ப நபிமார்களை எல்லாம் எதிர்த்தார்கள் என்று அர்த்தமா? இல்லை. இஸ்லாம் என்பது வணக்க வழிபாட்டில் தெளிவு படுத்தி இருக்கும் விசயங்களில் சமரசம் பண்ணக் கூடாது. பண்ண முடியாது.

கேள்வி : இந்த அடிப்படையில் தான் ‘இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை’ என்ற பெயரில் த.மு.மு.க. நடத்தும் பிரச்சாரங்கள் வெளிப்படையாக இறைநேசார்கள் எதிர்ப்பும் தர்கா எதிர்ப்பும் கொண்டதாக இருக்கிறதா?

இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை என்பது சரியானஇஸ்லாத்தை மக்களுக்குச் சொல்வது. அல்லாவும் நபியும் எதைச் சொல்லி இருக்கிறார்களோ அதுதான் சரி. இதில் உங்கள் கருத்துக்கும் எங்கள் கருத்துக்கும் இடமில்லை.

கேள்வி : நீங்கள் எப்படி இறைவனும் நபியும் சொன்ன வழியில் நடப்பதாக செல்கிறீர்களோ அதைப் போலவே தர்காவுக்கு போகிறவர்களும் இறைவனும் நபியும் சொன்ன வழியில் நடப்பதாகத்தான் சொல்கிறார்கள்?

எனவே இறைவன் சொன்னது, நபி நடந்தது என்ற கருத்தாக்கமே அவரவர் புரிதலில் இருந்து உருவாவது. எல்லோருக்கும் பொதுவானது என்று நீங்கள் சொல்கின்ற த.மு.மு.க. வஹாபிய நிகழ்ச்சியின் பிரச்சார சாதனமாக பிரச்சார பேரவையை பயன்படுத்தப்படுகிறதே என்பதுதான் என்னுடைய கேள்வி?

விவாதத்திற்குரிய விசயங்களைத் தொடவேண்டாம் என்றுதான் சொல்லி இருக்கிறோம். ஒன்றும் வேண்டாம். சமீபத்தில் கன்னியா குமரி மாவட்டம் தக்கலையில் ஒரு திருமணம் நடந்தது. தக்கலை ஜமாஅத்தார்கள் அங்க உள்ள தர்காவுல போய் வழிபட்டுத்தான் கல்யாணம் பண்ணணும் என்கிறார்கள். திருமணம் செய்பவரோ முடியாது என்கிறார். வரதட்சணை வாங்கித்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்கிறார்கள். வரதட்சணை வாங்கிட்டு அவரு கல்யாணம் பண்ண மாட்டேங்கிறாரு. அவரை அவருபோக்குல விட்டுட வேண்டியதுதானே. நீங்க பண்ணுவதை அவர் தடுக்கலை. அவர் பண்ணுவதை நீங்க தடுப்பீங்கன்னா என்ன அதிகாரம் அது?

கேள்வி : த.மு.மு.க. தன்னுடைய மலிவான அரசியலுக்காக இது போன்ற விஷயங்களை கையிலெடுப்பதாகவே தெரிகிறது. நீங்கள் சொல்லக்கூடிய தக்கலை பிரச்சனையில் நீங்கள் சொல்கின்ற நபருக்கும் தர்காவை பொறுப்பில் வைத்திருக்கும் ஜமாஅத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. அந்த நபர் சார்ந்து இருக்கக்கூடிய ஜமாஅத்தாரும் வரதட்சணை போன்ற விசயங்களை வலியுறுத்தியதாகவும் தெரியவில்லை. மலிவான ஊடக அரசியலுக்காக இதுபோன்ற விசயங்களை த.மு.மு.க. முன்னிலைப் படுத்துகிறதா?

மார்க்கத்திற்கு மாறுபடாம ஒரு தனிமனிதன் அவன் போயி கோயில்ல தாலிகட்டாம தான் விரும்பிய முறையில் திருமணம் பண்ண விரும்புகிறார் என்றால் இஸ்லாத்தில் அது இருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் அனுமதிக்கலாம். நீங்க பண்ணுவதை வந்து எப்படி வந்து நான் தடுக்கக் கூடாதோ அது மாதிரி அவர் பண்ணுவதை நீங்கள் தடுக்கக்கூடாது. இந்தியாவில் அவரவர்கள் மார்க்கத்தை அவரவர்கள் பேணுவதற்கு உரிமை உண்டு என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் அவர் தன்னுடைய மார்க்கத்தை செயல்படுத்த அவருக்கு உரிமை கொடுத்து விட்டு போகவேண்டியதுதான்.

கேள்வி : இஸ்லாமிய அமைப்பு, இஸ்லாமிய ஒற்றுமை என எல்லாவற்றையும் பேசுகிறீர்கள். ஒற்றுமையின் மிகச்சிறிய உட்கூறுதான் ஜமாஅத் ஒற்றுமை. அந்த ஜமாஅத் ஒற்றுமையை அரசியல் ரீதியான காரணங்களுக்கு இது போன்று மதத்தின் பெயரை வைத்து சிதைக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது?

ஒழுங்கு என்பது நாம் புதிதா ஒன்றை வடிவமைப்ப தல்ல. அதாவது அந்தந்த பகுதியில் இருக்கிறவர்கள் யாருமே அவர்களின் கொள்கை களை யாருமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள். த.மு.மு.க.வை அமைக்கும் போதும் அதில் உறுப்பினர்களை சேர்க்கும் போதும் யாரும் அவர்களின் கொள்கைகளின் சமரசம் பண்ண வேண்டாம் என்றுதான் சொல்லி இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் தர்கா இடங்களை த.மு.மு.க. தான் மீட்டுக் கொடுத்திருக்கிறது.

இப்ப இந்த மீனவர் குடியிருப்புகளில் பார்த்தீர்கள் என்றால் அங்கு முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள் அந்த மீனவக் குடியிருப்புகளுக்கென்று நாட்டாமை/தலைவர் இருக்கிறார். அவர்கள் கோயிலில் வைத்துத்தான் கூட்டம் நடக்கும். பெனால்டியும் கோயிலில் தான் கட்டச் சொல்வார்கள். முஸ்லிம் களுக்கு இந்தத் தீர்ப்பு சொன்னால் நீங்க ஏத்துக் கிடுவீங்களா?

கேள்வி : அப்படி என்றால் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் மாதிரி தர்கா நம்பிக்கையாளர்களும் வகாபிகளும் என்று சொல்கிறீர்களா?

நான் சொல்லுறதை அப்படி பார்க்கதீங்க. பிரிச்சு காண்பிப்பதற்காக சொல்கிறேன் கத்தோலியர்களும் புரோட்டஸ்டன்டும் கிறிஸ்தவர்கள்தான் அவர்கள் இரண்டுபேரும் வேறுவேறானவர்கள். இப்ப இ.எஸ்.ஐ. என்று ஒன்று இருக்கிறது அது பரவலாக கிடையாது. தனியாக குழுவாக இருக்கிறார்கள் அவர்கள் தனியாக பண்ணுவற்கு யாருமே ஆட்சேபனை பண்ணுவ தில்லையே. அதுபோல ஜமாஅத்துல வகாபி தனியாக பண்ணுகிறார்கள் என்றால் விட்டு விட்டுப் போயிடலாமே.

கேள்வி : இ.எஸ்.ஐ. புரோட்ஸ்டன்ட், கத்தோலிக்கம் எல்லாம் தனித்தனி பிரிவுகள் தனித்தனி சபைகள் கத்தோலிக்க சபையிலிப்பவர் புரோட்டஸ்டன்ட் முறையில் செயல்பட விரும்பினால் அவர் அந்த சபையில் இருந்து பிரிந்து புரோட்டஸ்டன்ட் சபையில் சேருவார். அதுபோல வகாபிகள் தனியாக தங்களுக்கு என்று ஜமாஅத் வைத்திருக்கிறார்கள். தங்கள் சமய நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள் இதையாரும் எதிர்ப்பதாக தெரியவில்லை. ஆனால் ஒரு ஜமாஅத்துக்குள் அங்கமாக இருந்துகொண்டே அதற்குள் தனி உள் ஜமாஅத்தை உருவாக்கி செயல்படும் போது தான் பிரச்சனை எழுகிறது. என்னுடைய கேள்வி அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பேசுகிற த.மு.மு.க. பண்பாட்டு ரீதியாக முஸ்லிம்களின் பிளவை ஏன் ஆதரிக்கிறது?

த.மு.மு.க.வில்எல்லா பண்பாடுடையவர்களும் இருக்கிறார்கள். கோவை மாவட்டத்தின் தலைவராக இருக்கிறவர் தர்கா கொள்கையை ஏற்றுக் கிட்டவர்தான். அவர் அவருடைய வேலையைச் செய்கிறார். மற்றவர்கள் செய்யும் போது இவர் தடுப்பதில்லை. வேறுமாதிரியான பிரச்சனைகள், வேறுமாதிரியான சண்டைகளில் போகக்கூடாது என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு. இன்று பல ஊர்களில் தர்காவாதிகள் பொறுப்புகளில் இருக்கிறார்கள். குஜராத்துல வெட்டுனவன் தர்காக்குப் போறவன் போகாதவன்னு பார்த்து வெட்டலை. முஸ்லிம் என்கிற அடையாளத்துக்குத் தான் வெட்டுனான். அப்ப இந்த மாதிரியான புறச்சூழல் பிரச்சனைகளில் வந்து ஒரு கட்டுக்கோப்பும், பாதுகாப்பும் தேவை என்பதற்குத்தான் இந்த அமைப்பே தவிர கொள்கை திணிப்புக்கல்ல.

கேள்வி : பாபர் மசூதி மீட்பு என்ற இயக்கம் ஆரம்பத்தில் ராஜ்பவனை நோக்கிய முற்றுகைப் போராட்டம் என ஆரம்பித்து இன்று மூர்மார்கெட்டுக்குள் சுருங்கும் அளவுக்கு பலகீனப் பட்டிருக்கு. இன்னொன்று பொதுவான தமிழ் மனோபாவத்தில் இது ஒரு இந்திய மதச்சார்பின்மைக்கு ஏற்பட்ட ஒரு சவால் என்ற கருத்தோட்டம் போய் சேர வில்லை. உங்கள் அமைப்பின் மிக முக்கியமான இயக்கம் ஏன் இவ்வளவு தூரம் பலகீனப்பட்டது?

அதே 1992க்குப் பிறகு 1995ல் தமிழ்நாட்டில் தான் பாபர் மசூதி பிரச்சனையைத் த.மு.மு.க. தீவிரப்படுத்தியது. அதன்பிறகுதான் கேரளா போன்ற பகுதிகளில் இது தீவிரம் பெற்றது. 2004ல் டெல்லியில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்பிறகு இந்த வருடம் டெல்லியில் அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒன்றுசேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் டிசம்பர் 6வந்து விட்டாலே அரசின் கெடுபிடிகள் காரணமாக முஸ்லிம் அல்லாத மக்கள் மத்தியிலே பாபர் மசூதியை மீண்டும் கட்டி இந்தப் பிரச்சனையைத் தீர்க்காமல் விமோசனம் வராது என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

2004 டிசம்பர் 6ல் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதில் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து சி.பி.ஐ. விடுவித்த அத்வானியையும், முரளிமனோகர் ஜோஷி இருவர் மீதும் மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறி இருந்தோம். 6ம் தேதி கொடுத்தோம். 8ம் தேதி பிரதமர் அலுவலகத்திலிருந்து அத்வானி, ஜோஷி இருவரின் வழக்கின் நிலை குறித்து விபரம் கேட்டு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் போனது அந்தக் கடிதத்திற்காகத்தான் டிசம்பர் 2வது வாரம் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தார்கள் பி.ஜே.பி.க்காரர்கள். இன்று மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேள்வி : த.மு.மு.க.வின் வேலைத் திட்டம் ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்பு களின் வேலைத் திட்டம் போன்று இருக்கிறது. பூகம்பம், வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர் மீட்பு பணிகளில் த.மு.மு.க.வின் செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் செயல்பாடுகளை ஒத்தே இருக்கிறது. அவர்களும்அதுபோன்ற பேரழிவுகளில் நிவாரணப் பணி களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களும் இதன்வழியாக சமூகத்தின் நற்சான்றிதழைப் பெற்றார்கள். த.மு.மு.க.வின் மாடலாக ஆர்.எஸ்.எஸ். இருக்கிறதா?

த.மு.மு.க.வைப் பொறுத்தவரை அதன் ரோல் மாடல் நபிகள் நாயகம். இஸ்லாம் என்பதுவே தெளிவாக எல்லா விஷயங்களுக்கும் வழி தந்திருக்கிறது. அதனால் ஆர்.எஸ்.எஸ். பார்த்தெல்லாம் நாம் எடுத்ததல்ல. நபிகள் வாழ்ந்தக் காலத்தில் அவர்கள் மக்களுக்குத் தொண்டாற்றுங்கள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று சொன்னார்கள். பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவுவது என்பது இஸ்லாமிய கோட்பாடு மக்களுக்கு தொண்டாற்றுவது என்பது ஒரு லாபம் கருதிதான் அது நாளை மறுயில் சொர்க்கம் என்ற லாபம் கருதி.

கேள்வி : சில காலமாக தி.மு.க. மேடைகளில் ஏறி கலைஞரை அரியணை ஏற்றுவோம் என்று த.மு.மு.க. கூறிவந்தது. சமீப காலமாக தேவைப்பட்டால் அ.தி.மு.க.வை ஆதரிப்போம் என்று கூறிவருகிறது. ஏன் இப்படி தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மாறிமாறி லாவணி கச்சேரி பாடுகிறீர்கள்?

தி.மு.க. மாநாடுகளில் நம்மை அழைத்தார்கள். நாம் கலந்து கொண்டோம். திண்டுக்கல் மாநாட்டில் த.மு.மு.க.வின் மாநிலத் தலைவர் பேசும் போது இதனைப் பதிவு செய்தார். என்ன சொல்லி இதைப் பதிவு செய்தார் என்றால் ‘எங்களுடைய நீண்டநாள் கோரிக்கையான இடஒதுக்கீடுக்கு உத்தரவாதம் தந்தால், தி.மு.க.வை அரியணை ஏற்றுவதற்கு நாங்கள் உழைப்போம்’ என்றார். அதன் பிறகு தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிலும் முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு என்று தீர்மானம் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நான் சொன்னேன். ‘5 ஆண்டுகாலமாக எங்களுக்குத் தீர்மானங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன. சட்ட வடிவு இன்னும் வரவில்லை. கலைஞர் அவர்களே நீங்கள் தீர்மானம் போடுகிற இடத்தில் இருக்கிறீர்களா? தீர்மானிக்கிற இடத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் அசைகின்ற பகுதியிலே தான் டெல்லியே அசைகின்றது. டெல்லியே உங்கள் கட்டுப் பாட்டில் இருக்கும் போது இந்தத் தீர்மானம் எங்களை திருப்தி அடையச் செய்யாது’ என்று சொன்னேன். அதே மாதிரி கோவை மாநாட்டிலும் சொன்னோம். நம் கருத்தும், நோக்கும், இலக்கும் ஒரே நோக்கம், இடஒதுக்கீடு என்பது மிக அவசியமான ஒன்று அதை அடைவதற்குரிய இராஜ தந்திரத்தைதான் வகுத்துக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வை ஆதரிப்பதாக இருந்தாலும் இதுதான் நிபந்தனை.

கேள்வி : ஓர் அரசியல் இயக்கம் என்றால் அந்த இயக்கத்திற்கு என்று கொள்கைத் திட்டம் இருக்கும். அது உடனடி தேவை சார்ந்தும் நீண்ட கால தேவை சார்ந்தும் இருக்கும். த.மு.மு.க.வை பொறுத்தவரை இடஒதுக்கீடு, பாபர் மசூதி மீட்பு போன்ற உடனடி கோரிக்கைகள் தெரிகிறது. ஆம்புலன்ஸ் வழங்குதல் போன்ற உங்கள் அமைப்புக்கான கவர்ச்சித் திட்டங்களைத் தவிர வேறு பெரிய அளவில் நீண்டகால அளவிலான கொள்கை அறிக்கை இருப்பதாகத் தெரியவில்லையே?

இது கவர்ச்சி திட்டமல்ல. அதாவது இது ஏழை எளியவர்களுக்கு உதவி பண்ணுவது என்பதுடன் மட்டுமில்லாமல் ஆம்புலன்ஸினால் நாம் அடைந்திருக்கும் வெற்றி என்ன வென்றால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு மிக மோசமாக முஸ்லிம்கள் பார்க்கப்பட்ட நேரத்தில் சுனாமிக்கு நிவாரணப் பணிகள் முஸ்லிம்கள் பற்றி நல்ல பார்வையை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கு ஆம்புலன்ஸ் உறுதுணையாக இருந்தது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம் பயணத்தின் சில துருப்புச் சீட்டுக்கள்தான் இது.

ஒவ்வொன்றுக்கும் நாம் திட்டமிடுதல் வைத்துள்ளோம். இடஒதுக்கீடு அவசியமானது என்பதானாலும் ஒரே நேரத்தில் பல திட்டங்களை வைத்து சிதறடிக்கக் கூடாது என்பதாலும் அதனை முன்னிலைப் படுத்துகிறோமே தவிர இந்த சமூகத்தின் தேவையான வட்டி இல்லா வங்கி, வட்டியில்லா கடன் இவற்றை செயல் படுத்துகிறோம். வட்டியில்லா வங்கி திட்டத்தை அரசின் பார்வைக்கு கொண்டு செல்கிறோம். இது ஒரு பொருளாதார சீரமைப்பு. கல்வி உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்தல், கவுன்சிலிங் நடத்துவது போன்றவற்றை நடத்துகிறோம். நீண்ட காலத்திட்டத்தின் அடிப்படையில் தான் செயல்படுத்துகிறோம்.


சந்திப்பு : ஹாமீம் முஸ்தபா


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com