Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
நேர்காணல்

அரசியலையும் சமயத்தையும் வேறுபடுத்தி பார்ப்பதை சரியான அணுகு முறையாக நாங்கள் கருதவில்லை

- ஹைதர் அலி,    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
- சந்திப்பு: ஹாமீம் முஸ்தபா

Hyder Ali செ. ஹைதர்அலி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க.) பொதுச்செயலாளர். இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சொந்த ஊர். புதியகாற்று இதழுக்காக த.மு.மு.க. பற்றியும் அதன் செயல்பாடு பற்றியும் அவர் தந்த நேர்காணலின் முதல் பகுதி இந்தப் பகுதியில் பிரசுரமாகிறது.


கேள்வி : விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து இந்திய அளவிலும் தமிழகத்திலும் செயல்பட்டுவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிலிருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எப்படி வேறுபடுகிறது?

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் களுடைய விகிதாச்சாரத்தை விட அதிகமாக பாடுபட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்தது. அதற்குத் தலைமை தாங்கியது முஸ்லிம் லீக். 1947க்குப் பிறகு வரலாற்றிலே நடந்த சில சம்பவங்கள், இந்து முஸ்லிம் கலவரமாக வெளிப் பட்ட போது அன்று ஆளுகிற கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்கள் கூட முஸ்லிம்களையும், முஸ்லிம் லீக்கையும் அன்னியமாகவே பார்த்தார்கள். இது முஸ்லிம் லீக் அமைப்பை கடுமையாக பாதித்தது.

முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வது என்பதே யாரோ போட்ட பிச்சை என்கிற அடிப்படையில் பேசப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த பாதிப்புகள் இல்லை யென்றே சொல்லலாம். ஏனென்றால் தமிழ்நாட்டில் தந்தைப் பெரியாரின் சமூகநீதிப் பார்வையும், அதற்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்ததும் ஆனால் பின்னர் தமிழகத்திலும் இச்சூழல் உருவானது.

1947க்கு முன்பிருந்த இடஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமை போன்ற பல உரிமைகள். முஸ்லிம் சமூகத்திட மிருந்து சுதந்திரத்திற்குப் பிறகு பறிக்கப்பட்டன. நீங்கள்தான் தனியாக பிரிஞ்சு போய் விட்டீர்களே உங்களுக்கு எதுக்கு இனி இந்த உரிமைகள் என்று கேட்கப்பட்டன. இந்தக் கேள்விக்கான பதிலை முஸ்லிம் லீக் அமைப்பு உரக்க சொல்லாமல் இருந்து விட்டது. அரசு அதிகாரங்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக காவல் நிலையங் களிலும் பிற இடங்களிலும் முஸ்லிம்கள் கொச்சைப் படுத்தப் பட்டார்கள். முஸ்லிம்கள்/முஸ்லிம் அல்லாதவர்கள் இடையில் ஒரு பிரச்சனை என்றால் அதில் முஸ்லிம்களுக்கு ஒரு நீதியும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒரு நீதியும் கடைபிடிக்கப் பட்டது.
இந்தச் சூழலில் தான் பழனிபாபா போன்றவர்கள் ‘ஜிகாத் கமிட்டி’ அமைப்பை ஆரம்பித்து மக்களிடத்திலே பிரச்சாரம் செய்து கொண்டிருந் தார்கள். அவரது பிரச்சாரம் வலிமையானதாக இருந்தது. இளைஞர்கள் வீரம் கொண்டார்கள். ஆனால் அமைப்பை அவர் வலுவாக உருவாக்க வில்லை. எனவே இந்த சமுதாயத்துக்கு அது நன்மையைத் தரவில்லை.

இந்தச் சூழலில் தான் இதை இப்படியே விட்டுக்கொண்டிருந்தால் இந்த சமூதாயத்தில் சில இளைஞர்கள் வன்முறையில் இறங்குவதை தவிர்க்க முடியாமல் போய்விடும். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டரீதியாக இந்த நாட்டிலே நமக்குப் பல உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமையைப் பெறுவதற்குரிய யுத்திகளை நாம் வகுக்க வேண்டும் என்கின்ற அடிப் படையிலே 1995ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை நாம் ஏற்படுத்தினோம்.

கேள்வி : பாரதீய ஜனதா கட்சியின் செயல் பாட்டில் சமயமும் அரசியலும் இணைந்தே இருக்கின்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் செயல்பாடும் சமயத்தையும் அரசியலையும் ஒன்றிணைக்கிறதா?

த.மு.மு.க.வைப் பொறுத்தவரை எங்களுடைய கொள்கைகளை நாங்கள் யாரிடத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறோம் என்றால் நபிகள் நாயகம் அவர்களிடமிருந்து தான். ஏனென்றால் இஸ்லாமியர் ஒவ்வொருவருக்கும் தலைவராக நபிகள் நாயகம் அவர்கள்தான் இருக்கிறார்கள். அரசியலையும் சமயத்தையும் வேறுபடுத்தி பார்ப்பதை சரியான அணுகு முறையாக நாங்கள் கருத வில்லை. பி.ஜே.பி. சமயத்தையும் அரசியலையும் வைத்திருப்பதற்கும் நாங்கள் வைத்திருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இஸ்லாம் என்பது வணக்கவழிபாட்டிற்குரிய மார்க்கம் மட்டுமல்ல. வணக்க வழிபாடு அதன் ஓர் அங்கம். ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிற வாழ்வியல் சட்டம் தான் இஸ்லாம். அந்த இஸ்லாத்தின் அடிப்படையில் தான் நாம் எதையுமே சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனிதனுக்காக கடவுளால் தரப் பட்டிருக்கின்ற சட்டங்களை எப்படி எல்லாம் செயல்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் செயல்படுத்து வதற்கு முடியு மென்றால் இந்த முன்னோக்கிப் போகிற சூழலை நாம் இன்றைக்கு உருவாக்க இருக்கிறோம். எனவே சமயத்தையும் அரசியலையும் நீங்கள் வேறு படுத்தி பார்க்க முடியாது.

கேள்வி : அப்படி என்றால் இந்தியாவினுடைய மதச்சார்பின்னை கோட்பாடு பற்றி த.மு.மு.க.வின் நிலைபாடு என்ன?

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களாலே தீர்மானிக்கப் பட்டிருக்கக்கூடிய ஓர் அழகிய முன்மாதிரி என்று நான் சொல்லுவேன். அதாவது சமயத்தையும் அரசியலையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை என்று சொல்லும் போது என்னுடைய வாழ்வியலை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலேதான். ஆனால் என் வாழ்வையும் தீர்மானிக்கிறவர்களாக அவர்கள் வருகிறபோதுதான் இங்கு பிரச்சினை வருகிறது. இந்தியா என்பது சமயம் சாராத ஒரு தேசமல்ல. அவரவர் சமயம் அவர்களுக்கு அதையும் இஸ்லாம் சொல்கிறது. ‘உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு’ என்று இந்திய மதச்சார்பின்மை என்கிற கருத்தை இஸ்லாம் கூறுகிற அடிப்படையில்தான் நாங்கள் பார்க்கிறோம்.

கேள்வி : நபிகளின் தனிப்பட்ட வாழ்க்கை இஸ்லாமிய மார்க்கம் சார்ந்தும், பொதுவாழ்க்கையில் அவர்கள் சமய சார்பற்றவர் களாகவே இருந்தார்கள் என்றும் தான் அவர்கள் வாழ்க்கையை வாசிக்கிறபோது தெரிகிறது. ஆனால் நீங்கள் இரண்டையும் நபிகள் இணைத்தார் என்று சொல்கிறீர்களே?

உங்கள் கேள்வியின் தோரணையே பி.ஜே.பி.யின் சமயத்தையும் அரசியலையும் கையாள்கிற விதத்திலேயே நாங்களும் கையாள்கிறோம் என்கிற தன்மையில் அமைந்து இருக்கிறது. ஆனால் இரண்டும் ஒன்றல்ல நபிகளின் காலத்தில் அந்தந்த மதத்துக்காரர்களுக்கான உரிமைகள் கொடுக்கப் பட்டிருந்தன. யாருக்கும் மறுக்கப் படவில்லை. நீங்கள் நீங்களாக இருக்கிற நேரத்திலே நீங்கள் வாழ்வதற்கான அத்தனை உரிமைகளையும் தரவேண்டும் என்பதுதான் இஸ்லாமே தவிர என்னுடைய மதத்தை உங்களிடம் திணிப்பதல்ல.

கேள்வி : த.மு.மு.க.வின் சமீபகால போராட்டங்கள் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மையப்படுத்தி நடைபெறுகிறது. வேலைக்கு ஆள் எடுப்புத் தடைச்சட்டம், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, தனியார் நிறுவனங்கள் பெருகுவது என்றிருக்கிற சூழலில் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்ன பயனைத் தரப்போகிறது?

உங்களின் பார்வை தவறானது என்று நான் கருதுகிறேன் எப்படி என்றால் தொழிற்சாலைகள், அரசு செய்து கொண்டிருக்கிற மற்ற நிறுவனங்கள் இவைகள் தனியாரிடம் சொல்லலாம். ஆனால் இந்த நாட்டை நிர்வகிக்கிற விஷயங்களை அரசுதான் செய்யப்போகிறது. ஆட்சி அதிகாரம் என்பது என்ன? அரசியல் கட்சிகளின் ஆட்சியைப் பிடிப்பதா? இல்லை உண்மையான ஆட்சிபுரிவது நாட்டினுடைய அதிகார வர்க்கம் தான். அந்த அதிகார வர்க்கத்தில் முஸ்லிம்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். காவல்துறை, வருவாய்த்துறை போன்றவைகள் ஐம்பதாண்டுக்குள் ஒன்றும் மாறப்போவதில்லை.

முஸ்லிம்கள் பெருமளவில் வர்த்தகத்தில் இருக்கிறார்கள். வர்த்தகத்தில் சேர்ந்த பொருளை முஸ்லிம்களால் பாதுகாக்க முடிகிறதா? 1997ல் கோவை கலவரத்தில் ஷோபா கிளாத் சென்டர் போலீஸ் கண் காணிப்பிலேயே ஒரு கூட்டத்தால் கொள்ளையடிக்கப் பட்டது. அதன் உரிமையாளர் அதிகார அமைப்பில் உள்ளவர்களிடம் பேசினார் ஒரு பயனும் இல்லை. தான் சேர்த்த சொத்தையே அவரால் பாதுகாக்க முடிய வில்லை. முஸ்லிம் களுடைய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்கள் இருக்க வேண்டாமா? அமைப்பில் எல்லா சமூக மக்களும் பரந்து பட்டு இல்லாத காரணத்தினால் தான் எந்த சமூகம் அந்த அதிகார அமைப்பில் இல்லையோ அந்த சமூகத்தின் ஜனநாயகம் மறுக்கப் படுகிறது.

கேள்வி : தமிழக முஸ்லிம்களில் எழுபது சதவீதத்திற்கும் மேல் நீங்கள் வைக்கின்ற இட ஒதுக்கீட்னால் நேரடியாகவோ மறை முகமாகவோ பலன் பெறப்போவதில்லை. எழுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அன்றாடங் காய்ச்சி களாக பீடித்தொழில், பாய்த் தொழில், தோல் தொழில், போன்ற கூலித் தொழிலாளர்களாக நடை பாதை வியாபாரிகளாக இருக்கிறார்கள். இந்த மக்களுக் கான எந்த திட்டங்களும் உங்களிடம் இல்லையே? வெறும் கவர்ச்சியைத்தாண்டி இடஒதுக்கீடு எதைத் தரப்போகிறது?

நீங்கள் சொல்லுகிற அடித் தட்டு முஸ்லிம்கள் அப்படி இருக்கிற காரணத்தை ஆய்ந்து பார்த்தால் அவர்களுக்கு கல்வியே மறுக்கப் படுகிறது. ஏழைப்பையன் படிக்க முடிய வில்லை. இடஒதுக்கீடு என்பது கிடைத்த உடனேயே பாலாறும் தேனாறும் ஓடும் என்று நாம் நினைக்கவில்லை. நம்பவும் இல்லை. ஆனால் குறைந்த பட்சம் அவர்கள் படித்தால் தானே முன்னேற முடியும். டாக்டராக வேண்டும் என்றால் 25லட்சம் ரூபாய் வேண்டும். 25லட்சம் ரூபாய் இல்லா விட்டாலும் திறமை இருந்தால் உன்னால் டாக்டராக வரமுடியும் என்ற நிலையை இட ஒதுக்கீட்டில் உருவாக்குவோம். இடஒதுக்கீடு என்பதே முழுத் தீர்வல்ல. தலித்தாக இருக்கிற காரணத்தினால் இடம் கிடைத் திடுது. வன்னியர்கள் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருப்பதால் ஒருவருக்கு வாய்ப்புகள் கிடைத்திடுது. ஆனால் முஸ்லிம்கள் பிற்படுத்தப் பட்டவர் என்கிற பொது வரையறைக்குள் வந்துஅமைப்பில் இருக்கிறார்கள். இந்த வாய்ப்பு அவர்களுக்கு இடஒதுக்கீட்டின் காரணமாகத் தான் கிடைத்தது.

கேள்வி : சென்ற (டிசம்பர்) மாத புதியகாற்று நேர்காணல் தந்த ஆரோக்கியசாமி அவர்கள் தனது பதில் ஒன்றில் மதரீதியான இடஒதுக்கீட்டை நான் எதிர்க் கிறேன் என்று கூறி இருந்தார். அதற்கு அவர் கூறி இருந்த காரணம் மதரீதியான இட ஒதுக்கீட்டை ஒத்துக்கொண்டால் கிறிஸ்தவத்தில் இருக்கின்ற தலித் மக்கள் இதனால் பாதிக்கப் படுவார்கள் என்று கூறுகிறார்? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

கிறிஸ்தவத்தை மட்டும் வைத்துவிட்டு அவர்க இந்தத் தகவலைத் தருகிறார். இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒருவன் இஸ்லாமியனாகி விட்டால் தலித்தா தலித் அல்லாதவனா என்பது தெரியாது. இஸ்லாத்தில் ஜாதியம் இல்லை. அதனால் அவருக்கு வருகிற அந்தச் சங்கடங்கள் இங்கே இல்லை. கிறிஸ்தவத்தில் இருக்கின்ற ஜாதியத்தைத் தான் ஒழிக்க வேண்டுமே தவிர அதற்காக மதரீதியான இட ஒதுக்கீட்டை வேண்டாம் என்று சொல்லக் கூடிய சூழல் உருவாக்கக் கூடாது. இது சரியான கருத்தாக இருக்க முடியாது.

கேள்வி : கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இணைந்து உருவாக்கி இருக்கக்கூடிய தமிழக, பாண்டிச்சேரி சிறுபான்மைப பேரவைதந்திருக்கும் தகவல்படி தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை விடவும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு என்று அதன் குறிப்பு சொல்கிறது. தமிழகம் தழுவிய முஸ்லிம் அமைப்பை நடத்துகிற நீங்கள் தமிழகம் தழுவிய முஸ்லிம்களின் புள்ளி விபரங்கள் ஏதாவது வைத்திருக் கிறீர்களா? எந்த விதமான அடிப்படை புள்ளி விபரங்களும் இல்லாமல் முஸ்லிம்களுக்கான பணியினை எப்படி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும்?

அவர்கள் புள்ளி விபரக் கணக்கு அரசு ஆவணங்களின் அடிப்படையானது. அரசு ஆவணப்படி அவர்கள் சொல்லி இருப்பது தான் உண்மை. ஆனால் அரசு ஆவணங்களில் கூட முஸ்லிம்களின் எண்ணிக்கையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் சரியாகக் காட்டப்படவில்லை.

முஸ்லிம்களின் எண்ணிக்கையை முழுமையாக கண்டறிய வேண்டும் என்கிற ஆயத்த வேலையில் ஈடுபட நினைத்தோம். வேறொரு முஸ்லிம் அமைப்பு இந்தப் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வந்ததனால் ஒரே வேலையை இரண்டுபேர் செய்ய வேண்டாம். அவர்கள் செய்து அந்தப் பட்டியலைத் தரட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். துரதிஷ்டவசமாக அவர்களால் அந்தப் பணியை முழுமைப்படுத்த முடியவில்லை என்பதை நாம் உணர்கிறோம்.

எனவே நாங்கள் முதற்கட்டமாக, சமீபத்தில் மத்திய அரசால் ஒரு கமிஷன் நீதியரசர் ராஜேந்திர சித்தூர் தலைமையில் அமைத்துள்ளது. 1947க்குப் பிறகு எந்த அரசும் செய்யாத நல்ல விஷயம் இது. முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலைகுறித்து தெரிந்து கொள்வதற்கான கமிஷன் அது. அந்தக் கமிஷன் இது குறித்து பத்திரிகை விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தது. உங்கள் பகுதியில் விவரங்களையும் தாருங்கள் என்று கேட்டிருந்தது. அதனடிப்படையில் நாங்கள் மாதிரிக்கு ஒரு லட்சம் முஸ்லிம் குடும்பங்கள் குறித்த ஆய்வுகளை செய்வதற்கான முதற்கட்டப் பணிகளை செய்துவருகிறோம். பிப்ரவரி இறுதிக்குள் அது நிறைவடைந்து விடும் என்று நம்புகிறோம்.

கேள்வி : மகளிருக்கான 33% இடஒதுக்கீடு குறித்து த.மு.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

33% இடஒதுக்கீட்டினால் பெண்கள் வாழ்வில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது என்பது எங்களின் கருத்து. தமிழ்நாட்டில் சில பஞ்சாயத்துக்களில் பெண்கள் தான் தலைவிகளாக வரமுடியும் என்று பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் பெண்கள் தலைவர்களாக இருக்கக்கூடிய பஞ்சாயத்துகளை பார்த்தோம் என்றால் அங்கு பெண்கள் பொம்மையாக இருப்பார்கள். அங்கு பெண்ணின் கணவர், பெண்ணின் அண்ணன் தம்பிகள் எல்லோரும் ஆட்சி புரிகிறார்கள்.

கால் சென்டரில் படித்தவர்கள்தான் பணி செய்ய முடியும். அந்தப் பெண்கள் என்ன சொல்கிறார்கள் நாங்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப் படுகிறோம் என்று. சமீபத்தில் பெங்களூரிலே கால் சென்டரில் பணியாற்றிய பெண்ணுக்கு மோசமான சம்பவம் நடந்திருக்கிறது. இதுமாதிரியான ஒரு கலாச்சார சூழலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஆரோக்கிய மாக இருக்காது. ஒரு ஜெயலலிதாவையும், ஒரு சோனியாகாந்தியையும் வைத்துக் கொண்டு நீங்கள் எல்லா வற்றையும் தீர்மானித்துவிட முடியாது.

கேள்வி : முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பற்றி பேசும் போது முதலில் முஸ்லிம்கள் பொறுப்பி லாவது வரட்டும் என்றீர்கள். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீடு என்ற ஒரு வாசலைத் திறந்து விடுவோம் என்றீர்கள் ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு விஷயத்தில் நீங்கள் கூறுவது நேர் எதிராக இருக்கிறதே?

நீங்க எதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். எதார்த்தம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உடல் ரீதியான விஷயங்களும் கவனிக்கப் பட வேண்டும். இருபாலருக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது இதனால் இவர்கள் இரண்டு பேரும் கலந்து இருக்கின்ற இடங்கள் வந்து ஈர்ப்பு தவிர்க்க முடியாத விஷயம். சமீபத்தில் இந்திய ராணுவத்திலிருந்து ஒரு அம்மா பேட்டி கொடுத்தார்கள். என்ன? பெண்கள் ராணுவத்தில் ஒழுங்காக வேலை செய்ய முடியாது என்று நாம் எதார்த்தத்தைப் பார்க்காமல் நாம் செயல்பட முடியாது.

Hyder Ali கேள்வி : இஸ்லாம் சமயம் சொல்லும் வழிதான் உங்கள் செயல்பாடு அடிப்படை என்கிறீர்கள். இஸ்லாத்தில் கலீபா உமரின் காலத்தில் பெண்கள் அவரது சபையில் இருந்திருக்கிறார்கள் உமருடன் விவாதம் பண்ணி இருக்கிறார்கள். நபிகளின் மனைவி ஆயிஷா போருக்கே சென்றிருக்கிறார். நீங்களே பெண்களை பள்ளி வாசலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றீர்கள். ஏன் பஞ்சாயத்து அமைப்பில் ஒரு பெண் வரக்கூடாது என்பது எப்படி நியாயம்?

பள்ளிவாசலில் ஆண்கள் முன்னாடியும் பெண்கள் பின்னாடியும் என்று எல்லை யைப் போட்டு வைத்து அதில் நின்னுதான் பெண்களைத் தொழச் சொல்லி இருக்கிறது. சில வரைமுறைகளையும் வகுத்திருக்கின்றனர். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்கும் ஆணும் பெண்ணும் கலந்து வேலை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

கேள்வி : த.மு.மு.க.வின் சார்பில் ஆர்ப்பாட்டங்களில் போராட்டங்களில் பெண்கள் பங்கெடுக்க வைக்கப்படுகிறார்கள். அப்படி என்றால் த.மு.மு.க. கூட்டம் கூட்டுகின்ற ஒரு பிரிவாகத்தான் பெண்களைப் பார்க்கிறதா? சமீபத்தில் குஷ்பு தொடர்பான ஆர்ப்பாட்டத்திலும்

இல்லை பெண்களை நாங்கள் அவர்களின் எல்லை யின் அடிப்படையில் எஜுகேட் பண்ணுகிறோம். ஒரு ஆணும் சம்பந்தமே இல்லாத ஆணும் பிரயாணம் செய்ய முடியும். ஒரு ஆணும் சம்பந்தமே இல்லாத பெண்ணும் பிரயாணம் செய்ய அனுமதிக்க முடியுமா? முடியாது. மார்க்கமும் முடியாது என்று சொல்லுது. இயல்பாகவே அது சாத்தியமில்லை. பாராளுமன்றத்திலேயும் சட்டமன்றத்திலேயும் பெண்களை கொண்டு வைப்பதனால் மட்டும், எந்தப் பெண் வெளியே வருகிறார்கள் என்று நீங்கள் பாருங்கள். ஒழுக்கங்களை ஒதுக்கி வைத்து விட்டு வாழும் ஐரோப்பிய வாழ்க்கைக்கு நாம் செல்லப் போகிறோமா?

ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கு சைத்தான் வருவான் என்று இஸ்லாம் கூறுகிறது. எவ்வளவுதான் நீங்கள் புரட்சி கரமாகப் பேசினாலும் நீங்க இறைச் சட்டத்தை மீறி ஒன்றுமே செய்ய முடியாது.

கேள்வி : பெரியாரிய அமைப்புகளோடும் இடதுசாரிகளோடும் உறவுகளைப் பேணுகிற நீங்கள் இந்துத்துவ எதிர்ப்பு சிந்தனையை மட்டும் கையெலெடுத்து அவர்களின் ஏனைய கலாச்சார, சமூக, பொருளாதார விஷயங்களில் இஸ்லாத்தின் பெயரால் அடிப்படை வாதக் கூறுகளை நோக்கிப் போவது போல் தெரிகிறது. இந்த இரட்டை நிலைப்பாடு ஆரோக்கியமானதுதானா? இது சந்தர்ப்பவாதம் இல்லையா?

நான் சொல்லுகிற உவமானங்கள் மிக மோசமானதாகவே இருக்கும். ஆனாலும் சொல்கிறேன். நாம் நண்பர்களுடன் பழகுகிறோம் என்றால் அவர்களுக்கு எனது சட்டையை, வேட்டியை டிரவுசரை கொடுப்பேன். நண்பர்கள் என்பதற்காக மனைவிகளையும் பகிர்ந்து கொள்கிற நட்பு சாத்தியப்படுமா? அது நட்பா? அவர்கள் சொல்கிற எல்லா வற்றையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. நான் முதலிலே இஸ்லாமியன். இஸ்லாமியனாக இருந்து கொண்டு அவர்கள் சொல்லுகிற நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வோம். தி.க.காரர்கள் கடவுள் மறுப்பாளர்கள். நான் அவர்களுடன் நட்பாய் இருப்பதனால் நான் கடவுள் மறுப்பாளனாக இருக்க வேண்டு மென்று நீங்கள் கருதுகிறீர்களா? எந்தெந்த விஷயங்களில் அவர்களோடு முரண்பாடு இல்லையோ அந்த விஷயங் களில் அவர்களுடன் இணைந்து கொள்கிறோம். குஷ்புவைப் பற்றிய தா.பாண்டியனின் கருத்து எங்கள் கருத்தல்ல.

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள். இந்த ஆட்சி கலைந்திடக் கூடாதுன்னு விரும்புகிறார்கள். அதே வே ளை இந்த அரசு செய்கிற பெட்ரோல் விலை உயர்வு போன்ற சில விஷயங்களை எதிர்க்கிறார்கள். ஆனால் ஆட்சியை கலைத்திட வில்லை. இது சந்தர்ப்பவாதமா? இதைவிட மோசமானவர் ஆட்சியில் வந்துவிடுவார்கள் என்ற காரணம் தானே. இது கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? எங்களுக்குப் பொருந்தாதா? அவர்கள் பார்த்தால் கொள்கைவாதிகள். நாங்கள் பார்த்தால் மத வாதிகளா? இது எங்களின் இரட்டை நிலைப்பாடா?

சந்திப்பு : ஹாமீம் முஸ்தபா


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com