Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2007
வாக்குமூலம்
காதம்பரி

“சிஸ்டர் ஆண்ட்டி, எங்கம்மா பொழைச்சிக்கு வாங்களா?'' காலைப் பணிக்காக வராண்டாவில் வந்து கொண்டிருந்த ராதிகா, இடைமறித்துக் கேட்ட குழந்தைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். குழந்தைகளுக்கு ஏழு வயது, ஐந்து வயது இதற்குள் தானிருக்கும். கண்களில் மிரட்சியும் சோகமும் கண்ணீரும் வழிந்து கொண்டிருந்தன.

“பொழைச்சிக்குவாங்கம்மா... கவலைப்படாதீங்க'' ராதிகா ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே “ஏய் ரமா, இங்க வாடி!.. ஏய் பாமா!.. இங்க வாடி!..'' ஒரு பாட்டி அதட்டினார். பாட்டியின் அதட்டலுக்கு பயந்தபடி குழந்தைகள் விலகி நின்றன.

அறை எண்.303-ன் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே சென்ற ராதிகா அதிர்ந்தாள். உள்ளே ஒரு பெண் நிர்வாணமாய் கட்டிலில் படுத்திருந்தாள். தப்பு. தப்பு நிர்வாணம் என்று சொல்வது கூட தப்பு. துணியை உரித்துவிட்டு பார்த்தால்தான் நிர்வாணம். இவள் தோலையே இழந்துவிட்டு படுத்திருந்தாள். யாரென்று அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் கோரமாய் வெந்திருந்தது.

மூக்கை பொத்திக் கொள்ளும் அளவிற்கு காற்றில் சதை தீய்ந்த வாடை. மூக்கை முகமூடியால் கட்டிக்கொண்டு கையில் கையுறையை அணிந்தபடி கேட்டாள் ராதிகா.

“எத்தனை பர்சன்டேஜ் பர்ன்ஸ் டாக்டர்?''

தோல் இல்லாததால் குளிரில் நடுங்கிக்கொண்டு கிடக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்தபடியே மருத்துவர் சொன்னார். “80 பர்சண்டேஜ் சிஸ்டர்''.

தோல் இல்லாத தைரியத்தில் உடலிலிருந்து திசு திரவம் வேகமாய் வெளியேறிக் கொண்டிருந்தது. அதற்கு ஈடாக உள்ளே திரவம் செலுத்தினால்தான் அவளைக் காப்பாற்ற இயலும். ராதிகாவும் மருத்துவரும் அந்த முயற்சியில்தான் இருந்தனர். இரவுப் பணியிலிருந்த செவிலியோ சொல்ல வேண்டிய குறிப்புகளை ராதிகாவிடம் சொல்லிவிட்டு விடைபெற்றாள்.

“எல்லாம் வெந்துக் கிடக்கே! எப்படி டாக்டர் ட்ரிப்ஸ் ஏத்துறது'' கேட்டாள் ராதிகா. மருத்துவரின் மனதிலும் இதே சந்தேகம்தான். ஆனாலும் விடாமல் கையில் காலில் என்று மருத்துவர் புரட்டி புரட்டி பார்த்தார். ம்கூம். பலனில்லை. "அதற்காக அந்தப் பெண்ணை அப்படியே விட்டுவிட முடியுமா?' இருவர் மனதிலும் இதே கேள்விகள் “காப்பாற்ற வேண்டும் இவளை'' தொடர்ந்து தேடினர். வாசலில் கேள்வி கேட்ட குழந்தைகள் வேறு ராதிகா மனதை இம்சித்தனர். எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் நரம்பைத் தேடினர்.

அதற்குள் அவள் உடலிலிருந்து உயிர்த்திரவம் அதிகமாக வெளியேறி இருந்தது. உதடுகள் உலர்ந்து விட்டன. வெந்து போயிருந்த உடல் கசியும் தண்ணீரில் கசகசத்துக் கிடந்ததால் அவள் குளிரில் இப்பொழுது அதிகமாக நடுங்கினாள். தன் உடலில் நரம்பு கிடைக்காமல் தவிக்கும் மருத்துவரையே கேள்விக் குறியாய் பார்த்தாள் அவள். பின் மெதுவாக கேட்டாள். “நான் பிழைக்க மாட்டேனா டாக்டர்..'' உதடுகள் கடினப்பட்டு அசைய அதிலிருந்து வார்த்தைகள் காற்றோடு கலந்து வந்தது.

“பயப்படாதீங்கம்மா. நாங்க இருக்கோம். உங்கள பொழைக்க வச்சிடுறோம்'' அந்தப் பெண்ணிற்கு நம்பிக்கையூட்டியபடியே மருத்துவர் நரம்புகளைத் தேடிக் கொண்டிருந்தார்.

“சிஸ்டர் வேகமா இங்கே வாங்க'' அவர் முகத்தில் எதையோ கண்டுபிடித்துவிட்ட பூரிப்பு. “சிஸ்டர் இங்கே போடலாம்''. கழுத்தின் பக்கவாட்டில் காண்பித்தார். அவர் குரலில் வேலையை துரிதப்படுத்தும் வேகம் இருந்தது.

ராதிகா உதவிகள் செய்ய செய்ய அவர் அவளுடைய கழுத்து இரத்தக் குழாயை லேசாக வெட்டி அதனுள் சிலிகான் குழாயை சொருகி நான்கு வழிப்பாதை ஒன்றை இணைத்தார். ஒரு வழியில் குளுக்கோஸ் ஓடவிட்டார். அது மறுமுனை வழியாக உள்ளே சென்றது. பக்கவாட்டில் இருந்து இரண்டு வழிகளில் ஒன்றில் திசுத்திரவம் ஓடவிட்டனர். மற்றொன்றில் கணிப்பொறியின் உணர்ச்சி முனையை பொருத்தினார். ராதிகா அதை கணிப்பொறியுடன் இணைத்து இயக்கினாள். கணிப்பொறி திரை உயிர்ப்பித்துக் கொண்டது. இதயம் வேலை செய்வது அலையலையாக ஓடியது. நாடித்துடிப்பின் வேகத்திற்கு "பீப் பீப்' என்று சத்தமிட்டது. இரத்த அழுத்தம், சுவாசப் பையிலிருக்கும் காற்றின் அளவு, இரத்தத்தில் கலக்கும் பிராண வாயுவின் அளவு எல்லாவற்றையும் துல்லியமாகக் காட்டியது. இரத்த அழுத்தம் குறைந்து நாடித்துடிப்பு அதிகமாய் இருந்தது. உடலின் நீரிழப்பும் நோயாளி சுயநினைவோடு இருப்பதால் பயமும் நாடித்துடிப்பை மைல் வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தது. நோயாளிக்கு பயம். நிகழ்காலம் எதிர்காலம் பற்றிய பயம். வெந்துபோன அவள் முகம் வெளுத்து சில்லிட்டுக் கொண்டிருந்தது.

அவள் உடலிலிருந்து ஊற்றெடுத்த திசுத்திரவம் படுக்கையில் விரித்திருந்த ரப்பர் துணியில் குட்டை போல தேங்கி நிற்க ஆரம்பித்தது. அதை உதவியாளர்கள் வாளிகளில் சேகரித்து அளந்து அப்புறப் படுத்தினர். அளக்கையில் எச்சில் கூட விழுங்கமுடியாத அளவிற்கு முகஞ்சுளித்தனர்.

"சிஸ்டர், ரெண்டரை லிட்டர் தண்ணீர் அப்புறப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் சொன்னவுடன் குளுக்கோஸ் வேகத்தை விரைவுப் படுத்தினாள் ராதிகா. எல்லாவற்றையும் உடனுக்குடன் பதிவேட்டில் குறித்து வைத்தாள். கொடுக்கும் திரவத்தை விட இழக்கும் திரவம் இரண்டு மடங்காய் இருந்தது. இந்தப் பெண் பிழைப்பாளா? ராதிகா மனதில் கேள்விக்குறி எழுந்தது.

ஒருவேளை இவள் பிழைத்தால் எரிந்துபோன தலையில் முடி முளைக்குமா? எரிந்துபோன முகம் பொலிவு பெறுமா? சுருங்கிப்போன விரல்கள் நீளுமா? தோலின் நிறம் மாறுமா? நரம்புகள் பழையபடி செயல்படுமா? ராதிகா யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு இரத்த அழுத்தம் குறைவதை கணிப்பொறித்திரை காட்டியது. உடனே சோடிய நீரையும் திசுத்திரவத்தையும் அதிகமாய் இறக்கினாள். இரத்த அழுத்தம் சரியானது. ஆனால் உதவியாளர்கள் குட்டையிலிருந்து நீரை இறைக்கத் துவங்கினர். அவள் உடலுக்குள் ராதிகா நீரை செலுத்துவதும் உதவியாளர்கள் படுக்கையிலிருந்து அதை அப்புறப் படுத்துவதும் தொடர ராதிகா உடலும் மனமும் சோர்ந்தாள்.

தோல்...! மனிதனின் எத்துணை அற்புதமான உறுப்பு! அது இல்லையென்றால் இப்படித்தான் எல்லோரும் கொளகொளத்து கசகசத்து நாறிப்போக வேண்டும்.

ஈ, கொசு மொய்க்காமலிருக்க கொசுத்திரையை கட்டினர். அந்தப் பெண்ணின் உடலில் வெண்ணையைப் போல் வழவழப்பான “சல்பாடைசின்'' விழுதைப் பூசி நிமிர்கையில் ராதிகாவிற்காக காலை தேநீர் சூடாய் வராண்டாவில் காத்திருப்பதாக தொலைபேசியில் அழைப்பு வந்தது.

“ம்...ஊகூம் வேண்டாம். நான் குடிக்கும் மனநிலையில் இப்பொழுது இல்லை'' பதிலளித்தாள். தொலைபேசி மீண்டும் அழைத்தது. “ராதிகா உங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது'' வரவேற்பறையிலிருந்து சொன்னார்கள். “உதவியாளரை அனுப்புகிறேன். கொடுத்தனுப்புங்கள்.'' சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள். அந்தப் பெண்ணின் உடலில் பிராணவாயு குறைவதாக கணிப்பொறி அலறியது. மூக்கின் வழியே சென்று கொண்டிருந்த பிராணவாயுவை கொஞ்சம் கூட்டி வைத்தாள். கணிப்பொறி அமைதியானது.

“கடிதம் யாரிடமிருந்து வந்திருக்கும். அப்பாவிடமிருந்துதான் வந்திருக்கும். பார்த்துவிட்டுப் போன வரனை பற்றி எழுதியிருப்பார். கடிதம் நல்ல செய்தியைத் தாங்கி வந்துள்ளதோ! இல்லை ஏமாற்றத்தைக் கொடுக்கும் செய்தியைத் தாங்கி வந்துள்ளதோ! தெரியவில்லை. ராதிகாவின் மனம் நினைத்துக் கொண்டேயிருக்க அவள் கைகள் வேலைகள் செய்தவண்ணமிருந்தன.

படுத்திருந்த அந்தப் பெண் குளிரில் நடுங்கியதால் மின்விசிறியை நிறுத்திவிட்டு கதவு ஜன்னல்களை இறுக மூடிவைத்திருந்ததில் ராதிகாவிற்கு புழுங்கத் துவங்கியது. உள்ளே காற்றில் துர்நாற்றம் அதிகரிக்க கதவு ஜன்னல்களை குறைவாகத் திறந்து வைத்தாள்.

“அப்பா, எனக்கு இப்பவே அம்மா வேணும். இல்லைன்னா சாக்லேட் வாங்கிக் கொடு'' வராண்டாவில் அந்த ஐந்து வயதுக் குழந்தை அடம்பிடிப்பது கேட்டது.

குழந்தையின் குரல் காதில் விழுந்ததும் அந்தப் பெண் மெல்ல தலையைத் திருப்பி கதவுப்பக்கம் பார்த்தாள். இரத்த அழுத்தம் கீழே இறங்க நாடித்துடிப்பு மேலே ஏற கணிப்பொறி தாறுமாறாய் அலறியது. அவள் கடினப்பட்டு கையை அசைத்து மகளை அழைக்கச் சொன்னாள்.

ராதிகா கதவைத் திறந்து, “குழந்தையை அந்தப்பக்கம் அழைச்சிகிட்டுப் போங்க'' என்று கூறியதன் பேரில் அங்கே நின்று கொண்டிருந்த ஆண் அந்தக் குழந்தையை அழைத்துப் போனான்.

“உங்கள் குழந்தை உங்களை இப்பொழுது பார்க்க வேண்டாம். பிறகு பார்க்கட்டும்.'' என்று ராதிகா சொன்னதும் அவள் “சரி'' என்பதுபோல மெல்ல தலையசைத்தாள்.

மீண்டும் தொலைபேசி அழைத்தது. மருத்துவர்கள் அவளின் நிலையைப் பற்றி ராதிகாவிடம் கேள்விமேல் கேள்விகள் கேட்டு தெரிந்துக் கொண்டார்கள். “தோல் இல்லாத காரணத்தால் ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை உட்செலுத்துங்கள். சிறுநீரகம் வேலை செய்வதையும், இரத்த அழுத்தத்தையும் கவனத்தில் வையுங்கள்'' அறிவுரை முடிந்தவுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்தப் பெண் கையை ஆட்டி ராதிகாவை அருகில் அழைத்தாள். அருகில் சென்றவளிடம் அவள் காற்றும் வார்த்தையுமாய் கலந்து சொன்னாள்.

“குழந்தைகள் ஆசைப்படுவதை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள்'' என்றாள். “சரி சொல்றேன்'' என்றபடியே நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை அவளுக்குள் செலுத்தினாள் ராதிகா.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள் ராதிகா. உதவியாளர் அவளுக்கு வந்திருந்த கடிதத்தைக் கொடுத்தார். கடிதம் அவளுடைய அப்பாவிடமிருந்துதான் வந்திருந்தது. காக்கி உடையில் இரண்டு காவலர்கள் வரவேற்பறையில் இருப்பதாக அவர் சொன்ன அதேநேரம் தொலைபேசி ஒலித்தது. மருத்துவர் காவலர்களை உள்ளே அனுமதிக்கும்படியும் ஒத்துழைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.

வந்த காவலர்கள் காலணிகளை கழற்றிவிட்டு அங்கிகள் முகமூடிகளை அணிந்துகொண்டு உள்ளே வருவதற்குள் ராதிகா அவளை தயார்படுத்தினாள்.

“தேன்மொழி உனக்கு இந்த விபத்து எப்படி நடந்ததுன்னு விசாரிக்க போலிஸ் வந்திருக்காங்க. பயப்படாத. தைரியமாப் பேசு. அவுங்க கேட்குற கேள்விக்கு உண்மையைச் சொன்னா அவுங்க சீக்கிரம் போய் விடுவாங்க. அப்புறம் நீ ஓய்வெடுக்கலாம்'' வெந்துபோன முகத்தை பரிவோடு பார்த்தபடி சொன்னாள் ராதிகா.

அவள் "சரி' என்று ஆமோதித்தாள். அவர்கள் உள்ளே வந்து விசாரிக்க ஆரம்பித்தனர். உடனே மருத்துவரும் உள்ளே வந்தார்.

“யாரும்மா உன்னை இப்படி கொளுத்தனது?'' தலைமை காவலர் கேட்க, “யாருமில்லை'' என்றாள் அவள்.

“பின்ன எப்படி ஆச்சு?''

“ஸ்டவ்ல தவறி விழுந்துட்டேன்'' அவளால் பேச முடியவில்லை.

“கீழே எரிஞ்சுக்கிட்டிருந்த ஸ்டவ்ல புடவை பட்டு புடிச்சிக்கிச்சுன்னு சொல்றாங்க. நீ ஸ்டவ்ல தவறி விழுந்துட்டேன்னு சொல்ற. எது உண்மை?''

“சரியாத் தெரியல'' என்றாள் அவள்.

“சரி நீ தவறி விழுந்துட்டன்னு சொல்றதை உண்மைன்னு வச்சிக்குவோம். அப்புறம் ஏன் வெளியில் நிக்கிறவங்க வேறமாதிரி சொல்றாங்க. உண்மைய சொல்லும்மா. பயந்துக்கிட்டு எங்ககிட்ட பொய் சொல்லாத. உன்னை யாராவது கொளுத்தியிருந்தால் சொல்லு. உள்ளே தூக்கிப்போட்டு தோல உரிச்சிடுறோம்..'' என்றதும் அவள் ஒருவித வேதனையின் வெளிப்பாடாய் கண்களை இறுக மூடித்திறந்தாள்.

“ஏம்மா உன் புருஷன் முழியே சரியில்லையே. ஏதாவது குடும்பத் தகராறா? வரதட்சணைக் கேட்டு பிரச்சினை பண்ணுனாங்களா? உன்னை சந்தேகப்பட்டானா?''

எல்லாவற்றிற்கும் சேர்த்து அவள் ‘இல்லை' என்று தலையசைத்தாள். “உன் புருஷன் நல்லவனா? வேறு யார் கூடவாவது அவனுக்குத் தொடர்பு இருக்கா?''

மீண்டும் அவள் இல்லையென்று தலையசைத்தாள்.

“மாமியார் எப்படி இராட்சசியா?'' என்றதும் ‘இல்லை' என்றாள்.

அவள் சொன்னவற்றை எழுதிக்கொண்டு விபத்து என்ற முடிவுரை கொடுத்து அந்தப் பெண்ணின் வாக்குமூலத்திற்கு சாட்சியாக மருத்துவரிடமும் ராதிகாவிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர்கள் விடைபெற்றனர்.

ராதிகா மீண்டும் தன் பணிகளைத் தொடர்ந்தாள். தேன்மொழிக்கு இதயத்துடிப்பு ஒழுங்கற்றுத் துடிக்க ஆரம்பித்திருந்தது. அவள் அதை கணிப்பொறியில் பதிவு செய்துவிட்டு மருத்துவருக்கும் தகவல் சொன்னாள். அவர் இதய நிபுணரை வரவழைக்க ஏற்பாடு செய்தார்.

ராதிகா அதற்குள் அப்பாவிடமிருந்து வந்த கடிதத்தைப் பிரித்து அவசர அவசரமாய் படிக்க ஆரம்பித்தாள். பார்த்துவிட்டுப்போன வரன் கேட்ட பவுனிலிருந்து கொஞ்சமும் குறைக்காமல் அடம்பிடிப்பதாகவும் பத்து இலட்சம் ரொக்கத்தில் சிறிதும் குறைக்காமல் உச்சாணிக் கொம்பில் நிற்பதாகவும் அப்பா எழுதியிருந்தார். ஏனெனில் மகனுக்கு மருந்தாளர் படிக்க இடம் கிடைப்பதற்கே ஏழு லட்சம் செலவழித்திருக்கிறார்களாம். ஆகவே, வேறு இடம் பார்ப்போம். வருத்தப்படாதே. உன் சம்பளத்தை அனுப்ப மறவாதே. அதை உன் திருமணத்திற்கென்றுதான் நான் சேமிக்கிறேன். வீண் செலவுகள் செய்யாதே'' அப்பா கடிதத்தை முடித்திருந்தார்.

இதய நிபுணரும் தலைமை மருத்துவரும் வேகவேகமாய் நடந்து வந்தனர். அவர்களுக்கான ஆவணங்களை எடுத்துக்கொடுத்தாள். கடிதத்தை சீருடைப் பைக்குள் வைத்தாள். மனம் கனப்பதுபோல இருந்தது. இது எத்தனையாவது வரன்? மனம் எண்ணத் துவங்கியது. படித்துவிட்டால் அதற்கேற்ப படித்த மாப்பிள்ளை பார்க்கும்பொழுது மாப்பிள்ளையின் விலையும் கூடிவிடுகிறது. படித்திருக்கிறானாம். பெண்ணிற்கு மட்டும் என்ன இந்நாட்டில் இலவசமாகவா கல்வி கிடைக்கிறது. பலவாறும் யோசித்தபடி நின்றாள்.

மருத்துவர்கள் தேன்மொழியை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். ராதிகா எல்லாவற்றையும் மனதிற்குள்ளே விழுங்கிவிட்டு இயல்புநிலைக்கு வந்தாள்.

இதய நிபுணர் சொல்லும் மருந்துகளை குறித்துக் கொண்டாள். கட்டிலில் கட்டப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் சிறுநீர்ப் பையை பார்த்த மருத்துவர்கள் நம்பிக்கையில்லாமல் கையை விரிக்க ராதிகா வேதனையடைந்தாள்.

“பிரசவத்தில் வெளியாகும் நஞ்சு வேண்டும் என்று சொன்னீர்களா சிஸ்டர்?'' மருத்துவர் கேட்டார். “சொல்லியிருக்கிறேன்'' என்றாள் ராதிகா. அதன் மேலிருக்கும் தோலை அலசிவிட்டு தீக்காயத்தின்மேல் பரப்பி விடுவார்கள். அது எரிந்தவர்களின் உடலில் தோலாக செயல்படும்.

“அதற்கு அவசியமிருக்காது'' என்று ஆங்கிலத்தில் மெதுவாக சொன்னார் இதய நிபுணர். தேன்மொழியோ சொல்லும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். “இப்படி சுயநினைவோடு இருப்பதைவிட இல்லாமலிருப்பது நல்லது. தனக்கு என்ன நடக்கிறதுன்னு விழிப்பாய் கவனிப்பது கொடுமை'' வருத்தமாய் சொல்லிவிட்டு வெளியேறினார். வராண்டாவில் சாக்லேட் சாப்பிடும் குழந்தைகளைப் பார்க்க வேதனையாக இருந்தது. குழந்தைகள் ஆசைப்பட்டதை அந்த ஆள் வாங்கிக் கொடுத்திருப்பான்போல. குழந்தைகள் அமைதியாக அதை சுவைத்துக் கொண்டிருந்தன.

வளர்ந்துவிட்ட எனக்கு நான் ஆசைப்படும் திருமண வாழ்க்கையை என் அப்பாவால் வாங்கித்தர முடியவில்லையே! அப்பாக்களால் சாக்லேட் மட்டும்தான் வாங்கித்தர முடியும். அவ்வளவு எளிதில் மாப்பிள்ளையை வாங்கித்தர முடியாது. மின்னலாய் ராதிகாவிற்குள் சிந்தனை தோன்றி மறைந்தது.

உள்ளே தொலைபேசி ஒலிக்க விரைந்து சென்று எடுத்தாள். மறுமுனையில் உடன்பணியாற்றும் செவிலி. அவளுடைய தோழி மாலதி.

“என்ன ராதிகா, பேஷண்ட் எப்படியிருக்காங்க?''

“ம்... பரவாயில்லை. மாலதி''

“உனக்கு கடிதம் வந்ததாம். உன்னுடைய உதவியாளர் சொன்னார். அப்பா போட்டிருந்தாரா? என்ன விஷயம்? மாப்பிள்ளை வீட்டைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா?'' ஆவல்மிகுதியால் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

“ம்... அப்பாதான் எழுதியிருக்கிறார். கேட்ட பவுனையோ பணத்தையோ குறைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். அதனால அப்பா வேற இடம் பார்க்கலாம்னு எழுதியிருக்காரு'' பேசிக்கொண்டே தேன்மொழியையும் கருவியையும் பார்த்துக் கொண்டாள் ராதிகா.

“ம்... அப்புறம்''

“அப்புறமென்ன... சம்பளத்த அப்படியே அனுப்பு. அதை உன்னோட கல்யாணத்துக்காகத்தான் சேமிக்கிறேன்னு வழக்கமான முடிவுரையோட கடிதத்த முடிச்சிருக்கார். நானும் கல்யாணக் கனவுகள மனசுல சுமந்தபடி சம்பாரிக்கிறத அப்படியே அனுப்பி வைக்கிறேன். ஒரு தலைவலி காய்ச்சல்னாக் கூட அவரு அந்தப் பணத்தை தொடுவதே இல்லை. அவள் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே தேன்மொழி மெல்ல வெந்துபோன கையை அசைத்து ராதிகாவை கூப்பிட்டாள். “சரி மாலதி. நாம அப்புறமா பேசலாம்'' தொடர்பை துண்டித்தாள் ராதிகா. கணிப்பொறி கருவிகள் “பீம்பாம்'' என்று அலறத் துவங்கின.

தேன்மொழி நடுங்கும் குரலில் மூச்சு திணற திணற ராதிகாவிடம் கேட்டாள். “வரதட்சணைக்காகவா பணம் சேர்க்குறீங்க. வீட்டுக்கு விளக்கேத்த போற நம்மள விட்டில்பூச்சியாக்குற அந்த வரதட்சணைக்காகவா...'' பேசமுடியாமல் திணறினாள். வெந்துபோன உருக்குலைந்த முகத்திலும் கோபம் வெளிப்பட்டது.

“படிக்காத பெண்களாலதான் வரதட்சணையை எதிர்த்து நிற்க முடியல. படிச்சி இந்தக் கருவியில எல்லாம் வேலை செய்ற உங்களால கூடவா...'' அவள் உடலில் பிராணவாயு குறைவதாக கருவி அலறியது. ராதிகா அவள் பேசுவதை கவனித்தவாறே வாயுவை அதிகப் படுத்தினாள். பிறகு கேட்டாள். நீங்க ஏன் இத போலிஸ் கேட்கும் போது ஒண்ணுமே சொல்லல. வரதட்ச ணைக் கொடுமையா இது?''

“இது சட்டத்தால ஆம்பளைங்கள திருத்துற பிரச்சினையில்ல. நாம திருந்தணும். பெண்கள் எல்லோரும் படிச்சீங்களே! எதுக்காக? வரதட்சணைக்கு பணம் சேர்க்கத்தானா? இத நீங்க அழிக்கலன்னா நாளைக்கு இது உங்களையே அழிச்சிடும்'' சிரமப்பட்டு பேசிக் கொண்டிருந்த தேன்மொழி பேசாமலிருந்தாள். அவள் கண்கள் இமைக்காமல் ராதிகாவையே பார்த்துக் கொண்டிருந்தன.

சிறிதுநேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராதிகா அவளுடைய கண்களை மூடிவிட்டு தன் “கண்களை'' திறந்துகொண்டாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

http://semmalar.keetru.com/

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP