Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
5. காஞ்சி ஒற்றன்

வாதாபிச் சக்கரவர்த்தி, குண்டோதரன் விஷயத்தில் நன்கு கவனம் செலுத்தாமலே, "இவனை யானையின் காலால் இடறச் செய்யுங்கள்!" என்று கட்டளையிட்ட போது அருகிலிருந்த வாதாபியின் ஒற்றர் தலைவன் மிக்க பணிவோடு, "அரசே! இவனைக் கொஞ்சம் விசாரணை செய்து விட்டுப் பிறகு தண்டனை நிறைவேற்றுவது நலம்" என்று தெரிவித்துக் கொண்டான்.

"ஆம், ஆம், ஏதோ ஞாபகமாகச் சொல்லி விட்டேன். அவனை இப்படி அருகில் கொண்டு வாருங்கள்" என்று புலிகேசி கட்டளையிடவும், குண்டோதரன் அருகில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான்.

"அடே, நீ யார்? என்ன வேலையாகப் புறப்பட்டாய்? உண்மையைச் சொல்!" என்று கேட்போர் உள்ளம் நடுங்கும் அதிகாரத் தொனியில் புலிகேசி வினவினான்.

வாதாபி மன்னன், சென்ற பதினெட்டு மாத காலத்தில் தமிழ் மொழியை நன்றாய்ப் பேசவும், பேசியதைத் தெரிந்து கொள்ளவும் பயின்றிருந்தான் என்பதை இந்த இடத்தில் நாம் குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே வாதாபி ராஜ்யத்தில் வழங்கிய பாஷையானது பாதித் தமிழ்ச் சொற்களைக் கொண்டிருந்தபடியால், தமிழ் மொழியைப் பயிலுவதில் புலிகேசிக்கு அதிகச் சிரமம் ஏற்படவில்லை. புலிகேசி கேட்ட கேள்விக்கு விடையாகக் குண்டோதரன், "ஐயா! நான் என் தாயாருடைய மகன். கொள்ளிடத்துக்கு அக்கரையில் திருவெண்காட்டுக்குப் போகலாமென்று கிளம்பினேன். திருவெண்காட்டு வைத்தியரிடமிருந்து மருந்து வாங்கிக் கொண்டு வருவதற்காகப் போகிறேன்" என்றான்.

"எதற்காகடா மருந்து! உனக்கு என்ன கேடு வந்து விட்டது?" என்று புலிகேசி கேட்டதும், குண்டோதரன் பயத்தினால் நடுங்கியவன் போலப் பாசாங்கு செய்து, "எனக்காக இல்லை, ஐயா! அம்மாவுக்கு மருந்து. என் தாயார் அவல் இடிக்கும் போது உரலை விழுங்கி விட்டாள், அதற்காக!" என்றான்.

இந்த விடை அங்கிருந்தவர்கள் சிலருக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று. புலிகேசியின் முகத்திலும் இலேசான புன்னகை தோன்றியது.

"என்னடா உளறுகிறாய்? உன் அம்மா உரலை விழுங்கினாளா?" என்று அதட்டிக் கேட்டான்.

"இல்லை, உரலை விழுங்கவில்லை, உலக்கையைத்தான் விழுங்கினாள்!" என்றான் அதிக நடுக்கத்துடன் குண்டோதரன்.

"உரலை விழுங்கினாளா, உலக்கையை விழுங்கினாளா? நிஜத்தைச் சொல்!" என்று கோபமான குரலில் கர்ஜித்தான் புலிகேசி.

"இல்லை, இல்லை! என் அம்மாவை உரல் விழுங்கி விட்டது!" என்றான் குண்டோதரன்.

"அடே, என்னிடம் விளையாடுகிறாயா? உன்னை என்ன செய்வேன், தெரியுமா?"

"ஐயா! மன்னிக்க வேண்டும்; உங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு மிகவும் பயமாய் இருக்கிறது. அதனால் மனத்திலே ஒன்று இருக்க, நாக்கு எதையோ சொல்கிறது."

"இப்போது பயம் இல்லாமல் நிதானமாக யோசித்து உள்ளதை உள்ளபடி சொல்லு!"

"என் தாயார் அவல் இடித்த போது உலக்கை தவறிக் கையில் விழுந்து விட்டது. அதனால் அம்மாவின் கையில் காயமாகிவிட்டது. காயத்துக்கு மருந்து வாங்குவதற்காகத் திருவெண்காட்டு நமச்சிவாய வைத்தியரிடம் போகிறேன்."

"இவ்வளவுதானே, வேறு ஒன்றும் இல்லையே? சத்தியமாய்ச் சொல்!" என்று புலிகேசி கர்ஜித்தான்.

"ஆம், ஐயா! சத்தியமாகச் சொல்லுகிறேன், உலக்கைக்குத்தான் காயம் பட்டது!" என்று குண்டோதரன் உளறினான்.

வாதாபிச் சக்கரவர்த்திக்குத் திடீரென்று சிரிப்பு பீறிக் கொண்டு வந்தது. சற்று நேரம் விழுந்து விழுந்து சிரித்து விட்டு, பக்கத்திலிருந்த ஒற்றர் தலைவனைப் பார்த்து, "இந்தப் பைத்தியக்காரனை என்ன செய்கிறது?" என்று கேட்டான்.

"சக்கரவர்த்தி! இவன் பைத்தியக்காரன் அல்ல. காரியப் பைத்தியமாகத் தோன்றுகிறது. மிக்க நெஞ்சழுத்தமுள்ளவனாகக் காணுகிறான், இவனை வேறு விதத்தில் பரிசோதிக்க வேண்டும்" என்றான் வாதாபியின் ஒற்றர் தலைவன்.

குண்டோ தரனைப் பிடித்துக் கொண்டு வந்திருந்த வீரர்களின் தலைவன் சக்கரவர்த்தியின் அருகில் நெருங்கி, "பிரபு! இதோ இந்த ஓலை இவனைச் சோதித்த போது அகப்பட்டது" என்பதாகச் சொல்லி விட்டுக் கொடுத்தான்.

புலிகேசி அதை வாங்கி முன்போலவே அங்கிருந்த லிகிதனிடம் கொடுக்க, அவன் ஓலையைப் படிக்கலானான்.

"மீனக் கொடியோனுக்கு ரிஷபக் கொடியோன் விடுத்த நிருபம். வடதேசத்துக்கடுவாய் உம்மைக் காண்பதற்காகக் கொள்ளிட நதிக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. புலியின் ஆசை வார்த்தைகளில் மயங்கி விடவேண்டாம். சேற்றில் அகப்பட்டுக் கொண்ட புலி பிராமணனைத் தோத்திரம் செய்து ஏமாற்றிய கதை ஞாபகம் இருக்கட்டும். காஞ்சி ரிஷபத்தை வாதாபிப் புலியினால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உறுதியாக நம்பவும். புலி சேற்றிலேயே கிடந்து பட்டினியால் செத்த பிறகு காஞ்சி ரிஷபத்துக்கும் மதுரையின் பெண் மானுக்கும் நீடித்த உறவு ஏற்பட இடம் இருக்கிறது. ஆனால், புலியின் பசியைத் தீர்க்க உதவி செய்தால் அது மதுரையின் மானுக்குத்தான் முடிவில் ஆபத்தாக முடியும். இதையும் மனத்தில் வைத்துக் கொண்டு உசிதப்படி நடந்து கொள்ளவும்."

இதை லிகிதன் படித்து வரும்போதே வாதாபிச் சக்கரவர்த்திக்கு அதன் உட்கருத்து இன்னதென்று விளங்கி விட்டது. கோபத்தினால் அவனுடைய உடம்பெல்லாம் நடுங்கிற்று. பற்களை அவன் நறநறவென்று கடித்துக் கொண்ட சப்தம் அருகில் இருந்தவர்கள் எல்லாரையும் நடுங்கச் செய்தது.

குண்டோதரன், சற்று முன்னால் பயந்தவன் போல நடித்து 'உரல் உலக்கை' என்றெல்லாம் பேசியதையும், அதைக் கேட்டுத் தான் சிரித்ததையும் நினைத்த போது உண்டான அவமான உணர்ச்சியானது புலிகேசியின் கோபத்திற்கு இன்னும் தூபம் போட்டது.

"அடே ஒற்றா! வாதாபிப் புலிகேசியுடனா விளையாடத் துணிந்தாய்? கொண்டு போங்கள் இவனை. இவனுடைய கண்களைப் பிடுங்கி விட்டு, கழுத்தை வெட்டிக் கழுகுக்குப் போடுங்கள்!" என்று கர்ஜித்தான்.

இப்படிக் குரூரமான ஆக்ஞையிட்ட போது, புலிகேசியின் கழல் போலச் சிவந்த கண்கள் குண்டோதரனை உற்று நோக்கின. அவ்விதம் நோக்கிய கண்களில் திடீரென கோபம் தணிந்து, அளவில்லா ஆச்சரியத்தின் அறிகுறி தென்பட்டது.

ஏனெனில், குண்டோதரனை வீரர்கள் இழுத்துக் கொண்டு போக முயன்ற போது, அவனுடைய தலையானது விசித்திரமான சில சமிக்ஞைகளைச் செய்தது. உற்றுக் கவனித்த புலிகேசிக்கு, அந்தச் சமிக்ஞைகள் ஸ்வஸ்திகச் சின்னத்தின் கோலமாக அமைந்தன என்பது தெரிய வந்தது. (ஸ்வஸ்திகச் சின்னம் என்றதும், வாசகர்களுக்கு ஜெர்மனியில் நாஸிக் கட்சியின் சின்னமாக அது விளங்குவது ஞாபகம் வரும். ஆனால், ஹிட்லரைப் பார்த்துப் பூர்வீக இந்தியர்கள் காப்பியடிக்கவில்லை. அந்த நாளில் புத்தர்களும் ஜைனர்களும் சில சமயங்களில் ஸ்வஸ்திகச் சின்னத்தை உபயோகப்படுத்தினார்கள் என்பது சரித்திர ஆதாரம் பெற்ற விஷயம்.) அதனாலேதான் அவனுடைய கண்களில் அத்தகைய வியப்புக் குறி தோன்றியது.

"நில்லுங்கள்!" என்று புலிகேசி மறுபடியும் கூவினான்.

"இந்த ஒற்றனிடம் நான் இன்னும் சில விஷயங்கள் கேட்க வேண்டும். இவனை இங்கேயே தனியாக விட்டு விட்டு மற்றவர்கள் கூடாரத்துக்கு வெளியே போங்கள்" என்று கட்டளையிட்டான்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com