Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
4. வேங்கி தூதன்

ஜயந்தவர்மன் போய்விட்ட பிறகு புலிகேசி தன்னுடைய பிரதானிகளைப் பார்த்து, "யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பது எவ்வளவு உண்மை, பார்த்தீர்களா? அந்தப் பல்லவ நரி கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளப் போக, இந்தப் பூனைப் பாண்டியனின் தலை ஒரேயடியாக வீங்கிப் போயிருக்கிறது! உத்தராபதத்தின் ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்திக்கும், மத்தியப் பிரதேசத்தின் வாதாபிச் சக்கரவர்த்திக்கும் இணையாகப் பூனைப் பாண்டியனும் தக்ஷிண தேச சக்கரவர்த்தியாக விளங்க வேண்டுமாம்! ஆசையைப் பாருங்கள், ஆசையை! காஞ்சிக் கோட்டை மட்டும் தகர்ந்து விழட்டும்; பிறகு இந்த அற்பனுக்கும் தக்க புத்தி புகட்டி விட்டு வாதாபிக்குத் திரும்புவோம்" என்றான்.

இப்படிப் புலிகேசி சொல்லி முடிக்கும் தருவாயில் வேகமாகக் குதிரைகள் நெருங்கி வரும் சத்தம் கேட்டது. காஞ்சி முற்றுகையை நடத்திக் கொண்டிருந்த சளுக்க சேனாபதி அவசரச் செய்தியுடன் தூதர்களை அனுப்பியிருக்கிறார் என்றும், அவர்கள் வேங்கியிலிருந்து வந்த தூதன் ஒருவனையும் அழைத்து வந்திருப்பதாகவும் தெரிந்தது. தாமதமின்றி அவர்களைத் தன் முன்னிலையில் அழைத்து வரும்படி புலிகேசி சொல்ல, சேனாபதி அனுப்பிய தூதர்களின் தலைவனும் வேங்கி நாட்டுத் தூதனும் அழைத்து வரப்பட்டார்கள்.

வேங்கி நாட்டுத் தூதன் தன்னுடைய உடம்பெல்லாம் காயங்களுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தான்.

தூதர்கள் இருவரும் சக்கரவர்த்திக்கு அடிபணிந்து எழுந்த பிறகு, சேனாபதி தூதன், "பிரபு! இவன் வேங்கியிலிருந்து முக்கியமான செய்தி அடங்கிய ஓலை கொண்டு வந்திருக்கிறான். காஞ்சிக்கு வரும் வழியில் இவனை வழிமறித்துச் சிலர் தடுக்க முயற்சி செய்தார்களாம். அவர்களுடன் சண்டையிட்டுத் தப்பித்துக் கொண்டு வந்தானாம். காஞ்சியிலிருந்து இங்கு வரும் மார்க்கத்தில் இவனுக்கு ஏதும் அபாயம் வரக்கூடாதென்பதற்காகச் சேனாபதி என்னையும் வீரர்கள் எழுவரையும் அனுப்பினார்" என்றான்.

பிறகு, வேங்கியிலிருந்து வந்த தூதன் தன்னுடைய உடை வாளின் உறையில் பத்திரமாய் வைத்திருந்த ஓலையை எடுத்துப் பயபக்தியுடன் சக்கரவர்த்தியிடம் கொடுத்தான்.

புலிகேசி அதை வாங்கிக் கொண்டதும் சபையில் இருந்த லிகிதனின் முகத்தைப் பார்க்க, அவன் விரைந்து ஓடி வந்து பணிவுடன் ஓலையை வாங்கிப் படிக்கலானான்:

"திரிபுவன சக்கரவர்த்தி சத்யாச்ரய புலிகேசி மகாராஜருக்குச் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் பக்தியுடன் எழுதும் லிகிதம். தாங்கள் காஞ்சிக்குப் போய்ச் சேர்ந்தபிறகு எவ்விதச் செய்தியும் தங்களிடமிருந்து வரவில்லை. நான் பலமுறை அனுப்பிய ஓலைகளுக்கும் மறுமொழி இல்லை. ஒரு வேளை என் ஓலைகள் தங்களுக்கு வந்து சேரவில்லையோ என்று சந்தேகிக்கிறேன்.

தங்களுடைய கட்டளைப்படி குரு பூஜ்ய பாதரை வரவழைத்து விமரிசையாக மகுடாபிஷேகம் செய்துகொண்டேன். ஆனால், இன்னும் தொல்லைகள் தீர்ந்தபாடில்லை. வேங்கிப் படைகள் இன்னும் மலைப் பிரதேசங்களில் மறைந்து நின்று தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. குடி படைகளும் கறுமுறு என்று இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு அதிசயமான விஷயம்! மகேந்திர பல்லவருடைய சிறிய தந்தை மகன் புத்தவர்மன் எங்கிருந்தோ ஒரு பெரிய சைனியத்துடன் முளைத்திருக்கிறான். கிருஷ்ணை நதியின் தென்கரையில் தண்டு இறங்கி நான் தங்களுக்கு உதவி செய்வதற்காகப் புறப்பட்டால் என்னைத் தடுக்கப் போவதாகக் கறுவிக் கொண்டிருக்கிறானாம்.

வேங்கி யுத்தத்தில் ஏற்பட்ட காயங்களால் நான் அடைந்த தேக அசௌக்யம் இன்னும் தீரவில்லை. நாளுக்கு நாள் பலஹீனம் அதிகமாகி வருகிறது, குதிரை ஏறக்கூட முடியாதவனாயிருக்கிறேன். இதெல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். மகேந்திர பல்லவன் கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளுவதற்கு முன்னால் உத்தராபதச் சக்கரவர்த்திக்கு உதவி கோரி ஓலை அனுப்பினானாம். ஹர்ஷவர்த்தனர், தாங்கள் காஞ்சியிலும் நான் வேங்கியிலும் அகப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சமயம் பார்த்து, அசலபுரத்தின் மேலும் வாதாபியின் மேலும் படையெடுக்கத் தீர்மானித்து விட்டதாக வதந்தி உலாவுகிறது. கன்யாகுப்ஜத்திலிருந்து சமீபத்தில் நாகார்ஜுன மலைக்கு வந்த ஒரு யாத்ரிகன் இவ்விதம் சொன்னானாம். அஜந்தா குகைகளையும் சித்திரங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினாலேயே ஹர்ஷவர்த்தனர் மேற்படி யோசனை செய்திருப்பதாக வதந்தியாம்.

இந்த நிலைமையில் அடியேனுக்குத் தாங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய்க் காத்திருக்கிறேன். எது எப்படியிருந்தாலும், 'படையுடன் புறப்பட்டு வா' என்று கட்டளையிட்டால், உடனே புறப்படச் சித்தமாயிருக்கிறேன். என் அன்புக்குகந்த தமையனும் தந்தையும் குருவும் அரசனும் உற்ற நண்பனுமான தங்களுடைய வார்த்தையே எனக்குக் கடவுளின் கட்டளையைவிட மேலானது. என் உடல், பொருள் ஆவி அனைத்தையும் தங்களுடைய சேவையில் அர்ப்பணம் செய்ய எந்த க்ஷணமும் சித்தமாயிருக்கிறேன். இன்னும் வெகு காலம் சந்தேகத்திலும் குழப்பத்திலும் என்னை விட்டு வைக்காமல், 'இன்னது செய்' என்று திட்டமாக ஆக்ஞையிடும்படியாக மன்றாடி வேண்டிக்கொள்கிறேன்."

மேற்படி ஓலையை லிகிதன் படித்து வந்தபோது, ஆரம்பத்திலேயெல்லாம் புலிகேசியினுடைய கண்களிலே அனல் பறந்தது. மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட நாகப் பாம்புபோல அடிக்கடி பெரு மூச்சு விட்டான். ஓலையின் கடைசிப் பகுதியை படித்த போது, அவனுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிற்று. "என் அருமைத் தம்பி விஷ்ணுவர்த்தனா, உன்னை மறுபடியும் எப்போது, காணப் போகிறேன்!" என்று அலறினான்.

சபையில் வீற்றிருந்த தளபதி பிரதானிகள் முதலியோர் யாரும் அவனுக்கு ஆறுதல் கூற முன்வரவில்லை! தாங்கள் ஏதாவது பேசினால் அதன் காரணமாக என்ன விபரீதம் நேருமோ என்னவோ என்று அனைவரும் கதிகலங்கிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று புலிகேசி புலம்புவதை நிறுத்திவிட்டு, கண்களைத் துடைத்துக் கொண்டு சிம்ம கர்ஜனைக் குரலில், "இந்தப் படையெடுப்புக்கு நாள் பார்த்துக் கொடுத்த ஜோஸ்யன் யார்? இங்கே நம்முடன் வந்திருக்கிறானா?" என்று கேட்டான்.

"நம்முடன் வரவில்லை. வாதாபியிலே தான் இருக்கிறான்!" என்று பிரதானிகளில் ஒருவன் சொன்னான்.

"அப்படியானால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வாதாபிக்குப் போனதும் முதற்காரியமாக அந்த ஜோஸ்யனை யானையின் காலால் இடறச் செய்ய வேண்டும்!" என்றான் புலிகேசி.

அதே சமயத்தில், புலிகேசியின் கோபத்திற்கு இரையாவதற்காகவே கொண்டு வந்ததுபோல் ஒரு மனிதனை மேலெல்லாம் கயிற்றால் பிணைத்து, கூடாரத்துக்குள்ளே கொண்டு வந்தார்கள்.

புலிகேசி, "இவன் யார்? இவன் யார்?" என்று கர்ஜிக்க, காஞ்சியிலிருந்து வந்த தூதர் தலைவன், "பிரபு! இவன் காஞ்சி ஒற்றன். நாங்கள் வரும்போது வழியிலே இவனைச் சந்தித்தோம். கட்டிப்பிடித்துக் கொண்டு வந்தோம்" என்றான்.

"ஆஹா! இந்தப் பாழாய்ப்போன பல்லவ ராஜ்யத்தில் ஒற்றர்களைத் தவிர வேறு யாருமே இல்லை போலிருக்கிறது. நல்லது, ஜோஸ்யனுக்குப் பிரதியாக இவனை யானையின் காலால் இடறச் செய்யுங்கள்!" என்றான் புலிகேசி.

அத்தகைய கடுமையான ஆக்ஞைக்கு உள்ளான மனிதன் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவன்தான். ஆனால் இப்போது அவன் பழைய முரட்டுப் பட்டிக்காட்டுக் குண்டோ தரனாயில்லை. நாகரிகமான உடையணிந்திருந்தான், புலிகேசியின் ஆக்ஞையினால் அவன் அதிக மனக்கலக்கத்துக்கு உள்ளானவனாகத் தோன்றவில்லை!

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com