கட்டுரை
சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 9
இளநம்பி
கோர்பச்சேவ் கொண்டுவந்த பெரஸ்த்ரோய்க்காவும் கிளாஸ்நோஸ்தும் சு.ரா.வை பெரும் உற்சாகத்தில் தள்ளியதாம். இதே உற்சாகத்தைத்தான் அறிஞர் எஸ்.வி. ராஜதுரை தனது ‘ரஷ்யப்புரட்சி ஒரு இலக்கிய சாட்சியம்’ என்ற நூலின் இறுதி அத்தியாயத்தில் விஜய் பட ரீலிசுக்கு இணையாகக் கொண்டாடியிருப்பார். இவர்களது மார்க்சிய அறிவை நாம் விளங்கிக் கொள்ள இந்தக் கொண்டாட்டமே போதும். குருசேவ் காலத்தில் தொடங்கிய திரிபுவாதம் சமூக ஏகாதிபத்தியமாய் அதாவது சொல்லில் சோசலிசமும் செயலில் ஏகாதிபத்தியமுமாய் சீரழிந்த காலத்தில்தான் அதன் நீட்சியாய் கோர்பச்சேவ் பதவிக்கு வந்தார்.
ஏற்கெனவே சோவியத் யூனியனின் பொருளாதாரம் ஏகாதிபத்தியக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு முக்கால் நிர்வாணமாகியிருந்த நிலையில், ‘ஒரு கட்சி ஆட்சிமுறை’ என்ற கோவணம் மட்டும் எதற்கு என்று ஏகாதிபத்திய நாடுகள், அதைத் தூக்கியெறியுமாறு நிர்ப்பந்தம் செய்து வந்தனர். அதன் பொருட்டு கோர்பச்சேவ் கோவணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து எறியலாம் என்று கொண்டு வந்தவைதான் மேற்கண்ட சீர்திருத்த நடவடிக்கைகள். இதை அப்போதைய உண்மையான மார்க்சிய லெனினிய வாதிகள் தெளிவாக அம்பலப்படுத்திய போது அதை எதிர்த்த போலிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் கோர்பச்சேவின் அரை நிர்வாண சீர்திருத்தங்களை மாபெரும் புரட்சி நடவடிக்கைகள் என்று வரவேற்றனர்.
இக்காலகட்டத்திற்குச் சற்று முன்பாக காலச்சுவடை ஆரம்பித்திருந்த சு.ரா., எம்.என்.ராய், எரிக் ஃபிராம், எம்.கே. கோவிந்தன் முதலான விதவிதமான கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளுமைகளை வெளியிட்டார். எல்லாம் கோர்பச்சேவின் கோவணக் கிழிசலுக்கு உதவியாய் இருக்கும் என அவர் நினைத்திருக்கக் கூடும். மேலும் கம்யூனிசத்தை திருத்துவதற்கு குமரிமுனையில் ஒருவன் இருக்கிறான் என்பதை உலகத்திற்கு அடையாளம் காட்டவும் அவர் நினைத்திருக்கலாம். கடைசியில் என்ன நடந்தது? சோசலிச மாயைக்காகப் பராமரிக்கப்பட்ட ‘ஒரு கட்சி ஆட்சி’ என்ற கோவணம் பறந்த உடன் மாலெ கட்சிகள் மதிப்பிட்டது போல ரசியா வெளிப்படையான முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடாக மாறியது. இதை எதிர்பார்க்காத போலிகள், சோவியத் யூனியனை வைத்து அணிகளுக்கு பிலிம் காட்டியவர்கள் கதிகலங்கிக் கதறினார்கள்.
அதன் பிறகு ரசியாவில் செங்கொடி கீழிறக்கப்பட்டு கம்யூனிச ஆசான்களின் சிலைகளும் இடிக்கப்பட்டன. இதைக்கண்டு பதறிய சு.ரா. பல நாட்கள் தூங்கமல் கண்ணீர் விட்டாராம். “ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் மனுஷாளை நம்பியிருக்கலாம்” என்று அப்போது ஜெயமோகனிடம் சொன்னாராம். அப்பக்கூட மனுஷன் கம்யூனிஸ்டுகளை அதுவும் ஸ்டாலினைத் திருத்துவதற்கான தன் கடமையில் இருந்து பின்வாங்கவில்லை. சு.ரா. ஏன் கண்ணீர் விட்டார் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டு விடுகிறோம்.
செங்கொடிகளும், சிலைகளும் சரிந்து சோவியத் யூனியனின் முகமூடி கிழிந்ததை வைத்து கம்யூனிசம் காலாவதியாகிவிட்டது என ஏகாதிபத்திய முகாம் காத்திருந்து ஆர்த்தெழுந்த காலமது. அதன் எதிரொலிகள் தமிழ்நாட்டின் சிற்றிலக்கிய உலகிலும் அலற ஆரம்பித்தன. “வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது, வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது, எல்லா தத்துவங்களும் இயக்கங்களும் தோற்றுப் போய் விட்டன, அவையெல்லாம் பெருங்கதையாடல்கள், விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள் என்ற சின்னக் கதையாடல்கள்தான் சரியானது, தலித்தியம் பெண்ணியம் சுற்றுச் சூழலியம் போன்ற மறைக்கப்பட்ட பிரச்சினைகள்தான் இனி பேசப்படவேண்டும்...” போன்ற கொள்கை முழக்கங்களை நிறப்பிரிகை முன்வைத்தது. கம்யூனிசத்திற்கு இனி எதிர்காலமில்லை என்பதாகப் புரிந்து கொண்ட சு.ரா. தன்னை எதிர் மார்க்சியவாதியாக நிரூபிக்க மேற்கண்ட விசயங்களில் அந்த அளவுக்கு அறிவில்லையென்றாலும் பேசி, எழுத முயன்றார்.
கம்யூனிச எதிர்ப்புக்கு புது மவுசு இருப்பதைப் புரிந்து கொண்ட சு.ரா.வின் தலைமைச் சீடர் ஜெயமோகன் முந்திக் கொண்டார். உடனே ஜெயமோகனுடைய கனவில் ஸ்டாலின் வந்திறங்கி பூட்ஸ் காலால் உதைக்கத் தொடங்க, ராணுவ பூட்ஸை விடக் கனமான பின் தொடரும் நிழலின் குரலை ஜெயமோகன் பிரசவித்தார்.
தனது குருநாதரின் ஜே.ஜே. நாவல் போன்று இந்த நாவலும் பெரும் வரவேற்பைப் பெறும், ஒருவேளை நாவலில் புகாரின் கதையெல்லாம் விரிவாக வருவதால் நோபல் பரிசு கூடக் கிடைக்கலாம் என்று ஜெயமோகன் மனப்பால் குடித்திருக்கலாம். நாவல் கடைசியில் கழுதைப்பாலாக வீணாகிவிட்டது. ஜே.ஜேயில் கம்யூனிச எதிர்ப்பு சற்றே இலைமறைவு காய் மறைவாக வந்ததென்றால், பின்தொடரும் குரலில் வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி, படிமத்திற்கு படிமம் அப்பட்டமாய் எழுந்து அம்மணமாக ஆட்டம் போட்டதனாலோ என்னவோ வாசகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. எந்தக்கதை 50 நாட்களாவது ஓடும் என்ற சூட்சுமம் தமிழ் சினிமாத் தயாரிப்பாளர்களுக்கே தெரியவில்லை. எந்த நாவல் காலத்தை விஞ்சி நிற்கும் என்ற சூட்சுமம் அதீத மனத்தாவல் கொண்டு யோசித்தாலும் ஜெயமோகனுக்குப் பிடிபடவில்லை போலும்! ஆனால் இந்த நாவல் குருவுக்குப் பிடித்திருந்ததாம்.
ஒருவேளை நாவல் தோல்வியடையலாம் என்ற கணிப்பு காரணமாகக்கூட சு.ரா. அதைப் பாராட்டியிருக்கலாம். ஏனெனில் குருநாதர் சிஷ்யனின் கிளாசிக் நாவலான விஷ்ணுபுரத்தை படிக்கவே இல்லை என்று புளுகிவிட்டாராம். துணிக்கடை முதலாளி படிக்காவிட்டாலென்ன, சாய ஆலை முதலாளியும், சர்க்கரை, லாரி, நிதி இன்னபிற தொழில்களின் அதிபரும் கொக்கோ கோலா முகவருமான அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் விஷ்ணுபுரத்தை இரண்டு தடவை படித்து தன் ரசிகராகி விட்டதை ஜெயமோகன் தன் வாசகர் ஒருவருக்கு போகிற போக்கில் பெருமை பொங்க அவிழ்த்து விட்டிருக்கிறார். அருட்செல்வர் முதலாளி மட்டுமல்ல, அறிவாளியும் கூட. ‘மின்சாரத்தில் நேர்எதிர் மின்சக்திகள் கண்டுபிடிக்கப்பட்டவுடனே மார்க்சியம் காலாவதியாகி விட்டதாக’ சுபமங்களாவுக்கு பேட்டி கொடுத்தவர். அவர் பின் தொடரும் நிழலின் குரலை நான்கு முறையாவது படித்திருக்க வேண்டும்.
ஜெயமோகன் தனது வாழ்க்கை மற்றும் எழுத்துக்கு அடிப்படையான புரிதல் என்று சு.ரா. பற்றிய நினைவின் நதியில் நூலில் குறிப்பிடுகிறார்: “மனித வாழ்க்கையும் சரி, வரலாறும் சரி, அப்படிப்பட்ட உக்கிர கணங்களால் ஆனவை அல்ல. அவை மிக மெல்ல மாறுவது தெரியாமல் மாறியபடி விரிந்து கிடக்கின்றன. சலிப்பூட்டும்படி மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அந்தத் தளத்தில் மனித மனத்தை இயக்கும் விசைகள் பெரும்பாலும் மிக மிகச் சாதாரணமானவை. பல தீவிரச் செயல்பாடுகளுக்கு உள்ளே இருக்கும் உளவியல் காரணங்கள் எளியவை, அபத்தமானவை.” உண்மையில், ஜெயமோகனது அடிப்படையான ஆன்மீகம் இதுதான்.
இதன்படி ஜெயமோகன் வேலை செய்யும் தொலைபேசித் துறையில் தனியார்மயத்திற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யும் நடவடிக்கைக்குள்ளேயும், எம்.ஜி.ஆர். நகரில் 43 பேர் இறந்துபோன படுகொலைச் சம்பவத்திற்கு உள்ளேயும், அமெரிக்கா ஈராக்கின் மீது குண்டுவீசித் தாக்கி நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு உள்ளேயும், அதை எதிர்த்துத் தன்னுடலையே வெடிகுண்டாக்கி தற்கொலையின் மூலம் தியாகம் செய்யும் போராளியின் சிந்தனைக்கு உள்ளேயும் இருக்கும் உளவியல் காரணங்கள் எளியவை, அபத்தமானவை என்றாகிறது. இவற்றுக்கு அடிப்படையாக அமையும் பொருளியல் மற்றும் சமூக உளவியல் காரணங்களை ஆராய்வதோ இலக்கியத்திற்கெதிரான அபச்சாரம்!
ஜெயமோகனது தத்துவ விசாரங்களைக் கண்டு அஞ்சிச் சரணடைந்த வாசகர்களுக்குப் புரியும்படி சொல்கிறோம். ‘உயிரே’ திரைப்படத்தில் வடகிழக்கிந்திய மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான நியாயத்தை மனிஷா கொய்ராலாவின் முலைகள் வழியாக மணிரத்தினம் நிறுவுகிறாரல்லவா, அது துல்லியமான ஆன்மீகச் சித்தரிப்பு; ஒரு மனித வெடிகுண்டின் நியாயம் எந்த அளவுக்கு அபத்தமானது என்கிறார் ஜெயமோகன்.
எந்த ஒரு வரலாற்றையும் சம்பவத்தையும் நிகழ்ச்சியையும் என்ன காரணம் என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுப் பரிசோதித்தால் அதன் விடை அபத்தமாக வரும் என்பதுதான் அவரது ஆன்மீகத்தின் உட்கிடை. தன்னை டன் கணக்கில் எழுதிக் குவிக்கத் தூண்டும் ஆன்மீக உந்துதல் சாகித்ய அகாதமி, ஞானபீடம் போன்ற சாதாரணமான விசயங்களில்தான் உறைந்திருக்கிறது என்ற உண்மையை அவர் பார்க்கிறார். சு.ரா. இறந்தவுடன் 3 நாட்கள் சிறுநீர் பிரிந்தது கூடத் தெரியாமல் தீவிரமாகத் தன்னைச் செயல்பட வைத்த ஆன்மீக விசை எது? புகழ்வது போலக் கேவலப்படுத்தவும், வியப்பது போலக் காறித்துப்பவும், வருத்தப்படுவது போல நடிக்கவும் தன்னுடைய மனத்தை இயக்கிய அந்த உளவியல் காரணம் அற்பமானதே என்பதை அவர் உணர்ந்திருப்பதால் ‘உலகமே அற்பத்தனமானது’ என்று பிரகடனம் செய்கிறார்.
ஆனால், ஜெயமோகன் தன் நாவலை அப்படி எழுதவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் நாயகன் ஒரு போலி கம்யூனிசத் தொழிற்சங்கத்தில் சேர்ந்து படிப்படியாகத் தலைவராகிறான். பின்பு கட்சியின் காரியவாத பிழைப்புவாதங்களைக் கண்டு, மனஞ்சோர்ந்து, விலகி மனைவியின் முலைகளில் தஞ்சமடைந்து இறுதியில் ஆன்மீகவாதியாக மாறுகிறான். இந்த நாவலை ஜெயமோகன் தனது எழுத்தின் தத்துவ அடிப்படையை வைத்து எழுதவில்லை என்பதோடு அதற்கெதிராகவும் எழுதியிருக்கிறார்.
நாவலில் அதீத நாடகத்தன்மையும், வாழ்க்கையை செயற்கையாக உக்கிரப்படுத்துவதும், விரிவான எரிச்சலூட்டும் பாத்திரப்படைப்பும், வாழ்வின் அநீதியை எதிர்த்து வரலாறு முழுவதும் போராடும் மனித சமூகத்தை எதிர்த்து ஆபாசமாக வசைபாடும் ஜெயமோகனது நீண்ட பிரசங்கங்களும் முடிவில், எல்லாம் சேர்ந்து நாவலை மிகச் செயற்கையாகத் தூக்கி நிறுத்துகின்றன. அதனாலேயே வாசிப்பில் சரிந்து விழுகின்றன. சு.ரா.வின் ஜே.ஜேவைக் கிணற்றுத் தவளை என்று மதிப்பிட்டால், ஜெயமோகனை சற்றே எம்பிக் குதிக்கும் கிணற்றுத் தவளை என்று சொல்லலாம். குருவை விஞ்சிய சீடன்தான்! எவ்வளவு துள்ளினாலும் இந்தத் தவளையும் மீண்டும் கிணற்றுக்குத்தான் போகிறது என்பதே முக்கியம்.
ஜே.ஜே. எழுதிய சு.ரா. போலி கம்யூனிஸ்டு தலைவர்கள் மீது நன்மதிப்பு கொண்டிருந்ததை சீடரும் ‘கவனத்தில்’ கொண்டிருக்கிறார். சு.ரா.வுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு குமரிமாவட்ட தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கலை இலக்கியப் பெருமன்றமும் கிளை கிளையாக வந்தனராம். சு.ரா.வுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அருகதை உள்ள கட்சிகள் இவைகள் மட்டும்தான் என்று தனது ‘நினைவின் நதியில்’ ஜெயமோகன் எழுதுகிறார். போலிகளும் இவருடனான தமது பழைய கசப்பை மறந்துவிட்டுக் கைகோர்க்கக் கூடும். நல்லகண்ணுவைப் பாராட்ட இல.கணேசன் போகவில்லையா? அரசியலைப் போல ‘இலக்கியத்திலும் இதெல்லாம் சகஜமப்பா’ என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
ஜே.ஜே. சில குறிப்புகளையும் மார்க்சியத்திற்கும் சு.ரா மற்றும் அவர் சீடப் பிள்ளைக்குமுள்ள உறவுகளைப் பார்த்துவிட்டோம். இங்கே ஜே.ஜே. நாவலால் பாதிக்கப்பட்ட ஒரு ஆளுமையைப் பார்ப்போம். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பொருத்தமானவர். “சு.ரா.வை ஜே.ஜே. சில குறிப்புகள் வழியாகத் தேடிச் சென்றவர்களில் நானும் ஒருவன். எனது இடதுசாரி நம்பிக்கைகள் பெரும் மனமுறிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம். ரஷ்யப் புரட்சி: ஒரு இலக்கிய சாட்சியம் எனது நம்பிக்கைகளைக் குரூரமாகச் சிதைத்தது. அந்த காலகட்டத்தில்தான் ஜே.ஜேயையும் படித்தேன். அனைத்தின் மீதும் ஜே.ஜே. வெளிப்படுத்திய எதிர்நிலையும் விழிப்புணர்வும் சட்டென ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியது. ஜே.ஜேயில் வெளிப்பட்ட மொழியும் புத்துணர்ச்சியும் மூர்க்கமும் பித்தேற்றுவதாக இருந்தன....” என்கிறார் கவிஞர்.
முதலில், கவிஞரின் இடதுசாரி நம்பிக்கை என்னவாக இருந்தது? புதிய கலாச்சாரத்தில் ஓரிரு கவிதைகள் எழுதியிருக்கிறார். ஷாபானு குறித்து ஒரு கட்டுரை எழுதியதாக நினைவு. அப்புறம் மன ஓசையில் சில கவிதைகள் எழுதியிருக்கிறார். இதைத் தவிர கவிஞர் அவர்கள் இடதுசாரி இயக்கத்திற்காகக் கருத்துப் பணியோ, களப்பணியோ ஆற்றவில்லை. பெரிய அளவில் காரியம் ஆற்றாமலேயே நம்பிக்கை மட்டும் பெரிய அளவில் மனமுறிவைச் சந்தித்தது எப்படி என்று தெரியவில்லை. தொலையட்டும். அப்படி மனமுறிவைப் பெற்றதாகவே வைத்துக் கொள்வோம். அதன் பிறகு கவிஞர் என்ன செய்தார்? இடதுசாரி நம்பிக்கை என்ற சிறிய குன்றை விட்டுக் கீழிறங்கி அதைவிட உன்னதமான சிகரத்தை நோக்கிப் போனாரா? இல்லை. கவிதைத் தொகுப்புக்களைக் கொண்டு வந்தார். பிறகு காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணனுடன் ஏதோ தகராறு. அந்தத் தகராறில் ‘சு.ரா. மகனை ஆதரித்தார்’ என்று குற்றம் சாட்டிவிட்டு வெளியேறினார்.
அப்புறம் எழுத்து வியாபாரி சுஜாதாவின் நல்லாசியுடன் அவரது புத்தகங்களை வெளியிடும் உயிர்மைப் பதிப்பகத்தை நடத்துகிறார். சுஜாதாவைப் பற்றி எவரும் விமரிசனம் செய்யக்கூடாது என்ற ஒரே ஒரு கொள்கையுடன் உயிர்மை பத்திரிக்கையை நடத்தி வருகின்றார். இப்படியொரு பெரும் பள்ளத்தாக்கில் தலைகுப்புற விழுந்த போதிலும் அவருக்கு மனமுறிவோ எலும்பு முறிவோ கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமானது. பிழைப்புவாதமும் காரியவாதமும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என இன்று அவர் தெளிந்திருக்கலாம். இந்தக் குறிக்கோளுக்கிடையில் அவரால் கவிதை எழுதுவதையும் நிறுத்த முடியவில்லை.
கவிதை என்றவுடன் அவர் காலச்சுவடில் எழுதிய ‘அரசி’ என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. ஜெயலலிதாவைப் பற்றி பூடகமாக ‘அரசி வந்தாள், சிலிர்த்தாள், நகரம் பணிந்தது’ என்று உப்புச்சப்பற்ற நீர்த்துப்போன படிமங்களால் தயாரிக்கப்பட்ட இந்தக் கவிதையை ‘தமிழகத்தின் மிகச் சிறந்த அரசியல் கவிதை’ என்று தங்களைத் தாங்களே இலக்கிய உன்னதங்களாக அழைத்துக் கொள்ளும் ஜெயமோகன் மற்றும் பிரேம் ரமேஷ் போன்றோர் பாராட்டியதும் நினைவுக்கு வருகிறது.
அரசியல் வெளி இருண்டு போன இலக்கியப் பாலைவனத்தில் இதுபோன்ற அசட்டுக் கவிதைகள் மகத்தான அரசியல் கவிதைகளாக வரவேற்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் பற்றி ‘அண்ணன் வர்றாரு’ என்ற பாடல் ஒலிப்பேழையை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அரசி கவிதையைப் படித்துவிட்டு எமது பாடல் ஒலிப்பேழையைக் கேட்டுப் பாருங்கள். எதில் கவித்துவமும், கூர்மையும், எள்ளலும், உற்சாகமும் இருக்கிறது என்பது தெரியவரும். அதனால்தான் எமது பாடலை சாதாரண தி.மு.க. தொண்டர்கள் பாராட்டி தங்களுடைய வெளிப்படுத்த முடியாத குரலாகப் பயன்படுத்தியும் வந்தனர். அரசி கவிதை யாருக்குப் பயன்படும்? அடுத்து தி.மு.க. ஆட்சி வந்தால் எழுதிய மனுஷ்யபுத்திரனுக்கும் வெளியிட்ட கண்ணனுக்கும் பலவகையில் பயன்படும்.
எனில், சு.ராவின் ஜே.ஜே. நாவல், கவிஞரைப் போன்ற இலக்கியவாதிகளிடம் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவு இதுதான். அந்த நாவல் தெரிந்தே ஓம்பப்படும் அறியாமையை எல்லாம் தெரிந்த ஞானமாக காட்டிக் கொள்பவர்களுக்கும், சமூகத்திற்கு விரோதமான தன்னிலையை சமூகத்திற்கு மேலான உயர்நிலையாகக் கற்பித்துக் கொள்பவர்களுக்கும், சோம்பிக் கிடக்கும் சொந்த வாழ்வில் விறுவிறுப்பைக் கற்பிதம் செய்து கொள்பவர்களுக்கும் அக உலகில் கட்டியமைக்கப்படும் கற்பனையான வாழ்வின் இல்லாத புதிரை நிஜ உலகில் தேடுவதைப் போன்று பாவனை செய்பவர்களுக்கும் எல்லா தத்துவங்களும் தோற்று விட்டதென்னும் புனைவு தரும், பொய்க்களைப்பை வாழ்வின் அற்ப விசயங்களில் ஊறித்திளைப்பதற்கான நியாயமாக முன்வைப்பவர்களுக்கும் சு.ரா.வின் ஜே.ஜே. ஒரு ஆதர்ச நாயகன்.
நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|