Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 8
இளநம்பி


சு.ரா.விற்கும் கம்யூனிசத்திற்கும் பொதுவில் உள்ள உறவு என்ன? இதனைப் புரிந்து கொள்ள ஜெயமோகனது ஆவணத்தில் உள்ள தகவல்கள் உதவுகின்றன.

Sundara Ramasamy ஜெயகாந்தன் 60, 70களின் ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி மூலமும் பின்னர் தனது சொந்தத் திறமை மூலமும் எழுதிப் பிரபலமாகியது சு.ரா.வுக்குப் பெரிய மனக்குறையைத் தந்திருக்கலாம். தன்னைத் தவிர எந்த எழுத்தாளரையும் ஏற்காத அவரது சொந்த மனநிலையை இது சீண்டி விட்டிருக்கலாம். சு.ரா.வுக்கு ஜெயகாந்தன் அளவுக்கு நேரடி வாழ்க்கை அனுபவம் இல்லை என்பதால் போட்டி போட முடியவில்லை. ஒருவேளை ஜெயகாந்தனைப் போன்ற பின்னணி சு.ரா.வுக்கு இருந்திருந்தால் அவரும் கட்சிக்கு ஜே போட்டுவிட்டு அப்போதே பிரபலமான எழுத்தாளராக செட்டிலாகியிருப்பார். அது முடியவில்லை என்பதால்தான் 80களில் ஜெயகாந்தன் வீழ்ந்த நேரத்தில் அவரை முல்லைக் கல்லாக்கி பழிதீர்த்துக் கொண்டார். சு.ரா.வின் கம்யூனிச எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியதில் இந்தப் பார்வைக்கு முக்கியப் பங்குண்டு.

ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த குருசேவ் முதன்முதலாக ஸ்டாலின் கால மனிதப் படுகொலைகளை வெளிப்படையாக அறிவித்ததும் உலகமே அதிர்ச்சியடைந்தது போல சு.ரா.வும் பேரதிர்ச்சியடைந்தாராம். அப்புறம் ஆர்தர் கீஸ்லர் என்ற எழுத்தாளர் எழுதிய தோல்வியுற்ற கடவுள், நடுப்பகலில் இருள் எனும் நூல்களைப் படித்ததும் சோவியத் கால பயங்கரங்களை மேலும் தெரிந்து கொண்டு மேலும் அதிர்ச்சியடைந்து கம்யூனிஸ்டு கட்சியிடமிருந்து முற்றிலும் விலகிக் கொண்டாராம். அக்கால இரவுத் தூக்கங்களில் ஸ்டாலின் கனவில் வந்து பூட்சுக்காலால் சு.ரா.வைக் குத்துவாராம். ஏற்கெனவே சுந்தர விலாசத்தில் தந்தையின் கோணல் பார்வையின் மூலம் சர்வாதிகாரத்தின் இலக்கணத்தைத் தெரிந்தும் அனுபவித்தும் வந்த சு.ரா.வுக்கு ஸ்டாலினது சர்வாதிகாரம் அதிகம் விளக்கமின்றியே சட்டென்று புரிந்து விட்டதாம்.

இதிலிருந்து சு.ரா. கம்யூனிசத்தைக் கட்டோடு வெறுத்தார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் புரியாத உண்மை ஒன்று உள்ளது. அது சு.ரா. போலி கம்யூனிசத்தை ஆதரித்தார் என்பதே. இதையே ஜெயமோகன் “சு.ரா. தனது கட்சித் தோழர்களிடமிருந்து ஆழமான மார்க்சிய மன அமைப்பைப் பெற்றார்” என்று கூறுகிறார். இதை ஒரு சின்னத் திருத்தத்துடன் ஏற்றுக் கொள்வோம். அதாவது சு.ரா. தனதுக் கட்சித் தோழர்களிடமிருந்து போலி மார்க்சிய மனஅமைப்பைப் பெற்றார். அது எவ்வாறு என்று பார்க்கலாம்.

முதல் விசயம் குருசேவுக்கு முன்பேயே, ஸ்டாலின் காலத்திலேயே அவரைப் பற்றிய அவதூறுகள் ஏகாதிபத்திய அறிவாளிகளால் திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டன. இயற்கைச் சீற்றம், தொற்று நோய் மற்றும் சோவியத் யூனியனின் சராசரி இறப்பு விகிதத்தையே பல ஆண்டுகளில் கூட்டி மாபெரும் படுகொலை போன்று புள்ளிவிவர மோசடி செய்தார்கள். இதை அமெரிக்காவின் அப்போதைய ஏகபோக பேப்பர் முதலாளி ஹெர்ஸ்ட் என்பவன் பெரும் முதலீட்டுடன் உற்பத்தி செய்து விநியோகம் செய்தான். இதையே இலக்கியமாக மாற்றி எழுத்தாளர்கள் வெளியிட்டனர். இத்தகைய நாவல்களுக்கு பெரும் பணமும், நோபல் பரிசு முதலான விருதுகளும் கிடைத்து வந்த படியால் கம்யூனிச எதிர்ப்பு இலக்கியம் எழுதுவது அப்போது இலாபம் தரும் தொழிலாக நடைமுறையில் இருந்து வந்தது.

ஜெயமோகனும், சு.ரா.வும் வியந்தோதும் ஆர்தர் கீஸ்லர் என்ற எழுத்தாளர் மட்டுமல்ல, அறிஞர் ரஸ்ஸல் போன்றவர்களும் தமது கம்யூனிச எதிர்ப்பு எழுத்துக்காக பிரிட்டிஷ் உளவுத் துறையான எம்.15இலிருந்து பெருந்தொகையை ஊதியமாக அல்லது கைக்கூலியாகப் பெற்று வந்தனர். இவையெல்லாம் 90களில் இங்கிலாந்தில் அதிகாரப் பூர்வமாகவே வெளிவந்து நாறிய செய்திகள். அடுத்து, சோவியத் யூனியனிலேயே இத்தகைய கைக்கூலிகள் உருவாகிச் செயல்பட்டு வந்தனர். புகாரின் போன்றவர்கள் கட்சித் தலைமையிலேயே அந்தச் சதியை செய்து வந்தனர் என்பதை நிரூபித்த மாஸ்கோ சதி வழக்கு உலகப் பத்திரிக்கையாளர்கள் முன்பு பகிரங்கமாகத்தான் நடந்தது.

இறுதியில் போலி கம்யூனிசத்தின் முகமூடியை முழுவதும் கலைத்துப் போடவந்த கோர்பச்சேவின் காலத்தில் சோவியத் யூனியனின் ஆவணக்கருவூலம் திறக்கப்பட்டபோது, ‘ஸ்டாலின் காலப் படுகொலைகளுக்கான இறுதி ஆதாரம் அதில் கிடைக்கும்’ என்று ஏகாதிபத்தியவாதிகள் ஆரூடம் கூறினர். ஆனால் அத்தகைய சான்று ஒன்று கூட அதில் இல்லை. இதனால் ஸ்டாலின் மீதான அவதூறுகளுக்கு ஆதாரம் ஏதும் கிடைக்காத நிலையில் ஏகாதிபத்தியவாதிகள் வேறுவழியின்றி இலக்கியவாதிகளின் புனைகதைகளை மட்டும் வைத்து அந்தப் பிரச்சாரத்தைத் தொடருகின்றனர்.

‘பனித்துளியில் இருக்குதடா உலகம்’ என்ற வரிக்குள் முடங்கிக் கொண்டு உண்மையான உலகைப் புரிந்து கொள்ள மறுக்கும் மூடுண்ட அகத்தை வரித்திருக்கும் ஜெயமோகன் போன்றோர் மேற்கண்ட கைக்கூலிகளின் கம்யூனிச எதிர்ப்புக் கருத்தைத்தான் தமது உடலில் ஓடும் ரத்தமாகக் கொண்டிருக்கின்றனர். இவை குறித்த விரிவான கட்டுரைகளை ஆதாரத்துடன் புதிய கலாச்சாரத்தில் பலமுறை வெளியிட்டிருக்கிறோம். இந்நூலில் உள்ள அந்தக் கட்டுரைகள் ஜெயமோகன், சு.ரா. போன்றோரின் கம்யூனிச எதிர்ப்புத் தத்துவத்தின் ஊற்று மூலத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவும். இப்படி ஸ்டாலின் மீதான அவதூறுப் பிரச்சாரங்கள் ஏற்கெனவே கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில்தான் குருசேவ் என்ற மார்க்சியத் திரிபுவாதிகளின் தலைவர் தலைமைக்கு வந்து அவற்றை வழிமொழிந்தார்.

வெறுமனே ஸ்டாலினைச் சிறுமைப்படுத்தி தன்னை உயர்த்திக் கொள்வது மட்டும் குருச்சேவின் நோக்கமல்ல. மார்க்சியத்தின் ஆதாரமான கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் மொத்தத்தில் சோவியத் யூனியனை அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடாக மாற்றுவதுதான் குருசேவின் நோக்கமாக இருந்தது. அதன்படி “சமாதான சகவாழ்வு ஏகாதிபத்தியங்களுடன் சமாதானமாக வாழலாம், அமைதி வழியில் சோசலிச மாற்றம் ஆயுதந் தாங்கிய போராட்டத்தின் மூலம் புரட்சியின் மூலம் சோசலிசம் அடையத் தேவையில்லை; பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் சோசலிசத்தை அடையலாம்; அனைத்து மக்களுக்கான அரசு இதன்படி சோவியத் யூனியனில் இனி பாட்டாளி வர்க்க அரசு தேவையில்லை” என்ற குருசேவின் இந்த திரிபுவாதக் கருத்துக்களின் அடிப்படையில் உலகக் கம்யூனிசக் கட்சிகள் இரண்டாகப் பிரிந்தன.

இவை மார்க்சியத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் சதி என்றவர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகள் எனவும், ஆதரித்தவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவின் வலது கம்யூனிசக் கட்சியும், ஆரம்பத்தில் குருசேவை மேலோட்டமாக எதிர்ப்பது போல பாவனை செய்த இடது கம்யூனிசக் கட்சியும் குருசேவின் திரிபுவாதத்தை ஆதரித்து பாராளுமன்ற கட்சிகளாகச் சீரழிந்து போயின. அப்போதைய சீனக்கம்யூனிசக் கட்சி, அல்பேனியக் கட்சி, இந்தியாவில் நக்சல்பாரிக் கட்சி போன்றவர்கள் குருசேவை கடுமையாக எதிர்த்துப் போராடி அம்பலப்படுத்தினர். இந்த வரலாற்றுக்கும் சு.ரா.வுக்கும் என்ன சம்பந்தம்?

ஸ்டாலின் மீது குருசேவ் பொழிந்த அவதூறுகள் குறித்து மட்டும்தான் சு.ரா. அதிர்ச்சியடைந்தார். மார்க்சியத்தைக் குழி தோண்டிப் புதைத்த திரிபுவாதம் குறித்து எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. குருசேவின் திரிபுவாதத்தினால் கம்யூனிசக் கட்சிகள் எப்படி இரண்டு முகாம்களாகப் பிரிந்ததோ அதைப்போல மார்க்சியத்தை ஆதரித்த கலைஞர்களும் இரண்டு பிரிவுகளாய்ப் பிரிந்தனர். இந்த இரண்டாவது திரிபுவாத முகாமைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவாளிகள் அனைவரும் அல்லது பெரும்பான்மையினர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை ஏற்றுக் கொண்ட அதேசமயம் திரிபுவாதம் குறித்து வாய் திறக்காமல், அந்தத் திரிபுவாதத்தை எதிர்த்த உண்மையான கம்யூனிஸ்டுகளை மட்டும் தீவிரமாக எதிர்த்தனர்.

“முன்னாள் கம்யூனிஸ்டுகள் சோசலிசத்தை ஆதரிப்பவர்கள், முற்போக்கான இடதுசாரிகள்” என்ற பட்டங்களுடன்தான் இவர்கள் உண்மையான கம்யூனிசத்தை எதிர்த்தனர் என்பது முக்கியமானது. அவ்வகையில் இவர்கள் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத போதும் இவர்களின் சேவையை ஏகாதிபத்தியவாதிகளும், போலி கம்யூனிஸ்டுகளும் ஊக்குவித்துப் பயன்படுத்திக் கொண்டனர். இப்படித்தான் சு.ரா. போலி மார்க்சிய மன அமைப்பைப் பெற்றுக் கொண்டார்.

சு.ரா.வுடன் 1952 முதல் நட்பு கொண்டவரும், வலது கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு கொண்டவருமான மி.ராஜூ என்பவரின் பதிவின்படி சு.ரா.வுக்குக் கட்சி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற விருப்பம் இருந்த போதிலும் அதை அவர் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் துணியவில்லையாம். அப்புறம் அவரது சிறுகதைத் தொகுப்பு செக் மொழியில் வந்தபோது அதில் அவரைப்பற்றிய அறிமுகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்று எழுதி அவரிடம் ஒப்புதலைக் கேட்டபோது அந்த வரியை அடித்து விட்டாராம். அதேசமயம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் ஓரளவு நம்பிக்கை தருவதாக உள்ளவை (போலி) கம்யூனிஸ்டு கட்சிகள்தான் என்று சு.ரா. ஒரு சந்தர்ப்பத்தில் ராஜூவிடம் சொன்னாராம்.

சு.ரா. ஒரு தீவிர கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருந்து, பயங்கரமாகக் களப்பணியாற்றி, ஸ்டாலின் குறித்த பிரச்சினையால் கட்சியிலிருந்து விலகிவிட்டது போல இலக்கிய உலகில் ஒரு வதந்தி உலவி வருகிறது. முதலில் இது உண்மையல்ல. கட்சி அவரது கதையை செக் மொழியில் வெளியிட முன்வந்த போதும் அவர் தன்னை ஒரு உறுப்பினராகக் கூட காட்டிக் கொள்ள முன்வரவில்லை. மேலும் ஒரு கம்யூனிசக் கட்சியைப் பொறுத்தவரை உறுப்பினராவது என்பது பயிற்சிக் காலத்தை முடித்த பின்னரே நடக்க முடியும். இங்கே அந்த உரிமை சு.ரா.வின் பேனா மையில் இருக்கிறது. அவர் நினைத்தால் ஆமாம் என்றோ அல்லது இல்லையென்றோ உறுப்பினர் தகுதியை ‘டிக்’ செய்ய முடியும். இன்றைக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள் தமக்கு ஆதரவான இலக்கியவாதிகளிடம் இப்படித்தான் உறவு கொண்டுள்ளன. இது போலி மார்க்சிய இலக்கியவாதிகளின் முதல் மனநிலை.

அடுத்து அநேக இலக்கியவாதிகள் மேலோட்டமாக மார்க்சியத்தை ஒரு பாவனை போல் ஆதரித்தாலும் கட்சி என்று வரும் போது தம்மை ஒப்படைத்துக் கொள்ள மறுத்து விடுவார்கள். அதாவது கட்சியின் கடமைகளை ஏற்றுக் கொண்டு கட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவது என்பது அவர்களைப் பொறுத்தவரை வேப்பங்காயைப் போன்று கசப்பிற்குரியது. இலக்கியவாதிகளின் கம்யூனிச வெறுப்பே இந்த அடிப்படையிலிருந்துதான் கிளம்புகிறது. நிலவும் எல்லா வகையான அதிகார நிறுவனங்களுடனும் சமரசம் செய்து கொண்டோ, கட்டுப்பட்டோ வாழப் பழகியிருக்கும் இலக்கியமனம் கம்யூனிஸ்டு கட்சி கோரும் சுயக் கட்டுப்பாட்டையும், சுய அர்ப்பணிப்பையும் மட்டும் ஏற்றுக் கொள்ளாது. இது இரண்டாம் மனநிலை. அடுத்து மார்க்சிய சித்தாந்தம் குறித்து அ,ஆ கூடத் தெரியாத போதே கம்யூனிசத்தைக் கற்றுத் தேர்ந்து, கரைத்துக் குடித்த பண்டிதராகக் காட்டிக் கொள்வது மூன்றாம் மனநிலை.

நான்காவது, ஒருபுறம் கம்யூனிசம், கட்சியெல்லாம் டூபாக்கூர் என்று கேலி செய்து விட்டு இன்னொருபுறம் போலி கம்யூனிசக் கட்சித் தலைவர்களிடம் நெருங்கிப் பழகுவதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வை மாபெரும் தியாகமாகச் சித்தரிப்பதும், அந்தத் தலைவர்களும் இத்தகைய இலக்கியவாதிகளை ‘என்ன இருந்தாலும் இவன் நம்மாளுயா’ என்று பரஸ்பரம் முதுகு சொறிவதுமாகும். இறுதியாக, கம்யூனிசம், புரட்சி என்பதையெல்லாம் ஃபேன்டசி, ரொமான்டிக் விசயங்களாக, ஒரு நேர்த்தியான மாலை நேர விருந்து போல எந்தப் பிரச்சினையோ, துன்பமோ, ரத்தமோ, போரோ இல்லாமல் வந்துவிடுவதாகக் கருதுவது ஐந்தாம் மனநிலை. இதன்படி ‘கம்யூனிசம் என்ற அமுதப்பழம் தானாகவே வந்தால் புசித்து இன்புறுவோம், இல்லையா, புறங்கையால் ஒதுக்கிவிட்டு இருக்கின்ற வாழ்க்கையை ரசித்து அனுபவிப்போம்’ என்பதாகும். சு.ரா. மேற்படி ‘பஞ்சபூதங்களால்’ ஆன மனநிலையைக் கொண்டவர். இதன் பொருள் அவர் ஒரு தீவிர மார்க்சிய எதிர்ப்பாளர் என்பதே.

எனவே சித்தாந்தத்தைத் தவிர்த்து விட்டு போலிகளின் சில்லறை நடைமுறைப் பிரச்சினைகளை விமரிசனம் செய்துவிட்டு ஈ.எம்.எஸ். போன்ற முக்கியமான இடது மற்றும் வலது தலைவர்களிடம் சு.ரா. நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். நல்லக்கண்ணு போன்ற தமிழகத் தலைவர்களும் நாகர்கோவில் வந்தால் சுந்தர விலாசத்திற்குத் தவறாமல் வந்து தங்கிப் போவார்களாம். திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் வலது கம்யூனிசத் தலைவர் எம்.என்.கோவிந்தன் நாயர் ஒரு தேர்தலில் நீலலோகிததாஸ நாடாரிடம் தோல்வியுற்றது குறித்து “இது சாதியின் வெற்றி, இந்திய அரசியலில் ஐடியலிசம் சாகுதுன்னு அர்த்தம்” என்று சு.ரா. துக்கப்பட்டு சில நாட்கள் தூங்காமல் அவதிப்பட்டாராம். ஐடியலிசம் குறித்த அறிவும் வருத்தமும் எவ்வளவு அற்பமாக இருக்கிறது பாருங்கள்!

வலது கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்றச் சகதியில் மூழ்கி நேருவின் போலி சோசலிசத்திற்குப் பக்கமேளம் வாசித்து, இந்திராவின் எமர்ஜென்சிக்கு பஜனை பாடி, தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் மற்றும் தலைவிக்கும், கலைஞருக்கும் காவடி தூக்கி, இப்போது முதலாளிகளுக்கும், காங்கிரசுக்கும் பல்லவி பாடி கட்டெறும்பாகத் தேய்ந்து விட்டது. இவையெதுவும் சு.ரா.வுக்கு கோபத்தையோ துக்கத்தையோ தரவில்லை. அக்கட்சியின் ஒரு தலைவர் தோற்றுப் போனது மட்டும் சு.ரா.வுக்கு துக்கத்தை தருகிறது என்றால் அவரது ‘ஐடியலிச’த்தை மட்டுமல்ல, ‘ஐடியாலஜி’யையும் அதன் முத்திரை பதிந்த ‘லிட்ரேச்சரி’ன் ஆழத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

சு.ரா. அவரது இளமைப்பருவத்தில் தன்னை இந்தியாவில் புரட்சி நடத்தப்போகும் ஸ்டாலினைப் போன்ற தலைவராகக் கற்பனை செய்து கனவு கண்டாராம். இதை ஜெயமோகன் ஒருமுறை சு.ரா.விடம் அந்தரங்கமாகக் கேட்டபோது அவர் ஒத்துக் கொண்டாராம். இருக்கலாம். தன்னெழுத்தை மட்டும் வியந்தோதக்கூடிய ஒரு நபர் புரட்சி என்பது கூட தன்னால் வழங்கப்பட இருக்கின்ற கோவில் சுண்டல் என்று ஏன் நினைக்க முடியாது? இப்படி ஒரு தனிநபர், புரட்சியை பிச்சை போன்று மக்களிடம் தூக்கி எறிவதாக எத்தனை தெலுங்குப் படங்களும் ஹாலிவுட் படங்களும் வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் ஒரே ஃபார்முலா அதுதானே. ஆனால், புரட்சி என்பது கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் மக்கள் நடத்தும் போர். இதைச் சாதிக்கும் தலைமை என்பதே இத்தகைய போராட்டத்தினூடாகத்தான் முகிழ்த்து வரும்.

கம்யூனிஸ்டு கட்சியில் சேரும் எவரும் தலைமை குறித்துக் கனவு காண மாட்டார்கள். தலைமை என்பது என்ன, அது எவற்றைக் கோருகிறது, அது என்னவிதமான பொறுப்புக்களையும், பிரச்சினைகளையும் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். மறுபுறம் கம்யூனிஸ்டு கட்சியின் எல்லா உறுப்பினர்களும் தலைமைப் பண்பைக் கொண்டிருப்பது அவசியமாகும். ஏனெனில் அவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்க வேண்டும். புரட்சிகர நடைமுறையில் இல்லாத நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டும்தான் கம்யூனிசம் என்ற பெருஞ்சொர்க்கத்தில் தான் முடிசூடவிருக்கும் மகுடம் குறித்த அற்பக் கனவு இருக்க முடியும்.

அவ்வகையில் போலி மார்க்சியக் கலைஞரும், சிற்றிலக்கியத்தின் எம்.ஜி.ஆருமான சு.ரா., இந்தியாவின் புரட்சித் தலைவராக மட்டுமல்ல, சிறு பத்திரிக்கைகளின் பிதாமகராவும் தன்னைக் கனவு கண்டார். பின்னதில் மட்டும் ஓரளவு வெற்றியும் பெற்றார். பின்னாளில் அந்தப் பதவியும் பல்வேறு இலக்கிய கோஷ்டிகளுடன் நடத்திய சண்டையால் ஆட்டங்கண்ட போதுதான் சு.ரா. சொல்லொண்ணாத் துயரம் அடைந்து தன்னைப் புகைப்படங்களாகவும், குறிப்புக்களாயிருந்த நினைவுகளை வார்த்தைகளின் உதவியால் புத்தகங்களாகவும் பதிவு செய்து சமாதானம் அடைய முயன்றார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்


நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com