Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அலைவாய்க்கரையில் இளமையின் எழுச்சி
(சுனாமி நிவாரணப்பணிகளில் வாலிபர் சங்கம்)
ஒரு பதிவு

கண்ணன்
திருவேட்டை
ரமேஷ்பாபு
செந்தில்
ச. தமிழ்ச்செல்வன்


முந்தைய அத்தியாயம்

9.கரைமேல் பிறந்த மக்கள்

சமவெளிகளில் நாட்டுக்குள் வாழும் மக்களுக்கு கடல் மீன்களைத் தெரியும் . ஆனால் மீனவர்களைத் தெரியாது.மீனவர்களின் வாழ்க்கை தெரியாது.மீனவர்களின் கலாச்சாரம் தெரியாது. அப்படி ஒரு சமூகம் நம்மோடு நம் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதான பிரக்ஞையே நமக்கு இருந்ததில்லை.சுனாமி அலைகள் அம்மக்களை நம் கவனத்தில் கொண்டுவந்து போட்டுச்சென்றுள்ளது.காலம் காலமாக இம்மக்கள் உரிய மதிப்புப் பெறாமலே வாழ்ந்து வந்துள்ளனர்.இந்திய நிலப்பரப்பில் மீனவர்களை சண்டாளர்கள் என்றும் மீன் பிடி தொழிலை சண்டாளத் தொழில் என்றும் மக்கள் கருதுவதாக இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரிகரான பாஹியான் எழுதிச்சென்றார்.ஆகவேதான் பாரதியும்,

Fishermen “பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கு விடுதலை”
என்று ஒடுக்கப்பட்ட மக்களின் பட்டியலில் மீன் பிடிக்கும் பரதவர் இனத்தை மறக்காமல் சேர்த்துப்பாடினார்.

பொதுவாக மீனவ மக்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள். உணர்ச்சிவசப்பட்டு அடிதடிகளில் இறங்குபவர்கள். யாருக்கும் அடங்க மாட்டார்கள் என்பது போன்ற கருத்துக்கள்தான் பரவலாக சமவெளி மனிதர்களிடம் பதிவாகியுள்ளன. மீனவர்களை காலாகாலத்திலே கடலுக்கு அனுப்பாவிட்டால் மாவட்டத்தில் கடும் சட்ட ஒழுங்குப் பிரச்னை உருவாகிவிடும் என்று சுனாமி பாதித்த மாவட்டம் ஒன்றின் ஆட்சித் தலைவர் கூறினார். மக்கள் இயக்கங்களின் மீது நம்பிக்கை கொண்ட அமைப்புகளுக்குமே கூட மீனவ மக்களைப் பற்றி முழுமையான புரிதல் இதுவரை இல்லை என்றே கூற வேண்டும்.

நாகை, கடலூர், பாண்டிச்சேரி, சென்னைப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் கலாச்சாரத்துக்கும் குமரி மாவட்ட மீனவ மக்களின் கலாச்சாரத்துக்கும் பலத்த வேறுபாடு உண்டு. குமரி மாவட்டத்தில் பிரதானமாக பரதவர்களும் முக்குவர்களுமான இம்மீனவ மக்கள் அநேகமாக கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சர்ச்சுகளே அம்மக்களின் வாழ்க்கை மீது செல்வாக்குச் செலுத்தும் சமூக கலாச்சார நிறுவனங்களாக உள்ளன. மீன் பிடி தொழில் தொடர்பான எல்லா விஷயங்களும் சர்ச்சின் ஆளுகையின் கீழே-சர்ச் கமிட்டியிலேயே முடிவு செய்யப்படுகின்றன. சர்ச் கமிட்டி என்பது இயல்பாகவே வசதி படைத்த மீன் வியாபாரிகளின் செல்வாக்கில் இருக்கும். ஏழை மீனவர்களின் சொல் அங்கே அம்பலம் ஏறுமா என்பது கேள்விக்குறியே. தூத்துக்குடி வட்டாரத்தில் கிறிஸ்தவ பரதவ இன மக்களின் முழு உரிமையாக இருந்த கடலும் கடல்சார் தொழில்களும் எப்படி வியாபாரம் செய்ய வந்த நாடார் மற்றும் பிற சாதியாரின் கட்டுப்பாட்டுக்குள் போனது என்கிற ஒரு நூற்றாண்டு வரலாற்றை ஜோ-ட்-குரூஸ் எழுதிய ‘ஆழிசூழ் உலகு’ என்கிற நாவல் மனம் கொள்ளும் விதமாக விரித்துப் பேசுகிறது.

பிற மாவட்டங்களில் மீனவ கிராமங்களில் இன்னும் பழைய நாட்டாண்மைகளின் செல்வாக்கு நீடிக்கிறது. நாட்டாமைகளின் தலைமையிலான பஞ்சாயத்து ஏற்பாடு வலுமிக்கதாக இருக்கிறது. சுனாமி நிவாரணப் பொருட்களையே இந்த நாட்டாமைகளின் வழியேதான் பல கிராமங்களில் கொடுக்க முடியும். இந்த நாட்டாமை என்பது பரம்பரையாக வருகிறது. எனினும் இன்றளவும் மீன் பிடி தொழிலில் சமபங்கீடு என்பது நீடிக்கிறது. சொந்தப் படகு இல்லாத மீனவத் தொழிலாளிக்கும் மீன் பிடியில் உரிய பங்கு கிடைத்து விடுவதால் பொருளாதார ரீதியாக சமவெளியில் வாழும் நிலமற்ற விவசாயக் கூலியைவிட வசதியாகவே வாழ்கிறார்.

பொருளாதாரரீதியாக கூடுதல் வசதி இருந்தாலும் மீனவர்கள் கலாச்சார ரீதியாகவும் சமூகரீதியாகவும் நாட்டின் பிற சமூகத்தவரிடமிருந்து தனிமைப்பட்ட ஒரு வாழ்க்கையே வாழுகிறார்கள். எல்லாச் சாதியிலும் குடிகாரர்களும் முரடர்களும் வன்முறையில் ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் மீனவ மக்கள் என்றாலே அப்படித்தான் என்கிற கருத்து பிற மக்களின் பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிவாகியிருப்பது உண்மை.

கடற்கரையிலேயே படுத்திருந்து கடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து எப்போது கடலுக்குள் இறங்கினால் மீன் அதிகமாகக் கிடைக்கும் என்பதை உணர்ந்து அது எந்நேரமாக இருந்தாலும் படகுகளை கடலில் செலுத்தி மீன் பிடிக்கப் போகிறார்கள். எப்போது திரும்புவோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. திரும்பும்போது மீன்களோடு திரும்புவார்களா என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. நிச்சயமின்மைதான் நிச்சயம் என்பதான ஒரு தினசரி வாழ்க்கையும் கடலோடும் அலைகளோடும் போராடும் உடல் வலிமைசார்ந்த வருமானமும் போன்ற காரணங்களே அவர்களின் குணநலன்களைத் தீர்மானிக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு அம்மக்களோடு பணியாற்ற முன்வர வேண்டும். நேரடியாக இயற்கையோடு போராடும் ஒரு சமூகமாக இந்த நவீன காலத்திலும் இம்மீனவ மக்களே இருக்கிறார்கள் என்பது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய செய்தியல்லவா?

எப்போது கடல் சீற்றம் கொண்டு வீசினாலும் புயல் மையம் கொண்டு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானாலும் பாதிக்கப்படுவது மீனவ மக்கள்தான் என்பதை இப்போதாவது நாம் புர்¢ந்துகொள்ள வேண்டும். அவர்கள் என்னவிதமாக வாழ்கிறார்கள் என்பதை உற்றுநோக்கி அறிந்துகொள்ளவும் அவர்கள் மத்தியில் ஜனநாயக இயக்கங்களை கட்டி எழுப்பவும் பொது நீரோடையில் அவர்களைக் கலக்கச் செய்யவும் இதுதான் சந்தர்ப்பம். விஞ்ஞான தொழில்நுட்பம் சகல துறைகளிலும் வியக்க வைக்கும் சாதனைகள் புரிந்துவரும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும்கூட-சமையல் கட்டுக்கும் முன் கூடத்துக்கும் செல்போனில் பேசுகிற அளவுக்கு தொடர்பு சாதனங்களின் பாய்ச்சல் வேகம் அதிகரித்துள்ள இந்நாட்களிலும் கூட மீனவமக்கள் கட்டுமரங்களில் படகுகளில் புயல் பற்றியோ கடலில் அல்லது வானநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியோ எச்சரிக்கை செய்யும் எந்த நவீன கருவியும் இல்லாமல்தான் தினசரி கடலுக்குள் சென்று வருகிறார்கள். இது எத்தனை பெரிய கொடுமை.

Fishermen சுனாமி ஏற்பட்டுள்ளதால் மட்டுமே அவர்கள் பாதிக்கப்பட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால் ஏற்கனவே மீனவர்களுக்காக அரசுத் தரப்பிலிருந்து உருப்படியான எந்த ஆதரவு நடவடிக்கையும் கிடையாது. கூட்டுறவு அமைப்புகள் கூட ஏற்படுத்தப்படவில்லை. மார்க்கெட்டிங் ஏற்பாட்டோடு இணைக்கப்பட்ட கடன் வழங்கும் கூட்டுறவு அமைப்புகள் அம்மக்களின் நீண்ட காலத் தேவையாக உள்ளது. தென்னிந்திய மீனவர் சங்கக் கூட்டமைப்பினால் நடத்தப்படுகிற கூட்டுறவு சங்கங்கள் மாத்திரமே மீனவர் நலனைக் கருத்தில் கொண்டு இயங்குகின்றன. அரசால் இயக்கப்படும் ஒருசில கூட்டுறவு சங்கங்கள் அவைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றனவேயன்றி மீனவர்களின் தேவைகளைப் பற்றி அவைகளுக்கு அக்கறை இல்லை. அவையுமே ஆளும் கட்சிகளின் தொண்டரடிப்பொடியாழ்வார்களுக்கு தீனி போடும் லட்சியத்தோடுதான் செயல்படுகின்றன. மிகப்பெரிய தொழிலதிபர்கள் பெரிய சினிமா நட்சத்திரங்கள் பிரம்மாண்டமான மீன்பிடி படகுகளை கடலில் இறக்கியுள்ள சூழலில் சக்திமிக்க கூட்டுறவு இயக்கம் உடனடித் தேவை. அப்படியான நிரந்தர ஏற்பாடுகளே கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

போதிய கல்வி பெறும் ஏற்பாடுகளோ உயர்கல்விக்கான ஆலோசனைகள் பெறும் வாய்ப்புகளோ அற்ற நிலையில் பெருவாரியான மீனவ மக்கள் மத்தியில் கல்லாமை நீடிக்கிறது. கடலுக்குப் போகும் வாழ்க்கை படித்து என்ன செய்யப்போகிறோம் என்கிற மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. இதிலெல்லாம் மாற்றங்கள் கொண்டுவர கலாச்சாரரீதியான நடவடிக்கைகள் தேவை.

சுனாமி மீனவ சமுதாயத்தின் ஆழமான-நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் அவர்களின் பிரச்னைகளை வெளி உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்து விட்டது உண்மை. நாம் என்ன செய்யப்போகிறோம்? இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏதோ நிவாரணப் பணிகளுக்குப் போனோம் உதவிகள் செய்தோம் பணி முடித்து ஊர் திரும்பிவிட்டோம் என்கிற நிலைபட்டை எடுக்கவில்லை. இன்று மீனவ சமுதாயத்தோடு ஏற்பட்டுள்ள நெருக்கமான உறவைப் பயன்படுத்தி அவர்களின் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட திட்டமிடுகிறது. போர்க்களத்தை விட்டுப் பாதியில் வீடுதிரும்பும் படைவரிசை அல்லவே நாம்?
முந்தைய அத்தியாயம்அடுத்த அத்தியாயம்


- ச. தமிழ்ச்செல்வன்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com