Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அலைவாய்க்கரையில் இளமையின் எழுச்சி
(சுனாமி நிவாரணப்பணிகளில் வாலிபர் சங்கம்)
ஒரு பதிவு

கண்ணன்
திருவேட்டை
ரமேஷ்பாபு
செந்தில்
ச. தமிழ்ச்செல்வன்


முந்தைய அத்தியாயம்

8. பார்த்தவர்கள் சொன்னார்கள்

ஆம். வாலிபர் சங்கம் சுனாமி பாதித்த பகுதிகளில் ஆற்றிய பணிகளை ஒரு நாளாவது நேரில் பார்த்தவர்கள் மனம் திறந்து பாராட்டினார்கள்.

Tsunami hit area ஜனவரி முதல் தேதியன்று நிவாரணப் பொருட்களுடன் நாகை வந்த குமுதம் வார இதழின் குழு பொருட்களை வாலிபர் சங்கத்தின் உதவியோடுதான் மக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய முடிந்தது. அது பற்றி அவ்வாரக் குமுதத்தில் அவர்கள் எழுதிய வரிகள்: “நாகைப் பகுதி முழுவதும் கடந்த ஒரு வாரமாக இரவுபகலாய் மீட்புப் பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட்டிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளைஞர்கள் நிவாரணப்பொருட்கள் விநியோகிக்க வேண்டிய இடங்களை ஏற்கனவே நம்மிடம் குறிப்பிட்டிருந்தார்கள். முதலில் ஏ.எப்.எஸ் திருமண மண்டபத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த மக்களுக்கு குமுதம் வாசகர்கள் சார்பாக நிவாரணப் பொருட்களை வழங்கும் பணி துவங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நம்மோடு சேர்ந்து கொண்டு மக்களை ஒழுங்கி படுத்தி வரிசையில் வந்து பொருட்களைப் பெற அன்புடன் உதவினார்கள்.. ..”

“வெங்கடேஷ் தினக்கூலிக்கு வேலை பார்த்துத் தன் குடும்பத்தை பராமரிக்கும் ஒரு இளைஞர். கடலூர் மாவட்டம் கிள்ளையில் அமைந்த வாலிபர் சங்க முகாமின் மூலம் முதல் நாளிலிருந்தே வெங்கடேஷ் பிணங்களை அகற்றுவது ஊரைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளில் இரவு பகலாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். 2-3 நாளுக்கு ஒரு முறை அவருடைய வீட்டார் கிள்ளை முகாமுக்குப் போன் செய்து அவரை வரச் சொல்லுவார்கள். சாப்பிட ஒண்ணுமில்லே வீட்டிலே என்பதுதான் செய்தி. வெங்கடேஷ் உடனே ஓடுவார். ரெண்டுநாள் கூலி வேலை பார்த்து வீட்டாருக்குப் பணம் கொடுத்துவிட்டு மீண்டும் கிள்ளை முகாமுக்கு ஓடி வந்து விடுவார். அதீதமான வறுமையும் அதீதமான உற்சாகமும் ஒருசேரப் பெற்ற தொண்டர்.

இவரைப் போன்ற வாலிபர் சங்கத்தின் தொண்டர்கள் கடலூர், நாகை, குமரி என எல்லா இடங்களிலும் இருந்தனர். அவர்கள்தான் இந்த நிவாரன முகாம்களின் பணிகளின் முதுகெலும்பு. அவர்களுக்கு அறிக்கைகள் எழுதத் தெரியாது. பெரிய திட்டங்கள் பற்றி காரசாரமாக விவாதிக்கத் தெரியாது. ஆனால் யாருமற்ற அனாதையாகக் கிடந்த கிராமங்களுக்குள் முதன் முதலாக உள்ளே நுழைந்த மனிதர்கள் இவர்கள்தான். பிணங்களைத் தோண்டி வெளியே இழுத்து அடக்கம் செய்ததும் இவர்கள்தான். அவர்களுக்கு என் வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எழுதுகிறார் டாக்டர். பாலாஜி சம்பத் (சென்னை ஐ.ஐ.டி யில் பட்டம் பெற்று அகில இந்திய அளவில் நான்காவது இடம் பெற்று வெளிநாடுகளில் சென்று படித்து அறிவியலை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காகத் தொடர்ந்து உழைத்து வரும் இவர் எய்ட்-இந்தியா அமைப்பின் பொறுப்பாளர்)

Rediff.com இல் அமித் ஷர்மா எழுதுகிறார்; “தமிழ்நாட்டுக்கு நான் விஜயம் செய்தபோது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆற்றிவரும் மகத்தான பணியைக் கண்டேன். பிணங்களை சகதியிலிருந்து அப்புறப்படுத்துவதும் அடக்கம் செய்வதும் போன்ற கடுமையான பணிகளை பகலென்றும் பாராமல் இரவென்றும் பாராமல் தங்கள் உடல் வலிகளைப் பற்றியெல்லாம் வாயே திறக்காமல் செய்து வருகிரார்கள். கடலோர கிராமம் ஒவ்வொன்றிலும் இதைப் பார்க்கலாம்.”

The Telegraph என்னும் ஆங்கிலப் பத்திரிகை எழுதியது: “பணம் படைத்த பெரிய தொண்டு நிறுவனங்களோ பலமிக்க அரசு எந்திரமோ செய்யவில்லை. அழுகிக் கொண்டிருக்கும் பிணங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளின் தொண்டர்கள்தான் செய்தார்கள்”

“எனக்கு ஆரம்பத்தில் வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் இவற்றின் மீதெல்லாம் பெரிய மரியாதை கிடையாது. முரட்டுத்தனமாக போராட்டங்கள் நடத்துகிற ஆள்கள் என்கிற அபிப்ராயம்தான் இருந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய கடலூர் மாவட்டம் புதுக்குப்பம் கிராமத்துக்குப் போய் இறங்கினேன். அங்கே தெருக்கள் சீராக்கப்பட்டு எல்லா இடங்களும் சுத்தமாகப் பார்ப்பதற்கே மனம் நிறைவாக இருந்தது. பிளீச்சிங் பவுடர் எல்லாத் தெருக்களிலும் தூவப்பட்டிருந்தது. ஏராளமான தொண்டு நிறுவனங்களின் பேனர்கள் வழியெங்கும் தொங்கிக் கொண்டிருந்தன. வாலிபர்சங்கத்தின் பேனர் எங்குமே தட்டுப்படவில்லை. ஆனால் நேரம் செல்லச் செல்லத்தான் எனக்குப் புரியத் துவங்கியது.

வாலிபர் சங்கத்தாருக்கு பேட்ஜ், பேனர் போன்ற எந்த அடையாளமும் தேவைப்படாமலேயே உள்ளூர் மக்கள் நெருக்கமாக அறிந்திருந்தார்கள். தினசரி வாலிபர்கள் வந்து தெருக்களைச் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போடுவதாக ஊர் மக்கள் சொன்னார்கள். அங்கிருந்த ராணுவத்தினரும் மக்களும் “முதல் நாளிலிருந்தே பிணங்களை அகற்றக் களம் இறங்கிய முதல் முன்னணிப்படை இந்த வாலிபர் சங்கத்தாரும் மாணவர் சங்கத்தாரும்தான்” என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்கள். இவர்களைப் பற்றிய எனது எண்ணம் மெல்ல மெல்ல மாறத் தொடங்க்¢யது. மறுநாளிலிருந்து நான் அவர்களோடு இணைந்து பணியாற்றத் துவங்கினேன். சேர்ந்து வேலை செய்யும்போதுதானே யாரையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்?

நான் பெண் என்பதால் என்னை அனாதைக் குழந்தைகள், தனியாக்கப்பட்ட பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் இவர்களோடு பழகி அவர்களின் பிரத்யேகமான பிரச்னைகளை அடையாளம் கண்டு சொல்லும்படி கேட்டுக்கொண்டனர். தொலைநோக்குப் பார்வையுடன் இந்த வாலிபர்கள் சிந்திப்பதும் திட்டமிடுவதும் என் மனதை வெகுவாகக் கவர்ந்தது. நாட்கள் செல்லச் செல்ல அவர்களுடைய சிந்தனை முறைக்கும் என்னுடைய சிந்தனை முறைக்குமே அடிப்படையான வேறுபாடு இருப்பதாக உணரத் துவங்கினேன்.

Tsunami என்னைப் பொறுத்தவரை நான் இம்மக்களுக்காகச் சேவை செய்ய வந்திருக்கிறேன். வந்த பிறகு இன்னும் அதிகமாக ஏழை எளிய மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்கிற உணர்வு அதிகரித்துள்ளது. அப்படிச் சேவை செய்வதன் மூலம் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒருவித உணர்ச்சிகரமான மன நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. ஆனால் இந்த வாலிபர் சங்கத்தினர் எந்த வருமானமும் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இம்மக்களுக்கு உதவி செய்வது தமது கடமையல்லவா என்கிற ஆழ்ந்த புரிதலோடு வேலை செய்கிறார்கள். சேவை செய்கிறோம் என்கிற நினைப்பே இவர்களுக்கு இல்லை. அப்படி ஒரு மனநிலையை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. ரொம்பக் கட்டுக்கோப்பான வேலைமுறை அவர்களிடம் இல்லை என்கிற விமர்சனம் அவர்கள் மீது எனக்கு உண்டு என்றபோதும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் மறக்கமுடியாதது.

ஆரம்பத்தில் என்னை அவர்கள் ‘தோழர்’ என்று அழைத்த போது அது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஜனவரி 7ஆம் தேதி நான் அவர்களை விட்டுப் பிரிந்தபோது எல்லோரும் என்னை தோழர் என்று அழைக்க மாட்டார்களா என்கிற ஏக்கமே உருவாகிவிட்டது” என்று எழுதுகிறார் திருமதி பாகி. இவர் பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர்.

பார்த்தவர்கள் சொன்னது இப்படி ஏராளமாக இருக்கிறது. வாலிபர் சங்கம் செய்யும் அர்ப்பணிப்பு மிக்க பணிகளை நேரில் பார்த்த பிறகு கோல்கேட், ட்ரான்ஸ்வோல்ட் கார்ப்பொரேஷன், திருமலை கெமிக்கல்ஸ், டி.ஐ சைக்கிள்ஸ், டாட்டாஸ்(!), மூரா சன்ஸ், TCL அப்புறம் முதலாளிகள் கூட்டமைப்பான CIIF(!) உட்பட பல நிறுவனங்கள் தங்கள் அதிகாரிகளையும் நிவாரணப் பொருட்களையும் நேராக வாலிபர் சங்க முகாம்களுக்கே அனுப்பத் தொடங்கின. “நிவாரணப் பொருட்கள் ஒழுங்காக பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர வேண்டுமென்றால் அதை வாலிபர் சங்கத்திடம் ஒப்படைத்திடு செல்லக்கண்ணு” என்பது அந்த நாட்களில் உலவிய சொலவடையாகும்.

பெரிய பெரிய கம்பெனிகளின் அதிகாரிகள் எல்லாம் மாதத்துக்கு 40000 ரூபாய் 50000 ரூபாய் சம்பளம் வாங்கக் கூடியவர்கள் தினசரி ராத்திரி வாலிபர் சங்க முகாம்களில் நடைபெறும் பரிசீலனைக் கூட்டங்களில் படிப்புக்கம்மியான வேலையும் இல்லாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த நமது வாலிபர் சங்கப் பொறுப்பாளர்களின் தலைமையின் கீழ் பாயில் வட்டமாக உட்கார்ந்து (ரொம்ப சிரமப்பட்டுத்தான் அவர்களால் உட்கார முடிந்தது சேரில் உட்காருங்க என்று நாம் சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை) சொல்லுங்க தோழர் என்றதும் பொறுப்பாக நமக்குப் பதில் சொல்லிக் கொண்டும் நமது தோழர்களின் (பையன்களின்) விமர்சனங்களை அமைதியாகக் கேட்டுக்கொண்டும் பணியாற்றிய காட்சி அடடா- இதெல்லாம் வாலிபர் சங்கத் தோழர்களுக்கே முற்றிலும் புதிய அனுபவங்களாகும். ஆனால் திறமையாக வாலிபர் சங்கத் தோழர்கள் தலைமை தாங்கினார்கள்-இந்த முதலாளிகளையும் சேர்த்து.

முந்தைய அத்தியாயம்அடுத்த அத்தியாயம்

- ச. தமிழ்ச்செல்வன்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com