Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Inmai
Inmai
பிப்ரவரி 2008

வெள்ளிக்கிழமை
ஷோபா சக்தி

லுரெஸ்ரா தியேட்டரில் நடக்கவிருக்கும் அன்னா கரீனினா நாடகத்துக்குத் தோழர் சாம்ஸனுடன் சேர்ந்து போவதற்காக நான் லா சப்பல் மெத்ரோ நிலையத்துக்குள் தோழர் சாம்ஸனுக்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தேன். இப்பொழுது நேரம் மாலை 4. 40. இன்னும் இருபது நிமிடங்களில் நாடகம் தொடங்கிவிடும். இனி சாம்ஸன் வந்தாலும் இங்கிருந்து அடுத்த மெத்ரோ பிடித்து நாடக அரங்கிற்குப் போவதற்கிடையில் நாடகம் தொடங்கிவிடும். நாடகம் தொடங்கியதற்குப் பின்பு உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். இந்த வெள்ளிக்கிழமை விட்டால் இனி அடுத்த வெள்ளிக்கிழமை தான் மறுபடியும் அன்னா கரீனினா நாடகம் நடக்கும். எனக்கு எரிச்சலாய்க் கிடந்தது. தாமதமாய் வந்தததற்காக நிச்சயமாக சாம்ஸன் அய்ந்து சதத்திற்குப் பெறுமதியில்லாத ஒரு காரணம் வைத்திருப்பார். அன்னா கரீனினா நாடகத்தைத் தவறவிட்டாலும் வரத் தாமதித்திற்கான காரணத்தைச் சொல்லி சாம்ஸன் போடும் நாடகத்தை இன்று நான் பார்க்கலாம்.

அவர் ஒரு பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். சஞ்சல புத்தி உள்ளவர். கடவுள் நம்பிக்கையற்றவர். ஆரம்பத்தலிருந்தே மத மறுப்பு மற்றும் அவநம்பிக்கையால் பீடிக்கப்பட்டவர். முன்னொரு காலத்தில் மதம், சட்டம், அறநெறி ஆகியவற்றில் தோய்ந்து போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அதற்காக அடி வாங்கினார்கள். வேதனைகளை அனுபவித்தார்கள். இதன் மூலம் சிந்திப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றார்கள். சுதந்திரச் சிந்தனையாளர்களாக வளர்ந்தார்கள். ஆனால் இப்பொழுது சுதந்திரச் சிந்தனையாளர்களில் புதிய ரகம் ஒன்று உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு மறுப்பு ஒன்றுதான் தெரியும்.

அவருக்கு செவ்வியல், இலக்கியம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி எதுவும் தெரியாது. அவர் வெறுமனே மறுப்பு இலக்கியங்களை மட்டுமே படித்திருக்கிறார்' என்று அன்னா கரினீனா நாவலில் கொலெனிஸஷே ஓவியர் மிஹாய்லோவைப் பற்றிச் சொல்வார். இவ்வளவும் அப்படியே சாம்ஸனுக்கும் பொருந்தும். ஓவியர் மிஹாய்லோ என்பதற்குப் பதிலாக ரெலோ சாம்ஸன் என்று போட்டு எழுத வேண்டும்.

நேரம் அய்ந்தேகால் ஆகிவிட்டது. இந்த நேரம் நாடகத்தில் ஆப்லான்ஸ்கிக்கும் அவனது மனைவி தார்யா அலக்ஸாண்டரோவ்னாவிற்கும் சண்டை நடந்து கொண்டிருக்கும். சாம்ஸன் இன்னமும் வந்தபாடில்லை. கைத்தொலைபேசி வைத்திருக்கும் பழக்கமும் சாம்ஸனிடம் கிடையாது. அடுத்து வரும் மெத்ரோவைப் பார்த்துவிட்டு அதிலும் சாம்ஸன் வராவிட்டால் அறைக்குத் திரும்பிப் போக வேண்டியதுதான். அடுத்த வெள்ளிக்கிழமை தனியாக நாடகத்திற்குப் போய்விட வேண்டியதுதான்.

மெத்ரோ நிலையத்திற்குள் ஒரு இளம்பெண் வயலின் இசைத்துக்கொண்டிருந்தாள். அவள் ருமேனியா அல்லது ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவளாயிருக்கலாம். அவளின் முன்னால் தரையில் விரித்திருந்த துணியில் கணிசமான ஈரோ நாணயங்கள் கிடந்தன. அவளைக் கடந்து சென்ற பயணிகளில் சிலர் ஓரிரு நிமிடங்கள் நின்று அவளின் இசையைக் கவனித்துவிட்டு அவளின் முன்னால் நாணயங்களை வீசிவிட்டுப் போனார்கள். அவளின் வயலின் வாசிப்பு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாயில்லை. அவள் நாணயங்களை வீசுபவர்களுக்கு நன்றி சொல்லத் தனது உடலை முன்னால் வளைத்த ஒவ்வொரு தருணங்களிலும் வயலின் இசை அறுந்துகொண்டிருந்தது.

லா சப்பலுக்கு மேலாகச் செல்லும் பாலத்தில் மெத்ரோ நிலையம் அமைந்திருந்தது. நான் சலிப்புடன் கண்களை வெளியே எறிந்தபோது கீழே நல்லுர் திருவிழாக் கூட்டமாய்த் தமிழர்களின் தலைகள் அலைந்துகொண்டிருப்பது தெரிந்தது. லா சப்பல் மெத்ரோ நிலையத்தை ஒட்டி இரண்டு கிலோமீற்றர்கள் சுற்றளவில் தமிழர்களின் கடைத்தெரு விரிந்து கிடக்கிறது. மங்கை மளிகை, சரவணபவன் உணவகம், மாமா மீன்கடை, படையப்பா சலூன், மோகன் நகைமாடம், பராசக்தி சினிமா, செம்பருத்தி புக்கடை, விஜய் கூல்பார், வேலும் மயிலும் ஸ்டோர், அறிவாலயம் புத்தகசாலைஇ, அசின் அழகு நிலையம், குருஜி சோதிட மையம், தமிழருவி, சுவையருவி என கடைத்தெரு களைகட்டிக் கிடந்தது.

ஒரு வீடியோக் கடையின் முன்புறத்தில் கார்த்திகைப் புவும் கையுமாக பிரபாகரன் நின்றிருக்கும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. சாலையோரத் தடுப்புகளில் இளைஞர்கள் ஏறிக் குந்தியிருந்தார்கள். முதன் முதலாகப் பாரிஸுக்கு வரும் ஒருவனை நேரே கொண்டுவந்து லா சப்பலில் இறக்கினால் அவன் ஏஜென்ஸிக்காரன் தன்னை ஏமாற்றி மறுபடியும் வன்னியிலோ மன்னாரிலோ கொண்டுவந்து கைவிட்டிருப்பதாகத்தான் நினைப்பான் என்று முன்பொரு சிறுகதையில் லா சப்பலைக் குறித்து நான் எழுதியிருப்பேன்.

இந்த மெத்ரோவிலும் தோழர் சாம்ஸன் வரவில்லை. நான் சோர்வோடு எழுந்திருந்தபோது வந்து நின்றிருந்த மெத்ரோவுக்குள்ளிருந்து ஒரு அழுக்கு மனிதர் மெல்ல இறங்கினார். அவரின் கறுத்த நெற்றியில் பட்டையாகப் புசப்பட்டிருந்த விபூதியும் குங்குமமும் அவரின் இரு கைகளிலுமிருந்த இரண்டு பெரிய அழுக்குப் பயணப் பைகளும் அவரிடம் என் கவனத்தைக் குவித்தன. அவருக்கு நாற்பத்தைந்து அல்லது அய்ம்பது வயதிருக்கலாம். அந்த மனிதர் நாலரை அடி உயரம் தானிருப்பார். பஞ்சத்தில் அடிபட்டவரைப்போல அவரின் உடல் நைந்திருந்தது. இந்தக் கோடைகாலத்திலும் முழங்கால்களைத் தொடும் ஒரு அழுக்குக் குளிரங்கியை அவர் அணிந்திருந்தார். அவர் நடைபழகும் ஒரு குழந்தையைப் போலத் தட்டுத் தடுமாறிக் காலடிகளை வைத்து நடந்துகொண்டிருந்தார்.

அவரின் கைகளிலிருந்த பைகளை மிகுந்த சிரமத்துடன் அவர் இழுத்துப் பறித்துத் தன்னோடு எடுத்துச் சென்றார். நான் எதற்கென்று தெரியாமலேயே அந்த மனிதரைப் பின்தொடரலானேன். அந்த மனிதர் வயலின் வாசிக்கும் பெண்ணைக் கடந்தபோது அந்தப் பெண் அந்த மனிதரைப் பார்த்துப் புன்னகைத்தாள். நான் அந்தப் பெண்ணிற்கு அன்னாÕ என்று பெயரிட்டேன். அந்த மனிதர் மெத்ரோ நிலையத்தின் படிகளில் அடிமேல் அடிவைத்து இறங்கி லா சப்பல் கடைத் தெருவிற்குள் நுழைந்தார். அவரின் பின்னாலேயே போய்க்கொண்டிருந்த நான் அந்த மனிதருக்கு வெள்ளிக்கிழமை என்று பெயரிட்டேன்.

மெத்ரோவிலிருந்து இறங்கிக் கடைத்தெருவிற்குள் நுழையும் எவரும் ஷாலினி அங்காடியைக் கடந்துதான் போகவேண்டும். அந்தக் கடையின் முன்னால் வெள்ளிக்கிழமை போய் நின்றார். தனது கையிலிருந்த பைகளை ஓரமாக வைத்துவிட்டு வெள்ளிக்கிழமை தெருவில் நின்று போவோர் வருவோரைக் கவனிக்கத் தொடங்கினார்.

முதலில் முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனைத் தேர்வு செய்து வெள்ளிக்கிழமை அவனைக் கூப்பிட்டு வணக்கம் சொன்னார். அந்த இளைஞன் நின்றபோது வெள்ளிக்கிழமை அவனிடம் மெல்லிய குரலில் Ôதம்பி சாப்பிடக் காசு ஏதாவது தருவீங்களோ ரெண்டு நாளாய் சாப்பிடயில்லை என்று தன் வழுக்கைத் தலையைத் தடவினார். அந்த இளைஞன் வெள்ளிக்கிழமையை உற்றுப் பார்த்தான். வெள்ளிக்கிழமையிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமைக்கு வாயில் ஒன்றிரண்டு பற்கள்தான் எஞ்சியிருந்தன. அவரின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. கண்கள் அரை மயக்கத்தில் கிடந்தன.

அந்த இளைஞன் புன்னகைத்துக்கொண்டே எதுக்குத் தண்ணியடிக்கவா காசு? என்று கேட்டான்.

இல்ல நான் குடிக்கிறதில்ல பசிக்குது ஒரு ரெண்டு ஈரோ தாருங்கோ இடியப்பம் சாப்பிடலாம்.

சரி என்னோட வாங்க சாப்பாடு வாங்கித்தாறன்.

இல்ல நீங்க காசு தாங்கோ நான் பிறகு சாப்பிடுவன் என்று தலையைக் குனிந்தவாறே வெள்ளிக்கிழமை முணுமுணுத்தார். அந்த இளைஞன் புன்னகைத்தவாறே நீங்கள் குடிக்கத்தான் காசு கேக்கிறியள் என்று சொல்லிக்கொண்டே தனது காற்சட்டைப்பையைத் துளாவிச் சில சில்லறை நாணயங்களை எடுத்து வெள்ளிக்கிழமையிடம் கொடுத்துவிட்டுப் போனான்.

இப்போது வெள்ளிக்கிழமையின் முகம் ஒளிர்ந்தது. அவர் அந்தச் சில்லறை நாணயங்களை எண்ணியபோது மூன்று ஈரோக்களும் முப்பது சென்ரிமுகளும் தேறின. வெள்ளிக்கிழமை அந்த நாணயங்களைக் கைகளிற்குள் போட்டுக் குலுக்கியவாறே ஷாலினி கடைக்குள் நுழைந்தார். வெள்ளிக்கிழமையை உற்றுப்பார்த்த கடைக்காரர் Ôவைன் போத்தல் அங்கேயிருக்கு என்று ஒரு மூலையை நோக்கிக் கையைக் காட்டினார்.

கடைக்காரரின் குரலைக்கேட்டுச் சடாரெனத் திரும்பிய வெள்ளிக்கிழமை ஆங்காரத்துடன் தனது இடுப்பில் கைகைளை வைத்துக்கொண்டு உம்மிட்ட குத்துவிளக்கு இருக்கோ என்று கேட்டார். கடைக்காரர் வெள்ளிக்கிழமையை மேலும் கீழுமாகப் பார்த்துக்கொண்டே எழுந்து வந்து ஒரு சிறிய குத்துவிளக்கை கைகளில் எடுத்துக் காட்டினார்.

‘சே கொம்மியான்?’ என்று வெள்ளிக்கிழமை கேட்டார்.

கடைக்காரர் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே ‘பத்து ஈரோ’ என்றார்.

‘குறைக்கமாட்டியளோ?’

‘இஞ்ச ஒரே விலைதான்’

இந்தக் குத்துவிளக்கை மார்கடேயில நாலு ஈரோவுக்கு விக்கினம்’

‘உம்மட்ட அய்ஞ்சு ஈரோப்படி வேண்டுறன் ஒரு நுறு குத்துவிளக்குக் கொண்டுவாரும்’ என்று சொல்லிக்கொண்டே கடைக்காரர் குத்துவிளக்கை எடுத்த இடத்தில் வைத்தார்.

வெள்ளிக்கிழமை அந்தக் கடையில் ஒரு கற்புரமும் ஒரு பெட்டி ஊதுபத்தியும் ஒரு எண்ணைப் போத்தலும் வாங்கிக்கொண்டு எண்ணி மூன்று ஈரோக்கள் இருபது சென்ரிம்களைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு ‘குத்துவிளக்கை வைச்சிருங்கோ கொஞ்சம் செல்ல வாறன்’ என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தவர் திரும்பவும் உள்ளே ஓடிப்போய் ‘எத்தினை மணிக்கு கடையைப் புட்டுவிங்க?’ என்று கடைக்காரரிடம் கேட்டார். கடைக்காரர் புன்னகைத்துக்கொண்டே ‘பத்து மணிக்குத்தான் புட்டுவன் நீர் ஆறுதலாய் வாரும்’ என்றார்.

வாங்கி வந்த பொருட்களைப் தெருவேராமாயிருந்த தனது பைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு வெள்ளிக்கிழமை ஷாலினி கடையின் முன்னால் நின்று மீண்டும் தெருவில் போவோர் வருவோரைக் கவனிக்கத் தொடங்கினார். இப்போது குத்துவிளக்கு வாங்குவதற்கு வெள்ளிக்கிழமைக்கு பத்து ஈரோக்கள் தேவை. கையில் முருங்கைக்காயும் பையுமாக வந்த பச்சை சேர்ட் அணிந்திருந்த ஒரு நடுத்தர வயதானவரை நெருங்கிய வெள்ளிக்கிழமை ‘வணக்கம்’ என்றார். திடுக்குற்றுப்போன பச்சைச் சேர்ட் ஓரடி துள்ளிப் பாய்ந்து வெள்ளிக்கிழமையை விலக்கிப்போக அவர் பின்னாலேயே போன வெள்ளிக்கிழமை ‘வணக்கம் பாருங்கோ’ என்றார்.

பச்சை சேர்ட் நடையை வேகமாய் போடப் பின்னாலேயே துரத்திக்கொண்டுபோன வெள்ளிக்கிழமை ‘கூப்பிடறது கேக்கலையே’ என்று குரலை உயர்த்தவும் பச்சைச் சேர்ட் கொஞ்சம் நடையின் வேகத்தைக் குறைத்தார். அவரை நெருங்கிய வெள்ளிக்கிழமை ‘உடுப்புத் தோய்க்கக் காசில்லை ஒரு அய்ஞ்சு ஈரோ வேணூம்’ என்றார். பச்சைச் சேர்ட் உணர்ச்சியே இல்லாத கண்களால் வெள்ளிக்கிழமையைப் பார்த்துவிட்டு மறுபடியும் வேகமாக நடக்கத் தொடங்கினார்.

இப்போது வெள்ளிக்கிழமை தனக்குத்தானே பேசிக்கொண்டு வீதியில் நின்றார். ஒரு முதியவரிடமிருந்து ஒரு ஈரோவும் ஒரு கோட்சுட் மனிதரிடமிருந்து அய்ம்பது சென்ரிமும் வெள்ளிக்கிழமைக்குக் கிடைத்தன. இருபது வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞனைக் கண்டபோது வெள்ளிக்கிழமை அவனிடம் ‘தம்பி நான் சார்சலில இருக்கிறானான். போறதுக்கு ரெயின் ரிக்கட் எடுக்கக் காசில்லை நாலு ஈரோ உங்களிட்ட இருக்குமா?’ என்று கேட்டார். அந்த இளைஞன் எடுத்த எடுப்பிலேயே ‘இந்தா உங்களை மாதிரி ஆக்களாலதான் தமிழன்ர மரியாதை போகுது’ என்று சொல்லிவிட்டு வெள்ளிக்கிழமையை முறைத்தான். அதைக் கேட்டதும் வெள்ளிக்கிழமைக்குக் கோபம் உச்சியிலடித்தது. வெள்ளிக்கிழமை கண்களைத் தாழத்தியவாறே ‘காசு தர விருப்பமில்லாட்டி வாயைப் பொத்திக்கொண்டு போ! தேவையில்லாக் கதை வேண்டாம்’ என்றார்.

இளைஞன் உதட்டைக் கடித்துக் கைகயைத் துக்கிக்கொண்டு வெள்ளிக்கிழமைகயை அடிக்க வந்தபோது வெள்ளிக்கிழமை இரண்டடி பின்வாங்கி த்து த்துவென்று அந்த இளைஞனை நோக்கி எச்சில் துப்பினார். அந்த எச்சில் துளிகள் அந்த இளைஞனின் சட்டையில் பட்டதும் அவன் ஆடாமல் அசையாமல் ஒரு நிமிடம் அப்படியே நின்று குனிந்து தனது சட்டையில் தெறித்திருந்த எச்சிற் துளிகளைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பேசாமல் தன் வழியில் போனான்.

இதற்குப் பின்பு பொடியளிடம் காசு கேட்பதை வெள்ளிக்கிழமை தவிர்த்துக்கொண்டார். கைவண்டியில் குழந்தையை வைத்துத் தள்ளிக் கொண்டுவந்த மனிதனைக் கண்ட வெள்ளிக்கிழமை அந்த மனிதனிடம் ‘மருந்து வாங்க வேண்டும்’ என்று பணம் கேட்டார். அந்த மனிதன் கொஞ்ச நேரம் நின்று வெள்ளிக்கிழமையை மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நீர் சிலோனில எவ்விடம்’ என்று கேட்டான்.

‘யாழ்ப்பாணம்’

‘யாழ்ப்பாணமெண்டால்?’

‘யாழ்ப்பாணம்தான்’

அந்த மனிதன் புன்னகைத்தவாறே இரண்டு ஈரோ நாணயத்தைத் தனது குழந்தையிடம் கொடுத்து அதை வெள்ளிக்கிழமையிடம் கொடுக்கச் சொன்னான். குழந்தையிடமிருந்து நாணயத்தை வாங்கிய வெள்ளிக்கிழமை ‘அண்ணே எங்கயாவது வேலை வந்தாச் சொல்லுங்கோ’ என்று கைகளைப் பிசைந்தவாறே அந்த மனிதனிடம் சொன்னார்.

வெள்ளிக்கிழமை அய்ந்து பேரிடம் காசு கேட்டால் அவர்களில் ஒருவராவது காசு கொடுத்தார். மாலை ஏழுமணியளவில் வெள்ளிக்கிழமையின் கைகளில் பத்து ஈரோக்கள் சேர்ந்துவிட்டன. வெள்ளிக்கிழமை ஷாலினி கடையினுள் நுழைந்து கடைக்காரரின் மேசையில் சில்லறைகளைப் பரப்பிவிட்டு கடைக்காரரை மிதப்பாகப் பார்த்து 'பொருளை எடுங்கோ' என்றார். கடைக்காரர் மிக நிதானமாக வெள்ளிக்கிழமையின் சில்லறைகளை எண்ணிப் பார்த்துவிட்டுக் குத்துவிளக்கை ஒரு பையில் போட்டு வெள்ளிக்கிழமையிடம் கொடுத்தார். வெளியே வந்த வெள்ளிக்கிழமை குத்துவிளக்கை எடுத்து உருட்டி உருட்டிச் சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு அதைத் தனது பைக்குள் வைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார்.

இப்போது வெள்ளிக்கிழமை லா சப்பல் மெத்ரொ நிலையத்திற்குக் கீழேயுள்ள சிறிய புங்காவிற்குள் நுழைந்தார். அந்த மாலை நேரத்தில் ஒரு புறமாகச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க மறுபுறத்தில் சில தமிழர்கள் நடுவில் விஸ்கிப் போத்தலை வைத்துவிட்டுச் சுற்றிவரயிருந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலாபத்துறையைச் லங்கா இராணுவம் கைப்பற்றிய செய்தியில் உண்மையிருக்கிறதா இல்லையா என்று சத்தம்போட்டு விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

வெள்ளிக்கிழமை நேராக அங்கிருந்த புச்செடிகளிடம் போய் புக்களைக் கொய்து தனது குளிரங்கியின் பைகளுக்குள் திணிக்கத் தொடங்கினார். விளையாடிக்கொண்டிருந்த ஒரு ஆப்பிரிக்கச் சிறுவன் பந்தை உதைத்தபடியே வெள்ளிக்கிழமையிடம் ஓடிவந்து 'புக்களைப் பறிக்கவேண்டாம்' எனச் சொன்னான். அவன் சொன்னது வெள்ளிக்கிழமைக்குப் புரியவில்லை. அவர் கீழே கிடந்த ஒரு சுள்ளியை எடுத்து 'அலே' என்று உறுக்கி அந்தச் சிறுவனை விரட்டினார். சிறுவன் கண்களில் வியப்பும் அச்சமும் மேலெழப் பந்தை உருட்டிக்கொண்டு திரும்பி ஓடிப்போனான்.

தனது குளிரங்கியின் பைகளை மலர்களால் நிரப்பியதும் வெள்ளிக்கிழமை தனது பயணப் பைகளைச் சுமக்க முடியாமல் சுமந்தபடியே மறுபடியும் மெத்ரோ நிலையத்திற்குள் நுழைந்தார். மெத்ரோ வரும் மேடைக்குப் போவதற்கு ரிக்கட் தேவைப்படும். அந்த ரிக்கட்டைக் கதவில் செருகினால்தான் கதவு திறந்து உள்ளே செல்ல வழிவிடும். வெள்ளிக்கிழமை அந்தக் கதவின் முன்னால் நோட்டம் பார்த்தக்கொண்டு நின்றார். ஒரு பெண்மணி கதவில் ரிக்கட்டைச் செருகிக் கதவைத் திறக்கும்போது அவளை உரசிக்கொண்டே வெள்ளிக்கிழமையும் கதவிற்குள் நுழைந்து கதவு மறுபடியும் மூடாதவாறு கதவிற்குக் காலால் முட்டுக்கொடுத்தபடியே தனது பயணப் பைகளை லாவகமாக உள்ளிளிழுத்துக்கொண்டு ஒவ்வொரு படியாக நின்று நிதானித்து ஏறி மெத்ரோ மேடைக்கு வந்தார்.

அன்னா வயலினில் ‘யெய் சரா சரா’ வாசித்துக்கொண்டிருந்தாள். அந்த மெத்ரோ மேடை நூறு மீற்றர்கள் நீளமும் நான்கு மீற்றர்கள் அகலமும் கொண்டது. இப்போது மேடையில் கூட்டமில்லை. மேடையில் நின்றுகொண்டிருந்த ஏழெட்டுப் பேர்களையும் இரண்டு நிமிடங்களிற்கு ஒருமுறை வந்த மெத்ரோ அள்ளிப் போனது. வெள்ளிக்கிழமை மெத்ரோ மேடையின் ஒரு மூலையில் போய் நின்றார். அங்கே அவரைத் தவிர யாருமில்லை. மேடையின் நடுவில் அன்னா வயலின் இசைத்துக்கொண்டிருந்தாள்.

வெள்ளிக்கிழமை அந்த மூலையில் தனது பயணப் பைகளை வைத்துத் திறந்தார். உள்ளிருந்து ஒரு சட்டமிடப்பட்ட படத்தை எடுத்து அந்த மூலையில் தரையில் நிறுத்திச் சுவரோடு சாய்த்துவைத்தார். தனது குளிரங்கியின் பைகளுக்குள் கைகளை நுழைத்து மலர்களை எடுத்து அந்தப் படங்களிற்கு முன்னால் வைத்தார். பயணப் பையிலிருந்து தேங்காயை எடுத்து மெத்ரோ மேடையின் ஓரத்துக்குச் சென்று மேடையின் விளம்பில் தேங்காயை மோதி ஒரே அடியில் சரிபாதியாக உடைத்தார். உடைத்த தேங்காய்ப் பாதிகளை மூக்கினருகே வைத்து முகர்ந்து பார்த்துவிட்டுத் தலையை ஆட்டியவாறே அவற்றை அந்தப் படத்தின் முன்னால் வைத்தார். பின்பு அங்கிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தவாறே ஒரு அழுக்குத் துணியை எடுத்துக் நீளமாகக் கிழித்துத் தனது தொடையில் வைத்து உருட்டிக் குத்துவிளக்கிற்குத் திரி தயாரித்தார். திரி தயாரானதும் குத்துவிளக்கை வெளியில் எடுத்து அந்தப் படத்திற்கு முன்பாக நிறுத்தி எண்ணையுற்றி எண்ணையில் திரியை வைத்தார்.

குத்துவிளக்கைப் படத்திற்கு வலது புறத்தில் நகர்த்தி வைத்தவர் படத்திற்கு இடதுபுறத்தில் கற்புரத்தை வைத்தார். தனது காற்சட்டைப் பையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்தவர் பாதிப் பழத்தைத் தின்றுவிட்டு மற்றப் பாதியை படத்திற்கு முன்னால் வைத்து அதன்மேல் ஊதுபத்திகளைச் செருகி வைத்தார். சட்டைப் பையிலிருந்து ஒரு சரையை எடுத்துப் பிரித்து அந்தப் படத்திற்குச் சந்தனத்தாலும் குங்குமத்தாலும் அலங்காரம் செய்தார். அந்த வேலைகள் முடிந்ததும் தனது மற்றப் பயணப்பையைத் திறந்த வெள்ளிக்கிழமை அதனுள்ளிருந்து ஒரு பெரிய ரேப்ரெக்கோடரை எடுத்து அதில் எச்சில் உமிழ்ந்து தனது அழுக்குக் குளிரங்கியின் ஓரத்தால் அதனைச் சரசரவென ஓசையெழத் துடைத்து படத்திற்கு முன்னால் வைத்தார். இப்போது அவர் ரேப்ரெக்கோடரைத் தட்டிவிடச் சீர்காழி கோவிந்தாஜனின் குரலில் தேவாரப் பாடலொன்று அந்த மெத்ரோ மேடையில் ஒலிக்கலாயிற்று. மேடையின் நடுவே நின்றிருந்த அன்னாவிற்குத் தேவாரம் கேட்டிருக்க வேண்டும. அவள் வெள்ளிக்கிழமையைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள்.

வெள்ளிக்கிழமை மெத்ரொ மேடையின் விளிம்பிற்குச் சென்று நின்று இடுப்பில் கைகளை ஊன்றியவாறே தலையைச் சாய்த்து தனது ஏற்பாடுகளை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டார். திருப்தியுடன் தலையை அசைத்துக்கொண்டே சட்டைப் பையிலிருந்து லைட்டரை எடுத்துக் குத்துவிளக்கை ஏற்றினார். ஊதுபத்தியையும் பின்பு கற்புரத்தையும் கொழுத்திவிட்டுக் கைகளைத் தலையில் குவித்து அந்தப் படத்தைப் பார்த்துக் கும்பிட்டார். பின்பு அப்போது நிலையத்திற்குள் நுழைந்துகொண்டிருந்து மெத்ரோவின் முன்னால் மேடையிலிருந்து குதித்தார். 'சக்' என்று வெள்ளிக்கிழமையில் மெத்ரோ மோதிய சத்தம் அன்னாவிற்குக் கேட்டது.

அடுத்த இரண்டு நிமிடங்களில் பொலிஸார் வந்து அன்னாவை விசாரித்தபோது மெத்ரோ மேடையில் குத்துவிளக்கு, தேங்காய், ஊதுபத்திகளிற்குப் பின்னாலிருந்த புகைப்படத்தில் காணப்படும் மனிதர்தான் மெத்ரோவின் முன்னால் குதித்தவர் என்று அன்னா சாட்சியம் சொன்னாள். சொல்லிவிட்டுத் தனது வாயை இருகைகளாலும் மூடிக்கொண்டிருந்தவள் கைகளை விலக்கி அந்தப் புகைப்படத்தைக் காட்டி 'இது பத்து அல்லது பதினைந்து வருடங்களிற்கு முன்பு எடுக்கப்பட்ட படமாயிருக்கலாம' என்றாள்.

அந்த இரக்கத்துக்குரிய மனிதர் மெத்ரோவின் முன்னால் விழுந்து தற்கொலை செய்ததற்கு அடுத்த வெள்ளிக்கிழமை லா சப்பல் மெத்ரோவில் நான் தோழர் சாம்ஸனைச் சந்தித்தேன். இன்று சாம்ஸன் நான்கு மணிக்கே வந்து மெத்ரோவில் உட்கார்ந்திருந்தார். அன்னா கரீனினா நாடகம் தொடங்குவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. நானும் சாம்ஸனும் மெத்ரோ நிலையத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தபோது நான் எனது கையில் வைத்திருந்த தாள்களைச் சாம்ஸனிடம் கொடுத்து ‘வாசிச்சுப் பாருங்கோ’ என்றேன்.

ஆர்வத்துடன் தாள்களை வாங்கிய சாம்ஸனிடம் ‘அந்த மனுசன் மெத்ரோவுக்கு முன்னால குதிச்ச இரவு முழுக்க எனக்குத் துண்டற நித்திரையில்லை. இரவிரவா முழிச்சிருந்து இந்தக் கதையை எழுதினான்; என்றேன். அந்தக் கதையின் தலைப்பு வெள்ளிக்கிழமை.

சாம்ஸன் கதையைப் படிக்கப் படிக்க நான் அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சாம்ஸனின் உதடுகளில் புன்னகை கீற அவர் வேகமாகப் படித்துக்கொண்டிருந்தார். படித்து முடித்தபோது அவரின் உதட்டிலிருந்த புன்னகை ஒரு எள்ளல் சிரிப்பாக மாறி என்னை வதைக்கத் தொடங்கியது. சாம்ஸன் கையிலிருந்த தாள்களை என்னிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அவற்றைச் சுருட்டித் தனது இடது கையில் பிடித்துத் தனது தலைக்கு மேலே உயர்த்தியவாறே எழுந்திருந்தார். நானும் அவருடன் கூட எழுந்து நின்றேன்.

சாம்ஸன் திடீரென குரோதத்துடன் என்னைப் பார்த்தார். பின்பு ‘நீங்கள் எப்பிடி அந்த மனுசனைக் கொலை செய்ய ஏலும்’ என்று கேட்டார். சாம்ஸன் பேசுவது கணிதச் சுத்திரம் மாதிரியிருக்கும். ஒற்றை வார்த்தைதான் பேசுவார். அதைப் பேசிவிட்டு அவரின் மனதில் இருப்பவற்றையெல்லாம் அந்த ஒற்றை வார்த்தையுடாக நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் எதிர்பார்ப்பார். அவர் நினைத்ததை நாம் புரிந்துகொள்ளாவிட்டால் எம்மைக் கொலைக் குற்றவாளிகளைப் போலப் பார்ப்பார்.

நான் மௌனமாக நின்று அந்த மனிதர் தண்டவாளத்தில் விழுந்து இறந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். சாம்ஸன் என் முகத்தைப் பார்த்து ‘வழியில்லாதவன், பிச்சை எடுக்கிறவன், குடிகாரன் சாகத்தான் வேணூமா?' என்று கேட்டார்.

நான் மெதுவாக ‘செத்துத்தானே போனான் அதுவும் என்ர கண்ணூக்கு முன்னால’ என்று சொல்லிவிட்டு என் உள்ளங்கையால் என் நெற்றியில் படாரென அடித்தேன். நான் அந்த மனிதனுக்காக மிகவும் வருந்துகிறேன் என்பதைச் சாம்ஸனுக்கு உணர்த்தத்தான் நான் எனது நெற்றியில் ஓங்கி அடித்திருக்க வேண்டும்.

சாம்ஸன் இப்போது வாய்விட்டுச் சிரித்தார். சிரித்து ஓய்ந்ததும் மறுபடியும் ‘அந்த மனுசனை மெத்ரோவுக்கு முன்னால நீங்கள் எப்படித் தள்ளலாம்?’ என்று கேட்டார். அவரின் உயர்ந்திருந்த இடது கையில் நான் எழுதிய தாள்களிருந்தன.

இன்று முழுவதும் பேசினாலும் இந்த முட்டாள் சாம்ஸன் இதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருப்பார் என்பது தெரிந்தது. நான் மெதுவாக ‘நாடகத்துக்கு நேரமாயிற்று போகலாம்’ என்றேன். போகலாம் என்பது மாதிரித் தலையசைத்த சாம்ஸன் உயர்த்திப்பிடித்த கையுடனேயே நடக்கத் தொடங்கினார். நான் அவரிடமிருந்து தாள்களை வாங்குவதற்காகக் கைகளை நீட்டியபோது சாம்சன் என்னிடமிருந்து சற்று விலகி எனது கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டே ‘அந்த மனுசனைக் கொலை செய்ய உங்களுக்கு எப்பிடி மனம் வந்துது?’ என்று கேட்டுவிட்டுத் தனது கையிலிருந்த தாள்களை மெத்ரோ நிலையத்திற்குள் விசிறியடித்தார்.

அப்போது மெத்ரோ நிலையத்தினுள் சனக் கூட்டமாயிருந்தது. சனங்கள் எனது கதைத் தாள்களை மிதித்துக்கொண்டு நடக்கலானார்கள். நான் சனங்களிடையே புகுந்து எனது கதைத் தாள்களை பொறுக்கத் தொடங்கினேன். பொறுக்கிக்கொண்டிருந்த போது ஒரு மனிதரில் மடாரென மோதி நான் நிமிர்ந்தபோது அங்கே வெள்ளிக்கிழமை அதே அழுக்குக் குளிரங்கியுடன் என் முன்னே நின்றிருந்தார். நான் அவரில் பலமாக மோதியிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தனது மார்பைப் பொத்திப் பிடித்திருந்தார். அவரின் முகத்தில் வலி தெரிந்தது. அவர் முகத்தைச் சுழித்துக்கொண்டே ‘மனுசரில இடிபடாம பார்த்துப் போகவேணூம்’ என்று சொல்லிவிட்டுத் தனது பயணப் பைகளை இழுத்துக்கொண்டு நடந்தார். நான் தாள்களைப் பொறுக்குவதைக் கைவிட்டு அதிர்ந்துபோய் நடந்துபோகும் வெள்ளிக்கிழமையையே பார்த்துக்கொண்டிருந்தேன். வெள்ளிக்கிழமை அன்னாவைக் கடந்தபோது வயலினை உறைக்குள் வைத்துக்கொண்டிருந்த அன்னா வெள்ளிக்கிழமையைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தன் முன்னே தரையில் விரித்திருந்த துணியில் கிடந்த சில்லறை நாணயங்களைப் பொறுக்கத் தொடங்கினாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

http://semmalar.keetru.com/

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP