Keetru Inmai
Inmai
பிப்ரவரி 2008

இந்தியச் சிறைகளில் மனித உரிமைப் போராளிகள்
அ.மார்க்ஸ்

2007 மே 14 அன்று சட்டீஸ்கரில் கைது செய்யப்பட்ட மருத்துவர் டாக்டர் பினாயக் சென் இன்றும் சிறைகளில். சென்ற ஜனவரி 17 அன்று ராய்பூர் மாவட்ட நீதி மன்றம் சென் மற்றும் நாராயண் சன்யால், பியுஸ் குஹா என்னும் இரு மாவோஸிஸ்டுகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. பின்னவர் இருவரும் தடை செய்யப்பட்டுள்ள மாவோயிசப் பொதுவுடமைக் கட்சியினர். டாக்டர் சென் சட்டீஸ்கர் மாநில மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) துணைத் தலைவர். அரசு சாரா நிறுவனம் ஒன்றின் பெயரை வைத்துக் கொண்டு மேற்படி இரு நக்சலைட்டுகளுக்கு இடையில் செய்தி கொண்டு செல்பவராக (Courier) செயல்பட்டார் என்பது சென் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. தேசத்துரோகம், சதி, அரசுக்கு எதிரான யுத்தம் புரிந்தது முதலான குற்றங்கள் (இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவுகள் 124பு, 121, 121பு) சென் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சாதாரண சட்டங்கள் தவிர 1967ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA 1967). 2005ம் ஆண்டு சட்டீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (CSPSA 2005) ஆகிய இரு அசாதாரணச் சட்டங்கள் (Extra- ordinary) அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவேதான் அவரைப் பிணையில் எடுக்க இயலவில்லை.

இந்திய அரசு அது தோன்றிய நாள் முதல் இன்று வரை இது போன்ற சிறப்பு அதிகாரங்களை அளித்துக் கொள்ளும் தடுப்புக் காவல் சட்டங்களின்றிச் செயல்பட்டது இல்லை. இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட அதே ஆண்டிலேயே (1950) முதல் தடுப்புக் காவல் சட்டத்தையும் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் அறிவித்தார். பின் UAPa (1967), மிசா (MISA 1971) பொதுப்பாதுகாப்புச் சட்டம் (PSA 1978), தேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA 1980 இது இன்று வரை அமுலில் உள்ளது), அவசியப் பணிகள் செயல்பாட்டுச் சட்டம் (ESMA 1980 1981), தடா (1985), பொடா (2001)... என தொடர்ந்து இத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகள் பலவற்றை இச்சட்டங்கள் பறித்தன. இதன் மூலம் அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளைச் சட்ட பூர்வமாகவே மேற்கொள்ளக் கூடியவைகளாக அரசுகள் தம்மை அதிகாரப்படுத்திக் கொண்டன.

சட்டபூர்வமான சட்டங்களால் (Regular Law) கட்டுப்படுத்த இயலாத சூழலின் விளைவாக இத்தகைய சட்ட விரோதச் சட்டங்களை இயற்ற வேண்டிய அத்தியாவசியம் (Rational of supreme necesity) உள்ளதாக அரசுகள் வாதிட்டன. இந்தச் சட்டங்களை எதிர்த்து தனிமனிதர்களும் மனித உரிமை அமைப்புகளும் நீதிமன்றங்களுக்குச் சென்ற போது, அவை இத்தகைய அத்தியாவசியம் (Supreme necesity) அரசுக்கு உண்மையிலேயே இருந்ததா என்கிற கேள்விகளுக்குள் செல்லாமல் பாராளுமன்றத்திற்கு இத்தகைய சட்டங்களை இயற்ற அதிகாரமுண்டா இல்லையா (Question of legislative competence) என்பதாகப் பிரச்சினையை மாற்றி, அத்தகைய அதிகாரமுண்டு எனக்கூறி இத்தகைய சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கின (எ.டு : பி.யூ.சி,எல் வி இந்திய அரசு ரிட் மனு 129/2002).

பொது ஒழுங்கு கெட்டுவிட்டது, தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து, அரசுடன் போர்ப்பிரகடனம், அரசுக்கு எதிராகச் சதி, பயங்கரவாதம் ஆகிய காரணங்களைச் சொல்லி இத்தகைய சட்ட விரோதச் சட்டங்களுக்கான அத்தியவாசியத்தை அரசுகள் வற்புறுத்தியதை நீதிமன்றங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டன. அரசின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் இவ்வாறு விரிவுபடுத்தின. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அரசு தனது அவசிய அதிகாரம் (Necessary Power) என எதைக் கருதுகிறதோ அதை ஏற்று உண்மையிலேயே அரசியல் சட்டத்தால் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறுவதற்கு நீதிமன்றம் உதவி செய்தது ஏற்பு வழங்கியது.

இத்தகைய ஏற்பு வழங்குவது மூலம் அசாதாரணச் சட்டங்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் அளிப்பது மட்டுமின்றி, இத்தகைய அசாதாரணச் சூழல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை (measures) அரசு நிர்வாகம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளில் அரசு மேற்கொள்கிற சட்ட விரோத நடவடிக்கைகளும் அடங்கம். சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள அரசே நிறுவியுள்ள ஆயுதம் தாங்கிய கூலிப்படையாகிய சல்வா ஜூடும் (பார்க்க : எனது உலகமயத்திற்குப் பின் இந்தியா) தொடங்கி கைது செய்யப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்படும் போதைப் பகுப்பாய்வு (Narco - analysis) எனும் மெய்யறிவும் சோதனை உட்பட அடக்கம்.

கடும் எதிர்ப்புகளின் விளைவாக தடா, பொடா முதலான சட்டங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும், அல்லது அதன் காலக்கெடு முடிந்தவுடன் மறுபடி நீடிக்காமல் விடப்பட்ட போதிலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம், (NSA) அவசிய பணிகள் செயல்பாட்டுச் சட்டம் (ESMA), சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) முதலியன தொடர்ந்து அமுலில் உள்ளன. தற்போது ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ல் பதவி ஏற்றவுடன் முன்பே அறிவித்தபடி பொடா சட்டத்தை அது நீக்கிக் கொண்டது. ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே இருந்து வந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, பொடா சட்டத்தின் சில மோசமான கூறுகளை அதில் இணைத்து அறிவித்தது. அது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (திருத்தப்பட்டது) 2004 என்றழைக்கப்படுகிறது. தற்போது அமுலில் உள்ள அச்சட்டத்தைப் பயன்படுத்தியே இன்று பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகள் மட்டுமின்றி இதர பல அரசியல் கைதிகளும், மாவோயிஸ்டுகளும் கைது செய்யப்படுகின்றனர். இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இன்று மெதுவாக மேலெழத் தொடங்கியுள்ளது.

இந்தச் சட்டங்கள் தவிர கொடூரமான பிரிவுகளை உள்ளடக்கிய இதுபோன்ற அசாதாரணச் சட்டங்கள் மாநில அளவில் இயற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிடிவாதமாக நடைமுறைப் படுத்தப்படும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் (AFPSA) 1958, அமைப்பு ரீதியான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் மஹாராஷ்டிரச் சட்டம் (MCOCA), சட்டீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (CSPSA)" முதலியன இவ்வகையில் அடக்கம். அமைப்பு ரீதியான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் கோகா (COCA) சட்டம் இப்போது மாநில வாரியாக இயற்றப்படக் கூடிய நிலை உள்ளது. பினாயக் சென் மீது இந்த மாநில அளவிலான (CSPSA) சட்டமும் பாய்ந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி சட்டீஸ்கர் அரசு எந்த இயக்கத்தையும் சட்ட விரோதமானது என அறிவிக்க முடியும். ஆயுதப் படையில் அந்த இயக்க உறுப்பினர்களை மூன்று ஆண்டுகள் வரை காவலில் வைக்கலாம். எந்தப் பேச்சையும், பொதுக்கூட்டத்தையும் சட்ட விரோதம் என அறிவித்து ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். இவ்வாறு அமைப்பு ரீதியாகத் திரள்வது, பேச்சுரிமை முதலான அடிப்படை அரசியல் சட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே பினாயக் சென்னுக்குக் பிணை மறுக்கப்பட்டது.

இத்தகைய சட்ட விரோத அசாதாரணச் சட்டங்கள் குறித்து இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். இந்தச் சட்டங்கள் காலாவதியான பின்னும்கூட தொடர்ந்து செயல்படும் உரிமைகளை (Norm of Continuity) தன்னகத்தே கொண்டுள்ளன. தடா சட்டத்தின் s1(4) மற்றும் பொடாவின் s(16) பிரிவுகளின்படி, தண்டனை, சட்டக் கடப்பாடு (liabitity), உரிமைகள் (rights & Privileges) ஆகியவற்றோடு இந்தச் சட்டத்தின்படி தொடங்கப்பட்ட புலனாய்வுகள், வழக்கு நடவடிக்கைகள் ஆகிய இச்சட்டம் காலாவதியான பின்னும் கூட காலாவதி ஆகாதது போலவே கருதித் தொடரப்படும். எனவே ஒரு முறை தடா, பொடாவில் சிக்கியவர்களுக்கு அச்சட்டம் நீக்கப்பட்டாலும்கூட எந்தப் பயனும் இல்லை. தவிரவும் அதே வழக்கில் தொடர்புடையவர்கள் என யாரை வேண்டுமானாலும், சட்டம் காலாவதியான பின்னும் கூட எப்போது வேண்டுமானாலும் இணைத்து இச்சட்டத்திற்குள் கொண்டு வர இயலும். ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு : சென்ற செப்டம்பரில் (2007) தேனி, போடி, வருசநாடு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் சிலர்கைது செய்யப்பட்டனர். சுமார் 14 பேர் இன்று இந்த அடிப்படையில் சிறைகளிலுள்ளனர். இவர்களில் முக்கியமானவராகப் போலீஸ் தரப்பில் கூறப்படுபவர் சுந்தரமூர்த்தி.

தர்மபுரி மாவட்டத்தில் 1992ம் ஆண்டு ஒரு பாலத்திற்கு வெடிகுண்டு வைத்ததாக தடா வழக்கொன்று அவர் மீது சென்னை தடா நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ளது. எனவே இவர் தடா நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளி (Proclaimed Offender). இன்று இவர் கைதானவுடன் அவர் தடா வழக்குக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். முன் குறிப்பிட்ட பிரிவுகளின் படி இந்நிலை அவருக்கு ஏற்படுகிறது. ஆனால் இன்று கைதாகியுள்ள மன்மதராசா (35), ரத்தினவேலு (38), பெருமாள் (33), திருப்பதி (36) ஆகிய நால்வர் மீது இதுவரை எந்தத் தடா வழக்குமில்லை. தடா காலாவதியாகி இன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும் இந்த நால்வரும் முன்குறிப்பிட்ட சுந்தரமூர்த்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் கூறப்பட்டு அவர்கள் இன்று தடா சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். 1985 முதல் 1995 வரை உயிருடனிருந்த தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 76,000 பேர்களில் 1.5 சதத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை மட்டுமே காவல்துறையால் நிரூபிக்க முடிந்ததது. மீதியுள்ள 98.5 சதத்தினரும் பிணையில் விடுதலையின்றிப் பல ஆண்டுகள் சிறையிலேயே கழிக்க நேர்ந்தது. அதே நிலைமை இன்று இந்த நால்வருக்கும் ஏற்பட்டுள்ளது.

பினாயக் சென் கதைக்குத் திரும்புவோம். வேலூரிலுள்ள மருத்துவக் கல்லூரியில் 1970ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற சென், சட்டீஸ்கார் பழங்குடி மக்கள் மத்தியில் மருத்துவப் பணி ஆற்றியவர். மாற்று மருத்துவம், நீரிழப்பு, காசம், மலேரியா, தொழுநோய் முதலானவற்றிற்கு எளிய மருத்துவங்களைச் செய்தல், வறுமையின் விளைவான நோய்களை எதிர்கொள்ளல் எனப் பணி செய்து வந்தவர். பி.யு.சி.எல் அமைப்பில் செயல்பட்ட அவர் சட்டீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்துப் போராடினார். வழக்குத் தொடர்ந்தார். பஸ்தார் மாவட்டத்தில் ஏழு பழங்குடியினர் கொல்லப்பட்ட பிரச்சினையை அவர் முன்னெடுத்தது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக இருந்தது. விளைவு : எந்த சட்ட விரோத தடுப்புச் சட்டத்தை அவர் எதிர்த்தாரோ அதே சட்டத்தின் கீழ் இன்று அவர் கைது செய்யப்பட்டு பிணையுமின்றி (bail) கடந்த ஏழு மாதங்களாகச் சிறையிலுள்ளார். அமார்த்திய சென், நோம்சோம்ஸ்கி, அருந்ததிராய் முதலானோர் சென் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள்ளனர். முந்தைய மாநில அரசு 60,000 பெண் நல ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை நிறைவேற்றியபோது அந்தக்குழுவில் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்றுச் செயல்பட்டவர் சென் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை வைக்கப்பட்டுள்ள இன்னொருவர் மாவோயிச இதழான பீப்பிள்ஸ் மார்ச் ஆசிரியர் கோவிந்தன்குட்டி. கொச்சின் அருகிலுள்ள ஒரு ஊரிலிருந்து டிசம்பர் 19, 2007 அன்று அவர் கைது செய்யப்பட்டார். குட்டியின் இதழ் வெளிப்படையாக மாவோயிசச் சிந்தனைகளை ஆதரிப்பது. உந்தரகாந்த் பகுதியில் 17 ஆண்டுகள் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வந்த பிரஷான்த் ராஹி டிசம்பர் 2007ல் டெஹ்ராடூனில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட சரியான தேதி குறித்து காவல்துறை பொய் சொல்கிறது. ஹிமாசல் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மென் ஆகிய இதழ்களில் பணியாற்றிய ராஹியை மாவோயிச அமைப்பொன்றின் படைப் பிரிவுத் தலைவர் என அரசு குற்றம் சாட்டியுள்ளது.

கோவிந்தன்குட்டியை முறையான எந்த சட்ட ஆவணமும் இன்றி ஆந்திர மாநில போலீசார் கேரளத்தில் வந்து கைது செய்துள்ளனர். வழக்கம் போல இ.பி.கோ 134, 124பு, 133ய முதலான பிரிவுகள் தவிர UAPA சட்டமும் அவர் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளது. சிறையில் மிக மோசமாக இவர்கள் நடத்தப்படுகின்றனர். வழக்குரைஞருடன் பேசவேண்டுமானால்கூட சிறை அதிகாரிகள் முன்னிலையில் தான் பேச வேண்டும். கைதான நாள் முதல் அவர் சிறையில் உண்ணாவிரதமிருக்கிறார். கட்டாயாமாக அவருக்கு சலைன், குளுகோஸ் முதலியன ஏற்றப்படுகின்றன. பிரஷாந்த் ராஹியைப் பற்றி ஹிமாசல பிரதேஷ் முதல்வர் பி.சி.கந்தூரி, அந்த ஆள் ஒரு பத்திரிக்கையாளன் என்பதெல்லாம் சும்மா. தேசப் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த நபர் அவர் என எடுத்தெறிந்து பேசியுள்ளார். கோவிந்தன்குட்டி குறித்து மிக மோசமான தகவல்களை காவல்துறை பத்திரிக்கைகள் மூலமாக வெளியிட்டது. இவர்களின் கைது குறித்து எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே பத்திரிக்கைகள் செய்தி வெளியாகியிருக்கின்றன. சஞ்சய் தத் பிரச்சினைக்கு பத்திரிக்கைகளில் அளிக்கப்படும் முக்கியத்துவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய விஷயம் இது. இத்தனைக்கும் குட்டியும் ராஹியும் பத்திரிக்கையாளர்கள். சென் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு மக்கள் மருத்துவர்.

சென்ற ஆண்டு இவ்வாறு கைது செய்யப்பட்ட மேலும் இரு மக்கள் பணியாளர்களைப் பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். உத்திரப் பிரதேசத்திலுள்ள மிர்ஸாபூர் பகுதியில் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பெண்கள் மத்தியில் பணியாற்றிக் கொண்டிருந்த ரோமா என்கிற பெண் ஊழியர் ஆகஸ்ட் 2007ல் கைது செய்யப்பட்டார். தேசியப் பாதுகாப்புச் சட்டம் இவர் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர் அமைப்பு என்னும் இயக்கத்தில் பணி செய்து கொண்டிருந்தவர் ரோமா.

பாக்ஸைட் தாதுவைக் கொள்ளையிட முனையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஒரிசாவிலுள்ள காசிபூர் பகுதி மக்கள் போராட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளாகத் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்த ஒரியக் கவிஞரும், இலக்கிய இதழ் ஒன்றில் பணியாற்றியவருமான சரோஜ் மொஹந்தி சென்ற ஜூலை 2007ல் ராயகாடாவில் கைது செய்யப்பட்டார். கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் இவர்கள் மீது போடப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள பேருல், ஹர்தா மற்றும் கந்த்வா மாவட்டங்களில் பழங்குடியினர் மத்தியில் பணி செய்து வந்த ஷ்ரமிக் ஆதிவாசி சங்காதனா மற்றும் சமாஜ்வாதி ஜன்பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த ஷமீம், அனுராக் என்னும் இரு மக்கள் பணியாளர்களுக்கு மாநில பாதுகாப்புச் சட்டத்தின்படி மாவட்ட மாஜிஸ்ட்ரேடால் சென்ற ஜூன் மாதம் Externment Notice வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் யாராலும் கண்டு கொள்ளப்படாத, ஆக ஒதுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் மத்தியில் பணி செய்தவர்கள். தலித்துகள், ஆதிவாசிகள் முதலான அடித்தள மக்களின் மிகவும் அடிப்படையான மனிதத் தேவைகளுக்கான போராட்டங்களில் துணை நின்றவர்கள். அதற்காகவே கடுமையான கண்காணிப்புகள், கைதுகள், சொல்லொனா சித்ரவதைகள், பிணையில் விடுதலை செய்ய இயலாத சட்டங்களின் தாக்குதல்கள், நீண்ட சிறை வாசகங்கள், ஊடகங்களின் வழியான கடுமையான அவதூறுப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை இன்று சந்தித்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவோரை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

உலகமயம் என்ற பெயரில் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டு மக்களின் நில, நீர், கனிமவளங்களை எல்லாம் திறந்துவிடுகிற நடைமுறைகள் அதிகமாகிற போது அமைதி வழியில் சட்டபூர்வமாகப் போராடும் இத்தகைய மனித உரிமைப் போராளிகளும் தமது கொள்கைகளின் அடிப்படையில் சமரசமின்றித் தம் வழியில் நின்று போராடும் மாவோயிஸ்டுகளும் குறி வைத்துக் தாக்கப்படுகின்றனர். உலகெங்கும் மனித உரிமைகளைக் காப்பதற்காகப் போராடி வரும் செயல் வீரர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய ஐக்கிய நாடுகள் அவை பொதுச் செயலாளரின் சார்பில் சிறப்புப் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டார். ஹினா ஜிலானி என்றும் இப் பிரதிநிதி சென்ற ஜனவரி 24, 2007 அன்று தன் அறிக்கையை வெளியிட்டார். நில உரிமைகள், இயற்கை வளங்கள், சுற்றுச் சூழல் முதலான பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் மனித உரிமைப் போராளிகளே இன்று அதிக ஆபத்திலுள்ளனர் என்பதை இவ்வறிக்கை சுட்டிக் காட்டியது.

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்காகப் போராடுகிற இப்போராளிகளின் மனித உரிமைகள் அரசால் மட்டுமின்றி அரசுக்கு அப்பாற்பட்டவர்களாலும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. எல்லா விதமான வடிவங்களிலும் இந்தத் தாக்குதல்கள் அமைகின்றன. எனக் கூறிய இவ்வறிக்கை இவர்களது பணிகள் மனித உரிமை சார்ந்தது என்பதே ஏற்கப்படாமல் தேசப் பாதுகாப்பு முதலான பெயர்களில் இவர்கள் குற்றம் சாட்டப்படுவதையும் சுட்டிக் காட்டியது. அரசின் விரோதம், பொருளாதாரக் பற்றாக்குறை, ஊடகப் புறக்கணிப்பு எனப் பல மட்டங்களில் இவர்களின் உரிமைகளும் செயல்பாடுகளும் பறிக்கப்படுகின்றன. தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. மோதலில் கொல்வது, ஆளையே தலைமறைவாக்குவது முதலான வடிவங்களையும் இப்போராளிகள் சந்திக்க நேரிடுகிறது.

பல்வேறு அரசியல் காரணங்களின் விளைவாக ஆயுதம் தாங்கிய போராட்டங்கள், பயங்கரவாதச் செயற்பாடுகள் ஆகியன மிகுந்துள்ள ஒரு காலகட்டத்தில் இன்றைய மனித உரிமைப் பணியாளர்கள் பணி செய்ய வேண்டிய நிர்பந்தத்திலுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியிலுள்ள அரசயில் பிரச்சினைகளைத் தீர்க்காமல் மேலும் மேலும் அடக்கு முறைகள், உரிமை பறிப்புகள், சட்ட விரோதச் சட்டங்கள் ஆகியவற்றின் மூலம் இவற்றை ஒடுக்க முனைகிறது அரசு. இதன் மூலம் வரலாறு காணாத அளவில் மனித உரிமைகள் பறிக்கப்படக்கூடிய அவலம் ஏற்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, அவர்களின் சிவில் உரிமைகளுக்காக நிற்கும் மனித உரிமைப் போராளி எளிதில் தேசப் பாதுகாப்புக்கு எதிரானவராகக் குற்றம் சாட்டப்படுகிறார். தேசப் பாதுகாப்பு என்கிற பெயரில் அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் நிலையை நியாயப்படுத்தும் போக்கு இன்று உலகெங்குமுள்ளது. செப்டம்பர் 11க்குப் பின் இது மோசமாகிறது. மனித உரிமைகளைப் பேசுவதென்பதே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பது என்பதாகப் பேசக் கூடியவர்கள் அதிகமாகிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லாவற்றையும் திறந்துவிடுகிற இன்றைய சூழலில் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பேசுகிறவர்கள் அரசின் மிகப் பெரிய எதிரியாகக் கருதப்படுகின்றனர். இந்த வகையிலேயே இன்று பினாயக் சென் முதலானோர் மீதான தாக்குதல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கனிவளமும் நீர் வளமும் மிகுந்துள்ள இடங்களில் மாவோயிஸ்டுகள் வளர்வதை எம்மால் சகிக்க முடியாது என மன்மோகன் சிங் ஒரு முறை கூறியதை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது.

1998ம் ஆண்டு மனித உரிமைப் போராளிகளின் பாதுகாப்பிற்கான பிரகடனம் ஒன்றை (Declaration on Human Right Defenders) ஐ.நா சபை வெளியிட்டது. இதற்கான ஒரு சிறப்புப் பிரகடனமும் 2000த்தில் வெளியிடப்பட்டது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் இவர்களின் பாதுகாப்பை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டுமென இப்பிரகடனம் கோருகிறது. மனித உரிமைகளுக்காகப் போராடும் உரிமை, அமைப்பு உருவாக்கும் உரிமை, உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் உரிமை, இத்தகைய பணிகளுக்காக நிதி திரட்டும் உரிமை, அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமை, சர்வதேச அளவிலான பாதுகாப்பு அமைப்புகளிடம் உதவி கோரும் உரிமை ஆகியவற்றை இப்பிரகடனம் அங்கீகரிக்கிறது.

என்ன பிரகடனங்கள், ஒப்பந்தங்கள் இருந்து என்ன பயன். மனித உரிமை தொடர்பான விருப்ப ஒப்பந்தங்கள் பலவற்றில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. கையெழுத்திட்ட போதும் அவற்றை மீறுவதற்கு தயங்கியதுமில்லை.

இதுதான் இந்தியாவில் இன்றைய மனித உரிமைகளின் நிலை.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஓர் இயக்கம்

இந்தியாவெங்குமுள்ள சிறைகளில் அடைபட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் நோக்கில் அகில இந்திய அளவில் ஒரு இயக்கத்தைக் கட்டுவதற்கான தயாரிப்புக் கூட்டமொன்று டெல்லியிலுள்ள மனித உரிமைப் போராளிகளின் முன் முயற்சியில் சென்ற டிசம்பர் 20 அன்று புது டெல்லியில் கூட்டப்பட்டது. பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கீலானி (டெல்லி), பேரா. அமித்பட்டாசார்யா (மே.வ), ரோனாவில்சன் (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) முதலானோர் முன் முயற்சி எடுத்துள்ளனர். டெல்லி, ஜம்மு, காஷ்மீர், நாகலாந்து, அஸ்ஸாம், பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்கர்ன்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 50 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து அ.மார்க்ஸ¨ம், புதுச்சேரியிலிருந்து கோ.சுகுமாரனும் கலந்து கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் சுரேந்திர மோகன், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஜிந்தர் சச்சார் முதலானோர் வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுத்தாளர் அருந்ததிராய் ஒப்புதல் அளித்தும் கலந்து கொள்ள இயலவில்லை.

பேராசிரியர் அமித் பட்டாச்சார்யாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு (வரலாற்றுத்துறைத் தலைவர், ஜாதல்பூர் பல்கலைக் கழகம், மேற்கு வங்கம்) ஒரு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. வரும் மார்ச் 31, ஏப்ரல் 1 தேதிகளில் டெல்லியில் இது தொடர்பாக அகில இந்திய மாநாடு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 28ல் சிறை நிலைமைகளை குறித்த ஒரு கவன ஈர்ப்பாக நாடெங்கும் ஆர்ப்பாட்டம், சிறைப் போராட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்வது பற்றியும் பேசப்பட்டது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மரண தண்டனையை ஒழித்தல், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தல், சிறை நிலைமைகளை திருத்துதல் சிமி அமைப்பின் மீதான தடையை நீக்குதல், நார்கோ அனாலிசிஸ் எனப்படும் மெய்யறியும் சோதனைகளை தடை செய்தல் முதலான பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

இந்திய அளவில் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் குறித்த ஒரு தகவல் தொகுப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட முஸ்லீம் கைதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நால்வர், பொழிலன் உள்ளிட்ட த.ஒ.வி இயக்கத்தினர் மூவர், சமீபத்திய தேனி பகுதியில் கைதான மாவோயிஸ்டுகள் சுமார் 15 பேர் ஆகியோர் பற்றி முதற்கட்டமாக தகவல்கள் அளிக்கப்பட்டன.

அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மான வடிவங்கள் முதலியன விரிவாக அடுத்த இதழில் இடம் பெறும். இது தொடர்பாக தொடர்பு கொள்ள விரும்புவோர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.