Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Inmai
Inmai
பிப்ரவரி 2008

திசை மாறிய அயலுறவுக் கொள்கை
அ.மார்க்ஸ்

சென்ற 21 ம் தேதியன்று (ஜன, 2008) சிரீஹரிகோட்டாவிலுள்ள துணைக்கோள் ஏவுதளத்திலிருந்து (Satellite Launching Station) இஸ்ரேலின் டெக்சார் என்னும் துணைக்கோள் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆண்டு முழுவதும், மேகம் சூழ்ந்த பொழுதுகளிலும் கூட படம் எடுக்க வல்லது டெக்சார் என அறிவிக்கப்பட்டது.

இஸ்ரேலுக்கென இப்படியான ஒரு துணைக்கோளை ஏவுவதற்கு இந்தியா உதவப் போகிற செய்தி அதற்கு முன் இந்திய மக்களுக்கு தெரியாது. அடுத்தடுத்த நாட்களில் பத்திரிக்கையாளர் சீமா முஸ்தஃபா இது குறித்த மேலும் சில தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார் (டெக்கான் க்ரானிகல், ஜன, 24). இஸ்ரேலின் மேலும் இரு உளவுத் துணைக்கோள்களை (Spy Satellites) இந்தியா ஏவி உதவவுள்ளது தெரிய வந்தது. இந்த மூன்று துணைக்கோள்களையும் விண்வெளியில் ஏவ உதவி செய்கிற முடிவு மூன்றாண்டுகளுக்கு முன்னரே, மன்மோகன்சிங் தலைமையிலுள்ள ஐக்கிய அரசால் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமை இயக்குனர் அமோஸ் யாரோஸ் மூன்றாண்டுகட்கு முன்னர் புதுடெல்லிக்கு வந்துபோயுள்ளார்.

எனினும் மக்களுக்கு இது குறித்து எந்தத் தகவலும் இல்லை. அறுதிப் பெரும்பான்மையற்ற கூட்டணி அரசாகிய மன்மோகன்சிங் அரசு, ஆதரவை நம்பியுள்ள இதர கட்சிகளுக்கும்கூட இதைத் தெரிவித்ததா என்பது தெரியவில்லை. (காபினெட் ஒப்புதல் பெறப்பட்டதா என்பது கூட ஐயமே).

ஒப்பீட்டளவில் இஸ்ரேல் அரசு தன் மக்களுக்கு யோக்கியமாக இருந்துள்ளது. இஸ்ரேல் இதழ்கள் இது குறித்து அதிகச் செய்திகளைத் தந்திருந்தன. ஏவப்பட்ட துணைக்கோளின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியா ஆகிய இரு எதரி நாடுகளை உளவறிவதே என்பதை அவை வெளிப்படுத்தியிருந்தன. பாகிஸ்தான் குறித்து அதன் மூலம் அறியப் பெறும் தகவல்கள் இந்தியாவுக்கு கூடப் பயன்படுமாம். ஈரான் மற்றும் சிரியா ஆகியவற்றை இஸ்ரேல் எதிரி நாடு என வரையறுப்பதில் இந்தியாவிற்கு உடன்பாடுண்டா என்பது தெரியவில்லை. இஸ்ரேலுக்குச் செய்துள்ள இந்த உதவியால் பாரம்பரியமான நட்பு நாடுகளாகிய மேற்காசிய நாடுகளிடமிருந்து இந்தியா இதன் மூலம் அந்நியப்பட நேர்ந்தது பற்றி அது கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை.

இந்தியத் தரப்பில் மேற்படி உதவிக்குப் பொருளாதார நியாயம் ஒன்று கற்பிக்கப்பட்டது. தனது ஏவுதளத்தை வாடகைக்கு விடுவதால் கிடைக்கிற லாபத்தைப் பற்றி அது பேசியது. இத்தாலிக்கும் கூட இவ்வாறு அது தனது தளத்தை வாடகைக்கு விட்டதைச் சுட்டிக் காட்டியது. பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியா வசூலிக்கும் வாடகை 70 சதம் குறைவாக உள்ளது இன்னொரு துணைத் தகவல்.

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள தலைகீழான மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இது. ஒரு காலத்தில் இஸ்ரேலுடன் எந்தவிதமான தூதரக உறவுகளும் (Diplomatic RElationship) வைத்துக் கொள்வதில்லை என்பதே இந்தியாவின் முடிவாக இருந்தது. 1990 களில் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை பெரிய அளவில் மாற்றமடைந்தபோது அதற்கிணையாக அதன் அயலுறவுக் கொள்கையும் தர்க்கபூர்வமான மாற்றங்களை அடைந்தது. எனினும் கூட இஸ்ரேலுடன் இந்திய உறவு உடனடியாக சுமூகமாக்கப்படவில்லை. வாஜ்பேயி தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு மத்தியில் பதவி ஏற்ற போது அதிவேகமாக இஸ்ரேலுடன் பல இராணுவ ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம் வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி இஸ்ரேலை நட்பு நாடாகக் கருதுவது புரிந்து கொள்ளக்கூடியதே. நெருக்கடி நிலைக்குப் பிந்திய ஜனதா ஆட்சியில் (1978) பா.ஜ.க தனது முந்தைய வடிவில் (பாரதீய ஜனசங்கம்) பங்கேற்றிருந்தபோது இஸ்ரேலின் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான் ரகசியமாக இந்தியா வந்து சென்றதாக ஒரு பேச்சு உண்டு.

ஆனால் இஸ்ரேலுடன் இன்று இந்தியா தனது உறவை நட்பு ரீதியானதாக மாற்றியமைத் துள்ளதற்கு பா.ஜ.கவைக் குற்றஞ் சொல்ல இயலாது. மன்மோகன்சிங் அரசு மேற்கொண்டுள்ள அமெரிக்கச் சார்பின் ஒரங்கமாகவே இதை நாம் காண வேண்டும். மேற்கு ஆசியா குறித்த இந்தியாவின் புதிய கொள்கையின் ஒரு பக்கம் இப்படி இஸ்ரேல் ஆதரவு என்றால் இன்னொரு பக்கம் பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளை ஆதரிப்பது என்கிற அதன் பாரம்பரியமான கொள்கையைக் கைவிடுதல் அமைகிறது. யாசிர் அராபத் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளாத உலகத் தலைவர்களில் ஒருவர் மன்மோகன்சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஹிஸ்புல்லாக்கள் சில இஸ்ரேலிய வீரர்களைக் கடத்தியிருக்கத் தேவையில்லை என இந்தியா மொழிந்தது நினைவிருக்கலாம். இன்று காஸாவிலுள்ள 50 லட்சம் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் முற்றுகையிட்டு உணவுக்கும், மருந்துக்கும் கூட வழியின்றி அவர்களைச் சாகடிக்க முனைந்த போதும் இந்தியா அதைக் கண்டிக்கவில்லை.

உலக முதலாளியத்தின் உலகமய நடவடிக்கைகளுக்கு ஏற்ப இந்தியா தனது சந்தையைத் திறந்துவிட்ட போது அதற்கிணையாக அதன் அயலுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.

(1) பாரம்பரியமான அணிசேராக் கொள்கை (Non Alignmentt) என்பதைக் கைவிட்டுவிட்டு அமெரிக்காவுடன்/மேற்கு நாடுகளுடன்/வடக்கு உலகுடன்/பணக்கார நாடுகளுடன் அணிசேரும் கொள்கையை அது மேற்கொண்டது. ன்றைய சூழலுக்கு அணிசேராக் கொள்கை பொருத்தமற்றது, தேச நலனுக்கு எதிரானது என்கிற கருத்து அயலுறவுக் கொள்கையை உருவாக்கும் அதிகாரிகள் மற்றும் மேட்டிமைச் சக்திகளின் (Elite Groups) கருத்தாக முன் வைக்கப்பட்டது.

(2) இந்தியா உலகுக்கு அளித்த ஒரு தத்துவக் கொடையாக அணிசேராக் கொள்கையைக் கருதலாம். ஒரு பெரும் அறிவு ஜீவியாகவும், தொலைநோக்குள்ள வரலாற்றறிஞராகவும் உலக அளவில் மதிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு முன்மொழிந்தது அது. பவுத்த சிந்தனைகளில் ஒன்றான பஞ்சசீலம் முதலானவற்றை அவர் பேசிக் கொண்டிருந்த காலம் அது. ஒரு அறப் பின்புலத்துடன் (Ethiical Basis) அது முன்வைக்கப்பட்டது. நீண்ட வரலாறு, பண்பாட்டுச் சாதனைகள் (Civilizational Achievements), அளவிலும் மக்கள் தொகையிலும் பெரிய நாடு என்கிற பலங்களில் நின்று தனது அறம் சார்ந்த அணுகல் முறையை முன்வைத்தது இந்தியா.

காஷ்மீர் மற்றும் எல்லைப் பிரச்சினைகளில் நேருவிய அணுகல் முறையை நாம் ஏற்றுக் கொள்ள இயலாவிடினும் உலகளாவிய அரசியலில் தனது சொந்த நலன்களைத் தாண்டிய பார்வையுடன் அது செயல்பட்டு வந்தது. 1947-1962 காலகட்டத்தை இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்த வகையில் ஒருவகை அற இறுமாப்புடன் அதன் அணுகல்முறை அமைந்ததெனலாம். காலனீயம், இன அடிப்படையிலான வேறுபடுத்தல்கள் ஆகியவற்றை எதிர்ப்பது, சர்வதேச அளவில் சமச்சீரற்ற அதிகாரக் குவியலையும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளையும் கண்டிப்பது, அதிகளவில் இராணுவத்திற்குச் செலவிடுவதையும் அணு ஆயுதப் பரவலையும் கண்டிப்பது ஆகியவற்றில் இந்தியா முன் நின்றது.

இந்திய - சீன போருக்குப் பிந்திய கால கட்டத்தில் (1962-1971) சற்றே தற்காப்பு நோக்கில் கொஞ்சம் அடக்கி வாசிக்க நேர்ந்தபோதும் அணிசேராமையை அது விட்டுவிடவில்லை. 1974ல் முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையை இந்தியா நிகழ்த்திய பின் அது தன்னை ஒரு பெரு வல்லரசாகக் கற்பித்துக் கொண்டு அண்டை நாடுகள் மத்தியில் மேலாதிக்கத் தன்மையுடன் செயல்படத் தொடங்கிய போதும் அது அணி சேராமையை விட்டுவிடவில்லை. 1990களில் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் ஒற்றைத் துருவ உலகமொன்று (Uni - Polar World) இங்கு கட்டமைக்கப்பட்ட போது, அது இந்தக் கட்டமைப்புடன் தன்னைத் தகவமைத்திக் கொண்டது.

1998ல் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்த்திய போது (பொக்ரான் II ), இந்தியாவின் போர் தொடர்பான உலகப் பார்வை அறச்சொல்லாடலிலிருந்து எதார்த்த அரசியலுக்கு (Real Politik) இடம் பெயர்ந்துள்ளது என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. எதார்த்த அரசியலில் அறத்திற்கு இடமில்லை என்கிற இந்தக் கருத்தியல் விலகல் இந்திய அயலுறவுக் கொள்கை மாற்றத்தின் இரண்டாவது அம்சம் எனலாம். மன்னராட்சிக்கு எதிரான சமீபத்திய நேபாள மக்களின் ஜனநாயகப் போராட்டத்திலும், இன்று பர்மாவில் நடைபெற்றுக் கொண்டுள்ள ஜனநாயகப் போராட்டத்திலும், இந்திய அரசு ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிராக இருந்ததும் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

3. இந்த விலகல்கள் பாரம்பரியமான நட்பு நாடுகள் குறித்த அணுகல் முறையில் மாற்றங்களை விளைவித்தது. அமெரிக்க ஆணையை ஏற்று ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் இருமுறை அது வாக்களித்தது, பாலஸ்தீனத்திற்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டிப்பதில் தயக்கம் காட்டுவது, சென்ற ஆண்டு நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இயற்கையாக வெளிப்பட்ட அமெரிக்க-இஸ்ரேல் எதிர்ப்பைத் தணிப்பதற்கு முயன்றது, சிறிய ஆயுதங்கள் மற்றும் எளிய போராயுதங்களுக்கான ஒப்பந்தத்தை (Smaal Arms and Light Weapons) எதிர்த்தது, க்யோட்டோ ஒப்பந்தம் குறித்த நிலைபாட்டில் அமெரிக்க ஆதரவு நிலை எடுத்தது ஆகியவற்றைச் சொல்லலாம்.

இதன் விளைவாகப் பாரம்பரியமாக நட்புடனிருந்த மூன்றாம் உலக நாடுகள் இன்று இந்தியாவிலிருந்து அன்னியப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் ஐ.நா. அவையின் பாதுகாப்புக் குழுவில் (UNSC) இந்தியா உறுப்பினராக முயற்சித்தபோது வழக்கமாக ஆதரவளித்து வந்த மூன்றாம் உலக நாடுகள் இம்முறை அந்த உற்சாகத்துடன் ஆதரவளிக்காதது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் உலக நாடுகளுடன் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த கூட்டு நடவடிக்கைகள் இப்போது குறைத்துக் கொள்ளப்படுகின்றன. ஆறு இருதரப்பு கொடையாளிகள் (DFID, EC, Germany, Japan, USAID, Russian Federation) தவிர பிறவற்றுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த அரசு மட்டத்திலான (Govt. to Govt Development Co-operation) கூட்டுறவுச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

4. வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படையாக இருந்த நிலைமை போய் எல்லாம் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு இரகசியமாக்கப்பட்டுவிட்டது. வெளியுறவுக் கொள்கையில் இதுகாறும் கடைபிடிக்கப்பட்டு வந்த தேசியக் கருத்தொற்றுமை (National Consensus) என்பதும் இப்போது புறக்கணிக்கப்பட்டுவிட்டது. பாராளுமன்றமும் ஏன், பரந்துபட்ட கட்சி அணிகளும் கூட கருத்து மாறுபடுவது குறித்துக் கவலைப்படாமல் இப்போது முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அமெரிக்காவுடன் இன்று மேற்கொள்ளப்பட்ட 123 ஒப்பந்தத்தைப் பொருத்தமட்டில் இடதுசாரிக் கட்சிகள் தவிர, முக்கிய எதிர்க்கட்சியும் இன்று அதை எதிர்க்கிறது.

வாக்கெடுப்பு நடத்தினால் ஒப்பந்தம் தோல்வியுறுவது உறுதி. எனினும்கூட, ஒப்பந்தத்தை எப்படியேனும் நிறைவேற்றி விட அரசு துடிப்பாக உள்ளது. 123 ஒப்பந்தம் பேச்சுவார்த்தையிலிருந்த போது கசிந்து வந்த செய்திகள் அனைத்தும் அமெரிக்கத் தரப்பிலிருந்தும் அமெரிக்கப் பத்திரிக்கைகளிலிருந்தும்தான் என்பதும் நினைவிற்குரியது. இந்தியாவை ஒரு சூப்பர் பவர் ஆகக் கட்டமைப்பதிலும், அதன் மூலம் லாபம் பெறுவதிலும் அக்கறையுள்ள ஒரு சிறு மேட்டிமைக் குழுவே இன்று வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கிறது. மக்களை அதிகாரப்படுத்துவது என்பதைக் காட்டிலும் உலகளவில் இந்திய அரசு அதிகாரம் செலுத்துவது, அதன் மூலம் தாம் அதிகாரம் பெறுவது என்பதே இவர்களின் நோக்கம்.

5. ஐக்கிய நாடுகள் அவையை ஜனநாயகப்படுத்துவது குறித்துத் தீவிரமாகப் பேசி வந்த இந்தியா இன்று அதைப் பேசுவதில்லை. மாறாகப் பாதுகாப்புக் குழுவில் (Security Council) தான் உறுப்பினராவது பற்றி மட்டுமே பேசுகிறது.

1990 களில் ஏற்பட்ட பல மாற்றங்கள் - (ஒற்றைத் துருவ உலகம் / உலகமயம் / சந்தைத் திறப்பு) இந்திய அயலுறவுக் கொள்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிப் பேசிக் கொண்டுள்ளோம். 1998ல் இந்தியா மேற்கொண்ட இரண்டாவது அணு வெடிப்புச் சோதனைக்குப் பின்பு அது தன்னை ஒரு சூப்பர் பவர் ஆகவே கற்பனை செய்து கொள்ளத் தொடங்கியது. உலகமயத்தை ஒட்டி இங்கே எல்லாவிதமான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு வெளிநாட்டு நேரடி மூலதனம் முதலில் சிறிய அளவிலும் பின்பு பெரிய அளவிலும் குவியத் தொடங்கியது. இதன் மூலம் கார்ப்பரேட்கள் பெரு வளர்ச்சி பெற்றன. மொத்த தேசிய உற்பத்தி (GDP), பொருளாதார வளர்ச்சி முதலியன குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. பொருளாதார வளர்ச்சி 6.9 சதத்தைத் தாண்டியது. வரலாறு காணாத அளவில் சென்செக்ஸ் குறியெண்கள் எகிறின.

இன்னொரு பக்கம் மனித வளர்ச்சி எண் (HDI) அளவில் பின்னோக்கிச் செல்வது, ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பது, விவசாயிகள் தற்கொலை செய்வது என்பதெல்லாம் நடந்த போதிலும் முதலாளிப் பொருளாதார அளவுகோல்களின்படி இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தது. பொருள்களை வாங்கும் திறனுள்ள மிகப்பெரிய மத்திய தரவர்க்கம் இந்தியாவின் இன்னொரு பலமாகக் கருதப்பட்டது. உலகமயத்தை ஒட்டி உயர் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக பல மூன்றாம் உலக நாடுகள் கல்வி, மருத்துவம் முதலானவற்றிற்கு இந்தியாவை நோக்கி வரவேண்டிய நிலை ஏற்பட்டது, கால் சென்டர், அவுட்சோர்சிங் முதலானவற்றினூடாக இங்கே சேவை சார்ந்த உற்பத்தி அதிகரித்தது. இன்னொரு பக்கம் அணுவல்லமையும், இந்து மகா சமுத்திரப் பகுதியிலும், இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியிலும் உள்ள இராணுவ வல்லமை உள்ள நாடாகவும் இருந்த நிலை அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது முறைப்படி தேர்தல் மூலமான அதிகார மாற்றங்கள் நடைமுறைப்படுதல் என்பன இந்தியாவின் பெருமைகளாகக் கருதப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் இந்தியா தன்னை ஒரு சூப்பர் பவர் ஆகக் கருதிக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது.

மூன்றாம் உலக நாடுகளுடனான தொடர்புகளைச் சுருக்கி கொண்டு G8 முதலான சூப்பர் பவர் கூட்டமைப்புகளில் முறையான உறுப்பினர் நிலை இல்லாத போதும் ஒட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கியது. தென் ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கத் தலையீடு கூடாது என்று இதுகாறும் கடை பிடித்து வந்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அமெரிக்காவுடன் பல்வேறு விதமான இராணுவக் கூட்டு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது. 2005-2006 ஆண்டில் மட்டும், இராணுவ தளவாடம் வாங்குதல் தொடர்பாக, இந்தியாவுக்கும் - அமெரிக்காவிற்கும் இடையில் 21 சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.

இதுவரை உதவி பெறும் நாடாக இருந்து வந்த இந்தியா பிற நாடுகளுக்கு உதவி செய்தல் என்கிற நிலையையும் எடுத்தது. ஆப்பிரிக்க நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு எக்ஸிம் வங்கி மூலமாக உதவும் பொருட்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 1.5 பில்லியன் டாலர் தொகையை இந்திய வளர்ச்சி முனைவு (IDI – Indian Development Initiative) ஒதுக்கியுள்ளது. டஜிகிஸ்தானில் உள்ள அயினி விமானத்தை இந்தியா ஒத்திக்கு (Lease) வாங்கியுள்ளது. இராணுவமல்லாத நோக்கங்களுக்கு என இந்தியா சொல்லிக் கொண்ட போதிலும் இராணுவ நோக்கில் மத்திய ஆசியாவில் கால் பதிக்கும் ஒரு முயற்சியே இது என்றே பிறநாடுகள் இதைப் பார்க்கின்றன. போருக்குப் பிந்திய ஆப்கானிஸ்தானத்தின் மறு உருவாகத்திலும் இந்தியா பங்கு பெற்றது. சாலைகள் அமைத்தல், மருத்துவமனைகள் கட்டுதல் முதலான பணிகளை இந்தியா மேற்கொண்டது.

பல நாடுகளால் சட்ட விரோத அரசு (Outlawed Regime) எனக் கருதப்படும் மியான்மர் (பர்மா) அரசுக்கு 100 மில்லியன் டாலர் கடன் கொடுத்துள்ளது. ரயில் பாதை அமைத்துத் தரும் பணியையும் ஏற்றுள்ளது. நேபாளம், மாலத்தீவு, ஸ்ரீலங்கா முதலான அண்டை அரசுகளுடன் இந்தியா வகிக்கக்கூடிய மேலாண்மை உறவு யாவரும் அறிந்ததே. முன்னர் குறிப்பிட்ட G 8 தவிர G 4, G 15, G 20, G 33 முதலான பல குழுக்களில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா அதே நேரத்தில் வேறு பல தெற்குலக குழுமங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளது.

இந்தியா - பிரேசில் - தென் ஆப்ரிக்கா (IBSA), ஆசியா பசிபிக் பொருளாதாரக் கூட்டமைவு (APEC), பல்முனை தொழில் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவிற்கான வங்கக் கடல் முனைப்பு (BIMSTEL) முதலான பல பிராந்தியக் கூட்டமைப்புக்களை உருவாக்குவதிலும் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது. பிற ஆப்பரிக்க நாடுகள் இந்தக் கூட்டமைப்புகளில் தம்மை ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை எனக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குலக நாடுகளைப் போலவே இந்தியாவும் தான் செய்கிற கடனுதவிகளை தனது மூலதனத்திற்கான வெளிநாட்டுச் சந்தைகளை உருவாக்கும் வழிமுறையாகவே மேற்கொள்கிறது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே உருவாகியுள்ள இன்றைய உறவு குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்பது அவசியம். இந்த உறவு மிகச் சமீபத்திய கதை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானே அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடாக இதுவரை இருந்து வந்துள்ளது. இந்தியாவின் பாரம்பரியமான அயலுறவுக் கொள்கையையும், வளர்ச்சித் திட்டங்களையும் குறிப்பாக சோவியத் மாதிரியில் அது உருவாக்கிய ஐந்தாண்டுத் திட்டங்களை - அது என்றைக்கும் ஏற்றுக் கொண்டதில்லை. கென்னடி அமெரிக்கத் குடியரசுத் தலைவராக ஆனபோது இந்திய வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவுவதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. பதிலாக அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனனை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்கிற நிபந்தனை மறைமுகமாக வற்புறுத்தப்பட்ட போது அன்றைய பிரதமர் நேரு ஒரு இலக்கியத் தரமிக்க கடிதம் எழுதி அமெரிக்க உதவிகளை மறுத்தார். ஆனால் இன்று ஈரானிலிருந்து எரிவாயுவை பாகிஸ்தான் வழியாகக் குழாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தை அமெரிக்க ஆணையை ஏற்று நிறுத்தி வைத்துள்ள மன்மோகன்சிங் இதற்குத் தடையாக இருந்த மணி சங்கர அய்யரை அந்தத் துறைப் பொறுப்பிலிருந்து பதவி இறக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மாறியுள்ள உலகச் சூழலில் இந்தியாவைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கும் உள்ளது. சூப்பர் பவர் ஆக நினைக்கும் இந்தியாவின் ஆசையையும், இந்தியாவின் யுரேனியப் பற்றாக்குறையையும் பயன்படுத்தி அதைத் தன்னை நோக்கில் ஈர்ப்பதில் அமெரிக்கா இன்று வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்திய NRI களும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஒரு உலக வல்லரசாக ஆவதில் இந்தியாவிற்கு நாங்கள் உதவி செய்யத் தயாராக உள்ளோம். ஆனால் அது தனது சிந்தனைகளிலும் செயல்களிலும் தனது பழைய வழிமுறைகளை உதறித் தள்ள வேண்டும் என்று கோண்டலிசா ரீஸ் வெளிப்படையாக அறிவுரை கூறினார்.

இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள 123 ஒப்பந்தம் குறித்துத் தனி நூல் எழுதியுள்ளதால் இங்கு அதை தவிர்க்கிறேன். இந்தியாவுக்கும், அமெரிக்காவிற்குமிடையே இன்று பல்வேறு நிலைகளில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பின் ஒரங்கமாகவே இது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் அமெரிக்காவின் உலகளாவிய விரிவாக்க அரசியலில் இதன் பங்கையும் அதில் விரிவாக எழுதியுள்ளேன். இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அயலுறவுக் கொள்கைகளில் இந்தியா தனது இறையாண்மையை முழுமையாக இழக்க நேரிடும்.

அமெரிக்காவைப் பொருத்தமட்டில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் சமநிலைப்படுத்துவது (Balancing) இன்று அதன் நோக்கமல்ல. அல்குவேதாவையும், தலிபான்களையும் கட்டுக்குள் வைப்பதற்கு இன்றும் கூட பாகிஸ்தானின் உதவி அதற்குத் தேவையான போதிலும் பாகிஸ்தானால் அமெரிக்காவிற்கு எதிராகச் செல்ல இயலாத நிலை உள்ளதால் அதை 'Balance' செய்வது பெரிய விஷயமல்ல. மாறாக இந்தியாவையும் சீனாவையும் Balance செய்வதே இன்று அதன் பிரதான நோக்கம். பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பெரு வளர்ச்சி பெற்று வரும் சீனா இன்று அமெரிக்காவிற்கு ஒரு மிகப் பெரிய சவால்.

தய்வான், வடகொரியா, மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்த பார்வை ஆகிய அம்சங்களில் இரண்டு நாடுகளுக்குமிடையில் பிரச்சினைகள் உள்ளன. இன்னொரு பக்கம் புடின் காலத்திய இன்றைய ரசியாவும், அமெரிக்காவிற்கு ஒரு பெரிய சவால். பழைய சோவியத் யூனியலிருந்த நாடுகள் அனைத்தின் எண்ணை வளத்தையும் இன்று ரசியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த நாடுகளில் அமெரிக்கா உருவாக்க முனைந்த ஊதாப் புரட்சிகள் (Violet Revolutions) மற்றும் NATO அமைப்புக்குள் இவற்றை வளைத்துள்ள தந்திரம் ஆகியவற்றால் ரசியா ஆத்திரமடைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எண்ணை விநியோகமும் இன்று ரசியாவின் கையில் வந்துள்ளது. இதைக் கைப்பற்ற முனைந்த அமெரிக்க முயற்சிகளை அது வீழ்த்தியுள்ளது. சீனா உருவாக்கியுள்ள SSO கூட்டமைப்பு, ரசியாவின் CSTO கூட்டமைப்பு, SCO வும் SCTO வும் இணைந்துள்ள நிலை ஆகியனவும் அமெரிக்கா இன்று எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிகள் (பார்க்க : எனது உலக மயத்துக்குப் பின் இந்தியா மற்றும் இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் ஆகிய இரு நூல்கள்). ஐரோப்பிய ஒன்றியத்துடனும் கூட ஈராக், ஆக்ரமிப்பைத் தொடர்தல், விவசாய மானியங்கள், க்யோடோ ஒப்பந்தம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதலான அம்சங்களில் அமெரிக்காவிற்குப் பிரச்சினைகள் உள்ளன.

இந்தப் பின்னணியில் தான் இன்று இந்தியாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அமெரிக்க ஆசையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் வரிவாக்க முயற்சிகள் அனைத்தையும் இன்று இந்தியா அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் உலகப் பங்காளியாக (Global PArtnership) அது தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. உலகில் ஜனநாயகத்தை நிலை நாட்டும் முயற்சிக்கு (Global Democratic Initiative) இந்தியாவும் அமெரிக்காவும் ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் டாலர் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முழுவீச்சு ஆதிக்கம், எல்லாப் புலங்களிலும் செயல்படும் உரிமை, ஒற்றைத் துருவ உலகம் (Full Spectrum Dominance/ Freedom to Operate in All Domains/ Uni polar World) ஆகிய கருத்துக்களை இந்தியா மௌனமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்கச் சட்டம் சர்வதேசச் சட்டத்திற்கு மேலானது. கட்டாய உலகமயம், ஆட்சி மாற்றம், (Regime Change) முன்கூட்டிய தாக்குதல் (Pre-emtive Strike), ஜனநாயகத்தை நிலை நாட்டும் உரிமை முதலியன அமெரிக்காவின் ஒற்றைத் துருவக் கருத்தாக்கத்தில் அடக்கம். பல்வேறு அதிகார மையங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், வேறுபட்ட வளர்ச்சி மாதிரிகள், பன்மைக் கலாச்சாரங்கள் என்கிற தனது நேரு காலம் முதல் நடைமுறையிலிருந்த பலதுருவ அணுகல் முறையை இன்று இந்தியா கைவிட்டுள்ளது.

ரசியா, வெனிசூலா முதலான நாடுகளை ஜனநாயகப் பற்றாக்குறை உடைய நாடுகளாகவே அமெரிக்கா கருதுகிறது. ஆனால் இவை பாரம்பரியமாக மட்டுமல்ல, இன்றளவும் இந்தியாவுக்கு பல வழிகளிலும் ஆதரவளித்து வரும் நாடுகள். அமெரிக்காவைப் பொருத்தமட்டில், இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாயினும் ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம். ஈரான் ஒரு எதிரி நாடு. இந்த அம்சங்களில் இந்தியாவின் கருத்து என்ன? ரசியா, மேற்கு ஆசியா, மத்திய ஆசியா முதலான அதன் பாரம்பரியமான நட்பு நாடுகளுடன் அதன் உறவு குறித்த பார்வை என்ன? இந்தியா இது குறித்தெல்லாம் வெளிப்படையாக எதையும் பேசாத போதும் நடைமுறைகளைப் பார்க்கும் போது இந்த அம்சங்களிலும் அமெரிக்காவின் கருத்தே இந்தியாவின் கருத்து என்பது விளங்குகிறது.

இனி நாகரிகளுக்கிடையேதான் முரண்கள் அமையும் (நாகரீகம் என்பதை மதம் என வாசிக்கவும்) என்கிற Clash of Civilization கோட்பாடு, தீமைகளின் அச்சு (Axis of Evil/ Rogue States), மனித உரிமைகளுக்கு எதிராக தேசியப் பாதுகாப்பை நிறுத்துதல் (National Security X Human Rights) ஆகிய அமெரிக்கக் கருத்தியல்களையும்கூட இன்று மௌனமாக இருப்பதல் மூலம் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

அறிவுத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, தன்னிடமுள்ள மனித வளஆற்றல், ஜனநாயக நடைமுறைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பாரம்பரியமான அறம் சார்ந்த அயலுறவுக் கொள்கையினூடாகவே உலக அளவில் தனது முக்கியத்துவத்தை இந்தியா நிலை நாட்ட முடியும். ஆனால் இந்திய மேட்டிமைச் சக்திகளைப் பொருத்தமட்டில் இத்தகைய மென்மையான ஆற்றல்களை (Soft Power Capacities ) க் காட்டிலும் இராணுவம், அணு ஆற்றல் முதலான வன்மையான ஆற்றல்களே(Hard Power Capacities) முன்னிலைப்படுத்தத் தக்கவையாக உள்ளன.

மாற்றுச் சிந்தனைகளை முன் வைத்தல், மனித உரிமைகளுக்கான சொல்லாடல்கள், பெண்ணியச் சிந்தினைகள் முதலான அரசு சாராத முயற்சிகளில் உலக அளவில் ஓரளவிற்கு மரியாதை பெற்றுள்ள இந்தியா இன்னொரு பக்கம் இதுநாள் வரை அது எத்தகைய நாடுகளை விமர்சித்து வந்ததோ அதே நாடுகளைப் பின்பற்றும் நடவடிக்கைகளினூடாக உலக அளவில் மரியாதை இழந்தே உள்ளது. ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் அங்கத்துவம் பெற இயலாமை, APEC, SAARC, BIMSTEC முதலான பிராந்தியக் கூட்டமைப்புகளின் தனது தலைமை நிறுவன இயலாமை முதலியன இதற்குச் சான்றுகள். உலக வர்த்தக அமைப்பிலும் (WTO) கூட எதிர்மறையான சில அம்சங்களை பிற நாடுகளின் உதவியோடு அதனால் தடுத்து நிறுத்தத்தான் முடிந்ததே ஒழிய தனது கோரிக்கைகள் எதையும் அங்கே நிறைவேற்ற இயலவில்லை.

இந்தியாவின் அமெரிக்கச் சார்பும் சந்தர்ப்பவாத நடைமுறைகளும் யாரும் அதனை ஐயத்திற்குரியதாக நோக்கும் நிலைக்கே வழி வகுத்துள்ளது. துணைக் கண்டத்தில் ஆயுதப் போட்டி (Arms Race) ஒன்று உருவாவதற்கே இது வழி வகுக்கும். 123 ஒப்பந்தத்தின் படி இனி அணு வெடிப்புச் சோதனை செய்ய இயலாது என்கிற நிலை வந்தால் சோதனை செய்யாமலேயே அணு ஆயுதங்களைக் குவிக்கும் நிலையை இந்தியா எடுக்கலாம். இந்நிலையில் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் சமஅளவில் அணு ஆயுதங்களைப் பெருக்க முனையும். இதனால் விளையும் போர்ச் சூழலைக் காரணம் காட்டி மேலும் அதிக அளவில் இராணுவச் செலவுகளுக்கு நிதி ஒதுக்குதல், தேசப் பாதுகாப்பின் பெயரில் ஜனநாயக உரிமைகளைப் பறித்தல் ஆகியனவே உடனடி விளைவுகளாக இருக்கும்.

இந்திய மக்களைப் பொருத்தமட்டில் அவர்களை உடனடியாகப் பாதிக்கும் பொருளாதார, கலாச்சாரப் பிரச்சினைகளைத் தவிர வெளியுறவுக் கொள்கை மாற்றங்களை அவர்கள் சீரியசாக எடுத்தும் கொள்வதில்லை. மாநிலக் கட்சிகள் தமக்குத் தொடர்பற்ற விஷயமாகவே இவற்றைப் பார்க்கும். லல்லு பிரசாத் யாதவ், கருணாநிதி ஆகியோரின் சமீபத்திய முடிவுகள் மன்மோகன் - சோனியாவின் இத்தகைய அயலுறவு வழிவிலக்கங்களை ஏற்றுக் கொள்வதாக உள்ளன. ஏகாதிபத்தியச் சுரண்டல், அமெரிக்க மேலாண்மை என்பதெல்லாம் இன்று காலத்திற்கு ஒவ்வாத பழைய கருத்துகளாகிவிட்டன என கருணாநிதியின் புத்ரி கனிமொழி தனது மாநிலங்களவைக் கன்னிப் பேச்சில் முத்துதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் எதிர்ப்புகள் எல்லைக்குட்பட்டதாகவும், அடையாள பூர்வமாகவுமே உள்ளன. அயலுறவுகள் கொள்கையின் வழிவிலக்கங்களால் அதிருப்தியுற்றிருக்கக் கூடிய இடதுசாரிகளையும், ஜனநாயக சக்திகளையும், முஸ்லிம் மக்களையும் தனிமைப்படுத்தும் முயற்சியையே இன்று ஆளும் வர்க்கம் மேற்கொண்டுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

http://semmalar.keetru.com/

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP