உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான, கிரேக்கத்தின் பழங்காப்பியங்களான ஒடிசி மற்றும் இலியத்துக்கு இணையான இரட்டைக்காப்பியங்கள் மலர்ந்த, இலக்கிய மற்றும் இலக்கண வளம் பொருந்திய நம் தாய்மொழியாம் தமிழ்மொழியில் நீங்கள் மேனிலைக் கல்வி பயின்று வருவது மிகவும் பெருமைக்குரியதாகும். தாய்மொழியில் கல்வி கற்பவர்களே நல்ல சிந்திக்கும் ஆற்றலோடும் புதிய படைப்புகளை உருவாக்கும் திறன் பெற்றவர்களாகவும் உருவாக முடியும். இதை மெய்ப்பிக்கும் வகையில் வளர்ந்த நாடுகள் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு) கல்வியினைத் தங்கள் தாய்மொழியிலேப் பயிற்றுவித்து வருகிறார்கள். தாய்மொழியில் கல்வி பயிலாத மாணவர்கள் பாலை நிலம் போல புத்தாக்கச் சிந்தனைகள் அற்றவர்களாகவே உருவாகி வருகிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

ஆனால் இந்தியாவில் இந்தி அல்லாத பிற தாய்மொழிகளில் பயிலும் மாணவர்களை நடுவண் அரசு அங்கீகரிக்க மறுப்பதால், தாய்மொழியில் கல்வி பயில்வது இரண்டாந்தரமானது என்ற எண்ணம் மக்களிடையேத் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இதன் உச்சகட்டமாக, நடுவண் அரசின் கல்வியகங்களில் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, அறிவியல், உணவக மேலாண்மை, கணக்கியல், செயலியல் போன்ற பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகள் படிக்க நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளின் வினாத்தாட்கள் அனைத்தும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்றன. இக்கல்வியகங்கள், அனைத்து மாநில மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. இந்தியாவில் நடுவண் அரசால் நடத்தப்படும் 100 க்கும் மேற்பட்ட உயர் கல்வியகங்களில் 1,00,000 க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றிற்கான நுழைவுத்தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் நடத்தப்படுவதால் தமிழ் வழியில் கல்வி பயிலும் 5 இலட்சம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்வழியில் கல்வி பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மத்திய அரசுக் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வுகளை எழுத முடியாத அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலமும் இந்தியுமே உயர்வானது;; ஆங்கிலம் மற்றும் இந்தி வழிக்கல்வியினால் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்ற எண்ணம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக, தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலக் கனவுகள் பகற்கனவுகளாக ஆக்கப்படுகின்றன. இதனால், தமிழ்வழியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. 1980 ல் 92.5 விழுக்காடாக இருந்த இவர்கள், தற்போது 75 விழுக்காடாக குறைந்து விட்டதே இதற்குச் சான்று. இனியும் தாமதித்தால், நம் தாய்மொழி பயிற்றுமொழியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு பாடமொழியாகும்.

இந்திய அரசியல் சட்டம் கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவிற்கு என்று ஒரு தேசிய மொழி கிடையாது. ஆனால் இந்தி இந்திய அரசின் அலுவல் மொழியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியை அனைத்து மாநில மக்களும் ஏற்கும் வரையில் ஆங்கிலம் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்கும் என்று முன்னாள் பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நடுவண் அரசு மும்மொழிக் கொள்கையைக் கடைபிடிப்பதாக உதட்டளவில் கூறி வருகின்றது.

மும்மொழிக் கொள்கையினை ஏற்றுள்ள இந்திய அரசு, மாநில மொழிகளிலும் நுழைவுத்தேர்வுகளை நடத்த வேண்டும். ஆனால் நடுவண் அரசு அதைச் செய்யாமல் உள்ளது. சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு சாதகமாக ஆங்கில மொழியிலும், இந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு சாதகமாக இந்தி மொழியிலும் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநிலத் தாய்மொழிகளிலும் நுழைவுத்தேர்வுகள் நடத்தினால் அதிக மாணவர்கள் பங்கேற்பார்கள் என்பதாலும், அது இந்தி மாணவர்களுக்கும் மேல்தட்டு மாணவர்களுக்கும் கடினப்போட்டியை உருவாக்கும் என்பதாலும் நடுவண் அரசு இதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றது.

மேலும் இது இந்திய அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான ‘அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு’ என்ற அடிப்படைக் கோட்பாடிற்கும் எதிராக உள்ளது. ஏற்கனவே மாநில அரசுப் பட்டியலில் இருந்த கல்வியை மத்தியப் பட்டியலுக்கு நகர்த்தியதை நாம் தட்டிக் கேட்காமல் விட்டதால் தான் இன்று இந்த நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளைக் குறிப்பிடுக?

1.இந்தி 2. தமிழ் 3. கன்னடம்

4. மலையாளம் 5. உருது 6. கொங்கணி

7. தெலுங்கு 8. சமற்கிருதம் 9. காஸ்மீரி

10. சாந்திலி 11. மைதிலி 12. போடோ

13. சிந்தி 14. நேபாளி 15. ஒடிசா

16. குஜராத்தி 17. டோக்ரி 18. வங்காளி

19. மராத்தி 20. பஞ்சாபி 21. அசாமி

22. மணிப்பூரி

ஆங்கிலம் அங்கீகரிக்கப் படவில்லை.

 இந்த 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் எத்தனை மொழிகள் மேனிலைப் பள்ளி வரையில் பயிற்று மொழியாக உள்ளன?

இந்த 22 மொழிகளில் பல மொழிகள் மேனிலைப் பள்ளி வரையில் பயிற்று மொழியாக இல்லை. அம்மொழிகள் எவை எவையென்று கண்டறியப்பட வேண்டும்.

உதாரணமாக, சமற்கிருதம் மேனிலைப் பள்ளி வரையில் பயிற்று மொழியாக இல்லை. 

நம் நாட்டிலுள்ள 28 மாநிலங்களில் எத்தனை மாநிலங்கள் இந்தியைத் தாய்மொழியாக கொண்டுள்ளன?

9 மாநிலங்களுக்கு இந்தி தாய்மொழி.

1.உ.பி. 2. ம.பி. 3. ஜார்க்கண்ட்

4. சட்டிஸ்கார் 5. பீகார் 6. உத்திராகண்ட்

7. அரியானா 8. இ.பி. 9. இராஜஸ்தான்

இவர்கள் இந்திய மக்கள் தொகையில் 34 விழுக்காடு.

இந்தியைத் தாய்மொழியாகப் பேசும் மேற்கண்ட 9 மாநிலத்தவர்க்கு மத்திய இளநிலை நுழைவுத்தேர்வுகளில் ஏதாவது பாதகம் வருமா?

நமது நாட்டில் மத்திய இளநிலை நுழைவுத்தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை இந்த 9 மாநிலத்தவர்களும் எந்தவிதச் சிரமமுமில்லாமல் எழுத முடியும். ஏனென்றால் இந்தியாவின் அலுவல் மொழியான இந்தி இவர்களுக்குத் தாய்மொழி.

இவர்கள் மட்டும் தங்கள் தாய்மொழியில் எழுதலாம். ஆனால் பிற மாநிலத்தவர்கள் தங்கள் தாய்மொழியில் படித்தாலும் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். இது மொழி ஆதிக்கமில்லையா?

தமிழ் மற்றும் இதர மாநிலத் தாய்மொழிகளில் பயின்றவர்களுக்கு ஏதாவது பாதகம் வருமா?

பெரும் பாதிப்பு.

போட்டியிட்டுத் தோற்பது வேறு; போட்டிக்கே தகுதியில்லாமல் இருப்பது வேறு. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அமைந்திருக்கும் வினாக்களை இவர்களால் ஐயம் திரிபுறப் புரிந்து கொள்ள இயலாது. எனவே இத்தேர்வுகளில் இவர்கள் கலந்து கொள்வதேயில்லை. மேலும், அனைத்து மத்திய இளநிலை நுழைவுத்தேர்வுகளும் கொள்குறி வினா (objective type with multiple choice questions) வடிவத்திலேயே உள்ளது.

உதாரணமாக, இவ்வினாவைப் பாருங்கள்.

Pencilin is a

a.Discovery

b.Invention

c.Innovation

d.None of these

இவ்வேறுபாட்டை தமிழில் படித்த மாணவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

தமிழில் மத்திய இளநிலை நுழைவுத்தேர்வுகள் அமைக்கப்படாவிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

தமிழ் உட்பட இதர மாநிலத் தாய்மொழிகள் (இந்தியைத் தவிர்த்து) மெல்ல மெல்ல வருங்காலத்தில் பயிற்றுமொழியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு பாடமொழியாகும்.

தமிழில் படித்தால் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.அச்.எம், எய்ம்ஸ்... போன்ற மத்தியக்கல்வியகங்களுக்குள் நுழைய முடியாது என்ற அச்சத்தின் காரணமாக தமிழ் வழியில் படிப்போர் ஆண்டுதோறும் குறைந்து வருகின்றனர்.

75 விழுக்காடு பயிற்றுமொழியாயிருக்கும் தமிழ் பாடமொழியாகும அபாயம்.

தமிழ்நாட்டிற்குள் ஆங்கிலமும் இந்தியும் மேல் என்ற எண்ணம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

உதாரணமாக, ஐ.ஐ.டி.ஜெ.இ.இ., ஏ.ஐ.இ.இ.இ., ஏ.ஐ.பி.எம்.டி., எய்ம்ஸ்,... போன்ற நுழைவுத்தேர்வுகளின் விலையுயர்ந்த தனியார் புத்தகங்களை (ஆங்கில மொழியில் அமைந்தவை) தமிழக அரசு நூலகங்களில் வாங்குகிறது. தமிழில் கொண்டு வந்தால் தமிழ்வழி மாணவர்களும் பயன்பெறுவர். தமிழ் மொழியும் வளரும். தமிழ் மொழி வளர வாய்ப்பு உருவாக்கி கொடுப்போம்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழை மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் தான் அதிகளவில் தமிழ்வழிக்கல்வியில் படிக்கிறார்கள். மிகப்பெரும் பாதிப்பு இவர்களுக்கு.

தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்றுமொழியாக் கொண்டு எத்தனை மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுகிறார்கள்?

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 இலட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுகிறார்கள். இவர்களில் 6 இலட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைகிறார்கள். இவர்களில்,

தமிழ்வழியில் தேர்ச்சி பெறுபவர்கள் : 5 இலட்சம் ( 80 விழுக்காடு)

ஆங்கிலவழியில் தேர்ச்சி பெறுபவர்கள் : 1 இலட்சம் (25 விழுக்காடு)

ஏன் தமிழிலும் கொண்டு வரவில்லை?

தேர்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம்.

மேல் தட்டு ஆங்கிலவழியில் 12 ஆம் வகுப்பு பயில்பவர்களின் வெற்றி விழுக்காடு குறையும் என்ற அச்சம்.

9 இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தவர்களின் வெற்றி விழுக்காடு குறையும் என்ற அச்சம்.

நாம் எவ்வாறு மத்திய இளநிலை நுழைவுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கேட்கிறோம்?

மும்மொழியில் கேட்கிறோம்.

அதாவது இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட இதர மாநிலத் தாய்மொழிகளில் ஒன்று என மும்மொழிகளில் கேட்கிறோம். இந்த மூன்றாவது விருப்ப மொழியை மாணவர்கள் விண்ணப்பம் நிரப்பும் போதே கேட்க வேண்டும். இதனால் யாருக்கும் பாகமுமில்லை. நட்டமுமில்லை. அனைவருக்கும் ஒரே வினாக்கள் தான். ஆனால் மொழி தான் வேறு. எனவே திறமை தான் பரிசோதிக்கப்பட வேண்டுமே தவிர மொழியல்ல.

நடத்துவது எளிது.

மத்திய அரசின் அனைத்து இளநிலை நுழைவுத் தேர்வுகளும் கொள்குறி வினா வடிவத்திலேயே உள்ளது.

Objective type with multiple choice questions. 4 விடைகள் கொடுத்திருப்பார்கள், சரியான விடையைத் தேர்ந்தெடுத்து OMR விடைத்தாளில் பென்சிலால் shade செய்ய வேண்டும்.

எனவே மத்திய அரசுக்கு வினாத்தாள் மொழிமாற்றம் மட்டுமே தேவை. விடைத்தாள் மொழிமாற்றம் தேவையில்லை.

மேலும் மத்திய அரசுக்கு 22 மொழிகளிலும் தேர்வுகள் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனென்றால், 22 மொழிகளும் மேனிலைப் பள்ளி வரையில் பயன்பாட்டில் இல்லை.

நுழைவுத்தேர்வுக்குப் பிறகு அனைவருக்கும் ஒரே நிலைமை தான்.

மத்தியக் கல்வியகங்கள் அனைத்தும் பட்டப்படிப்பை ஆங்கிலத்திலேயே பயிற்றுவிக்கின்றன. எனவே தமிழில் நுழைவுத்தேர்வு எழுதினாலும் தெலுங்கில் இந்தியில் எழுதினாலும் அனைவருக்கும் நுழைவுத்தேர்வுக்குப் பிறகு இளநிலைப் பட்டப்படிப்பில் ஆங்கிலமேப் பயிற்று மொழி.

நடத்த முடியும் என்பதற்கான ஆதாரங்கள்:

1.இரயில்வேத் தேர்வுகள் நான்குமொழித்திட்டத்தின் (இந்தி, ஆங்கிலம், உருது மற்றும் மாநிலத் தாய்மொழிகளில் ஒன்று) மூலம் நடத்தப்படுகிறது.

2.பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) Constable க்கானத் தேர்வுகளை மும்மொழித்திட்டத்தின் (இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநிலத் தாய்மொழிகளில் ஒன்று) மூலம் நடத்துகிறது.

3.பாரத ரிசர்வ் வங்கி (RBI) இளம் மாணவர் ஊக்குவிப்புத் திட்டத்திற்கானத் தேர்வை (Young Scholar Award Scheme) இந்தி, ஆங்கிலம் மற்றும் இதர முக்கிய 11 மாநிலத் தாய்மொழிகளில் ஒன்று என நடத்துகிறது.

4.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (National Council for Education Research and Training) தேசிய திறனாய்வுத் தேர்வை (National Talent Search Exam) இந்தி, ஆங்கிலம் மற்றும் இதர முக்கிய 11 மாநிலத் தாய்மொழிகளில் ஒன்று என நடத்துகிறது.

தமிழ்நாட்டு மேனிலைப் பள்ளி பாடத்திட்டம் CBSE க்கு இணையில்லை. எனவே மத்திய இளநிலை நுழைவுத்தேர்வுகளைத் தமிழில் கொண்டு வந்தாலும் பயனில்லை என்பவர்களுக்கு:

தமிழ்நாட்டு மேனிலைப் பள்ளி பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையில்லாமல் இருந்தாலும் தமிழில் நுழைவுத்தேர்வுகள் வந்தவுடன் தனியார் நிறுவனங்கள் நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்திற்கேற்ப தமிழில் புத்தகங்களை வெளியிடும். சி.பி.எஸ்.இ. புத்தகங்களை தனியார் நிறுவனங்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும். இதனைத் திறமையான தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் படித்து வெற்றி பெறுவார்கள். அரசும் மெல்ல மெல்ல தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் மத்தியக் கல்வியகங்களில் நுழைவதைப் பார்த்து பாடத்திட்டத்தை CBSE க்கு இணையாக்கும். எனவே தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்டம் நுழைவுத்தேர்வை தமிழில் நடத்த ஒரு தடையல்ல.

மத்தியக் கல்வியகங்களில் பட்டபடிப்புகள் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

மத்தியக் கல்வியகங்கள் உலகத்தரத்திற்கு இணையானவை.

இலவசக் கல்வி, உண்டி, உறையுள், அதிநவீன நூலகம், தரமான ஆசிரியர்கள், ....என மாணவர்களுக்குத் தேவையான படிப்பு வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படுகிறது.

இளநிலைப் படிப்புகள் படிக்கும்போதே மாத மற்றும் வருட ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகிறது.

உதாரணமாக, ஆண்டுதோறும் 10,000 மாணவர்களுக்கு மத்திய அறிவியல் அமைச்சகம் DST-INSPIRE Scholarship வழங்குகிறது. இந்த Scholarship ஐ.ஐ.டி.ஜெ.இ.இ., ஏ.ஐ.இ.இ.இ., ஏ.ஐ.பி.எம்.டி.,... போன்ற நுழைவுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் வருடத்திற்கு 80,000 ரூபாய், இளநிலைப்பட்டப்படிப்பிலிருந்து தொடங்கி முதுநிலைப்பட்டப்படிப்பு வரை என 5 வருடங்கள் கொடுக்கப்படுகிறது.

KVPY Scholarship கொடுக்கப்படுகிறது.

படிப்பு தேர்ச்சி பெறும் வருடத்திலேயே, மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் (ISRO, DRDO, HAL, ADA,…..) மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் (GE, Honeywell, Bosch, Tata,……) வளாகத் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

உதாரணமாக, ISRO நிறுவனம் IIT யில் இருந்து பொறியாளர்களை வளாகத்தேர்வு மூலம் தெரிவு செய்கிறது. (பார்க்க: ISRO SC/CH/A22/114/2011 dated 03-11-2011). Order copy இணைக்கப்பட்டுள்ளது.

ரே பரேலியில் அமைந்துள்ள RGIPT நிறுவனத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வருடத்திலேயே ONGC, HPCL, IOCL,….போன்ற மத்திய அரசு சார்பு நிறுவனங்கள் தெரிவு செய்கின்றன.

மேலும் மத்தியக் கல்வியகங்களில் பயிலும் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளில் முதலிடம் கொடுக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டிலுள்ள மத்தியக் கல்வியகங்கள்:

இதில் அவலம் என்னவென்றால், தமிழ்நாட்டிலுள்ள மத்தியக் கல்வியகங்களில் கூட இளநிலை நுழைவுத்தேர்வுகள் தமிழில் கிடையாது. இதனால் தமிழ் மீடியம் மாணவர்கள் இக்கல்வியகங்களில் நுழைய முடியாது. இதனை மாற்ற வேண்டுமென்றால் தமிழிலும் நுழைவுத்தேர்வுகள் வேண்டும். நுழைவுத்தேர்வு முழுவதையும் தமிழில் நடத்து என்று கூட நாம் கேட்கவில்லை. தமிழிலும் வினாத்தாளை மொழிமாற்றம் செய்து கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். சிறிய ஒரு மொழிமாற்றம், இதைக்கூட மத்திய அரசுக்கு செய்ய முடியாது வேறு ஏதோ மறைவான திட்டம் உள்ளது என்று தானே அர்த்தம் கொள்ள வேண்டும்.

i.Proposed National Law School of Tamil Nadu, Thiruvarangam.

ii.Indian Institute of Technology (IIT), Chennai

iii.National institute of Technology (NIT), Trichy.

iv.Indian Institute of Information Technology, Design and Manufacturing (IIITDM), Kanchi.

v.Institute of Hotel Management (IHM), Chennai

vi.National Institute of Fashion Technology (NIFT), Chennai.

vii.Indian Maritime University (IMU), Chennai

viii.Central University of Tamil Nadu, Thiruvarur.

இந்தியைப் படித்திருந்தால் இந்நிலை வந்திருக்காது என்னும் மடையர்களுக்கு:

இந்தியை நாம் படித்திருந்தால் ஒரு மொழியாகவே படித்திருப்போம். அதாவது தமிழ் மீடியம் மாணவர்கள் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கற்பது போல இந்தியையும் கூடுதலாக ஒரு மொழிப்பாடமாகவே கற்றிருப்பார்கள். தமிழ் மீடியம் மாணவர்களுக்கு பயிற்று மொழித் தமிழ் மட்டுமே. எனவே இந்தியையும் ஆங்கிலத்தையும் மொழிப்பாடாக அவர்கள் படித்திருந்தால் கூட நுழைவுத்தேர்வை அவர்களால் எழுத முடியாது. எனவே, தமிழில் வினாத்தாள் தருவதே ஒரே தீர்வு.

தமிழில் வினாத்தாள் வழங்கப்படும் மத்திய அரசுத் தேர்வுகள்

1. Railway written exam question paper is provided in Tamil:

மாண்புமிகு. மம்தா பானர்ஜி அவர்கள் இரயில்வே அமைச்சராக இருக்கும் போது 2010-11 நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின்படி இரயில்வேத் தேர்வுகள் அனைத்தும் நான்குமொழித் திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வினாத்தாள்கள் நான்குமொழிகளில் அதாவது இந்தி, ஆங்கிலம், உருது மற்றும் தமிழ் உட்பட இதர மாநிலத் தாய்மொழிகளில் ஒன்று என அமைந்திருக்கும். அனைவருக்கும் மகிழ்ச்சியே. இரயில்வேத் தேர்வுகளில் நேர்முகத் தேர்வு இல்லாத்தும் மிகப்பெரிய பலமாகும். ஏனென்றால் அங்கும் மொழிப்பிரச்சினை தலைதூக்கி விடும். தற்போதைய Assistant Loco Pilot Railawy Job தேர்வு தமிழிலும் இத்திட்டத்தின் மூலமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் தமிழில் I.T.I. பயின்ற மாணவர்களும் இரயில்வேக்குள் நுழையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழில் படித்தாலும் இரயில்வேக்குள் நுழைய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Reference:

Highlights of Railway Budget 2010-11
RRB Centralised Employment Notice No.01/2011 dated 13-08-2011 for Assistant Loco Pilot.

2. Staff Selection Commission -Paramilitary question paper is provided in Tamil:

பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) 90,000 Constable பணியிடங்களுக்கானத் தேர்வுகளை மும்மொழித் திட்டத்தின் மூலம் நடத்துகிறது. இதன்படி, வினாத்தாள்கள் மும்மொழிகளில் அதாவது இந்தி, ஆங்கிலம், மற்றும் தமிழ் உட்பட இதர மாநிலத் தாய்மொழிகளில் ஒன்று என அமைந்திருக்கும். அனைவருக்கும் மகிழ்ச்சியே.

பார்க்க: Staff Selection Commission No.3/2/2011 – P&P dated 03-12-2011.

Recruitment of Constable (GD) in BSF / CISF / CRPF / SSB / ITBPF and Rifleman (GD) in Assam Rifles, 2012.

SSC No.3/2/2011 –P&P dated 03-12-2011.

3. Young Scholar Award Scheme of RBI question paper is provided in Tamil:

பாரத ரிசர்வ் வங்கி, இளம் மாணவர் ஊக்குவிப்புத் திட்டத்திற்கான (Young Scholar Award Scheme) தேர்வுகளை இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட 11 முக்கிய மாநிலத் தாய்மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனுடைய விளம்பரம் மற்றும் பாடத்திட்டம் கூட கீழ்க்கண்ட 11 மொழிகளிலும் வெளிவருகிறது என்பது போற்றுதலுக்குரியது.

1.தமிழ் 2. அசாமி 3. வங்காளி

1.குஜராத்தி 5. கன்னடம் 6. மலையாளம்

7. மராத்தி 8. ஒரியா 9. பஞ்சாபி 10. தெலுங்கு 11. உருது.

reference:  Advt copy of RBI’s Young Scholar Award Scheme in English, Hindi and 11 Regional languages.

4. NTSE exam of NCERT question paper is provided in Tamil:

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (National Council for Education Research and Training) தேசிய திறனாய்வுத் தேர்வை (National Talent Search Exam) இந்தி, ஆங்கிலம் மற்றும் இதர முக்கிய 11 மாநிலத் தாய்மொழிகளில் ஒன்று என நடத்துகிறது. 

1.தமிழ் 2. அசாமி 3. வங்காளி

1.குஜராத்தி 5. கன்னடம் 6. மலையாளம்7. மராத்தி 8. ஒரியா 9. பஞ்சாபி 10. தெலுங்கு 11. உருது.

reference: NCERT Information Brochure, 3.2.7. Medium, page no: 46.

இளநிலைத் தேர்வுகளில் தாய்மொழி குறித்து நடைபெறும் முக்கிய வழக்குகள்

அ. குஜராத்தி சாகித்திய பரிசத்தின் பொதுநல வழக்கு

குஜராத்தி சாகித்திய பரிசத் (Gujarti Sahitya Parishad) என்ற குஜராத்தி மொழி நிறுவனம் குஜராத்தி மொழியிலும் மத்திய இளநிலை நுழைவுத்தேர்வுகளை வரும் கல்வியாண்டிலிருந்து நடத்த வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கை 08-09-2011 அன்று குஜராத் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பார்க்க: Gujarti Sahitya Parishad vs Union of India Case

WP. PIL. 112 /2011 at Guajati High Court, Ahmedabad.  

ஆ. குஜராத்தி நவசரி அறக்கட்டளையின் பொதுநல வழக்கு

குஜராத்தி நவசரி அறக்கட்டளை (Gujarti Sahitya Parishad) என்ற குஜராத்தி மொழி நிறுவனமும் குஜராத்தி மொழியிலும் மத்திய இளநிலை நுழைவுத்தேர்வுகளை வரும் கல்வியாண்டிலிருந்து நடத்த வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கை அக்டோபர் 2011 ல் குஜராத் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பார்க்க: Gujarti Navsari Sayaji Vaibhav Pustaklaya Trust vs Union of India Case

WP. PIL. 143 /2011 at Guajati High Court, Ahmedabad.

இ. சமூக ஆர்வலர். ஓவியா அவர்களின் பொது நல வழக்கு

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர். ஓவியா என்பவர் ஐ.ஐ.டி.ஜெ.இ.இ. (IIT JEE) நுழைவுத்தேர்வை தமிழிலும் வரும் கல்வியாண்டிலிருந்து நடத்த வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கை டிசம்பர் 2011 ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பார்க்க: Ovia vs Union of India Case

WP. PIL. 30,230 /2011 at Madras High Court, Chennai.

ஈ. புலவர். பச்சைமாலின் பொதுநல வழக்கு

குமரியைச் சேர்ந்த புலவர்.பச்சைமால் (இயக்குநர், தமிழாலயம்) அனைத்திந்திய இளநிலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.) மற்றும் அனைத்திந்திய இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு (ஏ.ஐ.பி.எம்.டி.) களின் வினாத்தாட்களைத் தமிழிலும் மத்திய அரசு வரும் 2012-13 கல்வியாண்டிலிருந்து அளித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கை பிப்ரவரி 2012 ல் மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பார்க்க: Ovia vs Union of India Case

WP. PIL. 2239/2012 at Madurai Bench of Madras High Court, Chennai.

நாம் கேட்பது என்ன?

இந்நிலைப்பாடு இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ள அடிப்படை உரிமைகளான ‘அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு’ பிரிவு 14 மற்றும் 19 க்கு எதிரானது. (Article 14 – Right to Equality before law & Article 19 – Right to equal ooportunity).

கிராமப்பற மாணவர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் எதிரானது. ஏனென்றால் இவர்கள் தாம் தமிழ்ப்பள்ளிக்கூடங்களில் பெருமளவு பயில்கின்றனர்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் ‘பாரதம் பன்மொழிக்குடும்பங்களின் வலிமை வாய்ந்த ஒன்றியம்’ என்ற தத்துவத்தின்படி இயங்க வேண்டிய இந்திய ஒன்றியம், இந்தியைத் தவிர்த்துப் பிற மாநிலத் தாய்மொழிகளை நுழைவுத்தேர்வுகளில் நசுக்குவது ஏன்?

நமக்கு ‘தேசிய கீதத்தை’ வழங்கிய தாகூரின் கருத்துகளைப் பாருங்கள். “As a general rule, the mother tongue if it be one of the laeding vernaculars of India should be made the medium of instruction”.

இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்ற இவர் கீதாஞ்சலியைத் தமது தாய்மொழியான வங்காளியிலேயே இயற்றினார்.

கல்வி தொடர்பான உலகளாவிய அமைப்பான UNESCO ‘தாய்மொழியில் தான் கல்கி கற்பிக்கப்பட வேண்டும்’ என்று உறுதியாக்க் கூறுகிறது.

இராதாக்கிருட்டிணன் கல்விக்குழு முதல் கோத்தாரிக் கல்விக்குழு என அனைத்தும் ‘அடிப்படைக் கல்வி முதல் பல்கலைக்கழக்க் கல்வி பயிற்று மொழி தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளன.

நமது நாட்டுத் தந்தை காந்தியடிகள் தமது சுயசரிதையான ‘சத்திய சோதனை’யைத் தமது தாய்மொழியான குஜராத்தியிலேயே எழுதினார். அவரது நூலிலிருந்து சில குறிப்புகள்: “ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டுக்குரிய உயர்ந்த பண்புகளுடன் விளங்க வேண்டுமென்றால், அந்த நாட்டு இளைஞர்களுக்கு உயர்தரக்கல்வி மட்டுமின்றி எல்லாக் கல்வியையும் தாய்மொழி மூலமாகவே கற்பிக்க வேண்டும்.” மேலும் அவர் 22-06-1947 ல் தனது ‘அரிசன்’ இதழில் இவ்வாறுக் கூறினார் ”எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால் நான் இன்றே பிள்ளைகள் அந்நிய மொழி மூலம் கற்பதை நிறுத்தி விடுவேன். தாய்மொழி மூலம் கற்பிக்கும்படி கட்டளையிடுவேன். இம்மாற்றத்தை எதிர்ப்பவர்களை உடனே வேலையிலிருந்து நீக்கி விடுவேன்.”

தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட பல்வேறு மொழிக்குடும்பங்களின் ஒன்றியமாக இருக்கும் இந்தியக் கூட்டரசு இந்தி மொழிக் குடும்பத்திற்கு மட்டும் சாதகமான முறையில் நடந்து கொள்வது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விரோதமானதாகும். இது இந்தியைத் தாய்மொழியாய் கொண்டிராத தமிழர் உள்ளிட்ட பிற மொழிக்குடும்பங்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அனைத்து மொழிக் குடும்பங்களுக்கும் பொதுவான வளங்களை, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டும் அள்ளித்தரும் நடுவண் அரசின் மாற்றாந்தாய் மனப்பாங்கு, தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட ஏனையோர் மீது இந்தி மொழிக் குடும்பத்தினர் சார்பாக தில்லி தொடுக்கும் மறைமுகப் பண்பாட்டுப் போர். வாக்குறுதிகளை மீறி நடத்தப்படும் இந்தி திணிப்பு.

எல்லா மொழிகளையும் நாம் கற்கலாம். பற்பல மொழிகளைக் கற்று கொள்வது நம்முடைய சுதந்திரம். ஆனால் தாய்மொழி வழியே கல்வி பெறுவது நம்முடைய உரிமை. அது மட்டுமா? தாய்மொழியில் கற்பது நமது அறிவை, சிந்தனையை, படைப்பாற்றலை வெளிப்படுத்தும் திறனைப் பெருக்க உதவுகிறது என்ற ஆய்வுகளை நாம் மறந்து விடக்கூடாது.

இந்தி மொழிக்குடும்பத்தினர் தவிர்த்து தமிழர் உள்ளிட்ட ஏனைய மொழிக்குடும்பத்தினர் தத்தம் தாய்மொழியிலேக் கற்பதால் இளநிலை நுழைவுத்தேர்வுகளில் இழப்புகளைச் சந்திக்கும் வகையில் அவற்றை இந்தி அல்லது ஆங்கிலத்திலேயே நடுவண் அரசு நடத்துவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய இந்திய ஒன்றியம் இந்தி என்கிற ஒற்றை அடையாளத்தை ஏனையோர் மீது திணிக்க முயல்வதை தடுத்து நிறுத்துவோம். தமிழ் மாணவர்களே ஒன்று சேருங்கள்! உயிரினும் மேலான நம் தமிழ் காக்க, தாய்மொழியில் கற்கும் நம் உரிமை காக்க, உயர்கல்வி இளநிலை நுழைவுத்தேர்வுகளை தமிழ்மொழியிலும் நடத்து என்று இந்திய அரசை நோக்கி சங்கநாதம் முழங்கிட அணித் திரள்வோம்!

- சா.வாகைச்செல்வன்

Pin It