நீண்ட நாள் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் கடந்த ஆண்டு உத்திரப்பிரதேசம் போயிருந்தேன். தலைநகர் லக்னோவிற்கு டெல்லியிலிருந்து ரயிலில் போய் இறங்கினேன். காலை 8 மணி இருக்கும். நண்பர் லக்னோவில் பணிபுரியும் தமிழ்நாட்டுக்காரர். ரயில் நிலைய வாசலுக்கு வரும் போது நெரிசலில் சிக்கி என் செருப்பு அறுந்து போய்விட்டது. என்னை அழைத்து செல்ல வந்த நண்பர், ‘தூக்கிப் போடுங்கள். வேறு வாங்கிக் கொள்ளலாம்’ என்றார். எனக்கோ பிரிய மனமில்லை, ஒட்டவைத்து இன்னொரு இரண்டு மாதம் பயன்படுத்தலாமே என சொல்லி செருப்பு தைப்பவரைத் தேடினேன். ரயில் நிலைய வாசலில் பத்துக்கும் மேற்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளிகள் பெட்டியுடன் கடை போட்டிருந்தனர். ஒரு கடைக்குப் போனேன். பெட்டியில் பிறைச்சின்னமும் பிஸ்மில்லஹிர்ரஹ்மானிர்ரஹிம் என்கிற அரபு வாசகமும் இருந்தது. செருப்பை ஒட்டி முடித்து கடைக்காரருக்கு சலாம் வைத்து விட்டு நானும் நண்பரும் கிளம்பினோம்.

                நண்பர் நாங்கள் போக வேண்டிய இடத்திற்கு செல்ல ரிக்ஷாவை அழைத்தார். நான் ஆட்டோவில் செல்லலாம் என்றேன். ஆட்டோவை விட ரிக்ஷாவே சவுகரியம் என்றார் நண்பர். ஏறி உட்கார்ந்தோம். நண்பர் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. மிகக்குறுகலான சந்துடன் வளைந்து நெளிந்து வானத்தை தொட முயற்சித்துக் கொண்டிருந்தன. தங்கும் இடம் வந்தது. கீழே இறங்கினோம். ரிக்ஷாக்காரரை பணம் கொடுத்து அனுப்பி விட்டு அப்போதுதான் பார்த்தேன். ரிக்ஷாவின் பின்னால் பச்சைக்கலரில் இளம் பிறை நட்சத்திரத்துடன் ஜொலித்தது.

                அறைக்கு சென்று குளித்து செல்ல வேண்டிய இடம் செல்ல கிளம்பிய போது எங்களுக்கு சலாம் சொல்லி உள்ளே வந்தார் ஒருவர். கையில் கழிவறை சுத்தம் செய்யும் வாளி மற்றும் உபகரணங்களுடன் சுத்தம் செய்து விட்டு மீண்டும் சலாம் சொல்லிச் சென்றார். நாங்கள் அறையை விட்டு வெளியே கிளம்பினோம். உ.பி. முழுவதும் இப்படித்தான் முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மையினரின் நிலை. உ.பி. மட்டுமல்ல. பீகார், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெரும்பாலான முஸ்லிம்களின் அவலநிலை இதுதான்.

                இந்த அவல நிலையைத்தான் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்கிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் லோக்பால் மசோதா விவாதம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நள்ளிரவு வேளையில் காங்கிரஸ் கூட்டணி அரசு சிறுபான்மையினருக்கான 4.5 சத இடஒதுக்கீடு பற்றி மசோதாவை நடாளுமன்றத்தில் அவசர அவசரமாக தாக்கல் செய்தது. அதுவும் மிகப் பிற்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் 4.5 சதவிகதம் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர், பெளத்தர்கள், பார்சி உள்ளிட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது என அம்மசோதா கூறுகிறது.

                உண்மையில் 2001ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18.42 சதவிகிதம் இந்தியாவில் மேற்கண்ட சிறுபான்மையினர் உள்ளனர். ஏற்கெனவே 27 சதவிகித மிகப்பிற்பட்டோருக்கான பிரிவில் உள்ள இஸ்லாமியர் இதில் சுமார் 3 சதவிகிதம் வரை இடஒதுக்கீடு பலனை பெற்று வருகின்றனர். எப்படி தமிழ்நாட்டில் 3.5 சதவிகிதம் கொடுத்து- இருப்பதை கலைஞர் குறைத்தாரோ அதே போல் அவருடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் தற்போது இருப்பதைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த இடஒதுக்கீடு மோசடியைக் கூட பாரதீய ஜனதா கட்சியால் ஏற்க இயலவில்லை. அது வைத்திருக்கும் சில அடிமைகளில் முதலாமானவரான ஷானவாஸ்கான் முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிக்காதீர்கள் என கூச்சலிடுகிறார். இந்த இடஒதுக்கீடு 2001 ஆண்டு மே மாதம் 27ம் தேதி ரங்கநனாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்ததால் கொடுத்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் அலி அன்வர் அன்சாரி இந்த 4.5 சதவிகித இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என தன்னிடம் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்ததாக சொல்கிறார். அது குழம்பியுள்ள முஸ்லிம்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

                சல்மான் குர்ஷித்தோ இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் காங்கிரஸிற்கு வாக்களித்தால் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டில் 9 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு கொடுக்கப் போவதாக கூறி பெரும் சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார். உடனே தலைமை தேர்தல் ஆணையர் சலாஹுதீன் யாகூப் குறைஷி இது விதிமீறல் என நோட்டிஸ் அனுப்ப - பிரச்சனை சூடு பிடித்தது. இது ஒன்றும் விதி மீறல் அல்ல- எங்களின் 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே இதை சொல்லியிருக்கிறோம். தேர்தல் ஆணையமே மத்திய அரசிற்கு உட்பட்டதுதான். எனவே எனக்கு நோட்டிஸ் அனுப்ப தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை என பதில் சொன்னார் சல்மான் குர்ஷித்.

                தேர்தல் ஆணையத்தின் சுயேட்சையான அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என மன்மோகன் சிங் சமாதானக்கடிதம் எழுத பிரச்சனை பஞ்சாயத்தில் நிற்கிறது. எப்போதும் மன்மோகன் சிங்கிற்கு தான் எல்லோரும் கடிதம் எழுதுவார்கள் முதன் முறையாக மன்மோகன் கடிதம் எழுதியுள்ளார், இறுதியில் 4.5 சதவிகித இடஒதுக்கீட்டிற்கும் தேர்தல் ஆணையம் தற்போது தடைவிதித்துள்ளது. தேர்தல் முடிந்த பின்னரே இது அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

                ஏற்கெனவே ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் தனது பரிந்துரையில் 27சதவிகித இடஒதுக்கீட்டில் மொத்த சிறுபான்மையினருக்கு 8.4 சதவிகிதம். அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் 6 சதவிகிதம் இடஒதுக்கீடு மத்திய அரசு பணிகளில் கொடுத்திட வேண்டும் என்றும் அல்லது சிறுபான்மையினருக்கு தனித்த 15 சத இடஒதுக்கீடும் அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் 10 சத இடஒதுக்கீட வழங்கிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் மண்டல் குழு அந்தக்காலத்தில் பரிந்துரைத்த 4.5 சத இடஒதுக்கீட்டை அதுவும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்குமானது என்ற ஒட்டு மொத்த அறிவிப்பை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் ஏற்கவில்லை. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - போராட்டம் என தங்களுடைய எதிர்ப்பை மிகச் சிறிய அளவிலேயே இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்தன. தமிழகம் தவிர்த்து ஏனைய பகுதிகளில் அதுவும் இல்லை. இடஒதுக்கீடா அது எந்தக் கடையில் கிடைக்கும் என்கிற மனோ நிலையே வட இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்களிடம் உள்ளது.

                 ஏற்கெனவே நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையிலான கமிஷன் - அதையயாட்டி அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகிய கமி­ன்களில் எந்த கமிஷனின் அறிக்கையையும் மத்திய அரசு முழுமையாக அமுல்படுத்தவில்லை. கமிஷனை கிடப்பில் போடு அல்லது கமிஷன் தலையில் கல்லைப்போடு என்றே மத்திய அரசு நினைக்கிறது.

                சச்சார் கமிஷன் பரிந்துரைகளில் முஸ்லிம்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அஷ்ரப் அதாவது முன்னேறிய சமூகத்தினர் - அஜ்லப் அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அர்ஸல் என கமிஷன் பிரித்த நிலையில் ஒரு விஷயத்தை அது மிகத் தெளிவாக படம் பிடித்துக் காட்டியது. மத்திய அரசின் பெரும்பாலான துறைகளில் பழங்குடியினர் மற்றும் தலித்களை விட முஸ்லிம்கள் மிகமோசமான நிலையில் இருப்பதுதான் அது. தற்போதைய நிலையில் முஸ்லிம்கள் இந்தியாவில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 5 ல் 1 பங்கை தீர்மானிக்கக் கூடிய சக்தி பெற்றவர்களாக உள்ளனர்.

                இவ்வளவு பலத்தோடு இருந்தாலும் 3ல் 1 பங்கினர் வறுமையோடு போராடுவதால் அரசியல் அதிகாரத்தில் மிகப் பின்தங்கியே உள்ளனர். தமிழ்நாட்டில் லெப்பை - பக்கிர்கள் என பின்தங்கிய முஸ்லிம்களை இனம் கண்டு இடஒதுக்கீட்டு பட்டியலில் அறிவித்துள்ளதைப் போலவே இந்திய அளவிலும்முஸ்லிம்களில் 35 பிரிவினர் மிகப் பிற்பட்டோர் பிரிவில் உள்ளதாக மத்திய அரசு அறித்தது. 27 சதவிகித இடஒதுக்கீட்டில் சுமார் 3.5 சதவிகிதம் வரை முஸ்லிம்கள் பயன் பெற்று வந்தனர். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட 4.5சதவிகித இடஒதுக்கீடு அதாவது அனைத்து சிறுபான்மையினருக்கும் என்பது இருப்பதை குறைப்பதை தவிர வேறொன்றுமில்லை.

                1950 களில் மத்திய அரசு அறிவித்த இந்து மதத்தை தவிர வேறுயாரும் மதரீதியான இடஒதுக்கீடு பெற முடியாது என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 341 வது பிரிவின் மோசடி சட்ட ஷரத்தை வைத்துக் கொண்டு பாரதீய ஜனதா போன்ற மதவெறி சக்திகள் இன்றைக்கும் முஸ்லிமகளை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. எனவே இன்றைக்கும் பயந்த நிலையிலேயே முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதால் தங்களுடைய உரிமைகளை கேட்பதில் கூட மிகவும் பின்தங்கியுள்ளனர்.

                இட ஒதுக்கீடு கோரிக்கையை பொறுத்தவரை முஸ்லிம்கள் மூன்றுவிதமான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். ஒரு பிரிவினர் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்றும் இன்னொறு பிரிவினர் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவினர் முஸ்லிம்களில் உள்ளனர். அதாவது சச்சார் கமிட்டி கூறியுள்ள அஜலப் - அர்ஷல் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்கினால் போதும் என்றும் மற்றொரு பிரிவினரோ முஸ்லிம்களில் உள்ள தலித்களுக்கு மட்டும் அதாவது அர்ஸல்கள் என சச்சார் பிரிக்கும் பிரிவிற்கு மட்டும் இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

                மத்திய அரசோ நாலரையை கொடுத்து ஏழரையை தொடங்கி வைத்திருக்கிறது.

                உண்மையில் இந்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு சம்பந்தமான கோரிக்கை இதுதான். மத்திய அரசு பணிகளில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய அனைவருக்கும் குறைந்தபட்சம் 10 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்றிட வேண்டும். மாநில அரசுகள் தங்களது அரசு பணிகளில் கல்வி நிறுவனங்கில் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும், அது மட்டுமல்ல அனைத்து தனியார் நிறுவனங்களிலும் நாம் முழுமையான இட ஒதுக்கீட்டை பெற்றிட வேண்டும்.

இதற்காக அரசியலமைப்புச் சட்டம் 341ன் பிரிவில் உள்ள இந்துக்களில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோருக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்கிற ஷரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களில் உள்ள அனைத்து பின்தங்கியோருக்கும் இடஒதுக்கீடு வழங்கிடும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

எத்தனையே கோரிக்கைகளை முஸ்லிம் சமூகம் முன் வைத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் சமூகத்தின் ஒற்றுமையின்மையே அவற்றிற்கு தடைக் கற்களாக உள்ளது. இதைப் புரிந்து கொண்டாலே வெற்றி நமக்கு மிகச் சமீபத்தில் வந்துவிடும்.

(நன்றி - சமநிலைச் சமுதாயம்)

Pin It