தமிழ் அறிவியல் பரப்புதல் வரலாற்றைத் தமிழ் அச்சு ஊடக வரலாறு மற்றும் இந்தியக் கிறித்தவச் சமய வரலாறு என்ற இரண்டு நிலை களுடன் இணைத்தே ஆரம்பிக்க வேண்டும்.  கிறித்தவச் சமயத்தின் வரவு தமிழ் அச்சு ஊடகத்தைத் தோற்றுவித்தது மட்டுமல்லாமல் ஐரோப்பிய அறிவியலைத் தமிழில் எழுதும் கற்பிக்கும் முறை யையும் அறிமுகப்படுத்தியது.  ஏனெனில் அறிவியல் செய்திகள் பரவுதல் எனும் போது முதன்மையாக அச்சு இயந்திரங்கள் மற்றும் தமிழ் அச்சு, சமூகப் பொருளியல் சூழல், இலக்கிய படைப்பாளிகள் மற்றும் அதற்கான வாசகர்களும் கிறித்தவ சமய நூல்களை அச்சிடத் தொடங்கிய கால கட்டத்தி லேயே ஏற்பட்டது.  தொடக்கக் காலத்தில் சீர்திருத்த கிறித்தவ மிசனரிகள் வாழ்நாள் முழுவதும் ஒரு கையில் விவிலியத்தையும், மறு கையில் அறிவிய லையும் எடுத்துக் கொண்டனர்.  இவர்களில் அச்சகம் தோன்றிய தொடக்கக்காலத்தில் அறிவியலை வளர்த்தவர்களில் முக்கியமானவர் சீகன்பால்கு.  இவர் தரங்கம்பாடியில் எஸ்.பி.சி.கே. சங்கத்தினர் உதவியால் 1712-இல் அச்சகத்தை அமைத்தார்.  அதன் பிறகு சில அச்சகங்கள் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது என்றாலும், இக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு அச்சகம் தோற்றுவிக்கும் வாய்ப்பு இல்லாமல், தமிழர்கள் தாமாகவே நூல்கள் அச்சிட்டு வெளியிடத் தடையும் இருந்தது.  இது தவிர இந்திய மொழிகளில் எது எழுதப்பட்டாலும், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற சட்டத்தையும் ஆங்கிலேயர் உருவாக்கி இருந்தனர்.  1835-இல் இதற்கு ஒரு விடியலாக, தமிழர்களுக்கு அச்சுக்கூடம் நடத்தக் கூடாத உத்தரவு நீக்கப்பட்டதன் விளைவாகப் பல அச்சுக்கூடங்கள் தமிழகத்தில் சென்னை, நெய்யூர் போன்ற நகரங்களில் பரவலாகத் தோன்றின.  தொழிற் புரட்சியைத் தொடர்ந்து உலக அளவில் நிகழ்ந்த மாற்றங்கள் தமிழகத்தில் ஐரோப்பியர் வருகைக்குப் பின் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின.  இதில் முக்கியமானது கல்வி பொதுமையாக்கப் பட்டது ஆகும்.  தமிழகத்தில் அச்சுக்கூடங்கள் தொடங்கப்பட்டதன் தொடர்ச்சியாக அறிவியல் வாசகர்கள் பல சமூகத்தினரிடையே உருவாயினர்.  இதன் காரணமாக அறிவியலைப் பரப்பப் பல யுத்திகள் கையாளப்பட்டன.

ஐரோப்பிய மிசனரிகளின் பணி :

கிருத்தவ அறிவியல் நூல்களைப் பற்றி ஆராய வேண்டுமெனில் 1818-ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட, “காலரா” துண்டறிக்கையிலிருந்தே ஆரம் பிக்க வேண்டியதாய் உள்ளது.  அச்சு ஊடகத்தில் தமிழில் அறிவியல் என்பதன் அடிப்படையில் நோக்கும் போது நண்பர்களுடன் இரேனியஸ் கிறித்தவ அறிவு பரப்பும் சங்கத்தின் சார்பில் ஆரம்பித்த சென்னை துண்டறிக்கைச் சங்கத்தின் (Madras Christian Tract Society) காலரா குறித்த பிரசுரமே முதல் அறிவியல் பரப்புதலுக்கான துண்டறிக்கை ஆகும்.  இதனை எழுதி வெளியிட்டு இரேனியஸ் விநியோகித்ததுடன் கிறிஸ்தியான் என்ற வாசகர்களையும் அனுப்பி படித்துக் காட்டவும் செய்தார்.  இரேனியஸ் சென்னையிலிருந்து 1832-இல் திருநெல்வேலிக்குச் சமய ஊழியம் செய்ய மாற்றப்பட்ட நிலையில் அவ்வூரிலும் காலரா பரவி உயிர்களைக் கொள்ளை கொண்டதை அறிந்து, துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, நோய்க்கான தடுப்பு முறையைப் பின்பற்ற மக்களுக்கு உதவினார்.  இது தூத்துக்குடி, திருவில்லிப்புத்தூர், தென்காசி, சிவகாசி போன்ற ஊர்களில் பரவிய காலராவையும் தடுக்க பெரிதும் உதவியது.  இத்துண்டரிக்கைச் சங்கத் தாரின் சார்பில், “நிம்மே” என்பாரின் காலரா குறித்த பிரசுரம் 1844-இல் வெளியாகி, மறுபடியும் பிரசுரிக்கப்பட்டது.  கிறித்தவ அறிவைப் பரப்பும் சங்கம் அதன் துண்டறிக்கைச் சங்கத்தைத் தாண்டி 1831-இல் தமிழ் மேகசின் என்ற இதழையும் தொடங்கியது.  இவ்விதழ் செய்தித்தாள் வடிவில் வெளிவந்த முதல் இதழாகக் கருதப்படுகிறது.  இதில் பொதுச் செய்திகளுடன் அறிவியல் கட்டுரை களும் வெளிவந்துள்ளன.

கிறித்தவ அபிவிருத்திச் சங்கம் :

கிறித்தவ நிறுவனங்களில் நூல் வெளியீட்டில் முக்கிய இடம் வகிப்பது எஸ்.பி.சி.கே. (Sokiciety for Promotion of Christian Knowledge) எனப்படும் கிறித்தவ அறிவு விருத்தி சங்கத்தார் ஆவர்.  இது லுத்தரன் பிரிவு சீர்திருத்த கிறித்தவ சார்புடைய சங்கம்.  இதன் முக்கியக் குறிக்கோள் மதமாற்ற மல்ல, மாறாகப் பள்ளிக்கூடங்கள் நடத்துவது, நூல்கள் வெளியிடுவது என்பதுதான் என்றாலும், முக்கியமாக இத்தகைய செயல்பாடுகள் மூலம் மக்களிடம் கிறித்தவ அறிவினை வளர்ப்பது என்பது, அதன் அடிப்படைக் கொள்கை, 1712-இல் கி.அ. சங்கத்தார் துணையுடன் சீகன்பால்கு அச்சகத்தை நிறுவி, பொறையாற்றில் காகித ஆலை, மை தயாரிப்பு எனப்பல துணை நிறுவனங்களையும் நிறுவினார்.  தொடக்கக் காலத்தில் பிரதிகள் அதிகம் அச்சாகவில்லை என்றாலும், இந்த நூல் களுக்குக் கற்றவர் மத்தியில் வரவேற்பு இருந்தது.  மேலும் இந்நூல்கள் இலங்கைக்குக் கூடச் சென்றது.  கி.அ. சங்கத்திற்கு 1830-களிலேயே ஐந்திற்கும் மேற்பட்ட அச்சுக்கூடங்கள் உடைமை யாக இருந்தன.

இச்சங்கம் மத நூல்கள், அறிவியல் நூல்கள், பள்ளிக் கல்விக்கான நூல்கள் ஆகியவற்றை வெளி யிட்டது. இச்சங்கத்தின் வழியாக “எரிமலையும், பூமியதிர்ச்சிகளும் சிருஷ்டிப்பின் வேறு அதிசயங் களும்” எனும் நூல் 1894-இல் வெளிவந்தது.  இந்துக் களின் பாரம்பரிய புராணக் கருத்துக்களை மறுத்து அறிவியல் ரீதியாகப் புவியியல் நிகழ்வுகளை விளக்க வேண்டும் என்பது இந்நூலின் நோக்கமாகும்.  இது போலவே “பூகோள சாஸ்திரம் ஜோதி சாஸ்திரம்” என்ற நூலும் (1891) ஜோதிட சாஸ்திரத்தைச் சாடுவதாக எழுதப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிப் பாடப்புத்தக சங்கம் (1820) :

ஆரம்ப காலங்களில் மிசனரிகளே நவீன பள்ளிகளைத் தமிழகத்தில் நிறுவினாலும், பிறகு கிழக்கிந்திய கம்பெனியும் பள்ளிகளை நிறுவத் தொடங்கி, பின் பாட நூல்கள் தேவைக்காக, சென்னைப் புத்தகச் சங்கம் (Madras School Book Society) எனும் நிறுவனத்தை 1820-ஆம் ஆண்டு ஆளுநர் மன்றோ ஆதரவினால் நிறுவியது.  பாட நூல்களோடு டி.வெங்கடாச்சாரி மொழிபெயர்த்த கணித நூல்களையும் வெளியிட்டுள்ள இச்சங்கம், பிறகு புதிப்பிக்கப்பட்டு வட்டார மொழிச்சங்கமாக மாறியது.  இப்புத்துயிர்ப்புக்குக் காரணம், இந்திய சீர்திருத்தவாதிகள் ஆவர்.

நீராவி இயந்திரத்தினை வடிவமைத்த ஜார்ஜ் ஸ்டிவென்ஜன் குறித்து தமிழிலும் மற்றும் நீராவி இயந்திரம் குறித்து தமிழிலும் தெலுங்கிலும் நூல்களை 1868-இல் இச்சங்கம் வெளியிட்டது.  இந்நூலின் முதல் பகுதியில் நீராவியைப் பற்றியும், இரண்டாம் பகுதியில் நீராவி இயந்திரம், மற்றும் நீராவிக்கப்பல் பற்றியச் செய்திகளும் கூறப்பட்டு உள்ளன.

ஓர் அறிக்கையின்படி வட்டார மொழி இலக்கியச் சங்கம் சுமார் 30-க்கும் மேற்பட்ட நூல்களை வெளி யிட்டுள்ளது என்பது புலனாகிறது.  இச்சங்கம் ஜனவினோதினி இதழை வெளியிட்டதோடு, அதில் வெளியான சுவையான கட்டுரைகள் மறுபதிப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்து 1875-இல் 8000-த்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகி உள்ளன.  வட்டார மொழிச்சங்கம் என்ற சென்னை பாடநூல் நூல் நிறுவனம் முதல் முதலான கிறித்தவ மத நிறுவனம் அல்லாது பொதுப் பொருண்மை களுக்கான நூல் வெளியீட்டிற்கான நிறுவனம் என்று நினைத்தாலும் இதில் பல நூல்கள் கிறித்தவ பாதிரியார் எழுதிய நூல்களுக்குப் பதிலுரைப்ப தாகவே காணப்படுகிறது.  1867-லிருந்து 1900 வரை யிலான காலத்தில் வெளியான தமிழ் நூல்களில் அறிவியல் நூல்கள் சரிபாதி மிசனரிகள் எழுதியது.  ஆனால் நான்கில் ஒரு பகுதி சென்னை புத்தக சங்கம் வெளியீடு ஆகும்.  கி.அ. சங்கத்தைப் போன்று இச்சங்கம் “பூகம்பம், எரிமலை இவைகளின் வரலாறு” எனும் நூலினை 1884-ஆம் ஆண்டு வெளியிட்டது.  இந்நூலை கி.அ.ச. வெளியிட்ட நூலுடன் பொருத்திப் பார்க்கும் போது அந் நூலின் புராண, பாரம்பரிய கருத்துக்களை மறு தலிப்பதாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.  இதுபோலவே திருவேங்கட ராமானுஜ ஐயர் 1889-இல் எழுதிய “பூகோள பகோள சாஸ்திரம்” எனும் நூலும் மிசனரிகள் பாரம்பரியக் கலாச்சாரத்iயும் அறிவு வடிவையும் விமர்சிப்பதை எதிர்க்கும் விதமாக, பூகம்பம், எரிமலை இவைகளைப்பற்றி மக்களிடம் உள்ள அச்சத்தை நீக்கும் நோக்குடன் எழுதப்பட்டுள்ளது.

கிறித்தவ வட்டார மொழிக் கல்விச் சங்கம் :

இந்தியப்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்று விக்கவும், இந்தியாவின் முதன்மை மொழிகளில் கிறித்தவ இலக்கியங்களை வெளியிடுவதையும் குறிக்கோளாகக் கொண்டு இச்சங்கம் தொடங்கப் பட்டது.  இதற்கு ஜான்முர்டாக் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு தென்னிந்திய கிறித்தவ பள்ளிப்பாட நூல் சங்கத்தை (South Indian Christian School Book Society) 1854-இல் உருவாக்கினார்.

இச்சங்கத்தின் அறிக்கையில் “அரசு நிதியுதவியினை எதிர்நோக்கும் கிராமப் பள்ளிகளில் தற் பொழுது பயன்பாட்டிலுள்ள நூல்கள் ஒதுக்கப் பட்டு புவியியல், வரலாறு மற்றும் அறிவியல் நூல்கள் புகுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.  அவரது அறிவியல் நோக்கைப் பிரதி பலிக்கிறது.  19-ஆம் நூற்றாண்டின், நடுப்பகுதியில் இச்சங்கம் மிகப் பெரிய அச்சு சக்தியாகவும், பிற்பகுதியில் கல்வி குறித்த நூல்கள் வெளியிடு வதில் முதன்மை நிலையையும் வகித்தது.  இவைகள் மிசனரிகளின் பள்ளிகளில் படித்த சமூகத்தின் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்தன.  இப் பள்ளிகள் பெரும்பாலும் தாய்மொழிக் கல்வியையே ஆதரித்தன.  இச்சங்க வெளியீட்டு நூல்கள் ஏனை யோர் நடத்தும் பள்ளிகளிலும் பயன்படுத்தப் பட்டது.

பள்ளி நூல்களைத் தவிர பொது அறிவியல் நூல்களையும் இச்சங்கம் வெளியிட்டது.  எ.கா. : 1872-இல் சாற்ஜென்றையர் (Sargent) “இயற்பியல் குறித்த நூல் தத்துவ சாஸ்திரம் விளங்கிய பல வகைத் தோற்றங்களுடைய பிரகிருதி பிரமாணங் களை விளக்கிய நூல்.”  இது டாக்டர் ஆர்னப் என்பவர் ஆங்கில மொழியில் எழுதிய நூல்களி லிருந்து செய்திகளைத் தொகுத்து தமிழர்களுக்கு விளங்கும்படி தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் ஒரு கால கட்டத்தில் சரியாக நடைபெறாத காரணத்தால் 1857 முதல் 1859 வரையான காலத்தில் வட்டார மொழிச் சங்கம் (Vernacular Society) என்பதை முர்டாக் நிறுவினார்.  பிறகு இதனையே நாளடைவில் (1891) கிறித்தவ இலக்கிய சங்கம் (CLS) என்று பெயர் மாற்றம் செய்தார்.  இது இன்று வரை தொடர்ந்து பல நூறு நூல்களை வெளியிட்டு சிறப்பாகப் பணி யாற்றி வருகிறது.

அறிவை பரவச் செய்யும் சபை :

இலக்கிய பதிப்பியலில் உ.வே.சாமினாதையர் வரலாறு படைத்ததைப் போல் தமிழ் இதழியல் துறையில் விவேக வசிந்தாமணி இதழின் மூலம் அறிவைப் பரப்பச் செய்யும் நோக்கத்தில் வெற்றி கண்டவர் சி.வி. சாமிநாதையர்.  1892-ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் தொடங்கிய இவ்விதழ் சி.வி. சாமிநாத ஐய்யரால் 1892-இல் தொடங்கப்பட்ட “அறிவை பரவச் செய்யும் சபை” என்ற அமைப்பின் சார்பில் வெளிவந்தது.  “நாட்டுப் புறங்களில் பத்திரிகைகளைப் பரவச்செய்து அது மூலமாக ஜனங்களுக்குப் படிப்பில் பிரியமுண்டாகும்படி செய்ய வேண்டும் என்பதும் கிராமாந்தரங்களி லுள்ள ஜனங்கள் படிப்பதில் பிரியம் வைத்துப் பத்திரிகைகளையும், சிறு புஸ்தகங்களையும் வாசிக்க ஆவல் கொண்ட பின் அவைகள் சுலபமான விலைக்குக் கிடைக்கும்படி செய்து பத்திரிக்கை களாலும் சிறு புஸ்தகங்களாலும் ஜனங்களுக்கு அறிவூட்டும்படி, விவேகத்தை விசாரிக்கச் செய்து பொது விஷயங்களில் அவர்களுக்கு அக்கரை யுண்டு பண்ண வேண்டும் என்பதும் இன்றும் பல விதத்திலும் கிராமாந்திர ஜனங்கள் நிலைமையை அவர்கள் சொந்த முயற்சியால் விருத்திக்குக் கொண்டுவர என்ன, என்ன வழி வகைகளுண்டோ அவைகளையெல்லாம் தேட வேண்டும்” என்ற பிரகடனத்துடனேதான் அறிவை பரவச் செய்யும் சபையினால் விவேக சிந்தாமணி இதழ் தொடங்கப் பட்டது.

கட்டுரைகளைப் படித்து ஒப்புதல் அளிக்கக்குழு :

விவேக சிந்தாமணி சுகாதாரம், இயற்பியில், வேதியல், தாவரயியல், தொடர்பான கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டுள்ளது.  இவ்விதழில் வெளி யான அறிவியல் இலக்கியக் கட்டுரைகள் 1896-ஆம் ஆண்டு முதல் “விவேக சிந்தாமணி பிரசுரங்கள்” என்ற தலைப்பில் அரசு உதவியுடன் வெளியிடப் பட்டுள்ளன.  சுகாதாரம் தொடர்பான கருத்துக் களை மக்களிடம் கொண்டு செல்வதை விரிவு படுத்த விரும்பி 1899-ஆம் ஆண்டு அறிவு பரப்பு வதற்கான சபையின் ஆலோசனைக் குழுவில் அப் போதைய ஸானெடரி கமிஷனர், டாக்டர்கள், வித்தியா இலாக்கா தலைவர் போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.  இவ்வாலோசனைக்குழு பொது சுகாதாரம் குறித்த கட்டுரைகளைப் படித்து ஒப்புதல் அளித்த பின்னரே வெளியிடப்பட்டு உள்ளன.

சபைக்குக் கிளைகள் :

விவேக சிந்தாமணியின் வாசகர்கள் இந்தச் சபையின் கிளைகளை, தமிழகம் முழுவதும் தொடங்கி யுள்ளனர்.  அங்கு இவ்விதழில் வெளி வரும் கட்டுரைகள் பொது மக்களுக்கும், சிறுவர் களுக்கும் வாசித்துக் காட்டப்பட்டுள்ளன.  கட்டுரை களை வாசிக்கும்போது புரியாத இடங்களுக்குக் கிளை உறுப்பினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.  இக்கூட்டங்களுக்கு வரும் சிறுவர்களிடம் வாசித்துக் காட்டப்படும் செய்திகளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டுச் சிறு பரிசுகள் உள்ளூர் கிளைச் சங்கங்களால் வழங்கப்பட்டுள்ளன.  கிளைச் சங்கங்கள் தங்களின் பணிகளைப் பற்றிய அறிக்கைகளை அனுப்பி உள்ளனர்.  இவ்வறிக்கை களை விவேக சிந்தாமணி வெளியிட்டுள்ளது.  உள்ளூர் சங்கங்களின் அறிக்கைகளில் சுகாதாரம் பற்றிய உரைகள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்று உள்ளன. இந்த அறிவைப் பரப்பும் சபைக்கு முன்பே கூட வெளியீடுகளும் வெளியீட்டு நிறுவனங்களும் இருந்தது எனினும் இச்சபையே முதன் முதலில் கிளைகளைத் தோன்றுவித்து இயக்கமாக இயங்கியது. இந்த அமைப்பின் நோக்கம் அக்காலக்கட்டத்தில் அறிவு பரப்புதலுக்கு எடுத்துக் கொண்ட மிகப் பெரிய செயல் என்றால் மிகையில்லை.

சபையின் நோக்கங்கள் :

1.    உபயோகமான விஷயங்களைப் பற்றி ஜனங்களுக்கு அறிவுண்டாகும்படி செய்வது.

2.    தற்காலம் ஆங்கிலவித்தை பரவி வருவதால் கற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரிவுண்டாகி பேதம் அதிகரித்து வரு வதைத் தடுத்து; ஒருவர் கற்ற கல்வியின் சாரத்தை மற்றவன் அறியப் புகட்டு வதற்கு உற்றதோர் உதவியாக விருந்து இருதாரருக்கும் ஒரு மனப்பட்டு வாழும் படி செய்ய வேண்டுமென்பது.

3.    இந்நோக்கங்களைக் கொண்டுழைக்கும் இதர சங்கத்தாரோடு ஒத்துழைக்க வேண்டு மென்பது.

4.    பொது அறிவை மக்களிடம் பரப்பத் தமிழில் இதழ் நடத்துவது, சங்கத்தின் கருத்துக்களைக் கிராமப்புறங்களுக்கும், நகர் புறங்களுக்கும் எடுத்துச் செல்ல உதவியாளர்களைக் கொண்ட அமைப்பைத் தோற்றுவிப்பது.

5.    சங்கத்தின் கருத்துக்களைப் பரப்ப குறிப் பிட்டத் துறை சார்ந்தவர்களை பயன் படுத்திக் கொள்வது.  கிராம அமைப்புகள் வழி.  கிராம, நகர் புறங்களில் படிப்பறை களை நிறுவுவது, விரிவுபடுத்துவது, ஏற் பாடு செய்வது போன்றவைகள் ஆகும்.

அந்நாளில் புகழ்மிக்க தமிழ் அறிஞர்கள் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி, பி.ஆர். ராஜம் அய்யர், அ. மாதவைய்யா எனப் பலரும் விவேக சிந்தாமணியோடு தொடர்புடையவராகத் திகழ்ந்தனர்.  இவ்விதழ் தொடர்ந்து நாட்டுப்புறக் கல்விக்காவும், நகர்புற இலக்கியத்திற்காகவும் வாழ்வியல் சார்ந்த ஆன்மீகத்திற்காகவும் முழுமை யாகத் தன்னை அர்பணித்துக் கொண்டு அறிவு பரப்பும் சபை மூலம் தமிழர்களின் அறிவியலை மேம்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.

தமிழர் கல்விச்சங்கம் :

தமிழர் நேசன் திங்களிதழாக மெட்ராஸ் ஸ்கூல் புக் அண்ட் வெர்னாகுலர் லிட்டரேச்சர் சொசைட்டியின் சார்பாக இது (1917) தமிழர் கல்விச் சங்கத்தால் வெளியிடப்பட்டது. இது வெளிவந்த முழுமையான அறிவியல் இதழ் என்றாலும், இதில் சில இலக்கியக் கட்டுரைகளும் இடம் பெற்றிருந்தது.  ஆனால் தமிழின் முழுமை யான அறிவியல் இதழ் என்று கூறும் அளவுக்கு, அனைத்துப் பக்கங்களிலும் அறிவியல் செய்திகள் இடம்பெற்று, சென்னையில் அறிவியல் விழிப் புணர்ச்சி வேண்டி வெளிவந்த மாத இதழ் தமிழ் நேசனே ஆகும்.

ஆங்கிலம் அறிந்தவர்களின் அக்கரை :

தமிழர் கல்விச்சங்கம், ஆங்கிலத்தில் எழுதி னாலும், பேசினாலும் பெருமை என்று எண்ணியக் காலத்தில், ஆங்கிலம் நன்கறிந்த சிலர் தமிழர் மீது மிகுந்த அக்கரைக்கொண்டு, அவர்கள் மேன்மை யடைய பரந்த கல்வி அறிவுடன் மேனாட்டாரைப் போல் பல துறை அறிவுப்பெற்றுத் திகழ வேண்டும் என்ற சிந்தனையின் விளைவாகவே, “தமிழர் கல்விச் சங்கம்” உருவானது.  இச்சங்கத்தில் தீவிரம் காட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சி.வி.சாமி நாதையர் நடத்திய இதழான விவேக சிந்தா மணியில் “சாவித்திரியின் சரிதை” அல்லது “ஒரு பிரமாணப் பெண்ணின் சுயசரிதை” என்ற விதவைப் பெண் குறித்த சீர்திருத்த நாவலை எழுதி, பிறகு அதன் காரணமாக, சுவாமிநாத அய்யருடன் கருத்து முரண் ஏற்பட்ட அ. மாதவையாவும், இச்சங்கத்தில் தலைவராய் இருந்த ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரும் ஆவார்.  இச்சங்கத்தின் முத்திரையுடன் வெளி வந்தது தான் “தமிழர் நேசன்.”  இச்சங்கத்தின் நோக்கம் “தமிழில் பத்திரிக்கைகள், புஸ்தகங்கள், பிரசங்கங்கள் முதலியவற்றின் மூலமாய் இங்கிலிஸ் தெரியாத தமிழ் நாட்டாருக்குத் தற்காலத்து நவீன அறிவைப் பரவச் செய்வதுதான்.”

இக்கருத்து, மேனாட்டில் வளர்ந்து வந்த அறிவியல் தொடர்பான சிந்தனைகளை ஆங்கிலம் அறியாதோரும் ஓரளவே அறிந்தோரும் பெற வேண்டும் என்பதையே தெரிவிக்கிறது எனலாம்.

இந்த நோக்கத்திற்கான காரணம் என்ன என்பதை அக்காலக் கட்டத்தில் படித்த ஆண்கள் மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகக் குறைந்த விழுக்காடுகளில் இருந்துள்ளனர் என்பதை மக்கள் கணக்கெடுப்பின்படி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

educatiuonal census 600(Source Complied from the Census of India, Madras 1922 XIII Part 1. pp. 128-129)

ஆசிரியர் மாதவையா குழந்தை மணத்தால் விளையும் விதவையர் நிலையையும், சாதிக்கட்டுப் பாடுகளுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களையும் அவ்வப்போது எழுதி வந்தாலும், சங்கத்தினர் மேல்நாட்டாரின் பல துறை கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தருவதையே விரும்பினர்.

தமிழர் நேசன் அறிவியல் செய்திகளுக்கே முதன்மை அளித்து வந்ததால், அறிவு சார்ந்தவர் களின் இதழாகத் திகழ்ந்தது.  தமிழ் இதழ் வழியே தமிழ் மக்களை நவீன அறிவியலில் தடம் பதிக்கச் செய்த பெருமை இவ்விதழுக்கு உண்டு.

அறிவியலுக்கு மட்டுமின்றித் தமிழ் மொழிக்கும் தமிழர் நேசன் அருங்கொடை நல்கியுள்ளது.  தமிழில் கலைச் சொற்களைத் தொகுத்து உயிரியல், வேதியல், இயற்பியல் வெளியிட்டுள்ளாமை யையும் காண முடிகிறது.

முடிவுரை

1835-ஆம் ஆண்டு சுதேசிகளுக்கான அச்சாக்கம் என்பது இயலும் என்ற காலக்கட்டத்தில் அறிவியல் எழுத்தாளர்கள் தலை தூக்கினர்.  இதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்துத் தனிப்பட்ட எழுத்தாளர்கள் அறிவியல் நூல், இதழ்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியதோடு அவைகள் படிப்பறிவு இல்லாதவர்களுக்குக் கூட அறிவியலை எடுத்துச் செல்ல பல அமைப்புகளால் வழியமைத்தனர். அறிவு ஜீவிகள் ஒரு கட்டத்தில் ஆங்கிலம் நன்கறியாத் தமிழர் மீது மிகுந்த அக்கரை கொண்டு தமிழர் கல்விச் சங்கத்தைத் தொடங்கி ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்கு “மெத்த கலைகள் வளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை” என்ற பாரதியின் கூற்றை ஏற்று அக்கவலையை நீக்க உதவினர்.

“பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்” என்ற படி இச்சங்கங்களிலிருந்து வெளிவந்த இதழ்கள் மக்களுக்குப் பயன்பட்டன.  மக்களின் அறிவு வளர்ச்சியே அவற்றின் நோக்கமாக இருந்தன; தொழிலாக அல்ல; ஆதாய நோக்கமற்ற தொண்டாக இதழ்கள் நடத்தப்பட்டன.  பொழுது போக்குக்காக அல்ல; அறிவு ஆக்கத்துக்காக இதழ்கள் உலா வந்தன என்றால் மிகையில்லை.