ஜன்னல் கம்பியைப் பற்றிப் பிடித்தபடி
இன்னுமே அறாமல்
தொங்கிக் கொண்டிருந்தது
ஒற்றை இழை

இருள்வெளியின் வெம்மைக்குள்
ஆசுவாசமாய்
கொஞ்சம் காற்றை...
ஒளியின் கிரணத்தை...
பிச்சையிடும் அமுதசுரபியாய்,
அகன்ற வெளியுலகைத் தரிசிக்கும்
ஒரேயொரு வாய்ப்பாய்
அந்த ஒற்றை ஜன்னல்

கற்பு, கலாசாரம், பண்பாடு, பழிச்சொல்,
இன்னபிற காரணங்கள் கூர்முனையால்
இரக்கமின்றி அறுத்தெறிந்த
பற்றுதலின் இழைகள்
வெற்றுத் தரைமீது
குப்பையாய்க் கிடக்கின்றன

அழகை, ரசனையை, காதலின் அற்புதத்தை
இப்படி எல்லாமும் இழந்திழந்து பரிதவித்தும் - அந்த
ஜன்னல் தந்துநிற்கும் - ஒருசில
வெளிச்சப் பொட்டுகளை...
இரவல் சுவாசத்தை...
ஒருதுளி சுதந்திரத்தை...
இறுக்கமாய்ப் பற்றி நிற்கும்
ஒற்றை இழைச் சிலந்தியாய்
மனசு.

- லறீனா அப்துல் ஹக் (இலங்கை)

Pin It