காணாமல் போனவர்களை
கண்டுபிடிக்கச் சொல்லி உத்திரவிடுகிறது அரசாங்கம்.
துயரமடைந்த முகங்களுக்கு முக்காடிட்டு ஆறுதல் சொல்கிறது.
சித்ரவதை செய்யப்பட்டோ பலாத்காரம் செய்யப்பட்டோ
அவர்கள் இறந்திருக்கமாட்டார்களென ஆருடம் சொல்கிறது.
ஜனநாயகம் நோயுற்றிருப்பதைப் போல தோன்றும்.
ஆனால் அரசாங்கம் நோயாளியல்ல என்கிறது.
இராணுவப்படைகளுக்கு இதயமில்லாமல் இருக்கலாம்.
கண்களிருக்கின்றன கண்டுபிடித்து விடுமென்கிறது.
நம்பிக்கையில்லாத வருடங்கள் கடந்து போகட்டும்
நீங்கள் நம்பிக்கையுடனிருங்கள் என்கிறது.
அதற்கு முன் இறந்து போகிறவர்கள் கருணையற்றவர்கள்
அவர்கள் காணாமல் போனவர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்கிறது.
எதிர்மறை சிந்தனைகள் கதவைத் தட்டும் திறந்து விடாதீர்கள் என்கிறது
காணாமல் போன ஒருவன் சவக்குழியிலிருந்து எழுந்து வந்து
அரசாங்கத்தை குற்றம் சாட்டும்போது அரசாங்கம் அவசர நிலையை அறிவிக்கிறது.
மக்கள் கதவுகளை சாத்திக் கொள்ள வேண்டுமென்று சொல்கிறது
பிசாசுகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு
பேய்கள் சவக்குழியிலிருந்து வெளியே வந்து
நாட்டில் குழப்பம் விளைவிக்கப் போகிறதென்று
ரகசிய தகவல் வந்திருப்பதாகச் சொல்கிறது.
மக்கள் காணாமல் போனதற்கும்
இந்தப் பேய்களுக்கும் தொடர்பு இருக்கலாமென சந்தேகிக்கிறது அரசாங்கம்.
Pin It