தக்காளிக்குள் மீனின் மரபணு

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் தக்காளியில் மீனின் மரபணுவும் உள்ளது. நீங்கள் வெஜிடேரியனா? சிகிச்சை மற்றும் பல காரணங்களுக்காக புலால் உணவு தவிர்ப்பவரா? அப்படியானால் இன்னுமொரு கூடுதல் அதிர்ச்சியும் காத்திருக்கிறது. தக்காளிக்குள் தவளையின் மரபணுவும் உள்ளது. இந்தத் தகவல் உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தினாலும் அதிர்ச்சியில் மயக்கமே வந்தாலும் இது தான் உண்மையாகும். எந்த உண்மையும் சற்று கசக்கவே செய்யும் என்பார்கள். ஆனால் இந்த உண்மை கசக்க மட்டும் செய்யாது பலவீனமானவர்களுக்கு மாரடைப்பையே ஏற்படுத்தும்.

இவையெல்லாம் மரபணு தொழில்நுட்பம் என்ற பெயரில் நடைபெற்று வரும் காய்கறி உற்பத்திகள். இந்தத் துறையில் இன்னும் நடைபெறப்போகும் சில உண்மைகளைக் காண்போம். நீங்கள் உங்கள் நண்பரின் பிறந்த நாள் பரிசாக பூங்கொத்து ஒன்றைக் கொடுக்கும்போது அதை மல்லிகை மணம் கொண்ட பச்சை வண்ணத் தாமரை மலராகக் கூட கொடுக்கலாம். அந்த நண்பரின் விழாவில் விருந்தாக பழங்களும் உணவு வகைகளும் சதுரமாகவும் நீளமாகவும் வழங்கப்படலாம். விழா வானவில்லின் ஏழு நிறங்களான புல் தரையில் கூட நிகழலாம். மூன்று மாதங்களுக்கு முந்தைய தக்காளியில் பழச்சாறு பிழிந்து குடிக்கலாம். அந்தத் தக்காளியும் தற்போது பறித்ததுபோல் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். அதே சமயம் வனங்களுக்கு நீங்கள் சுற்றுலா சென்றால் அங்கே தேளின் கொடுக்கை கொண்ட யானையைப் பார்க்கலாம். பறக்கும் எட்டுக்கால் பூச்சியை நீங்கள் பார்க்க நேரிடலாம். இவை எல்லாம் காமிக்ஸ் படங்களில் வருவது போன்று அதிசயமாக இருக்கலாம். இன்னும் எவ்வளவோ வியப்புகள் உள்ளன. இவற்றை நிகழ்த்தி வருவது மரபணு பொறியியல். இப்படி ஆராய்ச்சிக்கூடங்களில் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் (செடிகள் உள்ளிட்ட பல வகை தாவரங்கள், விலங்குகள்) மரபிணி மாற்ற உயிரினங்கள் (genetically modified organisms) என்றழைக்கப்படுகின்றன.

தக்காளியில் தவளையும் மீனும் வருவது எப்படி? காய்கறிகளையும் பழங்களையும் சதுரமாகவும் நீளமாகவும் எப்படி உருவாக்குகிறார்கள்? எதற்காக உருவாக்குகிறார்கள்? ஏன்? இந்த கேள்விகளுக்கு பதில் காண வேண்டுமானால் நீங்கள் மரபணு தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக மரபணு தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது மரபணு தொழில் நுட்பம் என்றும் மரபணு பொறியியல் என்றும், உயிரியல் தொழில்நுட்பம் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் ஆதரவிலும் இலாப நோக்கத்திற்காக இப்படிப்பட்ட விபரீதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு காய்கறிகளிலும் தாவரங்களிலும் விலங்குகளிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு அவை மக்களின் பயன்பாட்டிற்காக சந்தையில் விடப்பட்டுள்ளன. முதலில் மரபணு தொழில் நுட்பம் மிக முன்னேறிய தொழில் நுட்பம் என்றும் மனிதனுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உயிர் வாழும் உரிமைக்கும் இயற்கைக்கும் எதிரானதாக மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.™ எனவே சமூக மாற்றத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் பாடுபடுபவர்கள் மரபணு தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மரபிணிகள் (Genes) எனப்படுபவை உயிரினங்களின் மரபியல் பண்புகளைத் தலைமுறை தலைமுறையாக சுமந்து வரும் தூதர்கள் ஆகும். உயிரினங்கள் அமீபா போன்ற ஒரு செல் நிலையில் தொடங்கி மக்கள், யானை, திமிங்கலங்கள் போன்ற பல கோடி செல்களைக் கொண்டதாகப் பல உயிரினங்கள் உள்ளன. இந்த செல்களை உயிரினங்களின் அடிப்படை அலகுகள் என்று கூறலாம். செல்களுக்குள் உட்கரு (nucleus) எனப்படும் ஒரு பகுதி உள்ளது. அதற்குள் குருமேனியன்கள் எனப்படும் குரோமோசோம்கள் உள்ளன. இவை குச்சி வடிவத்தில் காணப்படும். குரோமோசோம்களை உள்ளடக்கிய டி.என்.ஏ அமைப்பு உள்ளது. இந்த டி.என்.ஏவில் உள்ளதுதான் மரபிணிகள் ஆகும். மரபிணிகளைக் கொண்ட டி.என்.ஏ வில் குறியன்கள் எனப்படும் (codens) பண்புக்கூறுகள் உள்ளன. இவைதாம் உயிரினங்களின் உடலியல் கூறுகளைத் தீர்மானிப்பவையாகும். வம்சாவழித்தகவல்களை சுமந்து வருபவையும் இவைதான். மரபிணிப் பொறியியல் என்பது ஏற்கனவே கூறியுள்ள குறியன்கள் எனப்படும் மரபிணிக் கூற்றை மாற்றியமைப்பதாகும். அதாவது ஒவ்வொரு உயிரினமும் தனக்கேயுரிய தனித்த பண்புகளைக் கொண்டுள்ளன. (மாங்கொட்டையிலிருந்து மாமரம் வளர்வதுபோல) இவை மரபிணிகளின் அமைப்பிற்கு ஏற்ப உருவாகின்றன. ஆனால் அறிவியலாளர்கள் உயிரினங்களின் தனித்தன்மையான பண்புகளைக் கூட மாற்றி வெவ்வேறு உயிரினங்களில் அமைத்து விடுகின்றனர்.

டி.என்.ஏ விலுள்ள ஒரு மரபுக்கூற்றைத் தனியே பிரித்தெடுத்து அதே இனத்திலோ அல்லது மற்றொரு இனத்திலுள்ள மரபுக்கூற்றில் பொருத்தி புதியதொரு மாற்று மரபு கொண்ட உயிரினத்தை உருவாக்குவதாகும். மரபணு பொறியியலின் மூலம் நாம் விரும்புகின்ற உயிரினத்தையோ தாவரத்தையோ உருவாக்க முடியும். அதே போல நாம் விரும்பாத பண்பை நீக்கி விட்டு ஒரு உயிரினத்தை உருவாக்கிட முடியும். இந்த மாற்றம் திடீரென்று ஏற்பட்டதல்ல. இந்த வரலாறு அறிவியல் பல மைல்கல்களை கொண்டது.

1957ல் கிரிகர் மெண்டல் என்ற துறவியார் பட்டாணிச் செடிகளில் பல ஆய்வுகளை அவர் நிகழ்த்தி வந்தார். அவர் நிறம், உயரம் போன்றவை அடுத்தடுத்த தலைமுறைச் செடிகளுக்கும் கடத்தப்படுவதை கண்டறிந்தார். மெண்டல் அதை மரபியல் காரணிகள் என்று கருதினார். ஆனால் அவருடைய ஆய்வுகள் அப்போது யாராலும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் 1940களில் கனடா நாட்டு மருத்துவர் ஆஸ்வால்ட் ஆவரி, மெண்டலால் கண்டுபிடிக்கப்பட்ட மரபியல் காரணிகளை டி.என்.ஏ என்று தெளிவாக நிறுவினார். அவரும் அவருடன் உடன் பணிபுரிந்த அறிவியலாளர்களும் ஒரு நுண்ணுயிரிலிருந்து மற்ற உயிரினத்திற்கு அதை மாற்ற முடியும் எனவும் கண்டறிந்தனர். 1953ல் வாட்சனும் கிரிக்கும் முப்பரிமான டி.என்.ஏ அமைப்பை இரட்டைத்தன்மை வடிவமுள்ளதாக கண்டறிந்தனர்.

1950முதல் 1960களுக்கு இடைப்பட்ட காலத்தில் அறிவியலாளர்கள் மரபினிச் செய்திகள் எவ்வாறு பொதிந்துள்ன? எவ்வாறு பெருக்கமடைகின்றன? தலைமுறைக்கு தலைமுறை எவ்வாறு கடத்தப்படுகின்றன? என்பனவற்றை தெளிவாகக் கண்டறிந்தனர். 1970களிலிருந்து 1980கள் வரை மரபணுவை ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரினத்திற்கு மாற்ற முடியும் என்பதை நிருபித்தனர். இதற்காக கட்டுப்பாட்டு நொதிமங்கள் (restriction enzymes) கண்டுபிடிக்கப்பட்டன. இது அறிவியலாளர்களுக்கு மாபெரும் கருவியாக அமைந்து விட்டன.      இப்போதுள்ள பல்வேறு நுண்ணுயிரிகள் இப்படிப்பட்ட நொதிமங்கள் மரபிணிக் கத்திரிகளாக உள்ளன. இவை குறிப்பிட்ட மரபினிகளை அவை சூழ்ந்துள்ள டி.என்.ஏவில் இருந்து வெட்டி எடுக்க உதவுகின்றன. பல நூறு நொதிமங்கள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன. மரபினிப் பொருட்களை ஒரு புதிய ஓம்புநர் உயிரிக்கு (host) மாற்றும்போது ஓட்டுதல் பணி குறிப்பிட்ட ஒரு நொதிமத் தொகுப்பால் நடைபெறுகின்றது. 1970களில் முதல் வணிக உயிரி நுட்ப மருந்து இம்முறையில் கண்டறியப்பட்டது. மனிதரின் மரபினி இன்சுலின் சுரப்பிற்கு ஒரு நுண்ணுயிரில் செலுத்தப்பட்டு புதிய வகை இன்சுலின் உருவாக்கப்பட்டது.(இப்போது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் விலங்குகளின் இன்சுலின்தான் விற்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்க)

நுண்ணுயிரிகளில் மரபினி மாற்றம் நடத்தியவுடன் அறிவியலாளர்களின் கவனம் செடிகளுக்கு சென்றது. செடிகளில் மரபினி மாற்றப் பணி கடுமையாக இருந்தது. முதலில் சிறு நுண்ணுயிரிகளை விடக் கூடுதலான வகை மரபினிகளை அவை கொண்டிருந்தன. மேலும் இவற்றின் இவற்றின் செல்களின் சுவர்கள் ஊடுருவதற்கு கடினமாக இருந்தன. ஆனால் இயற்கையே இதற்கு ஒரு தீர்வையும் வழங்கியது. அகரச்குச்சில் (agrobacterium)என்னும் நுண்ணுயிரிச் செடிகளின் மரபினியில் இயற்கையாகவே ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது. இருப்பினும் அகரச்குச்சிகளால் அனைத்துச் செடிகளையும் ஊடுருவிச் செல்ல முடியவில்லை. இதற்கும் தீர்வாக நச்சுயிரிகளில் இருந்து மரபினிகளைப் பெறுகின்றனர். இதன் உச்சகட்டமாக மரபினித் துப்பாக்கி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன்      மூலம் எந்த செடியையும் எந்த உயிரினத்தையும் நேரடியாகத் துளைக்க முடியும் அதாவது வைரஸ் மூலமாக விரும்புகின்ற மரபணுவை மரபினி துப்பாக்கியின் மூலமாக செலுத்தி உயிரினத்தில் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்ட பின்னர் இலாப நோக்கிலும் பல விபரீதங்களைத் தொடங்கினர். ஏனெனில் இந்த மரபினித் துப்பாக்கியின் உரிமையை டூபாண்ட் என்ற பன்னாட்டு நிறுவனம் வைத்துள்ளது.

விலங்குகளின் கருமுட்டையிலேயே உள்ள மரபணுவை மாற்றத் தொடங்கினர். இதன் அடிப்படையில் புதிய இன சுண்டெலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நுண் ஊசி வழியாக சுண்டெலியின் கருவில் ஒரு மரபணுவைப் புகுத்தி மைந்து சுண்டெலி என்ற புதிய இன சுண்டெலி உருவாக்கப்பட்டது. இதே போல பிரிட்டானிய அறிவியலாளர்கள் வெள்ளாட்டையும் செம்மறி ஆட்டையும் இணைத்து வெண்மறி ஆட்டை உருவாக்கினர்.

கடையில் இருக்கும்போது தக்காளி நீண்ட நாட்களுக்கு மிகவும் கனிந்து அழுகிப்போகாமல் இருக்க வேண்டும். அது குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் அது விரைத்துப் போய் உடைந்து விடாமல் இருக்க வேண்டும். செடியிலிருந்து பறித்த பின்னரும் அது நீண்ட நாட்களுக்கு உறுதியாகவும் புதிதாகவும் அப்போது பறித்தது போன்று பளபளப்பாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது?. அதற்கு கண்டுபிடித்த வழிமுறைதான் மீனின் மரபணுவை தக்காளியில் புகுத்துவது ஆகும். கடுமையான தட்பவெப்ப நிலைகளிலும் நீரில் இருக்கும் உயிரினங்களின் மரபணுவை தக்காளியில் சேர்ப்பது. பிளவுண்டர் என்ற ஆர்டிக் உறைபனி சமுத்திரத்திலுள்ள மீன் வகையானது இயல்பிலேயே எவ்வளவு குளிரிலும் விரைத்து விடாத தன்மையுடையது. இதனால் இம்மீன்களின் விரைத்து விடாத தன்மையைக் கொண்ட அந்த மரபணுவை தனியே பிரித்தெடுத்து தக்காளியின் டி.என்.ஏவில் சேர்த்து அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் விரைத்துவிடாத தன்மைகொண்ட தக்காளியாக மாற்றுகின்றனர். இதே போல கத்திரிக்காய், அரிசி, சோயா பீன்ஸ், காபி மிளகு, காலி பிளவர் முட்டைக்கோஸ் பட்டாணி, முலாம்பழம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, வெண்டை, வள்ளிக்கிழங்கு, கூவைக்கிழங்கு, ஏலக்காய், மொச்சை, மாதுளை பருத்தி, சணல், உதட்டுச்சாயத்திற்கான செவ்வண்ணம் தரும் உலர் குசும்பப்பூ போன்று மரபணு ரீதியான மாற்றியமைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் நீளுகிறது. அடுத்த முறை நீங்கள் காய்கறி கடைக்குச் செல்லும் போது பளபளப்பாக அழகாக இருக்கும் காய்கறிகளைக் கண்டு மயங்கி விடாதீர்கள் எச்சரிக்கை. இந்த அழகுக்கு பின்னேதான் ஆபத்து மறைந்து கிடக்கிறது. அது என்ன ஆபத்து?

பகுதி-2

உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்

மரபணுரீதியாக மாற்றியமைக்கப்பட்டவை காய்கறிகள், பழங்கள் மற்றும் பொருட்கள் மட்டுமல்ல, பல புதிய தாவர அடிப்படையிலான இனிப்பூட்டிகளும் இந்த பட்டியலில் உள்ளன. இவை சந்தைக்கு வர அணி வகுத்து நிற்கின்றன. இந்த இனிப்பூட்டிகளில் தவ்மாட்டின், மோனெல்லின், ஹெர்னாண்டல்சின், ஸ்டீவியோசை, மிராக்குலின், பிரேஸியன் போன்றவை அடங்கும். இவையெல்லாம் சக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைப் போல ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாக இனிப்பூட்டுபவை. தாவரங்களிலிருந்து இந்த இனிப்பூட்டிகளை பிரித்தெடுப்பதற்கு அதிகமாக செலவாகும். எனவே, இந்த மரபினிகளைத் தனிமைப்படுத்தி அவைகளை பாக்டீரியாவாக மாற்றுவதை நோக்கிய ஆராய்ச்சிகள் பெருமளவில் நடைபெறுகின்றன. மரபினிப் மாற்றப்பயிர்களினால் பாதிப்புகள் இல்லையா? அந்த பாதிப்புகளை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை.

மரபினிப் மாற்றப் பயிர்கள் மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியம், மண் வளம், சூழல் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை காண்போம். முதலாவதாக மரபணுக்கள் ஒரு உடலிலுள்ள சூழலிருந்து மற்றொரு சூழலுக்கு மாற்றப்படுவதால், மாற்றப்படும் புதிய சூழலுக்கு ஒத்துப் போவது மிகவும் குறைவாகும். அங்கிருந்தே பிரச்சினைகள் தொடங்குகின்றன. செம்மறி ஆட்டையும் வெள்ளாட்டையும் இணைத்து புதிய வெண்மறி ஆட்டை உருவாக்கியது குறித்த பரபரப்பான செய்திகள்தான் ஊடகங்களில் வந்தன. ஆனால் அந்த ஆடு மலடாகி குருடாகிப்போனது பற்றி எந்த ஊடகங்களும் செய்தி வெளியிடவில்லை. பிரிட்டனிலுள்ள ஒரு ஆய்வுக்கூடத்தில் எட்டுக்கால் பூச்சிக்கு பறவையின் மரபணுவை செலுத்தினர். ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பூச்சி இறந்து விட்டது. இயற்கையின் வரம்புகளை மீறினால் இப்படித்தான் நடக்கும்.

வட அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் தனது அறிக்கையில் மரபினிப் மாற்ற பயிர்கள் உணவில் எதிர்பாராத அழற்சிப் பொருட்களையும் நச்சுப்பொருட்களையும் உண்டாக்கும் ஆற்றல் பெற்றவை என்றும் அவை கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளையும் கட்டுப்படுத்தாத உயிரிகளையும் மண்ணிலுள்ள உயிர்மங்களின் மீது தீய விளைவுகளையும் உண்டாக்கும் ஆற்றலையும் பெற்றவை என்றும் கூறுகின்றது. பூச்சி எதிர்ப்பு என்ற பெயரில் மரபணுப் பொறியியல் முறையில் தயாரிக்கப்பட்ட பி.டி பயிர்களை சுவீடன் நாட்டின் இரண்டு விஞ்ஞான பரிசோதனைக் கூடங்கள் ஆய்வு செய்தன. இந்த ஆய்வில் மரபணுப் பொறியியல் முறையில் நோவர்ட்டீஸ் என்ற சோள வகைப் பயிரிலிருந்து சோளத்தை உட்கொண்ட பசுமை நாடாப் பூச்சிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் இந்த பயிர்களில் உள்ள பி.டி நஞ்சானது மற்ற உயிரினங்களைக் கொல்வதோடு நாம் உண்ணும் உணவிலும் நுழைந்து விடும் என்பதும் இதன் தொடர்ச்சியாக உண்ணும் உணவின் மூலம் நமது உடலில் இருக்கும் பி.டி நஞ்சானது நமது நோய்களுக்கு எந்த ஆன்டிபயோடிக் மருந்தை உட்கொண்டாலும் அதை செயல் இழக்கச் செய்து விடுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

கூடுதலாக, மரபணுப் பொறியியல் முறையில் உருவான பூச்சி எதிர்ப்பு நஞ்சினைத் தாவரங்களாவது தங்கள் பாகங்கள் முழுவதும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெறுகின்றன. இதனால் இப்பயிர்கள் அறுவடைக்குப் பின்னர் கழிவாகிப் புதைவதனால் மண் முழுவதும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இந்த நச்சுத்தன்மையையும் அப்பயிர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அது மற்ற உயிரினங்களான மனித குலத்திற்கு சேவை செய்யும் தேனி, சுருள் பூச்சி, வண்ணத்துப் பூச்சி மற்றும் முக்கியமாக விவசாயிகளின் நண்பனான மண் புழு ஆகியவற்றைக் கொன்று விடும். இது மட்டுமின்றி அந்த நிலங்களில் மேயும் ஆடு மாடுகள் மற்ற உயிரினங்கள் இறந்து விடுகின்றன. ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடியை சாப்பிட்ட 1500க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து விட்டன. ஆந்திராவில் கரீம் நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள மாமிடலப்பள்ளி கிராமத்தில் பி.டி பயிரிடப்பட்ட நிலத்தில் மேய்ந்த 12 மயில்கள் இறந்து விட்டன.

எந்தப் பூச்சிக்காக இப்பூச்சி எதிர்ப்பு நஞ்சுடன் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றனவோ, அந்தப்பூச்சிகள் தங்களின் உடலில் இந்த நஞ்சிற்கு எதிர்ப்பு சக்தியையும் நாளடைவில் வளர்த்துக் கொள்கின்றன. அந்தப் பூச்சியானது 3லிருந்து 5 ஆண்டுகளுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது. மண்ணின் உவர் நிலைமையை சகித்துக் கொள்ளும் மரபணுக்கள் பொருத்தப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுவதால் பகுதியின் சூழல் மாசாவதோடு உவர் மண்ணுக்கேற்ப இயற்கையாக விளையும் பயிர்களுக்கு இடமில்லாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.

ஒரு முறை மரபணுப் பொறியியல் முறையில் உருவாக்கப்பட்ட உயிரினங்களையும் தாவரங்களையும் மீண்டும் கட்டுபடுத்த முடியாது. அவை எங்குள்ளது என்பதையும் கண்டுபிடிக்காத அளவில் பெருகி விடும். இந்த முறையில் தயாரிக்கப்படாத உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றுடன் அவை இணைந்து பரவி விடும். ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மரபணுப் பொறியியலுக்கு உட்படுத்தி வளர்க்கப்பட்ட பயிர்கள் 200 மீட்டர் வரை பரவியுள்ளதை கண்டுபிடித்தனர். அமெரிக்காவிலும் நார்வேயிலும் சால்மன் மீன் வகைகளில் மிக நீளமாகவும் அதிக எடையுடன் வளர்வதற்கு மரபணுக்கள் பொருத்தப்பட்டன. இம்மீன்களுக்கு இருந்த எடையுடன் 5 மடங்கு அதிகரித்தது. ஆனால் மிக வேகமாக பரவி இத்தொழில் நுட்பத்திற்குள்ளாகாத மீன்களை விட ஒன்றுக்கு 5 மடங்கு விகிதத்தில் அதிகரித்து விட்டன. இதே போல் பயோ டெக்னிக்கல் இன்டர்நேசனல் என்ற பன்னாட்டு நிறுவனம் சோயா பீன்ஸ்களுக்கு இந்த உற்பத்தி முறையைக் கடைபிடித்தது. தொடர்ந்து கண்காணித்ததில் 4 ஏக்கரில் இதே பயிர்கள் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாசினாலும் காடுகளை அழிப்பதாலும் அழிந்து வருகின்றன. ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது 75 விழுக்காடு மரபணு பெருக்கமானது இந்த நூற்றாண்டிலேயே அழிந்து விட்டது என்றும் இதற்கு முக்கிய காரணமாக தாவரங்களின் பன்முகத்தன்மையை அழித்து செயற்கையான மரபணுப் பொறியியல் முறையில் ஒருமைத் தன்மையுடன் (mono culture) வளர்க்கப்படுவதே என்று கூறியுள்ளது.

மரபணு பொறியியல் மூலம் ஒரே தன்மை கொண்ட ஒரே பயிர்கள் வளர்க்கப்படுவதால் அவை ஒரு நோய் தாக்கினாலே விரைவாக அழிந்து பஞ்சம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் பன்முகத் தன்மையுடன் பல வகைப் பயிர்கள் வளர்க்கப்படும்போது அவை எந்த வகை நோயையையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. மெக்சிகோவிலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முன்னதில் 300 வகையான பயிர்களும் வளர்க்கப்பட்டதால் இவ்விரு பகுதிகளும் அனைத்து விதமான பூச்சிகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றதாகத் தெரிய வந்துள்ளது. மரபணு பொறியியலின் இன்னொரு பாதக விளைவாக ஒரு பகுதியின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப விளையும் பயிர்களை அழிப்பது உள்ளது.

சில காலத்திற்கு முன்னதாக மான்சான்டோ என்ற பன்னாட்டு கம்பெனி மரபணு பொறியியல் மூலமாக தயாரிக்கப்பட்ட பருத்தி விதைகளை அறிமுகப்படுத்தியது. அதிக மகசூல் கிடைக்கும் என்ற இந்த கம்பெனியின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் அதிக கடன் வாங்கி இந்த விதைகளை பயிரிட்டனர். ஆனால் இவை மறுபடியும் பயிரிட முடியாத மலட்டு விதைகள் என்பதாலும் அதிக மகசூல் கிடைக்காததாலும் விவசாயிகள் ஆயிரக்ககணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இந்திய அரசு இப்போது இந்த கம்பெனியின் விதைகளுக்கு மட்டுமல்ல ஏறத்தாழ 144 கம்பெனிகளின் விதைகளை இந்திய மண்ணில் பரிசோதித்து பார்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. நமது நாட்டின் இறையாண்மை தன்னிறைவான உணவு உற்பத்தியில் உள்ளது. விவசாயத்தை அழிப்பது நாட்டின் இறையாண்மையை அழிப்பதாகும். நமது நாட்டின் அடிப்படை ஆதாரமாகவும் முதுகெலும்பாகவும் உள்ள விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைக்கப்படும் இந்த நாசகரமான போக்கை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம்? 

துணை நின்றவை:

1.     The Ecologist vol 3&4,june &july 1997

2.     Hungry corporations by Helena paul and ricarda steinbrecher,zed books

3.     Biodiversity,social and ecologica perspectives by world rainforest movement,Malaysia

4.     Overcoming illusions about biotechnology by nicanor perlas,other india press

5.     Down to Earth may16-31,2011

6.     மரபினி மாற்ற உணவும் பட்டினியும்,தேவிந்தர் சர்மா,தமிழில் கோச்சடை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு

Pin It