muslim agitation against caaபாரதீய சனதாக் கட்சி 2014ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியாவின் தலைமை அமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்றுக் கொண்ட பொழுது, "இந்திய நாடாளுமன்றமே எனது கோயில். அரசியல் சட்டமே எனது கீதை" எனப் பசப்பினார். தவிரவும், நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கி, தலைமை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். ஆனால் 2014 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் நாடாளுமன்றத்தை ஒருசிறிதும் பொருட்படுத்தாமல், மிக மிகக் குறைவான நாட்களே நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார் அவர்.

அதேபோல், 2019ஆம் ஆண்டு இரண்டாம் முறையாகப் பாரதீய சனதாக் கட்சி ஆட்சியைப் பிடித்தபொழுது, அரசியல் சட்டப் புத்தகத்தைத் தொட்டு வணங்கி, நாடகமாடி மீண்டும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் மோடி. ஆனால் அரசியல் சட்டத்தின் அடிப்படையைத் தகர்க்கும் பணியை அருமையாக இப்பொழுது தொடங்கி விட்டார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் பின்னணி

அரசியல் சட்டத்தின் அடிப்படையைத் தகர்க்கும் பணியின் ஓர் எளிய வெளிப்பாடுதான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் - தேசிய மக்கள் தொகைக் குறிப்பேடு மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவை. இவற்றை இந்தியத் துணைக்கண்டத்தின்மீது அவர் திணிக்கும் இன்றைய காலக்கட்டம் என்பது, பண மதிப்பு வீழ்ச்சியும், விலையுயர்வும், வேலை இல்லாத் திண்டாட்டமும், பணப்பரிமாற்ற மின்மையும், கூலி வெட்டும், தொழில் முடக்கமும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ள நெருக்கடியான தருணமாகும்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை வளர்ந்திருப்பதைத் தேசிய மாதிரிப் புள்ளி விவர ஆய்வு நிறுவனம் -வெளியிட்ட அறிக்கையே அம்பலப்படுத்துகிறது. தவிரவும், 2019-ல் இரண்டாம் முறையாகப் பதவியேற்ற ஒருசில மாதங்களில் பெருநிறுவன (கார்ப்பரேட் ) முதலாளிகளுக்கு இரண்டரை இலட்சம் கோடி உரூவாவுக்கும் மேலான வரித் தள்ளுபடிகளை, சலுகைகளை வாரி வழங்கியுள்ளார் மோடி. தவிரவும், இரண்டு இலட்சம் கோடி உரூவா பெறுமானமுள்ள பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக .இருந்த அரவிந்து சுப்பிரமணியம் "நாட்டின் பொருளாதாரம், கவலைக்கிடமான நிலையில் ( ஐ.சி.யூ.) தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது" என எச்சரிக்கை விடுக்கிறார். உலகெங்குமுள்ள பொருளாதார வல்லுநர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் எதிர்காலம் குறித்த கவலையை வெளிப்படையாகத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இத்தகைய பொருளாதாரத் தோல்விகளை மறைக்கவும், கடந்த 2014 பொதுத்தேர்தலில் அள்ளிவிட்ட வானளாவிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து மக்கள் கேள்வி கேட்காமல் இருக்கவும், எப்பொழுது பார்த்தாலும் சுற்றுலா சென்று கொண்டிருப்பதால் மக்களிடம் மேலோங்கி நிற்கும் மோடியின் மீதான கடுஞ்சினத்தைத் திசைதிருப்பவும்தான் குடியுரிமைச் சட்டங்களை ஏவிவிட்டுள்ளது இந்துத்துவ அரசு.

காசுமீரைத் துண்டாடிய நிகழ்வு ஆகட்டும், குடியுரிமைத் திருத்தச் சட்டமாகட்டும் எல்லாம் உரிய விவாதமின்றிச் சில மணி நேரத்திலேயே அவசர அவசரமாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டதைக் காண்கிறோம்.

சட்ட நிறைவேற்றத்தில் ஏன் இந்த அவசரம்? வேகம்?

இந்தக் குடியுரிமைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் 14ஆம் பிரிவுக்கு எதிரானது. மதத்தின் அடிப்படையில் இது மக்களைப் பிரிக்கிறது. ஆனால், இந்துத்துவ சங்கிகள் இதற்கு விடை சொல்லாமல், "இந்திய முசுலீம்களுக்கு / மக்களுக்கு இதனால் எவ்விதப் பாதிப்பும் இல்லை" என விவாதத்தின் போக்கைத் திசை திருப்புகின்றனர். மேலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இணைத்துக் காண வேண்டும் என்பதைத் திட்டமிட்டு மறைக்கின்றனர்.

ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கடும் போராட்டங்கள் ஆர்ப்பரித்து எழுந்துள்ளன. ஏனெனில் குடியுரிமை என்பதுதான் எல்லா உரிமைகளுக்கும் அடிப்படையானது. குடியுரிமை இல்லாவிட்டால் நீங்கள் அரசைக் கேள்வி கேட்க முடியாது. அதனால்தான் 1933ஆம் ஆண்டு இட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை இலட்சம் யூதர்களின் குடியுரிமையை நீக்கினான் என்பதை வரலாறு சுட்டுகிறது.

உலகளாவிய எதிர்ப்பு அலைகள்

இந்துத்துவ அரசின் சனநாயகத்திற்கு எதிரான இச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து 1000 அறிஞர்கள் மோடிக்குக் கடிதம் எழுதினர். ரோமிலா தாபர், அருந்ததி ராய், இராமச்சந்திர குகா போன்ற எண்ணற்ற ஆளுமைகள் இச்சட்டத்திற்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர். இந்திய ஆட்சிப் பணியில் இருந்த சசிகாந்த் செந்தில் போன்றோரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மகராட்டிரக் காவல் துறைத் தலைவர் தனது பதவியையே தூக்கி எறிந்தார். சாகித்ய அகாதமி விருதை எழுத்தாளர் ஒருவரும், அரசின் பத்ம விருதை அறிஞர் ஒருவரும் திருப்பித் தந்தனர். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஷாகின் பாக் - எதிர்ப்புப் போராட்டங்கள் அலைஅலையாகப் பெண்களால் முன்னெடுக்கப் படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இசுலாமிய மகளிர் ஷாகின் பாக் - போராட்டங்களைத் தெருவில் இறங்கி சமரசத்திற்கு இடங்கொடுக்காமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மோடியின் இந்தச் சட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. நோபல் பரிசு வென்ற அறிஞர்களான வெங்கட்ராமன் இராமகிருட்டிணன், அமர்த்தியா சென் மற்றும் அபிசித் பானர்ஜி ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், பிரித்தானிய நாடாளுமன்றம் ஆகியனவும் மோடி அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. சப்பான் தலைமை அமைச்சரும், வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சரும் தங்களின் இந்தியப் பயணத்தை இதன் காரணமாகவே தவிர்த்து விட்டனர். மலேசியா, ஈரான் நாட்டு அமைச்சர்களும் பாரதீய சனதா அரசைக் கண்டித்து உள்ளனர்.

தவிரவும், வெளிநாட்டு இதழ்கள் (The Economist, NewYork Times, Washington Post, The Guardian) இந்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. நியூயார்க், வாசிங்டன், சிக்காக்கோ, சான்பிரான்சிஸ்கோ, அட்லாண்டா, பிலடெல்பியா, இலண்டன், கனடா போன்று உலகின் பல்வேறு பகுதிகளில் மோடியின் குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன.

மாணவர்கள் போராட்டம்

அதே சமயம் மாணவர்கள் குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிராகத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஜாமியா மிலியா - பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், அலிகார் முசுலீம் பல்கலைக் கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் போராட்ட மையங்கள் ஆகின.

இத்தகைய போராட்டங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சனாதன சங்கிகள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். போராடும் மாணவர்களை இராமபக்தன் கோபால் எனும் சங்கி காவல்துறையினர் முன்னிலையிலேயே துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான். சங்கீத் சோம் எனும் பாரதீய சனதாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர், " இவர்களை இப்படித்தான் சுட்டுக் கொல்ல வேண்டும்" என இந்துத்துவ நஞ்சைக் கொட்டிக் கொக்கரித்தான்.

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறை, நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும், வளாகத்தில் இருந்த மாணவிகளையும் கண்மூடித்தனமாகத் தாக்கிய தோடு, கழிவறைக்குள்ளும் புகுந்து வன்முறை வெறியாட்டம் ஆடினர்.

இத்தகைய வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போலத்தான் சவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராடிய தருணத்தில், அப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து இரும்புக் கம்பிகளாலும், தடிகளாலும் மாணவர்களையும் பேராசிரியர்களையும் அடித்து நொறுக்கியவர்கள் இந்துத்துவ வெறியர்கள்தான். "நாங்கள்தான் மாணவர்களைத் தாக்கியவர்கள்" எனப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்னும், “இந்து ராக்சா தள்” எனும் அமைப்பின் மீதும் பெரிதாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

புதுதில்லிப் படுகொலைகள்

இந்துத்துவ ஆதரவாளர்கள் எவ்வளவு கொடிய வன்முறையை ஏவினாலும் அவர்கள்மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப் படாது எனும் எழுதப்படாத சட்டம் 2014முதல் இந்தியாவில் நடைமுறையில் இருப்பதால், வன்முறை வானளாவ வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 23முதல் மூன்று நாள்கள் நடைபெற்ற வன்முறைகள்.

இத்தகைய வன்முறைகளுக்குக் காரணமானவர்கள், பாரதீய சனதாக் கட்சியின் பொறுப்பாளர்கள்தாம். "துரோகிகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும்" என மைய அரசின் நிதித்துறை இணை அமைச்சர்அனுராக் தாக்குரும், "இந்துக்களின் வீடு புகுந்து நமது மகளை, சகோதரிகளை இசுலாமியர்களை? பாலியல் வன்முறை செய்வார்கள்" என பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மாவும், "எமது அரசு, ஆர்ப்பாட்டக்காரர்களை நாயைப் போல சுட்டுக் கொல்லும்" என மேற்கு வங்க பா.ச.க. தலைவர் திலிப் கோஷ் போன்றோரது வன்முறைப் பேச்சுகள் தாக்குதலுக்குத் தூபம் போட்டன..

"இந்தியாவுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை விட்டுத் திரும்பிப் போவதற்குள், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் நாங்களே போராட்டக்காரர்களை அப்புறப் படுத்துவோம்" எனக் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே பா.ச.க.வின் பொறுப்பாளர் “கபில் மிஸ்ரா” கொக்கரித்தான். அவன் சொன்ன படியே அடுத்த நாள் வடகிழக்குத் தில்லியில் அப்பாவி முசுலீம்கள் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கடைகள், வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகிய அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் அடி உதை, கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு. சுமார் 60பேர் வரை பதறப்பதறப் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இது அரசு கொடுக்கும் கணக்கு . ஆனால் உயிரிழப்புப் பன்மடங்கு இருக்கும் எனச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

15-க்கும் மேற்பட்ட இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் தகர்த்தெறியப்பட்டன. பல ஆயிரம் கோடி உரூவா அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது.

வன்முறையைக் காவல்துறை கட்டுப்படுத்தவில்லை என்பது மட்டு மல்ல, அவர்களே முன்நின்று கலகக்காரர்களோடு சேர்ந்து தாக்குதல் தொடுத்தனர். அப் பகுதியிலிருந்த கண்காணிப்புக் கருவிகளையும் காவலர்களே அடித்து நொறுக்கினர். எங்கு பார்த்தாலும் "சுட்டுக் கொல்லுங்கள்" (கோலி மாரோ) என்ற வெறி கூச்சல் எதிரொலித்தது.

பாதுகாப்பு வேண்டி ஏறக்குறைய 10,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் காவல் நிலையங்களுக்கு வந்துள்ளன. தொடர் தாக்குதலால் குற்றுயிரும் குலைஉயிருமாக வீதியில் கிடக்கும் இளைஞர்களைக் காவல்துறையினரே குண்டாந்தடி கொண்டு தாக்கும் காட்சியும், அவர்களை “ஜெய்சிரீராம்” முழக்கம் போடச் சொல்லி உதைக்கும் காட்சியும் காணொளிகளாக வெளிவந்துள்ளன. இப்படித் தாக்கப்பட்ட இளைஞர்கள் மருத்துவமனையில் பரிதாபமாக இறந்த செய்திகளும் இப்பொழுது வந்துள்ளன.

கள்ளத்துப்பாக்கிகள் மூலம் அப்பாவி மக்கள் வகைதொகையின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டனர். "குண்டடிபட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் முசுலீம்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடாது" என மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்த செய்தி, ஊடகங்களில் வந்துள்ளது.

குசராத் சூத்திரம்

இவ்வாறு நடைபெற்ற கொடுமைகள் கலவரத்தால் நடைபெற்றவை அல்ல. ஏனெனில் கலவரத்திற்குத் தருக்கம் ஏதும் இருக்காது. கலவரம் என்றால் அது எல்லாவற்றையும் நாசமாக்கும். ஆனால் இங்கே கொள்ளையடிக்கப்பட்ட, தீக்கிரை ஆக்கப்பட்ட வீடுகள், சொத்துகள் அனைத்தும் இசுலாமியர்களுடையது எனச் செய்திகள் (The Indian Express)  தெரிவிக்கின்றன. எனவே இது கலவரம் அல்ல. முசுலீம்களின் சொத்துக்கள் எங்கெங்கே உள்ளன என முன்பே கணக்கெடுத்துத் திட்டமிட்டு நடைபெற்ற நயவஞ்சகத் தாக்குதலாகும்.

2002 குசராத் படுகொலையின் பொழுதும், இந்து முன்னணியின் கோவைச் செய்தித் தொடர்பாளர் சசிகுமாரின் சவஊர்வத்திலும் இப்படித்தான் இசுலாமியர்களின் கடைகளும், வீடுகளும் மட்டும் அழித்தொழிக்கப்பட்டன. இதைச் சங்கிகள் "குசராத் சூத்திரம்" 

(Gujarat Formula)  எனப் பெருமையாகச் சொல்கின்றனர். ஒவ்வொரு கலவரத்திலும் (?) இப்படித்தான் முன்கூட்டியே கணக்கெடுத்து, திட்டமிட்டு, பிறகு தாக்குதலை மேற்கொள்கின்றனர்.

புதுதில்லிக் கலவரத்தின் பொழுது, "போராட்டக்காரர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் நடைமுறை மலையேறி விட்டது. அவர்களை உடனுக்குடன் "மேலே" அனுப்பும் பணி வெற்றிகரமாகத் தொடங்கி விட்டது" என்று கொக்கரிக்கிறான் பாரதீய சனதாக் கட்சியின் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா.

புதுதில்லியில் 180 காவல் நிலையங்கள் உள்ளன. குறிப்பாகக் கலவரம் நடந்த வடகிழக்குத் தில்லியில் மட்டும் 20 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 1000 காவலர்கள் இருக்கின்றனர். இருப்பினும், மூன்று நாள்கள் வட கிழக்குத் தில்லி முழுவதும் இந்துத்துவ வெறியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தின் தலைநகராகிய தில்லியிலேயே அமித்ஷாவின் பொறுப்பிலிருக்கும் காவல்துறையின் இலட்சணம் இவ்வாறுதான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுப் பரவலாக எழுந்து உள்ளது.

வெறுப்புப் பேச்சு

பாரதீய சனதாக் கட்சி பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டிலிருந்து வெறுப்புப் பேச்சும், கும்பல் கொலையும் வளர்ந்தபடியே உள்ளன. எனவே வெறுப்புப் பேச்சுக் குறித்து பேஸ்பரூவா குழு அறிக்கை மற்றும் டி.கே. விசுவநாதன் குழு அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று உள்ளது. 

"இந்தியாவில் பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைத் தடுப்பதற்காக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சில பிரிவுகள் சேர்க்கப் பட்டுள்ளதுபோல, அனைத்து மக்களுக்கும் எதிரான வெறுப்புப் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும்" என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது. இதற்கேற்ப வெறுப்புப் பேச்சினைத் தடுக்கும் வகையில் குற்றவியல் நடைமுறைத் திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

153சி மற்றும் 505ஏ ஆகிய இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு, சட்ட ஆணையத்தை வேண்டியது. அரசியல் சட்டம் 19 (2) பிரிவின் அடிப்படையில்,  பொது அமைதி, குற்ற நடவடிக்கைகளைத் தூண்டும் குற்றம், மாநிலத்தின் . பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வெறுப்புப் பேச்சினைத் தடை செய்யலாம் என இந்தியச் சட்ட ஆணையமும் பரிந்துரைத் துள்ளது. உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.எஸ். சஹான் அவர்களும் இதற்கு ஏற்பிசைவு வழங்கியுள்ளார்.

மதம், இனம், சாதி, மொழி, சமூகம், பாலினம், பிறப்பிடம், வாழிடம் போன்றவற்றின் அடிப்படையில், பேச்சு / எழுத்து / குறியீடு ஆகியவற்றின் மூலம் அச்சுறுத்துவது சட்டப்படி தண்டனைக்கு உரியது என்றும் சட்ட ஆணையம் 2017ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டியுள்ளது.

"உயர் பதவிகளில் இருப்பவர்களின் வெறுப்புப் பேச்சு, கீழ் மட்டத்தினுள்ளவர்களைக் குற்றச் செயலுக்குத் தூண்டக் கூடியது" எனக் குற்றவியல் வல்லுநர் ஜேக் லெவின் குறிப்பிட்டுள்ளார்.

வெறுப்புப் பேச்சு "நாம்" மற்றும் "அவர்கள்" எனும் பாகுபாட்டைச் சமூகத்தில் உருவாக்கும் எனவும், பிளவு மனநிலை மற்றும் வெளித் தள்ளும் போக்கு ஆகியவற்றை வெறுப்புப்பேச்சு ஏற்படுத்தி விடும் எனவும் உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் கருத்துரிமை என்பதை ஒருவர் தவறாகப் பயன்படுத்தி, அதனால் அவர் தண்டிக்கப்பட்டிருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 எட்டாவது பிரிவு குறிப்பிடுகிறது. எனவே இவற்றின் பின்னணியில் வன்முறை நோயாளிகளான சங்கிகளின் வாய்க்கொழுப்பை, வெறுப்புப் பேச்சைச் சட்டத்தின் மூலம் தடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகி விட்டது.

வெறுப்புப் பேச்சு குறித்த திருத்தப்பட்ட பரிந்துரைகளைச் சட்ட ஆணையம், 2018 மே மாதத்தில் வழங்கியது. ஆனால் நாடாளுமன்றத் தில் அந்த மசோதா நிறைவேற்றப் படவில்லை. எனவே இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 153சி / 505ஏ ஆகிய பிரிவுகளைச் சேர்க்க, குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த மசோதாவை இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இப்பொழுது வலுப்பெற்று வருகிறது.

இனப்படுகொலை

புதுதில்லியில் நிகழ்ந்தது கலவரம் எனக் கூற முடியாது. அது திட்டமிட்ட தாக்குதல் என்பது இன்று அம்பலத்திற்கு வந்திருந்தாலும், அதை "இனப்படுகொலை" ( Genocide ) என்றுதான் குறிப்பிடுகிறார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள். அவர் மட்டுமல்ல, இன்றைக்குக் காசுமீர் மற்றும் அசாம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் வன்முறை மற்றும் தேசியக்குடிமக்கள் பதிவேடு ஆகியவை இனப்படுகொலையின் முன்னோட்டமாக உள்ளது எனவும், பாசிசம் இந்தியாவில் பற்றிப் படர்ந்து வருகிறது எனவும், அமெரிக்கப் பேராசிரியர் கிரிகோரி ஸ்டேன்டான் அவர்களும் உறுதிபடக் கூறுகிறார். ருவாண்டா, கம்போடியா, ரோகிங்கியா இனப் படுகொலைகள் குறித்து விரிவான அறிக்கைகளை அளித்த ஆய்வாளர் இவர். தவிரவும் இனப்படுகொலைக் கண்காணிப்பகம்  (Genocide Watch) எனும் உலகளாவிய ஆய்வு அமைப்பை உருவாக்கியவர்.

இனப்படுகொலையின் படிநிலைகள்

பொதுவாக உலகம் முழுவதும் இனப்படுகொலைகள் பத்து வகையான படிநிலைகளைக் கொண்டிருக்கும் எனக் கிரிகோரி ஸ்டேன்டான் விளக்குகிறார்.

1) முதல் நிலையில் நாம் X  அவர்கள் எனப் பிரிவினை உண்டாக்குதல். (Classification

2) “அந்நியர்/வெளிநாட்டவர்” என முத்திரை குத்துதல். (Symbolization)

3) பரப்புரை செய்தல்  (Dissemination)

4) தீவிரவாதிகள் / நோய்க்கிருமிகள் / கரப்பான்கள் எனப் பெயரிட்டு இழிவுபடுத்துதல். (Dehumanization)

5) இதற்கென ஓர் அமைப்பை உருவாக்குதல். (Organization)

6) பரப்புரை மூலம் மக்களைத் திரட்டுதல். (Polarization)

7) தாக்குதலுக்கு ஆயத்தப் படுத்துதல். (Preparation)

8) தாக்குதல் தொடுத்தல். (Persecution)

9) படுகொலை செய்தல் (Extermination)

10) செய்த குற்றத்தை மறுத்தல் / பிறர் மீது பழிபோடுதல் / விசாரணையைத் தள்ளிப் போடுதல் / தடயங்களை அழித்தல் (Denial)

புதுதில்லிப் படுகொலைகளைப் பருந்துப் பார்வையில் பார்க்கும் எவர் ஒருவரும்  இதே வழிமுறையில்தான் அங்கே படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை உணர முடியும். 2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலை நடைபெற்ற பொழுது நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சர். அமித்ஷா, குஜராத்தின் உள்துறை அமைச்சர். இப்பொழுது மோடி, இந்தியாவின் தலைமை அமைச்சர், அமித்ஷா, இந்தியாவின் உள்துறை அமைச்சர். இது மட்டும்தான் வேறுபாடு.

நெகிழ வைக்கும் மாந்தநேயம்

இவ்வளவு கொடூரமான படுகொலைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, மற்றொரு பக்கம் குருத்துவாராக்களைத் திறந்து வைத்து, உயிருக்குப் பயந்து ஓடி வந்த முசுலீம்களைச் சீக்கியர்கள் பாதுகாத்துள்ளனர். சீலம்பூர் எனும் இடத்தில் தலித்துகள் பாதைகளை மறித்துப் போட்டு, கலவரக்காரர்கள் தெருவுக்குள் வரவிடாமல் தடுத்து இசுலாமியர்களுக்கு உதவியுள்ளனர். இந்துத்துவ வெறியர்கள் தீ வைத்த வீட்டிலிருந்த ஆறு முசுலீம்களைக் காப்பாற்றியிருக்கிறார் பிரேம் காந்த் பகேல் எனும் இந்து ஒருவர். 70% தீக்காயம் பட்டதால், இறுதியில் மருத்துவமனையில் அவர் உயிர் துறந்தார் என்பதை அறிந்த பொழுது, மாந்த நேயம் மரித்து விடவில்லை என மனச்சான்று உள்ளவர்கள் உள்ளம் நெகிழ்ந்தனர்.

இத்தகைய கொடிய செயலுக்குக் காரணமானவர்கள் மீது உடனடி யாகக் குற்ற அறிக்கை தயாரித்து விரைந்து நடவடிக்கை எடுங்கள் என அறச்சீற்றத்தோடு எழுந்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளீதர் அவர் கள், பொழுது விடிவதற்குள் பதவியிலிருந்து மாற்றப்படுகிறார். பிறகு வந்த “நீதிமான்கள்” வழக்கை நான்கு வாரம் தள்ளிப் போட்டுவிட்டனர்.

அதேபோல் தில்லிப் படுகொலைகளின்மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என இந்திய மனித உரிமை ஆணையத்தின் தலைவர், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எச்.எல். தத்து அவர்களைச் செய்தியாளர்கள் கேட்டபொழுது, “புது தில்லியில் நடைபெற்றதை மதக்கலவரம் என்று கூற முடியாது. சனநாயகத்தில் இத்தகைய பிறழ்வுகள் ஏற்படத்தான் செய்யும்” என அலட்சியமாகக் கூறியுள்ளார்.

ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் வழக்கு

இந்தியாவிலுள்ள சங்கிகளைப்போல், உலகம் இந்த வன்முறை வெறியாட்டங்களைக் கண்டும் காணாமலிருக்க அணியமாக இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகம் “குடியுரிமைத் திருத்தச் சட்டம், உறுதியாகப் பாகுபாடு காட்டக் கூடியது” எனக் கண்டித்துள்ளது. மேலும் “பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள அகமதியா, ஹசாரா, ஷியா பிரிவினர் அந்தந்தப் பகுதிகளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இவர்களுக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மேலும் இடம் பெயர்தல் குறித்த நிர்வாக நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், அவை அனைத்து நாடுகளின் மனித உரிமைகள் சட்டம் மற்றும் சட்டத்தின்முன் அனைவரும் சமம், சட்டத்தின் கீழ் அனைவருக்கும் இணையான பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதை நாடுகள் உறுதி செய்ய வேண்டும். இந்தப் பின்னணியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்துடன் பொருந்துகிறதா என்பதை ஆராய்வதில் உச்ச நீதி மன்றத்திற்கு நாங்கள் உதவ விரும்புகிறோம். எனவே இந்த வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என ஐ.நா. மனித உரிமைக் கழகத்தின் செயலர் நாயகம் மிச்செல் பேச்லெட் சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இச் சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் ஏறக்குறைய 150 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்பது இங்கு கருதத்தக்கது.

தவிரவும், தேசியக் குடியுரிமைப் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்றவற்றை நடைமுறைப் படுத்தக் கூடாது என இந்தியாவிலுள்ள 13 மாநிலங்கள் தத்தம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. அதாவது இந்தியத் துணைக் கண்டத்தில் ஏறக்குறைய 50 கோடி மக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து உள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு கடுமையான எதிர்ப்புகள் அலையலையாக எழுந்தபின் அமித் ஷா இப்பொழுது "தேசியக் குடியுரிமைப் பதிவேடு நடைமுறைக்கு வராது எனவும், தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பொழுது ஆவணங்கள் கேட்கப்படாது" எனவும் திசைதிருப்பும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.

செய்ய வேண்டியது என்ன?

மக்கள் சங்கிகளின் பொய்களை நம்பவதற்கு ஆயத்தமாக இல்லை. உண்மையிலேயே பாரதீய சனதா அரசு தனது கூற்றில் நேர்மையாக இருக்குமானால், அது தேசியக் குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். மக்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் (சென்சஸ்) கீழ்தான் மக்களிடம் விவரங்கள் திரட்டப்பட வேண்டும். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் அடிப்படையில் விவரங்களைக் கேட்கக் கூடாது. ஏனெனில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடும், தேசியக் குடியுரிமைப் பதிவேடும் பிரிக்க முடியாதவை. எனவே ஒன்றை அனுமதித்தால், மற்றொன்றைத் தவிர்க்க முடியாது. எனவேதேசியக் குடியுரிமைப் பதிவேடு தயாரிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த விதிகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதற்கேற்பச் சட்டமும் திருத்தப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்

மதத்தால் முசுலீம்களைப் பாகுபடுத்துவதுபோல், இனத்தால் தமிழர்களைப் பாகுபடுத்தும் குடியுரிமைச் சட்டத்தைத் தமிழர்கள் ஏற்க மறுப்பது ஞாயமான ஒன்று. மத அடிப்படையில் பாதிக்கப்பட்டவர் களுக்குக் குடியுரிமை வழங்குகிறோம் என்று கூறினால், இலங்கை யிலுள்ள இந்து மதத்தைச் சார்ந்த தமிழர்கள் இன அடிப்படையில் மட்டுமல்ல, மத அடிப்படையிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக் கணக்கான இந்துக் கோயில்கள் பவுத்த மத வெறியர்களால் தகர்த் தெறியப்பட்டுள்ளன. மேலும் புத்த மதம் அவர்கள் மீது திணிக்கப் படுகிறது.

அதேபோல், அண்டை நாடுகள் என்ற அடிப்படையில் பார்த்தாலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் போல, இலங்கையும் இந்தியாவுக்கு அண்டை நாடுதான். அதுவும் இந்தியாவுக்கு அது என்றும் விசுவாசமான "நட்பு" நாடாகும்.

மேலும் குடியுரிமை கோரும் அகதிகளில் மிக நீண்ட காலம் - ஏறக்குறைய 35 ஆண்டுகள் - இந்தியாவில் வாழ்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்தாம். எனவே எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமையை இந்தியா மறுக்க முடியாது.

ஆனால் "ஐந்து இலட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்கெனவே குடியுரிமை வழங்கி விட்டோம்" என அமித் ஷா கூறுகிறார். அது எப்படி? இலால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி 4,61,000 பேருக்கும், இந்திராகாந்தி ஒப்பந்தப்படி 74,000 பேருக்கும் என மலையகத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட குடியுரிமையைத்தான் அமித் ஷா குறிப்பிடுகிறார். ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பற்றிப் பேசாமல் கள்ள மௌனம் காக்கின்றார்

பாரதீய சனதாக் கட்சி மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியும் இலங்கைத் தமிழர்களைத் தீண்டத் தகாதவர்களாகத்தான் நடத்தியது. குடியுரிமைச் சட்டத்தில் 1987ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் மிகவும் முக்கியமானது. முன்பு இல்லாத வகையில் குடியுரிமைக்கான அடிப்படையையே அது மாற்றி அமைத்து விட்டது. இந்தியாவில் குடியுரிமை பெற ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தால் மட்டும் போதாது. பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும் என்ற திருத்தத்தின் மூலம் 1983ஆம் ஆண்டிலிருந்து இங்குப் பிறக்கும் இலங்கைத் தமிழர் குழந்தைகளின் குடியுரிமைக்குக் காங்கிரஸ் ஆப்பு வைத்துவிட்டது.

இருப்பினும், தற்பொழுது குடியுரிமைச் சட்டம் 1955 வரையறுத் துள்ளபடிதான் இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது. அதன்படி ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலோ அல்லது இந்தியப் பெற்றோருக்குப் பிறந்திருந்தாலோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை இந்தியாவில் தொடர்ந்து குடியிருந்தாலோ அவர் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதி உடையவர் ஆவார்.

அவ்வகையில் ஈழத்தமிழர்கள் இன்று முகாமிலும், வெளியிலும் ஏறக்குறைய ஒரு இலட்சம் பேருக்குமேல் தமிழகத்தில் உள்ளனர். விருப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையும் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் இணையான முக்கியத்துவம் பெற வேண்டும்.

நேர்மையான விசாரணை தேவை

2020 பிப்ரவரி 23 தொடங்கி நடைபெற்ற புது தில்லிக் கலவரங்களைப்போல் எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது எனக் கூறிப் பார்வையாளர்களைப்போல கடந்து சென்றுவிடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதோடு நின்றுவிடாமல், இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதித்துறை ஆணையம் அல்லது ஓர் உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இதைக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலக்கு வைத்து விசாரணை அறிக்கையைப் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த வன்முறையில் தொடர்புடையவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்திக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

போராட்டப் படிப்பினைகள்

குடியுரிமை குறித்த பாரதீய சனதாக் கட்சியின் முன்னெடுப்புகள், இந்தியத் துணைக் கண்டத்தில் மாபெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளன. இது மக்களிடையே உருவாகியுள்ள விழிப்புணர்ச்சியை அடையாளப் படுத்துவதாக உள்ளது. இது தவிர, இந்திய விடுதலைக்குப் பிறகான வரலாற்றில் ஒன்றிய அரசை எதிர்த்து மாநில அரசுகள் தங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றுபட்டு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். மேலும் பெண்கள் - அதிலும் குறிப்பாக முசுலீம் பெண்கள் - வீதிக்கு வந்து வீரியத்துடன் போராடுவது முன் எப்பொழுதும் காணாத ஒன்றாகும். தவிரவும் சாதி / மதம் / கட்சி / வாழிடம் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதும் புதுமையான ஒரு நிகழ்வாகும்.

"கருத்துகள் மக்கள் மனதைக் கவ்வுமானால், அது ஒரு பௌதீக சக்தியாகி விடும்" என அறிவுறுத்திய பேராசான் மார்க்சின் கூற்றினை நமது கண்முன்னே நேரடியாகக் காண முடிந்தது, அரியதோர் அனுபவமாகும்.

- கண.குறிஞ்சி

Pin It