குடியுரிமைத் திருத்தச் சட்டம் - குடியுரிமை பதிவேடு - தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி)

modi amit and yogiஉத்திர பிரதேசத்தின் முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுகிறவர்கள் எங்களின் ஒடுக்கு முறையைக் கண்டு அஞ்சி ஓட வேண்டும்’ என்று பதிவிடும் அளவிற்கு அங்கு நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. மோடி சொல்கிறார், குடியுரிமைப் பதிவேடு பற்றி நாங்கள் விவாதிக்கவே இல்லை என்று. எதிர்ப்பு வந்த பின்பு இந்தக் கருத்தை கூறுகிறார். ஒரு நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் இதைவிட ஒரு தரம் தாழ்ந்தவராக இருக்க முடியாது. ஏனென்றால், அசாமில் இருந்து கொண்டு அமித்ஷா கூறுகிறார், இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை நாங்கள் அமல்படுத்தப் போகிறோம் என்று. அதன்பிறகு கவுஹாத்தியில் அவரது கட்சியின் கூட்டணிக் கட்சி மாநாட்டில் பேசுகின்றபோது அனைத்து மாநிலங்களிலும் இந்த பதிவேட்டை கொண்டு வரப் போகிறோம் என்று அமித்ஷா அங்கேயும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இதன் விவாதம் வந்தபோது மத்திய அமைச்சர்களாக இருக்கிறவர்கள் இந்த குடியுரிமைப் பதிவேடு சட்டம் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள். 2019 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் குடியுரிமைப் பதிவேடு அனைத்து மாநிலங்களிலும் அமுலாக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியது. நாடாளுமன்றக் கூட்டுத் தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகின்றபோது, இந்த அரசு இப்படி ஒரு பதிவேட்டை உருவாக்க இருக்கிறது என்று அறிவித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே (பக்கம் 11 வரிசை எண் 7) நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைப் பதிவேட்டைப் படிப்படியாக நாட்டின் பிற பகுதிக்கும் கொண்டு வருவோம் என்று கூறியிருக்கிறது. இப்படி ஆதாரங்கள் இருக்கின்ற நிலையில், நாங்கள் இதைப் பற்றி விவாதிக்கவே இல்லை என்று ஒரு பிரதமரே அப்பட்டமான பொய்யைக் கூறுவது இந்த நாடு எப்படி தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம்.

உண்மையில் அசாமிலேயே 6 தடுப்புக் காவல் முகாம்கள் இருக்கின்றன. 6 தடுப்புக் காவல் முகாம்களில், குழந்தை ஒரு இடம், அப்பா ஒரு இடம் என்று தனித்தனியாகப் பிரித்து அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்த பிறகு உச்சநீதிமன்றம், தடுப்பு காவல் முகாம்களை முறைப்படுத்துங்கள் என்று மத்திய அரசே தாக்கீது அனுப்பியது. இவர்களுடைய உள்துறை அமைச்சகமே உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

அசாம் மட்டுமல்ல கர்நாடகாவில், டெல்லியில் தடுப்புக் காவல் முகாம்கள் உள்ளன. இந்தியாவின் பல இடங்களில் எப்படி தடுப்புக் காவல் முகாம்களை அமைப்பது என்று உள்துறை அமைச்சகமும் தாக்கீதுகளை அறிவித்துக் கொண்டு இருக்கிறது. இவ்வளவுக்கும் பிறகும் இந்தியாவில் எந்த தடுப்புக் காவல் முகாம்களும் இல்லை என்று இந்திய நாட்டினுடைய பிரதமர் பேசுகிறார் என்று சொன்னால் இதைவிட ஒரு மோசமான, அப்பட்டமான பொய் வேறு ஏதாவது இருக்குமா?

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்த கட்சிகள் தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிக்க முடியாது என்று மறுத்து விட்டன. பா.ஜ.க. ஆதரவு அணியிலுள்ள ஆட்சிகளும் இதில் அடங்கும். உடனே அமைச்சரவை கூடி, ‘குடியுரிமைப் பதிவேடு’ தயாரிக்கும் திட்டம் இப்போது இல்லை; ‘தேசிய மக்கள் தொகை பதிவேடு’ (என்.பி.ஆர்) தயாரிக்கப் போவதாக அறிவித்து, அதற்கு ரூ.4000 கோடி நிதி ஒதுக்கீடும் செய்தார்கள். ஏதோ மக்கள் தொகைக் கணக்கு எடுப்பதுபோல மக்கள் இதையும் கருதி ஏமாந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இத்திட்டத்தை உடனே செயல்படுத்தப் போவதாக அறிவித்து விட்டார். மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கும் மக்கள் தொகைப் பதிவேட்டுக்கும் வேறுபாடு உண்டு.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த கொள்கை வகுக்க வேண்டும் என்பதற்காக என்.பி.ஆர். தகவல்கள் தனக்கு வேண்டும் என்று தெரிவிக்கின்றார். அப்படியானால் நலத் திட்டங்கள் தனித்தனி நபர்களுக்காக தனித்தனி கொள்கையாக வகுக்கப்படுகின்றதா? என்று கேள்வி எழுப்ப வேண்டி இருக்கின்றது.

1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தின்படி மக்களிடம் கேட்கப்படும் புள்ளி விவரங்களில் தனிநபர் கருத்துகள் எந்த நிலையிலும் வெளியே போகாது. அந்த புள்ளி விவரம் மட்டுமே வெளிப் பார்வைக்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் ஆதார் விவரங்களை கையாள்வதற்காக 2016 ஆம் ஆண்டு யூடிஏஐ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் மேலும் 98 சதவீத மக்கள் ஆதார் பெற்று விட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு தேவையான அத்தனை விவரங்களும் ஆதாரில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்களின் நல்வாழ்வு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஆதார் பயன்பட்டு வருகின்றது. தற்போது மத்திய அரசு கேட்கின்ற இரண்டு விவரங்களும் ஏற்கனவே கிடைத்துக் கொண் டிருக்கின்றது. ஒன்று கொள்கையை உருவாக்குவதற்கு சென்சஸ் பயன்படுகின்றது. மற்றொன்று நலத் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு ஆதார் பயன்படுகின்றது. அதன் பிறகு எதற்காக என்.பி.ஆர். கேட்கப்படுகின்றது என்பதே கேள்வி?

பத்து வருடத்திற்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தனிப்பட்ட விவரங்கள் அங்கேயே தங்கி விடும். அதனுடைய தகவல்கள் மட்டுமே வெளியே சென்றடையும். அடுத்த 10 வருடத்திற்கு கணக்கெடுப்பு எடுப்பதற்கு முன் அந்தத் தகவல்கள் அழிக்கப்பட்டுவிடும். அத்தனை தகவல்களையும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வழங்கிவிடும். ஆக இது எதிலுமே என்.பி.ஆர். என்ற ஒன்று கிடையவே கிடையாது.

அப்படியானால் என்.பி.ஆர். எங்கிருந்து வருகின்றது என்றால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்று சொல்லக் கூடிய சட்டத்தின் துவக்கமாக வருகிறது. சென்சஸ் சட்டத்தின் நோக்கம் வேறு, குடியுரிமைச் சட்டத்தின் நோக்கம் வேறு. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அத்திவாரம் தான் என்.பி.ஆர். ஆகும்.

என்.பி.ஆர். கணக்கெடுப்பிற்கு எந்த விதமான ஆவணங்களும் காட்டத் தேவையில்லை என்று சொல்கின்றார்கள். நல்வாழ்வுத் திட்டம் எனக்காகக் கொடுக்கும்போது எதற்காக என் அப்பாவின் பிறப்பிடம் பற்றி கேட்கின்றீர்கள்? என்ற கேள்வி எழுகின்றது. என்.பி.ஆர். கணக்கெடுப்பில் ‘ரிமார்க்’ என்ற பகுதி எதற்காக அமைக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வியும் எழுகின்றது. ஆக தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கான (என்.ஆர்.சி.) ஆவணம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.).

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கம் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகன் எண் கொடுப்பதாகும். அதற்குப் பிறகு என்.ஆர்.சி. குடியுரிமை வழங்கப்படும். என்.பி.ஆர். பதிவேட்டில் உள்ள ‘ரிமார்க்’ என்ற இடத்தில் சந்தேகத்துக்குரிய நபர் என்று எழுதப்பட்டால் அதிகாரிகள் விசாரணைக்கு வருவார்கள். என்.பி.ஆர். கணக்கெடுப்பில் 130 கோடி மக்களுக்கும் பிரச்சினை வந்துவிடாது என்பது உண்மை தான்.

அதில் வெறும் மூன்று கோடி மக்களுக்கு பிரச்சினை வருகிறது என்று வைத்துக் கொண்டால் அந்த மூன்று கோடி பேரில் என்னுடைய உறவினர் இருப்பார். அவரை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படும்போது என்னுடைய மனநிலை எப்படி இருக்கும்? நான் அவர்களிடத்தில் கேள்வி எழுப்பினால், நீ இந்திய குடிமகன், இவர் இந்திய குடிமகன் இல்லை என்று பதில் சொல்வார்கள்.

மிகப் பெரிய பதட்டத்தை உருவாக்குகிறார்கள். 130 கோடி பேரில் மூன்று கோடி பேர் குடிமக்கள் தானா என்ற கேள்வியே கொந்தளிப்பை உண்டாக்காதா? இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் இதை அமல்படுத்தினால் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா முழுவதும் இதை அமல்படுத்துவதற்கு என்ன அவசியம் வந்தது?

2010இல் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப் பட்டபோது ஏன் அமைதியாக இருந்தார்கள்? என்று கேட்கின்றார்கள். இன்றைக்கு இருப்பது போன்ற ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும்தான் குடியுரிமை என்ற வாதம் அன்றைக்குக் கூறப்படவில்லை. அதன் காரணமாக அன்றைக்கு சந்தேகம் எழவில்லை.

தமிழக முதல்வர் குடியுரிமைப் பதிவேட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்கின்றார். அப்படியானால் அதற்கு அச்சாரமாக விளங்கும் மக்கள் தொகை பதிவேட்டையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது. மக்கள் தொகை பதிவேட்டை அனுமதித்தால் அவர்கள் குடிமக்கள் எண்ணை உருவாக்கிக் கொள்வார்கள். ஆக, 2020இல் எடுக்க வேண்டியது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மட்டும்தானே தவிர, என்.பி.ஆர். அல்ல!

குடியுரிமை என்பதற்கு ஏன் அவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்? இந்தியா என்பது இந்துக்களுக்கான ஒரு நாடு என்கிறார்கள். பார்ப்பனர்களும் சங்பரிவாரங்களும் இந்தியா என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை. இது இந்துக்களின் தேசம்! இந்துக்களின் நாட்டில் வாழுகிற இஸ்லாமியர், கிருத்துவர் போன்ற பிற மதத்தினர் (foreigners) இந்து கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு, இந்துக்களுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் இங்கே வாழலாம் அப்படி வாழ முடியாதவர்களுக்கு இங்கே குடியுரிமையே வழங்க முடியாது என்பதே இவர்களின் கொள்கை. ஆதாரத்துடன் கூறுகிறோம். எப்படி கிருத்துவர்களுக்கு பைபிள் இருக்கிறதோ, இஸ்லாமியர்களுக்கு குர்ஆன் இருக்கிறதோ அதே போல ஆர்.எஸ்.எஸ். இன் சித்தாந்தத்தை உருவாக்கியவர் கோல்வாக்கர். அந்த கோல்வாக்கரின் சித்தாந்தங்கள் தான் இன்று ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படுகிறது. அந்த கோல்வாக்கர் ‘நாம், நமது தேசத்தின் வரையறை’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

அதில் இவ்வாறு கூறுகிறார்: “இந்துஸ்தானில் வாழக்கூடிய அனைவரும் இந்துக்கள். அவர்களுக்கான இனத்தின் அடையாளம் இந்தியர் அல்ல; இந்து என்பது தான். இந்து மதத்தைச் சாராத பிற மதத்தினர் அனைவரும் அன்னியர்கள். அவர்கள் இந்துஸ்தான் என்ற பாரத தேசத்தில் வாழ வேண்டுமானால் இந்து கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்; அதற்கு அடிபணிய வேண்டும். இந்துக்கள் அல்லாத பிற மத அன்னியர்கள் தங்களுக்கான தனித்த அடையாளங்களை இழந்துவிட வேண்டும். இந்துக்கள் பெருமையை மட்டுமே பேச வேண்டும். இதை ஏற்க மறுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு ‘குடியுரிமை’ கூட வழங்கக் கூடாது” என்று கோல்வாக்கர் - ‘நாம் அல்லது நமக்கான தேசத்தின் வரையறை’ (We or our nationhood defined) என்ற நூலில் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்.

“The foreign races of Hindustan must either adopt the Hindu Culture and language; must learn to respect and hold in reverance Hindu Religion” என்று எழுதியதோடு அவர்கள் தங்களுக்கான தனி அடையாள உரிமைகளை இழந்தே தீரவேண்டும் (They must lose their seperate existance) என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார். அவர்கள் தங்களுக்கான உரிமை கiளையோ, முன்னுரிமையோ கோர முடியாது என்பதோடு குடியுரிமை கோரவும் உரிமை இல்லை. (They may stay in the country, wholly subordinated to the Hindu Nation, claiming nothing, deserving no privileges; far less any preferential treatment - not even citizen’s rights) (மேற்குறிப்பிட்ட நூலின் பக்கம் 47-48)

இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கூட வழங்கக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். பிதாமகர் கோல்வாக்கர் கருத்துக்கு தரப்பட்டுள்ள சட்ட வடிவம்தான் குடியுரிமை திருத்தச் சட்டம்.

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்து இராஷ்ட்ரம் என்ன சொல்கிறது? ஆர்.எஸ்.எஸ். இன் ஆரம்பகால சித்தாந்தம் ‘அகண்ட பாரதம்’ என்பதாகும். அந்த அகண்ட இந்து இராஷ்டிரத்தில், ‘பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பர்மா, சீனா’ சீனாவையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. சீனாவையும் அடக்கியது தான் அவர்களின் அகண்ட இந்து இராஷ்டிரம். இதை கோல்வாக்கர் bunch of thoughts என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அது தமிழில் 'சிந்தனைக் கொத்து' என்று வெளி வந்திருக்கிறது.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It