கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மிச்சிறந்த சனநாயக நடவடிக்கையைச் சீர்குலைத்திட, தங்களைத் தலைவர்களாகக் காட்டிக் கொள்ளும் ஆட்சியாளர்களையும் வெறிக்கும்பலையும் அனுமதிக்கக்கூடாது.

புதிய இந்தியாவைக் காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அமெரிக்காவின் குடியரசுத் தலைவரை அழைத்திருப்பார்கள். ஆனால் மத்திய காலத்தின் பகைமைச் சிந்தனைகளில் மூழ்கிக் கிடக் கும் பழைய இந்தியாவையே அமெரிக்கக் குடியரசுத் தலைவர் காண நேரிட்டது. இது டொனால்டு டிரம்பின் இந்தியப் பயணத்தைச் சீர்குலைப்பதற்கான சதி என்று ஆளும் கட்சியான பா.ச.க.வில் சிலர் கூறுகின்றனர். அப்படியானால், அரசு செய்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரசு நிர்வாக அலகுகளும் தோல்வியடைந்துவிட்டன என்றே சொல்ல வேண்டும். இத்தகைய தோல்வி கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்பட்டு வருகிறது. சமுதாயத்தின் மனக்குறைகளைப் போக்கவும், இணக்க மான சூழலை உருவாக்கவும் தங்களை மீட்பர்களாகப் பறைசாற்றிக் கொள்ளும் வன்நெஞ்ச அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் இத்தோல்விகள் மேலும் தீவிரமடையும்.

women muslim 600சாகீன்பாக் இயக்கத்தைச் சட்டப் புறம்பான தாக்கிட முயலுதல் :

தில்லியில் கடந்த சில நாள்களில் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட கொடிய வன்முறைச் செயல்கள் அவர்களின் நோக்கம் என்ன என்பதை உறுதி செய்கின்றன. தவறான-பாகுபாடு காட்டுகின்ற 2019-ஆம் ஆண்டின் குடிஉரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பின் குறியீடாகத் திகழும் சாகீன்பாக் போராட்டத்தைச் சட்டத்திற்குப் புறம்பானதாக ஆக்கிட வேண்டும் என்று துடித்தனர். அச்சுறுத்தல்களுக்கோ, நயவஞ்சகமான இனிய சொற்களுக்கோ அடிபணியாமல் தில்லியின் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவும் பகலும் சாகீன் பாக்கில் அமர்ந்து தொடர்ந்து போராடிவரும் இசுலாமியப் பெண்களைப் பார்த்து நாடே வியக்கிறது.

தங்கள் குடிஉரிமையையும் மதச் சிறுபான்மை என்கிற உரிமையையும் நிலைநாட்டிட தேசிய அடை யாளங்களாகக் கருதப்படும் அரசமைப்புச் சட்டம், தேசியக்கொடி, தேசிய கீதம் ஆகியவற்றைத் தங்கள் கைகளிலும் நெஞ்சங்களிலும் ஏந்தி புதுமையான போராட்டத்தை முதியோரும் இளையோரும் என இணைந்து முசுலீம் பெண்கள் சாகீன்பாக்கில் போராடி வருகின்றனர், முசுலீம் பெண்களே இப்போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்ட போதிலும் சாகீன்பாக் போராட்டம் மதச்சார்பற்ற ஒன்றாகவே பார்க்கப்பட்டது. புதுவகையான இக்குடிமைப் போராட்டம் அறநெறியின் ஒளியாகச் சுடர்ந்தது. அதனால் உலக அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. சாகீன்பாக் போராட் டத்தின் தாக்கத்தைப் “புதிய இந்தியாவின்” ஆட்சியா ளர்கள் கண்டறிவதற்கு முன்னரே, இந்தியா முழுவதும் பெருநகரங்களிலும் சிறிய நகரங்களிலும் சாகீன்பாக் வடிவிலான எண்ணற்ற போராட்டங்கள் உருவெடுத்தன. புது வடிவிலான இந்த எதிர்ப்பு இயக்கம் அரசியல் தளத்தில் முதன்மை பெற்றது. விதிகளையும் ஊடகங் களையும் நாட்டின் சிந்தனைப் போக்கையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு சாகீன்பாக் போராட்டம் எரிச்சலூட்டியது.

அரசியலில் மதரீதியிலான அணிதிரட்டலை உள் நோக்கமாகக் கொண்டு தேர்ந்த மதிநுட்பத்துடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உருவாக்கிவிட்டதாகக் கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு அமைதியாக நடை பெற்ற சாகீன்பாக் போராட்டம் கடும் சினமூட்டியது. தங்களை நவீன சாணக்கியர்களாகக் கருதிக் கொள்ளும் இவர்கள் சாகீன்பாக் போராட்டத்தை வெறும் “முசுலீம் களின் எதிர்ப்பாக” மட்டும் காட்ட முயன்றனர். ஆனால் அதில் தோல்வியுற்றதால் இவர்கள் மேலும் சினமுற்ற னர், எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் சனநாயகத் திற்கான போராட்டத்தையும் அரசின் ஒடுக்குமுறை மூலம் அடக்கிவிடலாம் என்று நம்பிக் கொண்டிருந்த நம்முடைய புதிய ஆட்சியாளர்களுக்கு சாகீன்பாக் பெரும் கலக்கத்தையும் அவமானத்தையும் தருவதாக அமைந்துவிட்டது. குடியாட்சியின் விழுமியங்களையும் மதச்சார்பற்ற முழக்கங்களையும் முன்னிறுத்தி நடத்தப் படும் சாகீன்பாக் போராட்டம் ‘புதிய இந்தியாவின்’ நிர்வாகிகளின் கண்களுக்குத் தத்துவ வகையில் பெரும் உறுத்தலாக இருக்கிறது,

தேர்தலில் எதிர்பாராத் தோல்விக்குப்பின்

தில்லி சட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று பா.ச.க. தலைமை நம்பியது. உள்துறை அமைச்சர் மட்டுமின்றி இந்தியா முழுவதிலி ருந்தும் பா.ச.க. தலைவர்கள் தில்லியில் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ‘தேசபக்தி’ உணர்ச்சியைத் தூண்டினர். சாகீன்பாக் போராட்டக் காரர்களுக்குச் சரியான பாடம் புகட்டுங்கள் என்று வாக்காளர்களுக்கு அறைகூவல் விடுத்தனர். மத அடிப்படையில் அணிதிரட்டும் பா.ச.க.வின் அரசியல், அதன் தலைவர்களின் புகழ் ஆகியவற்றின் மீதான கருத்துக் கணிப்பாகவே தில்லி சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தினர். ஆனால் தில்லி வாக்காளர்கள் பா.ச.க.வின் எதிர்பார்ப்பை உறுதியாகவும் திட்டவட்டமாகவும் முறியடித்தனர்.

படுதோல்வி அடைந்த போதிலும், தலைக் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் பா.ச.க. தலைவர்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட தங்கள் வாக்கு விழுக்காடு உயர்ந்திருப்ப தாகக் கூறினர். அதன்பின், சாகீன்பாக் போராட்டத் தைக் குலைப்பதற்கான வேலையில் ஈடுபடத் தொடங் கினர். பா.ச.க. தலைவர் கபில் மிஸ்  ரா, ஜாஃப்ரா பாத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்துவோரை சாலையிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையேல் நாங் களே அகற்றுவோம் என்று காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

சாகீன்பாக் போன்ற போராட்ட வடிவங்களை மரபான முசுலீம் தலைமை விரும்பவில்லை என்பதை பா.ச.க. தலைமை நுட்பமாகக் கணித்திருந்தது. சாகீன்பாக் போராட்டக்களத்தில் பெண்களே முன்னிலை வகித்தனர். முல்லாக்களும், இமாம்களும், மவுல்விகளும பின்னுக்குத் தள்ளப்பட்டனர். சாகீன்பாக் போராட்ட வடிவம் முசுலீம் சமூகத்தின் மரபான தலைமைக்கு ஒரு சவாலாக இருந்தது போலவே சங்பரிவாரங்களுக்கும் இருந்தது. மரபான முசுலீம் தலைவர்கள், முசுலீம் பெண்கள் மீதான தங்கள் கட்டுப்பாட்டை இழந்தது குறித்தும், உச்சநீதிமன்றம் அனுப்பிய சமரசக் குழுவினர் தங்களிடம் பேசாமல், சாகீன்பாக் போராட்டக் களத்தில் இருந்த பெண்களிடம் மட்டுமே பேசியது குறித்தும் மனம் வெதும்பினர்.

சாகீன்பாக்கிலிருந்து சில மைல்களுக்கு அப்பால், யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக உள்ள உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடுவோர் காவல்துறையால் காட்டுமிராண்டித் தனமாக ஒடுக்கப்படுகின்றனர் என்பதை பா.ச.க. தலைவர்கள் நன்கு அறிவார்கள். முசுலீம் சமுதாயத்தினர் மீது காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடிய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் யமுனை ஆற்றுக்கும் அப்பால் பல பகுதிகளையும் சென்றடைந்தன.

இந்நிலையில் அறவழியில் அமைதியான முறையில் சாகீன்பாக்கில் நடக்கும் போராட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்கிற அய்யத்தை எழுப்பியது. இதைவிடக் கேடான நிலை என்னவெனில், பழிவாங்கும் எண்ணத்துடன் ஆதித்தியநாத் ஆட்சி செய்த கொடுமை களைக் கட்டுப்படுத்த அரசமைப்பின் எந்தவொரு நிறுவனமும் முயலவில்லை என்பதாகும். முசுலீம்களுக்கு எதிரான மனப்போக்குடன் பொறுக்கிகள் போல் காவல் துறையினர் நடத்திய கொடுஞ்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நீதித்துறையோ, உ.பி.யின் அரசியல் கட்சிகளோ, ஊடகத் துறையோ, குடிமை சமூகமோ செயல்பட வில்லை. அதனால் முசுலீம்களின் வாழ்விடங்களில் சினமும் கையறு நிலையும் ஒருசேர நிலவியது.

முற்றிலும் முரண்பட்ட இரண்டு பிரிவுகளின் உணர்வுகளும் சந்திக்கும் ஓர் இடம் உண்டு; நியாய மான, ஒற்றுமையான சாகீன்பாக் போராட்டத்தையும் அதன் மதச்சார்பற்ற போக்கினையும் குலைக்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தைக் கையிலேந்தி போராடும் அக்கூட்டத்தைக் கலைத்து அதை வெறிச் செயலில் ஈடுபடும் கும்பலாக மாற்ற வேண்டும். கடந்த கிழமையின் இறுதியில் தில்லியில் இரண்டு முரண் பட்ட கூறுகளின் சந்திப்பு பெரும் கலவரமாக வெடித்தது.

2002-இல் குசராத் கலவரத்தை நடத்தியவர்கள் தெருக்களில் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்து வதில் தாங்கள் வல்லவர்கள் என்று நினைத்தார்கள் போலிருக்கிறது, எதையும் நயவஞ்சகமாகக் கையாள் வதில் கைதேர்ந்தவர்களான சங்பரிவாரங்கள், 1984-இல் தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வகுப்புக் கலவரத்திற்குப்பின், மீண்டும் இப்போது முழு வீச்சிலான வகுப்பு மோதல் நடந்தது பற்றி மனநிறை வடைவார்கள். மேலும் இந்து-முசுலீம் பிரிவினை என்பது மீண்டும் முன்னிலை பெற்றிருப்பதற்காகவும், இது தேர்தல் அரசியலில் ஆதாயம் அளிக்கும் என்பதற் காகவும் மகிழ்ச்சியடைவார்கள்,

பிளவுபடுத்தும் போக்கை வீழ்த்துதல் :

நேருவின் ஆட்சிக் காலத்தில் கட்டமைக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லுதல், பன்மைத்துவத்தைப் புரத்தல் முதலான கூறுகளை ஒழிக்க வேண்டும் என்று வெளிப்படையாகச் செயல் படும் மோடியின் ஆட்சியில் தில்லி வகுப்புக் கலவரம் நிகழ்ந்தது எதிர்பாராத ஒன்றல்ல; ஆயினும் நம்முன் உள்ள சவால்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்; “இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது” என்கிற அரசியலை முறியடிக்கக் கூடிய வல்லமை நம்முடைய அரசமைப்பு நிறுவனங்களுக்கும் அதன் உள்கட்டமைப்புகளுக்கும் இருக்கிறதா? சமூகம் ஆழமாகப் பிளவுபடுதல் என்பது சகிப்பின்மையற்ற வெறிக் கும்பலுக்குப் பயன்தரலாம். ஆயினும் மக்களைப் பிளவுபடுத்தும் இந்த ஆட்சியை, அதனுடைய வக்கிர மான கொள்கைகளை, அதனடிப்படையில் அது முன்னெடுக்கும் செயற்பாடுகளைத் தோற்கடிக்க வேண்டியது நம்முடைய சனநாயகக் கட்டமைப்புகளின் நீங்காக் கடமையாக உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா இச்சிக்கலின் மய்யம் எது என்று அடையாளங் கண்டு தன் கருத்தைக் கூறியுள்ளார். “பெரும்பான்மையின் ஆட்சி என்பது சனநாயகத்தின் பிரிக்க முடியாத பகுதி ஆகும். அதே சமயம் பெரும்பான்மைவாதம் என்பது சனநாயகக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும்” என்று நீதிபதி தீபக் குப்தா கருத்துரைத்தார். மேலும் அவர் ஒரு கருத்தை வலியுறுத்தினார் : ஒரு அரசியல் கட்சி தேர்தலில் 51 விழுக்காடு வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கலாம். ஆனால் அதன் பொருள் மற்ற 49 விழுக்காட்டினர் சட்டப்படியான எந்த அதிகாரமும் அற்றவர்களாக அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்பதன்று. இந்த எளிய உண்மை அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். ஆயினும் நீதிபதி தீபக் குப்தா இதை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறார் - உயர் நிலையில் உள்ள குடியரசுத் தலைவர் - பிரதமர் முதல் கீழ் நிலையில் உள்ள காவல்துறையின் காவலர் வரை உள்ள ஒவ்வொரு அலுவலரும் இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களின் நலன்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்கிற கடமையை இந்திய அரசமைப்புச் சட்டம் விதித்துள்ளது.

இந்த அடிப்படையில் செயல்படுமாறு சாகீன்பாக் போராட்டம் கோருகிறது. சிறுபான்மையினரின் குறை களையும் கவலைகளையும் போக்குவதற்கு இந்திய சனநாயகக் கட்டமைப்பு அமைதியான வழிமுறையில் தீர்வு காணும் என்கிற எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் சாகீன்பாக் போராட்டம் மய்யமாகக் கொண்டிருக்கிறது. சனநாயகத்தின் விழுமியங்களையும் நம்பிக்கையையும் உயர்த்திப் பிடிக்கும் சாகீன்பாக் போராட்டத்தை, தில்லியில் கட்டவிழ்த்து விடப்பட்டது போன்ற வன்முறை மூலம் ஒடுக்குவது என்பது இந்திய சன நாயகத்துக்கு மீளாத் துயரமாக முடியும்.

(குறிப்பு : 28.2.2020 அன்று ‘தி இந்து‘ ஆங்கில நாளேட்டில் தில்லியின் மூத்த பத்திரிகையாளர் ஹரிஷ் காரே எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழாக்கம் : க.முகிலன்