தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்:

மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய வரலாறு காணாத எழுச்சிப் போராட்டத்தில் தேச விரோதிகள் ஊடுருவி விட்டதாக பா.ஜ.க.வினரும், காவல் துறையும் கூறுகிறார்கள். தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும், சட்டமன்றத்தில் இதே கருத்தை மத்திய உளவுத் துறை தயாரித்துத் தந்திருந்த அறிக்கையை படித்தார்.

‘தேச விரோதிகள்’ குறித்து நாம் பேசுவதற்கு முன்பு ‘தேச பக்தர்கள்’ குறித்து விவாதிக்க வேண்டும். உண்மையில் தேசபக்தி என்பதற்கான விளக்கம்தான் என்ன? இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுபட் டிருந்தபோது, தேசபக்தியின் அர்த்தம் வேறு; பாகிஸ்தான் பிரிந்த பிறகு அர்த்தம் வேறு. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு உபகண்டம்தான் இந்தியா. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான் இப்போது கூறப்படும் ‘இந்தியா’ என்ற நாடே உருவானது. 1773இல் தான் முதன்முதலாக பிரிட்டிஷ் ஆட்சி வருகைக்குப் பிறகு மத்திய அரசு என்ற ஒன்றே உருவாகிறது.

தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அதன் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவது தேச விரோதமா? தேசபக்தி - தேசம் என்ற சொல்லாடல்களையே கேள்விக் குள்ளாக்கியவர் பெரியார். “சோவியத் ரஷ்யா இந்தியாவுக்கு படை எடுத்து வந்தால் அதை நான் ஆதரிப்பேன்” என்றுகூட பெரியார் எழுதினார். “அப்படி ஒரு ஆட்சியின்கீழ் வாழ்ந்தால் ‘பிராமணன் - சூத்திரன்’, ‘ஏழை-பணக்காரன்’ பாகுபாடு இல்லாமல் போய்விடும்” என்றார். 1932இல் பெரியார் சோவியத் ரஷ்யாவுக்கு சென்றபோது வாய்ப் பிருந்தால் அந்த நாட்டிலேய தங்கிவிடலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. ஒரு பொது வுடைமைக்காரர், முதலில் தேசியவாதியா? சர்வதேசியவாதியா? இதில் எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று மறைந்த பொதுவுடைமை தலைவர் பாலதண்டாயுதத்திடம் பெரியார் மேடையில் விவாதித்திருக்கிறார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தவர் பேராசிரியர் சுப்ரமணியம். அவர்தான் அப்பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். பதவி ஓய்வுக் குப் பிறகு ஆந்திராவில் என்.டி.ராமாராவ் தொடங்கிய திராவிட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக அழைக்கப்பட்டார். அப்போது வாஜ்பாய் ஆட்சியில் மத்திய மனிதவளத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி என்ற வைதீகப் பார்ப்பனரை சந்திக்கச் சென்றார். பல்கலைக் கழகத்தின் பெயர் ‘திராவிட’ என்று இருப்பதை நீக்கிட வேண்டும் என்றார் ஜோஷி; அதற்கு துணைவேந்தர் அளித்த பதில், ‘ஜனகணமன’ தேசிய கீதத்தில் வரும் ‘திராவிட’ என்ற சொல்லை நீங்கள் நீக்கினால், நாங்களும் நீக்கிவிடத் தயார் என்றார். தேச விரோதிகள் யார் என்று, இங்கே தரப்பட்டிருக்கிற தலைப்பு குறித்து இளைஞர்களாகிய உங்களிடம் சில வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தேசபக்திக்கு சொந்தம் கொண்டாடுகிற பாரதிய ஜனதா, அதற்கு முன் ஜனசங்கமாக இருந்தது. அதற்கு முன் ‘இந்து மகாசபை’யாக இருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் ‘கருத்தியல்’ வழங்கும் மூல அமைப்பு, ‘இராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ எனும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான். அந்த அமைப்பு தேச விரோத அமைப்பு என்று மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு. காந்தி கொலை செய்யப்பட்டபோது ஒரு முறை; 1976இல் இந்திரா காந்தி அவசர நிலையைக் கொண்டு வந்தபோது ஒரு முறை; பிறகு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஒரு முறை; இவர்களுக்கு தேசபக்தி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

தேசியக் கொடியை மாணவர்கள் அவமதித்த தாகக் கூறுகிறார்கள். இப்போதிருக்கும் தேசியக் கொடியை வடிவமைத்தபோது, காவிக் கொடிதான், நமது மூதாதையர் கொடி. இந்த மூவர்ணக் கொடி வேண்டாம் என்று கூறியதுதான் ஆர்.எஸ்.எஸ். அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் கோல்வாக்கர் என்ற மராட்டியப் பார்ப்பனர். அவர்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான கொள்கையை எழுத்து வடிவமாக்கித் தந்தவர். கிறிஸ்தவர்களுக்கு ‘பைபிள்’போல இஸ்லாமியர்களுக்கு குரான் போல ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான ‘பைபிள்’ இந்த நூல்தான். அதன் பெயர் ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (க்ஷரnஉh டிக கூhடிரபாவள). தமிழில் ‘சிந்தனைக் கொத்து’ என்று வெளியிட் டார்கள். இப்போது பதிப்புகள் வெளி வருவதில்லை. இவர்களின் உண்மையான கொள்கை அடையாளங்கள் வெகு மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று ‘வேதத்தைப்போல்’ தங்களுக்கான மறை பொருளாகவே இதையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எச். ராஜாக்கள், குருமூர்த்திகள், சுப்பிரமணியசாமிகள், தங்களை தேச பக்தர்களாக முத்திரை குத்திக் கொண்டு, ‘இந்தியா’வை எதிர்த்து பேசுவதே தேச விரோதம் என்று கூப்பாடு போடுகிறார்கள்.

அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளுக்கோ, அதன் அரசியல் கட்சிகளுக்கோ, ‘இந்தியா’ என்ற பெயரை ஏன் பயன்படுத்துவதில்லை? இதற்கு பதில் சொல்ல வேண்டும். ‘இந்திய ஜனதா கட்சி’ என்று பெயர் சூட்டாமல், ‘பாரதிய ஜனதா கட்சி’ என்று பெயர் சூட்டியிருப்பது ஏன்? அவர்களின் தொழிற்சங்க அமைப்பு உள்ளிட்ட அத்ததைன அமைப்புகளுக்கும் ‘பாரதிய’ என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துவது ஏன்? இந்தியா என்ற சொல்லையே முழுமையாகத் தவிர்ப்பது ஏன்? இதற்கு பதில் சொல்வார்களா? இதற்கான காரணத்தை இந்த ‘தேச பக்த திலகங்கள்’ மூடி மறைத்து வைத்திருப்பதன் நோக்கத்தை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம். ஆர்.எஸ்.எஸ். கொள்கை நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ நூலில் கோல்வாக்கர் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

“பாரதியம் என்பது நம்முடைய பழமையான பெயர். நமக்கு நினைவு தெரியாத காலம் முதல், இந்தப் பெயர் இருக்கிறது. புராணத்திலும் வேதத்திலும் பாரத் - பாரதியம் என்றே கூறப்பட்டிருக்கிறது. ‘பாரத்’ என்பதும், ‘இந்து’ என்பதும் ஒன்றுதான்.....”

“இன்று பாரதியம் பாரத் என்ற சொற்கள் கூட தவறான பொருளில் பயன்படுத்தப் படுகின்றன. இந்தியா - இந்தியன் என்ற சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்து கிறார்கள். ‘இந்தியன்’ என்ற சொல் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி போன்ற பல்வேறு சமூகத்தவரையும் சேர்த்துத் தான் குறிக்கிறது. நம்முடைய சமூகமான ‘இந்து’வை மட்டும் குறிப்பதில்லை. நம்முடைய சமூகத்தை மட்டும் குறிக்கும் ‘பாரதிய’ என்ற சொல்லை மற்ற சமூகத்தினரையும் இணைத் துக் கொள்ளும் சொல்லாகக் குறிப்பிடு கிறார்கள்” என்று எழுதுகிறார், கோல்வாக்கர். இப்படி ‘இந்தியா’ என்ற சொல்லையே ஏற்க மறுப்பவர்கள்தான் இந்தியாவின் ‘ஏஜெண்டு’களாகியிருக் கிறார்கள்.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய ஒரு கல்வி நிறுவனம். தேசிய கீதமான ‘ஜனகனமண’ பாடலை பள்ளிகளில் பாட மாட்டோம் என மறுத்தது. ‘வந்தே மாதரம்’ பாடலையே பாடுவோம் என்று அடம் பிடித்தார்கள். நீதிமன்றம் வரை சென்று வாதாடினார்கள். ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் ‘ஜனகணமன’ பாடப்படுவது இல்லை. ‘ஜனகணமன’ பாடலுக்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடுவதுதான் தேசபக்தி என்கிறார்கள். ‘ஜெய்ஹிந்த்’ என்கிறார்கள். ‘இந்து மதத்துக்கு ஜே’ போடுவதுதான் ‘ஜெய்ஹிந்த்’. அவர்கள் பார்வையில் இதுதான் தேசபக்தி முழக்கம். பல்வேறு மதத்தினரும் மத நம்பிக்கையற்றோரும் வாழும் நாட்டில் ‘ஜெய்ஹிந்த்’ என்று மட்டுமே கூறுவது ‘தேசபக்தியா? தேச விரோதமா?’

‘வந்தே மாதரம்’ தேச பக்தி பாடலா?

‘வந்தே மாதரம்’ என்பதன் வரலாறு என்ன? பிரிட்டிஷ் ஆட்சியில் வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து நடந்த போராட்டம், வங்காளிகளின் இந்து தேசியத்துக்கான போராட்டமாக கட்டமைக்கப்பட்டது. அப்போது பக்கிம் சந்தர் சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், ‘ஆனந்த மடம்’ என்ற நாவலை 1880இல் எழுதினார். நாவலின் மய்யக் கருத்து, முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியை ஆயுதப் போர் நடத்தி அகற்றிவிட்டு, இந்துக்கள், பிரிட்டிஷ் ஆட்சியோடு இணைந்து கூட்டு ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே. வைணவ இந்து இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும் என்பதே கதையின் கரு. வைணவர்களின் தலைவராக சுவாமி சத்யானந்தா என்ற ஒரு துறவியும், அவரது சீடராக குருபவானந்தா என்ற வீரமிக்க இளைஞரும் இந்தக் கதையின் முக்கிய நாயகர்கள். பவானந்தா இந்து இளைஞர் களை ஒன்று திரட்டி, முஸ்லிம்களுக்கு எதிராகப் போராட ஆயுதப் பயிற்சி அளிக்கிறான். அப்போது இளைஞர்களிடம் பாடும் பாடல் தான் ‘வந்தே மாதரம்’. அந்த வந்தே மாதரம் பாடல் என்ன கூறுகிறது?

“நாம் முஸ்லிம்களை ஒழிக்காவிட்டால், நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை. ஏழு கோடி இந்துக்களாகிய நாம் வாளேந்தி களத்தில் குதித்தால், அது ஒன்றே போதும் நமது பெருமையை மீட்க” - இதுவே அப்பாடலின் பொருள். ‘ஆனந்த மடத்துக்குள்’, ‘விஷ்ணு’வின் மடியில் பலவீனமாக ‘இந்திய மாதா’ படுத்திருக்கும் படத்தைப் பார்த்து, ‘வந்தே மாதரம்’ என்று முழங்கி, முஸ்லீம்களுக்கு எதிராக வாளேந்திப் போரிடுகிறார்கள். முஸ்லிம் பெண்கள் பலரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கு கிறார்கள். பிறகு காளிதேவி முன் வெற்றிக் கூத்தாடு கிறார்கள். அப்போது இன்னும் இந்து ராஜ்யம் வரவில்லையே; ஆங்கிலேயர்கள் தானே நம்மை ஆளுகிறார்கள்? என்று இளைஞர்கள் சத்யானந்தா விடம் கேட்க, அவர் கூறுகிறார், “இப்போது நமக்கு எதிரிகள் யாருமில்லை. ஆங்கிலேயர்கள் நம்முடைய நண்பர்கள். அவர்கள் தங்கள் அதிகாரங்கள் அனைத்தையும் ‘விஷ்ணு’வுக்கே காணிக்கையாக்கி யிருக்கிறார்கள்” என்கிறார். கதை அத்துடன் முடிகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் மதவெறிப் பாடல்தான் - சங்பரிவாரங் களுக்கு தேசபக்திப் பாடல். இந்தப் பாடலை தேசிய கீதமாக்க முயற்சிகள் நடந்தன. முஸ்லிம் லீக் எதிர்ப்பு தெரிவித்தது. காந்தியும் இதை ஏற்கவில்லை. இப்போதும் ‘வந்தே மாதரத்தை’ பாடிக் கொண்டு அதுதான் தேச பக்தி என்று கூறிக் கொண் டிருப்பவர்கள்தான் தேசபக்தி பற்றி பேசுகிறார்கள்.

இந்தியர்கள், இந்திய உணர்வுக்கு எதிராகப் பேசுவது ‘தேச விரோதம்’ என்று துள்ளிக் குதிக்கும் சங்பரிவார், பா.ஜக.வை நோக்கி, மற்றொரு கேள்வியை முன் வைக்கிறோம். மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதே தவறு என்கிறது ஆர்.எஸ்.எஸ். கொள்கை. கோல்வாக்கர் இவ்வாறு எழுதுகிறார்:

“வாழும் பிரதேச எல்லையின் அடிப்படை யில் தேசியத்தை ஏற்றுக் கொண்டதுதான், நமது நாட்டைப் பீடித்துள்ள பல தீமைகளுக்கும் துன்ப துயரங்களுக்கும் காரணம்” என்று எழுதுகிறார்.

அது மட்டுமல்ல, ‘இந்தியா’ என்று இந்த நாட்டுக்குப் பெயர் சூட்டியதையும், ‘இந்தியர்கள்’ என்று அழைப்பதையும் துரோகம் என்கிறார், கோல்வாக்கர்.

“நமது நாட்டை அதன் புராதனப் பெயரான இந்துஸ்தான் என்று பெயரிட்டு அழைக்கக் கூடாது என்றனர். ஏனெனில் அது முஸ்லிம்களின் மத உணர்வைப் பாதித்துவிடுமாம். பிரிட்டிஷ்காரர்கள் சூட்டிய ‘இந்தியா’ என்ற பெயரை ஏற்றுக் கொண்டனர். இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டு, புதிய தேசத்தை இந்திய தேசம் என்று அழைத்தனர். இந்துக்களை எப்படி இந்தியர்கள் என்று அழைக்க முடியும்? என்று கேட்கிறார் கோல்வாக்கர்.

இதுதான் தேச பக்தியின் குரலா? எச். ராஜாக்கள், குருமூர்த்திகள் பதில் சொல்லத் தயாரா? ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கருத்தியலை வழங்கும் கோல்வாக்கர் நூலை நாங்கள் நிராகரித்து விட்டோம் என்று அறிவிப்பார்களா? பதில் சொல்லட்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ஏதோ தேச பக்தியை நாட்டில் வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது போல் பேசிக் கொண்டிருப்பவர்களின் முகத் திரையை நாம் கிழித்தாக வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவும் இஸ்லாமியர்களை பகைவர் களாகவும் எப்படி ‘ஆனந்த மடம்’ நாவல் சித்தரித்ததோ, அதுதான் சுதந்திரப் போராட்ட காலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். எடுத்த நிலைப்பாடு, இதற்கு ஏராளமான ஆதாரங்களை குவிக்க முடியும்.

(தொடரும்) 

Pin It