காஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்? - 4

இந்திய ஊடகங்கள் புல்வாமா தாக்குதலை எவ்வாறு கையாண்டன என்பது பற்றி, லிசனிங் போஸ்ட் செய்தி நிறுவனம் ஒரு காணொளி வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு எப்படி பெரும்பாலான இந்திய ஊடகங்கள் தேசப்பற்று என்ற போர்வையில், வெறுப்பரசியலைப் பரப்பின என்றும், நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் இந்துத்துவ அரசியலுக்கு அவை எப்படித் துணை நிற்கின்றன என்றும் இந்தக் காணொளி ஆராய்கிறது. 

நம் ஊடகங்களின் தொகுப்பாளர்களின் இச்செயல்பாடுகளை இதழியல் தர்மத்துக்குப் புறம்பான ஒரு காட்டுக் கூச்சல் என்கிறார் லிசனிங் போஸ்டின் செய்தியாளர் ரிச்சர்ட் கிஸ்பர்ட்.

24 மணிநேர செய்தி தொலைக்காட்சிகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் உள்ளன. ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள், பிராந்திய ஊடகங்கள் என 400க்கும் அதிகமான செய்தித் தொலைக்காட்சிகள் இங்குள்ளன. ஆகையால், இந்த செய்தி ஊடகங்களின் தொகுப்பாளர்கள் பொதுப்புத்தியைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். தேர்தல் நெருங்குவதால் இந்த ஊடகங்கள், பொதுப்புத்தியை இந்துத்துவ அரசியலுக்கேற்ப கட்டமைக்கின்றன.

தொலைக்காட்சி செய்தி ஊடகங்களின் இந்த பரப்புரை, இணையம் வழியாக மக்களின் செல்பேசிக்குள் புகுத்தப்படும்போது, இதன் விளைவுகள் பன்மடங்காக இருப்பதாக இந்த ஆவணப்படம் நிறுவுகிறது.

இதில் பேசியுள்ள சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தின் பேராசியர் ரோஹித் சோப்ரா, பாஜக எவ்வாறு இணையத்தையும், சமூக வலைத்தளங்களையும் தங்களுடைய பரப்புரைகளை பொதுபுத்திக்குள் புகுத்துவதற்கு பயன்படுத்துகிறது என்பதை விளக்குகிறார்.

சமூக வலைத்தளங்களில், பாஜக திட்டமிட்டு இஸ்லாமியர்கள் எல்லாம் அந்நியர்கள், காங்கிரஸ் ஒரு வலுவிழந்த கட்சி, தாராளவாதிகள் எல்லாம் தேச விரோதிகள் என்ற கருத்தை ஒரு பக்கம் பரவவிட்டு, மறுமுனையில் தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டுமென்றால் மோடிக்கு வாக்களியுங்கள் என்ற பரப்புரையை செய்வதாகவும் இந்த ஆவணப்படத்தில் சொல்லப்படுவதாக இணையதளம் ஒன்றில் விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது.

அது இப்பொழுது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

protest in britain for kashmirகாசுமீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டவுடன் புல்வாமா தாக்குதலை விட பல மடங்கு பொய்க் செய்திகளையும், கட்டுக்கதைகளையும் இங்குள்ள இதழ்களும் / ஊடகங்களும் தொடர்ச்சியாகப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக காஷ்மீரின் உண்மை வரலாற்றை / ஒடுக்குமுறையை / போராட்டத்தை மறைத்து இந்துத்துவக் கண்ணோட்டத்தில் இவர்கள் ஒரு வரலாற்றைக் கட்டமைக்க முயற்சியெடுக்கிறார்கள். எனவே, அவர்களின் கட்டுக்கதைகளையும் அவற்றின் உண்மைத்தன்மையையும் கீழே பார்க்கலாம்.

கட்டுக்கதை - 1

காஷ்மீரில் இதற்கு முன்னர் மூவர்ண இந்திய தேசிய கொடியை பறக்கவிட முடியாது / பறந்ததில்லை

உண்மை : காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்ட காலந்தொட்டு ஜம்மு & காஷ்மீரின் மாநில அரசின் கட்டடங்களிலும், நிகழ்வுகளிலும் அம்மாநிலத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள கொடி பறக்க விடப்பட்டிருக்கும், அதனோடு இந்திய தேசியக் கொடியும் பறந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், தற்போது அரசமைப்பு சட்டப்பிரிவு 370இன்படி ஜம்மு & காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதால், இனி இந்திய நாட்டின் கொடி மட்டுமே அங்கு பறக்கக் கூடிய சூழல் உருவாகி உள்ளது.

ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை கொடுக்கப்பட்டு வந்தபோதிலும், அங்கு இந்திய தேசிய கொடியை அவமதிப்பது, நாட்டின் ஏனைய மாநிலங்களை போன்று சட்டரீதியாக தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

கட்டுக் கதை 2 :

ஜம்மு & காஷ்மீருக்கு தனியே அரசமைப்பு சட்டம் இருந்தது. அங்கு இந்தியாவின் சட்டவிதிகள் அமல்படுத்தப்படவில்லை.

உண்மை : இந்திய அரசுக்கு அதிகாரம் இல்லாமலா காஷ்மீரை மூன்றாகப் பிரிக்கும் அறிவிப்பை உள்துறை அமைச்சர் கொடுக்க முடிகிறது. அந்த அறிவிப்பைக் கொடுப்பதற்கு முன்பாக அங்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த முடிகிறது. எல்லாம் கட்டுக்கதை.

இப்படி சொல்வதன் மூலமாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட காஷ்மீர் இந்திய அரசியல் சட்டத்திற்கு பொருந்தாமல் தன் விருப்பத்திற்கு செயல்பட்டது போலவும் அவர்களைக் கட்டுப்படுத்த தான் இப்பொழுது சட்டவிதிகளை அமல்படுத்துவது போலவும் ஒரு பிம்பத்தை காட்டவே இப்படி ஒரு கட்டுக்கதை பரப்பப்படுகிறது

இந்திய அரசின் மூலம் உருவாக்கப்படும் புதிய சட்டங்கள் எதையும் விரும்பாத பட்சத்தில், அதை நிராகரிக்கும் உரிமையை ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்பு சட்டப்பிரிவு 370 வழங்கியது உண்மை தான்.

ஆனால், இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த பிறகு, தாங்கள் கொடுத்த வாக்குறுதியை கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அரசு திரும்பப் பெற்று விட்டது.
நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட பல்வேறு புதிய சட்டங்கள், குடியரசுத் தலைவரின் ஆணையின் மூலம், அரசமைப்பு சட்டப்பிரிவு 370இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஜம்மு & காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டு வந்துள்ளது.

உதாரணமாக, மத்திய புலனாய்வு அமைப்பு, தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா போன்றவை நாட்டின் மற்ற பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திலும் அதன் சட்டப்பேரவையின் அனுமதியுடன் அமலுக்கு வந்தன.

ஆளுநர் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் ஜம்மு காஷ்மீரத்தில் எந்த ஒரு பகுதியையும் கலவரப் பகுதியாக அரசு அறிவித்து அதை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

1986 க்குள் 42 அரசியல் சட்டத் திருத்தங்கள் இயற்றப்பட்டன. இன்றைய நிலைமை என்னவெனில் இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் ஜம்மு-காஷ்மீருக்கு பொருந்தும்.

மீதமுள்ள 155 பிரிவுகள் மீதான உரிமை மட்டுமே மாநிலத்திடம் உள்ளது இந்த உரிமையும் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களின் அரசியல் சட்டத்திலும் உள்ளன.

தற்போது ஜம்மு & காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதால், இனி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் உடனடியாக ஜம்மு & காஷ்மீரிலும் நடைமுறைக்கு வரும்.

இதற்கு முன்னர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு, ஜம்மு & காஷ்மீரில் ஏற்றுக் கொள்ளப்படாத சட்டங்கள் இனி அமலுக்கு வரும்.

கட்டுக்கதை - 3:

காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து உள்ளது. குறிப்பாக, நிலம் வாங்க முடியாது.

உண்மை : காசுமீருக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளதும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது என்பதும் உண்மை தான். ஆனால் காசுமீரில் மட்டும் இப்படி இருப்பது போல் சொல்வது தான் கட்டுக்கதை. இதன் மூலம் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மட்டும் சிறப்புரிமை அனுபவித்து வருகிறார்கள் என்கிற பிம்பத்தை எல்லோர் மத்தியிலும் விதைக்க வேண்டும் என்பதற்காக இப்படியான கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள்.

உண்மையில் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த சிறப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது அங்கெல்லாம் வெளியார் யாரும் நிலம் வாங்க முடியாது. சில எடுத்துக்காட்டுகளை கீழே பார்க்கலாம்.

நாகாலாந்து

சட்டப்பிரிவு 371-ன் கீழ் நாகாலாந்து, மிசோரம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 371-ஏ நாகாலாந்து மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும் சிறப்பு பிரிவு. இதன்படி, நாடாளுமன்றம் இயற்றும் இந்த சட்டமும் நாகா மக்களின் மதம், சமூகம் சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு பொருந்தாது. நாகாலாந்து மக்களின் நிலம் அம்மாநில பூர்வகுடிகளுக்கு மட்டுமே சொந்தம். மத்திய அரசின் சட்டம் அமலாக்கப்பட வேண்டிய தேவையிருந்தால், நாகாலாந்து மாநில சட்டப்பேரவையில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.

மிசோராம்

மிசோராம் மாநிலத்திற்கு அரசியல் சட்டத்தின் 371 ஜி படி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், மிசோ மக்களின் மதம் மற்றும் கலாசார நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில், பார்லிமென்டில் நிறைவேற்றப்படும் எந்த சட்டத்தையும் அமல்படுத்த முடியாது. நாகாலாந்து போலவே, மிசோராமிலும் மக்களுக்கு இடையே எழும் பிரச்னைகளுக்கு பாராம்பரியமாக கடைப்பிடிக்கும் விதிகள், பழக்க வழக்கங்கள் படியே தீர்வு காண முடியும். இதன் படியே நிலம், போன்ற இயற்கை வளங்களை மாற்றிக் கொள்ள முடியும்.

மணிப்பூர்

மணிப்பூர் மாநில பழங்குடியின மக்கள் மத்தியிலும் எவ்வித அச்சமும் எழவில்லை. இந்த மாநிலத்திற்கு அரசியல் சட்டத்தின் 371சி பிரிவு படி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மலை பிரதேச மாவட்டங்கள், இம்பால் சமவெளி பகுதி யில் இருந்து மாறுபட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் 371சி பிரிவு படி தனியாக மலை பிரதேச கமிட்டிகள் அமைக்கப்பட்டடுள்ளன. மாநில அரசு பழங்குடி மக்க"ளுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக இயற்றும் சட்டங்களுக்கு, இந்த கமிட்டிகளின் ஒப்புதலை பெற வேண்டும்

அஸ்ஸாம்

371B -ன் கீழ் அஸ்ஸாம் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரமும், சட்டப்பேரவையில் அம்மாநில பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா :

371 சட்டப் பிரிவின்படி குஜராத், மகாராஷ்டிரா மாநில ஆளுநர்கள் வளர்ச்சியற்ற பகுதிகளில் வளர்ச்சி வாரியங்கள் அமைக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா :

371J சட்டப் பிரிவின் கீழ் ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவின் பின் தங்கிய ஆறு மாவட்டங்களில் வளர்ச்சி வாரியங்கள் அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரா :

1974 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிரிவு 371 (D&E) சட்டப்பிரிவு ஆந்திர மாநிலத்தின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அந்த மாநில மக்களுக்கான சிறப்புரிமையையும் அதன் பாதுகாப்பையும் நிலை நாட்டுகிறது.

இந்த சிறப்புரிமை வழங்கப்படுவதும், நிலம் வாங்கத் தடை விதிப்பதும் நூறு விழுக்காடு சரியான அரசியல் நிலைப்பாடாகும். ஒரு மாநிலத்தில் இருக்கும் நிலங்களின் உரிமை அங்கு வாழும் சொந்த தேசிய இன மக்களுக்கு மட்டுமே உண்டு.
அவ்வாறில்லாமல் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தால் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்.

அண்டையில் உள்ள தேசிய இனங்களின் சுரண்டல்காரர்களால் நிலம் வாங்கப்பட்டு அவர்கள் குடியேற்றம் அதிகமாகி அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் குழப்பம் ஏற்படும். இதனால் சொந்த தேசிய இனத்தின் வாழ்வுரிமை சிதைக்கப்படும். இதை முன்னிட்டுத்தான் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.

காசுமீருக்கு சிறப்பு அந்தஸ்து இந்திய அரசின் கருணையால் வழங்கப்பட்டதல்ல. காசுமீர் இந்தியாவோடு தற்காலிகமாக இணைக்கப்பட்ட போது தங்களின் தனித்தன்மையை இழந்து விடக் கூடாது என்பதற்காக போட்டுக் கொண்ட ஒப்பந்தம். இப்படியொரு ஒப்பந்தம் போடாமல் விட்டிருந்தால் காசுமீர் நிலைமை என்னாகியிருக்கும் ?

பன்னாட்டு நிறுவனங்களின், இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் சூறையாடலுக்கு உள்ளாகியிருக்கும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், அணு உலைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டிருக்கும், அத்தனை அழிவுத் திட்டங்களும் உள்நுழைந்திருக்கும்.

இனி அது தான் நடக்கப் போகிறது.

மோடி அரசின் காசுமீர் சிறப்பு அந்தஸ்து செய்தி வந்தவுடன் பா.ஜ.க.வினர் ஒவ்வொருவரும் காசுமீரில் நிலம் வாங்க ஆசைப்படுவதாக அறிவிப்பு கொடுக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் வரும் அக்டோபர் மாதம் 12 முதல் 14ஆம் தேதி வரையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை முதன்மைச் செயலாளர் என்.கே.சவுதரி தெரிவித்துள்ளார். முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலர் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இனி ‘காஷ்மீர் பெரு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவிடும். தொழில் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையைச் சீர்குலைப்பதும் நடக்கும்.

(பின் குறிப்பு : காசுமீர் மாநில பா.ஜ.க. காசுமீரில் மற்ற மாநிலத்தவர்கள் நிலம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது)

கட்டுக்கதை - 4 :

ஜம்மு & காஷ்மீரில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலில் இல்லை.

உண்மை : தகவல் அறியும் உரிமை சட்டம், 2005 அக்., 12 முதல், ஜம்மு - காஷ்மீர் தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்திலும் அமலுக்கு வந்தது.

இந்திய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் 2005ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம், இரண்டாண்டுகளுக்கு பிறகு மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் ஜம்மு & காஷ்மீர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது.

கட்டுக்கதை - 5:

சட்டப்பிரிவு 360 (நிதி அவசர நிலை பொருந்தாது)

இந்திய அரசமைப்பு அமலுக்கு வந்தத்தில் இருந்து இதுவரை நிதி நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவுகள் 352, 356, 360களின் கீழ் அவசர நிலைகள் குறித்து விளக்கப்படுகின்றது. இதில் பிரிவு 360 நிதி நெருக்கடி நிலை குறித்து விளக்குகின்றது. இதில் எந்த பிரிவுகளிலும் காஷ்மீருக்கு இது பொருந்தாது எனக் குறிப்பிடவில்லை. சட்டப்பிரிவு 370ன் படி காஷ்மீருக்கு பிரிவு 238 மட்டுமே பொருந்தாது.

கட்டுக்கதை 6 :

காஷ்மீர் பெண்களை பிற மாநிலத்தவர்கள் திருமணம் செய்துக்கொள்ள அதிகாரம் இல்லை?

உண்மை : காஷ்மீர் பெண்கள் பிற மாநிலத்தவர்களைத் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

காஷ்மீரைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கர் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சசி தரூரை (இந்தியாவின் முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சர்) திருமணம் செய்திருந்ததை அனைவரும் அறிவர். ஆனாலும் கூட பாஜகவின் முக்கிய தலைவர்களே கூட "காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்ய பா.ஜ.க.இளைஞர்கள் ஆர்வமாக இருப்பதாக தங்கள் வக்கிர புத்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

திருமணத்தைப் பொருத்தவரை இருக்கும் விதி என்னவென்றால் இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது.

ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களைத் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம் என்பது சட்ட விதி. ஏனெனில் "காஷ்மீரைப் பொறுத்தவரை அம்மாநிலத்தின் இயற்கை வளங்கள், குறிப்பாக நிலங்கள் காசுமீரிகளே உரியவை என்பதால் வேறு மாநிலத்தவர் அங்குள்ள பெண்ணைத் திருமணம் செய்கையில் அந்தக் கணவருக்கு அந்தச் சொத்து போய்விடக்கூடாது என்பதால் அப்படி ஒரு விதி இருந்தது.

நிலத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கம்தான் இதன் அடிப்படையாக இருந்தது.

(தொடர்வோம்)

- க.இரா.தமிழரசன்

Pin It