ஓர் உரையாடல்பகுதி  2

அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தலித் இலக்கியம் அடையாளப்படுத்தப்பட்டது. பெருமளவில் விவாதிக்கப்பட்டது. நிறைய தலித் எழுத்தாளர்கள் உருவானார்கள். தற்பொழுது 22 ஆண்டுகளுக்குப்பிறகு தலித் இலக்கியம் தேக்க நிலையில் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது குறித்து விவாதித்திட "தலித் முரசு' சார்பில் 3.8.2013 அன்று சென்னையில் ஓர் உரையாடல் நிகழ்த்தப்பட்டது. இதில் அழகிய பெரியவன், மதிவண்ணன், இளம்பரிதி, வ.கீதா, ப.லிங்கம், புனித பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். இவ்வுரையாடலை யாழன் ஆதி ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தினார்.

இது ஒரு தொடக்கம். தலித் இலக்கியம் குறித்த இதுபோன்ற விவாத அரங்குகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வுரையாடல் இங்கு தொகுத்து அளிக்கப்படுகிறது. கடந்த இதழின் தொடர்ச்சி.

அழகிய பெரியவன்: தலித்தின் வரலாற்றைப் பொது வரலாறுகளில் படிக்க முடியுமா? தன் வரலாறுகளில் படிக்க முடியுமா? என்பதே என் கேள்வி.

இளம்பரிதி: தன் வரலாற்று நூல்களை தலித்துகள் தான் எழுத முடியும். அதுதான் இலக்கியத்தின் உச்சமாகக்கூட இருக்கும். தன் வரலாற்றில் சொல்லப்படும் கருத்துகளை புனைவுகளில் வைக்க முடியாது.

லிங்கம்: "பிறகு', "ஆனந்தாயி', "பழையன கழிதலும்' போன்றவற்றைத் தவிர சிறந்த படைப்புகள் தலித் இலக்கியத்தில் உருவாகவில்லை. தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, தகழி போன்றவர்களின் எழுத்தில் கூட தலித் தன்மை இருக்கிறது. தலித் இலக்கியத்தில் ஏன் காத்திரமான படைப்புகள் தோன்றவில்லை? இப்போது இருக்கும் எழுத்தாளர்களை பத்து பக்கம் வாசித்தால் அடுத்து என்ன இருக்கும் என்று என்னால் கூற முடியும்.

கீதா: நீங்கள் சொல்லும் தி.ஜானகிராமனை இரண்டு பக்கங்கள் படித்தால் அடுத்த அய்ம்பது பக்கங்களில் என்ன இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும்.

மதிவண்ணன்: பூமணியின் "வெக்கை' சிறந்த நாவல்.

அழகிய பெரியவன்: நான் சொல்ல வருவது என்னவென்றால் தன் வரலாறுகள் தேவை.

மதிவண்ணன்: தேவையில்லை.

கீதா: அது எழுதுகிற நபர்களைப் பொருத்தது. மதி சொல்வதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அது நுகர்வதற்கான ஒன்றாக சாதி இந்துக்களுக்கு மாறிவிடக்கூடாது. பெண்களிடத்திலிருந்து நாம் பார்க்கலாம். கொஞ்ச காலத்திற்கு பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி பேசாமல் இருக்கலாம். பேசிப் பேசி அதைப் பற்றிய ஒரு ரசனை மனப்பான்மை உருவாகி இருக்கின்றதே ஒழிய, அதை எப்படி இல்லாமல் ஆக்குவது என்பது குறித்த சரியான புரிதல் யாருக்குமில்லை. தலித் தன் வரலாறுகளை அப்படி புரிந்து கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்ள வைப்பது மிகவும் முக்கியம்.

அழகிய பெரியவன்: என்னுடைய வாசிப்பு அனுபவத்திலிருந்துகூட நான் சொல்ல முடியும். "இரவு' என்னும் நூலை வாசித்தேன். இரவில் அதைப் படித்தேன். யூத வதை முகாமிலிருந்து தப்பி வந்தவர் எழுதியது அது. அதைப் படித்து நான் கதறி அழுதேன். மனித சமூகம் இவ்வளவு கொடுமைகளைச் செய்யுமா? இவ்வளவு மோசமாக இருக்குமா? என்று மனதைப் பிசைய வைத்தது. பிரடெரிக் டக்ளஸ் எழுதிய தன் வரலாறும் அப்படியே.

அவர் ஒரு வெள்ளைக்காரச் சிறுவனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேலையைச் செய்வார். ஆனால் அவருக்கு அந்தப் பையனின் புத்தகங்களைத் தொடக்கூடாது என்னும் தடையிருக்கும். அவர் எப்படியோ படித்து எழுதக் கற்றுக் கொள்வார். ஆகவே தன்வரலாறு என்னும் இலக்கிய வகைமையை முற்றிலும் நாம் புறக்கணிக்க முடியாது என்று நான் கருதுகிறேன்.

கீதா: தேக்கத்திற்குக் காரணமாக பதிப்புச் சூழலையும் நாம் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. சந்தைக்கான விஷயங்களாக சிலவற்றை முன்னிறுத்தி அதையே விற்பது என்ற  நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அழகிய பெரியவன்: பதிப்பு வாய்ப்பு தலித்துகளுக்கு இல்லாமல் இருக்கிறது என்பது ஒரு முக்கியமான காரணம்தான். நான் பரிந்துரை செய்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் கூட திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன. அடுத்தாக தலித் இலக்கியத்திற்காக தலித் அமைப்புகள் எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. இடதுசாரிகளைப் பாருங்கள்.

கலை இலக்கிய அமைப்பு என்பது அவர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அது மட்டுமல்ல; பதிப்பகங்கள் வைத்திருக்கிறார்கள். தலித் அமைப்புகள் அப்படியில்லை. அவர்கள் தலித் எழுத்தாளர்கள், அறிவாளர்கள் மீது என்ன மாதிரியான அளவுகோலை வைத்திருக்கின்றனர் என்று தெரியவில்லை. தலித் இலக்கியத் தேக்கத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

மதிவண்ணன்: தலித் அமைப்புகளில் திரட்டப்படுகின்ற தலித் மக்கள் ஒரு புரிதலோடு திரட்டப்படுகிறார்களா என்றால் இல்லை. அவர்கள் சாதி சார்ந்துதான் திரட்டப்படுகிறார்கள். மேலும் அவர்கள் தலித் எழுத்தாளர்களை, அறிவு ஜீவிகளை தங்களுக்குப் போட்டியாளர்களாகப் பார்க்கிறார்களோ எனத்தோன்றுகிறது. அதனால்தான் ஓர் ஒவ்வாமையோடு தலித் எழுத்தாளர்களை அவர்கள் பார்க்கிறார்கள்.

அழகிய பெரியவன்: இலக்கியவாதிகள் எங்களிடம் வருவதில்லை என்று இயக்கவாதிகள் கூறுகிறார்கள் என்று தோழர் பரிதி சொன்னார். உண்மைதான். வருவதற்கு பயமாக இருக்கிறது. அண்மையில் "காக்கைச் சிறகினிலே' இதழில் திவ்யாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது வெளிவந்தபிறகு எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. பேசியவர் தோழர் நல்லக்கண்ணு.

அவர் தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான இயக்கத்தின் தலைவர். அவர் அந்த கட்டுரையைப் படித்துவிட்டு விமர்சனப் பூர்வமாகப் பேசினார். ஆனால் தலித் இயக்கவாதிகள் அப்படிப் பேசுவதில்லை. என்ன இப்படி எழுதியிருக்கிறீர்கள் என்று திட்டக்கூட செய்யலாம். இவைகளைப் பார்க்கும்போதுதான் யாருக்காக எழுதுகிறோம் என்ற ஆதங்கம் இருக்கிறது. தலித் இலக்கியத் தேக்கத்திற்கு இது கூட காரணமாக இருக்கலாம்.

கீதா: "தலித் முரசு'க்கு பிரச்சனை வரும்போதெல்லாம் இது யாருக்காக நடத்தப்படுகிறது; அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று நிதியாதாரங்களைத் தேடும்போது நினைக்கத் தோன்றுகிறது. அது மாதிரிதான் அழகிய பெரியவன் கருத்தும். இன்றைக்கு கலைத்திறன் அதிகமாக உள்ள இளைஞர்களை வசீகரிக்கும் இடமாக சினிமா இருக்கிறது. நிறைய தலித் இளைஞர்கள் தொழில்நுட்பவியலாளர்களாக அழகியலை உருவாக்கக் கூடியவர்களாக மாறியிருக்கிறார்கள். வாழ்வாதாரத்தோடு அவர்களுக்கு இன்றைக்கு அங்கீகாரமும் அங்கு கிடைக்கிறது. தொழில் நுட்பத்தில் குறுக்கிட முடியாத சாதி எழுத்தில் குறுக்கிட முடிகிறது. அவர்கள் திரைக்குப் பின் இருப்பதால் பிரச்சனையில்லை. ஆனால் எழுத்தாளன் என்னும்போது ஆளுமையோடு வெளிப்பட வேண்டியிருக்கிறது.

அழகிய பெரியவன் : மராட்டியத்தில் குடியரசுக்கட்சியின் இலக்கிய அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. "பாய்சன் பிரட்' நூலில் பங்கேற்றவர்கள் நிறைய பேர் "தலித் பேந்தர்' அமைப்பைச் சேர்ந்தவர்கள். அப்படியொரு வலிமையான கலை இலக்கிய அமைப்பு இங்கு இருக்கிறதா என்பதுதான் கேள்வி. தொழில்நுட்பவியலாளர்களாக திரைப்படத்துறைக்குச் சென்றிருக்கும் தலித் இளைஞர்கள் தலித் திரைப்படங்களை உருவாக்க முடியுமா? நம்முடைய வாழ்வை அங்கே சொல்ல முடியுமா?

கீதா: சாதி என்னும் வார்த்தையையே தமிழ் சினிமாவில் சொல்ல முடியாது. திரை மறைவில் செய்யக்கூடிய வேலைகளை ஏற்றுக்கொள்கிறவர்கள் நேரடியாக தலித்தாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவரை ஏற்றுக்கொள்வதில்லை. சினிமாவில் சாதியில்லை என்று சொல்வார்கள். ஆனால், சின்னகவுண்டர் என்றால் ஊருக்குப் பெரியவர் என்று சொல்வார்கள்.

அழகிய பெரியவன்: தலித் சினிமா என்று வருவது உடனடியாக சாத்தியமில்லாத ஒன்று. இன்னும் பத்தாண்டுகளாவது ஆகலாம்.

மதிவண்ணன்: அப்படி தலித் சினிமா என்று ஒன்று வராமலேதான் போகட்டுமே!

அழகிய பெரியவன்: அப்படியில்லை. குறைந்தபட்சம் அது தலித் பிரச்சனைகளை பேசவாவது வேண்டும்.

மதிவண்ணன்: நான் சொல்வது, "போற்றிப் பாடடி பெண்ணே' என்று சொல்லாமல் இருந்தாலே போதும்.

கீதா: பெண்களையும் தலித்துகளையும் வேறுமாதிரி காட்டக்கூடிய சினிமாவே கிடையாது.

அழகிய பெரியவன்: வர்த்தகத்திற்குத் தேவையானவற்றை எடுத்து காசு பார்க்கும் வேலையை அவர்கள் செய்கிறார்கள். குத்துப் பாடல்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் அடிப்படை பறையிசைதான். "கானா' பாடல்கள்; இப்போது சொல்லப்படுகின்ற "பார்' பாடல்கள் இவையெல்லாம் தலித் வாழ்விலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவைதான். ஆனால் முழுமையாக ஒரு தலித் வாழ்வை அவர்களால் சொல்ல முடியவில்லை.

கீதா: வேற மாதிரி படங்களை எடுக்க நினைத்து எடுப்பவர்கள் கூட அரசியல் ரீதியாக படம் எடுக்க வேண்டும் என்று துணிவதில்லை.

அழகிய பெரியவன்: அதிகமாக பணம் போடுவதால் அங்கே வணிகம் தான் முக்கியமாக இருக்கிறது. படம் எடுப்பவர்கள், வெளியிடுபவர்கள் எல்லாரும் தெளிவான அரசியல் சிந்தனையுடையவர்களாக இருப்பதால் அவர்கள் இந்த மாதிரியான அரசியலை நுழையவிடுவதில்லை.

எனவே இந்தச் சூழ்நிலையில் தலித் சிந்தனையுடனே இருக்கிறவர்கள் போனாலும் அவர்கள் மறுக்கப்படுவார்கள் அல்லது காயடிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட பொது வெளியில் தலித் திரைப்படங்களுக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். தலித் இலக்கியத்தில் உரைநடை என்பது எதார்த்தவாத உரைநடையாக இருக்கிறது. தலித் இலக்கிய உரைநடை நவீன தளத்திற்கு மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

கீதா: தலித் இலக்கியத்தில் உரைநடை மிகுந்த வீச்சோடு இருக்கிறது. ஆதவன் தீட்சண்யாவின் எள்ளல் உரைநடை தமிழுக்குப் புதிது. தலித் உரைநடை வளர்ந்து கொண்டு இருக்கிறது. மதியின் கவிதை மொழி வேறு, உரைநடை மொழி வேறு. அழகியபெரியவனின் உரைநடை கவித்துவமானது. ஏபி.வள்ளிநாயகம் உரைநடையில் திராவிட இயக்கத் தாக்கம் இருக்கிறது.

அழகிய பெரியவன்: உரைநடை தற்போது பெரிய பங்களிப்பைத் தந்துள்ளது.

இளம்பரிதி: இடதுசாரி இயக்கங்களில் ஒரு வலுவான கலை இலக்கியக் கட்டமைப்பு இருக்கிறது. அவை நிறுவனமாக இருக்கின்றன. தலித் இயக்கங்கள் அப்படியில்லை. தலித் இயக்கங்களில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான் நிறுவனமாகச் சொல்லக்கூடிய இடத்தில் இருக்கிறது. மீதி இயக்கங்கள் அப்படியில்லை. அப்படியிருக்க தலித் இயக்கங்கள் கலை இலக்கியவாதிகளை சேர்ப்பதில்லை என்று சொல்வதும், நாங்கள் எழுதிவிட்டால் அதைப் படித்தே ஆகவேண்டும் என்று சொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மிகக் குறைவானவர்கள் தான் இங்கே களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மராட்டியத்தில் தலித் அரசியலோடு சேர்ந்தே தலித் இலக்கியமும் வளர்ந்திருக்கிறது. இரண்டும் ஒன்றாக வளர்வதுதான் சரியானது. தலித் ஆதார மய்யம் நடத்திய கலை நிகழ்ச்சிகளாக இங்கே நடத்தப்பட்டன. அது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் திட்டமாகத்தான் இருந்தது. தலித் அரசியல் தமிழகத்தில் 2000 களில் பெரும் பின்னடைவையும் தேக்கத்தையும் சந்திக்கிறது. அதனோடு ஒட்டித்தான் தலித் இலக்கியத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

அழகிய பெரியவன் : இரண்டையும் ஒன்றாக நாம் பார்க்க முடியாது. குறைந்தபட்ச நிறுவனங்களாகவாவது சில இயக்கங்கள் இருக்கின்றன அல்லவா?

கீதா: களப்பணிகளுக்காகவே ஆட்கள் குறைவாக இருக்கின்றனர். தொடக்கக் காலத்தில் மிகுந்த தடை இருந்தது. அது இப்போது அடைந்திருக்கும் இடத்திற்கான பெரிய காரணம் அவர்கள் யாருமே அம்பேத்கரை சரியாக உள்வாங்காததுதான். படிப்பை வெறும் வேலைக்கானதாகப் பார்க்காமல் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காக என்று பார்க்கும் தன்மை இல்லாததைப் போலத்தான் இதுவும்.

சமீபத்தில் நான் மகாராஷ்டிராவுக்குச் சென்றிருந்தேன். ஷர்மிளா ரெகேவின் நினைவேந்தல் கூட்டத்திற்கு. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் நான் பேசுகிறேன் என்று வந்தார்கள். அதில் 60 சதவிகிதம் தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள். ஒரு பல்கலைக் கழகத்தில் இருந்து கொண்டு அப்படிப்பட்ட மாற்றத்தைச் செய்ய அவர்களால் முடிந்திருக்கிறது. ஆனால் இங்கே அம்பேத்கர் வாசகர் வட்டம் வைக்கக் கூட நம்மால் முடியவில்லை என்பது உண்மைதானே.

தலித் இயக்கங்கள் அவ்வளவு எளிதில் நிறுவனமாக முடியாது என்பது உண்மைதான். ஆனால் குறைந்தபட்ச அளவிற்கு ஊர்தோறும் ஒரு அம்பேத்கர் படிப்பகத்தையாவது வைத்திருக்கலாம். தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் அதுதான் நடந்தது. பிற்காலத்தில் திராவிட இயக்கங்களில் தோன்றிய அறிவு ஜீவிகளுக்கு எதிரான செயல்பாடு தற்போது தலித் இயக்கங்களுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது.

அழகிய பெரியவன்: எத்தனையோ ஆண்டு காலமாக எழுதிக் கொண்டிருக்கும் மூத்த தலித் எழுத்தாளர்களை கவுரவித்திருக்கலாம்.

மதிவண்ணன்: அவங்க எல்லாம் நம்ம பசங்கதானே என்று நினைத்திருக்கலாம்!

இளம்பரிதி: ஓர் அரசுதரும் விருதுக்கும், ஒரு தலித் இயக்கம் தரும் விருதுக்கும், அது நிகழ்த்தும் விளைவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டுதானே!

மதிவண்ணன்: அழகிய பெரியவன் சொன்னதைக் கொஞ்சம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தலித் எழுத்தாளன் எழுதியதை அந்த மக்கள் எல்லாம் படித்துவிட்டு வந்து அவனிடம் நேரடியாக சொல்ல முடியாது. ஆனால் அவர்களின் பிரதிநிதிகளாக இருக்கிற அந்த மக்களின் கூட்டு முயற்சியால் இயக்கமாகி இருக்கிற தலைவர்கள் அப்படி செய்யலாம் இல்லையா?

அழகிய பெரியவன்: அங்கீகாரம் என்பதை விடுங்கள். தலித் இலக்கியம் தேங்கிப் போய் இருக்கிறது. அதற்கு தலித் இயக்கங்கள் போதுமான வேலைகளைச் செய்யவில்லை என்பதுதான் என் கருத்து.

கீதா: அதை ஓர் அரசியலாக தலித் இயக்கங்கள் பார்க்கவில்லை. இடதுசாரிகள் அதை ஓர் அரசியல் செயல்பாடாகப் பார்க்கிறார்கள். எங்கே அரசியல் நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ஒரு கலை இலக்கியச் செயல்பாடு இருக்கும். கலை இலக்கியத்தோடுதான் புரட்சி நடக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தலித் இயக்கங்கள் அம்பேத்கரை கையில் எடுத்திருந்தால் இதுவெல்லாம் நடந்திருக்கும்.

மதிவண்ணன்: மற்ற மாநிலங்களில் இது நடந்திருக்கிறது.

அழகிய பெரியவன்: கருத்தியல் ரீதியான மாற்றங்களைக்கூட நிகழ்த்தவில்லை.

கீதா: அம்பேத்கரை வாசிக்காமல் இருப்பது தலித் இயக்கங்களின் பின்னடைவு.

மதிவண்ணன்: விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம். தலித் இலக்கியத்திற்கு பிற சமூகத்தினர் தரும் ஆதரவை எப்படிப் பார்ப்பது?

அழகிய பெரியவன்: உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை நாம் ஏற்றுக்கொள்வதுதான் நியாயமானது. அப்படி ஏற்காதபோது ஓர் ஆதரவு என்ற நிலையிலிருந்து முற்றிலும் எதிர்நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இன்குலாப் போன்ற ஆளுமைகளை எப்படி விட்டுவிடுவது? அவருடைய கவிதை ஒன்றைக் கட்டுடைத்தல் என்ற பெயரில் பகடி செய்ததை எப்படி ஏற்றுக் கொள்வது? சரியான புரிதலோடு இருக்கும் தோழமைகளைப் புறந்தள்ளக்கூடாது.

இளம்பரிதி: அதனால் நிறைய பேர்களை இழந்திருக்கிறோம்.

புனித பாண்டியன்: அப்படிப்பட்டவர்கள் எழுதியதை தலித் இலக்கியம் என்பீர்களா?

அழகிய பெரியவன்: ஒரு தலித் தலித் உணர்வே இல்லாமல் எழுதினால் அதைப் புறந்தள்ளிவிட முடியுமா?

மதிவண்ணன்: இந்த விவாதத்தை முன் வைத்துதான் பெரியார் மீதான விமர்சனம்கூட வந்தது. இப்போது இருக்கிற மணியரசன் வரை அதைத்தான் சொல்கிறார்கள்.

இளம்பரிதி: தலித்துகளும் தலித்தல்லாதவர்களும் சேர்ந்துதான் அம்பேத்கர் படிப்பு வட்டம் என்ற அமைப்பைத் தொடங்கினோம். "புதிய தடம்' என்னும் இதழை நடத்தினோம். இரண்டு ஆண்டுகள் செயல்பட்டோம். நான்கு அரங்குகள் நடத்தப்பட்டன. பின்னர் தலித்துகள் மட்டும் பிரிந்து நடத்தினோம். அதிலிருந்து பிரிந்து அயோத்திதாசர் ஆய்வரங்கம் நடத்த ஆரம்பித்து எல்லாவற்றையும் காலி செய்திருக்கிறார்கள்.

மதிவண்ணன் : நீங்கள் அம்பேத்கர் படிப்பு வட்டம் வைத்து ரவிக்குமாரைக் கூப்பிட்டீர்கள். அவர்கள் அயோத்திதாசர் ஆய்வு வட்டம் வைத்து ஜெயமோகனைக் கூப்பிட்டார்கள்.

கீதா: கோபால் குரு சொல்வார். சாதி முறைக்கு எதிராகப் பேசுவது என்பது தலித்துகளை மட்டுமல்ல; மற்ற அனைவரையும் சாதியத்திலிருந்து விடுவிப்பதுதான். அதனால் தலித்துகளை அவர் Universal Subject of History என்று கூறினார். உழைக்கும் மக்களை வரலாற்று நாயகர்கள் என்று ஒத்துக் கொள்பவர்கள், நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்தைச் சாராதவர்களாக இருந்தாலும் கம்யூனிஸ்டுகளாக இருப்பதைப் போல தலித்துகளை ஏற்றுக்கொள்பவர்களை நாம்தோழர்களாக ஏற்றுக்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு நானும் தலித்தைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பது பொருத்தமாக இருக்காது. தலித்துகளைப் பற்றி எழுதாமல் கிராமத்தைப் பற்றியோ, விவசாய சமூகத்தைப் பற்றியோ எழுதாமல் இருக்க முடியாது. அதுதான் தலித் இலக்கியத்தின் தாக்கம்.

தலித் இலக்கியத்தைப் படித்துவிட்டு தலித்தை எழுதாமல் இருக்க முடியாது என்னும் மாற்றம் இப்போது வந்திருக்கிறது. தமிழ்ச்செல்வி, கண்மணி குணசேகரன், பெருமாள் முருகன் போன்றவர்கள்  தலித்துகளை பாத்திரங்களாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் உறவு நிலையில் வைத்து எழுதவில்லை என்பதும் சாதிய சமூகத்தை வைத்து எழுதும்போது அதைக் கேள்வி கேட்கும் மனநிலை என்பது தலித்தல்லாத எழுத்தாளர்களுக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட எழுத்தாளர்களை நான் குற்றம் சொல்லவில்லை.

சாதிய சமூகத்தில் உறவுகளாக இருப்பது என்பது கொஞ்சகாலமாகத்தானே இருக்கிறது. "அஞ்ஞாடி'யில் இது நடந்திருக்கிறது. முதல் 150 பக்கங்களில் தென் மாவட்டங்களிலுள்ள பள்ளர்களுக்கும் சலவைத் தொழிலாளர்களுக்கு மான உறவை அது பேசுகிறது. அருமையான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு வகையில் உறவு என்ற முறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை பூமணியால் சரியாக எழுத்தில் கொண்டுவர முடியவில்லை.

லிங்கம் : தமிழ் இலக்கிய வரலாற்றில் பெண் சித்திரத்தை கண்மணி குணசேகரன் சொன்னது மாதிரி யாரும் சொல்லவில்லை.

கீதா : அது சரிதான். ஆனால் சாதிய ஏற்றத்தாழ்வுகளை எழுதுகிற மொழி இல்லை என்பதுதான் என் கருத்து.

அழகிய பெரியவன் : இலக்கியம் என்பதே அனுபவத்திலிருந்துதானே வருகிறது. அதே சமூகத்தில் பிறந்து வளர்ந்து, கொடுக்கல் வாங்கல் செய்து வாழ்கிறபோது அப்படித்தானே எழுத முடியும். நீல பத்மநாபன்கூட இதை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால் அரசியல் புரிதலோடு தெளிவான பார்வையோடு அந்த மக்களின் பிரச்சினைகளை எழுதுபவர்களை நாம் ஏன் அங்கீகரிக்கக் கூடாது?

கீதா : அது மிகவும் குறைவான எண்ணிக்கை கொண்டது.

அழகிய பெரியவன் : குறைவுதான். அதற்கான மரபான மொழியும், நுட்பமும், அரசியலும் தலித்தல்லாத எழுத்தாளர்களிடம் இல்லாமல் இருக்கிறது என்பதும் உண்மை.

கீதா : "தோல்' நாவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அவர் இயல்பாகவே எழுதிக்கொண்டு செல்கிறார். ஆனால் எங்கோ ஓரிடத்தில் அம்மக்களைக் கரிசனத்திற்குரியவர்களாக மாற்றிவிடுகிறார்.

அழகிய பெரியவன் : அவர் ஒரு தோல் தொழிலாளியின் மகனாகவோ தொழிலாளியாகவோ இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம்.

கீதா : ஆனால் கிறித்துவர்களைப் பற்றிய பதிவுகள் மிகவும் உண்மையாக இருக்கின்றன. அந்த உலகம் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

லிங்கம் : நாவலில் பார்ப்பனர் ஒருவர் தொழிற்சங்க தலைவராக வருகிறார். வேறு யாராவது எழுதியிருந்தால் அந்தச் சூழலை அப்படியே ஏற்றுக்கொண்டதாக எழுதியிருப்பார்கள். ஆனால் செல்வராஜ் அந்த பார்ப்பனர் தலித் சூழலை ஏற்றுக்கொள்ளவே ஓராண்டுக்கு மேலானது என்று எழுதுகிறார். அது நன்றாக இருக்கிறது.

கீதா : சில இடங்கள் நன்றாக இருக்கின்றன. பெருமாள் முருகனிடமும் இந்தப் பிரச்சினைஇருக்கத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் தலித்து கள் மீதான சாதியமும் தீண்டாமையும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லர். பாரதியிடமும் அந்தப் பிரச்சினை இருக்கத்தானே செய்கிறது! டோனி மாரிசன் என்னும் கருப்பின எழுத்தாளர் கூறும்போது வெள்ளையர்கள் எழுதுகையில் கருப்பு, கருமை, இருள் இவற்றை அவர்களின் மரபிற்கு ஏற்றவாறே எழுதுகின்றனர் என்கிறார். கிறித்துவ மரபிலும் அது இருக்கிறது. கறுப்பு என்பது சாத்தான். நன்றாக எழுதக் கூடியவர்கள்கூட இத்தகைய மரபிலும் மொழியிலும் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.

புனித பாண்டியன் : தலித் இலக்கியத்தில் அம்பேத்கர் இல்லை என்பது பற்றி நாம் பேசவே இல்லையே?

கீதா :  அதைக் குறித்து நான் புலம்பிக் கொண்டேதான் இருக்கிறேன்.

அழகிய பெரியவன் : தலித் இலக்கியத்தை எழுதக் கூடிய புதிய எழுத்தாளர்களை உருவாக்குவது அல்லது அடுத்த கட்டத்திற்குச் செல்வது என்பது குறித்து பேசலாம்.

லிங்கம் : பட்டறைகளை உருவாக்கலாம்.

இளம்பரிதி : தலித்துகளிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும். கல்வியறிவு வளர்ந்து கொண்டிருக்கும் இப்போதே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கு படிப்பகங்களை உருவாக்கி அதை ஒரு இயக்கமாகவே நாம் கொண்டு செல்லலாம். தொண்ணூறுகளின் வீச்சுதான் இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்களை உருவாக்கியிருக்கிறது. அதே மாதிரி ஒரு சூழல் இப்போது இல்லை. வாசிப்பு இயக்கத்தை உருவாக்கினால் நாம் தலித் இலக்கிய விரிவாக்கத்தை உருவாக்க முடியும். அங்கிருந்து வரக்கூடிய சிறு சிறு முயற்சிகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

அழகிய பெரியவன் : ஓர் இலக்கிய இதழைக் கொண்டு வரலாம்.

கீதா :  பள்ளி அளவில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. குழந்தைகளோடும் ஆசிரியர்களோடும் நான் இருப்பதால் கூறுகிறேன். குழந்தைகளுக்கான வித்தியாசமான வாசிப்புகளை உருவாக்கலாம். தலித்துகள் அதிகமாகப் படிக்கக் கூடிய பள்ளிகளில் நடைமுறைப்படுத்தலாம். குழந்தைகளுக்கு வாசிப்பு தாகம் அதிகமாக இருக்கிறது. எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை இருக்கும் குழந்தைகளுக்கு மாற்று வாசிப்பை உருவாக்குவதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

அழகிய பெரியவன் : எழுதக்கூடிய ஆர்வம் பள்ளிப் பருவத்தில் வருமா என்று சொல்ல முடியாது. வாசிப்புப் பயிற்சி கொடுக்கலாம். கல்லூரி அளவில் கவனத்தைச் செலுத்தலாம். யுஜிசி கிராண்ட் வாங்கிக் கொண்டு Positive Discrimation என்னும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களிடம் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மைகள், குற்ற உணர்ச்சிகள் ஆகியவற்றை களைவதற்கான அமைப்பு ஒன்றைத் தொடங்கி பயிற்சிகள் நடத்த வேண்டும் என்பது யுஜிசி விதிகளில் ஒன்று. அத்தகைய மாணவர்களுக்கு கல்லூரிகளில் இலக்கியம் சார்ந்த ஒரு பயிற்சிப் பட்டறை, குறைந்தபட்சம் எழுதுவதற்கு ஊக்குவிப்பது, புத்தகங்களை அறிமுகப்படுத்துவது என்னும் வேலைகளைச் செய்கிறபோது அங்கிருந்து இன்னும் வேகமாக விளைவுகள் வரும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் ஒரு தலித் இலக்கிய இதழே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இருந்தால் மிகவும் அதிக அறிவுத்தளத்தில் இல்லையென்றால் அரசியல் தளத்தில் என்றுதான் இருக்கிறது. புதிதாக எழுத வரும் தலித் ஒரு கவிதையை எழுதி "மணற்கேணி'க்கு அனுப்பினாலும் "தலித் முரசு'க்கு அனுப்பினாலும் அது வருமா என்ற சந்தேகம் இருக்கிறது. அப்படியென்றால் எங்கேதான் அத்தகைய கவிதைகள் பிரசுரமாவது என்ற கேள்வி இருக்கிறதா இல்லையா? அதனால்தான் ஒரு தலித் இலக்கிய இதழ் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

கீதா : "தலித் முரசு' முதலில் ஆண்டுக்கு இரண்டு இலக்கியச் சிறப்பிதழைக் கொண்டுவர வேண்டும்.

அழகிய பெரியவன் : அதற்கு நமக்கு முன்னுதாரணம்கூட இருக்கிறது. "நிறப்பிரிகை' அப்படியான இலக்கிய இதழ்களைக் கொண்டு வந்துள்ளது.

புனித பாண்டியன் : தலித் இலக்கிய எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். அம்பேத்கர் படிப்பு வட்டங்களைப் பற்றி சொல்லுங்கள். பள்ளி கல்லூரிக்குச் செல்லாதவர்களுக்கு அது பயன்படட்டும். அம்பேத்கர் நூல்களை, கயர்மோட் எழுதிய தொகுப்புகளை நாம் "தலித் முரசு' சார்பாக மொழிபெயர்க்க முயற்சி எடுக்கலாம்.

அழகிய பெரியவன் : தலித் கலை விழாக்களை நடத்தலாம். ஒருநாள் இலக்கிய விழா நடத்தலாம். பிற மொழி தலித் எழுத்தாளர்களை அழைத்து வந்து பேச வைக்கலாம்.

கீதா : மகாராட்டிரத்தில் தலித் பெண்கள் கிராமங்கள் தோறும் சென்று கதா காலட்சேபம் நடத்துவார்கள். ஆண்கள் பக்கவாத்தியம் வாசிப்பார்கள். அம்பேத்கரின் வாழ்க்கையைத்தான் அவர்கள் பாடுவார்கள். அவரை ஒரு குட்டிக் கடவுளாக மாற்றிப் பாடுவார்கள். அங்கு வாய்மொழிப்பாடல் மரபு அழகாக இருக்கும். பவுத்தம் ஏற்பு விழா அங்கு ஒரு பண்பாடாகவே மாறிவிட்டது. அந்த விழா மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

புனித பாண்டியன் : இந்த அமர்வோடு இதை முடித்துக் கொள்ளாமல் அடுத்த அய்ந்து பேரை அழைத்து தலித் இலக்கியம் குறித்த விவாதத்தை தொடரலாம்.      

Pin It