தமிழ்ச் சமூகம் ஊரும் சேரியுமாகத்தான் பிரிந்திருக்கிறது என்று நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். இதைச்சுட்டிக் காட்டும் நாம் சாதியவாதிகளாக சித்தரிக்கப்படுகிறோம். சமூகம் ஏழை து பணக்காரன் என்ற வகையில் வர்க்கங்களாகத்தான் பிரிந்து நிற்கின்றன என்று இடதுசாரிகள் சாதிக்கின்றனர். ஆனால், "தலித் அல்லாதோர்' பேரவை உருவான பிறகாவது பொதுச் சமூகம் இந்த உண்மையை உணர்ந்திருக்கிறதா? தமிழ்ச் சமூகம் பன்னூற்றாண்டுகளாக மேல் ஜாதி என்றும் கீழ் ஜாதி என்றும் செங்குத்தாகப் பிரிந்து கிடப்பதைதான் சாதிவெறியர்கள் அறுவடை செய்கிறார்கள். எனவே, இக்குற்றத்தை அவர்கள் மீது சுமத்துவதோடு தமிழ்ச் சமூகம் தப்பித்துக் கொள்ள முடியாது. தமிழ்ச் சமூகத்தின் சாதியப் பண்பாட்டை ஒப்புக்கொண்டு, அதைக் களைந்தெறிய முன்வர வேண்டும்.

செந்தமிழ் நாட்டிற்கு "தருமபுரி'கள் புதிதல்ல; அவை நாள்தோறும் அரங்கேறி வருகின்றன! இந்நிலையில், தருமபுரி வன்கொடுமை மிகப்பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டதாக தமிழ்த் தேசியவாதிகள் புலம்புகின்றனர். தலைக்குனிவை ஏற்படுத்துவது தமிழ்ச் சமூகத்தின் முதன்மை முரண்பாடான சாதியும் தீண்டாமையும்தான். தருமபுரிகள் நடைபெறும்போது மட்டும்தான் தலைக்குனிவு ஏற்படுகிறதா? தலித் மக்கள் மீது தாக்குதல் நடக்காதபோது, தமிழ்ச் சமூகம் தலைநிமிர்ந்தா நிற்கிறது? ஆம் எனில், அந்தத் தலை நிமிர்வுக்கு காரணமான சாதியச் செருக்குதான் தலைக்குனிவை ஏற்படுத்துகிறது என்பதை தமிழ்ச்சமூகம் விளங்கிக் கொண்டால் நல்லது. தலித் மக்களை இழிவானவர்களாகப் பார்க்கும் பண்பாடும், அதற்கு காரணமான மதமும்தானே தருமபுரிகளைத் தோற்றுவிக்கின்றன. அதை அனுமதித்துக் கொண்டு, தலைக்குனிவைப் பற்றிப் பேசுவதில் என்ன பொருள் இருக்க முடியும்?

தருமபுரி சென்ற உண்மை அறியும் குழுவினரோ, அங்கு நீண்டகாலம் களப்பணியாற்றியதாகச் சொல்லும் இடதுசாரிகளோ முன்வைக்கும் தீர்வுகள், தலித் மக்கள் தாக்கப்பட்டதற்கான மூலகாரணத்தையும் முதன்மை முரண்களையும் அலட்சியப்படுத்துவதாகவே உள்ளன. தருமபுரி தலித் மக்கள் ஏழைகள் அல்லர். அவர்கள் ஏழைகள் என்பதற்காகத் தாக்கப்படவும் இல்லை. அவர்கள் சாதி இந்துக்களை சார்ந்து இருக்கவில்லை; பொருளாதார தற்சார்பைப் பெற்றிருந்தனர். அவர்கள் பொருளாதார தற்சார்பு பெற்றிருந்தாலும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட சாதி அடையாளங்கள் தன்னளவில் அழிந்து போய்விடவில்லை என்பதுதான் மார்க்சியவாதிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

தலித் மக்களுக்கான சட்டப் பாதுகாப்பாகக் கருதப்படும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பற்றியும் அதன் நிவாரணம் பற்றியும் எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், இச்சட்டம் எங்காவது வன்கொடுமைகளைத் தடுத்திருக்கிறதா என்பது பற்றி எவரும் விவாதிக்கத் தயாராக இல்லை. சமூகம் அங்கீகரிக்காதவரை எந்தச் சட்டத்தாலும் பயனில்லை என்று அம்பேத்கர் உணர்த்தியதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். சாதியத்தை அங்கீகரிக்கும் இந்து மதத்தை எதிர்த்து தலித்துகள் வெளியேறுவது குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.

தமிழ்ப்பண்பாட்டைப் பற்றி வாய்கிழியப் பேசுகிறவர்களிடம் ஒரு கேள்வி: சமூக, பண்பாட்டுத் தளங்களில் தமிழர்கள் எல்லாம் இந்து பெயர்களை சூடிக் கொள்கின்றனர்; இந்து கோயில்களுக்குச் செல்கின்றனர்; இந்து கடவுளை வணங்குகின்றனர்; இந்து நெறியைப் போற்றியும் பின்பற்றியும் வருகின்றனர். இங்கு தமிழ்ப்பண்பாடு எங்கு முகிழ்க்கிறது? எதைத் தமிழ்ப்பண்பாடு என்று இவர்கள் சொல்ல வருகிறார்கள்? அரசியல் தளங்களில் "தமிழர்' என்ற முழக்கத்துடன் போராட்டங்களை முன்வைத்தாலும் அவை எவையும் தமிழர் மீதான இழிவை நீக்குவதற்கான, இந்து பண்பாட்டை மறுதலிப்பதற்கான போராட்டங்கள் அல்லவே.

 அதுமட்டும் அல்ல; அரசியல் உரிமைகள், மாநில உரிமைகள் மற்றும் மொழி உரிமைகளுக்கான போராட்டங்கள் நடந்து முடிந்த பிறகு தமிழர்கள் தத்தம் ஊருக்கும் சேரிக்கும் தானே பிரிந்து செல்கின்றனர். உழைக்கும் மக்களுக்கான புரட்சிகர பொதுவுடைமைப் போராட்டங்களுக்கும் இது பொருந்தும். பெரும் புரட்சிகரமானதாக இன்று சொல்லப்படும் மாணவர் போராட்டங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மாணவர்கள் தங்கள் போராட்டம் முடிந்ததும் எஸ்.சி. விடுதிக்கும்; பி.சி. விடுதிக்கும் தானே பிரிந்து செல்கின்றனர்? அரசியல் பிரச்சினையில், மாநில உரிமைகளில் சேரித் தமிழனுக்கும் பங்கு உண்டு என்று வாதிடலாம். ஆனாலும் அவனுக்கு அதில் பிரதிநிதித்துவமோ தலைமைஇடமோ மறுக்கப்படுகின்றன என்பதை திராவிட ஆட்சிகளும் தமிழ்த்தேசிய கட்சிகளும் இடதுசாரி ஆளும் மாநிலங்களும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டுதானிருக்கின்றன.

 தமிழர் என்ற அடையாளத்துடன் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் தமிழர்கள் திரளாகப் பங்கேற்பதாகப் பெருமிதம் கொள்ளப்படுகிறது. ஆனால், அதே தமிழர்கள் சமூக, பண்பாட்டுத்தளங்களில் நிகழ்த்தும் ஒன்றுகூடல்கள் மட்டும் ஏன் ஜாதி அடிப்படையில் நிகழ்கின்றன? அரசியல் தளத்தில் முன்வைக்கப்படும் தமிழ் இன ஓர்மை சமூக, பண்பாட்டுத் தளங்களில் என்றைக்கு எதிரொலிக்கிறதோ அன்றுதான் தமிழர் ஒற்றுமை/ அடையாளம்/ பண்பாடு பற்றிப் பேசுவதில் பொருள் இருக்க முடியும். சாதி ஒழிப்புப் போராட்டங்களில்தான் அவை சாத்தியமாகும்.

தலித் மக்களின் போராட்டம் எதற்கானது என்பதை சாதி வெறியர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் தலித்துகளின் போராட்டத்தை அதிகாரத்திற்கானதாகவும், பணத்திற்கானதாகவும் தான் பார்க்க முடியும். ஏனெனில் சாதி வெறியர்கள் சாதி அமைப்பின் அதிகாரத் துணையுடன் தான் வாழ்கின்றனர். அதை தலித்துகள் பறித்துக்கொள்வதற்காகத்தான் போராடுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சாதிய மனம் அப்படித்தான் சிந்திக்க வைக்கும். ஆனால், பொதுச்சமூகமும், இடதுசாரிகளும், தேசியவாதிகளும் கூட தலித் மக்களின் போராட்டத்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

தலித் மக்களின் போராட்டங்கள் அதிகாரத்திற்கானதோ, சொத்துக்கானதோ அன்று. அவை அம்பேத்கரியல் அடிப்படையில், சமத்துவ சமூகத்தையும் சமூக ஜனநாயகத்தையும் உருவாக்குவதற்கானது. இப்போராட்டம் மட்டுமே எல்லாவித ஆதிக்கத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும் வேரறுத்து, மனித மாண்பை மீட்டெடுக்கும்.

சாதியவாதிகளின் கண்களை உறுத்தும் ஜீன்ஸ் பேண்ட்டும், டீ சர்ட்டும் சாதியக் கட்டுமானத்தை உடைத்தெறியும் நவீன, சாதி ஒழிப்புச் சிந்தனையின் குறியீடு. சனாதன பிற்போக்கு குறியீடான வெள்ளுடை வேட்டியும், சட்டையும் இந்த நவீனத்தை அருöவறுப்பாகப் பார்ப்பதில் வியப்பொன்றுமில்லை. அது சிந்தனைப் பழமைவாதம். ஜீன்ஸ் பேண்ட்டும், டீ சர்ட்டும் ஊரையும் சேரியையும் இணைக்க வல்லது. காதல் திருமணங்களால் மட்டுமல்ல; புரட்சிகர அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளாலும்!

2013 ஏப்ரலில் 2012 மே இதழ்

"தலித் முரசு' தொடங்கியது முதல் 15 ஆண்டுகள் வரை கடைசி சில ஆண்டுகளில் அது சற்றுத் தாமதமாக வெளிவந்தது எனினும் ஓர் இதழ்கூட வெளிவராமல் இருந்ததில்லை. ஆனால், 16 ஆவது ஆண்டில்தான் ஒரு பெரிய இடைவெளி உருவாகிவிட்டது. நிதிப்பிரச்சினைதான் இதற்கான காரணம் என்பதை மீண்டும் விளக்கத் தேவையில்லை.

2012 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தற்பொழுதுதான் இதழ் வெளிவருகிறது. இருப்பினும் ஓரிதழ்கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், மே 2012 மாதத்தில் இருந்தே இதழைக் கொண்டு வருவது என்று முடிவெடுத்துள்ளோம். அந்த வகையில் இதழ் தொடர்ச்சியாக வெளிவரும். இதற்காக நாம் கடும் இழப்புகளையும் இன்னல்களையும் சந்தித்தாலும் தாழ்வில்லை. வாசகர்களிடம் பெற்ற ஆண்டுக் கட்டணங்களுக்கும் இடையில் விடுபட்ட கருத்துப்பதிவுகளுக்கும் இதுமட்டுமே உரிய இழப்பீடாக இருக்க முடியும்.

விடுபட்ட இதழ்களைக் கொண்டுவரும்போது, தற்போதைய செய்திகள் முன் தேதியிட்ட இதழ்களில் பதிவாவதால் பிற்காலத்தில் குழப்பம் ஏற்படும். எடுத்துக்காட்டாக, ஏப்ரல் மாதம் 2013 இல் மறைந்த மூர்த்தி தாத்தா பற்றிய செய்தி, மே 2012 இதழில் இடம் பெற்றிருக்கிறது. இத்தகைய சிக்கல்கள் நேர்வதைத் தவிர்க்க இயலாது. இதழை வாசிக்கும்போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

பேராசியர் அய். இளங்கோவன் அவர்கள் "இறவா நாட்கள்' என்ற தனது நூலை வெளியிட்டு, அதன் விற்பனைத் தொகை அனைத்தையும் "தலித் முரசு'க்கு வழங்கினார்; ஆம்பூரில் தலித் கலைவிழா நடத்தி அதன் மூலம் பெற்ற நிதியை யாழன் ஆதி வழங்கினார். சென்னையில் கட்டியக்காரி நாடகக் குழுவினர் "மொளகாப் பொடி' நாடகத்தின் மூலம் கிடைத்த தொகையை "தலித் முரசு'க்கு வழங்கினர். மேலும், அக்கறையுள்ள வாசகர்கள் மற்றும் தோழர்களின் நிதி உதவியின் மூலம் ஓரளவிற்கு நம் கடன்சுமை குறைந்திருக்கிறது. இடைவெளியின்றியும் கொள்கை சமரசங்கள் இன்றியும் "தலித் முரசு' இதழை நடத்துவதன் மூலமே அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.

Pin It