கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

1932ம் வருஷத்தில் காந்தியாரின் உயிரைக் காப்பாற்றின வீரர்கள் ஆதிதிராவிட தோழர்களாகும்.

பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்ட 200 வருஷகாலங்களுக்குப் பிறகே ஆதிதிராவிடர்களுக்கு அரசியலில் பிரதிநிதித்துவம் பெற வசதி அளித்தார்கள்.

இந்த வசதியும் இந்திய மக்களின் பிரதிநிதி ஸ்தாபனம் என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரசும், அக்காங்கிரசிற்கு சர்வாதிகாரி என்று சொல்லப்பட்டவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்ய வசதி அளிக்காவிட்டால் பட்டினிகிடந்து உயிரை விடுவேன் என்று சொன்னவர், தீண்டாமை ஒழிக்கப்பட்டால் அல்லாது தீண்டப்படாதார் என்பவர்களுக்கு மற்ற இந்து மக்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டாலல்லாது இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிடைக்காதென்றும், கிடைத்தாலும் நிலைக்காதென்றும் சொன்னவர் ஆன தோழர் காந்தியாரால் "தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியலில் தனிப் பிரதிநிதித்துவம் கொடுத்தால் என் உயிரைக் கொடுத்தாவது எதிர்ப்பேனே ஒழிய என் உயிர் போமளவும் சம்மதிக்க மாட்டேன்" என்று சொன்ன பிறகே தான் அரசாங்கத்தார் கருணை வைத்து தனிப்பிரதிநிதித்துவம் கொடுத்தார்கள்.periyar and maniamma 653அதுவும் கூட ஏன்? எப்படி? கொடுத்தார்கள் என்று யோசிப்போமேயானால் சைமன் கமிஷன் இந்தியாவுக்கு முதலில் வந்த பொழுது, இந்திய அரசியல் ஸ்தாபனங்கள் முழுவதும் ஜஸ்டிஸ் கட்சி உள்பட எதிர்த்து பஹிஷ்காரம் செய்த காலத்தில் சுயமரியாதை இயக்கம் ஒன்று மாத்திரமே அதை வரவேற்று தீண்டப்படாதவர்கள் என்று சமூக வாழ்வில் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கும் 7 கோடி மக்களின் நிலைமையையும், இந்தியப் பெண்கள் நிலைமையையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என்றும்; அதற்காகவே வரவேற்கிறோம் என்றும், தெரிவித்த பின்பு சைமன் கமிஷன் தீண்டாமை தத்துவத்தையும், தீண்டப்படாதவர்களின் நிலமையையும், பெண்கள் நிலமையையும் தெரிந்து கொண்டு போய் கடைசியாக தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு தனித்தொகுதி பிரதிநிதித்துவம் கொடுத்தார்கள்.

அந்த தனிப்பிரதிநிதித்துவத்தை ஒழிக்கக் கருதி தோழர் காந்தியார் "தனிப்பிரதிநிதித்துவத்தை அரசாங்கத்தார் திருப்பிப் பெற்றுக் கொண்டால் ஒழிய உயிர் தரிக்க மாட்டேன். நான் தற்கொலை செய்து கொள்ளுவேன்" என்று சபதங்கூறி பட்டினி கிடந்தார்.

அந்தப்பட்டினியில் "கிருஷ்ணபரமாத்மா" செய்த கபட நாடகத்தை விட அதிகமாக "இதோ காந்தி சாகப் போகிறார். அதோ காந்தி சாகப் போகிறார்" என்று சில வைத்தியர்களும், மாளவ்யாஜி போன்ற பல வருணாச்சிரம எத்தர்களும் அதுவும் பட்டினி ஆரம்பித்த 4, 5 நாள்களுக்குள்ளாகவே கூப்பாடு போட்டு மிரட்டி தீண்டாதவர்களுக்கு குளத்தைத் திறந்து விடுகிறோம். கோவிலைத் திறக்கிறோம். பள்ளிக்கூடத்தைத் திறக்கிறோம். அதுமாத்திரமல்லாமல் எல்லாப் பொதுத் தேர்தல்களிலும் உங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கிறோம்" என்று ஆசைகாட்டி ஏமாற்றியும் தீண்டப்படாதவர்கள் என்கின்றவர்கள் வாயினாலேயே எங்களுக்குத் தனித் தொகுதிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்று சொல்லும்படியாகச் செய்து காந்தியின் உயிரைக் காப்பாற்றினார்கள்.

இதனால் தீண்டப்படாத மக்களின் தயவாலேயே அவர்களது பெரும் தியாகத்தாலேயே காந்தியாரின் உயிர் காக்கப்பட்டது என்றோ காந்தியாருக்கு உயிர் பிச்சையும், அவரது மனைவியாருக்கு "மாங்கல்யப் பிச்சை"யும் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லப்படுமானால் அதில் நல்ல உண்மை இல்லை என்று எந்த நன்றி கெட்ட மனிதரும் சொல்லத்துணியார். அப்படி யிருக்க அந்த ஒரு பெரிய உதவிக்காக அவர்களுக்கு கோயிலைத் திறந்து விடுவதாக ஒரு மசோதாவை இந்திய சட்ட சபையில் ஒரு பார்ப்பனரைக் கொண்டு வரச்செய்து அதை ஆசை காட்டி மக்களிடமிருந்து தீண்டாமை விலக்குப் பண்டுக்காக பல லட்ச ரூபாய்களை வசூல்செய்து கொண்டு அந்தப் பணத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதார் என்று சொல்லப்படுபவர்களாகிய ஐயர் ஐயங்கார் சாஸ்திரி முதலியவர்களின் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்குச் சிலவழிக்கப்பட்டு அவர்களை அங்கத்தினர்களாக்கினதோடு þ மசோதாவையும் கொலை செய்து விட்டு இதுவரை நடந்த எந்தப் பொதுத் தொகுதியிலும் எந்தத் தேர்தலிலும் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்து விட்டார்கள்.

அதோடு மாத்திரம் அல்லாமல் பார்லிமெண்டரி போர்டு என்பதின் மூலம் எந்தத் தொகுதிக்கும் அந்த வகுப்பில் ஒரு ஆளையாவது நிறுத்தினவர்களுமல்ல.

அது மாத்திரமல்லாமல் சென்ற வாரம் சென்னையில் நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலுக்குத் தானாக வேறு எந்தக் கட்சியையும் சேராமல் தனித்து நின்ற ஆதிதிராவிட வகுப்புத் தோழராகிய ஜீ. முனிசாமி பிள்ளையையும், அவருக்கு எதிராக காங்கிரசின் பேராலேயே ஒரு பார்ப்பனரை நிறுத்தி தோற்கடித்து விட்டார்கள்.

ஆகவே இந்தப் பார்ப்பனர்கள், உயிரைக் காப்பாற்றியவர்களுக்குச் செய்யும் பிரதி உபகாரம் என்ன என்பதும், அவர்களது நன்றிகெட்ட தன்மை எவ்வளவு என்பதும் தேசிய நாணையம் எப்படிப்பட்டது என்பதும் இதிலிருந்தே ஒருவாறு உணரலாம்.

அது மாத்திரமல்லாமல் இதில் மற்றொரு விஷயம் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். அதாவது:

பூனா ஒப்பந்தம் நிறைவேறிய மறுதினம் (25932) பம்பாயில் அந்த ஒப்பந்தத்தை ஊர்ஜ்ஜிதப்படுத்த ஒரு பெரிய மகாநாடு கூடிற்று. அதில் அடியில் கண்ட தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது:

"இனி இந்துக்கள் எவரும் பிறப்பினால் தீண்டப்படாதவர்கள் என்று கருதக்கூடாது.

பொதுக் கிணறுகள், பொதுப் பள்ளிக்கூடங்கள், பொது ரஸ்தாக்கள், இன்னும் இதர பொது ஸ்தாபனங்களானவைகளை உபயோகிப்பதில் மற்ற இந்துக்களுக்குள்ள எல்லா உரிமையும் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் உண்டு.

இச் சீர்திருத்தம் இப்பொழுது முதலே அமுலுக்கு வராவிட்டால் ஸ்வராஜ்யப் பார்லிமெண்ட் ஏற்பட்டதும் சட்டங்கள் ஏற்படுத்துவதில் இதுவே முதலாவதாக இருக்கும்.

தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மீது ஜாதி இந்துக்கள் என்பவர்கள் தற்போது வழக்கம் என்னும் பெயரால் சுமத்தி வரும் எல்லா சமூகத் தடைகளையும், அசௌகரியங்களையும், கோயில் களுக்கு அவர்களை அனுமதிக்க மறுத்து வரும் கொடுமை உள்பட எல்லாவற்றையும் அவசரமாக நீக்க இந்து தலைவர்கள் சாந்த பூர்வமாக எல்லா வழிகளையும் கைக்கொள்ள வேண்டும்"

என்று தீர்மானித்து ஆசை காட்டி பூனா தீர்மானத்தை ஊர்ஜ்ஜிதம் செய்து அரசாங்கத்துக்குத் தெரிவித்து தீண்டப்படாதவர்களுக்கு அரசாங்கத்தாரால் அளிக்கப்பட்ட தனித் தொகுதி பிரதிநிதித்துவத்தையும் தள்ளும்படி செய்துவிட்டார்கள்.

இப்படி இருக்க இந்தத் தீர்மானத்துக்காக இதுவரை இந்தப் பார்ப்பனர்களோ அல்லது அந்தக் காந்தியாரோ ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் பொது ஜனங்கள் தயாராக இல்லை! ஆதலால் சட்டம் வேண்டாமென்று காந்தியாரும், ராஜகோபாலாச்சாரியாரும் அறிக்கை வெளியிட்டு சட்டத்தை வாப்பீசு பெரும்படி செய்து விட்டார்கள்.

கோயில் பிரவேசத்துக்கு சாந்த பூர்வமான வழியில் பட்டினி கிடந்தவர்களையும், சத்தியாக்கிரகம் செய்தவர்களையும் வேண்டாமென்று சொல்லி விட்டார்கள்.

இவ்வளவும் தவிர காங்கிரசில் பார்லிமெண்டரி போர்டு ஏற்படுத்திய பிறகும் ஒரு தீண்டப்படாதாரையாவது இந்திய சட்டசபைக்கு நிறுத்தவே இல்லை. தானாக நின்றவர்களுக்கும் எதிர்ப்பு செய்து தோற்கடித்தார்கள்.

இவ்வளவு மாத்திரந்தானா என்றால் இன்னொரு முக்கியமான நாணையக் குறைவான காரியம் ஒன்று, அதாவது பார்லிமெண்டரி போர்டு எலக்ஷன் பிரசாரத்தில் "தீண்டாமை விலக்க சட்டம் செய்ய அனுமதிப்ப தில்லை கோவில் பிரவேசத்துக்கு சட்டம் செய்வதுமில்லை சட்டம் செய்ய அனுமதிப்பதுமில்லை; சமூக சம்பந்தமான எவ்வித தீர்மானங்களோ சட்டங்களோ இந்திய சட்டசபையில் நாங்கள் கொண்டு வருவதில்லை. பிரத்தியார் கொண்டு வந்தாலும் நாங்கள் அதை அனுமதிப்பதில்லை"

என்று திட்டம் போட்டுக்கொண்டு அந்தப்படி ஜாதி இந்துக்களுக்கு வாக்குக் கொடுத்து இந்திய பார்லிமெண்ட் சபையென்று சொல்லப்படும் இந்திய சட்ட சபைக்குப் போயிருக்கிறார்கள். அங்குபோய் முதல் சட்டம் என்ன செய்தார்கள் என்பதை கவனித்தால் இவர்களது யோக்கியதை இன்னும் நன்றாக விளங்கிவிடும்.

ஆகவே காந்தியாருக்கு ஆபத்து சமயத்தில் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய மக்களுக்கு காங்கிரஸ்காரர்களோ, காந்தியாரோ, செய்த பிரதி உபகாரம் என்ன என்பதையும் அவர்களுடைய யோக்கியதையும் இதிலிருந்தாவது தெரிந்து கொள்ளும்படி பொதுஜனங்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு தலையங்கம் 27.01.1935)