ஆங்கிலத்தில்: எஸ்.கே. பிஸ்வாஸ்

காந்திக்கும் பெரியாருக்கும் இடையே நடந்த புகழ்பெற்ற உரையாடலின் சில பகுதிகளை இங்கு பார்ப்போம். பார்ப்பனர்களின் கருதுகோளையும் நிலையையும் புரிந்து கொள்ள மிகப் பொருத்தமானது அது:

எம். கே. காந்தி : உங்களுக்கு திரு. ராஜகோபாலாச்சாரி மீது கூட நம்பிக்கை இல்லையா?

பெரியார் : அவர் நல்லவர். நேர்மையானவர். தன்னலமற்றவர். தன்னையே தியாகம் செய்யக் கூடியவர். இந்த அனைத்து நற்குணங்களும் அவரது சமூகத்திற்குபணியாற்றுவதிலேயே வெளிப்படுகின்றன. ஆனால் எனது மக்களின், பார்ப்பனர் அல்லாதவர்களின் நலனை அவரிடம் ஒப்படைப்பது என்பது எனக்கு எளிதானது அல்ல.

எம். கே. காந்தி : இது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. அப்படியானால் உங்கள் கருத்துப்படி உலகில் ஒரு நேர்மையான பார்ப்பனர் கூட இல்லை என்கிறீர்களா?

பெரியார் : ஒரு சிலர் இருக்கலாம். ஆனால், நான் அப்படி யாரையும் சந்திக்கவில்லை.

எம். கே. காந்தி : தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள். எனக்கு ஒரு பார்ப்பனரைத் தெரியும். அவர் மிக நல்ல பார்ப் பனர் என்று நான் கருதுகிறேன். அவர் கோபால கிருஷ்ண கோகலே.

பெரியார் : ஓ...! பெரிய நிம்மதிதான்! உங்களைப் போன்ற ஒரு ‘மகாத்மா'வுக்கே ஒரே ஒரு நல்ல பார்ப்பனரைதான் கண்டுபிடிக்க முடிந்ததென்றால், என்னைப் போன்ற ‘பாவி'களுக்கு எப்படி நல்ல பார்ப்பனர்கள் யாரும் தென்படுவார்கள்?

வர்க்க உணர்வு கொண்ட இந்து கம்யூனிஸ்டுகள் இந்தியா குறித்தும் இந்திய சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு குறித்தும் மார்க்ஸ் பதிவு செய்த அடிப்படை உண்மையை ஏற்க மறுத்துவிட்டனர். "... இந்திய சாதி அமைப்புக்கு அடிப்படையாக உள்ள பரம்பரைத் தொழில் முறையானது இந்தியாவின் அதிகாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு முக்கிய தடையாக உள்ளது' என்று மார்க்ஸ் அறுதியிட்டுக் கூறுகிறார். அதாவது, சமூகத்தின் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முக்கியக் கட்டமைப்பாக சாதிய பொருளாதாரக் கட்டமைப்பு உள்ளது. இப்பொருளாதாரக் கட்டமைப்பு மிகுந்த தீங்கிழைக்கக் கூடியது. ஏனெனில் சமூக அமைப்பில் மாற்றம் ஏற்படுவதை அது தடுக்கிறது.

engels_353மநுவாதி மார்க்சியர்கள் சாதிய அமைப்பையோ, சாதியக் கட்டமைப்பையோ, அடிப்படையான அல்லது சுதந்திரமான கட்டமைப்பாகக் கருதுவதில்லை. அவர்கள் அதை மேல்கட்டமைப்பு என்கின்றனர். பல நூற்றாண்டுகள் அது நிலைத்து நிற்பதற்கான பல பணிகளை அது கொண்டுள்ளது. பார்ப்பனிய கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரையில், “வர்க்கமே அடிப்படைக் கட்டமைப்பாகும். வர்க்கக் கட்டமைப்பு உதிர்ந்துவிட்டால், அதன் மேல் கட்டமைப்பான சாதியக் கட்டமைப்பும் தானாகவே ஒழிந்துவிடும்.'' தற்போது, அவர்கள் இல்லாத ஒன்று உதிரப் போவதாகக் கனவு கண்டுவருகின்றனர். இந்திய சமூகம் வர்க்கப் படிநிலை அற்றது. அது சாதியப் படிநிலையால் அமைக்கப்பட்ட சமூகம். சமூக நிலை மாற்றத்திற்கு வழி அற்ற வர்க்கமே சாதியம். சமூக நிலை மாற்றத்திற்கு இடமளிக்கும் சாதியமே வர்க்கம்.

கார்ல் மார்க்ஸ் சற்றே மாறுபட்ட வகையில், மாறுபட்ட சொற்களால் வரலாற்றில் செதுக்கி வைத்த கருதுகோளையே நாம் இந்தியாவில் மீண்டும் பொருத்தலாம்.

இந்திய பார்ப்பனிய அதிகாரக் கோட்டையின் வாசலில் ஒரு "பிசாசு' அச்சுறுத்துகிறது. அதுதான் அம்பேத்கரியம் எனும் "பிசாசு'. பழைய ஆரியவர்த்த நம்பிக்கையின் பாதுகாவலர்கள் தேசியவாதிகள், பழமைவாதிகள், கம்யூனிஸ்டுகள், அடிப்படைவாதிகள், கிழக்கத்திய முற்போக்கு மற்றும் தெற்கத்திய பழமைவாதிகள்... என அனைவரும் இந்த பிசாசை அழிக்க புனித கூட்டில் இணைந்தனர். பூர்வீக இந்தியர்கள், உற்பத்தியாளர்கள், சூத்திரப் பெருங்கூட்டத்தினர், தொல்குடி பெரும்பான்மை மக்கள் வெளிப்படையாக உலகின் முன் தங்கள் கருத்துகளை, லட்சியங்களை, விருப்பங்களைத் தெரிவிக்கவும், அம்பேத்கரிய பிசாசு குறித்த சிறுபிள்ளை கதைகளை இந்த பழமையான குடியேற்றத்தின் அனாதைகளின் வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்கொள்ளவும் வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இன்று, முழு உலகும் நண்பர்களும் பகைவர்களும் மார்க்ஸ் எனும் மேதையின் முன் பெருமதிப்புடன் வணங்குகின்றனர். மார்க்ஸ் இறந்து ஒரு வாரத்திற்குப் பின் இடுகாட்டில் நின்று கொண்டு அவரது சக போராளியும் நண்பரும் சக சிந்தனையாளருமான பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் தனது கனத்த குரலில் இவ்வாறு கூறினார்:

“மார்ச் 14 அன்று மதியம் மூன்றடிக்க கால் மணி நேரம் இருந்தபோது, வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்தி விட்டார். அவர் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனித்து விடப்பட்டார். நாங்கள் திரும்பி வந்தபோது அவர் தனது இருக்கையில் அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார் ... ஆனால் நிரந்தரமாக.''

அக்காலத்தின் தனித்துவமான மற்றும் திறன்வாய்ந்த அறிவாளியான ஏங்கெல்ஸ், மார்க்சின் சூரிய ஒளி போன்ற அறிவாற்றலுக்கு முன் தாங்கள்வெறும் மின்மினிப் பூச்சிகள் என்பதை வெளிப்படுத்தத் தயங்கவில்லை. அவரது சொந்த சொற்களில் சொல்லலாம்: “என்னுடைய பங்களிப்பு என்பது எந்த அளவுக்கு இருந்தாலும் சில சிறப்பான துறைகளில் நான் ஆற்றிய பணிகள் தவிர பிறவற்றை நான் இல்லாமலேயே மார்க்சால் நிச்சயம் செய்திருக்க முடியும். மார்க்ஸ் சாதித்தது என்பது என்னால் முடியாத ஒன்று. மார்க்ஸ் எங்கள் அனைவரையும் விட உயரத்தில் நின்றார். அதிக தொலைநோக்குடன் இருந்தார். விரைவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலுடன் இருந்தார். மார்க்ஸ் ஒரு மேதை. நாங்கள் நல்ல திறன் உடையவர்கள்.''

அப்படி ஒரு மனிதரின் தத்துவத்தை கடைப்பிடித்து, இவ்வுலகின் உழைக்கும் மக்கள் விடுதலை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்கான தங்கள் போரை நடத்தினர். பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியை நிறுவ அவர்கள் போராடினர். வர்க்கமற்ற ஒரு சமூகத்தை உருவாக்கப் போராடினர். மார்க்சியம் பற்றிக் கற்றுக் கொடுக்கப்பட்ட நிலையில், தங்கள் வாழ்வை கொடுமையானதாகவும், ஆளும் வர்க்கத்தினருடன் சமமற்றதாகவும் ஆக்கிக்கொண்டிருப்பது எந்திரங்களோ, நாகரிகமோ அல்ல என்ற பாடத்தை அவர்கள் கற்றனர். தங்களுடைய பொருளாதார நலன்களை கெடுப்பது தொழிற் மயமாதல் அல்ல என்பதையும் மாறாக, பெரும்பான்மை மக்களின் உற்பத்தியின் உபரியை வாய்ப்புப் பெற்ற ஒரு சிறு கூட்டத்தினர் அனுபவிப்பதை அனுமதிக்கும் சமூக அமைப்பே என்பதை அவர்கள் அறிந்தனர்.

மார்க்சியத்தின் அடிப்படையில் சில நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்கு ஒரு புதிய வடிவத்தைத் தருவதில் உலகின் பாட்டாளி வர்க்கம் வெற்றிபெற்றுள்ளது. உலகின் ஒட்டுமொத்த அரசியல் புவியியலின் போக்கை அவர்கள் நிச்சயமாக மாற்றியமைத்துள்ளனர். தங்களுக்கு சாதகமற்ற முறையில் இருந்த பொருளாதார சமூக முறையை உழைக்கும் மக்கள் தங்களுக்கு சாதகமாக வடித்துள்ளனர். பொருளாதார சிந்தனைகளும் கருத்தியல்களும் முற்போக்கான புதிய வடிவங்களைப் பெற்றன. மனித இன வரலாற்றில் தனி மனித ஒருவரின் பங்களிப்பால் மனித சமூகத்தை அடிப்படையிலேயே மாற்றியமைத்ததில் மார்க்சுடன் போட்டியிட கவுதம புத்தர் மட்டுமே பொருத்தமானவர்.

எனினும் மார்க்ஸ் மீது பல விமர்சனங்கள் இருந்தன. புத்தருக்கு எதிரிகள் இருந்தனர். அவர் அவரது சொந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஏசுவை சிலுவையில் ஏற்றிக் கொல்லத் தேவையான மக்களுக்கு பஞ்சம் ஏற்படவில்லை. மார்க்சியம் ஒரு பொய் என்று ஒரு குழுவினர் தொடர்ந்து கூறி வந்தனர். மார்க்சியம் வெற்றி பெறவும் முடியாது. நடைமுறைக்கும் வராது. தனது நோக்கத்தை நிறைவேற்ற அது இறுதியில் தோல்வியுறும்.

மார்க்சியவாதத்தின் அடிப்படைக் கூறு பொருளாதாரக் காரணி ஆகும். அனைத்து உயிரினங்களிலும், மனித இனம் மட்டுமே பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய உயிரினமாகும். பணமும் மனிதனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தங்களின் இருத்தல் தேவைக்காக மட்டுமே பொருளாதார செயல்பாடுகளை கொண்டுள்ளன. பணம் என்பது வேறெங்கும் அறியப்படாத ஒன்று. மார்க்சை பொருத்தவரையில், மனித இனத்தின் பணம் சார்ந்த உளவியல் என்பது மனித சமூக நிலையில் மாற்றத்தைக் கொண்டு வரக் காரணமான அனைத்து கூறுகளுக்கும் பின் நின்று அனைத்தையும் கடந்த மிகத் திறனான பங்கை ஆற்றியுள்ளது. எனவே, அவர் எழுதுகிறார்: “இதுவரை வாழும் அனைத்து சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்ட வரலாறேயன்றி வேறில்லை". ஒரு சமூகத்தின் உறுப்பினர்களிடையே நிலவும் பொருளாதார, உற்பத்தி மற்றும் சொத்து உறவுகளின் அடிப்படையில் உருவான சமூகப் படிநிலையே வர்க்கமாகும்.''

சுயமாக முன்னேறும் மனித சமூகத்தில் பணம் எவ்வாறு மூலதனமாக மாறுகிறது என்பதை அவர் விளக்கினார். 'மூலதன"த்தின் எதிர்க்கவியலாத ஆற்றல் என்பது மத்திய அய்ரோப்பாவில் எவ்வாறு சிறிய விவசாயிகளை அவர்களது பாரம்பரிய நில உடைமையிலிருந்து வெளியேற்றி, வேருடன் பெயர்த்தெடுக்கப்பட்ட நிலமற்றவர்களின் மோசமான வாழ்வை வாழும் நிலைக்கு எவ்வாறு தள்ளியது. ஒரு காலத்தில் விவசாயிகளாக இருந்தவர்கள், நில உடைமையாளர்களாக இருந்தவர்கள், எவ்வாறு கூலித் தொழிலாளிகளாக அல்லது பாட்டாளிகளாக மாற்றப்பட்டார்கள். இந்த உழைக்கும் மக்களின் சேவைகளும் உழைப்பும் எவ்வாறு பணக்கார, சொத்து படைத்த தனி நபர்களால், தங்களின் பணத்திற்கு (தற்போது மூலதனம்) மேலும் மதிப்பளிக்கும் வகையில் வாங்கப்பட்டன என்பதையும் அவர் விளக்கினார்.

எதனால், எந்தச் சூழலில், அதிக உற்பத்தியின் விளைவாக மூலதனக்காரர்கள் தங்களது சொந்த குழியை தாங்களே வெட்டிக் கொண்டார்கள் என்பதையும், உற்பத்தி எந்தச் சூழலில் அதிகரிக்கப்படலாம் என்பதையும் அவர் விளக்கினார். பொருளாதார செயல்பாட்டின் இந்த கோட்பாடு அல்லது வரையறையே மார்க்சியம் எனப்படுகிறது. இந்த கருத்தியலின் விளக்கம் மேலும் நீட்டிக்கப்படுகையில், மூலதனத்தின் அல்லது உற்பத்திக்கான மூலங்களின் உரிமையாளர்கள் தாங்கள் இருப்பற்றுப் போக நேரும் சிக்கலுக்குள் எவ்வாறு மீண்டும் மீண்டும் விழுகிறார்கள் என்பதை காட்டுகிறது. நவீன எந்திரங்கள் மற்றும் தொழிலாளர்களின் அதீதமான உற்பத்தியின் விளைவாக தேவைக்கு அதிகமான உற்பத்தி என்பது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. இதனால் ஏற்படும் சிக்கலான சூழலில் இருந்து தப்பிக்க, முதலாளிகள், தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சந்தையினை கைப்பற்ற ஒருவருடன் ஒருவர் மோதுகிறார்கள். இந்த உள் சண்டையானது அனைத்து எல்லைகளையும் கடந்து விரிகிறது. சந்தைக்கு தேசிய அளவில் நடக்கும் சண்டைகள் நாளடைவில் சட்ட எல்லைகளைக் கடந்து பன்னாட்டுப் பகுதிகளில் வேகமாகப் பரவுகிறது. இதுவே உலகப் போர்களை உருவாக்குகிறது.

மறுபுறம், இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் நடக்கும் இந்த வர்க்கச் சண்டைகள் புது வடிவத்தை எடுக்கின்றன. தொழிற்சாலைகளில் ஒரு ராணுவமாக உழைக்கும் வர்க்கம் அணி திரள்கிறது. சூழலை தக்கவாறு பயன்படுத்திக் கொள்கிறது. முத்தரப்பு ஒப்பந்தங்களின் வடிவில் அவை எழுகின்றன. இறுதியில் அதிகாரத்தின் கோலை அவர்கள் கையிலெடுக்கின்றனர். அதன் பின் அவர்கள் சொத்துகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் ஒரு புதிய சமூக பொருளாதாரக் கட்டமைப்பாக சோசலிசத்தை நிறுவுகின்றனர். லாபத்தை நோக்கமாகக் கொண்ட தனி நபர் சொத்துடைமையாளர்களின் வீழ்ச்சி, சொல்லப்போனால் அழிவுக்குப் பின் கூடுதல் உற்பத்தி என்ற அச்சம் உதிர்ந்து போகிறது. இதனால் உற்பத்தியின் உச்சத்தை எட்டுவது என்பது தடையின்றி தொடர்கிறது. இதனால் ஒரு காலத்தில் பாட்டாளிகளாக இருந்தவர்கள் அரசை ஆள்பவர்களாக மாறுகின்றனர். இதுதான் கார்ல் மார்க்சின் தத்துவம்.

நிலவுடைமை உற்பத்தி முறையிலிருந்து மூலதன முறைக்கு மாறும் நடைமுறையானது இரு நிலைகளை கொண்டது. உழவுப் பொருளாதாரத்திற்கும், கைவினைப் பொருட்கள் மற்றும் மத்திய காலத்திய நகர்ப்புற தொழில்களுக்கு நேர் எதிராக உற்பத்தியாளர்கள் வணிகர்களாகவும் மூலதனக்காரர்களாகவும் மாறுகின்றனர். பழமையான அணுகுமுறையிலிருந்து வரும் வரலாற்றின் மறுபக்கம் அதாவது, பாரம்பரியமான அல்லது மனித இனத்தின் சமூக வரலாறு இதே வளர்ச்சியை வேறு விதத்தில் விவரிக்கிறது. இது, அரசியல் சட்ட அமைப்பின் வரலாறு. அதாவது பொருளாதாரக் கட்டமைப்புக்கு ஏற்றவாறு வளர்ந்த அரசியல் வரலாறு ஆகும்.

ஜனநாயகத்திற்கான ஆவலும் அரசியல் சட்ட அமைப்பு முறையும் பழமையான கிரேக்கத்திலும் அப்பகுதியில் அமைந்த வேறு சில நாடுகளிலும் தொடங்கியது. ஆனால் வரலாற்றுக் காரணங்களால், தொடர்ந்து சீராக வளர்ந்து வந்த நிலையில் மனித சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் முயற்சி முழுமை பெற்றது என்பது கி பி. 12ஆம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் தொடங்கியது. மன்னரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்த மக்களின் எதிர்ப்பின் விளைவாக, பிரிட்டிஷ் விடுதலையின் முதல் அறிக்கை அல்லது மக்னா அறிக்கை, கி. பி. 1215 இல் மன்னர் ஜானால் கையெழுத்திடப்பட்டது. மீண்டும் ஜனநாயகத்தின் மீதான பற்றால் மனித விடுதலைக்கான தேவையால் உந்தப்பட்ட மக்கள், 1649 இல் மன்னர் முதலாம் சார்லஸ்இன் தலையை கொய்தனர்.

இதன் பின்னர், 1688 இல் மன்னர் இரண்டாம் ஜேம்ஸ், மக்களின் பேரெழுச்சியால் அச்சமடைந்து நாட்டை விட்டு ஓடிய போது ஆங்கிலேய மக்கள் புகழ்மிக்க புரட்சியின் வெற்றியால் கவுரவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டில், மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தைக் கூட்டினர். இதுதான் ஆங்கிலேய விடுதலையின் மூன்றாம் அறிக்கையாகும். 1106 இல் மன்னர் முதலாம் வில்லியமால் உருவாக்கப்பட்ட "சலிஸ்பரி உறுதிமொழி'யின் மூலம் பெருமைமிக்க பிரிட்டனின் பொது மக்கள் மற்றும் விவசாயிகளால் சுவைக்கப்பட்ட விடுதலைச் சுவையானது 1689இல் உரிமைகள் சட்டத்தை உருவாக்க அவர்களை வழிநடத்தியது. வரி மற்றும் வருமானத்தை வசூலிக்கும் உரிமையை இச்சட்டம் மன்னரிடமிருந்து நீக்கியது. மக்கள் அதிகாரப் பொறுப்பை ஏற்று இவ்வாறு அறிவித்தனர் :

"நாடாளுமன்றம் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அடிக்கடி நடத்தப்பட வேண்டும். மக்களுக்கு பேசவும் விவாதிக்கவுமான சுதந்திரம் வேண்டும். மன்னரிடம் மனு அளிக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்.'

வரலாற்றுச் சிறப்பு மிக்க உரிமைகள் சட்டவரைவில் அதிகாரம் உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மன்னர் இனி கடவுளின் பிரதிநிதி அல்லர். மன்னராவதற்கான தெய்வீக உரிமை என்ற கருத்தியல் தூக்கியெறியப்பட்டது. மன்னரின் உருவாக்கத்தில் நாடாளுமன்றம் உறுதியான பங்கை ஆற்றவுள்ளது. மன்னரின் குரல் இனி கடவுளின் குரல் அல்ல. மக்களின் குரலே ஆட்சி செய்யப் போகிறது.

உரிமைகள் சட்டவரைவு என்ற நிலையை அடைய பெரும்பான்மை மக்களின் போராட்டம் ஏறத்தாழ அய்நூறு ஆண்டுகள் தொடர்ந்து மிகப் பெரும் இன்னல்களைக் கடந்து வந்துள்ளது. அது இடைவிடாத, தொடர்ச்சியான ஒரு போராட்ட வேள்வியாகும். ஆயிரக்கணக்கானோர் உயிர்த் தியாகம் செய்தனர். ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் உயிரோடு கொளுத்தப்பட்டனர். எண்ணிலடங்கா கொடூரங்கள், சித்ரவதைகள், எரிப்புகள் மற்றம் சிறைவாசங்கள் என சாதாரண மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். அவர்கள் தங்கள் போராட்டங்களில் வென்றனர், தோல்வியும் அடைந்தனர். இறுதியாக வெற்றி இலக்கை அடைந்தனர். அரசியல் உறுதியின்மை மற்றும் தொடர்ச்சியான உள்நாட்டுப் போரால் எழுந்த அமைதியின்மை ஆகியவற்றின் காரணமாக தேம்ஸ் நதியெங்கும் ரத்த ஆறு ஓடியது. அய்ரோப்பாவின் வரலாறு என்பது தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்களின் வரலாறாகும். இவை மனித நாகரிகத்திற்கும் அப்பகுதியின் விடுதலைக்குமான அடிப்படையை வழங்கின.

தமிழில் : பூங்குழலி

Pin It