தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வ.புதுப்பட்டி கிராமத்தில், கடந்த கால் நூற்றாண்டாக பட்டியல் சாதியினராகிய பள்ளர் மற்றும் பறையர் மக்களிடையே நடந்துவந்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும், மக்களிடையே முழு நம்பிக்கை ஏற்பட வேண்டும். எங்கோ ஒரு மூலையில் நடக்கும் இத்தகைய மோதல்கள், ஒரு தொற்றுநோயாகப் பரவாமல் தடுக்கப்பட்டாக வேண்டும்.

டாக்டர் அம்பேத்கரின் கருத்துகளை தலித் மக்களிடையே பரப்பாமல், சுயசாதி நச்சுக் கருத்தியலை ஊட்டி வளர்த்து, வன்மத்தை விதைத்த சுயசாதி வெறியுணர்வு கொண்ட தலித் தலைவர்களும், அறிவுஜீவிகளுமே வ.புதுப்பட்டி மோதல்களுக்கும் அது ஏற்படுத்தியிருக்கும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

வ.புதுப்பட்டி கிராம மோதல்கள் எதிர்கால தலித் அரசியலுக்கு எச்சரிக்கை மணியொலிகளை எழுப்பியுள்ளன. அம்பேத்கரியலாளர்கள் விரைந்து செயல்பட்டாக வேண்டிய தருணமிது. கலவரத்திற்கான நச்சு விதைகள் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சுயசாதிப் பெருமைபேசும் நூல்கள், இதழ்கள், குறுந்தகடுகள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. சுயசாதி அரசியல் ஒருபோதும் தலித்துகளை அதிகாரப்படுத்தாது. மாறாக, அதிகார அரசியலில் நம்மைக் கீழ்சாதிகளாக வைத்திருக்கவே அது உதவும். ஏனெனில், தலித் ஒற்றுமையை சிதைப்பதுதான் அதன் உள்ளீடாக இருக்கிறது.

சாதி ஒழிப்புக் கருத்தியல்களை விதைப்பதற்கு அம்பேத்கரியலை அறிவாயுதமாகக் கொண்டு போராடுவதற்கு மாறாக, சாதி அமைப்பை வலுப்படுத்தும் கருத்தியல்களை உருவாக்கும் சதித்திட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்பதே இத்தகைய மோதல்களை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தும். எனவே, தலித் மக்களிடையே ஒற்றுமையைக் குலைக்கும் சுயசாதி நச்சுக்களிடமிருந்து மக்களை காக்க வேண்டியது அம்பேத்கரியலாளர்களின் கடமை. மக்களிடையே தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கடமையைச் சுட்டிக்காட்டவும், தலித் அரசியலை, சுயசாதி வெறியுணர்வுகொண்ட அறிவுஜீவிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, அம்பேத்கரின் விடுதலைக் கருத்தியலை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய தேவையை உணர்த்தவும், வ. புதுப்பட்டி கிராம அமைதிக்குழுவின் அறிக்கையை "தலித் முரசு' பதிவு செய்கிறது.

விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி கிராமத்தில் பறையர் மற்றும் பள்ளர் மக்களிடையே நீண்டகாலமாக நடந்துவரும் மோதலைத் தடுத்து நிறுத்தி, அம்மக்களிடையே அமைதியை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட வ.புதுப்பட்டி கிராம அமைதிக்குழுவின் அறிக்கை:

விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி கிராமத்தில், பட்டியல் சாதியினரான பறையர் மற்றும் பள்ளர் சமூக மக்களிடையே 1985ஆம் ஆண்டிலிருந்து சாதி மோதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. நடந்த கலவரங்களில், இரு தரப்பிலும் பெண்கள் உட்பட இருபதுக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெருமளவிலான சொத்துகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன. கிராமத்தில் வாழும் பறையர், பள்ளர் சமூகத்தைச் சார்ந்த அனைத்து ஆண்கள் மீதும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களும், மாணவர்களும் கூட வழக்குகளைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். 2010 முதல் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. 2010 முதல் 2012 வரை மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மோதல்கள் நடந்துள்ளன. இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் பெருமளவிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 2012 சூலை 24 அன்று நடைபெற்ற மோதலில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கொலை மற்றும் ஆயுத வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராமத்திற்குள் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டது. கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

இச்சூழலில், தலித் மக்களிடையே நீடித்துவரும் சாதிய மோதல்களைத் தடுத்து நிறுத்தி, அம்மக்களிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் "தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை' சென்னையை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தலித் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத் தலைவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து வ.புதுப்பட்டி பள்ளர் பறையர் மோதல் குறித்து 29.06.2012 அன்று விவாதித்தது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

* இந்தியக் குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரைச் சந்தித்துப் பேசி மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சமூக மக்களையும் அமைதிப்படுத்திட வ.புதுப்பட்டி கிராமத்திற்குச் சென்று, இரு சமூக மக்களையும் சந்தித்துப் பேசி, சமாதானப்படுத்தி, அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திட, வ.புதுப்பட்டி கிராம அமைதிக்குழுவை உருவாக்கப்பட்டது.

*             வ.புதுப்பட்டி கிராம அமைதிக்குழு வ.புதுப்பட்டிக்குச் சென்று, இரு தரப்பு மக்களையும் சந்தித்துப் பேசி, மோதல்களுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் பி.லிங்கம், திருவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுப்பாண்டி மற்றும் வ.புதுப்பட்டியில் வாழும் அருந்ததியர் சமூக மக்கள் மற்ற பிற சாதியினர் ஆகிய அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேச வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

*             வ.புதுப்பட்டி கிராமத்தில் நிலவும் இந்த பள்ளர் பறையர் மோதல் சூழ்நிலை தமிழகம் முழுவதும் வேறுபாடான பார்வையை உருவாக்கும் முன்னர், அச்சிக்கலைத் தீர்க்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த செயல் திட்டத்தில் இடது சாரி தோழர்களையும் இணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

வரலாற்றுப் பார்வை

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தின் பசுமையும் செழுமையும் நிறைந்த கிராமம் வ.புதுப்பட்டி. மதுரையிலிருந்து திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் 92 சுமார் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணன் கோயிலிலிருந்து மேற்காக வத்திராயிருப்பு செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கிராமம்.

1985 களில் பேரூராட்சி தகுதியைப் பெற்ற வ.புதுப்பட்டியில், பெருவாரியாக கம்மா நாயுடுகளும் (சுமார் 700 குடும்பங்கள்), அவர்களுக்கு அடுத்து, சாலியர் என்ற சாதியைச் சார்ந்த நெசவாளர்களும் (சுமார் 600 குடும்பங்கள்), அடுத்து பட்டியல் சாதியினராகிய பள்ளர்களும் அடுத்து பட்டியல் சாதியினராகிய பறையர்களும் வலிமைவாய்ந்த சாதியினராக இருக்கிறார்கள். 75 அருந்ததியர்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வ.புதுப்பட்டியில், பறையர்களும், பள்ளர்களும், அருந்ததியர்களும் சாக்கடை தள்ளுவது, மலம் அள்ளிச் சுமப்பது, பிணம் எரிப்பது, சாவுக்குப் பறையடித்து இழவு சொல்வது போன்ற தொழில்களைச் செய்வதில்லை. காலம் காலமாக விவசாயக் குடிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

puthupatti_dalits_640

டாக்டர் அம்பேத்கர் தெரு மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் குழுவினர்

வ. புதுப்பட்டியில் வாழ்ந்து வரும் பறையர்கள் (350 குடும்பங்கள்) குடியிருப்புப் பகுதி ஆர்.சி.தெரு என்றும், பள்ளர்கள் (150 குடும்பங்கள்) வாழ்ந்துவரும் பகுதி அம்பேத்கர் தெரு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு குடியிருப்புகளும் அருகருகே அமைந்துள்ளன. அவை தவிர, காலனி என அழைக்கப்படும் குடியிருப்புப் பகுதியில் 75 பள்ளர் குடும்பங்களும், நடுப்பட்டி என அழைக்கப்படும் பகுதியில் சுமார் 30 பள்ளர் குடும்பங்களும், ஊருக்கு மேற்கே கிறிஸ்தியான்பேட்டை என அழைக்கப்படும் குடியிருப்புப் பகுதியில் 250 பள்ளர் குடும்பங்களும் வசித்து வருகின்றன. கிறிஸ்தியான்பேட்டையில் வசித்துவரும் பள்ளர்களில் பெருமளவு புராட்டஸ்ட்டன்ட் கிறித்தவத்தைப் பின்பற்றுபவர்களும், சிலர் இந்துக்களாகவும் உள்ளனர். மொத்தத்தில் பள்ளர்கள் இந்துக்களாகவும், புராட்டஸ்டன்ட் கிறித்தவர்களாகவும், மிகக்குறைந்த அளவில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

கல்வி

வ. புதுப்பட்டியில், ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, ஆர்.சி. கன்னியர் தொடக்கப்பள்ளி, சிறீரேணுகா உயர்நிலைப்பள்ளி, பாலசுப்பிரமணியர் தொடக்கப்பள்ளி, கிறிஸ்தியான் பேட்டை தொடக்கப்பள்ளி என அய்ந்து பள்ளிகள் உள்ளன. இதில் சிறீ ரேணுகா உயர்நிலைப்பள்ளி தெலுங்கு நாயுடுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. பள்ளர், பறையர், அருந்ததியர் சமூகக் குழந்தைகளை சிறீ ரேணுகா உயர்நிலைப் பள்ளி நிர்வாகம், 2000ஆம் ஆண்டுவரை பள்ளியில் சேர அனுமதிக்கவில்லை. பட்டியல் சமூக மாணவர்கள் ஆர்.சி. தொடக்கப்பள்ளியிலும், மாணவிகள் ஆர்.சி. கன்னியர் தொடக்கப் பள்ளியிலும்தான் பயின்று வந்தனர். சிறீ ரேணுகா உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறையத் தொடங்கியதால், அரசு ஊதியத்துடன் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க முயன்றபோதுதான், ஒரு சில பறையர், பள்ளர் சமூகக் குழந்தைகளை நாயுடுகள் தங்கள் பள்ளியில் சேர்க்கத் தொடங்கினர்.

ஆனாலும் அருந்ததியர் சமூகக் குழந்தைகள் அந்தப் பள்ளியில் படிப்பது அரிதாகவே இருந்தது. இன்றும் அந்நிலை நீடிக்கிறது.

அடுத்து உள்ள ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, 150 ஆண்டுகளுக்கு முன்னால் கிறித்துவ வெளிநாட்டு சேசுசபைத் துறவிகளால் தொடங்கப் பட்டது. வ. புதுப்பட்டியில் பணி செய்தபோது தான் ரோமன் கத்தோலிக்க பைபிளை முதன் முதலில் அருட்பணி. திரிங்கால் என்ற சேசுசபைப் பணியாளர் பைபிளை தமிழில் மொழிபெயர்த்தார். அவரது பெயரில் தொடங்கப்பட்ட இப்பள்ளி கல்வித்தரத்தில் சுற்று வட்டாரக் கிராமங்களில் பெரும் புகழ்பெற்றது. கடந்த நூற்றியம்பது ஆண்டு காலமாக வ. புதுப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் அனைத்துச் சமூகக் குழந்தைகளும் பயிலும் இடமாக இருந்துவந்தது. சுற்றுவட்ட கிராமங்களில் பல பள்ளிகள் தொடங்கப்பட்டதாலும், பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்ற கத்தோலிக்கப் பாதிரியார்கள் முனைப்புக் காட்டாததாலும் இன்றும் அப்பள்ளி நடுநிலைப் பள்ளியாகவே உள்ளது. மேலும் அடிக்கடி கலவரம் நடப்பதாலும் மெல்ல மெல்ல கல்வித்தரம் குறைந்ததாலும் அப்பள்ளி தனது புகழை இழந்து நிற்கிறது.

 2000 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய சாதிக் கலவரத்தால், பள்ளர் சமூகக் குழந்தைகள் 100க்கும் அதிகமானோர் சான்றிதழ்களைப் பெற்று தெலுங்கு நாயுடுகள் நடத்தும் சிறீ ரேணுகா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தனர். "பறையர் பள்ளர் மோதல் ஏற்படும்போது, கத்தோலிக்கக் கிறித்துவப் பாதிரியார்கள், பெரும்பாலும் கிறித்துவ மதத்தில் உள்ள பறையர்களுக்குத்தான் உதவு கிறார்கள். எனவே, அவர்கள் நடத்தும் பள்ளியில் நமது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டாம்' என்ற எண்ணத்தில் பள்ளர்கள் தங்களது குழந்தைகளை ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் சேர்க்க மறுத்து வருகின்றனர். பறையர், பள்ளர் மாணவர்களுக்குள் ஏற்படும் சிறு விளையாட்டுச் சண்டைகளும் பின்னர் பெரிய கலவரங்களாக மாறிய நிகழ்வுகளும் இங்கு உண்டு. அதைத் தவிர்க்கவும் பள்ளர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்கவில்லை. இப்போது பத்துக்கும் குறைவான பள்ளர் சமூக மாணவர்களே இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

தங்கள் குழந்தைகளை ஆர்.சி. பள்ளிக்கு அனுப்பாமல் சிறீ ரேணுகா உயர்நிலைப்பள்ளியில் படிக்க வைப்பதற்கு, பள்ளியில் ஏற்கனவே ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த மூன்று பள்ளர் சமூக ஆசிரியர்கள் பணியாற்றி வந்ததாகவும், அவர்கள் பணி ஓய்வு பெற்றபிறகு அந்த பணி இடங்கள் பள்ளர்களுக்கு ஒதுக்கப்படாமல் பறையர்களே எடுத்துக்கொண்டதாலும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒரு ஆசிரியர்கூட பள்ளர் சமூகத்தவர் அல்லர்; அதனால் தான் பள்ளியிலிருந்து சான்றிதழ்களை வாங்கிவிட்டோம் என்றும் பள்ளர்கள் தெரிவித்தனர். அதன் மூலம் பறையர், பள்ளர் சமூகக் குழந்தைகள் பள்ளிப் பருவத்திலிருந்தே தனித்தனியே பிரித்து வைக்கப்படுகின்றனர். அவர்கள் சேர்ந்து படிக்கும் இடங்களோ அல்லது விளையாடும் இடங்களோ கூட இல்லை என்பதையும் அமைதிக்குழு கண்டறிந்தது.

பறையர் சமூகத்தில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் இருப்பதை கண்டறிய முடிந்தது. 80க்கும் மேற்பட்டோர் பொறியியல், சட்டம், முதுகலை மற்றும் இளங்கலை ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளனர். 40க்கும் அதிகமான மாணவர்கள் இளங்கலை பயின்றுகொண்டிருப்பதையும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் மேல்நிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி படித்துக் கொண்டிருப்பதையும் அறிந்து கொள்ளமுடிந்தது. ரோமன் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு கிடைத்ததாலும், பொதுவான கல்வி குறித்த விழிப்புணர்வு பறையர்கள் மத்தியில் நிலவுவதாலும் கல்வி கற்றோர் அதிகமாக உள்ளதை அறிந்துகொள்ள முடிந்தது. பள்ளர்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு சற்று குறைந்து காணப்படுகிறது. பெருமளவு இளைஞர்களும் இளம் பெண்களும் அருகிலுள்ள ஸ்பின்னிங் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். தொடர் கலவரங்களால் விவசாய வேலைகள் குறைந்து குடும்பங்களில் வறுமை நிலவுவதாலும் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு குறைந்து காணப்படுவதாலும் பெருமளவிலான மாணவர்கள் பள்ளிக் கல்வியுடன் நின்று விடுகின்றனர். ஆயினும் ஒருசிலர் வழக்கறிஞர்களாகவும், பொறியியல் பட்டதாரிகளாகவும், ஆசிரியர்களாகவும் படித்து பணியில் அமர்ந்துள்ளனர்.

பொருளாதார வளங்கள்

1980களுக்கு முன்னால், ஒன்றிரண்டு சிறிய மோதல்களைத் தவிர பெரிய அளவிலான கலவரங்கள் எதுவும் பள்ளர் பறையர் மக்களிடையே ஏற்பட்டதில்லை என்பதை ஊர்ப் பெரியவர்கள் வாக்குமூலத்திலிருந்து அறியமுடிகிறது. அவ்வப்போது இரு சமூக மக்களிடையே உருவாகும் சிறு பிரச்சனைகளை இரு சமூகத்திலும் இருக்கும் ஊர் பெரியவர்கள், நாட்டாண்மைகள், கூடிப் பேசி, சமாதானமாகி சண்டையில்லாமல் வாழ்ந்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

நீண்ட நெடுங்காலமாக, வ.புதுப்பட்டியில் பெரும் நிலவுடைமையாளர்களாக, கால்நடைகளைக் கொண்ட குடிகளாக இருந்த கம்மா நாயுடுகளிடம், பள்ளர்களும் பறையர்களும் வேளாண்மைப் பண்ணையாட்களாக வேலை செய்து, கூலி பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மலைமாடுகளையும், செம்மறி ஆடுகளையும், வாத்துகளையும் கொண்ட 50க்கும் மேற்பட்ட மந்தைகள் கம்மா நாயுடுகள் வசம் இருந்தன. மந்தைகள் ஓரிடத்தைக் கடந்து செல்ல அரைமணிநேரம் ஆகும் அளவிற்கு தெலுங்கு நாயுடுகளிடம் கால்நடை மந்தைகள் இருந்தததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.

தெலுங்கு நாயுடுகள் பஞ்சாயத்து போர்டு, கூட்டுறவு பால் பண்ணைகள், கூட்டுறவுச் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, அரசு நூலகம், அஞ்சலகம் போன்ற அனைத்தையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். அரசு சார்பில் வரும் எந்தவொரு நலத்திட்டத்தையும் நாயுடுகளே பயன்படுத்திக் கொண்டனர். சாதி ஆதிக்கத்தோடும் பெருஞ் செல்வத்தோடும் வாழ்ந்த நாயுடுகளின் மந்தைகளை மேய்த்தும், வேளாண் நிலங்களில் பாடுபட்டும் பள்ளர்

களும் பறையர்களும் பிழைத்தனர். அருந்ததியர்கள் வேளாண்மை வேலைகளுக்கு 1980 வரை அதிகமாக அனுமதிக்கப்படவில்லை. காரணம், மலை மாடுகளுக்கும், உழவு மாடுகளுக்கும் கால் ஆணி பொருத்துவதே பெரும்பாலான அருந்ததிய ஆண்களின் தொழிலாக இருந்தது.

1980 வரை, பெருமளவு பள்ளர்களும் பறையர்களும் பண்ணையாட்களாகவே கால, ஊதிய வரையறைகள் ஏதுமின்றி, கம்ம நாயுடுகளின் நிலங்களில் உழைத்துப் பிழைத்தனர். மழை செழிக்கும் காலங்களில், வேளாண் வேலைகள் தீவிரமாக நடக்கும் போதும், அறுவடைக் காலங்களிலும்தான் வ.புதுப்பட்டி பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் மக்களிடையே பணப்புழக்கம் இருக்கும். வேளாண்மை நடைபெறாத காலங்களில் பள்ளர்களும் பறையர்களும், ஒருசேர தெற்கு மலையேறி விறகு பொறுக்கி அதை சாதி இந்துக்களிடம் விற்று வயிற்றைக் கழுவி வந்தனர். இந்தக் காலகட்டங்களில் பள்ளரிடமும் பறையரிடமும் சமூக, கல்வி விழிப்புணர்வு என்பதே இல்லை என்று சொல்லவேண்டும். தங்களின் திருவிழாக்களில் நாயுடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து மாலை மரியாதை செய்வதும், நாயுடுகள் சொல்லும் கட்சிகளுக்குப் பின்னால் செல்வதும், எத்தகைய உழைப்புச் சுரண்டல் நடந்தாலும் அதை எதிர்த்துக் குரல் எழுப்பாமல் இருப்பதும் என பறையர்களும் பள்ளர்களும் விழிப்புணர்வு அற்றவர்களாக இருந்தனர்.

பிற சாதியினர்களான தேவர்கள், தச்சர்கள், செட்டியார்கள், நாடார்கள், பண்ணாடிகள் மற்றும் அனைத்துச் சாதிகளுமே தெலுங்கு நாயுடுகள் பண்ணைகளில்தான் விவசாய வேலைகளைச் செய்து பிழைத்தனர். ஆனால் அவர்கள் நிரந்தரமான பண்ணையாட்களாக இல்லை. பண்ணையாட்கள் என்றால், ஆண்டை அடிமை உறவு. ஆண்டைக்கு கால நேரம் ஏதும் பார்க்காமல் உழைக்க வேண்டும். ஆண்டை கொடுக்கும் கூலியை வாங்கிக்கொள்ள வேண்டும். அடிமைகளையொத்த வாழ்க்கை. நல்லது கெட்டது அனைத்திலும் ஆண்டைகளின் ஆலோசனையும் இருக்கும், ஆதிக்கமும் இருக்கும். குறிப்பாக தோப்புகள், மலையடிப் புஞ்சைகள் ஆகியவற்றில் குடியிருந்து பண்ணை வேலை பார்த்த பறையர், பள்ளர் பெண்கள் தெலுங்கு நாயுடுகளின் பாலியல் வன்கொடுமைகளுக்கு இரையான கதைகளும் உண்டு.

ஆனால், பறையர்களும் பள்ளர்களும், வேளாண்மைச் சாகுபடியில் நாயுடுகளை விஞ்சும் பட்டறிவைப் பெற்றதாலும், நிலத்தின் மதிப்பை உணரத் தலைப்பட்டதாலும், 1985 களுக்குப் பிறகு, கிராம வேளாண்மையில் கால் பதித்தனர். அதாவது, நாயுடுகளின் வசமிருந்த தோப்புகள், மலைப்புஞ்சைகளை சிறிய அளவில் குத்தகைக்கு எடுத்து பராமரித்து, விளைச்சலைப் பங்கிட்டுக் கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் போக்கு அதிகரித்ததாலும், 1990க்குப் பிறகு ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களாலும், பண்ணையாட்களாக வேலை செய்வதையும் மலை மாடுகள் மேய்த்துப் பிழைப்பதையும் பள்ளர்களும் பறையர்களும் கைவிடத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் அருந்ததியர்கள் நாயுடுகளின் பிடியிலிருந்து முற்றிலுமாக விடுபடவில்லை.

அநேகமாக, 1990களில் தெலுங்கு நாயுடுகளிடம் பண்ணைவேலை செய்து பிழைப்போர் எவருமில்லை என்றளவுக்கு நிலைமைகள் மாறின. தெற்கு மலையேறி விறகெடுத்துப் பிழைக்கும் அவலம் மெல்ல மெல்ல மறைந்தது. மலையடிப் புஞ்சைகளையும் மாந்தோப்புகளையும் காவல்காத்த அல்லது பண்ணைவேலை பார்த்த பறையரிடமோ அல்லது பள்ளரிடமோ விட்டுவிட்டு தெலுங்கு நாயுடுகள் குடிபெயர்ந்தனர். விவசாயம் பார்க்க முடியாமல் தவித்த தெலுங்கு நாயுடுகளிடம் இருந்த வயல்களை பறையர்களும், மலையடித் தோப்புகளையும், மலைப்புஞ்சைகளையும் பள்ளர்களும் குத்தகைக்கு எடுத்து, விவசாய நிலங்களைத் தற்காலிகமாகத் தங்கள் வசப்படுத்தினர்.

விழிப்புணர்வு

1990களுக்கு முன்பிருந்தே பிற சாதி இந்துக்களை குறிப்பாக தெலுங்கு நாயுடுகளை எதிர்த்துப் பேசுவதும், அவர்களோடு சரிக்குச்சரி நின்று வாதாடுவதும், சில நேரங்களில் அடி தடியில் இறங்குவதும் என பறையர் இளைஞர்கள் தீவிரம் காட்டினர். ஆனால் அவையெல்லாம் சமூக மீறல்களாகக் கருதப்பட்டு சண்டையில் ஈடுபட்டவர்கள் ஊர் விலக்கம் செய்யப்பட்டனர். 1987 இல் தெலுங்கு நாயுடுகளோடு நடத்திய சண்டையில் பறையர் இளைஞர்கள் வ.புதுப்பட்டி பேருந்து நிலையத்தில் சைக்கிள் கடை வைத்திருந்த 40 வயதுடைய தெலுங்கு நாயுடுவை இரவு நேரத்தில் அவர் படுத்திருந்த கட்டிலோடு சேர்த்துக் கட்டிக் கொண்டுபோய் கிணற்றில் வீசினர். அது மிகப்பெரும் கலவரமாக மாறி, பறையர்களுக்கு விவசாய நிலங்களில் வேலைவெட்டி கொடுக்கக்கூடாது என்று தெலுங்கு நாயுடுகள் ஊர்க் கட்டுப்பாடு வைத்துள்ளனர். பின்னர் அந்தக் கட்டுப்பாட்டிற்கு தெலுங்கு நாயுடுகளிடமே ஆதரவு இல்லாமல் பின்னர் விலக்கிக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள்.

தெலுங்கு நாயுடு எதிர்ப்புணர்வு, பள்ளர் சமூக இளைஞர்கள் மத்தியில் குறைவாகவே இருந்தது. சுற்றுவட்டக் கிராமங்களில் பள்ளர் சமூகத்தவர்கள் தோப்புகளுடனும் வயல்களுடனும் செல்வாக்குடனும் வாழ்ந்து வந்த போதிலும், அவர்களின் உதவிகள் வ.புதுப்பட்டி பள்ளர் சமூகத்திற்குக் கிடைக்க வில்லை. எனவே, பெரும்பாலும் வ.புதுப்பட்டி தெலுங்கு நாயுடுகளையே நம்பியிருக்கவேண்டிய நிலை பள்ளர்களுக்கு ஏற்பட்டது. காடுகரைகளில் பறையர் சமூக இளைஞர்கள் சிலர் நாயுடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டதாலும், அவர்களை எதிர்த்துப் பேசியதாலும், சில நேரங்களில் அடிதடியில் ஈடுபட்டதாலும், நாயுடுகள் விவசாய வேலைகளை பெருமளவு பள்ளர்களுக்கு அளித்தனர். பறையர் பள்ளர் மோதலைக் தூண்டிவிடும் வேலையை நாயுடுகள் இந்தக் கால கட்டத்தில்தான் செய்யத் தொடங்கியுள்ளனர்.

கலவரப் பின்னணிகள்

வ.புதுப்பட்டி கிராமத்தில் வசித்த பிற சாதியினரோடு அதிகமான மோதல் போக்கைப் பள்ளர்கள் கடைப்பிடிக்கவில்லை. குறிப்பாக, நாயுடுகளோடும், நாயுடுகளுக்கு அடுத்த நிலையில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் சாலியர் என்றழைக்கப்படும் நெசவாளர் மக்களுடன் பள்ளர்கள் மோதிக்கொள்ளவில்லை. 1968 இல், கல்லறை நிலத்தை சாலியர்கள் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டார்கள் என்று, ஒரு மிகப்பெரும் மோதலை சாலியர்களுடன் பறையர்கள் நடத்தியுள்ளனர். அந்தக் கலவரத்தில் ரிசர்வ் போலிஸ் ஊருக்குள் புகுந்து அடித்த அடியில், இனிமேல் ஊரோடு கலவரம் செய்வதே இல்லை என்று முடிவுக்கு வந்ததாக சாலியர் சமூகத்து பெரியவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் வ. புதுப்பட்டி பறையர் பள்ளர்களுடன் நடந்த ஆதிக்கப் போட்டியிலிருந்து சாலியர்கள் முற்றிலும் பின்வாங்கிக் கொண்டனர். தேவர்கள், செட்டியார்கள், நாடார்கள், ஆசாரியார்கள், கோனார்கள், பனையேறிகள் என அனைத்துச் சாதிகளும் மிகச் சிறுபான்மையினராக இருப்பதால் பறையர்களுடனும் பள்ளர்களுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. எனவே, பொருளாதாரத்திலும், கல்வியறிவிலும் பின்தங்கியிருந்த போதிலும் ஊர் வளங்கள் பெருமளவு சாதி இந்துக்கள் வசமே இருந்த போதிலும், பொது இடங்களில் பள்ளர் பறையர்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்துள்ளது.

1985, 1986 ஆம் ஆண்டுகளிலும், பறையர் பள்ளர்களுக்கிடையே மோதல்கள் நடந்துள்ளன. அதற்குரிய காரணங்கள் ஏதும் குறிப்பிட்டுச்சொல்லத் தகுந்தவைகளாக இல்லை. குடிபோதையில் சிலர் செய்த சில்லறைத் தவறுகள் தீர்க்கப்படாமல் விடப்பட்டதால் இந்த இரண்டு மோதல்களும் நடந்துள்ளன. இரு சமூகத்திலும் நாட்டாமை, ஊர்க்கூட்டம், ஊர்க்கட்டுப்பாடு போன்றவை உயிர்த்துடிப்போடு இயங்கிக் கொண்டிருந்த போதிலும், தவறு செய்தவர்கள் ஊர்ப் பெரியவர்கள் விதித்த தண்டனையை ஏற்காத காரணத்தால், அந்த இரண்டு கலவரங்களும் நடந்துள்ளதை அறிய முடிந்தது.

ஆனாலும், கடந்த 28 ஆண்டுகளில் சீரான இடைவெளியில், கலவரங்கள் நடந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. 1997க்குப் பிறகு, நிலைமைகள் இன்னும் தீவிரமடைந்தன. அப்போது, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வ. புதுப்பட்டி கிராமத்தில் பறையர் பள்ளர் குடியிருப்புப் பகுதிகளில் தங்கள் கிளைகளைத் தொடங்கின. பறையர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும், பள்ளர்கள் புதிய தமிழகம் கட்சியிலும் இணைந்தனர். அதுவரை சாதிய மோதலாலாக இருந்த வ. புதுப்பட்டி பள்ளர் பறையர் மோதல், இன்னும் கூர்மையடைந்து இரு உட்சாதிக் கட்சிகளின் மோதலாக உருவெடுத்தது. சுவரெழுத்து விளம்பரம் எழுதுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும் போட்டி ஏற்பட்டு இரு சாதி இளைஞர்களுக்கும் அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. பின்னர் அதுவே சுவரெழுத்தை அழிப்பது, சுவரொட்டியைக் கிழித்தெறிவது போன்ற குற்றச்செயல்களாக மாறின.

தமிழகத்தின் தெற்கு எல்லையில் ஒரு குக்கிராமத்தில் நடந்து கொண்டிருந்த அந்த கட்சி மோதலை புதிய தமிழகம் தலைமையும், விடுதலைச் சிறுத்தைகள் தலைமையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இரு சாதி இளைஞர்களின் சுய சாதி வெறி உணர்வை தவறெனச் சுட்டிக்காட்டி, சாதி உணர்விலிருந்து அவர்களை விடுவிக்கும் கோட்பாடுகளுடன் அந்தக் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கவில்லை. இரண்டு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளும் பக்குவமற்றவர்களாக இருந்ததினால், வ.புதுப்பட்டி பள்ளர் பறையர்களிடையே மிக வேகமாக வளர்ந்து வந்த சுயசாதி வெறியுணர்வைக் கட்டுப்படுத்தி நல்வழி காட்ட அவர்களால் இயலாமற் போனது; அல்லது வ.புதுப்பட்டியில் உருவாகிக்கொண்டிருந்த பள்ளர் பறையர் மோதல் சூழ்நிலையை அவர்கள் அக்கறையோடு கவனிக்கவில்லை.

அம்பேத்கர் திருவுருவச்சிலை

ஏற்கனவே 198586 களில் நடந்த பறையர் பள்ளர் மோதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருட்சேதாரங்கள், வழக்குகள் ஆகியவை இரு தரப்பு மக்களிடையே வன்மத்தை வளர்த்து வந்தன. கட்சி அரசியல் சேர்ந்துகொள்ளவே, மோதல் உணர்வு மேலும் புதிய பலம் பெற்றதாக உருவெடுத்தது. இதன் விளைவாக, வ. புதுப்பட்டி பேருந்து நிலையத்தில் பறையர், பள்ளர், அருந்ததியர் ஆகியோர் இணைந்து நிறுவிய டாக்டர் அம்பேத்கர் சிலையை பறையர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அதற்கு, பள்ளர்கள் சிலை நிறுவ தாங்கள் அளித்த நன்கொடையை திரும்பப் பெற்றுக்கொண்டனர் என்றும், அம்பேத்கர் சிலைக்கு பள்ளர்கள் மரியாதை செய்வதை நாங்கள் ஒருபோதும் தடுக்கவில்லை என்றும் பறையர்கள் வாதிடுகிறார்கள். ஆயினும் பறையர் சமூக மக்கள் டாக்டர் அம்பேத்கரின் சிலை இருக்கும் பீடத்தில் விடுதலைச் சிறத்தைகள் கட்சியின் வண்ணத்தைப் பூசியிருந்ததால், பள்ளர்கள் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வதை தவிர்த்து விட்டனர்.

டாக்டர் அம்பேத்கருக்கு வ. புதுப்பட்டி பேருந்து நிலையத்தில் சிலை நிறுவும் முயற்சியை பறையர் சமூக இளைஞர்கள் முன்னெடுத்ததாலும், சிலை நிறுவுவதற்கு பள்ளர்கள் தாங்கள் அளித்த நிதியைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாலும், அருந்ததியர்கள் பங்களிப்பு பெயரளவில் இருந்ததாலும், சிலை வைத்த பிறகு அதைப் பராமரிக்கும் வேலையை பறையர் இளைஞர்களே செய்து வந்ததாலும், பறையர் சமூகத்தவர் சிலையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கிளையைத் தொடங்கும் முன்னரே, பறையர் பேரவை பெயர்ப்பலகையை சிலையருகில் பறையர்கள் நிறுவியிருந்தனர். அதற்கு பள்ளர்கள் மத்தியிலிருந்தும் அருந்ததியர் மத்தியிலிருந்தும் பெரிதாக எதிர்ப்பு எதுவும் வரவில்லை. பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கிளையைத் தொடங்கிய பின்னர், பறையர் பேரவை என்பதை மாற்றி விடுதலைச் சிறுத்தைகள் பெயர்ப்பலகையை பறையர்கள் நிறுவிக்கொண்டனர்.

1999இல் வ.புதுப்பட்டி பேருந்து நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையருகிலேயே 40அடி உயரத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கொடிக் கம்பத்தை பறையர் இளைஞர்கள் சிலர் நிறுவினர். அதே போல, வ.புதுப்பட்டி பேருந்து நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையிலிருந்து 30 அடி தொலையில் புதிய தமிழகம் கட்சிக் கொடிக் கம்பத்தை பள்ளர் சமூகத்தவர் நிறுவினர். இந்தக் கொடிக் கம்பப் போட்டி, பெரும் பதற்றத்தையும் மிகப்பெரும் கலவரத்திற்கான சூழலையும் பறையர் பள்ளரிடையே உருவாக்கியது. அந்தப் பதற்றமான சூழ்நிலையிலும், மாவட்டக் காவல் துறை அந்த கிராமத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால், 1999 ஆம் ஆண்டு பறையர் பள்ளர் சமூகத்தவரிடையே பெரும் மோதல் ஏற்பட்டு, இரண்டு தரப்பிலும் சுமார் 7 பேர்கள் கொல்லப்பட்டனர். காவல்துறையின் மிகக் கடுமையான நடவடிக்கைகளினால் கலவரம் கட்டுக்குள் வந்தது. இந்தக் கலவரத்திற்குப் பிறகே வ. புதுப்பட்டியில் பறையர் பள்ளர் மோதல் நடப்பது வெளி உலகிற்குத் தெரிய வந்தது. ஆனாலும் இரு சமூக மக்களிடையே அமைதியை நிலைநாட்ட மாநில அரசும், ஆதிதிராவிடர் நலத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

அதன் பின்னரும் கலவரங்களும் படுகொலைகளும் நீடித்தன. 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் பறையர் பள்ளர் மோதல் மேலும் வலுப்பெற்றது. இந்தக் கலவரங்களில் வ.புதுப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பள்ளர்களும் பறையர்களும் சேர்ந்துகொண்டனர். இதனால், வ. புதுப்பட்டி கிராமம் அமைந்துள்ள வத்திராயிருப்பு ஒன்றியம் முழுவதும் பறையர் பள்ளர் மோதல் சூழ்நிலை உருவானது. வ.புதுப்பட்டியைச் சுற்றியுள்ள கூமாபட்டி, நெடுங்குளம், கான்சாபுரம், சுந்தர பாண்டியம், வத்திராயிருப்பு போன்ற கிராமங்களில் பறையர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருக்கின்றனர். அந்தப் பகுதிகளிலெல்லாம் பதற்றம் மேலும் அதிகரித்தது. சிறு சிறு மோதல்களும் நடந்துள்ளன.

நீடிக்காத ஒற்றுமை

2001லிருந்து 2010 வரை பள்ளர் பறையர் மோதல் எதுவும் ஏற்படவில்லையென்றாலும், அவ்வப்போது சிறு சிறு தகராறுகள் நடந்துகொண்டேயிருந்தன. ஆயினும், 2003 ஆம் ஆண்டு நடந்த பேரூராட்சித் தேர்தலில், வ.புதுப்பட்டி பேரூராட்சி தனித் தொகுதியாக மாற்றப்பட்டதால், திடீர் மாற்றமாக அதிசயக்கத்தக்க வகையில் பறையர்களும் பள்ளர்களும், அருந்ததியர்களும் இணைந்து, நாயுடு சமூக வேட்பாளரை எதிர்த்து, பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த அமராவதி என்ற பொதுவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் வெற்றியும் கண்டனர். அப்போது, சுழற்சிமுறையில் வேட்பாளர்களை நிறுத்தி மூன்று சமூகத்தவரும் பேரூராட்சிப் பதவியைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று வாய்மொழியாகப் பேசி முடிக்கப்பட்ட தாகவும், அந்த ஒப்பந்தத்தின்படி முதலில் பள்ளர் சமூகத்தைச் சார்ந்த பெண் ஒருவரை நிறுத்தவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும், அந்த வாய்மொழி ஒப்பந்தம் அடுத்து வந்த தேர்தலில் பள்ளர்களால் மீறப்பட்டதாகவு பறையர் சமூக மக்கள் தெரிவித்தனர்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகும், பறையர் பள்ளர் சமூகத்தவரிடையே தனி நபர் மோதல்கள் நடந்து கொண்டேயிருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சித் தலைவரின் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் இரு சமூக மக்களிடையே கசப்புணர்வு அதிகரித்து வந்துள்ளது. மேலும், காலங்காலமாக தாங்கள் அனுபவித்து வந்த வ.புதுப்பட்டி பேரூராட்சிப் பதவியை பறையர்களும் பள்ளர்களும் சேர்ந்து பறித்துக் கொண்டதைப்பொறுக்காத தெலுங்கு நாயுடுகள், இரு சமூகத்தவரிடையே மோதல்களைத் தூண்டிவிட்டனர். அதனால், அவ்வப்போது ஏற்பட்ட சிறுசிறு தனிநபர் மோதல்கள் பறையர், பள்ளர், சமூகத்தவரிடையே கூடிவந்த ஒற்றுமையை சிதைத்தன. இதனால், அடுத்து வந்த பேரூராட்சித் தேர்தலில் முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, பறையர் சமூகத்தை சார்ந்தவர் பொது வேட்பாளராக வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. பள்ளர்கள் தனியாக வேட்பாளரை நிறுத்தி நாயுடுகளின் உதவியோடு வெற்றிபெற்றுள்ளனர். இந்த வெற்றி பறையர் பள்ளர் பகைமை உணர்வை மேலும் மேலும் கூர்மைப்படுத்திக்கொண்டேயிருந்தது.

மீண்டும் கலவரங்கள்

இதனால், 2010 ஆம் ஆண்டு மீண்டும் பறையர், பள்ளர் கலவரம் வெடித்தது. இக்கலவரத்தால் வத்திராயிருப்பு ஒன்றியம் முழுவதிலும் பறையர், பள்ளர் மோதல் சூழ்நிலை உருவாகியது. ஏராளமானோர் ஊரைவிட்டு வெளியேறினர். 200க்கும் அதிகமானோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புதுப்பட்டியுடன் நிற்காமல், அதைச்சுற்றியுள்ள கிராமங்களான சுந்தரபாண்டியம், செம்பட்டி, கோட்டையூர், கூமாபட்டி, கான்சாபுரம், நெடுங்குளம் போன்ற பகுதிகளிலும் பள்ளர் பறையர் சமூக மக்களிடையே பதற்றம் நீடித்தது. மோதல்களும் நடந்தன. ஆனாலும் காவல்துறையினரின் நடவடிக்கைகளால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்தும் கலவரச் சூழல் கொஞ்சமும் தணியாமல் நீடித்தது.

வ.புதுப்பட்டியில் கலவரம் ஏதும் நடக்காமல் இருந்தபோதிலும், கிருஷ்ணன்கோயில் என்ற இடத்தில் வ.புதுப்பட்டியைச் சார்ந்த மேலும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். வ. புதுப்பட்டியில் மீண்டும் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில் ஒருவர் படுகாயமடைந்தார். 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து கலவரச்சூழல் நீடித்துக் கொண்டே இருந்தது. இதனால் சில அற்பத் தகராறுகளை முன்வைத்து, 2012 சூலை 24 அன்று மீண்டும் பறையர்களும் பள்ளர்களும் ஒருவருக்கொருவர் கல்வீச்சில் ஈடுபட்டனர். வெளி ஊர் ஆட்களும், வெடிகுண்டுகளும் தாக்குதலுக்குத் தயாராக இருந்ததாக பெரும் புரளி கிளம்பியதாக மக்கள் தெரிவித்தனர். ஏற்கனவே பாதுகாப்பில் இருந்த காவலர்கள் கலவரச்சூழல் குறித்த தகவல்களை உயரதிகாரிகளுக்குத் தெரிவித்ததால், பெரும் போலிஸ் படை குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கலவரத்தில் பயன்படுத்துவதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளில் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியதால், குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டன.

உருமாறும் கலவரம்

கலவரத்தில் பயன்படுத்துவதற்காக வெடிகுண்டுகளை பெருமளவில் சேகரித்து வைத்திருந்தது கண்டறியப்பட்ட பிறகு, வ.புதுப்பட்டியில் சூழ்நிலை இன்னும் மோசமடைந்துள்ளதை அமைதிக் குழுவினர் கண்டறிந்தனர். வெளி ஊரில் உள்ள சக்திகளின் உதவிகள் இல்லாமல் வெடிகுண்டுகளை வாங்கவும், கிராமத்திற்குள் கொண்டுவரவும் சாத்தியமில்லை. எனவே, வ.புதுப்பட்டி கலவரத்தில் வெளி ஊர் ஆட்களின் பங்களிப்பு, இந்தச் சிக்கலை மேலும் கடுஞ்சிக்கலாக மாற்றியுள்ளது. கலவரம் செய்வதற்கான ஆயுதங்களைக் கொடுக்க முன்வந்துள்ள சக்திகள், கருத்தியல் தளத்திலும் சிந்தனை வழியாகவும் மோதலை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கப் போகின்றன. எனவே, வெறும் உள்ளூர் மோதலாக இருந்த வ. புதுப்பட்டி பறையர் பள்ளர் மோதல் இப்போது உருவம் மாறி நிற்கிறது.

2010 ஆம் ஆண்டு மே மாத மத்தியில் தொடங்கிய கலவரம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் எப்போதும் கலவரப் பீதியுடன் மக்கள் வாழ வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வ. புதுப்பட்டி கிராமத்தில் விவசாய வேலைகள் மிகவும் அரிதாக நடைபெறுகிறது. அதனால் வேலைவாய்ப்பு முற்றிலும் முடங்கிவிட்டதாகவும், வறுமையும் வாழ்க்கை குறித்த பிடிப்பின்மையும் மக்களிடையே அதிகரித்திருப்பதாகவும் எப்போதும் கலவரம் குறித்துதான் மக்கள் அடிக்கடி விவாதித்துக் கொள்கிறார்கள் என்றும், தனியாக பகல் நேரத்திலும்கூட வேலைக்குச் செல்ல முடிய வில்லை என்றும் கிராமத்தின் கடைவீதிகள், பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் நடமாட முடியவில்லை யென்றும் எப்போது, யார் தாக்குவார்களோ என்ற அச்சம் கிராமத்தில் நீடித்துவருகிறது என்றும் இரு தரப்பு மக்களும் தெரிவித்தனர்.

மக்களின் மனநிலை

கலவரங்களுக்கு வ. புதுப்பட்டியில் வாழும் பறையர் பள்ளர் மக்கள் அனைவருமே காரணம் அல்லர். பெரும்பான்மையான மக்கள் கலவரங்களையும் மோதல்களையும் கண்டு வெறுப்புணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். மோதல்களை நீடிக்கச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு, கலவரத்தை இழுத்துவிட்டுவிட்டு, ஊரைவிட்டுத் தப்பித்துவிடுகின்ற சக்திகளே தொடர் மோதல்களுக்குக் காரணம் என்பதை இருதரப்பு மக்களும் அமைதிக்குழுவிடம் தெரிவித்தனர். அத்தகையோர் யார் என்பதைக் கண்டறிய பெரிய முயற்சிகள் ஏதும் தேவையில்லை. அத்தகையோர் யார் என்பதை மக்களே வெளிப்படையாகப் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மக்களே அமைதிக்குழுவிடம் வலியுறுத்திக் கூறினர்.

பள்ளர் பறையர் சமூக மக்கள் தவிர, வ. புதுப்பட்டி கிராமத்தில் வாழ்ந்து வரும் அனைத்துச் சாதி மக்களும் நடந்துகொண்டிருக்கும் தொடர் மோதல்களினால் பெரிதும் அல்லல்பட்டு, வெறுப்புணர்வோடு வாழ்ந்து வருவதை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும், மோதல்கள் ஏற்படு முன்னர் இரு சமூகத்தவரையும் சமாதானம் செய்துவைக்கும் முயற்சிகளில் இதுவரை எந்தச் சாதி மக்களும் ஈடுபடவில்லை. மற்ற சமூகத்தவரின் பேச்சுக்கு பறையர்களும் பள்ளர்களும் மதிப்பளிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தால் அந்த முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை எனப் பிற சமூக மக்கள் அமைதிக்குழுவிடம் தெரிவித்தனர்.

எனவே, பறையர் பள்ளரிடையே சிறு சிறு பிரச்சனைகளை அவ்வப்போது தீர்த்து வைத்து, அதே சம்பவங்கள் மீண்டும் நடக்காதபடி கண்காணித்து, தொடர்ந்து குற்றம் இழைப்போரை காவல்துறையில் ஒப்படைத்துத் தண்டிக்கும் தொடர் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டியது மிக அவசியமாக உள்ளது என்றும், அதே நேரத்தில் இரு சமூக மக்களிடம் நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க, பல்வேறு தளங்களில் பணியாற்றும் ஒரே சிந்தனையுடைய, ஜனநாயக முற்போக்கு சக்திகளைக் கொண்ட நல்லிணக்க அமைதிக்குழு ஒன்றும் வ.புதுப்பட்டி கிராமத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் வ.புதுப்பட்டி கிராம பள்ளர் பறையர் சமூக மக்கள் விரும்புகின்றனர்.

வ. புதுப்பட்டி கிராம அமைதிக்குழுவின் களப்பணி பகிர்வுகள்

22.7.2012 அன்று காலை 10 மணிக்கு வ.புதுப்பட்டி கிராம அமைதிக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் திருவில்லிப்புத்தூரில் நடைபெற்றது. கிராமத்திற்குள் செல்லும் முன்பு நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவில்லிப்புத்தூர் அமைதிக் குழுவினரும், தலித் அமைப்புகளின் பிரதிநிதிகளும், இடதுசாரி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். அவர்களுள் அம்பேத்கர் பண்பாட்டுப் பாசறையைச் சார்ந்த மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சார்ந்த ஞானகுரு, கே. எஸ். முத்து (அம்பேத்கர் பண்பாட்டுப் பாசறை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அர்ஜýனன், சமூகச் செயல்பாட்டாளர் பொது மேடையைச் சார்ந்த வழக்கறிஞர் பால்ராஜ், வ.புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த பாலசுப்ரமணியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி, இந்தியக் குடியரசுக் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர் பொறியாளர் சாந்தகுமார், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சாந்தகுமார், பொன்னுச்சாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவில்லிப்புத்தூர் ஒன்றியச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

கலந்தாய்வுக் கூட்டம் முடிந்ததும், 20 பேர்களைக் கொண்ட அமைதிக் குழு, வ.புதுப்பட்டி கிராமத்திற்குச் சென்றனது. முதலில், வ.புதுப்பட்டி கிராமத்தின் இந்திராநகர் குடியிருப்பில் இருக்கும் பள்ளர் மக்களை அமைதிக்குழு சந்தித்தது. அவரவர் வீடுகளில் இருந்த மக்களிடம் சென்று அமைதிக்குழுவினர் பேசினர். சந்தித்த அனைவரிடமும் அமைதியாக வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறும்படி கேட்டறிந்தனர். பின்னர் ஊரின் கடைவீதிக்கு அருகில் இருந்த டாக்டர் அம்பேத்கர் தெருவில் வசித்த பள்ளர் சமூக மக்களை அமைதிக்குழுவினர் சந்தித்தனர். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என சுமார் நூறு பேர்களுக்கு மேல் திரண்டிருந்த மக்களிடம் அமைதிக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டாக்டர் அம்பேத்கர் தெருவின் சாவடியில் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையில், அமைதிக்குழு முயற்சிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். 30 ஆண்டுகாலமாக நடந்துவரும் மோதலுக்கு முடிவுகட்டி ஊரில் அமைதியை நிலைநாட்டிட அமைதிக்குழு உதவவேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தனர். அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை மக்களிடம் அமைதிக்குழு கேட்டறிந்தது. 24ஆம் தேதி, தலைவர்கள் பங்கேற்கவிருக்கும் அமைதிக் கூட்டத்தில் பங்கேற்கும்படியும், குறைந்தது 10 பிரதிநிதிகளையேனும் அமைதிக்கூட்டத்திற்கு அனுப்பும் படியும் அந்த 10 பிரதிநிதிகளின் பெயர்ப் பட்டியலைக் கொடுக்கும்படியும் அமைதிக்குழுவினர் மக்களைக் கேட்டுக்கொண்டனர். மக்கள் அளித்த 10 பேர் கொண்ட பெயர்ப் பட்டியலைப் பெற்றுக் கொண்டு மக்களிடம் விடைபெற்று, டாக்டர் அம்பேத்கர் தெருவை ஒட்டியே உள்ள ஆர்.சி.தெருவிற்கு (பறையர் குடியிருப்பிற்கு) அமைதிக்குழுவினர் சென்றனர்.

அமைதிக்குழுவினர் வருகையை எதிர்பார்த்திருந்த ஆர்.சி. தெரு மக்கள் பெருமளவில் கூடினர். ஆர்.சி.தெரு பறையர் சாவடியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். தொடக்கத்தில் ஆவேசமாகப் பேசிய இளைஞர்கள் அமைதிக்குழுவினர் பேசத்தொடங்கியதும் அமைதியானார்கள். பக்குவமான கருத்துகள், ஊர்ப் பெரியவர்களிடமிருந்து வெளிப்பட்டன. இரு சமூகமும் முன்னர் ஒற்றுமையாக வாழ்ந்தது போல, இனிவரும் காலங்களிலும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறோம் என்று விருப்பம் தெரிவித்தனர். அமைதிக் குழுவினரின் கருத்துகளைச் செவிமெடுத்துக் கேட்ட மக்கள், 24ஆம் தேதி அமைதிக் கூட்டத்தில் பங்கேற்கும் 10 பிரதிநிதிகளின் பட்டியலை அளித்தனர்.

தீண்டாமைச் சுவர்?

பின்னர் மக்களிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆர்.சி.தெரு மக்களை தங்கள் தெருப்பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க வ.புதுப்பட்டி சாலியர் சமூக மக்கள் கட்டியுள்ள தடுப்புச்சுவரைப் பார்வையிட அமைதிக்குழு சென்றது. கிராமம் உருவான காலத்திலிருந்து, ஆர்.சி. தெருவைச் சார்ந்த பறையர்கள் மற்றும் சாலியர் சமூகத்தவரில் பத்திருபது குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பொதுவழியைக் தடுத்து, சாலியர் சமூகத்தவர் எழுப்பியுள்ள தடுப்புச் சுவரை அமைதிக் குழுவினர் பார்வையிட்டனர். கலவரச் சூழலில் ஊரைவிட்டு வெளியேறிய நேரத்தில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சாலியர்கள் தடுப்புச் சுவரைக் கட்டிக்கொண்டார்கள் என்றும், உண்மையில் இது தீண்டாமைச் சுவர்தான் என்றும், அச்சுவரை இடிப்பதற்கு அமைதிக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தடுப்புச் சுவரால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுவர் அருகே வாழ்ந்துவரும் பறையர் மக்கள் அமைதிக்குழுவிடம் தெரிவித்தனர்.

அதேபோல, தடுப்புச் சுவரால் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல முடியாமல் தவிக்கும் சாலியர் சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலரை அமைதிக்குழு சந்தித்துப் பேசியது. சுவரைக் கட்ட வேண்டாம் என்று நாங்கள் எதிர்ப்புக் காட்டினோம் ஆனாலும் கட்டியுள்ளார்கள் என்றும், தடுப்புச்சுவர் எங்களின் சுதந்திரமான நடவடிக்கைகளைப் பாதித்துள்ளது, எனவே அந்தச் சுவரை இடிக்க வேண்டும் என்றும், தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள அந்த வழி, காலம் காலமாக அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்த பொதுவழி என்றும் சாலியர் சமூக மக்களில் சிலர் அமைதிக் குழுவிடம் தெரிவித்தனர்.

தேவாலயத்தின் பங்கு

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, ரோமன் கத்தோலிக்கக் குரு அருட்பணி. மார்ட்டின் அவர்களை அமைதிக் குழுவினர் சந்தித்துப் பேசினர். அருட்பணி. மார்ட்டின் தங்கியிருக்கும் கட்டடம் முன்னூறாண்டு காலம் பாரம்பரியம் மிக்க து. அந்த வளாகத்தில்தான், பறையர் சமூக மக்கள் வழிபாடுகள் நடத்தும் திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில் நாள்தோறும் இரவும் பகலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்புத் திருப்பலி நடைபெற்று வருகின்றன. திருவிழா நாட்களில் வத்திராயிருப்பு ஒன்றியத்தில் வாழும் ரோமன் கத்தோலிக்க மக்கள் அந்த ஆலயத்தில் திரண்டுவந்து திருப்பலியில் பங்கேற்

பது வழக்கமாகும். வ.புதுப்பட்டி பறையர் சமூகத்தவர் வழிபாடுகள் நடத்தும் அந்த ஆலயம், அவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பள்ளர் குடியிருப்பு மற்றும் அதையொட்டியுள்ள கிராமத்தின் பொதுக் கடைவீதி, செட்டியார்கள் சமூகக் குடியிருப்பு, தேவர் சமூக குடியிருப்பு ஆகியவற்றைக் கடந்துதான் பறையர்கள் வழிபாடு நடத்தும் இடத்திற்குச் செல்ல முடியும்.

வ.புதுப்பட்டிக்கு வந்து பணிப் பொறுப்பேற்ற தொடக்க காலங்களில், அனைத்துச் சமூக மக்களையும் ஒருங்கிணைத்து ஒரே மேடையில் பள்ளி விழாக்களை நடத்தியதாகவும், அத்தகைய பொதுவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்றால், அமைதிச் சூழ்நிலையை உருவாக்கலாம் என்றும் அருட்பணி. மார்டின் ஆலோசனை கூறினார். பறையர் பள்ளர் உட்பட அனைத்துச் சமூக குழந்தைகளும் படித்து வந்த ஆர்.சி. பள்ளியில் இப்போது பறையர் சமூக மாணவர்களே படித்து வருகின்றனர் என்றும், குழந்தைகளின் மனதிலேயே வேற்றுமை உணர்வு விதைக்கப்படுகிறது என்றும், அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் அருட்பணி. மார்ட்டின் தெரிவித்தார். குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் பணியாற்றும் தன்னார்வக் குழுக்கள் இந்த கிராமத்திலும் பணி செய்ய முன்வரவேண்டும் என்று அருட்பணி. மார்ட்டின் வேண்டுகோள் விடுத்தார்.

கலவர நேரங்களில் பறையர்களுக்கு மட்டுமே கிறித்தவப் பாதிரியார்கள் உதவுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த அருட்பணி மார்ட்டின், கடந்த காலங்களில் இரண்டு சமூக மக்களுக்கும் சேர்த்துதான் உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். குறிப்பாக, 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரும் கலவரத்தில் மதுரை மறைமாவட்ட குருக்கள் பள்ளர்கள் குடியிருப்புப் பகுதிக்குள் சென்று உதவிகள் வழங்கினர் என்றும், இருபதுக்கும் மேற்பட்ட பள்ளர் சமூகத்தவர் ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களாக இருக்கிறார்கள் என்றும் எனவே, பள்ளர், பறையர் சமூக மக்களிடையே எவ்வித பாகுபாட்டுணர்வுடனும் தாங்கள் நடந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். ஊரில் அமைதியை ஏற்படுத்த கத்தோலிக்க கிறித்துவ மறைமாவட்டம் சார்பில் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் அருட்பணி. மார்ட்டின் உறுதியளித்தார்.

பின்னர் வ.புதுப்பட்டி கிராமத்தின் மேற்கு எல்லையான கிறிஸ்தியான் பேட்டை என அழைக்கப்படும் பள்ளர் குடியிருப்பிற்கு அமைதிக் குழு சென்றது. 100க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து அமைதிக்குழுவினருடன் ஆர்வத்துடன் பேசினர். அமைதி நடவடிக்கைகளுக்கு தங்களின் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு என்றும், அமைதி நடவடிக்கைகளில் திறந்த மனதோடு பங்கேற்பதாகவும் மக்கள் தெரிவித்தனர். அமைதிக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகள் மூன்று பேரின் பட்டியலையும் அமைதிக் குழுவிடம் அளித்தனர்.

அருந்ததியர் பார்வை

மறுநாள், வ.புதுப்பட்டி கிராமத்திற்கு மீண்டும் அமைதிக்குழு சென்றது. அங்கு அருந்ததியர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று, வ. புதுப்பட்டி கிராமத்தில் நடந்து கொண்டிருக்கும் பறையர் பள்ளர் மோதல்கள் குறித்து அவர்களின் கருத்தை அமைதிக்குழுவினர் கேட்டறிந்தனர். வ. புதுப்பட்டியில், பறையர் பள்ளர்களிடையே கடந்த 30 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் சாதிய மோதலின் மவுன சாட்சியாக இருப்பதாக அருந்ததியர் மக்கள் தெரிவித்தனர். இரு சமூக மக்களும் தங்களை அச்சுறுத்துவதோ, ஆதிக்கம் செலுத்துவதோ இல்லை என்றும், இரு சமூகத்திற்கும் நாங்கள் பொதுவானவர்கள் என்றும் தெரிவித்தனர். சண்டை சச்சரவு இல்லாமல் இருந்திருந்தால் கடந்த இருபதாண்டு காலமாக இரு சமூகமும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கும் என்றும், அமைதிக்குழுவின் அமைதி முயற்சிகளுக்கு நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

24ஆம் தேதி நடக்கவிருக்கும் அமைதிக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் சார்பாக இரண்டு பேரை அனுப்புகிறோம் என்று கூறி அவர்களின் பெயர்ப் பட்டியலையும் அளித்தனர். அருந்ததியர் மக்களிடம் விடைபெற்றுக்கொண்டு, அமைதிக்குழுவினர் பறையர் பள்ளர் மோதல் குறித்து சாலியர் சமூக மக்களின் கருத்தை அறியவும், பொதுவழியை மறித்துக் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் குறித்து அறிந்து கொள்ளவும், சாலியர் என்று அழைக்கப்படும் நெசவாளர் வாழும் பகுதிக்குச் சென்றனர். அய்ம்பதுக்கும் மேற்பட்ட ஊர்ப் பெரியவர்கள் திரண்டு வந்து அமைதிக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ள பகுதி தங்கள் சமூகத் திற்குரிய பட்டா நிலம் என்றும், அது பொதுவழி அல்ல என்றும் தெரிவித்தனர்.

தலித் அல்லாதோர் பார்வை

சிறீ பாலசுப்ரமணியம் தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமான நில ஆவணங்களில் சுவர் கட்டப்பட்டுள்ள நிலம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பள்ளியின் பழைய கட்டடத்திற்கு பதிலாகப் புதிய கட்டடம் கட்டுவதற்கே தடுப்புச்சுவரைக் கட்டினோம் என்றும் கூறினர். கலவரம் ஏற்படும்போது, பறையர்கள் போலிசுக்குப் பயந்து இந்த வழியாக ஓடிவந்து தங்கள் குடியிருப்புகளில் ஒளிந்து கொள்ளுகிறார்கள் என்றும் அதனால் தங்களுக்குப் பலவகைகளில் நெருக்கடிகள் உருவாகின்றன என்றும், ஒளிந்திருப்பவர்களைத் தேடி தங்கள் பகுதிக்குள் போலிஸ் வந்து தங்கள் மக்களை மிரட்டுகிறது என்றும் கூறினர். எனவேதான் சுவரை எழுப்பினோம் என்றும், சுவரை இடிக்கும்படி பல்வேறு மாவட்ட வருவாய் அதிகாரிகள் வலியுறுத்தியபோது, எங்களிடம் உள்ள ஆதாரங்களைக் காட்டினோம்; அவர்கள் எங்கள் பக்கம் உள்ள நியாயங்களைப் புரிந்துகொண்டு இடிக்க வேண்டும் என அவர்கள் எங்களை வற்புறுத்தவில்லையென்றும் தெரிவித்தனர்.

தலைவர்கள் சங்கமம்

23.7.2012 அன்று இரவு அமைதிக்குழுவினரின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 24.7.2012 அன்று காலையில் அமைதிக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. திருவில்லிப்புத்தூர் மாரியம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள சாலியர் திருமண மண்டபத்தில் அமைதிக் கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. கூட்டத்திற்கு தொல்.திருமாவளவன் மிக முன்னதாகவே வந்திருந்தது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. எதிர்பார்த்ததைப் போலவே, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், இடதுசாரித் தோழர்கள், தலித் செயற்பாட்டாளர்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அரங்கு முன்னால் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன், சுமார் 1 மணிக்கு வ.புதுப்பட்டி கிராம பள்ளர் சமூகப் பிரதிநிதிகளுடன் அரங்கிற்கு வந்தார்.

கூட்டத்தின் தொடக்கமாக அமைதிக் கூட்டத்தின் நோக்க உரையை யாக்கன் நிகழ்த்தினார். மிக நீண்ட காலமாக வ. புதுப்பட்டி கிராமத்தில் நடந்துவரும் பள்ளர் பறையர் மோதல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளதையும், இரு சமூக மக்களிடையே அமைதியை உருவாக்குவது அம்மக்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறும் ஒவ்வொருவரின் கடமை என்றும் அந்தக் கடமையை நிறைவேற்ற மிக முக்கியமான பயணத்தையும் ரத்து செய்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்ற தொல். திருமாவளவன், ஜான்பாண்டியன், லிங்கம், பொன்னுப்பாண்டி மற்றும் அனைத்துத் தோழர்களையும் வரவேற்பதாகவும் கூறினார்.

thiruma_johnpandian_640

தொடர்ந்து, வ. புதுப்பட்டி கிராம மக்களின் கருத்துகளையும் குறைகளையும் கூற, முதலில் பள்ளர் சமூகத்தைச் சார்ந்த தங்கராசு அழைக்கப்பட்டார். மிக நீண்டகாலமாக தாய் பிள்ளை போல வாழ்ந்து வந்தோம், அவ்வப்போது கலகம் ஆரம்பித்து, சண்டைபோட்டுக் கொண்டிருப்பதாகவும், இரு சமூகத்திற்கும் அமைதியை உருவாக்கினால் பெரும் நிம்மதி ஏற்படும்' என்றும் அவர் தெரிவித்தார். அவருக்குப் பின்னால் வ. புதுப்பட்டி பள்ளர் சமூகத்து ஊர்த்தலைவர் பூமாலை தனது கருத்துகளைக் கூறினார். நாங்கள் என்ன காரணத்திற்காகத் தகராறு செய்து கொள்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. அங்கும் இங்கும் இரண்டு சல்லிப் பயல்கள் செய்யும் சில்லறைத் தனங்களால்தான் கலவரம் ஏற்படுகிறது. இதனால் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டு ஆண்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட வேண்டிய கேவலமான நிலை எங்களுக்கு ஏற்படுகிறது' என்றார். மேலும், "வெளியூர்களுக்குச் செல்லும்போது எங்களைக் கேவலமாகப் பேசுகிறார்கள். வ. புதுப்பட்டிக்காரன் என்றால் மற்ற ஊர்க்காரர்கள் எங்களுக்கு பெண் தர மறுக்கிறார்கள். இந்தச் சூழ்நிலைகள் எல்லாம் மாறவேண்டும். அதற்கு இந்த அமைதிக்குழுவினர் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எங்களுக்காக பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்' என்று தெரிவித்தார் பூமாலை.

அவரை அடுத்து, வ. புதுப்பட்டி கிராம பறையர் சமூகத்தைச் சார்ந்த ஆ. சின்னப்பன் பேசினார். "முன்பெல்லாம் நாங்கள் இரு சமூகத்து ஆட்களும், தாயா பிள்ளையாக இருந்தோம். எங்களிடம் இல்லையென்றால் அவர்களும், அவர்களிடம் இல்லையென்றால் நாங்களும் கொடுத்து உதவி வந்தோம். ஆனால் இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இருக்கும் பிரச்சனைக்குரிய நபர்கள் தண்டிக்கப்படவில்லை. அவ்வாறு தண்டிக்கப்பட்டுவிட்டால் கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும், படித்துவிட்டு இளைஞர்கள் வேலையில்லாமல் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான் இப்போது இருக்கிற கலவரச் சூழல் மாறும். ஊரில் வாழ்வோர் மிக நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். தனியாக குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தால் இந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். அதற்கு மாநில மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்' என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து ஆர்.சி. தெருவைச் சார்ந்த இன்பம் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவர் பேசியபோது, “இரண்டு சமூகமும் ஒற்றுமையாக இருந்தால், மிகப்பெரும் வெற்றிகளைப் பெற முடியும் என்று ஏற்கனவே நிரூபித்துக் காட்டியுள்ளோம். இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும். காலம் காலமாக ஆதிக்க சாதிகள் கையிலிருந்த பேரூராட்சியும், கூட்டுறவு சொசைட்டியும் நம் சமூகத்தின் கைக்குள் வந்தது. அது எப்படி சாத்தியமானது? வ. புதுப்பட்டி இப்படியே கலவரம் செய்யும் பூமியாகவே இருந்து விடாது. ஆண்கள் தான் பகைமை உணர்வில் கிடக்கிறார்கள். பெண்கள் அப்படி இல்லை. கலவரத்தால் ஆண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதை விட பெண்களும் பள்ளிக் குழந்தைகளும்தான் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். எனவே, முதலில் பெண்களுக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும். அப்படி ஏற்பட்டு விட்டால் பெண்களால் இந்த ஊரை அமைதிப்படுத்த முடியும். எனவே, நமக்குள் இருக்கும் பகைமைகளை மறப்போம். பெரிய பெரிய அதிகாரிகளையும், எஞ்சீனியர்கள், டாக்டர்கள், படைப்பாளிகளை நாம் உருவாக்க முடியும். அதற்கு இங்கு அமர்ந்திருக்கும் பெரியோர்கள் தலைவர்கள், அமைதிக் குழுவினர் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

அவரை அடுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் சாமுவேல், அவரைத் தொடர்ந்து திருவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி. பொன்னுப்பாண்டி, தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி. லிங்கம், தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திரபோஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், தொல்.திருமாவளவன், இறுதியாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெ.தமிழினியன் நன்றி கூறினார். இறுதியில், அமைதிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

காரணங்களும் பரிந்துரைகளும்

1. கால் நூற்றாண்டு காலமாக வ.புதுப்பட்டி கிராமத்தில் பள்ளர் பறையர் மோதல் நடந்து வந்திருந்த போதிலும், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் பழிவாங்கும் வன்மம் நிறைந்த சுயசாதி ஆதிக்க மோதலாக அது உருப்பெற்றிருப்பதை அமைதிக்குழு அறிந்துகொள்ள முடிந்தது. இதுவரை 10க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்திருந்த போதிலும் அவற்றுக்கெல்லாம் சொல்லப்படுகிற காரணங்கள் மிக அற்பமானவைகளாக இருக்கின்றன. தீர்க்கவே முடியாத நீண்டகாலப் பிரச்சனை எதுவும் அந்த கிராம பள்ளர் பறையர் சமூக மக்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. நீண்டகாலமாக தீர்க்கமுடியாத நிலச்சிக்கல், கோயில் தகராறு, பெண் தொடர்பான பிரச்சனைகள், அரசியல் கட்சி முதலைகளின் கைவரிசை, போன்ற எதையுமே அந்த கிராமத்தில் காணமுடியவில்லை.

2. மிக முக்கியமான பிரச்சனை எதுவெனில், பறையர் பள்ளர் சமூக இளைஞர்களிடையே கொழுந்துவிட்டு எறிந்துகொண்டிருக்கும் சுயசாதி ஆதிக்கப் போட்டியாகும். அந்த கிராமத்தில் யாருடைய ஆதிக்கம் இருக்க வேண்டும், "பறையருடைய ஆதிக்கமா, "பள்ளர் ஆதிக்கமா' "நீயா' "நானா' என்ற எண்ணம் அந்த மக்களிடையே அடிக்கடி ஏற்படும் மோதல்களுக்கு அடிப்படைக் காரணமாகும். வ.புதுப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பள்ளர் பறையர் சமூகத்தவர்கள் இந்த ஆதிக்கப் போட்டியை அதிகரிக்கச்செய்யும் வேலையைச் செய்துவருகின்றனர்.

3. இரண்டு சமூகங்களிலும் குற்றம் செய்கிற இளைஞர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவதும், கலவரம் நடக்கும் நேரங்களில் தீவிரமான தாக்குதல்களில் ஈடுபடும் அதாவது கொலை, தீவைப்பு, கல்வீச்சு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் "வீரமும், சுயசாதியைக் காப்பாற்றிய வீரன்' என்று புகழப்படுவதாலும், அத்தகையோர் வழக்குகளிலிருந்து தப்பித்து விடுவதாலும் கலவரங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

4. 2001க்குப் பிறகு, பள்ளர்கள் புதிய தமிழகம் அமைப்பிலும் பறையர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் இருக்கிறார்கள். இரண்டு கட்சிகளும் அரசியல் நிலைப்பாட்டில் எதிரெதிரே இருப்பதால் ஏற்கனவே சமூகத் தளத்தில் சாதி உணர்வுடன் பிரிந்து நிற்கும் மக்களை, அந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மேலும் பிளவுபடுத்தி, மோதல் உணர்வு அதிகமாக்கி நிரந்தரமாக்கியும் உள்ளது.

5. கடந்த 25 ஆண்டுகளில் விவசாய நிலங்கள், காடுகள், மந்தைகள் என அனைத்து சமூக வளங்களின் மீதான பிடியை இழந்தும், பேரூராட்சி, கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் மீதான ஆட்சியை, ஆதிக்கத்தை இழந்தும் நிற்கும் வ. புதுப்பட்டி கிராம இடைநிலைச் சாதி நாயுடுகள், ஏற்கனவே பிளவுண்டு எப்போதும் மோதலுக்குத் தயாராக இருக்கும் பள்ளர் பறையர் மக்களிடையே பகைமை உணர்வை அதிகரிக்கச் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருவதும் கலவரத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஒரு பக்கம் மட்டுமல்ல, இரண்டு சாதியினரிடையேயும் உள்ள தங்கள் விசுவாசிகள் மூலம் மோதல் உணர்வையும், கலவர பீதியையும் உருவாக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

6.வ.புதுப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள கோபாலபுரம், வத்திராயிருப்பு, ஆகாசம்பட்டி, கூமாப்பட்டி, கான்சாபுரம், நெடுங்குளம், மீனாட்சிபுரம், சுந்தரபாண்டியம், கோட்டையூர் போன்ற கிராமங்களில் வாழும் பள்ளர்களும் பறையர்களும் வ. புதுப்பட்டி கிராம பறையர் பள்ளர் மோதலுக்கு பெரிதும் துணைபோவதும், முக்கிய காரணமாகும். அண்மையில் நடந்த இரண்டு மோதல்களிலும் மேலே குறிப்பிட்ட கிராமங்களைச் சார்ந்தவர்கள் ஆயுதங்களுடன் வ.புதுப்பட்டி கிராமத்திற்குச் சென்று நேரடியாக கல் வீச்சிலும் தீ வைப்பிலும் ஈடுபட்டுள்ளனர். கலவரம் செய்துவிட்டுத் தப்பிக்கும் குற்றவாளிகளுக்கு "சாதி உணர்வின்' அடிப்படையில் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வருகிறார்கள். ஊருக்கு ஊர் கலவர நிதி வசூலித்து அவரவர் சாதியினரிடம் வழங்குகிறார்கள். இது, கலவரத்தை ஊக்கப்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. அத்தகைய உதவிகள் மூலம் கலவரம் செய்பவர்கள் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள். அதுவே தொடர்ந்து மோதலிலும் கலவரத்திலும் ஈடுபட பெரிய ஊக்கத்தை அளித்து வருகிறது.

7. வ.புதுப்பட்டி கிராமத்தின் பேருந்து நிலையத்தில் மிக கம்பீரமாக நிற்கும் டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலையும் கலவரத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், இக்கூற்று எதிர்மறையானதும் அடிப்படையிலேயே தவறானதுமாகும். டாக்டர் அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாததன் காரணமாகவே வ. புதுப்பட்டியில் பள்ளர்களும் பறையர்களும் மோதிக்கொள்ளுகிறார்கள். இந்நிலையில், டாக்டர் அம்பேத்கர் சிலையை நாங்கள்தான் நிறுவினோம்; அது எங்களுக்குத்தான் சொந்தமானது என்று பறையர்களும் மாலை மரியாதை செய்வதிலிருந்து எங்களைத் தடுத்துவிட்டார்கள். எனவே அந்தச் சிலையே அங்கு இருக்கக்கூடாது என்று பள்ளர்களும் கூறுவதில் எந்தப் பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை.

தங்களின் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டவே டாக்டர் அம்பேத்கரின் சிலையை இரு தரப்பாரும் காரணப்படுத்துகிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கரின் சிலையை நிறுவியபோது இரு சமூகத்திலும் இருந்த டாக்டர் அம்பேத்கர் மீதான பற்று இன்று உள்ள தலைமுறையினரிடம் இல்லை. எல்லாம் வாயளவில் அம்பேத்கரைப் பேசும் கதையாகிப் போயுள்ளது. ஆயினும் வ.புதுப்பட்டி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பொதுவான வண்ணத்தைப் பூசி, அனைவரும் மரியாதை செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முன்முயற்சி எடுக்கவேண்டும் என்று அமைதிக்கூட்டத்தில் தொல். திருமாவளவன் தனது கட்சியினரைக் கேட்டுக்கொண்டார்.

8. இரு தரப்பு மக்களிடையே எழும்பும் சிறு சிறு பிரச்சனைகளே கலவரங்களுக்கு அடிப்படையான காரணம் என்பதை வத்திராயிருப்பு காவல் நிலைய அதிகாரிகளும் மாவட்ட காவல்துறை நிர்வாகமும் அறியாததல்ல. ஆனால், இரு சமூகத்தவரும் அளிக்கும் புகார்களை வத்திராயிருப்பு காவல்நிலைய அதிகாரிகளும், அடுத்தடுத்து வந்த மாவட்டக் கண்காணிப்பாளர்களும் மிக மோசமான அலட்சியத்துடனும், தான்தோன்றித்தனமான போக்குகளுடனும் தவறாகக் கையாண்டதே அடிக்கடி ஏற்பட்ட மோதல்களுக்கு மிக முக்கிய காரணமாகும். வழக்கமான நேர்மையற்ற ஊழல் மலிந்த நடவடிக்கைகளையே வ. புதுப்பட்டி கிராமத்தில் பள்ளர் பறையர் சமூகத்தவர் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் எடுத்துள்ளனர். காவல்துறையினரிடம் புகார் அளிப்பது முற்றிலும் வீணான வேலை என்ற எண்ணத்தில்தான் "பதிலடி' என்ற பெயரில் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. 2010 வரை வ. புதுப்பட்டி கிராமம் அடிக்கடி கலவரம் நடக்கும் பகுதி என்பதை மாவட்ட காவல்துறை கணக்கிலேயே கொள்ளவில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை எடுக்காமல் போனதும் கலவரம் அடிக்கடி உருவாகக் காரணமாகும்.

9. இருபதாண்டுகளுக்கும் மேலாக வ. புதுப்பட்டியில் பட்டியல் வகுப்பு மக்களிடையே மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. மோதல்களில் 10க்கும் மேற்பட்டோர் இருதரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், விருதுநகர் மாவட்ட நிர்வாகமும், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களும் அக்கிராமத்தின் மீது எவ்வித கவனமும் கொள்ளாதது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை எந்த அளவிற்குத் தன்னுணர்வற்றதாக செயல் பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று. மாவட்ட ஆட்சியர் எந்தவிதமான சிறப்பு நடவடிக்கைகளையும் இன்றுவரை மேற்கொள்ளவில்லை. மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை நிர்வாகமோ ஒரு சிறு தாளில்கூட அந்த கிராமத்தைப் பற்றிய குறிப்புகளை வைத்திருக்கவில்லை. எனவே, வ.புதுப்பட்டியில் நடந்த கலவரங்களை மாவட்ட நிர்வாகமும் ஆதி திராவிடர் நலத்துறையும் இருபத்தைந்து ஆண்டுகளாக வேடிக்கை மட்டுமே பார்த்து வந்துள்ளன.

10. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகளின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் யாரும் கிராமத்தில் எந்தப் பணியும் செய்யவில்லை. கலவரம் ஏற்படுவதற்கு முன்னால் கலவரச் சூழ்நிலை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், கலவரத்தைத் தடுத்து நிறுத்த அவர்கள் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதை அமைதிக்குழு கண்டறிந்தது. மாறாக, கலவரத்தில் ஈடுபட்டு தப்பித்து வருபவர்களையும், காவல்துறையினருக்குப் பயந்து ஊரைவிட்டு வெளியேறுபவர்களையும் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வரும் வேலையை மட்டும் செய்துள்னர்.

இரு சமூகத்தவரும் அடிப்படையில் தீண்டாமை, உழைப்புச் சுரண்டல், சமூகப் பொருளாதார அரசியல் பாகுபாட்டிற்கு உள்ளானவர்கள் என்பதையும், ஒற்றுமையோடு இருந்தால்தான் இழந்த உரிமைகளைப் பெறமுடியும் என்ற அடிப்படையான, டாக்டர் அம்பேத்கரின் அரசியலை அந்த மக்களிடையே எடுத்துச் செல்லும் பணியை அவர்கள் ஒருபோதும் செய்ததில்லை. அவரவர் சாதி அரசியலையே கட்சி அடையாளத்தின் கீழ் செய்து வந்துள்ளனர்; செய்தும் வருகின்றனர்.

மேலும், "ஆண்ட பரம்பரை' "நாடாண்ட சாதி' போன்ற சாதிப் பெருமை பேசி மோதலுக்குத் தூபம்போடும் சாதி வெறி உணர்வு கொண்ட பிற்போக்குச் சில்லறை அமைப்புகளும், வ. புதுப்பட்டி கிராமத்திலும் ஊடுருவி இரு சமூக மக்களிடமும் சாதி வெறி உணர்வைத் தூண்டிவிட்டுள்ளன. தொடர்ந்து தூண்டுதலைச் செய்தும் வருகின்றன. ஏற்கனவே சாதி ஆதிக்க மன நிலையில் உள்ள, படிப்பறிவற்ற அந்த ஏழை மக்களிடம் கொண்டுசெல்லப்பட்ட சுயசாதி வெறியுணர்வு அரசியல் மேலும் அவர்களை வெறிபிடித்தவர் களாக்கியுள்ளது.

11. அருட்பணி மாற்கு ஸ்டீபன், ராஜ்கவுதமன், ஜனகப்பிரியா, பாமா, யாக்கன், ஜெகநாதன், பாக்கியராஜ் போன்ற எழுத்தாளர்கள் வ.புதுப்பட்டியிலிருந்து புறப்பட்டு வந்திருந்த போதிலும், அதனால் அந்த கிராமத்திற்கு எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. அறிவுத் தளங்களில் பணியாற்றுவோர் கிராமத்திலிருந்தும், கிராமத்தில் நடக்கும் கலவரங்களிலிருந்தும் தங்களை முற்றிலும் விலக்கிக் கொண்டவர்களாக இருப்பது வேதனைதரும் செய்தியாகும். வ.புதுப்பட்டி கிராமத்தின் பள்ளர் பறையர் சமூகங்களிலிருந்து பிறந்து அந்த கிராமத்தில் வளர்ந்து இன்று உயர்ந்த நிலையிலிருக்கும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலவரங்களைக் கண்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் திறனுடையோர் விலகி நின்று வேடிக்கை பார்த்ததாலும் வழிகாட்டி அமைதிப்படுத்த ஆளின்றி தொடர் பிரச்சனைகள், வதந்திகள், கலவரங்கள், வழக்குகள் என எதுவானாலும் தாங்களே முடிவெடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் பள்ளர், பறையர் சமூக மக்கள் தவிக்க விடப்பட்டதாலும் கலவரங்கள் அடிக்கடி ஏற்பட்டுள்ளன.

12. மோதல்கள் உருவாகுவதற்கான சமூக அரசியல் சூழ்நிலைகளை, கிராமத்தில் நிலவும் புறக்காரணிகளை, பள்ளர் பறையர் சமூக மக்களிடையே நிலவும் சுயசாதிவெறிச் சிந்தனைப் போக்குகளை, கலவரத்தை உருவாக்கிவிட்டுத் தப்பிக்கும் குற்றவாளிகளை, அலட்சியமும் தான்தோன்றித்தனமும் கொண்ட காவல்துறை அதிகாரிகளை கண்டும் காணாமல் அருவெறுக்கத்தக்க சாட்சியாய் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை அப்படியே விட்டுவிட்டு, "அமைதியாக இருங்கள்', "கலவரம் செய்யாதீர்கள்' என்று மக்களை நோக்கி மட்டும் கூவுவது வீணிலும் வீணான வேலை. அதைத்தான் மாவட்ட அரசு நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் செய்து வந்துள்ளனர். அமைதியை விரும்புவோர் அனைத்துத் தளத்திலும் உள்ள சிக்கல்களைக் கணக்கில் கொண்டாக வேண்டும். இவை எவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் எந்திரகதியில் அமைதிக் கூட்டங்கள் நடத்தப்பட்டதால்தான் அமைதி முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போயுள்ளன.

13. திருவில்லிப்புத்தூரில் 24.7.2012 அன்று தலைவர்கள் முன்னிலையில் அமைதிக் கூட்டத்தில் பங்கேற்ற வ. புதுப்பட்டி கிராம பள்ளர்களும் பறையர்களும் கூட்டத்தில் தாங்கள் அமைதியை விரும்புவதாகவும், கலவரத்தில் ஈடுபட மாட்டோம் என்றும் வாக்குமூலம் அளித்ததினால், தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையினால், இரு சமூக மக்களிடையே அமைதி ஏற்பட்டுவிட்டதாக நம்புவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அமைதிக் கூட்டம் ஒரு தொடக்கம்தான். இன்னமும் இரு சமூக மக்களிடையே பகைமை உணர்வும் கலவரச் சூழலும் அப்படியே நீடிக்கின்றன. வ. புதுப்பட்டி கிராம அமைதிக் குழுவில் பங்கேற்றவர்களால் மட்டுமே வ. புதுப்பட்டி கிராமத்தில் அமைதியை உருவாக்கிட முடியாது. தலித் மக்களின் ஒற்றுமையை விரும்புகிற, டாக்டர் அம்பேத்கர் கருத்தியலை ஏற்றுக்கொண்ட சமூக செயல்பாட்டாளர்கள், இடதுசாரிகள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், வழக்கறிஞர்கள், முற்போக்கு அமைப்புகள் என பலதரப்பட்டவர்களின் ஆதரவும் உதவிகளும் நேரடிக் களப்பணிகளும் தேவை. ஏனென்றால், வ. புதுப்பட்டி கிராமத்தில் நடந்து வரும் பறையர் பள்ளர் மோதல் கடந்த இருபதாண்டு காலமாக தமிழகத்தில் நடைபெற்ற தலித் அரசியலின் விளைவுகளில் ஒன்று எனவும், இனி வரும் நாட்களில் அப்படிப்பட்ட சிக்கல்களையே அம்பேத்கரியலாளர்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள் எனவும் அமைதிக்குழு கருதுகிறது.

செயல்திட்டங்கள்

வ.புதுப்பட்டி கிராம மக்களை அமைதிப்படுத்துவதற்கு அமைதிக்குழு பரிந்துரைக்கும் செயல்திட்டங்கள்:

புதுப்பட்டி கிராமத்தில், பறையர் பள்ளர் சமூக மக்களிடையே நீடித்து வரும் பகைமையையும், சாதி மோதலையும் தடுத்து நிறுத்தி, அங்கு சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் தேவை என அமைதிக் குழு கருதுகிறது. எனவே, தமிழக அரசு, காவல்துறை, கட்சிகள், அமைப்புகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், வ.புதுப்பட்டி கிராம மக்கள் என அனைவருக்குமான செயல்திட்டங்களை அமைதிக்குழு முன் வைக்கிறது.

அரசு மாவட்ட நிர்வாகம்

1. வ.புதுப்பட்டி கிராமத்தில் நடந்த நீண்டகால சாதிய மோதல்களினால் வேளாண்மைத் தொழில் பெரும் தேக்கத்தை எட்டியுள்ளது. இதனால் காடு கழனிகளில் உழைத்துப் பிழைத்து வந்த பள்ளர் மற்றும் பறையர் சமூக மக்கள் வேலைவாய்ப்புகளின்றி வறுமையில் சிக்கியுள்ளனர். மீண்டும் விவசாய வேலைகளைத் தீவிரமாகத் தொடங்கவும், இளைஞர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கவும், வேலைவாய்ப்புப் பயிற்சிகளை அளிக்கவும், சிறப்புக் கவனத்துடன் கூடிய செயல் திட்டத்துடன் மாவட்ட நிர்வாகம் உடனே செயல்பட வேண்டும்.

2.விவசாய வேலைகள் அரிதாகி விட்டதால், வ.புதுப்பட்டி கிராம இளைஞர்கள் அருகிலுள்ள நகரங்களில் உள்ள செங்கற்சூளை, ஸ்பின்னிங் மில் மற்றும் பிற நகரம் சார்ந்த வேலைகளுக்குச் செல்கின்றனர். அப்படிச் செல்லும் இளைஞர்களுக்கு நிரந்தரமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். "தாட்கோ' போன்ற ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் வ.புதுப்பட்டி கிராம தலித் இளைஞர்களுக்கு சிறப்புத் தொழிற் பயிற்சியும், தொழிற்கூடங்களையும் அமைத்துத் தர மாவட்ட ஆட்சியர் உடனடியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

3. வ.புதுப்பட்டி கிராமத்தில் நடந்து வந்த சாதி மோதல்களில் பலியானவர்களுக்கு ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்துள்ளது. அந்த இழப்பீடுகள் வழங்கப்பட்ட அதே கண்ணோட்டத்துடன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 இன்படி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

4.வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 1989 வலியுறுத்தும் கொள்கைகளின் அடிப்படையில், வ.புதுப்பட்டி கிராமத்தில் பட்டியல் சாதி மக்களிடையே நடந்து வரும் சாதி மோதலை கவனத்தில் கொண்டு, அச்சட்டத்தின் அடிப்படையில் உட்சாதி மோதலைத் தடுத்து நிறுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

5. சாதி மோதல்களைத் தடுக்கவும், சமூக நல்லிணக்கத்தை உருவாக்கவும் உருவாக்கப்பட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் தாமதிக்காமல், வ.புதுப்பட்டி கிராமத்தில் முகாமிட்டு அனைத்துச் சமூக மக்களிடமும் கலந்து பேசி சமூக அமைதியை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

6. வ.புதுப்பட்டி கிராமத்தில் வாழும் பறையர், பள்ளர், அருந்ததியர் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் பெரும் இடநெருக்கடி கொண்டதாய் இருக்கிறது. மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு அதுவும் தடையாக இருக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் மூன்று சமூக மக்களின் வாழ்விட நெருக்கடிகளையும், அதனால் உருவாகும் சமூகச் சிக்கல்களையும் கவனத்தில் கொண்டு அம்மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைகளை வழங்க முன்வரவேண்டும். மூன்று சமூகக் குடியிருப்புகளின் அருகிலும் பயன்பாடற்ற நிலங்கள் இருப்பதால் அந்த நிலங்களிலேயே வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

7. வ.புதுப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே தமிழ்நாடு நூலக இயக்குநரகத்தின் கீழ் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நூலகம் தெலுங்கு நாயுடுகள் மட்டுமே பயன்படுத்தும் அளவிற்கு பேரூராட்சிக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. பறையர், பள்ளர், அருந்ததியர் சமூக மக்கள் அந்த நூலகத்திற்குச் சென்று நூல்களை வாசித்தறிவது நீண்டகாலமாகவே சாத்தியமற்றதாக இருந்து வருகிறது. எனவே, அனைத்துச் சமூக மக்களும் பயன்படுத்தும் வண்ணம், வ.புதுப்பட்டி பேருந்து நிலையத்தில் நூலகம் தொடங்க வேண்டும் அல்லது தற்போது செயல்பட்டு வரும் நூலகத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் மாற்ற வேண்டும். டாக்டர் அம்பேத்கர், பெரியார், புலே, போன்றவர்கள் எழுதிய நூல்களை நூலகத்தில் கொண்டு வரவேண்டும். ஒடுக்கப்பட்ட தலித் மக்களிடையே ஒற்றுமையையும் சமூக விழிப்புணர்வையும் உருவாக்கும் இதழ்கள் வாசிக்கக் கிடைக்கும்படி ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

8. ஏழ்மையிலும் அறியாமையிலும் உழன்று கொண்டிருக்கும் வ.புதுப்பட்டி தலித் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதன் மூலம் அம்மக்கள் புத்துணர்வுடன், புதிய நம்பிக்கைகளுடன் வாழ வழியேற்படுத்த முடியும். இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு வ.புதுப்பட்டியில் பள்ளர், பறையர், சமூக மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து கலவர வழக்குகளையும், துணை வழக்குகளையும் திரும்பப் பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தை அமைதிக்குழு பணிந்து கேட்டுக் கொள்கிறது.

9. கிராமம் தோன்றிய காலத்திலிருந்தே பள்ளர், பறையர், சாலியர் சமூக மக்கள் பயன்படுத்தி வந்த பொதுத் தெருப் பாதையில் தடுப்புச் சுவரை எழுப்பி பள்ளர், பறையர் சமூக மக்களைத் தங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வரவிடாமல் சாலியர் சமூக மக்கள் தடுத்துள்ளனர். சுவர் எழுப்பப்பட்டுள்ள பகுதி தங்கள் சமூகத்திற்குரிய பட்டா நிலம் என்றும் அதில் சுவர் எழுப்பத் தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் சாலியர் சமூக மக்கள் அமைதிக் குழுவினரிடம் தெரிவித்தனர். அது தொடர்பான ஆவணங்கள் எதுவும் அமைதிக் குழுவிடம் அளிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பல்லாண்டுகளாக, பறையர், பள்ளர், சாலியர் சமூக மக்கள் பயன்படுத்தி வந்த சாலை சாலியர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட பட்டா நிலம் என்னும் கூற்றை அமைதிக் குழுவால் ஏற்க முடியவில்லை.

மேலும், அரசு நிதியுதவியுடன் இயங்கிவரும் பாலசுப்ரமணியர் தொடக்கப் பள்ளிக்கு பறையர், பள்ளர் சமூக மாணவர்கள் எளிதில் வரக்கூடிய வழியாகவும் அந்தப் பாதை இருப்பதால், தெருவை மறித்து தடுப்புச் சுவர் எழுப்பியிருப்பது எந்த வகையிலும் ஏற்கக் கூடியதாக இல்லை. கலவரம் ஏற்படும் நேரங்களில் பறையர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து ஒளிந்து கொள்ளுகிறார்கள். காவலர்கள் எங்கள் தெருக்களில் நுழைந்து தேடுகிறார்கள். எனவே, பறையர்கள் எங்கள் குடியிருப்பிற்குள் வராதபடிக்கு சுவரை எழுப்பியுள்ளோம் என்றும், பறையர் சமூகத்தவரில் சிலர் எங்கள் பகுதிக்குள் வந்து திருடுகிறார்கள். எனவே, சுவர் எழுப்பியுள்ளோம் என்றும் சாலியர் சமூக மக்கள் அமைதிக் குழுவினரிடம் தெரிவித்தனர். மேற்சொல்லப்பட்ட இரண்டு செயல்களுக்குமான தீர்வு பொதுத் தெருப்பாதையை மறித்து சுவர் எழுப்புவதல்ல; திருட்டுச் செயல்களில் ஈடுபடுவோரை காவல்துறையினரிடம் ஒப்படைப்பதே அதற்கான சட்டப்பூர்வமான வழியாகும். எனவே, பொதுப்பாதையை இடைமறித்து எழுப்பப்பட்டுள்ள தடைச் சுவரை உடனே இடித்துத் தள்ளி, பாதையைத் திறந்துவிட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காவல் துறை

நீண்டகாலமாக வ.புதுப்பட்டி கிராமத்தில் மோதல்கள் நடந்து வருவதால், அனேகமாக கிராமத்தில் வாழும் அனைத்து பள்ளர், பறையர் சமூக ஆண்கள் மீதும் பல வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். உண்மையில் அனைத்து ஆண்களும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இல்லை. கிராமத்தை விட்டே வெளியேறியவர்கள் மீதும் பழைய வாக்காளர் பட்டியலைக் கொண்டு, அதன் அடிப்படையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள், பள்ளிகளில் படிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மீதும் கல்லூரி மாணவர்கள் மீதும் பொய் வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய போக்கு, கடும் கண்டனத்திற்குரியது. 18வயதுக்கு உட்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை காவல்துறை பின்பற்றவில்லை.

எல்லோர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைய வைத்தால் கலவரம் செய்ய மாட்டார்கள் என்ற தவறான கண்ணோட்டத்தில் மாவட்டக் காவல்துறை தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளதைக் கண்டறிய முடிந்தது. பொய் வழக்குகள் சாதாரண மக்களை மேலும் கோபமூட்டுமே தவிர, அச்சம் கொள்ளச் செய்யாது. அத்தகைய கோபமே இருதரப்பிலும் பகை உணர்வை அதிகப்படுத்தி வந்திருக்கிறது. எனவே, இரு தரப்பிலும் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு, சூழலுக்காகக் காத்திருந்து கலவரத்தில் ஈடுபடுவோரைக் குறிப்பாகக் கண்டறிந்து, அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதின் மூலம்தான் கலவரச் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதை காவல்துறையினர் உணரவேண்டும். இனி மேலாவது படிப்பறிவற்ற பாமர மக்களை பொய் வழக்குகளில் சிறைப் பிடிக்கும் கொடூரமான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

10. கலவரம் ஏற்பட்டவுடன் காவல்துறையினர் வந்து கட்டுப்படுத்தி விட மாட்டார்கள் என்று காத்திருக்கும் மக்களை, ஊருக்குள் நுழைந்ததும் விரட்டி விரட்டி அடிப்பது, வீடுகளுக்குள் நுழைந்து அந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வாங்கிச் சேர்த்த பானை, சட்டி, கட்டில், ரேடியோ, தொலைக்காட்சி போன்ற பொருட்களை விலங்காண்டிகள் போல அடித்து நொறுக்குவது போன்ற கேடுகெட்ட செயல்களை காவல்துறையினர் உடனே கைவிட வேண்டும். இத்தகைய போக்கு நாடு முழுவதும் காவல்துறையினரின் இயல்பான குணமாக இருந்து வருகிறது. இந்த கடும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களைச் செய்யும் காவலர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றங்கள் இத்தகைய குற்றச்செயல்களைக் கண்டு கொள்வதில்லை. வ.புதுப்பட்டி கிராமத்திலும் இதுபோன்ற செயல்கள் ஏராளமாக நடந்துள்ளன. அமைதியை உருவாக்கும் முயற்சிக்கு ஏழை எளிய மக்களின் வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்குவது எந்த வகையில் பயன்தரும் என்பது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.

11. கிராமத்தில் காவலர்கள் புகுந்தபின்னர், காவல்துறையினருக்கு பயந்து கொண்டு, ஆண்கள் அனைவரும் ஊரைவிட்டே வெளியேறி விடுகின்றனர். மீண்டும் நிலைமை சரியாகும் வரை ஆண்கள் ஊருக்குள் வருவதில்லை. குறைந்தது இரண்டு அல்லது மூன்று வாரங்களேனும் ஆண்களே இல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே ஊருக்குள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கிராமத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ள காவலர்கள் பெண்களை எழுத முடியாத அளவிற்கு மானக்குறைவாகப் பேசுவதும், அடிக்கடி வீடுகளைத் திறந்து சோதனை இடுவதும் என தங்கள் விருப்பம்போல் செயல்பட்டு வருகின்றனர். ஆண்களையெல்லாம் விரட்டியடித்து விட்டு பெண்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்துவது, மானக்குறைவு ஏற்படுத்துவது என அனைத்துச் செயல்களும் கடும் தண்டனைக்குரிய குற்றச்செயல்களாகும். இதனால்தான் காவலர்களைத் தாக்கும் எண்ணம் மக்களிடையே உருவாகிறது. வ.புதுப்பட்டி கிராமத்தில் இச்சூழ்நிலை நிலவுகிறது. இதைத் தமிழக காவல்துறை உயரதிகாரிகள் கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சமூகச் செயல்பாட்டாளர்கள்

12. ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளைப் பெற அச்சமூக மக்கள் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்ற கருத்தியலுடன் செயல்பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள் அதாவது எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள், இயக்கத் தோழர்கள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டிய இடமாக வ.புதுப்பட்டி கிராமம் உள்ளது.

13. ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கருத்தரங்குகளை வ.புதுப்பட்டி கிராமத்தில் நடந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.

14. டாக்டர் அம்பேத்கர் கருத்தியலைக் கொண்ட, தலித் ஒற்றுமையை வலியுறுத்துகிற துண்டறிக்கைகளை அச்சிட்டு, வ.புதுப்பட்டியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் வழங்க வேண்டும்.

15. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வெளிவரும் அனைத்து தலித் இதழ்களும் வ.புதுப்பட்டி கிராமத்தில் வாழும் தலித் மக்கள் படித்து விழிப்புணர்வு அடையும் வகையில் அக்கிராமத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

16. தலித் மக்களிடையே ஒற்றுமையையும், அரசியல் பொருளாதார விழிப்புணர்வையும் அளிக்க உதவும் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், ஒருங்கிணைந்த விழாக்கள், நூல் வெளியீடுகள், ஆகியவற்றை வ.புதுப்பட்டி கிராமத்தில் தொடர்ந்து நடத்த சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் முன்வர வேண்டும்.

17. திருவில்லிப்புத்தூரை மய்யமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வ.புதுப்பட்டி கிராம அமைதிக் குழுவினருடன் இணைந்து வ.புதுப்பட்டி கிராம இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் எதிர்கால வாழ்க்கை குறித்த கலந்தாய்வுகள், எதிர்கால வாழ்வை எப்படி அமைத்துக் கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்கள், தனித்தன்மை, தனித்திறன் வளர்த்தல் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்த சமூகச் செயற்பாட்டாளர்களும் தொண்டு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள்

18. வ.புதுப்பட்டி கிராமத்தில் நடந்து வரும் மோதல்கள் குறித்து, தற்போதைய திருவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பொன்னுப்பாண்டி அவர்களும், தென்காசி நாடாளுமன்றத் தொகுதி, உறுப்பினர் பி.லிங்கம் அவர்களும் ஆழ்ந்த கவலையையும், மோதல்களைத் தடுத்து நிறுத்த அனைத்துவிதமான ஆதரவையும் அளிப்பதாகவும் அமைதிக் கூட்டத்தில் உறுதியளித்தனர். இந்த அறிவிப்பை அமைதிக்குழு பெரிதும் வரவேற்கிறது. அதோடு, மாதந்தோறும் வ.புதுப்பட்டி கிராமத்திற்குச் சென்று இரு சமூக மக்களையும் சந்தித்துப் பேசி குறைகளைக் கேட்டறிந்து சரி செய்யும்படியும் மக்களோடு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் உரையாடல்கள், பகைமை உணர்விலிருந்து மக்களை விடுவிக்கப் பெரிதும் உதவும் என்ற வகையிலும், கிராமத்திற்கு மாதத்திற்கு ஒருமுறை சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடும்படி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை அமைதிக்குழு கேட்டுக் கொள்கிறது.

19. சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி நிதியிலிருந்து வ.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்துச் சமூக மாணவர்களும் படிக்கும் வகையில் இரவு நேரப் பயிற்சி வகுப்புகள் தொடங்கவும் வ.புதுப்பட்டி பள்ளர், பறையர் சமூக மாணவர்கள் பயின்று வந்த ஆர்.சி. நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றித் தந்து, மீண்டும் பள்ளர், பறையர், அருந்ததியர் சமூக மாணவர்கள் ஒன்று சேர்ந்து பயிலும் பள்ளியாக அதை மாற்றுவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைதிக்குழு கேட்டுக் கொள்கிறது.

20. தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, வ.புதுப்பட்டி கிராமத்தில் வாழும் பட்டியலின சமூக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கென ஒரு சிறப்பு நிதியை உருவாக்கி, சமூக நல்லிணக்கத்திற்கான பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், மாணவர் பிரச்சாரங்கள், பெற்றோர் ஆசிரியர் மாணவர் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாக வருவாய் அதிகாரிகள் பங்கேற்பில் நடத்த வேண்டும். இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டால் மக்களிடையே கலவரங்களுக்கு எதிரான உளவியல் வளரும்; சகோதரத்துவ மனப்பான்மை தழைக்கத் தொடங்கும்.

21. வ.புதுப்பட்டியல் நிலவும் சூழல் குறித்து காவல்துறை அதிகாரிகளோடும், உள்ளுர் அரசு ஊழியர்களுடனும் தொடர்ந்து பேசி கண்காணிக்கவும், ஏதேனும் சிக்கல் ஏற்படும் போது அதற்குத் தனிக்கவனம் எடுத்து உரிய முறையில் தீர்த்து வைத்து கலவரச் சூழல் உருவாகி விடாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைப்புக் காட்டவேண்டும்.

அரசியல் கட்சிகள்

22. வ.புதுப்பட்டி கிராமத்தில் நடந்து வந்த நீண்டகால மோதல்களை அதிமுக, திமுக, காங்கிரசு மற்றுமுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும், மற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகளும் வேடிக்கைப் பார்த்து வந்துள்ளனர். எத்தகைய அமைதி முயற்சிகளையும் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கவில்லை. இது வேதனை தரும் செய்தியாகும். இனிமேலும் இந்நிலை நீடிக்காமல் வ.புதுப்பட்டியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த நிர்வாகிகள் இணைந்து வ.புதுப்பட்டி கிராமத்தில் அமைதி திரும்பவும், இரு சமூக மக்களிடையே சகோதரத்துவம் மலரவும் தங்களால் ஆன பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும். எங்கோ நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் கட்சி வேறுபாடின்றி திரளும் அனைத்துக் கட்சிகளும் வ.புதுப்பட்டியில் நடந்துவரும் சகோதர மோதல்களைத் தடுத்து நிறுத்தவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைதிக்குழு கோரிக்கை வைக்கிறது.

23. வ.புதுப்பட்டி கிராமத்தில் பள்ளர், பறையர், சமூக மக்களிடையே ஆழமாகக் காலூன்றியுள்ள புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், போன்ற கட்சித் தலைவர்கள், வ.புதுப்பட்டியில் அமைதியை உருவாக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது நம்பிக்கையூட்டும் செய்தியாகும். அதோடு, அந்தந்த கட்சியின் முன்னணி நிர்வாகிகளைக் கொண்ட வ.புதுப்பட்டி கிராம நலக்குழுக்களை உருவாக்கி, கிராமத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளைக் கண்காணித்து, இரு சமூகத்திலும் சகோதரத்துவத்தை வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். 

24. வ.புதுப்பட்டி கிராமத்திற்கென கட்சி ரீதியிலான சிறப்பு நிதியை உருவாக்கி, மாணவர்களுக்கும், முதியவர்களுக்கும், நல உதவிகளை வழங்கி, ஆதரவுக் கரம் நீட்டவேண்டும். இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் கருத்தியல் ரீதியிலான பயிற்சிகளை நடத்தி சமூக அமைதியை உருவாக்கிட விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் போன்ற கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் தன்னெழுச்சியாய் முன்வர வேண்டும்.

பெண்ணிய அமைப்புகள், செயற்பாட்டாளர்கள்

25. வ.புதுப்பட்டி கிராமத்தில் நீண்டகாலமாக நடந்து வரும் பள்ளர், பறையர் மோதல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இரு சமூகப் பெண்களேயாவர். உண்மையில் மோதல்களுக்கு பெண்கள் காரணமாக இருக்கவில்லை. மோதல்களுக்கான சூழ்நிலைகளை ஆண்களே உருவாக்குகின்றனர். மோதல்களில் ஆண்களே ஈடுபடுகின்றனர். குழந்தைகளைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் கவலையே இல்லாமல் தொடர் மோதல்களில் ஆண்கள் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையிலும் இரு சமூகப் பெண்களின் மத்தியில் பெரிய அளவில் பகை உணர்வு இல்லை என்பதை அமைதிக்குழு கண்டறிந்தது. இது அமைதியை விரும்புவோர் ஆறுதல் பெறும் செய்தியாகும். எனவே ஆண்களைவிட பெண்களை அமைதிப்படுத்துவது எளிதாக இருக்கும். எனவே, தலித் பெண்ணிய அமைப்புகள், பெண்ணியச் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் வ.புதுப்பட்டி கிராம பெண்கள் மத்தியில் அமைதிப் பணி ஆற்றிட முன்வரவேண்டும்.

26. நடந்த கலவரங்களுக்கு பெண்களை கேலி செய்வது போன்ற சிக்கல்கள் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. எனவே, இரு சமூகத்திலும் உள்ள ஆண்கள் மத்தியில் பெண்கள் குறித்தான மதிப்பை உருவாக்கவும், பெண்ணியச் சிந்தனைகளை வளர்க்கவும், பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் தீவிர உழைப்பு தேவை. மேலும், இரு சமூகப் பெண்களையும் இணைத்து பொதுவான அமைப்பை உருவாக்கி, கலவரச் சூழல் ஏற்படும்போது அந்த பெண்கள் அமைப்பு தலையிட்டுத் தீர்த்து வைத்து, தொடர் அமைதியை கிராமத்தில் நிலவச் செய்யும் பணியை பெண்கள் அமைப்பே ஏற்றுக் கொள்ளச் செய்யலாம். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் முன்வரவேண்டும்.                                                                  

வ. புதுப்பட்டி கிராம அமைதிக் குழுவில் பங்கேற்றோர் :

1. எஸ். நடராசன், தலைவர், தாத்தா ரெட்டமலை சீனிவாசனார் பேரவை 2. சிம்சன், தலைவர், ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் 3. யாக்கன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை 4. புனித பாண்டியன் ஆசிரியர், "தலித் முரசு' 5. வழக்கறிஞர் பெ. தமிழினியன், சென்னை உயர்நீதி மன்றம்

6. மு. பா. எழிலரசு பொறுப்பாசிரியர், "எழுச்சி' மாத இதழ் 7. சு. சத்தியச் சந்திரன், வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம் 8. மருத்துவர் இனியன் இளங்கோ 9. ரஜினிகாந்த், வழக்கறிஞர் சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, 10. ஜெயராணி பத்திரிகையாளர் 11. ஜெய்கணேஷ், கல்லூரி விரிவுரையாளர்.

அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை!

விருதுநகர் மாவட்டம், வ. புதுப்பட்டி கிராமத்தில் பட்டியல் சாதியினராகிய பறையர் மற்றும் பள்ளர் சமூக மக்களிடையே மிக நீண்ட காலமாக நடந்துவரும் மோதல்கள் எங்களைப் பெரிதும் வேதனையடையச் செய்துள்ளன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், பட்டியல் சாதியினர் சிறப்புத் தன்மையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றபோது, வ.புதுப்பட்டி கிராமத்தில் மட்டும் இத்தகைய மோதல்கள் நடப்பது எங்களைப் பெரிதும் கவலையுறச் செய்துள்ளன.

நடந்துவரும் தொடர் மோதல்களுக்குப் பின்னால், தீர்க்கவே முடியாத கடும் சிக்கல்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறு பிரச்சனைகளே கலவரங்களுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. தொடர் மோதல்களினால் பெண்கள் மீதும், பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் மீதும், அநேகமாக இரு சமூகத்தைச் சார்ந்த அனைத்து ஆண்கள் மீதும் கொலை வழக்கு, ஆயுத வழக்கு உட்படப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டள்ளன. இதனால் இரு சமூக மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி பெரிதும் தடைபட்டுள்ளது.

எனவே, வ. புதுப்பட்டி கிராமத்தில் வாழும் பட்டியல் சாதிமக்கள், பழைய பகைமை உணர்வுகளை விட்டொழித்து, மோதல் மனப்பான்மையைக் கைவிட்டு அமைதியாகவும் ஒற்றுமை உணர்வுடனும் வாழவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இரு சமூக மக்களிடையே அமைதி ஏற்படவும், ஒற்றுமையை உருவாக்கவும் கட்சி நிர்வாகிகள் ஒன்றுபட்டுச் செயலாற்றி, அவ்வப்போது உருவாகும் சிறு சிறு பிரச்சனைகளை மக்களோடு பேசி, தீர்த்து வைத்து பொது அமைதியை உருவாக்கிட தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

நீண்ட காலப் பகை உணர்வினால் தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கும் வ. புதுப்பட்டி பட்டியல் சாதி மக்களின் சமூகப் பொருளாதார விழிப்புணர்வுக்கு சிறப்புக் கண்ணோட்டத்துடன் கூடிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என்றும், இரு சமூக மக்கள் மீதும் தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் தமிழக அரசையும் காவல் துறையையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறோம்.

கூட்டறிக்கையில் கையெழுத்திட்டோர்: தொல்.திருமாவளவன், ஜான்பாண்டியன், பி.லிங்கம், வி.பொன்னுப்பாண்டி, சந்திரபோஸ், சாமுவேல், மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சேகர் கூட்டத்தின் இறுதி நிகழ்வாக, வ. புதுப்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த பள்ளர் பறையர் மோதல்களில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிடம் அக வணக்கம் செலுத்தப்பட்டது.

ஒளிப்படங்கள் : ஜெய்கணேஷ்

Pin It