பெரியோர்களே! தோழர்களே! பெருமையுடன், வரலாறுகளுடன், உண்மையான சம்பவங்களுடன் மனித சமுதாயத்துக்கு இந்நாட்டில் எவரும் ஆற்றியில்லாத பெருந்தொண்டை திராவிடர் கழகம் செய்துவருகிறது. இதை மக்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இதற்கு நடுநிலைமை அறிவிருந்தால்தான் முடியும். நான் கூறினாலும், யார் கூறினாலும் விருப்பு வெறுப்பு என்பதில்லாமல் யோசிக்க வேண்டும்.

பொதுவாழ்வில் அல்லது நாட்டு நடைமுறையில் சிலர் சில தவறான உரிமைகளைத் தங்கள் தொழிலுக்கேற்ப கொண்டுவிட்டனர். வியாபாரியை எடுத்துக்கொண்டால், சரக்கு எப்படியிருந்தாலும் அதை உயர்ந்ததென்றே கூறுவான்; அளந்து போடுவதிலும் குறையிருக்கும்; "கள்ள மார்க்கெட்' செய்வான். அதில் ஏமாந்துவிட்ட பேர்வழி வீட்டுக்குப்போய் "வியாபாரி என்னை ஏமாற்றி விட்டான்' என்றால், கேட்பவர்கள் என்ன கூறுவார்கள்? "வியாபாரி என்றால் அப்படித்தானே நடப்பார்கள். நீயல்லவோ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், ‘அட முட்டாளே!' என்பார்களே அல்லாது வியாபாரியைக் குறை கூறமாட்டார்கள். பொதுவாக வியாபாரிக்கு குறைத்து அளப்பது, பொய்க் கணக்கு கூறுவதுதான் உரிமைகள் என்றாய்விட்டது.

அதுபோலவே, வழக்கறிஞர்களும் பொய் என்று தெரிந்தும் அதை நீதிமன்றத்தில் மெய் என்று வாதாடுகிறார்கள். அது அவர்கள் தொழிலுக்கேற்ற உரிமை. இது போன்று சிலருக்குச் சமுதாயத்தில் சில உரிமைகள் இருந்து வருகின்றன, அவர்கள் பிழைப்புக்கு. ஆனால், அதில் நாம் ஏமாறாமல் எச்சரிக்கையாயிருந்து பகுத்தறிவைச் செலுத்தி சிந்தித்து முடிவுகட்டவேண்டும். அந்த நிலையிலிருந்து திராவிடர் கழகக் கொள்கைகளை ஆராய்ந்து பார்த்தால், அதன் உண்மையான தொண்டுகள் விளங்குமேயன்றி எவன் கூறுவதையோ நம்பி, கண்டவாறு பேசுவதால் பயன் ஏற்படாது.

திராவிடர் கழகம் இந்நாட்டு மக்களை "தெய்வத்' தன்மையுடையவர்களாக, பூதேவர்களாக ஆக்காவிட்டாலும், மனிதத் தன்மை உடையவர்களாக ஆக்கிவருகிறதென்பதைத் துணிந்து எவராவது மறுக்க முடியுமா? இந்நாட்டை ஆண்ட மக்கள் நாகரிகத்தை உலகத்தாருக்கு கற்பித்த மக்கள்; வீரமும் அறிவாற்றலும் அன்புநெறியும் கொண்ட மக்கள் அவர்கள் இன்று ஏன் சூத்திர சாதியாய், பஞ்சம சாதியாய் இருக்க வேண்டுமென்று யாராவது கவலைப்பட்டதுண்டா? பாமர மக்கள் ஒன்றுந் தெரியாமல் சூத்திரன் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்று கருதவேண்டாம். பிரதமர் கனம் ஓமந்தூரார், பிரதம நீதிபதி ராஜமன்னார் சூத்திரர்தாமே! அகில உலக அரசியல் அறிஞர் சர். ராமசாமி முதலியார், தன்னைச் சூத்திரர் இல்லை என்று மறுக்க முடியுமா? மகாமகா கெட்டிக்காரர் சண்முகஞ் செட்டியார் இன்றைய சூத்திரர்தானே! ஏன், நாயன்மார்களிலும் ஆழ்வாராதிகளிலும் சூத்திரர் இருக்கின்றனரே! "அடியேன்' தாசானுதாசன் என்பவர் முதல், அடியேன் நாய்க்குட்டி என்று பக்திப் பிரவாகமெடுக்கும் சைவவைணவ பக்தர்களும் சூத்திரர்கள்தாமே, இன்றைய சமுதாய நிலையில்!

இந்நாட்டுக்கு உரியவர்களான 100க்கு 95 பேர் கல்வியில், பொருளாதாரத்தில், பிரதிநிதித்துவத்தில், சமுதாய வரிசையில் தாழ்ந்தவர்களாக ஆக்கப்பட்டு இருப்பதை யார் மறுக்க முடியும்? சிலர் கொழுத்திருக்கலாம் நான் மேலே கூறிய கனவான்களைப் போலொத்தவர்கள். ஆனால், அவர்களும் சமுதாயவரிசையில் "கீழ்மக்கள்' தாமே! இப்படி ஆவதற்குக் காரணம் என்னவென்று எங்களைத்தவிர யார் யோசித்தவர்கள்? இவைகள் மாறப் பணியாற்றுவது யார் என்று கேட்கிறேன்?

இதுவரைதான் இப்படியிருந்தாலும் 1948 இலும் ஏன் இவ்வித இழிநிலை என்பதை சிந்தித்து கவலைப்படமாட்டேன் என்கிறார்களே? கவலைப்படாவிட்டால் தொலைகிறது. நாங்கள் அதுபற்றி தொண்டாற்ற வந்ததும் நன்றியில்லாமல் எங்களை வசைபாடுவதா? சிறிதேனும் நம் மக்களுக்கு மான உணர்ச்சி வேண்டாமா? நம் இனத்தின் பெருமை என்ன? நாட்டின் வளப்பமென்ன? அந்த வழியில்வந்த நாமா இன்று இழிமக்கள் அதுவும் நமது நாட்டில்? இதைப்பற்றி யாரும் சிந்திப்பது கிடையாது.

எனவே, அவ்வித வேலையை மேற்கொண்டிருப்பது தான் திராவிடர் கழகம். எப்பேர்ப்பட்ட தொல்லைவரினும் அதைச் சமாளித்துக்கொண்டு எவ்விதத்திலும் இந்நாட்டில் இனி சாதி, மத, கடவுள், சாஸ்திர சம்பிரதாயங்கள் பேரால் ஏற்பட்டிருக்கும் சூத்திரன் தாழ்ந்தவன், பறையன், பஞ்சமன் என்ற பிரிவுகளை ஒழிப்பதே எங்கள் வேலை என்று முடிவு கட்டிவிட்டோம். நாங்கள் செய்வதைக் காங்கிரசு திராவிடர்களோ மற்றவர்களோ நம்பாவிட்டால், அவர்கள் வந்து இப்பணியை ஆற்றட்டும். யாராலேயோ, எந்த விதத்திலேயோ சூத்திரன், பஞ்சமன், பார்ப்பனர் என்ற சாதி ஆணவங்கள் அறவே ஒழிந்து தீரவேண்டும்.

– தொடரும்

(சென்னை பெத்துநாயக்கன் பேட்டையில் சொற்பொழிவு "விடுதலை' 14.11.1948)

Pin It