பா.குப்பனின் குற்றச்சாட்டுகள் “பெருங்காவூர் இராசகோபாலாச்சாரி என்ற பிராமணரை சபைநாயகராக ஆங்கிலேயே ஆளுநர் நியமித்தபோது அதை நீதிக் கட்சியினர் எதிர்க்கவில்லை; மாறாக மனமுவந்து ஏற்றுக் செயல்பட்டனர். இது நீதிக் கட்சியினரின் பிராமண எதிர்ப்பு போலியானது என்பதற்கு முதல் எடுத்துக்காட்டு”(பக் 49) என்கிறார் பா.குப்பன்.

1919 இல் ஏற்பட்ட இரட்டை ஆட்சியில் முதல் முறை மட்டும் சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் உரிமை சட்டசபைக்கு கொடுக்கப்படவில்லை. சபாநாயகர் ஆளுநர் நியமனம் என்பதை பா.குப்பனே தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு சட்டம் இயற்றும் எந்த அதிகாரமும் கிடையாது. அவர் வெறும் பொம்மைதான். அந்த பார்ப்பனர் சபாநாயகராக இருந்த போது தான் பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடிய இரண்டு வகுப்பு வாரி உரிமை அளிக்கக் கூடிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன என்பதை பா.குப்பன் அறிவாரா?

முதல் வகுப்புரிமை அரசானை 16-9-1921 இலும் இரண்டாவது வகுப்புரிமை அரசாணை 15-8-1922 இலும் பிறப்பிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் தான் 1922 முதல் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் 50% இடஒதுக்கீடு அளிக்கும் தீர்மானமும் அதனை கண்காணித்து மாணவர் தேர்வு குழுக்களும் அமைக்கப்பட்டன.

பா.குப்பன் சொல்லும் பார்ப்பனர் சபாநாயகராக இருந்த காலத்தில்தான் பார்ப்பனர் கோயில்களில் கொள்ளை அடித்து வந்ததை தடுக்கும் விதத்தில் இந்து அறநிலையத் துறை பாதுகாப்பு மசோதாவை, பனகல் அரசர் 8.12.1922 இல் முன்மொழிந்து 1923க்குள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பார்ப்பனரல்லா தாருக்கும் ஆதி திராவிட மாணவர்களுக்கும் பயனளிக்கும் பல விவாதங்கள் சட்ட மன்றத்தில் விவாதிக்கப்பட்டு பார்ப்பனரல்லாதாருக்கு சாதகமான பல சட்டங்கள் இயற்றப்பட்டன. நீதிக்கட்சியினரின் பார்ப்பன எதிர்ப்பு போலியானது என பா.குப்பன் கூறுவதில் ஒரு சிறிதும் உண்மை இல்லை.

அடுத்தக் குற்றச்சாட்டு “சேதுரத்தினம் அய்யரை அமைச்சராக சேர்த்துக் கொண்டது”. 1926 இல் சுயேச்சை அமைச்சரவை அமைத்த சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சுயராச்சிய கட்சியை சேர்ந்த அரங்கசாமி முதலியார் ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் சைமன் கமிஷனை டாக்டர் சுப்பராயன் வரவேற்றதை கண்டித்து பதவி விலகினர். டாக்டர் சுப்பராயன் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டது. அன்றைய ஆளுநர் நீதிக்கட்சியினரை அழைத்து டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டுக் கொண்டார். நீதிக்கட்சியை சார்ந்த முத்தையா முதலியாரையும் சுயராச்சிய கட்சியில் இருந்து விலகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு வந்த சேதுரத்தினம் அய்யரையும் அமைச்சரவையில் சுப்பராயன் சேர்த்துக் கொண்டார்.

1926 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தது. சுயராஜ்ஜிய கட்சி தான் வெற்றி பெற்றிருந்தது. நீதிக்கட்சியில் 21 சட்டமன்ற உறுப்பினர்களும், சுயராய்ச்சிய கட்சியில் 41 சட்டமன்ற உறுப்பினர்களும் சுயேச்சைகள் 36 பேரும் அப்போது இருந்தனர். சுயராச்சிய கட்சியில் பெரும்பாலும் பார்ப்பனர்களே அதிக அளவில் இருந்தனர். அவர்களின் எதிர்ப்பை சமாளிக்க பார்ப்பனரான சேதுரத்தினம் அய்யர் சுயேச்சை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

சேதுரத்தினம் அய்யர் திருச்சியை சேர்ந்தவர். 1920 தேர்தலில் சுயேச்சையாகவும், 1923, 1926 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியிலிருந்து சுயராஜ்ய கட்சி வேட்பாளராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டவர். பா.குப்பன் பார்வையில் இராஜாஜியும், சத்திய மூர்த்தி அய்யரும் தமிழ்ப் பார்ப்பனர்களாக இருக்கும் போது மணத்தட்டை சேதுரத்தினம் அய்யர் மட்டும் எப்படி தெலுங்கு பார்ப்பனராக மாறிவிட்டார் என்பது நமக்கு புரியவில்லை.

ம.பொ.சி ஆதரித்தால் அவர்கள் தமிழ்ப் பார்ப்பனர்கள். ம.பொ.சி எதிர்த்தால் இவர் தெலுங்கு பார்ப்பனரா? என்ன அளவு கோலை வைத்திருக்கிறார் பா.குப்பன்? மஞ்சள்காமலை வந்தவன் கண்களுக்கு பார்க்கப்படும் பொருள்கள் அனைத்தும் மஞ்சளாகவே தெரியுமாம். அதைப் போலத்தான் நீதிக்கட்சி என்றாலே குப்பனுக்கு தெலுங்கராகத் தெரிகிறார் போலும். அந்தப் பார்ப்பனரை அமைச்சர் அவையில் வைத்துக் கொண்டுதான் முத்தையா முதலியார் வகுப்புரிமை அடிப்படையில் அரசானை பிறப்பித்து நடைமுறைப்படுத்தினார். டாக்டர் சுப்பராயன் சத்திய மூர்த்தி பார்ப்பனர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த போதும் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றினார். விபச்சாரத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றினார். அதைக்கூட சத்திய மூர்த்தி எதிர்த்தார். விபச்சாரத்தை ஒழித்து விட்டால் காமவெறியர்கள் குடும்பப் பெண்களை எல்லாம் கொடுத்து விடுவார்கள். ஆகவே விபச்சார ஒழிப்பு சட்டம் கூடாது என்று வாதாடினார். இவர்தான் ம.பொ.சி.க்கு தலைவர் பா.குப்பனுக்கும் தலைவர். டாக்டர் சுப்பராயன் கொண்டு வந்த எந்தச்சட்டத்தையும் சேதுரத்தினம் அய்யர் எதிர்க்கவில்லை. அதற்கு ஆதரவாகவே செயல்பட்டார். இதைக் கொண்டு நீதிக்கட்சியினருக்கு பார்ப்பன எதிர்ப்பு இல்லை அது போலியானாது என்று பா. குப்பன் கூறுவதில் உண்மையில்லை என்பது புலப்படும்.

நெல்லூர் பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் அமைச்சரவையில் மட்டும் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நீதி கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற பெரியாரின் தீர்மானத்தை காட்டி பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு போலியானது என்கிறார் பா.குப்பன் (பக் 49)

நெல்லூர் மாநாடு 5, 6-10-1929 இல் நடைபெற்றது. அதற்கு முந்தைய வாரமே குடி அரசு இதழில் பெரியார் நீதிக்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். “பார்ப்பனர்களை தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுவது என்கிற முடிவுக்கு வந்தால் அன்றே அந்த இயக்கம் தோல்வி அடைந்து விட்டது. செத்துப்போய் விட்டது, என்பதை மாத்திரம் ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்... பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளுவது என்கிற விஷயம் நிறைவேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் மிகவும் முக்கியமான விஷயம்... எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால் இவ்வியக்கம் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட்டது போல் இயக்கம் செத்து பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் மாறிவிடும் என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக உறுதியாய்ச் சொல்லுவோம்”....

“பார்ப்பனரர்களுக்குள்ள அரசியல் பங்கை மோசம் செய்ய வேண்டும் என்றும் நாம் சொல்வதில்லை. நமது கொள்கைக்கும், நன்மைக்கும் விரோதமில்லாத பார்ப்பனர்களுக்கு அவர்களது பங்கைக் கொடுக்க நாம் தயராகவே இருக்கிறோம்”. (குடிஅரசு 22-9-1929) 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்று விட்டவுடன் 1927 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து தான் இந்த நெல்லூர் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவர் சித்தூர் முனிசாமி நாயுடுவும், ஏ.பி.பாத்ரோவும் நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை மாற்றுவதற்காவே. கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம். தேர்தல்களிலும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டாம். தாங்களாகவே வெற்றி பெரும் பார்ப்பனர்களில் நாம் கொள்கைக்கு ஒத்து வருபவர்களை அமைச்சராக வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்ற நீதிக்கட்சியினரின் தீர்மானத்தை பெரியார் வழி மொழிந்தார். தெலுங்கரான மனத்தட்டை சேதுரத்தினம் அய்யரை விழுந்து விழுந்து வழிமொழிந்தார் பெரியார் என்பது உண்மையல்ல. சேதுரத்தினம் அய்யர் பதவி ஏற்றுக் கொண்டது 16-3-1928 இல் நெல்லூர் மாநாடு நடைபெற்றது 5, 6-10-1929. சேதுரத்தினம் அய்யர் பதவி ஏற்று ஒன்றரை ஆண்டுகள் கழித்துத் தான் நெல்லூர் மாநாடு நடைபெற்றது.

பெரியார் பார்ப்பனர்களைத் திட்டிக் கொண்டே வாசன் போன்ற பார்ப்பனர்களிடம் பணம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் வாசன் தொடக்கக் காலத்தில் பத்திரிக்கை முதல்வராக இருந்தார். பெரியாரின் குடி அரசு ஏட்டுக்கு ஏஜெண்டாகவும் இருந்து பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வளர்ந்தார். அந்த நன்றிக் கடனுக்காக ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாளில் அவரே நேரில் வந்து அய்யாவை வணங்கிவிட்டு இயக்க வளர்ச்சிக்கு பணம் கொடுத்துவிட்டுப் போவார். பெரியார் வாங்கிய பணத்தையெல்லாம் பொது மக்களுக்கு பயன்படும் படி செய்து விட்டுபோனார். ஆனால் உங்கள் தலைவர் ம.பொ.சிக்கு கொடுத்தப் பணத்தையெல்லாம் தன் வீட்டுக்கு கொண்டு போனார். ஆனால் நான் யாரிடமும் பணமே வாங்கவில்லை என்று நிதிவாங்க மறுத்தேன் என்ற தலைப்பில் எனது போராட்டத்தில் பொய்யாக எழுதியுள்ளார். திராவிட இயக்க கலைஞர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் திரைக்கலைஞர்களிடம் பணம் வசூலித்து பியட் கார் ஒன்றை பரிசாக அளித்தார். என்.எஸ்.கே. மேடையில் பேசும்போது “நான் வாங்கி வந்த காரை தூக்கி காட்டமுடியாதல்லவா அதனால் அந்த காரின் காவியை காட்டுகிறேன்” என்று கூறியுடன் அவையில் பலத்த கைத்தட்டலுக்கிடையே காரின் சாவியை ம.பொ.சியிடம் வழங்கினார். ரூ 30,000 பணமுடிப்பு வழங்கப்பட்டது. இந்த பணம் எனக்கல்ல கஷ்டத்தில் வாடும் என் மக்களுக்கு பிள்ளைகளுக்கு என்று வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டார்.

adithanarசி.ப.ஆதித்தனார் பதவிக்காக தி.மு.கவுக்கு போகவில்லை. மாறாக, ஆதித்தனாரின் மணிவிழாவிற்குக் கருணாநிதி நேரில் வந்து “சுதந்திர தமிழ்நாடு” வரைப்படம் போட்ட கேடயம் ஒன்றைக் கொடுத்து, “இன்று வரைப்படம் நாளை தனிநாடு இலக்கு ஒன்றே நாம் சேர்ந்து செயல்படுவோம்” என்று ஏமாற்று உரையாற்றினார். அதனை தொடர்ந்து அண்ணாதுரை ஆதித்தனாரை அவருடைய வீட்டில் சந்தித்து “நமது கருத்து ஒத்திருப்பதால் இணைந்து செயல்படுவோம்!” என்று கூறியதால் தான் ‘நாம் தமிழர்’ அமைப்பு இணைந்தது என்கிறார் (பா.குப்பன் பக்111)

பா.குப்பன் இதே நூலில் பக் 43 இல், அண்ணாதுரை இந்திய சீன எல்லைப் போரைக் காரணம் காட்டி 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் நாளான்று திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை கை விடுவதாக அறிவித்தார்”. என்று எழுதியுள்ளார்.

1963 இல் நாட்டு பிரிவினையை கை விட்ட தி.மு.க. வினர் 1965 இல் எப்படி ஆதித்தனாருக்கு ‘தமிழ்நாடு’ வரைபடம் போட்டகேடயத்தை கருணாநிதி வழங்கி இருக்க முடியும்? கருணாநிதிக்கு மட்டும் தனிக் கொள்கை இருந்ததா? ஆதித்தனாரை காப்பாற்ற பா.குப்பன் மூளையில் உதித்த கற்பனை தான் இது.

1944 இல் தமிழ் அரசு கட்சி என்று அமைப்பை தொடங்கிய ஆதித்தனார் ‘தமிழ்க் கொடி’ என்ற ஏட்டையும் அப்போது தொடங்கினார். ‘தனித் தமிழ் நாடு’ தான் தன்னுடைய கோரிக்கை என்றார்.

1945 இல் ‘தமிழ் அரசு கட்சியை’ கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தது ஏன்? மேலவை உறுப்பினர் M.L.C பதவிக்குத் தானே வேறு என்ன காரணம்? 1950 இல் காங்கிரசு அரசு பனை மரத்துக்கு வரிவித்தது. தன்னுடைய நாடார் சாதியினருக்கு தொல்லையாக அது ஒட்டுவிழாது என்ற காரணத்தினால் காங்கிரசை விட்டு வெளியே வந்த ஆதித்தனார், 1952 இல் வட இந்தியத் தலைவரான ஆச்சாரியா கிருபாளினையைத் தலைவராக் கொண்ட அகில இந்திய கட்சியான (Kissan mustur prja party)K.M.P.P யில் ஏன் சேர்ந்தார்? M.L.A. பதவிக்குத்தானே, வேறு என்ன காரணம், பா.குப்பன் அவர்களே இத்தனைக்கும் கிருபாளணி மொழி வழி மாநில கோரிக்கைக்கு எதிராவனர். இந்தி வெறியர். ஆதித்தனர் தமிழ்நாட்டில் ‘கிஸான்’ போராட்டத்தை நடத்தினார் விவசாயிகள் போராட்டம் என்று சொல்லவில்லை குப்பன் அவர்களே.

நாம் தமிழர் இயக்கத்தை கலைத்து விட்டு 1967 இல் தி.மு.க வில் சேர்ந்து சபாநாயகரான ஆதித்தனர் 1971 இல் அமைச்சராகவும் 1980 தேர்தலில் தி.மு.கவில் M.L.A. சீட்டு கொடுக்கவில்லை. 1980 இல் நீங்கள் மலையாளி என்று கூறும் எம்.ஜி.ஆரிடம் ஓடி அண்ணா தி.மு.வில் ஏன் சேர்ந்தார்? பா.குப்பன் அவர்களே தனித்தமிழ் நாடு கேட்டுப் போராடவா? உங்கள் தலைவர் ம.பொ.சியும். 1976 இல் தமிழ்நாட்டில் பிறமொழியினர் என்ற நூலை எழுதிவிட்டு, 1977 தேர்தலில் தி.மு.க தோற்றுவிட்டு அ.தி.மு.க அதிக இடங்களைப் கைப்பற்றியவுடன் மேலவை துணைத்தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக இராமாவரம் தோட்டத்திற்கு சென்று உங்களால் மலையாளி எனக் கூறப்படும் எம்.ஜி.ஆரின் வீட்டுக் கதவை தட்டினாரே அப்போது எம்.ஜி.ஆர் பிறமொழியினர் என்று தெரியவில்லையா? குப்பன் அவர்களே! எம்.ஜி.ஆர்.ஆதித்தனாருக்கும் ம.பொ.சிக்கும் தனித் தமிழ்நாடு பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தாரா? குப்பன் அவர்களோ! பொய்க்கால் குதிரைகளின் மீது அமர்ந்து கொண்டு பெரியாரை மண் குதிரை என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது பா.குப்பன் அவர்களே!

பகுத்தறிவாளர் என்றும் சிந்தனையாளர் என்றும் பாராட்டப்பட்டப் பெற்ற ஈ.வெ.ரா சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது முதல் தாமே அதற்குத் தலைவராயிருந்தார். நீதி கட்சியில் இணைந்த போதும் அந்த நீதிக்கட்சியின் தலைவராகவே இணைந்தார். நீதிக்கட்சியின் பெயர் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதும் அதற்கும் தலைவரானார். தாம் இறக்கும் வரையில் அவர் அந்தத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை. ஈ.வெ.ரா பதவி வெறியர் இல்லையா என்கிறார் பா.(குப்பன் பக் 112) சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக 11.5.1930 அன்று ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ஊ.பு.அ சௌந்தர பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊ.பு.அ சௌந்தர பாண்டியன் அவர்கள் இராமநாதபுரம் ஜில்லா போர்டுத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த போது பெரியார் கீழ்க்கண்டவாறு எழுதினார். உயர்திருவாளர், “ஊ.பு.அ சௌந்த பாண்டியர் அவர்களின் இராஜினமா. மானம் பெரிதொழிய ஸ்தானம் பெரிதல்ல சுயமரியாதை வீரரின் சுயமரியாதைச் செயல்! சுயமரியாதைத் தலைவர். சுயமரியாதைச் சங்கத்தின் தலைவர், உயர் திரு ஊ.பு சௌந்தர பாண்டியனார் அவர்கள் இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவியை சிறிது நேரத்தில் இராஜினமா செய்து உண்மைச் சுயமரியாதைக்கு உதாரணமாய் விளங்கி விட்டார்.” என்று பெரியாரே எழுதியுள்ளார். செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டுக்கும் தலைவர் சௌந்தர பாண்டியன் தான். சுயமரியாதை இயக்கத்தின் தலைவராகவும் சௌந்தர பாண்டியன் தான் இருந்தார். பா.குப்பன் சொல்வது போல் பெரியாரே சுயமரியாதை இயக்கத்தின் நிரந்தர தலைவரல்ல. கி.ஆ.பெ.விசுவநாதன் 1920 முதலே நீதிக்கட்சியில் இருந்தவர் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய 1925 ஆம் ஆண்டிலிருந்து பெரியாருடன் இணைந்து செயல்பட்டார்.

1938 இல் இந்தி எதிர்ப்பின் போது இராஜாஜி நீதிக்கட்சியின் தலைவர் பொப்பிலி அரசரை அக்கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகுமாறு மிரட்டினார். பொப்பிலி அரசர் பயப்படவில்லை. இராஜாஜியும் சும்ம இருக்கவில்லை. ஜமின் தாரி ஒழிப்பு மசோதாவை கொண்டு உங்கள் ஜமின் சொத்துகளை அரசுடைமை ஆக்கி விடுவேன் என்று மிரட்டியதால், மற்ற ஜமீன்தார்கள் பொப்பிலி அரசருக்கு நெருக்கடி கொடுத்து நீதிக்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகி விடுமாறு வற்புறுத்தினர். பொப்பிலி அரசர் விலகி விட்டால் நீதிக்கட்சியை ஒழித்து விடலாம் என இராஜாஜி கனவு கண்டார். பொப்பலி அரசர் நீதிக்கட்சி தலைவர் பதவிலியிருந்து விலவி விட்டார். இந்த நிலையில் தான். கி.ஆ.பெ.விசுவநாதமும் ஏ.டி.பன்னீர் செல்வமும் பெல்லாரி சிறையில் இருந்த பெரியாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பெரியாரை நீதிக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கும்படி வற்புறுத்தினர். பெரியாருக்கு அதில் விரும்பம் இல்லையெனினும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார். தலைவரின் தலைமை உரையை அங்கேயே பெரியாரிடம் கேட்டு எழுதி வாங்கி வந்தனர். 1938 டிசம்பர் 29, 30,31 மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் பெரியாரின் படத்தை வைத்து அதற்கு மாலையிட்டு பெரியாரின் தலைமை உரையை ஏ.டி.பன்னீர் செல்வமும், கி.ஆ.பெ. விசுவநாதமும் படித்தனர். (கி.ஆ.பெ.விசுவநாதன் எனது நண்பர்கள் பக் 96) பெரியார் தானே தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலும் பா.குப்பனின் வாதம் தவறானதே.

நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் ஒரு முறை தம் இல்லத்தில் பெரியாருடன் பேசிக் கொண்டிருக்கும்போது “அய்யா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை மட்டுமே நடத்தி வந்திருக்கலாம்; நீதிக்கட்சிக்கு தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டியதில்லையே" என்று கேட்டுள்ளார். அதற்கு பெரியார் அவர்கள் “என்னை வந்து கேட்டவர்கள் தமிழுக்காக நிறைய சேவை செய்தவர்கள். அவர்களே வந்து வேறு வழி என்று இல்லை கூறும்போது எனக்கு வேறுவழி இல்லாததால்தான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார். (நெ.து.சு. நினைவு அலைகள் முதல் தொகுதி பக் 740-742)

ஆக பெரியாருக்கு விருப்பம் இல்லாமல் தான் அதன் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். திராவிடர் கழகத்துக்கு தலைவராக ஜனநாயக முறைப்படி 1944 இல் சேலம் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1950 முதல் 1962 வரை வழக்குரைஞர் தி.பொ. வதாச்சலம் தான் திராவிடர் கழகத் தலைவர். குத்தூசி குருசாமி தான் அதன் பொதுச் செயலாளர். தி.க.செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் எல்லாமே தி.பொ.வேதாசலத்தின் தலைமையிலே நடைபெற்று வந்துள்ளதை விடுதலை ஏட்டில் காண முடிகிறது. 34 ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் இருந்த பா.குப்பனுக்கு தி.க.வரலாறே தெரியாதது வெட்கப்படவேண்டிய செய்தியாகும். அது சரி பா.குப்பனின் தலைவர் மட்டும் என்னவாம்? 1946 இல் தமிழரசுக் கழகம் அமைத்த நாள் முதல் 1989 இல் ராஜீவ் காந்தி முன்னிலையில் காங்கிரசில் அந்த இயக்கத்தை கரைக்கும் வரையில் அவர் தானே அதன் நிரந்தரத் தலைவர்.

வரலாற்றை திரிப்பதில் ம.பொ.சியை விட அவரது சீடர்கள் பன் மடங்கு உயர்ந்துள்ளனர். நான் ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா என்ற நூலில் M.L.A, M.L.C போன்ற பதவிகளுக்காக அவர்கள் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு போய் விட்டார்கள் என்று எழுதினால் பா.குப்பன் கட்சி தலைவர் பதவியைப் பற்றி எழுதி திரிபுவாதம் செய்கிறார். நான் ம.பொ.சி தமிழரசு கழகம் கண்ட பிறகும். இந்தியைக் கட்டாய பாடமாக்க வேண்டும் என்று எழுதியதையும். 1955 இல் இந்தி ஆட்சிமொழி ஆணையத்திற்கு சாட்சிய மளித்த ம.பொ.சி. இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தித்தான் இருக்கவேண்டும். நாடாளுமன்ற நிர்வாகம் கூட இந்தியில் நடத்தலாம். அந்த மாநிலத்தவருக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மட்டும் அவரவர் தாய்மொழியை அனுமதித்தால் போதும், சுப்பிரீம் கோர்ட்டு வாதங்கள் தீர்ப்புகள் கூட இந்தியிலே வெளிவரலாம் என்று கூறியதை எழுதியிருந்தேன். ஆனால் பா.குப்பன் 1938 இல் கட்சிகட்டுப்பாட்டுக்கு கட்டுபட்டு இந்தியை ஆதரித்தார் என்று மழுப்புகிறார். நான் எழுதியது. காங்கிரசை விட்டு வெளியே வந்த பிறகும் இந்தியை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தது ஏன் என்ற கேள்விக்கு விடையைக் காணோம்.

தனி ஆந்திரம் பிரிய வேண்டும் என்று உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த பொட்டி சீரிராமுலுவைப் பற்றியும் பா.குப்பன் தவறான கருத்தையே எழுதியுள்ளார். “சர். பிட்டி தியாகராயரின் உடன் பிறந்தாளின் மகனான பொட்டி சீராமுலு சென்னை மயிலாப்பூரில் புலுசு சாம்பமூர்த்தி என்பவரின் வீட்டில் உண்ணாவிரதம் இருந்தார்.” என்று எழுதுகிறார். தியாகராயர் தேவங்கர் துணிநெய்யும் நெசவு தொழில் செய்யும் சாதியைச் சார்ந்தவர். பொட்டி சீராமுலு பேரி செட்டி சாதியைச் சேர்ந்தவர் இவர் எப்படி தியாகராயரின் தங்கை மகனாக முடியும்? அருகோபாலன் ஏற்கனவே எழுதிய பொய்யைதான் பா.குப்பன் மறுபடியும் எழுதியுள்ளார்.

பொட்டி சீராமுலுவின் மனைவி இவருக்கு 28 வயது இருக்கும் போதே இறந்துவிட்டார். பிறந்த ஒரே குழந்தையும் இறந்துவிட்டது. அதனால் விரக்தியடைந்த அவர் மும்பையில் இரயில்வே வேலையை ராஜினமா செய்துவிட்டு காந்தியின் சபர்மதி ஆகிரமத்தில் பத்தாண்டுக்கும் மேலாக பணியாற்றியவர். தீவிர காங்கிரஸ்காரர். மயிலாப்பூர் இருந்த புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரப் பார்ப்பனர் (இவர் இராஜாஜி 1937-38 முதல்வராக இருந்த போது சபாநாயகராக இருந்தவர்.) வீட்டில் தான் தனி மாநில ஆந்திரம் கோரி 19-10-52 முதல் 15-12-52 வரை உண்ணாவிரதம் இருந்தார். அப்போது இராஜாஜி தான் முதலமைச்சர். ராஜாஜி நினைத்திருந்தால் அந்த இறப்பைத் தடுத்திருக்க முடியும். இராஜாஜியும் ஆந்திராவுக்கு ஆதரவாக சீராமுலு சாகட்டும் என்றே விட்டு விட்டார். தியாகராயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற பொய்யான செய்திகளை வரலாறாக எழுதுகிறார்கள். அருகோவும், பா. குப்பனும்.

- வாலாசா வல்லவன்

Pin It