பார்ப்பனர்கள் அணியும் ஆடைகள் ஏன் வேறுபட வேண்டும்? அரைக்கச்சைக்குரிய இழைகள் வேறுபடுவானேன்? பூணூல் இழைகளும் வெவ்வேறாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? ஏந்து கொம்புகள் வெவ்வேறு மரத்தினால் ஆனதாக இருப்பானேன்? கொம்பின் நீளம் வேறுபடுவது ஏன்? "பவதி' என்னும் சொல்லை வெவ்வேறு இடங்களில் வைத்து யாசிப்பது ஏன்? இவ்வேறுபாடுகள் அவசியமோ நன்மை தருவனவோ அல்ல. இதற்குரிய ஒரே விளக்கம் கடவுளுடைய உடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு வகுப்பினர் உருவாக்கப்பட்டனர் என்னும் நம்பிக்கையின் காரணமாகவே இந்துவர்க்கத்தினர் ஒருவர் மற்றொருவரிடமிருந்து தனித்து வேறானவராக இருக்கிறோம் என்று கருதுகிறார்கள்.

ambedkar_313இந்த நம்பிக்கையே இந்துக்கள் தம்மிடையேயுள்ள வேறுபாடுகளைப் புறக்கணிக்காமல், அதை ஏற்க வலியுறுத்துவதுடன் பலரறியப் பிரகடனம் செய்யத் தூண்டுகிறது. ஒரு சாதி இருக்கிறதென்றால், அதற்குரிய தனித் தலைப்பாகையும் தனிப் பெயரும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதப்பிரிவிற்கும் தனித் தலைப்பாகை உண்டு. இந்தியாவில் 92 மதப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனிக் குறியீடுகள் உள்ளன. ஒன்றுக்கொன்று வேறுபட்ட 92 குறியீடுகளை உருவாக்குவது பெரிதும் கடினமே. எனினும், மிகத் திறமையாக இது சாத்தியமாக்கப் பட்டுள்ளது. இந்துக்கள் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருப்பதை, மூர் என்பவர் "இந்து கடவுளர்' பற்றி வரைந்துள்ள படச்சித்திரங்களிலிருந்து அறியலாம்.

பிரிந்து நிற்பதும் தனித்து நிற்பதுமான உணர்வுகளின் வெளிப்பாட்டை சாதி முறையில் காணலாம். பன்மையில்தான் சாதி இருக்கிறது; ஒருமையில் இல்லை. சாதி என்பது ஒன்றாக இருக்க முடியாது; அவை பலவாக உள்ளன. சாதி பன்மையில்தான் இருக்க முடியும் என்பதை ஒப்புக் கொண்டபின் எத்தனை சாதிகள் இருக்கின்றன? தொடக்கத்தில் நான்கு சாதிகளே இருந்தன. இன்று எத்தனை சாதிகள் இருக்கின்றன? இரண்டாயிரத்திற்குக் குறையாமல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது மூவாயிரமாகக் கூட இருக்கலாம். இது வியக்கத்தக்க எண்ணிக்கை மட்டுமல்ல, வேறு விளைவுகளும் இதனால் ஏற்பட்டுள்ளன. சாதிகள் துணைசாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன; அவை எண்ணற்றவை.

பிராமண சாதியில் 1886 துணை சாதிகள் உள்ளன. பஞ்சாபில் மட்டும் சரஸ்வத பிராமணர் 469 துணைசாதிகளாகப் பிரிந்துள்ளனர். பஞ்சாபிலுள்ள காயஸ்தர் 890 துணைசாதிகளாகப் பிரிந்துள்ளனர். சிறுசிறு துண்டுகளாகச் சமூகம் பிரிந்திருக்கும் எல்லையற்ற நிலையைச் சுட்டிக் காட்டிக் கொண்டே போகலாம். பிரிக்கும் முறை சமூக வாழ்க்கையைச் சகிக்க முடியாததாக்கி விட்டது. விலக்கப்பட்ட துணைசாதிகளில் மணஉறவு கொள்ளாமல், விதிப்படி திருமணம் செய்து கொள்வது இயலாததாகிவிட்டது. அந்த அளவுக்குச் சமூகம் சிறுசிறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. சில வணிக துணைசாதிகளில் 100 குடும்பங்களே உள்ளன. ரத்த உறவு முறைகளை மீறாமல், தத்தம் துணைசாதியில் திருமணம் செய்து கொள்வது மிகவும் கடினம்; அவ்வளவு நெருங்கிய உறவினராக அனைவரும் உள்ளனர்.

துணைசாதிகளாகப் பிரிவதற்கு அற்பகாரணங்களே போதுமானவை. இடமாற்றம், தொழில் மாற்றம், சமூக வழக்க மாற்றம், மாசுபடுதல் காரணமாக மாற்றம், செல்வமிகுதியால் வரும் மாற்றம், சச்சரவால் ஏற்படும் மாற்றம், சமயமாற்றம் இவற்றால் சாதிகள் துணைசாதிகளாகப் பிரிய நேரிட்டது... இச்சாதிகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு நடந்து கொள்கின்றன? தனியாக இரு, ஒன்றாக உண்ணாதே, மண உறவு கொள்ளாதே, தீண்டாதே என்று வழிநடத்துகின்றன. இச்சூழ்நிலையை, திரு பிளண்ட் என்பவர் நன்கு விளக்கியுள்ளார்.

“ஓர் இந்து உண்பதற்குத் தனியாகவோ, சக சாதியினருடனோ அமர்கிறான். பெண்கள் ஆண்களுடன் அமர்ந்து உண்ண இயலாது. தலைவர்கள் உண்டு முடிப்பதற்காக பெண்கள் காத்திருப்பார்கள். கச்சா உணவாக இருப்பின் – பொதுவாக சப்பாத்தியே சாதாரண உணவு – மந்திரச் சடங்கிற்குரிய கவனத்துடன் உண்ண வேண்டும். சமையலறையில் அல்லது தரையில் சதுரவடிவ அடையாளமிட்டு அமர்ந்துண்ண வேண்டும். இத்தருணத்தில் அந்நியர் நிழல் படிந்தாலும் உணவு அசுத்தமாகிவிடும்; அவ்வுணவை தூர எறிய வேண்டியதுதான். முகாம்களில் இந்து வேலைக்காரர்கள் ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டு மண் அடுப்பில் உணவு சமைத்துத் தனியாக உண்பதைக் காணலாம்....'' “மொத்தத்தில் உணவு உண்பதற்குரிய விதிகள் தண்ணீர் குடிப்பதற்கும் பொருந்தும்; சிறிது நெகிழ்ந்து கொடுக்கும் போக்கு இதில் காணப்படுகிறது. ஆனால், தண்ணீர் குடிக்கும் பாத்திரம் பிரச்சனைக்குரியது...

– தொடரும்                 

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 98)

Pin It