சகோதரி சகோதரர்களே!
நான் இந்த ஊரில் தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாடு நடந்த பிறகு இன்று தான் முதல் தடவையாக வந்திருக்கிறேன். இந்தக் காஞ்சீபுரம் நமது சரித்திர புராணக் காலங்களில் எப்படி முக்கியமானதோ, அது போலவே தற்கால அரசியல், சமூகவியல் முதலிய இயக்கங்களின் சரித்திரத்திற்கும் முக்கியமானதாக இருந்து வருகிறது. ஸ்ரீமதி பெசண்டம்மையாரின் ஹோம்ரூல் இயக்கம் தேசத்தில் செல்லுபடியற்றதாக ஏற்படுவதற்கும், பெசண்டம்மையாரின் அரசியல் வாழ்வில் மாற்றம் ஏற்படவும், இந்தக் காஞ்சீபுரத்தில் ஸ்ரீமதி சரோஜினியம்மாள் அக்கிராசனத்தின் கீழ்க் கூடிய சென்னை மாகாண கான்பரன்சில்தான் அஸ்திவாரம் போடப்பட்டது. அது போலவே காங்கிரஸ் இயக்கம் தேசத்தில் செல்லுபடியற்றதாகவும், சுயராஜ்யக் கட்சிக்கு உளைமாந்தை வரவும், பார்ப்பனர்களின் சூழ்ச்சி வெளியாகவும் இந்தக் காஞ்சீபுரத்தில் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தலைமையில் கூடிய தமிழ்நாடு மகாநாட்டில் தான் அஸ்திவாரம் போடப்பட்டது. காஞ்சீபுரம் மகாநாட்டிற்கு அப்புறம் தமிழ்நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா தேசத்திலேயே அரசியலிலும் சமூகயியல்களிலும் பெரிய மாறுதல்களும் ஏற்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியாததல்ல.
பொதுவாகப் பார்க்கும்போது ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தலைமையின் கீழ் நடந்த மகாநாட்டுச் சம்பவங்கள் நன்மைக்கு ஏற்பட்டதென்றே தான் சொல்ல வேண்டும். அப்போது நடந்த சம்பவங்கள் அம்மாதிரி நடந்திருக்கவில்லையானால் நாம் எவ்வளவோ ஏமாந்து போயிருப்போம். அச்சம்பவமே நம்மெல்லோரையும் கண்விழிக்கச் செய்தது. தவிர ‘‘தற்கால நிலைமையும் நமது கடமையும்” என்பது பார்ப்பனரல்லாதவர்களின் தற்கால நிலைமையும், பார்ப்பனரல்லாதார்களாகிய நமது கடமையும் என்பதுதான் இன்றைய விஷயமாதலால், காஞ்சீபுரம் மகாநாட்டிலிருந்தே நமது நிலைமையும் நமது கடமையும் என்ன என்பதை நீங்கள் நன்றாய் அறிந்திருப்பீர்கள். அம் மகாநாட்டில் அம்மாதிரி நடைபெறாமலிருந்தால் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி, சுயராஜ்யம், உரிமை ஆகிய வார்த்தைகள் நம்மை ஏமாற்றி நாம் என்றென்றும் தலையெடுக்க முடியாமல், நமது பார்ப்பனர்களால் அழுத்தப்பட்டுக் கிடக்க நேரிட்டிருக்கும். இந்நாட்டின் சுக துக்கத்திற்குப் பொறுப்பானவர்களும், பெரும்பான்மையானவர்களுமான நாம் காங்கிரஸ் பெயரால் நமது பார்ப்பனர்களாலும் அவர்களது அடிமைப் பிரசாரகர்களாலும் ஏமாந்து, நமது நலனைக் கெடுத்துக் கொள்வதோடல்லாமல், நமது நன்மைக்கு என்று ஏற்பட்டதான பிராமணரல்லாதார் இயக்கமாகிய ஜஸ்டிஸ் கட்சியையும் ஒடுக்கியிருப்பார்கள்.
தற்கால காங்கிரஸ் நமக்கு எவ்வளவு தூரம் கெடுதி செய்திருக்கிறது என்பதும், அதனால் நமக்கு எந்தக் காலத்திலும் நன்மை இல்லாததோடு நமது சமூகத்திற்கே அது பெரிய ஆபத்தாயிருக்கிறதென்பதும் நான் சொல்லாமலே நீங்கள் எல்லோரும் அறிந்த விஷயம். இந்தக் காங்கிரசின் மூலம் நமக்காவது நமது நாட்டிற்காவது அனுகூலமான திட்டங்கள் ஏதாவது இருக்கின்றனவா? என்பதை நன்றாய் யோசித்துப் பாருங்கள். பார்ப்பனரல்லாதாரில் சிலர் காங்கிரசில் சேர்ந்ததும், அதற்காக உழைத்ததும், கஷ்டப்பட்டதும், நஷ்டப்பட்டதும், சிறை சென்றதும் எதை உத்தேசித்து என்றால் மகாத்மா திட்டங்களாகிய கதரும், தீண்டாமையும், ஒற்றுமையும், மதுவிலக்கும் மிகுதியும் பார்ப்பனரல்லாதாராகிய நமது சமூகத்திற்கே நன்மை விளைவிப்பதும், தரித்திரத்தை ஒழிப்பதும், சுயமரியாதையையும் சமத்துவத்தையும் அளிப்பதும் ஆன வழிகளுக்கு அனுகூலமாயிருந்ததால்தான் நாம் அதில் முழு மனதோடு இறங்கி உழைத்து வந்தோம். இத்திட்டங்கள் நிறைவேறினால் நமது பார்ப்பனர்கள் வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடுமென்று நினைத்து அவர்கள் இவற்றை காங்கிரசிலிருந்து விலக்கப் பிரயத்தனப்பட்டு அதில் வெற்றியுமடைந்து, இப்போது காங்கிரசையே தங்கள் ஒரு வகுப்புக்கு மாத்திரம் அனுகூலமாகவும் மற்ற வகுப்பாருக்கு ஆபத்து உண்டாக்கத்தக்க மாதிரியாகவும் அமைத்துக் கொண்டார்கள்.
இப்போதைய காங்கிரசில் நிர்மாணத் திட்டமேதாவது இருக்கிறதா? என்று யோசித்துப் பாருங்கள். கதரை அடியோடு காங்கிரசிலிருந்து ஒழித்து விட்டதோடு அதை ஒரு கண்ணியக் குறைவாகவும் கருதும்படி செய்து விட்டார்கள். அதாவது, காங்கிரசுக்காரர்கள் ஓட்டுக் கேட்கும் போது மாத்திரம் கதரைக் கட்டிக்கொள்ளவேண்டிய மாதிரியில் தீர்மானம் செய்திருக்கிறார்கள். இதனால் உண்மையிலேயே ஒருவன் கதரிடம் அபிமானம் கொண்டு கட்டி இருந்தாலும், பொது ஜனங்கள் அவனைப் பார்த்தால் சந்தேகிக்கப்படும்படியாகவும் இவன் திருட்டு ஆசாமி பொது ஜனங்களை ஏமாற்றி ஓட்டு வாங்க கதர் கட்டி இருக்கிறான் என்று பொது ஜனங்கள் நினைக்கும்படியும் செய்து விட்டார்கள். இதனால் எவ்வித அவமானத்திற்கும் கட்டுப்பட தைரியமிருக்கிறவர்தான் கதர் கட்டிக்கொள்ள முடிகிறது. இதனாலேயே தன்மானத்தில் லக்ஷியமுள்ளவர்கள் கதர் கட்டப் பயப்படுகிறார்கள். தீண்டாமை விஷயமாவது காங்கிரசில் இருக்கிறதா? என்று பாருங்கள். தீண்டாதவர்களையும் நம்மையும் கண்ணில் பார்ப்பதற்கே நமது பார்ப்பனர்கள் சம்மதிப்பதில்லை. இது குருகுல விவாதத்தில் நன்றாய் தெரிந்திருப்பீர்கள். இரண்டாவது, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மானம் செய்தவுடன் ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், ராஜன், சாஸ்திரி போன்றவர்களே காங்கிரஸ் கமிட்டியினின்றும் ராஜினாமாச் செய்து விட்டார்கள் என்றால் மற்றப் பார்ப்பனர்களைப் பற்றி நினைக்கவும் வேண்டுமா?
ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பேசும்போதெல்லாம் அரசியலில் தீண்டாமையைக் கலக்காதீர்கள் என்று பேசி வருகிறார். ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் “பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதைப் பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினி இருப்பேன்” என்று சொல்லிக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ஓடிப்போய் விட்டார். இதிலிருந்து காங்கிரசில் தீண்டாமை விலக்கு இருக்கிறதா? என்று பாருங்கள். மதுவிலக்காவது காங்கிரசிலிருக்கிறதா? என்றால் ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் பாமர ஜனங்களை ஏமாற்றிப் பார்ப்பனருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க கருதி மாத்திரம் இவ் வருஷம் “மதுவிலக்குச் செய்ய சம்மதித்தவர்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்” என்றார். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சட்டசபையில் மதுவிலக்குச் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார். பிறகும் ஸ்ரீமான் ஆச்சாரியார் மதுவிலக்கு என்று சொல்லிக் கொண்டு மது உற்பத்தி செய்பவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கப் பிரசாரம் செய்தார். இப்பவும் காங்கிரசிலுள்ள தலைவர்களில் 100-க்கு 90 பேர்களில் மது உற்பத்தி செய்கிறவர்கள் சிலரும், விற்பவர்கள் சிலரும், அருந்துபவர்கள் சிலருமாகவே இருக்கிறார்கள். இன்றும் நாளையும் காங்கிரஸ் காரியதரிசியான ஸ்ரீமான் எ.ரெங்கசாமி அய்யங்கார் சாராயம், பிராந்தி விற்பனையில் பணம் சம்பாதித்துக் கொண்டு தான் வருகிறார். இன்னமும் சில சுயராஜ்யப் பார்ப்பனர் கள்ளுக்கு மரம் விட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒற்றுமைக்காகவாவது ஏதாவது திட்டம் காங்கிரசில் இருக்கிறதா என்றால் அதுவும் ஒன்றுமில்லை. காங்கிரசிலிருந்து ஸ்ரீமான்கள் இராமசாமி நாயக்கர், வரதராஜுலு, கலியாண சுந்தர முதலியார், ஆரியா, சக்கரை, தண்டபாணி பிள்ளை முதலிய பார்ப்பனரல்லாதார்கள் போய் விட்டதால் காங்கிரஸ் பரிசுத்தமாய் விட்டது என்கிறார்கள் நமது பார்ப்பனர்கள். அல்லாமலும் ஸ்ரீமான்கள் ஆரியாவையும் ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும் ஜெயிலில் பிடித்துப் போட வேண்டு மென்று கவர்னரையும் பார்ப்பன அதிகாரிகளையும் கெஞ்சுகிறார்கள்; விண்ணப்பமும் போட்டிருக்கிறார்கள் நமது பார்ப்பனத் தலைவர்கள். இந்து முஸ்லீம் ஒற்றுமையாவது இருக்கிறதா என்று பார்த்தால் மகமதியர்களுக்கு சுயராஜ்யம் கொடுக்கக் கூடாது என்று காங்கிரசின் பேராலேயே இந்தியா சட்டசபையில் ஆட்சேபித்துச் சர்க்காரோடு சேர்ந்து ஓட்டு கொடுத்திருக்கிறார்கள். ஒருவரையொருவர் சந்தேகிக்காமலிருக்கவும், ஒருவரை ஒருவர் மோசம் செய்யாமலிருக்கவும், எல்லோரும் சம உரிமை அடையவும் தக்க பந்தோபஸ்தான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்றால், அதைப்பற்றி காங்கிரசுக்குள்ளாகவே பேசக் கூடாது என்று பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே சொல்லி விட்டார்கள். ஆனால் ஜஸ்டிஸ் கக்ஷி ஏற்பட்டபோது அதைக் கொல்ல எண்ணி பார்ப்பனரல்லாதாரான ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார் இவர்களை வசப்படுத்திக் கொண்டு “தேசீய பார்ப்பனரல்லாதார் சங்கம்” என்பதாக ஒன்றை ஏற்படுத்தச் செய்து அதன் மூலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் கேட்டுவிட்டுப் பார்ப்பனரல்லாதாருக்குள் கட்சி ஏற்பட்டதும், இப்போது பார்ப்பனரல்லாதாருக்கே பணங் கொடுத்து அதை எதிர்க்கச் சொல்லுவதோடு தாங்களும் அநேக சூழ்ச்சி செய்து வருகிறார்கள். ஆகிய இக் காரணங்களால் காங்கிரசில் தேசத்துக்கு அநுகூலமான திட்டம் ஏதாவது கொஞ்சமாவது இருக்கிறதா? என்று நீங்கள் நன்றாய் யோசித்துப் பாருங்கள்.
பார்ப்பனர்களுக்கு ஆதிக்கம் வரவும், உத்தியோகம் வரவும், பார்ப்பனரல்லாதார் தாழ்த்தப்படவும், உத்தியோகங்களிலிருந்து விலக்கப்படவும் நாம் காங்கிரசில் சேர வேண்டுமா? காங்கிரஸ் தேசத்திற்கு அநுகூலமாக இருந்தால் மகாத்மா காந்தியும் லாலா லஜபதிராயும் ஏன் காங்கிரசுக்கு உழைக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள். ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார், ஆரியா, தண்டபாணி பிள்ளை முதலியவர்களும் ஒதுங்கியிருப்பதோடு என் போன்றவர்கள் இந்த மாதிரி காங்கிரசுக்கு எதிர்ப் பிரசாரமும் ஏன் செய்கிறோம்? இவற்றை நன்றாய் யோசித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் உங்களை ஏமாற்றவே காங்கிரஸ் என்ற ஆயுதத்தை உபயோகிக்கிறார்கள். “சம உரிமையும், வகுப்புச் சுதந்திரமும், சுயமரியாதையும் இல்லாத நாட்டிற்கு (காங்கிரஸ் போன்ற) அரசியல் இயக்கம் இருப்பது அறிவுடைமை ஆகாது. அதை ஒழிக்க வேண்டியது அறிவுடையோர் கடமை” என்ற பொருள்பட ‘காங்கிரஸ் காங்கிரஸ்’ என்று கதறிக் கொண்டிருந்த ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரே எழுதியிருக்கிறார். இனிமேல், தான் அரசியலில் (காங்கிரசில்) உழைப்பதில்லை என்றும், மக்கள் சமத்துவத்திற்குழைப்பதாகவும் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை அரசியலுக்குழைத்ததற்காகத் தனது அறியாமையின் பொருட்டு என்னைப் போலவே விசனப்பட்டும் இருக்கிறார். ஆதலால் சகோதரர்களே! பார்ப்பனருக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட நமது கோடரிக் காம்புகளுக்காவது வரும் தேர்தல்களில் நீங்கள் கண்டிப்பாய் ஓட்டுச் செய்யாதீர்கள்.
ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் நிர்மாணத் திட்டத்தை நடத்தவே நான் பாடுபடுகிறேன். பார்ப்பனரின் எதிர்ப்பும் சூழ்ச்சியும் அடக்கப்பட்டு விட்டால் கண்டிப்பாய் நிர்மாணத் திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சி மூலம் நிறைவேற்றலாம். நிர்மாணத் திட்டம்தான் முக்கியமாய் பார்ப்பனரல்லாதாருக்கு விடுதலை அழிப்பது. எவ்விதத்திலும் பார்ப்பனர்கள் நிர்மாணத் திட்டத்திற்கு அநுகூலமாயிருக்க மாட்டார்கள். அதோடு அதை பார்ப்பனரல்லாதார் நடத்தவும் பார்ப்பன ஆதிக்கம் இடம் கொடுக்க மாட்டாது. ஆதலால் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி செய்யுங்கள். அடுத்த தேர்தலில் நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கும், சுயமரியாதைக்கும் மாத்திரமே ஓட்டுக் கொடுங்கள். கண்டிப்பாய் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி என்கிற மாய வலையில் சிக்கி ஏமாந்து போகாதீர்கள் என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்.
குறிப்பு : 20.09.1926 இல் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 26.09.1926