டா க்டர் அம்பேத்கரால் கொண்டு வரப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் எதிர்காலத் தலைமுறையினர் ஒருவர்கூட நிதியின்மை காரணமாக மேற்படிப்பை தொடராமல் போய்விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. 1980 வரை எந்தவித செலவுகளும் இல்லாமல் பொறியியல், மருத்துவம், வேளாண்மை போன்ற தொழில் படிப்புகளை முடித்த தலித் மாணவர்கள், 1985 இல் சுயநிதிக் கல்லூரிகளின் வருகைக்குப் பிறகு புதை குழிக்குள் போக வேண்டி வந்தது. வானளாவிய கட்டணத் தொகையை கட்ட முடியாமலும், மய்ய அரசு முழுமையாக அளித்த இந்த கல்வி உதவித் தொகையை திராவிட ஆட்சியாளர்கள் மறுத்ததாலும் தொழிற்கல்வி படிப்பை குறிப்பாக பொறியியல், மருத்துவப் படிப்புகளில் தலித் மாணவர்கள் பங்கு பெற முடியாமல் கடும் பின்னடைவை சந்தித்தனர்.

 1985 இல் இருந்தே சுயநிதிக் கல்லூரிகளுக்கு முழுக் கட்டணத்தையும் கல்வி உதவித்தொகையாக வழங்க "போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவித் தொகை வழி செய்திருந்தது. இவ்வுதவித்தொகைக்கான நிதி நூறு சதவிகிதம் மய்ய அரசால் தரப்படுகிறது. ஆனால், மய்ய அரசின் இந்த உதவித் தொகையை 1985 ஆம் ஆண்டிலிருந்து 28 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் மறுத்து வந்தன. அதனால்தான் பொறியியல் படிப்பில் தலித் மாணவர்களின் பங்கேற்பு இருபது சதவிகிதத்திலிருந்து எட்டு சதவிகிதமாகக் குறைந்து விட்டது. இந்நிலையில் தலித் மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டும் விதமாக தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கடந்த ஆண்டு (11.9.2012) ஓர் அரசாணையை (நிலை எண் : 92) வெளியிட்டது.

இதன்படி, சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளிலும் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவ / மாணவியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டக்குழு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை மட்டும் அவர்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் அக்கட்டணங்களை மய்ய அரசின் உதவித் தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

துடி இயக்கம் வெளியிட்டுள்ள "போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை' வழிகாட்டி நூலில் இது தொடர்பான அனைத்து அரசாணைகளும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசாணை 92 அய் நடைமுறைப்படுத்தாத கல்வி நிறுவனங்கள் மீது புகார் கொடுக்க வேண்டிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கல்லூரிப்படிப்பை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல் இது.

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழிகாட்டி நூல்

வெளியீடு : துடி இயக்கம், 34, கண்ணபிரான் தெரு, பழைய பல்லாவரம்,சென்னை17

பேசி : 98945 25254

Pin It