சென்னையில் அமைந்துள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் "பே பால்'. இணையம் வழியாக பணப்பரிமாற்றம் செய்ய உதவும் நிறுவனங்களில், உலக அளவில் முதன்மையானது இந்நிறுவனம். இதன் சென்னை கிளை பழைய மாமல்லபுரம் சாலையில் சோழிங்கநல்லூரில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் தனது ஆண்டு விழா கொண்டாட்ட அறிவிப்பை குறிக்கும் வகையில், தன் நிறுவன வாயிலில் வைத்திருந்த பதாகைகளில், பல்வேறு மாநிலங்களின் ஆதிக்க சாதிகளைக் குறிக்கும் வகையில் – "தமிழ்நாட்டின் அய்யர்கள்', "குஜராத்தின் பட்டேல்கள்', "வங்காளத்தின் பானர்ஜிகள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கொண்டாட்டத்தில் பங்கேற்க, தனது ஊழியர்களை ஜாதிக் குழுக்களாகப் பிரித்துள்ள அந்நிறுவனம், குழுக்களுக்கு சாதிப் பெயர்களை சூட்டியுள்ளது. அதனை எவ்வித கூச்சமோ, தயக்கமோ இன்றி வெளிப்படையாக விளம்பரப்படுத்தியும் உள்ளது.

இதனைக் கண்ட தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள், தாங்கள் அமைத்துள்ள "சேவ் தமிழ்ஸ்' இயக்கம் மூலம் அந்நிறுவனத்தை எதிர்த்துப் போராட்டத்தை அறிவித்தனர். நவம்பர் 8, 2011 அன்று அந்நிறுவனத்தின் வாயில் முன் "சேவ் தமிழ்ஸ்' இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

"ஜாதிப் பெருமையை கொண்டாடாதீர்கள்', "நிறவெறியை ஆதரிப்பீர்களா?', "மவுனத்தை உடைத்தெறியுங்கள்', "நாகரிகமாக மாறுங்கள்' – போன்ற முழக்கங்களை எழுப்பினர். "கார்ப்பரேட் கலாச்சாரம் என்பது,சமூகப் பொறுப்பில்லாமல் சுரணையற்று இருப்பதா? உடைகள் அணியும் விதமும், நவீன தொழில்நுட்பமும் மட்டும் தான் நாகரிகத்தை குறிக்கிறதா? சமூக நீதி பற்றியது இல்லையா அது?' – என்று பணியாளர்களை கேள்வி கேட்கும் வகையில் பதாகைகளைப் பிடித்து, துண்டறிக்கைகளை விநியோகித்தனர்.

இதனைத் தொடர்ந்து, "பே பால்' நிறுவனம் உடனடியாக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் மன்னிப்புக் கோரி கடிதம் அளித்தது. அக்கடிதத்தில் “நாங்கள் வெளிப்படுத்த நினைத்த எங்கள் ஊழியர்களின் பன்முகத்தன்மையை – அந்த அணிகளுக்கு நாங்கள் இட்ட பெயர்கள் வெளிப்படுத்தவில்லை; அவை இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினரைக் குறிக்கும் வகையில் அமைந்து விட்டது. இது, எந்த உள்நோக்கத்துடனும் செய்யப்பட்டதல்ல. எனவே, அவற்றை உடனடியாக நீக்குகிறோம். நாங்கள் யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டிருந்தது.

இன்று கல்வியின் செழுமையும், பொருளாதார வளமையும் நிறைந்த துறையாக தகவல் தொழில்நுட்பத்துறை அறியப்படுகிறது. ஆனால், கல்வியோ பொருளாதாரமோ ஜாதிய உணர்வை எவ்விதத்திலும் மாற்றிவிடவில்லை என்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் உயர் பதவிகளில் ஆதிக்க சாதியினரின் மேலாதிக்கம் நிலவுவது நிச்சயமான உண்மையாக இருந்த போதும், அது குறித்த செய்திகள் அதிகம் வெளிவராமல் இருக்கின்றன. அங்கு நிலவக்கூடிய ஜாதி, மொழியின, பாலினப் பாகுபாடுகளும் ஒதுக்குதல்களும் விவாதிக்கப்படாதவையாகவே இருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம், அப்பாகுபாடுகளுக்கு ஆட்படுபவர்கள் அது குறித்து பேசத் தயங்குவதேயாகும். இந்நிலையில், இப்போராட்டம் பன்னாட்டு நிறுவனங்களின் இப்போக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கமாக இருக்கும்.

– நம் செய்தியாளர்

Pin It