இந்துக்கள் எங்கெல்லாம் செல்கின்றார்களோ, அங்கெல்லாம் சாதியும் சாதி ரீதியான பாகுபாடுகளும் நீக்கமற நிறைந்திருக்கும். இந்துக்கள் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சாதிப் பாகுபாடுகளை மட்டும் அவர்கள் கைவிடுவதில்லை. சாதியின்றி இந்துக்களால் உயிர் வாழ முடியாது. அதனால்தான் இங்கிலாந்து நாட்டில் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான ஒரு சட்டம் 13.4.2013 அன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தெற்கு ஆசியாவிற்கு அப்பால் அய்ரோப்பியக் கண்டத்தில் முதன் முறையாக சாதிப் பாகுபாட்டிற்கெதிரான சட்டத்தை இயற்றியதன் மூலம் சிறப்பு மிக்க வரலாற்றை இங்கிலாந்து உருவாக்கியிருக்கிறது!

இங்கிலாந்து சாதியால் பாதிப்பிற்குள்ளான ஒரு நாடு என்பது அங்கு அமைக்கப்பட்ட அரசு ஆணையங்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தலித் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்புகள் இல்லை என்ற நிலையில் மனித உரிமையாளர்கள் மற்றும் தலித் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக நடத்திய பரப்புரை மற்றும் விழிப்புணர்வுப் போராட்டத்தின் விளைவாகவே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல நூறு சாதியினர் அங்கு வசித்தாலும் சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக சாதியற்ற தலித் மக்கள்தான் போராட வேண்டியிருக்கிறது.

கிராமங்களில்தான் சாதியம் கோலோச்சுகிறது; நகரங்களிலும், மாநகரங்களிலும் சாதிப் பாகுபாடுகள் மறைந்து விட்டன என்று பேசும் அறிவுஜீவிகள், இங்கிலாந்து போன்ற அதி முன்னேறிய நாட்டில் கடைப்பிடிக்கப்படும் சாதிப் பாகுபாட்டிற்கு என்ன காரணத்தைச் சொல்வார்கள்? நகரமயமாதல், தொழில்மயமாதல் மற்றும் உலகமயமாதல் மூலம் சாதிப் பாகுபாடுகளை திரை போட்டு மறைக்கலாமே தவிர, சாதியை ஒழித்து விட முடியாது. இங்கிலாந்தில் வசிக்கும் மெத்தப் படித்த தலித்துகள் அங்குள்ள சாதி இந்துக்களின் பண்ணைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்யவில்லை. சாதி இந்துக்களுக்கு இணையாகவும், அதற்கு மேலும் படித்து விட்டுதான் அங்கு பணிபுரிகிறார்கள். பிறகேன் சாதிப் பாகுபாடு? ஜாதி – இந்துக்களின் சிந்தனையிலும், மதத்திலும், பண்பாட்டிலும் வேர்கொண்டிருக்கிறது. இந்து மதத்தின் அடிப்படையிலான பண்பாட்டை அழித்தொழிக்காதவரை சாதி உயிர்வாழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்தியாவில் நடப்பதைப் போன்று தலித் மக்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் இங்கிலாந்தில் இல்லை எனினும், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்கள் பல்வேறு நிலைகளில் தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடுகளை மேற்கொள்கிறார்கள். பணிசெய்யும் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தலித் மக்களை கேலி செய்வது, தொல்லை கொடுப்பது, அலைக்கழிப்பது என பாகுபாடுகள் பட்டியலிடப்படுகின்றன. சாதி மறுப்பு – காதல் திருமணங்கள்கூட அங்கு பிரச்சனைக்குரியதாகிறது என்று தலித் உரிமைக்காகப் போராடும் இயக்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சாதியமும் இனவாதமே என்பதால், அய்க்கிய நாடுகள் அவை போன்ற உலகளாவிய மனித உரிமை மன்றங்களில் சாதி விவாதிக்கப்பட வேண்டும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக தலித் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இன்றுவரை "சாதி ஒரு உள்நாட்டுப் பிரச்சனை' என்று சாதிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தினர், இங்கிலாந்தில் சாதிப்பாகுபாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் அம்பலப்பட்டுப் போயுள்ளனர். இந்திய விடுதலைக்குப் பிறகான 66 ஆண்டுகளில் தீண்டாமை ஒரு குற்றமாக ஆக்கப்பட்டும் அது ஒழிக்கப்படாத நிலையில், அதற்கு மூலகாரணமாக இருக்கும் சாதியை ஒழிக்க இதுவரை சட்டமே இல்லை எனில், அதன் மீதான பாகுபாடுகளை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்?

எனவே, இங்கிலாந்தில் இயற்றப்பட்டதைப் போன்ற ஒரு சட்டம் இந்தியாவிலும் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் தலித் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தனிக்குடியிருப்புகளுக்கும், தனிச் சுடுகாடுகளுக்கும், தனி வழிபாட்டு இடங்களுக்கும், சமூக ஒதுக்குதல்களுக்கும் முடிவு கட்ட முடியும்.

Pin It