புத்த மதம் மாறிய தலித்துகளின் கல்வி,பொருளாதார சமூக நிலைகள் உயர்வை எட்டியுள்ளது - புள்ளியல் ஆய்வு முடிவுகள்.
(தி நீயூஸ்மினிட் இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)
எழுத்தாளர் : மனு மோட்கில்
தமிழில் : டாக்டர்.சட்வா
இந்தியாவில் 84 லட்சம் புத்திஸ்டுகள் உள்ளனர். அவர்களில் 87% பேர் வேறு மதங்களில் இருந்து மதமாறி வந்தவர்கள் ஆவர். குறிப்பாக இந்து மதத்தின் சாதிய படி நிலைகளில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள புத்த மதம் தழுவியவர்கள். மீதம் உள்ள 13% பேர் வடகிழக்கு மாநிலங்களிலும் இமாலய பகுதிகளிலும் பாரம்பரியமாக வாழும் புத்த மதத்தினர் ஆவர்.
தற்போது பாபாசாகேப் அம்பேட்கர் வழியில் புத்த மதத்தை தழுவியோர் தங்களை நவபௌத்தர்கள் (நியோ புத்திஸ்ட்) என்று அழைத்து கொள்கின்றனர். இவ்வாறான நவ பௌத்தர்கள் சக இந்து பட்டியல் சாதியினருடன் ஒப்பிடும் போது கல்வி நிலை, வேலைவாய்ப்பு மற்றும் ஆண் - பெண் விகிதம் ஆகியவற்றில் வெகுவாக முன்னேறியுள்ளனர். 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளை ஒட்டிய ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளது.
மொத்தம் உள்ளவர்களில் 87% புத்திஸ்டுகள் சமீபத்தில் மதமாறி வந்த இந்து பட்டியல் சாதியினர் என்பதால் இந்த ஆய்வில் 'புத்திஸ்டுகளின்' வளர்ச்சியாக குறிப்பிடப்படுவது தலித்துகளின் வளர்ச்சியாகவே கருதப்படுகிறது.
புத்திஸ்டுகளின் கற்றறிவு விகிதம் 81% ஆகும். ஆனால் தேசிய சராசரி 72.98% மட்டுமே. தேசிய இந்துக்களின் கற்றறிவு விகிதம் 73.27% ஆகும். இந்து பட்டியல் சாதியினர் கற்றறிவு விகிதம் 66.07% மட்டுமே.
பட்டியல் சாதியினரில் மிக உயர்ந்த மேலாண்மை பதவிகளில் உள்ளோர் பொரும்பாலோனோர் புத்திஸ்டுகள் ஆவர் என்று பீம் ஆர்மியின் தலைவர் திரு.சட்பால் தன்வர் குறிப்பிடுகிறார். அவரே தலித் மக்களுக்கு எதிரான சகான்பூர் வன்முறைக்கு பிறகு பல போராட்டங்களை ஒருங்கிணைத்தவர் ஆவார். தற்போது பெரிய அளவிலான பௌத்த மதமாற்றத்தை ஒருங்கிணைத்து வருகிறார் அவர்.
ஏனெனில் மதமாற்றம் என்பது பட்டியல் சாதியினருக்கு இந்துக்களின் மத்தியில் வாழ்வதற்கான தன்னம்பிக்கையை தருவதோடு கர்ம வினைகளின் காரணமாக இழிபிறப்புக்கு உள்ளானவர்கள் என்ற இந்து மத போதனைகளில் இருந்தும் அவர்களை காப்பாற்றுகிறது.
இந்தியாவின் மிசோரம் (48.11%) மற்றும் அருணாசல பிரதேசம்(57.89%) ஆகியவற்றில் வாழும் பாரம்பரிய பௌத்தர்கள் (சமீபத்தில் மதமாறியவர்கள் அல்ல) ஒப்பீட்டளவில் சராசரியை விட குறைவான கற்றறிவு விகிதங்களையே கொண்டுள்ளனர்.
மாறாக சத்தீஸ்கர் (87.34%) மகாராஷ்டிரா (83.17%) மற்றும் ஜார்கண்ட் (80.41%) ஆகியவற்றில் வாழும் நவபௌத்தர்கள் மிக மிக அதிக கல்வி அறிவு விகிதங்களை கொண்டுள்ளனர். புத்த மதமாற்றம் எனும் அரசியல் பாதை மகாராஷ்டிராவை தொடர்ந்து மத்திய பிரதேசம், கர்னாடகா மற்றும் உத்திர பிரதேசத்தில் வெகுவாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா புத்திஸ்டுகளின் கதை மிகவும் குறிப்பிடதக்கதாய் உள்ளது. ஏனெனில் 65 லட்சம் புத்திஸ்டுகள் இந்த ஒரு மாநிலத்தில் மட்டும் வசிக்கின்றனர். 1956 ல் பாபாசாகேப் டாக்டர்.அம்பேட்கரின் தலைமையில் அவரது சொந்த மாநிலத்தில் 6 லட்சம் பேர் புத்த மதமாறிய நிகழ்வின் நீட்சியாக இது உள்ளது. தற்போது புத்த மதமாற்றத்தின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தாலும் இவ்வகையிலான சாதிய படிநிலைகளில் இருந்து வெளியேறும் போராட்டங்கள் நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் புத்திஸ்டுகள் 68.59% பேர் கல்வி அறிவு பெற்றுள்ளனர். இது அந்த மாநில சராசரியை விட அதிகம் (67.68%). கூடுதலாக இந்து பட்டியல் சாதியினரின் கல்வி அறிவு விகிதத்தை விட எட்டு சதவீதம் அதிகமாகும் (60.88%)
இந்தியா முழுமைக்குமான ஓப்பீட்டில் புத்திஸ்டு பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ள சதவீதமும் (74.04%) பொது சமூகத்தை விட (64.63%) அதிகமாக உள்ளது.
உத்திர பிரதேசம் (57.07%) மற்றும் கர்னாடகா (64.21%) ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே தேசிய சராசரியை விட புத்திஸ்டு பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ள அளவு குறைவாக உள்ளது. எனினும் இதனை மதமாறாத பட்டியல் சாதியினருடன் ஒப்பிடும் போது புத்திஸ்டு பெண்கள் அதிக அளவு கல்வி அறிவு பெற்றுள்ளது தெரியவருகிறது.
2011 கணக்கெடுப்பின் படி புத்திஸ்டுகளில் 1000 ஆண்களுக்கு 965 பெண்கள் உள்ளனர். இது தேசிய சராசரி (943) மற்றும் பட்டியல் சாதியினரின் (945) விகிதத்தை விட அதிகமாகும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 0-6 வயதுக்கு உட்பட்ட புத்திஸ்டு குழந்தைகள் நூறு பேருக்கு 11.62% ஆகும். இது தேசிய சராசரி (13.59%) உடன் ஒப்பிடதக்கது. இது ஒவ்வொரு நூறு பேர் என்ற மக்கள் தொகைக்கும் இரண்டு புத்திஸ்டு குழந்தைகள் குறைவாக உள்ளதை குறிக்கிறது. (பிறப்பு விகிதம் குறைவது சுகாதார குறியீடுகளின் படி சமூக வளர்ச்சியாகும்)
மேற்கண்ட புள்ளிவிபரங்கள் 'நவ பௌத்தர்கள்' சக இந்து பட்டியல் சாதியினருடன் ஒப்பிடும் போது சிறப்பாக கல்வி கற்றுள்ளனர் என்பதை குறிக்கிறதா அல்லது கல்வி கற்ற தலித்துகள் புத்த மதத்தை நோக்கி செல்வதை குறிக்கிறதா என்பது தொக்கி நிற்கிறது.
இந்தியாவில் 43% புத்திஸ்டுகள் நகரங்களில் வசிக்கின்றனர். ஆனால் தேசிய பொது சராசரி (31%) ஆகும். இவ்வாறு நகரங்களில் வசிப்பதால் அவர்கள் கல்வி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கருத இயலுமா? ஆனால் உண்மை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள தக்கதல்ல.
இந்தியாவில் உள்ள 80% புத்திஸ்டுகள் மகாராஷ்டிராவில் உள்ளனர். இவர்களின் கல்வி அறிவு விகிதம் மற்றும் நகரங்களில் வசிக்கும் விகிதம் ஆகியவை அந்த மாநில சராசரியை விட மிக அதிகமாகும். கூடுதலாக குழந்தைகள் விகிதமும் மற்ற சமூகத்தினரை விட சிறப்பாக உள்ளது.
மகாராஷ்டிரா புத்தி்ஸ்டுகளின் வளர்ச்சி பாபாசாகேப் டாக்டர்.அம்பேட்கரின் விடுத்த கல்விக்கான அறைகூவலின் விளைவு என கொள்ளலாம்.
டாக்டர்.அம்பேட்கர் மகர் எனும் பிரிவை சார்ந்தவர். அவர்கள் விவசாய நிலமோ நிலையான பாரம்பரிய தொழிலோ இல்லாதவர்கள். அவர்கள் ஊரின் ஒதுக்குபுறத்தில் வாழ்ந்து ஊர்க்காவலர், அறிவிப்பாளர், தூய்மை பணிகளை செய்தல், ஊர் எல்லைகளை காவல் காப்பது போன்ற பணிகளை செய்து வந்தவர்கள் ஆவர்.
இவ்வாறு நிலையான பாரம்பரிய தொழில் இல்லாமையால் அவர்கள் எளிமையாக நகர்புறங்களுக்கு குடியேற முடிந்தது. டாக்டர்.அம்பேட்கரின் தந்தை உட்பட பல மகர்கள் பிரிடிஷ் ராணுவத்தில் இணைந்தனர்.
விவசாய நிலங்கள் இல்லாமையும் பாரம்பரிய குலத்தொழில் இல்லாமையும் அவர்களை கல்வி ஒன்றே பிழைப்பதற்கான வழி என்பதை நோக்கி தள்ளியது என்று பூனாவில் உள்ள சாவித்திரிபாய் பூலே பல்கலைகழக பேராசிரியர் திரு.நிதின் டகாடே குறிப்பிடுகிறார். இவ்வாறு நகரங்களை நோக்கி நகர்ந்தது மகர்களின் அபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்று நவ பௌத்தர்களின் சமூக பொருளாதார நிலையை ஆராய்ந்து வரும் அவர் விளக்குகிறார்.
2011 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மகாராஷ்டிரவில் 47.76% புத்திஸ்டுகள் நகரங்களில் வசிக்கின்றனர் இது மாநில சராசரி 45.22% உடன் ஒப்பிடதக்கது. கிராமங்களிலேயே தங்கி விட்டோர் இன்னும் விவிசாய கூலிகளாக உள்ளனர் (67%). இது கிராம புறங்களில் உள்ள இதர சமூகங்களோடு ஒப்பிடும் போது மிக அதிகமாகும் (41.50%).
இவ்வாறு கல்வியின் மூலம் உயர்ந்துள்ள நவபௌத்தர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றனர். அவர்களின் வேலை வாய்ப்பில் பங்கு பெறும் சராசரி (43.15%) அந்த மாநில இந்து பட்டியல் சாதியினருடன் ஒப்பிடும் (40.87%) போது அதிகமாக உள்ளது. தேசிய சராசரி 39.79% ஆகும்.
(http://www.thenewsminute.com/article/dalits-who-converted-buddhism-better-literacy-and-well-being-64521)