தமிழ்நாட்டின் எத்தனையோ கிராமங்களில் இன்றளவும் தலித்துகள் ஆதிக்க சாதியினரால் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளாகின்றனர். நடந்து முடிந்த தீபாவளி அன்று – விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 5 தலித்துகள் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்டனர்; 11 கிராமங்களில் தலித் இளைஞர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற விழா நாட்களில்கூட, தலித்துகள் சக மனிதர்களைப் போல் ஒரு மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிக்க முடியாமல், காவல் நிலையம், மருத்துவமனை என அலைய வேண்டிய அவலநிலைதான் நீடிக்கிறது.
இதை எழுதத் தொடங்கிய இன்று (28.12.10) திண்டிவனம் அருகே உள்ள குருவம்மாபேட்டை என்கிற கிராமத்தில், 50 வயதில் இறந்துபோன நாகம்மாள் என்கிற இருளரின் பிணத்தை பொதுவழியில் எடுத்துச்செல்லக்கூடாது என ஆதிக்க சாதியினர் தடுத்து நிறுத்தி யுள்ளனர். இறந்துபோன இருளர் பெண் மணிக்குதான் இந்த நிலை என்றால், உயிரோடு உள்ள இருளர் பெண்ணுக்கு குடிதண்ணீர் தரமறுத்து, கடையில் பொருட்கள் தரமறுத்த சமூகக் கொடு மையும், அவமானமும் நேர்ந்திருக்கிறது? இக்கொடுமைகளை சந்தித்து, இறுதியில் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு, உறுதியான போராட்ட மனவலிமை யுடன் செயல்பட்டுள்ளனர், நீலாவதி என்கிற இருளர் பெண்மணி.
2002 ஆம் ஆண்டு, நவம்பர் 29 அன்று காலையில் திண்டிவனம் அருகில் உள்ள பட்டணம் கிராமத்திலுள்ள இருளர் குடியிருப்பிற்கு குடிதண்ணீர் வரவில்லை என்பதால், பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றனர் பழங்குடி இருளர் களான நீலாவதியும், அவருடைய அக்காள் அமிர்தமும். அங்கிருந்த சாதி இந்துபெண்கள் இவ்விரு இருளர் பெண்களையும் தண்ணீர் பிடிக்கவிடாமல் தடுத்துள்ளனர். எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்ட இவர்களைத் திட்டி, அவமானப்படுத்திய ஆதிக்கசாதி பெண்கள், தங்கள் வீட்டு ஆண்களையும் அழைத்து, இருளர் பெண்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். சாதிய வன்கொடுமைக்கு ஆளான இவர்கள், ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் தலையீட்டிற்குப் பிறகு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலிசார், நீலாவதி மீதும் பொய்வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் போலிசார் திட்டமிட்டு பேராசிரியர் பிரபா. கல்விமணி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு பதிவு செய்தனர். மூன்று மாதங்கள் நடைபெற்ற பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு சனவரி 2003இல் போலிசார் இவ்வழக்கை திரும்பப் பெற்றனர். இத்துடன் சேர்த்து நீலாவதி பாதிக்கப்பட்ட உண்மையான வழக்கையும் தள்ளுபடி செய்தனர்.
2008 ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 அன்று காலை, தற்பொழுது 55 வயதாகும் நீலாவதி, பட்டணம் கிராமத்தில் மீன் விற்றவரிடம் 10 ரூபாய்க்கு மீன் வாங்கிக் கொண்டு, தன்னிடம் இருந்த 50 ரூபாயை தந்துள்ளார். மீன் விற்றவர் சில்லறை இல்லை எனச் சொல்லியுள்ளார். அருகிலிருந்த, தனக்கு தெரிந்த சுப்பிரமணி மளிகைக் கடையில் நீலாவதி சில்லறை கேட்டுள்ளார். அவரும் சில்லறை இல்லை என்று கூறியதும், சரி 50 ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள், மீதியை அப்புறம் வந்து வாங்கிக் கொள்கிறேன்; இப்போது 10 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி மீன்காரரிடம் கொடுத்துவிட்டார்.
மறுநாள் 5 ஆம் தேதியன்று, நீலாவதி கடைக்குச் சென்றபோது, கடையில் சுப்பிரமணி இல்லாத நிலையில், கடையிலிருந்த அவருடைய மகள் சுமித்ராவிடம், முதல் நாள் நடந்ததை கூறி, காபி தூளும், சர்க்கரையும், மீதிப்பணமும் கேட்டுள்ளார். சுமித்ரா தரமறுத்துள்ளார். அப்போது, காபிதூளும், சர்க்கரையும் கடனுக்கு கொடு, உன் அம்மா வந்தபிறகு பேசிக்கொள்கிறேன் என்றும் கேட்டுள்ளார் நீலாவதி. அதற்கும் அப்பெண் மறுத்துள்ளார். பணமும் கிடைக்காமல், பொருளும் வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்த நீலாவதி, அங்கிருந்த குப்பு என்பவரிடம் புலம்பியுள்ளார்.
அனைத்தையும் கேட்ட குப்பு, சுமித்ராவிடம், “ஏம்மா.. நம்ம ஊருதானே.. உனக்கு தெரியாதா என்ன? கேக்கற பொருள கொடேன். உங்க அம்மா வந்தப்புறம் பேசிக்கலாம்'' என்று கூறியுள்ளார். அதற்கும் அந்த கடைப்பெண் மறுத்துள்ளார். அப்போது அங்கிருந்த கடைக்காரரின் உறவினரான ஏழுமலை என்பவர், “வில்லித் தேவிடியாளுக்கு பரிஞ்சுகிட்டு நீ என்னா பேசுற?... உன் வேலையை பார்த்துக்கிட்டுப் போ'' என்று கூறியுள்ளார்.
இதனால் அவமானப்பட்ட நீலாவதி கோபத்துடன், “ஏம்பா.. நானாச்சி கடைக்காரங்களாச்சி.. இதுல நீ எதுக்கு என்னை வில்லித் தேவிடியான்னு பேசுற'' என்று கேட்டுள்ளார். அப்போது ஏழுமலை, “வில்லி நாய்களுக்கு அவ்வளவு ரோசம் வந்துடிச்சா?'' என்று மேலும் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இதனால் நீலாவதி மீண்டும் கோபமாக, இதுபோல இனிமேல் பேசாதீர்கள் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏழுமலை, நீலாவதியை வேகமாக வந்து தாக்கியுள்ளார். இதை எதிர்பார்க்காத நீலாவதி கீழே விழுந்து விட்டார். அப்போதும் சாதி ஆதிக்கத்தின் ஆத்திரம் அடங்காத ஏழுமலை, கீழே கிடந்த நீலாவதியின் காலைப் பிடித்து இழுத்து தள்ளி அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.
தாக்குதலில் புடவை கலைந்து, ஜாக்கெட் கிழிந்து அலங்கோலமாய் மயங்கி கிடந்த நீலாவதியை அங்கிருந்த சாதி இந்துக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனரே தவிர – ஏழுமலையை தடுக்கவும் இல்லை, நீலாவதிக்கு உதவவும் இல்லை. இதைக் கேள்விப்பட்டு, நீலாவதியின் மகன் சக்திவேல், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்து, மறுநாள் (6.4.2008) அதே ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 2002 இல் நடந்தது போன்று போலிசார் உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக, சாதி இந்துக்களிடம் எப்படியாவது நீலாவதி புகாரை திரும்பப் பெறச் செய்யுங்கள்; இல்லையென்றால் வழக்கு போடவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பட்டணம் கிராமத்திலுள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த காமராஜ், ஏழுமலையின் உறவினர்களுடன் மருத்துவமனைக்குச் சென்று நீலாவதியிடம் சமாதானம் பேசியுள்ளனர். பின்பு, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை, பா.ம.க. வைச் சேர்ந்த மாரிமுத்து, பாவாடை ஆகியோர் நீலாவதியிடம், “புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால், பட்டணத்தில் குடும்பம் நடத்த முடியாது'' என்று மிரட்டியுள்ளனர். மேலும், பா.ம.க.வைச் சேர்ந்த வழக்குரைஞர் முருகேசன், நகர மன்ற உறுப்பினர் சவுந்தர் ஆகியோர், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபா. கல்விமணியிடம் தொலைபேசியில் சமாதானம் பேசியுள்ளனர்.
இப்படி நடந்த எந்தவொரு சமாதானத்திற்கும் நீலாவதி உடன்படாமல் உறுதியாக இருந்ததால், வேறு வழியில்லாத ரோசனை போலிசார், புகார் கொடுத்த 5 நாட்கள் கழித்து 10 ஆம் தேதியன்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்தப் போராட்டங்கள் முடிந்து, ஒரு வழியாக காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழான இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்திற்கு சென்றது. நீலாவதியின் அடுத்த கட்ட போராட்டமும் தொடங்கியது. அமர்வு நீதிமன்றத்தின் அரசு சிறப்பு வழக்குரைஞர் இந்திரன் – நீலாவதியையும், அவருடன் சாட்சியமளிக்கச் சென்றவர்களையும் அவமானப்படுத்தியும், இழிவுபடுத்தியும், ஏளனமாகவும் பேசியுள்ளார். இந்த வழக்கை நடத்துவதையே மிகுந்த தொல்லைக்குரியதாகக் கருதியிருக்கிறார்.
“நாய்களா.. இதான் வர்ற நேரமா... காலயிலே, வந்து காத்திருக்க மாட்டீங்களா?'' என்று மிரட்டியுள்ளார். விசாரணைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் நீலாவதியிடம் பணம் கேட்டுள்ளார், இந்த அரசு வழக்குரைஞர். பணமில்லை எனச் சொன்ன நீலாவதியிடம் “உனக்கென்ன நான் இலவசமாவா கேஸ் நடத்திக் கொடுக்க முடியும்?'' என்றும் கூறியுள்ளார். மேலும், சாதி இந்துக்களின் வழக்குரைஞரிடம் தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளார். இதுமட்டுமில்லாமல், நீலாவதியின் இருளர் என்கிற சாதிச்சான்றை நீதிமன்றத்தில் அளிக்க வந்த காவலர்களிடம் பெற்றுக்கொண்டு, சாதி சான்றிதழ் இல்லை என காரணம் கூறி, வழக்கு விசாரணையின் நாட்களை நீடித்தும் வந்துள்ளார்.
இதையெல்லாம் குறிப்பிட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி தனக்கு அரசு சிறப்பு வழக்குரைஞராக விழுப்புரம் எம்.ஆர்.ஷெரீப் அவர்களை நியமிக்கும்படியும், அரசு வழக்குரைஞர் இந்திரன் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தார் நீலாவதி. ஆனால், அரசு அவ்வாறு நியமிக்காத நிலையில் ஒருவாறாக வழக்கு விசாரணை முடிவடைந்தது.
21.12.10 அன்று தீர்ப்பளித்த அமர்வு நீதிமன்ற நீதிபதி, எவரும் எதிர்பாராத வகையில் நீலாவதியை வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஏழுமலைக்கு – இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை யும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்!
இவ்வாறு வாழ்வின் முழுநேர வேலையாகக் கருதி, உறுதியான மனப்பான்மையுடனும், போராட்டத் தன்மை யுடனும் இன்னல்களை சந்தித்து வழக்கு நடத்தினால்தான் – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒன்றிரண்டு வழக்குகள் தண்டனைக்கு ஆளாகின்றன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டிய தமிழக அரசு இது குறித்து எந்த அக்கறையுமின்றி உள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை யும், தேவைப்படுமெனில் எத்தனைமுறையும் கூடவேண்டிய தமிழக முதல்வர் தலைமையிலான மாநில கண்காணிப்புக் குழு, தி.மு.க. அரசு பதவியேற்ற இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட கூடவில்லையென தகவல் அறியும் சட்டத்தில் பதில் அளிக்க முடிகிறது.
சாதியின் பெயரால் சமூகத்தால் ஒடுக்கப்பட்டுள்ள தலித்துகளுக்கு இவ்வாறு துரோகம் இழைக்கிறோம் என்கிற வெட்கம், அவமானம், குற்ற உணர்வு எதுவுமில்லாத, எதையும் உணராத அரசின் இந்த துரோகமும்கூட தலித்துகளுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைதான். இந்த வன்கொடுமைக்கு எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது? எந்த நீதிபதி தண்டனையளிப்பார்?