அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அடக்குமுறை, ஊழல், எதேச்சதிகாரம், விலைவாசி உயர்வு, தமிழர்களுக்கு எதிரான போக்கு... என இவை அனைத்தும் 2006 இல் பொறுப்பேற்ற தி.மு.க. ஆட்சியின் இறுதிக் காலத்தில் உரத்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்பொழுது இக்குற்றச்சாட்டுகளை தி.மு.க. மீது முன்வைப்போர், அப்பொழுது அ.தி.மு.க. மீதும் முன் வைத்தனர். இருப்பினும், இனி அதே அ.தி.மு.க.வே மீண்டும் வர வேண்டும் என்பதில் – நேரடியாகவோ, மறைமுகமாகவோ தீவிரம் காட்டுகின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால், அ.தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகள் உயிர்ப் பெற்று விடும் என்று பூச்சாண்டி காட்டி, தற்போதைய முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்கும் பலர் அயராது உழைக்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் மாறாவிட்டாலும் மக்களுக்கு எதிரான போக்குகள் மட்டுமே என்றும் நிலைத்து நிற்கின்றன!
கடந்த 30 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வேறு கட்சிகள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறதா என்றால், அதற்கும் எதிர்மறையான பதிலே கிடைக்கிறது. இத்தகையதொரு ஆபத்தான அரசியல் சூழலில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. ஒப்பீட்டளவில் மாற்றுக் கட்சியாகக் கருதப்படும் இடதுசாரிகள், இதே அரசியல் அமைப்பில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர். ஆனால், அவர்கள் காங்கிரஸ் அணியில் இருக்கும்போது, பாரதிய ஜனதா கட்சியின் மதவெறி பற்றியும்; இல்லாதபோது காங்கிரசின் ஊழல் பற்றியும் பேசுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, ஊழல் கட்சிகளை விமர்சிப்பதற்கும், அரசியல்வாதிகளுக்கு எதிர்வினையாற்றுவதற்குமே நேரத்தை செலவழிக்கின்றனர். இவர்கள் ஆயுதப் புரட்சியின் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு, இந்து இந்தியாவில் எந்த முன்னுதாரணமும் இல்லை!
உண்மையில், மிக மேலோட்டமான பார்வையில் காணப்படும் அரசியல் சீரழிவுகளே அனைவரின் முழு கவனத்தையும் ஈர்க்கின்றன. அரசியல் சீரழிவுக்கான முக்கிய காரணம், அதன் ஆதாரமாக இருக்கும் ஜாதிய சமூக அமைப்பு. வர்ணாசிரம ஜாதிய அமைப்பில் எப்படி பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்படுகின்றார்களோ, அதே போல்தான் அதன் வெளிப்பாடான அரசியல் அமைப்பிலும் பெரும்பான்மை மக்கள் அல்லலுறுகின்றனர். ஜாதிய அமைப்பு ஒரு சமூக அமைப்பு மட்டும் அல்ல; அது ஒரு பொருளாதார, அரசியல், பண்பாட்டு அமைப்பும் கூட! இச்சமூக அமைப்பின் நச்சு வேர்களுக்கு மரண அடி கொடுக்க முன்வராமல், அதன் கிளைகளை மட்டும் வெட்ட முனைவதால் என்ன நடந்துவிடப் போகிறது?
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகைகள், எந்த லட்சணத்தில் இருக்கின்றன? அரசியல் சீரழிவைக் கண்டிக்க அவற்றுக்கு தகுதி இருக்கிறதா? சமூகப் பொறுப்பு துளியுமற்று நடத்தப்படும் இவ்வேடுகள், சீரழிந்து போன அரசியலைத் தவிர வேறு எதையும் தலைப்புச் செய்தியாக்குவதில்லை. அதையும் கடந்து, நடுநிலை என்ற போர்வையில் அவை தங்களுடைய ஒரு சார்புப் போக்கை தந்திரமாக மறைத்துக் கொள்கின்றன. அண்மையில் கசிந்திருக்கும் தொலைபேசி உரையாடல்களில், பத்திரிகையாளர்களும் மிகக் கேவலமாக அம்பலமாகி இருக்கின்றனர். அரசியல்வாதிகளின் ஊழலைப் பற்றி பேசியே இந்நிறுவனங்கள் தங்கள் பிழைப்பை நடத்துகின்றன. மக்களின் மிக அடிப்படையான சமூகப் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி, அவர்களை அரசியல் மாயையிலேயே சிக்க வைத்து, அம்மக்களின் வாழ்க்கையைப் பறிக்கும் சதித்திட்டத்தில் – ஊடகங்கள் அரசியல்வாதிகளின் பங்காளிகளாகவே செயல்படுகின்றன.
ஒரு சிறிய எடுத்துக்காட்டு. எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘தினமணி', நாள்தோறும் கருணாநிதி மீது (அவர் புகைப்படத்தை வெளியிடுவது உட்பட) வெறுப்பை கக்குகிறது. ஆனால், அக்குழுமத்தின் மிகப்பெரிய வணிக வளாகத்தை அவரை வைத்தே திறக்கிறது. அவரும் அங்கு போய் அக்குழும ஏடுகளின் ‘நடுநிலை'யைப் பாராட்டிவிட்டு, ‘முரசொலி'யில் வந்து ஒப்பாரி வைக்கிறார். அதேபோல விகடன் குழுமம், தன் கலைக் களஞ்சியத்தை பள்ளிகளில் விற்கவும், நூலக ஆணையைப் பெறவும் முதல்வரை வெட்கமின்றிப் பயன்படுத்திக் கொண்டு, மறுபுறம் அவர் மீது ஓயாமல் வசைமாறிப் பொழிவதற்கு கிஞ்சித்தும் தயங்குவதில்லை.
ஊழல் பற்றியும், அரசியல் கட்சிகளின் அயோக்கியத்தனங்களைப் பற்றியும் பக்கம் பக்கமாகப் பேச, இங்கு ஊடகங்கள் மலிந்து கிடக்கின்றன. மக்களும் அதையே விவாதிக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தன்னளவில் ஒன்றையொன்று அம்பலப்படுத்திக் கொள்கின்றன. அதையே அறிவாளிகள் செய்வதில் புரட்சியும் இல்லை, புண்ணாக்கும் இல்லை. அரசியலைக் கடந்து சமூகத்திற்காக சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும்தான் துணிவு தேவை. மிக மோசமான ஓர் ஊழல் உற்பத்திக் கேந்திரமாக இயங்கும் ஜாதி அமைப்பை கேள்விக்குள்ளாக்காமல், அரசியல் ஊழல் – கார்ப்பரேட் கொள்ளை பற்றி மட்டும் வாய்கிழியப் பேசுவது ஊழலை ஒருபோதும் ஒழிக்காது; வளர்க்கவே பயன்படும்.