எத்ததனைப் பேர் / கூடி இழுத்துமென்ன / இன்னும் சேரிக்குள் வரவில்லை தேர்  – இருபது ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர்  செ. ஆடலரசன் எழுதிய வரிகள் இவை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஊர்த்தேரும் சேரிக்கு வராது; சேரித்தேரும் ஊருக்குள் ஓடாது என்பதற்கு சேஷசமுத்திரத்தில் எரிக்கப்பட்ட தேர் சான்றாக நிற்கிறது. "இந்து மதத்திலிருந்து வெளியேறு'  என்று முழங்குவதில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டிய சேரி இது!  நாளேடுகளில் சில நாட்கள் மட்டும் இப்படியான செய்திகள் வெளிவந்தன.  இருப்பினும் அம்பேத்கர் இந்து மதத்தை மறுதலித்த அக்டோபர் 14 அன்று மீண்டும் தலைப்புச் செய்தியாக மாற வாய்ப்பும் தேவையும் உள்ள கிராமம் இது!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் போட்டியிட்டனர். வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள இக்கிராமத்தில் தலித்துகளுடைய 220 வாக்குகள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றி பெற முடியும். 

இத்தேர்தலில் போட்டியிட்ட சுப்பிரமணியன் என்பவர் (தே.மு.தி.க.) தலித் மக்களை அணுகி, தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் கோயிலுக்கு தேர் செய்து தருவதாக உறுதியளித்தார்.  பல ஆண்டுகளாக தலையிலும் வண்டியிலும் வலம் வந்த மாரியம்மன் கோயில் சிலைக்கு சிறிய தேர் செய்வதற்காக தலித் மக்களும் சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளனர். இதனையறிந்தே சுப்பிரமணியன் வாக்குறுதி அளித்தார்.மக்களும் அதை நம்பி மொத்தமாக அவருக்கு வாக்களித்தனர்.

வெற்றி பெற்ற சுப்பிரமணியனிடம் மக்கள் சேர்த்து வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை அளித்தனர். அவரும் தனது பங்காக ஒரு லட்ச ரூபாய் போட்டு 15 நாட்களில் ஊர்ப்பகுதியிலேயே தேர் செய்து, இரு தரப்பிலிருந்தும்  முக்கியப் பிரமுகர்களை வைத்து சடங்குகள் செய்து, ஊரின் பொதுவழியாக தேரினை இழுத்து தலித் குடியிருப்பிலுள்ள மாரியம்மன் கோயிலில் விட்டார். ஆடிமாதம் நடைபெற்ற திருவிழாவின் போது "தேரினை ஊருக்குள் வரக்கூடாது', "பொது வழியில் போகக்கூடாது'  என்று ஊர்க்கூட்டம் போட்டு தடை செய்துள்ளனர். இவர்களே செய்த தேர் சேரிக்குள் போனதும் தீண்டாமைத்தேர் ஆகிவிட்டது!

இந்த முதன்முறை மட்டுமாவது பொதுவழியில் தேர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தலித் மக்கள் எவ்வளவோ கேட்டும் ஆதிக்கச் சாதியினர் முடியாது என்று மறுத்துவிட்டனர்.தடைகளை மீறி 06.08.2012 அன்று மாட்டுவண்டியில் இணைத்து தேரை இழுத்துச் சென்றனர். அப்போதிருந்த டி.எஸ்.பி. கண்ணன் சட்டப்படி போலிஸ் பாதுகாப்பை வழங்கினார்.

பொதுப்பாதையருகே தேர் சென்றபோது 150 க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் கையில் இரும்புக் குழாய்கள், தடி, அரிவாள், கத்தி, கடப்பாரை போன்றவற்றுடன் நின்று கொண்டு தேரோட்டத்தை தடுத்து விட்டனர். அவர்களின் கையிலிருந்த ஆயுதங்களைப் பார்த்த தலித் மக்கள், தேரினை அங்கேயே விட்டுச்சென்றனர்.  சட்டப்படி பாதுகாப்பளித்த அப்போதைய  டி.எஸ்.பி. கண்ணனை, "ஊரில் ஒரு சார்பாக நடந்துகொண்டு கலவரத்தைத் தூண்டுகிறார்' என அவரைப் பெரும் குற்றவாளியாக சித்தரித்து – அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி –  அன்றே முதல்வருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார் ஊரின் தலைவரான, தேரினை செய்து கொடுத்த சுப்பிரமணியன்.

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும் தேரோட்ட முடியாத நிலையில் தேர் இழுக்க அனுமதி கோரி தலித் பெண்கள் 25 பேர் ஒன்றிணைந்து  08. 09. 2012 அன்று முதல் கோயிலில் அமர்ந்து தொடர்  பட்டினிப் போராட்டத்தை நடத்தினர். ""சேஷசமுத்திரம் கிராம வன்னியர்கள் வசிக்கும் பகுதி வழியாகச் செல்லும் தார் சாலை வழியாக மேற்படி கிராம ஆதிதிராவிடர் பகுதியில் அமைந்துள்ள  சிறீ மாரியம்மன் கோயில் திருத்தேரினை ஊர்வலமாக எடுத்துச் செல்லத் தடை'' என 144 இன் கீழ் கோட்டாட்சியர் விவேகானந்தன் தடையாணை பிறப்பித்து விட்டார். இதுவரை 20க்கும் மேற்பட்ட அமைதிக்கூட்டங்களை நடத்திய வருவாய் மற்றும் காவல் துறையினரே தேரோட்டத்திற்கு தடையும் விதித்தனர்.

பட்டினிப் போராட்டம் இருந்த பெண்களில் மூவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11.09.2012 அன்று நள்ளிரவில் தலித் குடியிருப்புக்குள் நுழைந்த போலிசார்  கோயிலில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 25 பெண்களை கைது செய்தனர். தடுக்க முயன்ற 17 ஆண்களையும் பிடித்து வண்டியில் ஏற்றி மொத்தம் 42 பேரையும் ஒரு மண்டபத்தில்  வைத்திருந்து மறுநாள் கடலூர் சிறையில் அடைத்தனர். இதில் 14 முதல் 17 வயதுடைய 6 பெண்களை போலிசார் 22 வயதுடைய பெரியவர்களாக வழக்கில் குறிப்பிட்டு சிறையில் தள்ளினர்.  

தலித் மக்கள்  தேரோட்டுவதற்கு  ஆணையிடக்கோரி அவர்கள் தரப்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்குரைஞர் சத்தியச்சந்திரன்  தலித் மக்கள் சார்பாக வாதாடினார். 07.11.2012 அன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், கோட்டாட்சியர் பிறப்பித்த தடையாணையை தடை செய்து  தேரோட்டத்தை நடத்தும்படி கூறியது. ஆனாலும் தலித் மக்களால் தேரோட்ட  முடியவில்லை.

ஆதிக்க சாதியினரும் அவர்களுக்கு ஆதரவான அரசும் மேல்முறையீடு செய்து – வழக்கை நிலுவையில் வைத்துக்கொண்டே– சட்ட ஒழுங்குப் பிரச்சினையைக் காட்டி தேரோட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் தடைவிதித்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும்  ஆடி மாதத்தில் திருவிழா நடத்துவதுடன் தேரிழுக்க முயல்வதும் அதை சாதி இந்துக்கள் எதிர்ப்பதும் அதிகாரிகள் சட்ட ஒழுங்கு பிரச்சினையென தடை விதிப்பதுமாக நான்கு ஆண்டுகள்  கடந்தன.

 இது அய்ந்தாம் ஆண்டு. தேர் இருப்பதால்தானே ஒவ்வொரு முறையும் அதனை இழுக்க முயல்கிறார்கள்; அதனை இல்லாமல் செய்துவிட வேண்டும் என முடிவெடுத்து, எரிப்பதில் கைதேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர்  காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டனர். முன்பு காடுவெட்டி குருவும் தற்பொழுது அன்புமணி ராமதாசும் செல்கின்ற இடங்களிலெல்லாம் சாதிய வெறியாட்டம் நிகழ்த்தப்படுகிறது.  சம்பவங்களின் அளவீடுகளிலும் தாக்கங்களிலும் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் கூட்டம் என்ற பெயரில் பா.ம.க. கால் வைக்கும் இடங்களிலெல்லாம் இதுதான் நடைமுறை நிலை. இச்சூழலில்தான் சேஷசமுத்திரம் கிராமத்தில் இந்த ஆண்டு ஆடிமாதம் திருவிழா தொடங்கியது. இந்தத் தேரினை செய்து கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவரே தலித் மக்களின் தேரோட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென 12 ஆம் தேதி சங்கராபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றாலும் எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. தேர் ஓட்டலாம் என்ற 2012 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் மேல்முறையீட்டு வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் 14 ஆம் தேதி தேரோட்ட விரும்பிய மக்களிடம் சுதந்திர நாள் விழா மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கூறி மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் 16 ஆம் தேதி தேரோட்டுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.  கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பாதையில் தேர் வரும்போது ஆடல், பாடல் போன்ற கொண்டாட்டங்கள் எதுவுமின்றி அமைதியாக செல்லவேண்டுமென்கிற நிபந்தனையை ஆதிக்க சாதியினர் முன்வைத்தனர். தேர் போனால் போதுமென தலித் மக்கள் இந்நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டனர்.

சுதந்திர நாளான 15 அன்று இக்கிராமத்திற்கு அருகே உள்ள கள்ளக்குறிச்சி நகரில் பா.ம.க. வின் மது ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிற இக்கூட்டம் முன்கூட்டியே திட்டமிடாமல், பெரிய விளம்பரங்கள் ஏதுமின்றி திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சேஷசமுத்திரம் கிராமத்திலிருந்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ம.க. வினர் கூட்டம் முடிந்ததும் 5.30 மணிக்கு இக்கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

அந்த மொத்தக் கூட்டமும் சேர்ந்துதான் தலித் மக்கள் குடியிருப்பிற்குள் நுழைந்து பத்து குடிசைகளைக் கொளுத்தி தேரினையும் தீக்கிரையாக்கியுள்ளது (மேலும் காவல் துறை தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்றத் தலைவரை செப்டம்பர் 1 அன்று கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட செய்தி வெளியான சிறிது நேரத்தில் தலித் மக்களின் இரு குடிசைகளும் ஒரு மாட்டுக்கொட்டகையும் மீண்டும் தீவைத்து எரிக்கப்பட்டு சாம்பலாயின).

சங்கராபுரம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் அன்று மாலை 5 மணிக்கு, ""நாளை காலை தேர் இழுப்பது பற்றிப் பேசவேண்டும்.தலைவரை வரச்சொல்லியிருக்கிறேன். நீங்களும் வாருங்கள்'' என்று தலித் மக்களை அழைத்துள்ளார். தலித் இளைஞர் அருணாச்சலத்துடன் ஒருவர் மட்டும் காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு ஆய்வாளர் இல்லை. கைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் காவல் நிலையம் வந்துவிட்டதை தெரிவித்துள்ளனர். ""தலைவர் வரேன்னு சொன்னவர் இப்ப வர மாட்டேன் என்கிறார்.

நீங்க அங்கேயே இருங்க வந்துவிடுகிறேன் ''  என்று ஆய்வாளர் பதிலளித்துள்ளார். சற்று நேரத்தில் அருணாச்சலத்தின் கைபேசிக்கு கிராமத்தில்  நடக்கிற தாக்குதல் குறித்து தகவல் வந்திருக்கிறது. பா.ம.க. கூட்டம் முடிந்ததும் தாக்குதல் நடக்கும் என்பது குறித்து ஆய்வாளருக்கு முன்னதாகவே தகவல் வந்திருக்க வேண்டும் அல்லது  சந்தேகம் எழுந்திருக்க வேண்டும். அதனால்தான் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கு முயன்றுள்ளார்.

தேரோட்டம் என்றாலே கண்ட தேவிதான்  நினைவுக்கு வரும். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்டதேவி கிராமத்தின் சொர்ணமூர்த்தீஸ்வரர்  கோயிலில் 1936 ஆம் ஆண்டிலிருந்து தலித் மக்கள் வழிபாடு செய்துள்ளனர். 1953 ஆம் ஆண்டு தேர்வடம் பிடிக்க வந்த தலித் மக்கள் முதன் முறையாக மேல்சட்டை அணிந்து வந்தனர். இதனால் கள்ளர்கள் தலித் மக்களைத் தாக்கித் துரத்தியுள்ளனர். ""இப்படியொரு இழிவைச் சந்தித்து சாமி கும்பிட வேண்டிய அவசியமில்லை'' என்று தலித் மக்கள் ஒதுங்கத் தொடங்கினர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு தலித் இளைஞர் தேரின் வடம் பிடித்து இழுக்க முற்பட, அவரைக் கள்ளர்கள் அடித்துத் துரத்தினர். புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.அய்.(எம்) மற்றும் சில தலித் அமைப்புகள் கண்டதேவி மக்களோடு கைகோர்க்க  போராட்டத்திற்குப் புத்துயிர் கிடைத்தது.

டாக்டர் கிருஷ்ணசாமி 1998 இல் அப்போது வழக்குரைஞராக இருந்த கே.சந்துரு மூலம் தேரோட்ட உரிமை கோரி வழக்கு தொடுத்தார். தேரோட்டமே இல்லாமல் போனாலும் சரி, தலித் மக்களோடு தேரிழுக்க மாட்டோம் என்ற சாதி வெறியில் 8 ஆண்டுகள் தேரோட்டமே நடத்தப்படவில்லை.

2005 இல் சென்னை உயர் நீதிமன்றம், "" தலித் மக்களுக்கு தேர் வடம் பிடிக்கும் உரிமை உண்டு. வெறும் கணக்கிற்காக பத்துப் பேரை வைத்து தேரை இழுக்காமல், தலித் மக்கள் முழுமையாகப் பங்கேற்கும் வண்ணம் தேரோட்டத்தை நடத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை'' என்று தெளிவாக தீர்ப்பின் மூலம் வலியுறுத்தியும் அரசு அதை துளியும் மதிக்கவில்லை.

கண்டதேவியில் கூட எழாத கோரிக்கை, 1981 இல் மீனாட்சிபுரத்திற்குப் பிறகு (தற்போதைய பெயர் ரஹ்மத் நகர்)  2002 இல் கூத்தரம்பாக்கத்தில்தான் எழுந்தது. அதன் பிறகு 2014 இல் சேஷசமுத்திரத்தில்தான் இக்கோரிக்கை எழுந்தது. சென்ற ஆண்டு தேரோட்டம் தடை செய்யப்பட்டபோது இங்குள்ள தலித் மக்கள் பவுத்தத்திற்கு மாறுவதாக  அறிவித்தனர். 

இப்போது தேரும் குடிசைகளும் எரிக்கப்பட்ட பிறகும் இம்முழக்கம் வலுவாக ஒலிக்க வேண்டிய தருணமிது. இன்று இந்தியாவில் (இந்து) மதவாதமும் தமிழகத்தில் (இந்து) சாதியவாதமும்  கைகோர்த்து நிற்கின்றன.  அதற்கான வாய்ப்பாக சேஷசமுத்திரம் இருந்துவிடக்கூடாது. ஏனெனில் தேரினைத் தானே   செய்து கொடுத்ததாக ராமதாஸ் கூறுகிறார். தாங்களே முழு செலவு செய்து தேரோட்ட உள்ளதாக பா.ஜ.க. தமிழிசை சொல்கிறார். இதில் எது நடந்தாலும் இதைவிட மோசமான விளைவுகளையும் ஆபத்துகளையும் நாம் சந்திக்க நேரிடும்.

அறுபத்தெட்டு ஆண்டுகால சுயராஜ்ய இந்தியாவிலும் கால் நூற்றாண்டு கால உலகமயமாக்கலிலும் ஜாதிய சமூகம் ஜனநாயகப்படுத்தப்படவில்லை என்பதையே சேஷசமுத்திரங்கள்  அப்பட்டமாக உணர்த்துகின்றன. வெறுப்புரைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது உமிழும் ஓர் அரசியல் கட்சியின்  செயல்பாடுகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை; தடுக்கப்படவில்லை; கண்டிக்கப்படவும் இல்லை.

சேஷசமுத்திரத்தில் தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் படங்களை வெளியிடும் ஊடகங்கள் அதே பக்கத்தில் அங்கு தலித் மக்களைப் பாதுகாக்க குறைந்தபட்சம் தடியடி நடத்திய காவல் துறையின் மீறல்களைக் கண்டிக்கும் மனித உரிமைக் குரலாக ராமதாசின் அறிக்கையையும் வெட்கமின்றி வெளியிடுகின்றன. தேர்தல் கூட்டணிக்காக இக்கட்சியுடன் உறவு கொள்ளத் துடிக்கும் கட்சிகளுக்கும்; ராமதாசின் வெறுப்புரைகளையும் பொய்யுரைகளையும் அறிக்கை என்ற பெயரில் வெளியிடும் ஊடகங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

வீடுகளை முற்றாக இழந்த குடும்பங்களுக்கு இந்த அரசு 5 ஆயிரம் ரூபாயும் பாதி எரிந்த வீடுகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும் ஏழு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, வேட்டி மற்றும் புடவைகளை வழங்கியுள்ளது. இது ஓர் இடைக்கால நிவாரணம் எனினும் வீடுகளை இழந்த அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படியான நிவாரணங்களை அரசு விரைந்து செய்யவேண்டும். இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, முக்கியமான இழப்பீடு என்பது மற்ற சாதிகளைப் போல தலித் மக்களுக்கும் தேரோட்டம் நடத்துவதற்கான உரிமை வேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகம் மரணித்துவிட்டதா  இல்லையா என்பதை அதுதான் தீர்மானிக்கும். 

Pin It