1993 இல் அத்தியூர் விஜயா, 2001 இல் ரீட்டா மேரி, 2007இல் உளுந்தூர் பேட்டை எடைக்கல் ஜெயா... என விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் கூட்டங் கூட்டமாக ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குவதற்கு மற்றுமொரு துயர சாட்சியாய் அமைந்திருக்கிறது திருக்கோவிலூர். இப்பகுதியில் உள்ள தி.மண்டபம் கிராமத்தில் இரு இருளர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்விரு குடும்பத்தினரையும் மொத்தமாக சூறையாடி, வன்கொடுமைக் குற்றப் பதிவுகளில் தனது பெயரை அழுத்தமாகப் பதித்திருக்கிறது விழுப்புரம் மாவட்ட காவல் துறை. வாச்சாத்தியில் பழங்குடியினர் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்த காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளைக் குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பு வந்த இரு மாதங்களிலேயே நடந்தேறியிருக்கும் இருளர் பெண்கள் மீதான இப்பாலியல் தாக்குதல், காவல் துறையின் கட்டற்ற அதிகாரத்தையும், ஆதிக்க சாதி வெறியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

Picture_400பிற பகுதிகளில் வாழும் பெரும்பாலான இருளர்களின் வாழ்நிலை மாறிவிட்ட சூழலில், தி.மண்டபத்தில் உள்ள இவ்விரு இருளர் குடும்பங்கள் இன்றும் தங்களின் பூர்வீகத் தொழிலான எலி, உடும்பு மற்றும் பாம்பு பிடிப்பதைச் செய்து வருகின்றனர். கூடவே திருக்கோவிலூர் நகரில் உள்ள நகைக் கடைக் குப்பைகளை ஆற்றுத் தண்ணீரில் சல்லடையில் அலசி, தேங்கி நிற்கிற குண்டூசி முனையளவு தங்கத்தை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். இந்த குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்த காசி என்பவரின் மீது திருட்டுப் பழியை சுமத்தி, 22.11.11 அன்று மூன்று போலிசார் அவரை இழுத்துச் சென்றனர்.

அன்றிரவே மீண்டும் இருளர் குடியிருப்பிற்குள் கும்பலாக நுழைந்த போலிசார் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, 10 பவுன் நகை மற்றும் 2000 ரூபாய் பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர். நான்கு போலிஸார் வீட்டிற்கு காவலிருக்க, செல்வி, லட்சுமி, கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா உள்ளிட்ட ஒன்பது பேரையும் திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் உள்ள தைல மரத் தோப்பொன்றிற்கு இழுத்துச் சென்றனர். இதற்கிடையில் திருட்டுப் பழி சுமத்தி இழுத்துச் செல்லப்பட்ட காசியை காவல் நிலையத்தில் பார்த்துவிட்டு வீடு திரும்பிய வள்ளி, வெள்ளிக்கண்ணு, குமார் மற்றும் ஏழுமலை ஆகியோரை வீட்டிலிருந்த காவலர்கள் அடித்து உதைத்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். ஆண்களிடம் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கி சிறையில் அடைத்த பின்னர் வள்ளியை மட்டும் வேனில் ஏற்றி, சந்தைப்பேட்டை என்ற இடத்திற்கு கொண்டு சென்றபோது, அங்கு ஏற்கனவே ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற வேனும் வந்து சேர்ந்தது. 5 பெண்கள் 3 சிறுவர்கள் என 9 பேரை தனியாகவும், ஆண்களை தனியாகவும் வெவ்வேறு வேன்களில் ஏற்றிய பின்னர், பெண்கள் இருந்த வேன் மட்டும் தைலமரத் தோப்பிற்கு சென்றது.

வள்ளி, செல்வி மற்றும் மூன்று சிறுவர்களை மட்டும் வேனில் அடைத்து வைத்த பின்னர், அவரின் மகள்களான வைகேஸ்வரி, ராதிகா, மருமகள்களான லட்சுமி, கார்த்திகா ஆகிய நால்வரையும் தனித்தனியாக தோப்பிற்குள் இழுத்துச் சென்றனர். மூன்று மாத கர்ப்பிணியான லட்சுமி அதைச் சொல்லி கதறிய போதும் விடவில்லை. 17 வயதே நிரம்பிய ராதிகாவை மூன்று போலிஸார் பலாத்காரம் செய்தனர். சற்று வலுவாக இருந்த வைகேஸ்வரி தன்னை இழுத்துச் சென்ற காவலரை திருப்பித் தாக்க முயல, அவரை அடித்து மார்பில் எட்டி உதைத்து வல்லுறவு கொண்டார். தாலிக் கயிறு அறுத்தெறியப்பட்டு கடும் தாக்குதலுக்குப் பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டார் கார்த்திகா. அதிகாலை அய்ந்து மணியளவில் அத்தனைப் பெண்களும் வீட்டில் இறக்கிவிடப்பட்டனர்.

பெண்களை வீட்டில் விட்டு திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்ற வள்ளி, அங்கு அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 6 பேரையும் போலிசார் வேனில் ஏற்றியதை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு வீடு திரும்பினார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வழக்குரைஞர் வீர செல்வராஜை சந்தித்து, தனது குடும்பப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையையும் ஆண்கள் கடத்தப்பட்ட விஷயத்தையும் கூறினார். மேலிடத்திற்கு புகார் தரச் சொல்லி அவர் அறிவுறுத்தியதும் வீடு திரும்பினார் வள்ளி. ஆனால் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்த போலிசார் பொருட்களை சேதப்படுத்தவே, அச்சத்தில் அனைவரும் அன்றிரவே வழக்குரைஞர் வீர செல்வராஜ் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

ஆண்கள் நிலைமை என்னவானது எனத் தெரியாத நிலையில், 24.11.11 அன்று ஆறு பெண்களும் 3 சிறுவர்களும் லட்சுமியின் பெற்றோர் வசிக்கும் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கிராமத்திற்கு சென்றனர். கொதிப்படைந்த லட்சுமியின் பெற்றோர், உறவினர் ஒருவர் மூலம் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணிக்கு தகவல் தெரிவித்தப் பின்னர்தான் இக்கொடுமை வெளியுலகின் கவனத்திற்கு வந்தது. “கொடுமை நடந்து மூணு நாட்களுக்கு அப்புறம்தான் எங்களுக்கு தெரிய வந்தது. முதலில் பாதிக்கப்பட்ட 4 பெண்களையும் தனித்தனியாக விசாரித்தேன். மாலை 6 மணியிலிருந்து விடியற்காலை 3 மணி வரை சுமார் 9 மணி நேரம் அவர்களிடம் விஷயங்களை கேட்டறிந்தேன். பலாத்காரம் செய்ப்பட்டது உண்மைதான் என்பது உறுதியான பின்பு புகார் எழுதத் தொடங்கினேன்'' என்கிறார் கல்விமணி.

பாதிக்கப்பட்ட 4 பெண்களையும் காவல் கண்காணிப்பாளரிடம் அழைத்துச் சென்று புகாரை அளித்தார் பேராசிரியர் கல்யாணி. விசாரணை என்ற பெயரில் அங்கேயே அடைத்து வைக்கப்பட்டு பெண் காவலர்களால் அப்பெண்கள் மிரட்டப்பட்டனர். மருத்துவப் பரிசோதனையின் போது பிறப்புறுப்பில் கையை விடுவார்கள், இதனால் கரு கலைந்துவிடும் என லட்சுமியை உளவியல் ரீதியாக பெண் போலிசார் அச்சுறுத்தினர். திருமணமாகி நான்கு ஆண்டுகள் குழந்தையில்லாமல் தவித்த லட்சுமிக்கு இது பெரும் அச்சத்தை உண்டாக்கியது. பெண்களின் அச்சத்தையே காரணமாக வைத்து, புகாரை திரும்பப் பெற வைக்க பெண் காவலர்கள் இரவு முழுவதும் தூங்க விடாமல் அவர்களை துன்புறுத்தினர்.

"பயத்தில்தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக சொன்னோம்' என்று பொய் சொன்னால், தையல் மெஷின் வாங்கித் தருவதாகவும் சிறை பிடிக்கப்பட்ட ஆண்களை விடுவிப்பதாகவும் கூறியிருக்கிறார் ஆய்வாளர் ரேவதி. மருத்துவப் பரிசோதனையை நினைத்து மற்ற பெண்களும், மூன்று மாத கருவை நினைத்து லட்சுமியும் உண்மையை மாற்றிச் சொல்ல ஒப்புக் கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஆய்வாளர் ரேவதி கொடுத்த வாக்குறுதியை டி.அய்.ஜி.யும் உறுதிப்படுத்தியுள்ளார். பின்னர் இப்பெண்கள் அவர்களது குடியிருப்பில் விடப்பட்டனர்.

27 ஆம் தேதி காலை மாவட்டத்தின் அனைத்து பத்திரிகைகளிலும் "திருக்கோவிலூர் போலிசாரால் 4 பழங்குடிப் பெண்கள் பாலியல் பலாத்காரம்' என லட்சுமியின் புகார் செய்தியாக வெளிவந்ததும், இதனை மறுத்து எஸ்.பி. பாஸ்கரன், “அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை. போலிசார் மீது இப்படி ஒரு பழி சொன்னால், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் உறவினர்களை விட்டுவிடுவார்கள் என நினைத்து புகார் கொடுத்தோம் என அப்பெண்கள், விசாரணையில் கூறியுள்ளனர்'' என அறிக்கை வெளியிட்டார்.

இதனிடையே திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இருளர் பெண்களை வைத்திருந்தபோது, லட்சுமியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலத்தையும் அடிப்படையாக வைத்து, இவ்வழக்கினை முடித்து, கோப்பினை திருக்கோவிலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் போலிசார். அக்கோப்பினை பார்வையிட்ட நீதிபதி, “எஸ்.சி/எஸ்.டி சட்டத்தில் போடப்பட்ட வழக்கை எஸ்.அய். எப்படி விசாரிப்பார், டி.எஸ்.பி.தானே விசாரிக்க வேண்டும்? அப்பெண்களை அவர்களது வீட்டில் கொண்டு போய் விடுங்கள் '' என்று கூறியதைத் தொடர்ந்தே போலிசார் அப்பெண்களை அவர்களது குடியிருப்பில் விட்டதாகத் தெரிகிறது.

சிறிது நேரத்திலேயே, சி.பி.அய் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், பழங்குடி மக்கள் சங்கத் தலைவருமான நஞ்சப்பன் தி.மண்டபம் கிராமத்திற்குச் சென்று, பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்களிடம் உண்மைகளை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து தே.மு.தி.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மற்றும் சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ வழக்குரைஞர் ராம மூர்த்தியும் விசாரணை நடத்தினர். மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் குற்றம் நடந்தது உண்மை என்பதையும் குற்றமிழைத்த போலிசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதையும் அறிக்கையாக வெளியிட்டனர்.

விஷயம் செய்தித் தாள்களில் வெளிவந்து பரபரப்பாகவே, அன்று மாலை ஆறு மணியளவில் மண்டபம் பகுதிக்குச் சென்ற நீதிபதி முரளிதரக்கண்ணன், பாதிக்கப்பட்ட பெண்களைத் தனித்தனியாக விசாரித்து, வாக்குமூலங்களை எழுதி, அதைப் படித்துக் காண்பித்து, பின்னர் கையெழுத்துகளைப் பெற்றார். இரவு 11 மணி வரையில் நீதிபதியின் விசாரணை நடந்தது. பல்வேறு அமைப்புகளும் தலைவர்களும் கொடுத்த நம்பிக்கையில், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வெளிப்படையாகப் பேசும் துணிவைப் பெற்றனர் 4 பெண்களும்! அன்றிரவே வள்ளியோடு சேர்த்து பாதிக்கப்பட்ட பெண்களும் விழுப்புரம் சி.பி.எம் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு சென்ற பத்திரிகையாளரிடம் போலிசார் மிரட்டியதாலேயே உண்மையை மாற்றிச் சொல்ல நேர்ந்ததாக பாதிக்கப்பட்டப் பெண்கள் கூறினர். அன்றே திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

குற்றமிழைத்த போலிசாரைக் காப்பாற்றவே டி.அய்.ஜி. சக்திவேல், எஸ்.பி.பாஸ்கரன் உள்ளிட்டோர் செயல்படுவதை அறிந்த பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் 28.11.2011 அன்று மாலை அனைத்துக் கட்சி, இயக்கங்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டத்தை விழுப்புரத்தில் நடத்தியது. பாலியல் வன்கொடுமை செய்த போலிசாரை காவல்துறை காப்பாற்ற முயல்வதால், சி.பி.அய் விசாரணை கோரப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களை 18 மணி நேரத்திற்கும் மேலாக எஸ்.பி அலுவலகத்தில் சட்டவிரோதக் காவலில் வைத்து மிரட்டிய டி.அய்.ஜி. சக்திவேல், எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளர் ரேவதி உள்ளிட்டோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4இன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதற்கிடையே, தி.மண்டபம் கிராமம் இருக்கும் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மற்றும் வைகோ உள்ளிட்டோர் போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதுபோன்ற நெருக்கடிகளின் காரணமாக வேறு வழியில்லாமல் வடக்கு மண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு, அன்று இரவே குற்றமிழைத்த அய்ந்து போலிசாரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா அய்ந்து லட்சம் ரூபாயை இழப்பீடாக அரசு அறிவித்தாலும், குற்றமிழைத்தவர்கள் எவ்விதத் தண்டனையிலும் சிக்காதது, அவர்களை காப்பாற்ற முயன்ற உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது என வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கூறுகள் மீறப்பட்டன. இதனிடையே வழக்குரைஞர் புகழேந்தி தொடுத்த வழக் கினை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுவரை பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாததை கடுமையாகக் கண்டித்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அப்பெண்கள் மருத்துவப் பரிசோதனைக் காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

1.12.12 அன்று நீதிபதி, வள்ளியிடம் முழுமையான விசாரணையை மேற்கொண்டார். நீதித்துறை விசாரணை தொடர்ந்து நடப்பதைப் பார்த்த காவல்துறை, தன் பங்கிற்கு மீண்டும் இரண்டு நாட்களும் குடியிருப்பிற்கு வந்து விசாரணை நடத்தியது. வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகளும் அப்போது உடனிருந்தனர். பெண்கள் கூறிய அனைத்து விஷயங்களையும் வீடியோ பதிவு செய்த போலிசார், எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து 18 மணி நேரம் மிரட்டப்பட்ட விஷயத்தை சொன்னபோது மட்டும் அதைப் பதிவு செய்யவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 7.12.11 அன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது, நீதிபதி, “இதுவரை குற்றம் சுமத்தப்பட்டப் போலிசாரை ஏன் கைது செய்யவில்லை. போலீசுக்கு ஒரு நீதி, சாதாரண மக்களுக்கு ஒரு நீதியா? 5 லட்சம் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா'' என்று கடுமையாகக் கண்டித்துள்ளார். குறிப்பிட்ட இந்த வழக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காவல்துறை நிகழ்த்தும் எவ்வித அத்துமீறலிலும், குற்றமிழைத்த போலிசாரை கைது செய்ய அரசு முயல்வதே இல்லை. மாறாக அது காவல்துறையினரை அரண் போல் நின்று காக்கவே விழைகிறது.

குறிப்பாக, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே தமிழக காவல்துறை சர்வாதிகார சுதந்திரத்தைப் பெற்றுவிடுகிறது. போலிஸ் ஆட்சிதான் நடைபெறுகிறதோ என அய்யம் கொள்ளும் அளவிற்கு மாநிலம் முழுவதும் பெரும் அத்துமீறல்கள் கட்டவிழ்க்கப்படுகின்றன. தன்னுடைய ஆட்சியில் ரவுடிகள் இல்லை, அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை எனப் பெருமிதம் கொள்ளும் ஜெயலலிதா, காவல்துறையே ரவுடிகளாக மாறி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் போது, அதை மூடி மறைக்கவும் செல்லப்பிள்ளைகளைப் போல அவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கவுமே செய்கிறார்.

பரமக்குடியில் ஆறு தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை நடந்த சில மாதங்களிலேயே திருக்கோவிலூரில் 4 பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறது காவல்துறை. சுட்டுக் கொன்ற போதும் நடவடிக்கை இல்லை, பெண்களை சீரழித்த போதும் நடவடிக்கை இல்லை. காவல்துறையை சுயலாபங்களுக்காக கண்மூடித்தனமாக வழிநடத்தும் ஆட்சியாளர்கள் இருக்கிறவரை போலிசார் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடரவே செய்யும் என்பதற்கு திருக்கோவிலூர் ஒரு சாட்சி.

பழங்குடியினரின் பட்டினிப் போராட்டம், பல்வேறு அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் என தொடர்ச்சியான வலியுறுத்தல்களின் விளைவாக அய்ந்து போலிசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பாலியல் வன்கொடுமை செய்த போலிஸ் மீது நடவடிக்கை எடுக்கவும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தொடர்ந்து போராடி வரும் பேரா.கல்விமணி மீது இச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர் கொடுமை திருட்டு வழக்காகவே தொடங்கியதை கவனத்தில் கொள்ள வேண்டும். எலி, முயல் பிடித்தல், செங்கற் சூளையில் வேலை செய்தல் மற்றும் நகைக் கடை கழிவுகளை சேகரித்தல் என பிழைப்பு நடத்தும் இருளர் சமூக ஆண்களை திடீரென அவர்களது வீட்டிற்குள் புகுந்து கடத்திச் சென்ற காவல்துறை, எந்த வழக்கிற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதை அவர்களிடம் கூறவில்லை. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் 50 வயதான முருகன் மீது 1993 தொடங்கி தற்போதுவரை 10 வழக்குகளும், 5 பேர் மீது 4 வழக்குகளும், 3 பேர் மீது தலா மூன்று என போலிசார் விருப்பத்திற்கு ஏற்ப திருட்டு வழக்குகளைப் பதிவு செய்திருக்கின்றனர். இவ்வழக்குகள் அனைத்தும் பல மாதங்கள்/ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டவை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆண்டு இறுதி மாதங்களான நவம்பர் டிசம்பரில் திருட்டு வழக்குகள் உள்ளிட்ட சிறு குற்ற வழக்குகளை முடிக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு இருக்கிறது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இவ்வழக்குகளை முடித்து கோப்புகளை மூடுவதற்கு பெரும்பாலும் இருளர் சமூகத்தினரைதான் இரையாக்குகிறது, அம்மாவட்ட காவல்துறை. ஒடுக்கப்பட்டு சமூக ஆதரவற்றவர்களாக வாழும் இருளர்களை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளாக்கி சிறையில் அடைக்கிறது. இம்முறையும் காசி மற்றும் அவரது உறவினர்களை திடுதிப்பென்று வந்து அள்ளிச் சென்றது போலிஸ். எவ்வித பலமோ பின்னணியோ அங்கீகாரமோ அற்ற எளிய மனிதர்களை கடத்திப் போய் விருப்பப்படி அவர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்வது, விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் வழக்கம் என்பதை இருளர்களிடையே தொடர்ந்து பணியாற்றி வரும் பேராசிரியர் கல்விமணி உறுதிப்படுத்துகிறார்.

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் காவல்துறையின் இத்தகு அத்துமீறலை இருளர்கள் எதிர்கொள்கின்றனர். ஆண்களைப் பிடிக்க வரும் போலிஸ் வீட்டிலுள்ள பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது திருக்கோவிலூருக்கு முன்பு வரை வெளியுலகிற்கு தெரிய வரவில்லை என்றாலும், அதற்கான வலுவான சாத்தியங்களை இந்த வல்லுறவுக் கொடுமை உறுதி செய்கிறது. நிராதரவான மக்களை ஆதிக்கத்தின் கரங்கள் கொண்டு எளிதாக வளைத்துவிட முடிகிற சமூக அவலத்தை, காவல்துறை அரசதிகாரம் என்னும் ஆயுதம் கொண்டு அன்றாடம் நிகழ்த்துகிறது.

ஒடுக்கப்பட்டோரை மறைமுகவாகவும், நேரிடையாகவும் பலி கொள்ளும் காவல்துறையின் சாதி மற்றும் ஆதிக்க வெறி எதை கொண்டும் அடக்க முடியாததாக ஒவ்வொரு ஆட்சியிலும் நீடிக்கிறது. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படும் காவல்துறைக்கும் காவல்துறையின் அத்துமீறல்களை அங்கீகரிக்கும் ஆட்சியாளர்களுக்கும் இது போன்ற அத்துமீறல்களை முன் வைத்து மட்டுமின்றி ஒரு நிரந்தர சமூக நெருக்கடியை உண்டாக்குவது ஒன்றே இதற்கான தீர்வாக அமைய முடியும். அப்படியொரு சமூக நெருக்கடியை சாதி இந்துக்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இவர்கள் மேல் கைவைத்தால், அது இப்படியான விளைவுகளை உண்டாக்கும் என்ற அச்சுறுத்தல் தான் அதற்கு காரணம்.

காவல்துறையும் அரசியல்வாதிகளும் ஜனநாயகம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் வரை, இந்த அச்சுறுத்தல் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக அமையும். ஜனநாயகத்திலும் மனித உரிமைகளிலும் நம்பிக்கை கொண்டோர் மக்களை ஒன்றிணைத்து நடத்தும் போராட்டங்கள் மட்டுமே ஆதிக்கவெறி ஆட்டிப் படைக்கும் காவல்துறை மற்றும் அதற்கு அரணாக இருக்கும் அரசியல்வாதிகளையும் மண்டியிடச் செய்யும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பயங்கரவாதங்களுக்கு எதிர்வினையாற்றும் போது, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் ஓரணியில் நின்றால்தான் ஓரளவிற்கேனும் நீதியின் வெளிச்சம் பாதிக்கப்பட்டவர்கள் மேல் பாயும். வேதனை என்னவெனில், பெரும்பாலும் நீதிக்கான போராட்டங்கள் என்பது சுய அடையாளங்கள் மற்றும் அரசியல் லாபங்களுக்கானதாகவே இருப்பதால், பிரச்சனைகளின் தீவிரம் நீர்த்துவிடுகிறது. திருக்கோவிலூர் அத்துமீறலிலும் அந்த அவலம் உருவாகிவிட்டது.

காவல்துறையால், பாதிக்கப்பட்ட இருளர்களுக்காக, சி.பி.அய்., சி.பி.எம்., தே.மு.தி.க., ம.தி.மு.க., வி.சி.க., த.மு.மு.க. போன்ற கட்சிகளும் மக்கள் கண்காணிப்பகம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம், பழங்குடி மக்கள் முன்னணி, சர்ப்பம் தொழிலாளர் சங்கம், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் தோள் கொடுத்தன. என்றாலும் இதற்குள்ளும் பிளவுகளை உண்டாக்க சிலர் முனைந்திருப்பது வேதனை!

30.11.2011, 1.12.2011 ஆகிய இரு நாட்களும் நீதித்துறை நடுவரின் விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் வெளியில் வந்த பெண்களை தங்கமணி அவரது ஆதரவாளர்களுடன் கடத்த முயன்றுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி 2.12.2011 அன்று பேராசிரியர் கல்விமணி புகார் அளித்தார். அடுத்த நாள் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் பேராசிரியர் கல்விமணி மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது பழங்குடி மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் வெ.தங்கமணி புகார் கொடுத்ததன் பேரில், வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தங்கமணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு நெருக்கமாக இருந்து செயல்பட்டு வருகிறார். இதனை அக்கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆனந்தன் உறதிபடுத்தியுள்ளார். இருளர்களுக்கு ஆதரவாக போராடி வருபவர்கள், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மீது வெளிப்படையாக இது குறித்து குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் விளக்கம் அளித்து வரும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. பத்மினி தொடங்கி, வாச்சாத்தி வரை பல்வேறு பிரச்சனைகளில் முன்னின்று போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்தப் போக்கு மிகுந்த வருத்தத்திற்குரியது.

19 ஆண்டுகளுக்குப் பின்பு வாச்சாத்தி வழக்கில் பெருமளவிலான எண்ணிக்கையில் வனத்துறையினருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும் திருக்கோவிலூர் சம்பவம் போன்ற பழங்குடியினர் மீதான வன்கொடுமை தொடர்வது கவலையளிப்பதாக உள்ளது. அடித்தட்டில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, மிகக் குறைந்த எண்ணிகையிலுள்ள பழங்குடியினரைப் பாதுகாக்க கட்சி, இயக்கம் மட்டுமின்றி வெகுமக்களும் திரண்டெழுந்து போராடமுன்வர வேண்டும் என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது.

2007

உளுந்தூர்பேட்டை வட்டம், களவனூர் கிராமம் அருகேயுள்ள பாம்புக்காரன்கொட்டாய் என்கிற இடத்தில் வசித்த இருளர்களான       ஆறுமுகம், வெங்கடேஷ் இருவரையும், அதே கிராமத்தைச் சேர்ந்த          ஆதிக்க சாதியாளரான அண்ணாதுரை கொத்தடிமையாய் தமது தோட்டத்தில் வேலை செய்யச் சொல்லி அழைத்தார். இருளர்கள் இருவரும் கொத்தடிமையாய் வேலை செய்ய மறுத்துள்ளனர். அதனால் அண்ணாதுரை அவர்களை அந்த இடத்தில் குடியிருக்கவிடாமல் அடித்து விரட்டியுள்ளார். இது தொடர்பாக இருளர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இப்புகாரை திரும்பப் பெறச் சொல்லி, ஆறுமுகம், நாகராஜ், முருகன் ஆகிய 3 இருளர்களை பிடித்துச் சென்று ஊர்த்தெருவில் அனைவர் முன்னிலையிலும் கட்டிவைத்து அடித்து, சித்திரவதை செய்தனர். அதன்பிறகும் அவர்கள் புகாரை திரும்பப் பெற மறுத்துவிட்டனர். எனவே, மின்சார ஒயர் கம்பிகளைத் திருடிவிட்டதாக போலிசுக்குத் தகவல் சொல்லி, உளுந்தூர் பேட்டை போலிசார் மூவரையும் பிடித்து சென்றனர். அன்று இரவு 8.30 மணிக்கு எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்தில் அடைத்து வைத்து, தினமும் காலையும், மாலையும் 3 இருளர்களையும் பல்வேறு திருட்டு சம்பவங்களை ஒத்துக்கொள்ளும்படி அடித்து, சித்திரவதை செய்தனர். மூவரையும், நிர்வாணப்படுத்தி, இரண்டு கால் தொடைகளிலும் இரு காவலர்களை நிற்கவைத்து கால் பாதங்களில் லத்தியால் தொடர்ந்து நீண்ட நேரம் அடித்துள்ளனர். 14.10.2007 அன்று திருட்டு வழக்குகளில் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மூவரும் பிணையில் வெளி வரமுடியவில்லை. 8 மாதங்கள் கழித்து 2008 சூன் மாதம்தான் சிறையிலிருந்து வெளிவந்தனர்.

2008

திருக்கோவிலூர் அருந்ததியர் தெருவில் வசிக்கும் இருளர்களான மாரி, பன்னீர், கூத்தப்பன் ஆகிய 3 இருளர்கள், அதே தெருவைச் சேர்ந்த அருந்ததியர் இளைஞர்கள் செந்தில், வினோத், வேலன் மற்றும் சுரேஷ், வரதன் என்கிற இரு இருளர்கள் என மொத்தம் 9 பேரை 19.10.2008 அன்றும், சித்தலிங்கமடம் கிருஷ்ணமூர்த்தி, முருகவேல், களவனூர் முருகன் ஆகியோரை 21.10.2008 அன்றும் திருநாவலூர் காவல் நிலையத்தில் அடைத்து வைத்து, பல வகையில் துன்புறுத்தினர். தொடைகளின் மேல் போலிசார் ஏறிநின்று பாதங்களில் லத்தியால் அடிப்பது, இரு கைபெருவிரல்களையும் கயிற்றில் கட்டி தொங்கவிட்டு, உடல் முழுவதும் லத்தியால் அடிப்பது என தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். திருட்டு வழக்குகளை ஒத்துக்கொண்டு கையெழுத்துப்போடும்படியே இந்த கொடுமைகளை செய்துள்ளனர். 23 ஆம் தேதி 12 பேரையும் வரஞ்சரம், சின்னசேலம், ரோசனை ஆகிய காவல் நிலையங்களில் உள்ள பல்வேறு திருட்டு வழக்குகளில் இணைத்து சிறையில் அடைத்தனர்.

2011      

22.8.11 அன்று சந்தைப்பேட்டையில் ராஜா, கார்த்திக் என்கிற இரு இருளர் இளைஞர்களை சி.அய்.டி. போலிசார் எனக்கூறிக்கொண்டு 3 போலிசார் கடத்த முயன்றனர். பெற்றோர் மூலம் டி.எஸ்.பி.யிடமும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்விமணி எஸ்.பி.யிடமும் புகார் கொடுத்ததன் அடிப்படையில் கடத்தல் தடுக்கப்பட்டது.

6.8.11 சித்தலிங்கமடம் முருகவேல், திருவெண்ணெய்நல்லூர் குமரேசன் ஆகிய இருவரும் உளுந்தூர்பேட்டை போலிசாரால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். சங்கத்தின் சார்பில் எஸ்.பி.யிடம் முறையிடப்பட்டதன் பின்பு முருகவேல் விடுவிக்கப்பட்டு, குமரேசன் சிறையில் அடைக்கப்பட்டார்.

9.9.11 – கீரனூர் செங்கல் சூளையிலிருந்து ஜெயபால், 10 ஆம் தேதி மூலசமுத்திரம் சேகர், நாகப்பன், பூவனூர் கணேசன் ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு, திருநாவலூர் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டு வழக்குகளை ஒத்துக் கொள்ளுமாறு சித்திரவதை செய்யப்பட்டனர். பல்வேறு தலையீடுகளுக்குப் பிறகு சேகர் மட்டும் விடுவிக்கப்பட்டார்.

Pin It